Saturday, June 11, 2016

யார் சமூக விரோதிகள்?(உயிர்மை,முரசொலி கட்டுரை) -டான் அசோக்தேர்தல் முடிவுகள் வெளிவந்து இச்சமயம் ஏறத்தாழ பத்து நாட்கள் ஆகியிருக்கும்.  பார்க்கும் இடங்களில் எல்லாம் புள்ளிவிவரங்களையும், தேர்தல் பற்றிய கருத்துக்களையும், யார் ஏன் ஜெயித்தார்கள், யார் ஏன் தோற்றார்கள் என்பது குறித்தும் வகைதொகையாக அள்ளித் தெளித்திருப்பார்கள்.  அதிலும் இந்தத் தேர்தல், கருத்து சொல்வதற்கான களத்தையும் எக்கச்சக்கமாக அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஏனெனில் இந்திய அளவில் தமிழக மக்கள் ஒப்பீட்டளவில் தெளிவானவர்கள். அவர்கள் யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை மிகத்தெளிவாக, எல்லோரும் அவர்களுக்குள் பேசிவைத்து ஒருமனதாக செயல்படுவதைப் போல முடிவெடுப்பவர்கள்.  வட மாநிலங்களில் ஏற்படுவதுபோன்ற குழப்பமான சூழ்நிலையோ, தொங்கு சட்டசபையோ எல்லாம் இங்கு சாத்தியமே இல்லை. ஆனாலும் இந்த தேர்தல் தொங்கு சட்டசபையாக போய்விடாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்தமாதிரியான ஒரு சூழலுக்குதான் வந்து நின்றிருக்கிறது.  அதனால்தான் முன்னெப்போதும் தமிழகத்தில் இல்லாத வகையில் தேர்தல் முடிவுகளைக் கண்டு மக்களே அதிர்ச்சியாகிப் போயிருக்கிறார்கள்.  சமூகதளங்களில் கூட, “யாருமே போடலைன்னா அப்புறம் யாருப்பா ஜெயலலிதாக்கு ஓட்டுப்போட்டது?” என்றெல்லாம் மீம்ஸ்கள் பறக்கின்றன.  ஏன் தமிழகத்தில் இந்த திடீர் குழப்பம்?  எப்போதும் ஒருமனதாக வாக்களிக்கும் தமிழக வாக்காளர்கள் குழம்பியதன் பின்னணி என்ன?  இதெல்லாம் தனி சுவாரசியம்.

அதற்குள் போவதற்கு முன் ஒரு விஷயத்தை நாம் தீர்மானமாக அலச வேண்டியிருக்கிறது.  அது 2011-2016 வரையிலான அதிமுக அரசின் மீதான விமர்சனங்கள்.  தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகவும் மோசமானதொரு நிர்வாகம் என்றால் அது 1991-1996 வரையிலான அதிமுக நிர்வாகம்.  அந்த நிர்வாகம் எல்லாம் ஒன்றுமே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு மிகவும் மோசமாக இருந்ததாக சொல்லப்படுவதுதான் 2011-2016 வரையிலான அதிமுக நிர்வாகம்.  முந்தையதை மோசம் எனச் சொன்னால், பிந்தையதை செயலற்றது எனச் சொல்கிறார்கள்.  வீட்டு நிர்வாகம் சரியில்லை என்றால் வருமானத்தைப் பெருக்கி, செலவுகளைக் குறைத்து நம்மூர் பெண்கள் சரிக்கட்டுவார்கள்.  ஊதாரிகளால் நிர்வகிக்கப்படும் வீடுகளில் வருமானம் பெருகாமல், பெருகிக்கொண்டே போகும் செலவுகளை சமாளிக்க கடனும் கூடிக்கொண்டே போகும். இப்படியானதொரு நிர்வாகம் தான் தமிழகத்திலே கடந்த ஐந்தாண்டுகளாக நடந்திருக்கிறது.  இதை மிகப்பெரிய புள்ளிவிவரங்களை எல்லாம் கொடுத்து குழப்பாமல் எளிமையாகச் சொல்லவேண்டுமானால் 2011ஆம் ஆண்டு திமுக, ஆட்சியில் இருந்து இறங்கிய போது தமிழகத்தின் கடன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்.  இப்போதைய கடனோ கிட்டத்தட்ட நான்கு லட்சம் கோடி ரூபாய்.  அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2011ஆம் ஆண்டு வரையிலான தமிழகத்தின் கடன் ஒருலட்ச ரூபாய்.  அதை ஐந்தே ஆண்டுகளின் நான்கு லட்சம் கோடியாக கூட்டியதுதான் ஜெ அரசின் சாதனை.  தமிழகத்தின் மொத்த ஆண்டு பட்ஜெட்டே ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மின்சார உற்பத்தியை பெருக்காமல் கடன் வாங்கி, அதிக விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கியது, அதிக விலைக்கு முட்டை வாங்கியது என இந்த அரசின் பல ஊதாரித்தனத்துக்கான விலையைத்தான் மக்கள் மின்சார விலை உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என்ற வகைகளில் எல்லாம் கொடுக்க வேண்டியதானது.  இதுபோக அம்மா உணவங்களுக்கான செலவீனங்களும் பொதுமக்கள் தலையில் தான் சுமத்தப்பட்டது.  ஆக அதிமுக அரசின் இந்த மோசமான செயல்பாடுகள் அத்தனையையும் தலையில் சுமந்துகொண்டு திரிந்தது என்னவோ மக்கள் தான்.  ஆக இப்படியொரு செயல்படாத அரசாக, ஊதாரி அரசாக, கடனாளி அரசாக, மக்களை நேரடியாகவே துன்புறுத்திய அரசாக இருந்த அதிமுக அரசு மீண்டும் எப்படி ஆட்சிக்கு வந்தது என்பதுதான் பெரும்பாலான மக்களின் ஆச்சரியம்!  இந்த ஆச்சரியத்துக்கான விடையைத் தேட வேண்டுமானால் நாம் ஒவ்வொரு படிமமாக கடந்து பொறுமையாகத்தான் போக வேண்டும்.  ஏனெனில் இந்த அரசைக் காப்பாற்ற கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நடந்த விஷயங்கள் ஒரே வரியில் சொல்லுமளவிற்கு அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல.

