Monday, April 6, 2015

இந்திய உணவு அரசியல்- டான் அசோக்இந்தியா பல விசித்திரங்கள் நிறைந்த நாடு.  ஆனால் பாஜக அரசு மாட்டுக்கறியை தடை செய்ததில் எனக்கு எந்த விசித்திரமும் இல்லை.  7000 ஆண்டுகளுக்கு முன்பே விமானம் இருந்தது, கோமியம் புற்றுநோயை குணமாக்கும், மோடி இந்தியாவை நிலாவில் தூக்கி வைப்பார் என்றெல்லாம் புருடா விடும் கூட்டத்திடம் அறிவுபூர்வமான சட்டத்தையா எதிர்பார்க்க முடியும்?  மாட்டுக்கறி விற்க, உண்ணத் தடை என்பது இந்துத்துவத்தை தூக்கிப்பிடிக்கும் அரசியல் என்பதையும் தாண்டி, இந்திய சமூகத்தில் ஒளிந்திருக்கும் உணவுசார் அரசியல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் செயல்!  இந்தியாவில் அரசியல் இல்லாத விஷயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  உணவுப் பழக்கத்திற்கு கண்டிப்பாக அந்த பட்டியலில் இடம் கிடையாது.

சாதி, மதம், இனம் சார்ந்து வேற்றுமை பாராட்டுவதெல்லாம் ஒரு விதமான அயோக்கியத்தனம் என்றால், என்ன உணவு உண்கிறோம் என்பதை வைத்து வேற்றுமை காட்டும் பழக்கம், அதுவும் நேரடியாகவே காட்டும் பழக்கம் இன்னொரு வகை அயோக்கியத்தனம்.  அசைவப் பிரியனான எனக்கு என் உணவுப்பழக்கம் சார்ந்த முதல் அதிர்ச்சி நான்காம் வகுப்பில் படிக்கும் போது என் தோழி ஒருத்தியின் அம்மாவால் வந்தது.  பள்ளியில் மதிய உணவுக்காக நான் கொண்டு போகும் முட்டை ஆம்லேட்களை விரும்பிச் சாப்பிடுவதை என் தோழி பழக்கமாக வைத்திருந்தாள்.  ஒருநாள் மறந்து போய், சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த பாதி ஆம்லேட்டை அவள் உணவு டப்பாவிலேயே வைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டாள்.  வீட்டில் அதை திறந்து பார்த்த அவள் அம்மாவிற்கு பயங்கர அதிர்ச்சி.  அப்படியே அந்த உணவு டப்பாவை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து பெரிய சண்டையே போட்டுவிட்டார். 

“நாங்கள் சுத்தமான பிராமணர்கள்.  உங்கள் மகன் எப்படி என் மகளுக்கு முட்டையை உண்ணக் கொடுக்கலாம்?” என, நான் ஏதோ அவளுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டதைப் போல கோபமாக கேட்டார்.  என் அம்மாவும் கோபத்தில் பதிலுக்கு ஏதோ பேசப்போக, ஒரு சாதாரண உணவுப் பிரச்சினையால் ஒரு ‘உன்னத’ நட்பில் தற்காலிக விரிசல் விழுந்தது.  எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், பிராமணர்களுக்கு இயற்கையிலேயே ஆம்லேட் உண்ணத்தகுந்த உணவில்லை எனில், தீட்டு எனில் என் தோழியால் அதை சாப்பிட்டிருக்கவே முடியாது.  எனக்கு சாப்பிடப் பிடிக்காமல் வைத்திருந்த முட்டைகளை எல்லாம் ரசித்துச் சாப்பிட்டவள் அவள்!  இந்த அம்மாவோ என்னால்தான் அவர்களின் புனிதம் கெட்டுப்போனதைப் போல கத்திக்கொண்டிருந்தார்.  அதுவும் போக எனக்கு ஆத்திரம் வரவழைத்த விஷயம், அதெப்படி எனது உணவு, எனது உணவுக் கலாச்சாரம் அவர்களுக்கு ‘தீட்டு’ ஆகும் என்பதுதான்!  என் உணவை தீட்டு எனச் சொன்னால் என்னைச் சொன்னதைப் போலத்தானே!  பசுவின் ரத்தத்தில் உருவாகும் பாலும், தயிரும் எனக்குத் தீட்டு என நாளை நான் சொன்னால் இந்த புனிதமானவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இதன் வேர் எங்கிருக்கிறது என்பதை ஆராய ஆரம்பித்தால், மது அருந்துதல் எனும் தீய பழக்கத்தோடு, மாமிசம் உண்ணுதலையும் சேர்த்துச் சொல்லும் பழக்கம் நம் கலாச்சாரத்தில் இருக்கிறது.  மாமிசம் சாப்பிடுகின்றவர்களே கூட இதைச் செய்கிறார்கள்.  உலகின் பெரும்பான்மை மக்கள் அசைவ உண்ணிகள்.  இன்னும் சொல்லப் போனால் விவசாயம் பழகும் வரை மனித இனத்தின் பிரதான உணவு மாமிசம் மட்டுமே.  ஆனால் இந்தியக் கலாச்சாரத்தில் மாமிசத்தை, மதுவோடு சேர்த்து வைத்திருப்பது எவ்வகையில் நியாயம்?  மது அருந்துவோரும், மாமிசம் உண்போரும் ஒரே தட்டில் வைக்கப்பட வேண்டியவர்களா? 

ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவது கடவுளுக்கு மாலை போட்டுக்கொண்டு மலை ஏறுகிறார்களே, அவர்கள் ஏன் மாமிசத்தை துறக்க பணிக்கப்படுகிறார்கள்?  ஏன் ஒரு உணவுப்பழக்கம் கடவுளுக்கு தீட்டாகப் பார்க்கப்படுகிறது?  ஒரு மதத்தின் கடவுளுக்கு, அம்மதத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களின் உணவுப்பழக்கம் தீட்டு என்றால், அக்கடவுள் அம்மக்களின் கடவுள் தானா?  நாற்பது நாட்கள் ஒருவன் மாமிசம் சாப்பிடவில்லை என்றால் அவனுக்கு ‘சாமி’ அந்தஸ்து வந்துவிடும் என்பது கலாச்சாரம் என்றால், எப்போதுமே மாமிசம் சாப்பிடாத சாதியைச் சேர்ந்தவர்கள் நிரந்தர சாமிகள் என்பதுதானே பொருள்.  இந்தக் கலாச்சாரத்தின் மறைமுக நோக்கம் உணவுப் பழக்கத்தை வைத்து ஒரு சாராரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை எக்காலத்திற்கும் தாழ்ந்தவர்களாக உணரச் செய்வதாகத்தானே இருக்க முடியும்!

மாட்டுக்கறி மீதான தடையை எடுத்துக் கொண்டால், காலம் காலமாக மஹாராஷ்ட்ரா மாநில மக்களில் ஒரு பகுதியினர் மாட்டுக்கறியை உணவாக சாப்பிட்டு வந்திருப்பார்கள்.  திடீரென மாட்டுக்கறியை சட்டவிரோதமாக ஆக்குகிறது அரசு.  இது அம்மக்களின் மனதில் என்ன விதமான உணர்வுகளை உண்டு செய்யும்?  மாட்டுக்கறி உண்ணுதல் என்ன கஞ்சா குற்றமா?  இதுவரை தங்கள் வாழ்வியலில் மிகச்சாதாரணமாக பின்னிப் பிணைந்திருந்த ஒரு பழக்கம், தீடிரென ஒரே நாளில் சிறைதண்டனை வழங்கப்படும் அளவுக்கு கொடுங்குற்றமாக பார்க்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?  இந்துத்துவ கொள்கை, பிற மதத்தினரின் மேலும், தாழ்த்தபட்டவர்கள் மீதும், மாட்டுக்கறி உண்ணும் ஏனையோரின் மீதும் தொடுத்திருக்கும் உளவியல் போர் தானே இது?  அதிலும், ஜீவகாருண்யத்திற்காக இப்படி ஒரு சட்டம் என்றால் எல்லா மாமிச உணவுகளையும் தடை செய்திருக்க வேண்டும் அல்லவா?  அட குறைந்த பட்சம் மாடுகள் மீது மட்டும்தான் அக்கறை என்றால் எருமை மாடுகளையும் சேர்த்து காப்பாற்றியிருக்க வேண்டும் இல்லையா?  ஆனால் எருமைகளை வெட்டித் தின்றால் தவறில்லையாம்.  பசுவுக்கும், காளைகளுக்கும் மட்டும்தான் இச்சட்டம் பொருந்துமாம்!  மாடுகளுக்குள் கூட சாதி வேறுபாடு பார்க்கும் அளவிற்கு தாழ்ந்த, கேவலமான அறிவு நிலையில்தான் இருக்கிறது பாஜக அரசு!  ஆடுகளும், கோழிகளும் என்ன பாவம் செய்தன எனத் தெரியவில்லை.  ஆடுகளிடமும் பால் திருடுகிறோம். மாடுகளிடமும் பால் திருடுகிறோம்.  அதில் என்ன மாடு மட்டும் உயர்ந்தது?  ஒருவேளை மிருகங்களைப் பொறுத்தவரை, பசு இனம் முதல் வருண மிருகம் போல!  மனிதர்களில் செய்வதைப் போலவே, மிருகங்களிலும் முதல் வருண இனத்தை காத்தால் மட்டும் போதும் என பாஜகவினர் நினைக்கிறார்களோ என்னவோ!   