பொதுவாக ஒவ்வொரு தேர்தலின் போதும் Anti-Incumbency என்ற பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இதை தமிழில் ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு என்பதாக மொழிபெயர்க்கலாம்.  இந்த Anti-Incumbency வாக்குகள்தான் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆட்சி மாற்றத்தை முடிவு செய்கின்றது.  1996 தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கும், திமுக பெருவெற்றி பெற்றதற்கும் இந்த வாக்குகள்தான் காரணம்.  மிகச்சிறப்பானதாக கருதப்பட்ட 1996-2001 திமுக ஆட்சியின் முடிவில் அரசின் மீதான அதிருப்தி என்பது எள்ளளவும் இல்லை.  பணப்புழக்கம் இல்லை என கிளப்பிவிட்டார்களே தவிர அதிமுக வென்றது ஜெ அமைத்த மாபெரும் கூட்டணியால் தான்.  ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற 2006 தேர்தல் ஆகட்டும், 2011 தேர்தல் ஆகட்டும் Anti-Incumbency வாக்குகள் தமிழக ஆட்சி மாற்றங்களில் மிகப்பெரிய பங்கு வகித்தது.  இந்த 2016 தேர்தலிலும் அதுதான் நியாயமாக பங்காற்றியிருக்க வேண்டும்,  ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக திமுகவை மட்டுமே தொடர் விமர்சனம் செய்ததன் மூலமும், 2006-2011 திமுக ஆட்சிக்காலங்களின் தவறுகளை தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததன் மூலமும், அதிமுக அரசின் தவறுகளை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டதன் மூலமும், அதிமுக அரசின் மீதான மக்களின் அதிருப்தியை திமுகவுக்கு முழு சாதகமாக போய்விடாமல் சமன் செய்ததிலும்தான் தமிழக ஊடகங்களின் வெற்றி அடங்கியிருக்கிறது!

எதனால் ஊடகங்களை நான்காவது தூண் என்கிறார்கள்?  உண்மைகளை மக்களுக்கு உணர்த்தும் கடமையும், ஆட்சியாளர்களின் தவறுகளை மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருப்பதன் மூலம் ஆட்சியாளர்களை நெறிப்படுத்தும் கடமையும் ஊடகங்களுக்கு உண்டு.  கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த எந்தப் பத்திரிக்கையை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள்.  ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவை விட எதிர்கட்சியாக கூட இல்லாத திமுக மீதான விமர்சனங்கள் தான் 90% இருக்கும். விமர்சனங்கள் நியாயமாக இருந்தால் கூட ஏற்கலாம்.  ஆனால் வதந்திகளுக்கே பிரதான இடம்.  அட்டைப்படங்களைப் பார்த்தாலே இந்த அவலத்தை புரிந்துகொள்ளலாம்.   அதேபோல எந்த தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் நிகழ்த்தப்பட்ட விவாத நிகழ்ச்சிகளின் தலைப்புகள் எல்லாமே எதிர்கட்சியாகக் கூட இல்லாத திமுகவை அலசுவதாகவே இருக்கும்.   இதுதான் ஐந்தாண்டுகளாக ஊடகங்கள் ஜெயலலிதாவிற்கு செய்திருக்கும் கடமை.   இந்தக் கடமையையும் மீறிதான் திமுக இப்போது அசுர பலமிக்க எதிர்கட்சியாக ஜெயித்திருக்கிறது.

இவர்கள் செய்திகளை வழங்கும் பாணியிலும் இதே அவலம்தான்.  உதாரணத்திற்கு, நடந்து முடிந்த ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவை எடுத்துக் கொள்ளுங்கள்.  தேர்தலில் தோற்ற சரத்குமார் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்.  எண்பத்தி ஒன்பது உறுப்பினர்களுடன் பலமான எதிர்கட்சித் தலைவராக விளங்கும் ஸ்டாலின் எங்கோ மூலையில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்.  ஒருவேளை இந்த அவமானம் தனக்கு நேரும் என முன்னரே உணர்ந்து ஸ்டாலின் இந்நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால், "ஜெ நாகரீகமாக அழைத்தும் போகாமல் புறக்கணித்தார் ஸ்டாலின்," என எழுதியிருப்பார்கள்.  விவாத நிகழ்ச்சிகள் நடத்தியிருப்பார்கள்.  ஆனால் இப்போது, "பதவியேற்பில் அரசியல் நாகரீகத்துடன் கலந்துகொண்ட ஸ்டாலினை அவமானப்படுத்தினார் ஜெயலலிதா," என யாருமே எழுத மாட்டார்கள்.  ஒரு ஊடகவியலாளர் கூட இதுகுறித்து விவாதமும் நடத்த மாட்டார்.  இந்த லட்சணத்தில்தான் தமிழக ஊடக நிலைப்பாடு இருக்கிறது.  இப்படியான ஊடகங்களைப் பார்த்துதான் மக்கள் செய்திகளை தெரிந்துகொள்கிறார்கள்.  என்னைக்கேட்பின், நடுநிலை முகமூடியோடு மக்களை ஏமாற்றும் இந்த ஊடகங்களைவிட வெளிப்படையாக தத்தமது கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் கலைஞர்டிவியும், ஜெயாடியும் கோடி மடங்கு சிறந்தவை.

ஊடகங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.  ஞாநி சமீபத்தில் தன் முகநூல் பதிவொன்றில் “திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள் சமூக விரோதிகள்,” என ஒரு பதிவிட்டிருந்தார்.  எவ்வளவு மோசமான, ஜனநாயக விரோதமான பதிவு இது?  சரி ஞாநி யார்?  அவருக்கு இதைச் சொல்ல தகுதி இருக்கிறதா என்று பார்த்தால், ஒருவேளை அவர் ஆம் ஆத்மியில் இருந்திருந்தால் கூட இதைச் சொல்லலாம்.  ஆனால் அவரோ, அரசியலுக்கு வரும்போதே குடும்பத்தோடு வந்த விஜயகாந்தை குடும்ப ஆட்சிக்கு எதிரான முதல்வர் வேட்பாளராக, மாற்றிமாற்றி பேரம் பேசுவதன் மூலம் ஆட்சிக்கே வராமல் ஊழல் செய்யமுடியும் என உணர்த்திய விஜயகாந்தை ஊழலுக்கு எதிரான முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தபடியே இதைச் சொல்கிறார்.  தளி ராமச்சந்திரனை வேட்பாளராக நிறுத்தியிருக்கும் பொதுவுடைமைவாதிகளை ஆதரித்துக்கொண்டு இதைச் சொல்கிறார்.  கூட்டணி ஆட்சிதான் தமிழக அரசியலின் விடிவுக்கான தீர்வு என சொல்லும் ஞாநி அதை நிறைவேற்ற இவ்வளவு தரங்கெட்ட சமரசங்களுக்கு தயாராக இருந்தால், பலகாலமாக ஆட்சியில் இருக்கும் திமுகவும், அதிமுகவும் எவ்வளவு சமரசங்களுக்கு தயாராக இருப்பார்கள்?  அவர்களை குறை சொல்ல ஞாநி போன்றவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை நாம் ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும்.  ஞாநி என்ற ஒரு தனிநபரின் பெயரை இங்கே நான் குறிப்பிடுகிறேனே தவிர, ஞாநி போன்ற ஏராளமானவர்கள் சமீபகாலங்களில் தமிழகத்தில் தோன்றியிருக்கிறார்கள்.
இவர்கள், எதுவுமே தமிழகத்தில் சரி இல்லை, எல்லாமே மோசம் என தூய்மைவாதம் பேசுவதன் மூலம் ஜனநாயகப் படுகொலையை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  ஜனநாயகம் என்றால் என்ன என்பதையோ, எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் இவர்கள் எதிர்பார்க்கும் பரிசுத்த ஆட்சி என்பது ஜனநாயகத்தில் நடைமுறை சாத்தியமே கிடையாது என்பதையோ இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.  சிலகாலம் முன்பு இதே ஞாநி நோட்டாவுக்கு ஆதரவாக, அதாவது அப்போதைய 49ஓவுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்ததை நாம் அறிவோம்.  இப்படி உட்டோப்பியன் தேசத்தை கனவு கண்டு, “அசிங்கம் அசிங்கம் அபிராமி அசிங்கம்,” என பேசித்திரிகிறவர்கள் மிகவும் மோசமானதொரு எதிர்மறை விளைவைத்தான் ஜனநாயகத்தில் உருவாக்கிவிடுகிறார்கள்.  ஏன் மோசமானதொரு எதிர்மறை விளைவை உருவாக்குகிறார்கள் எனச் சொல்கிறேன் என்றால், இந்த தேர்தலில் நோட்டா கிட்டத்தட்ட 1.1% வாக்குகளை பெற்றிருக்கிறது.  அதாவது ஏறத்தாழ நான்கு லட்சம் வாக்குகளுக்கும் மேல்.  இந்த நான்கு லட்சத்தி சொச்சம் ஆட்களும் தத்தமது தொகுதியில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களின் மேலும் நம்பிக்கையிழந்து, ‘None of the above’ என தங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.  நாம் அவர்களிடம், “உங்கள் தொகுதி வேட்பாளர்கள் எல்லோரது விவரங்களும் உங்களுக்குத் தெரியுமா? சுயேட்சையாக  நிற்பவர்களுக்கு கூட வாக்களிக்க உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? சுயேட்சை வேட்பாளர்களின் தகுதிகளை தெரிந்துகொண்டுதான் நீங்கள் நோட்டாவை தேர்ந்தெடுத்தீர்களா?” எனக் கேட்டால் பேந்தப் பேந்த விழிப்பார்கள்.  நியாயமாகப் பார்த்தால் எல்லா வேட்பாளர்களையும் பற்றி தீர தெரிந்துகொண்ட பிறகுதானே நோட்டாவுக்கு வாக்களித்திருக்க வேண்டும்?  ஆனால் அப்படியா இவர்கள் செய்திருப்பார்கள்?  கட்சிகளைப் பற்றியும், வேட்பாளர்களைப் பற்றியும் எந்த அறிவுமே இல்லாமல், எந்த ஆய்வுமே செய்யாமல் ‘எல்லாமே மோசம், அரசியலே மோசம்’ என பிதற்றித் திரியும் தூய்மைவாதிகளின் பேச்சை கேட்டு ஒரு ஃபேஷன் போல நோட்டாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.  இதனால்தான் இதை ஜனநாயகப் படுகொலை என்கிறேன்.

ஏறத்தாழ இருபது தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை இந்த நோட்டா வாக்குகள் தீர்மானித்திருக்கின்றன.  ஊர் ஊராகச் சுற்றி கதறக் கதறக் கத்திய சீமானின் கட்சியை விடவும் நோட்டா அதிக வாக்குகள் பெற்று அரசியல் அறிவற்றவர்களின் தனியொரு தண்டக்கட்சியாக உயர்ந்து நிற்கிறது.  ஆக, நடப்புக்கு சம்பந்தமே இல்லாமல், நாட்டு நடப்பே தெரியாமல், ஜனநாயகத்துக்கு முற்றிலும் அந்நியப்பட்ட ஒரு கூட்டம் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.  இவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து நோட்டாவுக்கு வாக்களித்தது கூட சமூக வலைதளங்களில் மையிட்ட விரல்களைக் காட்டியபடி புகைப்படங்களை பதிவேற்றத்தானேயொழிய வேறு எந்த சமூக அக்கறையும் இல்லை என்றே நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.  ஒட்டுமொத்தமாக அரசியல்வாதிகளுக்கு எதிரான பரப்புரையின் மூலம் மக்களை அரசியலில் இருந்தே அந்நியப்படுத்தியதுதான் எல்லாமே மோசம் என சொல்லித்திரியும் தூய்மைவாதிகளின் சாதனை.  இதைவிட ஒரு சமூகவிரோதச் செயல் ஜனநாயகத்தில் என்ன இருக்க முடியும்?

சென்னை வெள்ளத்தின்போது கூட ஒட்டுமொத்தமாக அரசியல்வாதிகளைதான் பல இளைஞர்கள் பழித்துக் கொண்டிருந்தார்களேயொழிய ஆட்சியாளர்களை பழிக்கவில்லை.  சென்னை வெள்ளத்திற்கும், மீட்பு பணி முடக்கத்திற்கும் ஒட்டுமொத்தமாக அரசியல்வாதிகள் எப்படி பொறுப்பாவார்கள்?  ஆட்சியாளர்கள் தானே பொறுப்பாக முடியும்?  அந்த அறிவு கூட இல்லாமல்தான் ஒரு பெரிய கூட்டம் இங்கே வளர்ந்து கொண்டிருக்கிறது.  சமூக விரோதிகள் என்றால் கத்தியைக் காட்டி மிரட்டி உடைமைகளைப் பறிப்பார்கள் என்றில்லை.  ஜிப்பாவும், ஜோல்னா பையும் அணிந்துகொண்டு நடைமுறைக்கு ஒவ்வாத தத்துவங்களையும், கதைகளில் மட்டுமே வரும் உட்டோபியாவையும் கற்பனை செய்துகொண்டு, இளைஞர்களுக்கு அரசியலின் மேல் ஒவ்வாமையை வளரச்செய்து, அவர்களை தவறாக Anarchism எனப்படும் அரசின்மையை நோக்கி வழிநடத்தி அவர்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்குகின்றவர்களும் சமூகவிரோதிகள் தான்.

திமுகவும், அதிமுகவும் ஒன்றுதான் என்று எந்த ஆதாரமுமற்ற மொட்டையான பரப்புரையின் மூலமே அதிமுகவின் இந்த மெல்லிய வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது.  காலம் காலமாக அதிமுக, திமுகவுடன் மாற்றிமாற்றி கூட்டணி வைத்த மநகூ தலைவர்களுக்கு வேண்டுமானால் திமுகவும், அதிமுகவும் ஒன்றாக இருக்கலாம்.  ஆனால் நடைமுறையில், கத்திப்பாரா பாலத்தைக் கட்டிய திமுகவும், பாலங்களால்தான் கொசு உற்பத்தி நடக்கிறது எனச் சொன்ன சைதை துரைசாமி இருக்கும் அதிமுகவும் எப்படி ஒன்றாக முடியும்?  அண்ணா நூலகத்தை கட்டிய திமுகவும், அதை சேட்டு வீட்டு கல்யாணத்துக்கு வாடகைக்கு விட்ட அதிமுகவும் எப்படி ஒன்றாக முடியும்?   இதெல்லாம் போக திமுகவுக்கும், அதிமுகவுக்கும் அடிப்படையிலேயே மிகப்பெரிய வித்தியாசங்கள் உண்டு.  அதிமுக ஏழைமக்களின் அன்றாட தேவைகளை மட்டும் அன்றன்றைக்கு பூர்த்தி செய்வதை கொள்கையாகக் கொண்ட கட்சி.  எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இலவச செருப்பு, இலவச பல்பொடி என வளர்ந்த அந்தக் கட்சி, இப்போது அம்மா உணவகம், அம்மா வாட்டர் வரையில் வளர்ந்துள்ளது.  அதிமுகவின் நற்பணிகளை மக்கள் உடனடியாக உணர முடியும்.  அது வாக்குகளாக மாறும்.  ஏழை மக்கள் ஏழை மக்களாக இருக்கும் வரைதான் அதிமுக இவ்வளவு பிரம்மாண்டமான கட்சியாக திகழ முடியும்.  அதைத்தான் அதிமுகவும் விரும்புகிறது.  அதனால்தான் அதன் திட்டங்கள் மாநிலத்தின் முன்னேற்றத்தை மனதில் கொள்ளாமல் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் மட்டுமே கவனமாக இருக்கிறது.  திமுகவின் வளர்ச்சிப் பணிகள் பெரும்பாலும் மாநிலத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து செய்யப்படும் தொலைநோக்குப் பணிகள்.  அதனால்தான் உட்கட்டமைப்பு வசதிகள், தொழிற்வளர்ச்சி, மின் உற்பத்தி திட்டங்கள், குடிசை மாற்று வாரியம், இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரம், உழவர் சந்தை என்ற வகையில் திமுகவின் வளர்ச்சித்திட்டங்கள் இருக்கிறது.  எளிமையாக புரியவேண்டுமானால் திமுக கொண்டு வந்த ஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தையும், அதிமுக கொண்டு வந்த அம்மா பாட்டில் குடிநீர் திட்டத்தையும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்.  எப்போதாவது அபூர்வமாக இரு கட்சிகளும் ஒன்றன் வாக்குவங்கியை மற்றொன்று கவர முயலும் போதுதான் ஜெயலலிதா 69% இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் அபூர்வமும், திமுக இலவச தொலைக்காட்சி வழங்கும் அபூர்வமும் நடக்கிறது.  இதையெல்லாம் விட அதிமுகவுக்கும், திமுகவுக்குமான வேற்றுமை, திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவின் நற்பணிகள் எதுவும் நிறுத்தப்படாது.  ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவின் அனைத்து பணிகளுமே முடக்கப்படும்.  அதனால்தான் அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழகத்தின் தொழில் முன்னேற்றம் என்பது ரிமோட் கண்ட்ரோல்களில் இருக்கும் ‘pause’ பட்டனை அழுத்தியதைப் போல அப்படியே நிற்கிறது.

ஆக நியாயமானதொரு அரசியல் மாற்றம் விரும்புகின்றவர்கள் திமுக, அதிமுகவுக்கு இடையே இருக்கும் இந்த அடிப்படை வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு இரு கட்சிகளையும் தேவையான சமயங்களில் விமர்சிப்பார்கள்.  எதையெல்லாம் திருத்த வேண்டுமோ அவற்றையெல்லாம் திருத்த முயற்சிப்பார்கள்.  நமக்கு இரு கட்சிகளிடமும் நிறைய விமர்சங்கள் இருந்தாலும் இந்திய அளவில் நிறைய மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழகம் தான் முன்னுதாரணமாக திகழ்கிறது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.  அதைவிடுத்து மக்களிடம் போய் மொட்டையாக, “இரண்டுமே மோசம், இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டை சீரழித்துவிட்டன,” என ஒரு பச்சையான பொய்யைச் சொன்னால் மக்கள் சொல்கின்றவர்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவார்கள்.  அதுதான் தேமுதிக-மநகூ-தமாக அணியினருக்கும், நாம் தமிழர் கட்சிக்கும், பாஜகவுக்கும் நடந்துள்ளது.  ஏனெனில் ஆட்சிக்கு ஆட்சி சிலப்பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழக மக்கள் திமுகவையும், அதிமுகவையும் மட்டுமே முழுமையாக நம்புகிறார்கள்.  அவ்விரண்டு கட்சிகளும் தங்கள் தவறுகளை திருத்தி செயல்படவேண்டும் என்றுதான் மக்கள் நினைக்கிறார்களேயொழிய அவையிரண்டும் அழிய வேண்டும் என்பது பொதுமக்களின் எண்னமாக இல்லை.
ஆக கூட்டிக்கழித்துப் பார்த்தால், ஊடகங்களின் ஒருதலைபட்சமான நடவடிக்கை, அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய தவறுகள் நடக்கும்போதெல்லாம் கூட திமுகவை சேர்த்தே விமர்சனம் செய்த பாங்கு, “அரசியலே மோசம் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்கள்,” என்ற அரசியல் அறிவற்ற ஜனநாயக விரோதிகளின் பரப்புரை என எல்லா விஷயங்களும் ஒன்றிணைந்து ஜெயலலிதா அரசை மயிரிழையில் காப்பாற்றியிருக்கிறது.  கடந்த ஐந்தாண்டுகளில் விஜயகாந்த் விமர்சிக்கப்பட்ட அளவுக்கு கூட ஜெயலலிதா விமர்சிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.    ஒருவேளை ஊடகங்கள் தங்கள் கடமையை ஜெயலலிதாவுக்கு ஆற்றாமல், நேர்மையாக மக்களுக்கு ஆற்றியிருந்தார்கள் என்றால் இப்போது ஜெ கொடநாட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய பயத்தில், பதற்றத்தில் இருந்திருப்பார்.   திமுகவும், அதிமுகவும் ஒன்று எனச் சொல்லுவதில் மட்டுமே கவனமாக இருந்த எதிர்கட்சிகள், மின்சார விலையேற்றம், பால் விலையேற்றம், பேருந்து கட்டண உயர்வு, சசிபெருமாள் சாவு, மக்கள் பணியாளர் தற்கொலைகள், அண்ணா நூலக அழிவு, மின்சாரம் உற்பத்தி செய்யாமல் அநியாய விலைக்கு தனியாரிடம் வாங்கியது, முட்டை ஊழல், குமாரசாமி தில்லுமுல்லு, தமிழகத்தை பெருங்கடனாளி ஆக்கியது, தொழில்வளர்ச்சியை தேக்கநிலைக்கு தள்ளியது, வெள்ளத்தின்போது செயல்படாமல் இருந்தது, ஹெலிகாப்டருக்கு கோடிகோடியாக கொட்டியது, தன் வசதிக்காக வெயிலில் ஏழுபேரை சாகடித்தது என ஜெவின் எண்ணற்ற தவறுகளை எல்லாம் மக்களிடம் அந்தந்த காலத்தில் சரியாக சென்று சேர்த்திருந்தார்கள் என்றால் நிலைமையே வேறு.   நல்லதொரு ஆட்சிமாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும்.   புது ஆட்சிக்கும் ஊடகங்களின் மேல் பயம் இருந்திருக்கும்.  ஆனால் அதைச் செய்யாமல் மக்களுக்கு துரோகம் இழைத்ததில் தமிழக ஊடகங்களும், மநகூ அணியினரும் மகத்தானதொரு பணியை ஆற்றியிருக்கின்றார்கள்.

-டான் அசோக்
writerdonashok@yahoo.com

Thursday, December 10, 2015

சென்னை வெள்ளம் நடந்தது என்ன? -டான் அசோக்

சென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் என ஃப்ரண்ட்லைன், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வயர்ட் போன்ற இதழ்கள் குற்றம் சாட்டியுள்ளன.  அக்கட்டுரைகள் தரும் ஆதாரங்களை எளிதில் புரியும் வண்ணம் விளக்குவதே இப்பதிவு.

நவம்பர் 8, 9, 12, 13, 15, 23 தேதிகள்:
சென்னையில் கனமழை பெய்கிறது.

நவம்பர் இறுதி வாரம் (தோராயமாக 26ஆம் தேதி):  

1) சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.

2) எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித்துறை செயலாளரிடம் (PWD Secretary) செம்பரப்பாக்கம் ஏரியில் 22 மீட்டரில் (72அடி) இருக்கும் நீரின் அளவை 18மீட்டராக (60அடி) குறைக்க சொல்கிறார்கள்.  குறைத்தால் மட்டுமே வர இருக்கும் அதீத கனமழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கிறார்கள்.

நவம்பர் 27ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 28ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 29ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 30ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.
அதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த (Dry days) நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்.  தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். (இந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்சின் உத்தரவுக்காக தலைமைச் செயலாளர் காத்திருக்கிறார் என்றுதான் நாம் எழுதியிருக்க வேண்டும்.  ஆனால் இது அம்மாவின் ஆட்சி.  அம்மாவின் ஆட்சியில் “அணையை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்…  அணையை மூட நான் ஆணை பிறப்பித்துள்ளேன்,” என எல்லா வேலைகளையும் அம்மாவே இழுத்துப்போட்டுச் செய்வார் என்பதால் இதில் மட்டும் நாம் ஓ.பி.எஸ்சை இழுத்துவிடுவது அறம் அல்ல.  அதனால் தலைமைச் செயலாளர் அம்மாவின் ஆணைக்காகத்தான் காத்திருந்திருக்கிறார் என்பது குழந்தைக்கும் தெளிவு)


டிசம்பர் 1:

·         சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)

·         செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு அரசு தளத்தின்படி 3141மில்லியன் கன அடியாக இருக்கிறது.

·         டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு, செம்பரபாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் நொடிக்கு 5000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு நொடிக்கு 7500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும் மொட்டையாக ஒரு செய்தி கிடைக்கிறது.

·         மாலை 5 மணிக்கு முதலில் ஏரியை திறக்கிறார்கள்.  பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நொடிக்கு 10000 கன அடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்துவிட முடிவுசெய்த அரசு கண்டிப்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள் என தான் நம்பியதாகவும் wired இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

·         ஆனால் தமிழக அரசின் இணையதளத்தில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு வெறும் 900கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கிறார்கள்.
ஆகமொத்தத்தில்,
செய்தியாளர்களுக்கு கலக்டர் சொன்னபடி நொடிக்கு 5000-7000 கன அடியை திறந்துவிட்டார்களா?  அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000கன அடி நீர் திறந்துவிட்டார்களா? அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர் தான் திறந்துவிட்டார்களா? எது உண்மை?  உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!


 டிசம்பர் 2ஆம் தேதி:

·         அரசு தளத்தின்படி டிசம்பர் 1ஆம் தேதி ஏரியில் நீரின் அளவு 83.48அடி  (3141 மில்லியன் கன அடி).  டிசம்பர் 2ம் தேதி ஏரியில் நீரின் அளவு 74.08அடி (1134மில்லியன் கன அடி).  ஆக 2007 மில்லியன் கன அடி நீர் முந்தைய இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறது.  அதாவது  அறிவித்த நொடிக்கு 7500கன அடிக்கு மாறாக கிட்டத்தட்ட நொடிக்கு 29000 கன அடி நீரை டிசம்பர் 1ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியேற்றியிருக்கிறார்கள்.  அதிகாலை 2மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது.  இரவு 10மணிக்கு அபாயகரமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ளம் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது.     

வெள்ளத்திற்கான காரணங்கள்:

1)   26ஆம் தேதியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27,28,29,20 ஆகிய மழையில்லா தேதிகளில் எழவு காத்த கிளி போல ‘மேலிட’ உத்தரவுக்காக காத்திருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

2)   டிசம்பர் 1ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு வெறும் 7500கன அடி மட்டுமே திறக்கப்போகிறோம் என செய்தி கொடுத்துவிட்டு, இரவு 10 மணிக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல் திடீரென நொடிக்கு 29000கன அடி நீரை திறந்துவிட்டது. 

3)   சொல்லாமல் கொள்ளாமல் திறந்துவிட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6மணிக்கு திறந்துவிட்டிருந்தால் இரவு 10மணிக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும்.  ஆனால் இரவு 10மணிக்கு திறந்ததால் அதிகாலை 2மணிக்கு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்டார்கள்.  இவ்வளவு அபாகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது என்பது மிகப்பெரிய தவறு.

4)   இந்த 29000 கன அடி திறப்பைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை.  மீண்டும் மீண்டும் கேட்டபின் சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே இதை டிசம்பர் 2ஆம் தேதி எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கிறார்கள்.

5)   பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என வாளியைக் கவிழ்ப்பதைப் போல கழிப்பது மரபல்ல.  அபாயகரமான அளவை எட்டிவிட்டால் வாளியில் துளையிட்டு நீரை வெளியேற்றுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதுதான் முறை.  இதை நவம்பர் 27,28,29,30ஆம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும் இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, முழுக்க முழுக்க அரசுதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.   

6)   இதெல்லாம் போக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம்.  அந்த குப்பைகள், கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில் கலக்கும் வழியை அடைத்துக்கொண்டதும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

7)   சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப்பாதைகளையும், ஓட்டெரி, பங்கிங்காம் கால்வாய்களையும் ஜூன் ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம்.  ஆனால் இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ/சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் முறையாக தூர்வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள்.

ஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல.  கனமழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும் ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது.  இப்போது நாம் அனைவரும் ‘ஸ்டிக்கர்’ பணிகள் பற்றி பேசுவதிலும், அதிமுகவை கிண்டலடிக்கும் மீம்கள் செய்வதிலும். எல்லா கட்சிகளும் இப்படித்தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதும் என பிசியாக இருக்கிறோம்.  இன்னும் சிலரோ ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும், பல்லாண்டு காலம் செய்த தவறு என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனபோக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றார்கள்.  அரசும் அதையேதான் விரும்புகிறது. 
இந்திய ஊடகங்கள் நம்மை கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள்.  இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? 
எந்த அளவுக்கு நிர்வாரணப்பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்களோ அதே அளவில் உண்மையை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.  ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் முறையான சுதந்திரமான விசாரணைக் கமிஷன் வைத்து உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும்தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் செய்யும் உண்மையான நிவாரணம் ஆகும்.

-டான் அசோக்

நன்றி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
வயர்ட்
ஃப்ரண்ட்லைன்
Related Posts Plugin for WordPress, Blogger...