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்தியாவைப் பொறுத்தவரை பிராமணர்கள் என்னவெல்லாம் சாப்பிடுகிறார்களோ அதெல்லாம் சைவ உணவுகள்.  இதுகூட ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும்.  பால், தயிர், வெண்ணை போன்ற பொருட்கள் எல்லாம் சுத்தமான மாட்டு ரத்தத்தில் உருவானவை.  இவை எல்லாம் சைவம் எனச் சொல்வதே முதலில் நகைப்புக்கு உரியது. விஞ்ஞானமும் இவற்றை சைவம் என ஏற்கவில்லை.  அதிலும் மாடு தன் கன்றுக்காக சுரக்கும் பாலை, ‘பசு மனிதனுக்கு பால் கொடுக்கிறது’ என்ற ஒரு கேவலமான பொய்யைச் சொல்லி திருடிக் குடிப்பதும் புனிதப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் மாட்டுக்கறியை விற்றால் அது பெருங்குற்றமாம்! 

வங்காளம் போன்ற இடங்களில் பிராமணர்கள் மீன்கறி சாப்பிடுவார்கள்.  சரி அதற்காக அவர்கள் தங்களை அசைவ உண்ணிகள் என பறைசாற்றிக் கொள்கிறார்களா எனப் பார்த்தால், இல்லை!  மாறாக மீனை சைவம் ஆக்கிவிட்டார்கள்!  வங்காளத்தைப் பொறுத்துவரை மீன் என்பது கடலில் பூக்கும் பூ! அதனால் பூஜை முதல் சாம்பார் வரை அதை உபயோக்கிறார்கள்.  சைவ உணவாகவே மீன் கருதப்படுகிறது.  எவ்வளவு பெரிய மோசடி இது?  மீன் கடலில் பூக்கும் பூ என்றால் மாடு நிலத்தில் பூக்கும் பூ தானே!  மாடு சைவ உணவு தானே?

தீனா படத்தில் ஒரு வசனம் வரும்.  “பீர் எப்படா கூல் ட்ரிங்ஸ் ஆச்சு?” என அஜீத் கேட்பார்.  உடனிருப்பவர், “முட்டை எல்லாம் எப்போ சைவம் ஆச்சோ அப்ப பீரையும் கூல்ட்ரிங்க்ஸ்ல சேர்த்துட்டாங்க தல,” என பதில் அளிப்பார்!  நகைச்சுவை உரையாடலாகத் தோன்றினாலும் உண்மை அதுதான்.  ஒரு காலத்தில் முட்டை தீவிர அசைவ உணவாகப் பார்க்கப்பட்டது.  ஆனால் இப்போதெல்லாம், “நான் சைவம்,” எனச் சொல்கின்றவர்களில் பெரும்பாலானோர் முட்டை உண்ணிகள்!  இதற்காகவே வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் போல, எக்கெடேரியன் (eggetarian) என்ற பதத்தையே உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்!  மேலே என் தோழியுடனான தற்காலிக பிரிவு பற்றி மேலே சொன்னேன் அல்லவா!  அந்த தோழியின் அம்மா சில மாதங்கள் கழித்து மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்தார்.  இந்த முறை அவர் வந்தது சண்டை போடுவதற்காக அல்ல, எப்படி ஆம்லேட் ஆப்பாயில் போடுவது என்பதை அறிந்து கொள்வதற்காக!  கண்மருத்துவர் ஒருவர் என் தோழியின் அக்காவுக்கு அவசியம் முட்டை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தவும், பழசையெல்லாம் மறந்து சமாதானத்துக்கு வந்துவிட்டார்.  அனேகமாக இருபது வருடங்களுக்கு முன்பான இந்த காலகட்டத்தில்தான் முட்டை மெதுமெதுவாக சைவ உணவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.       
 உணவுப்பழக்க வழக்கம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் அவரவர் வீட்டில் இருந்து துவங்குகிறது.  பலர் தொழில் நிமித்தமாகவோ, சூழ்நிலை காரணமாகவோ, ருசிகண்டுவிட்ட காரணமாகவோ இடையில் பழகிக் கொள்கிறார்கள்.  முழுக்க முழுக்க வளரும் சூழல் சார்ந்த ஒரு விஷயம் தான் உணவுப்பழக்கம்.  இந்தியாவில் ஏங்கேனும் ஏதேனும் பெரிய குற்றம் நடக்கும் போதெல்லாம், “சைவ உணவுப் பழக்கம் தான் கோபத்தை குறைக்கும்,  சைவ உண்ணிகள் குற்றங்களைச் செய்ய மாட்டார்கள், அசைவ உணவுதான் குற்றங்களை தூண்டுகிறது,” என்றெல்லாம் பல இந்திய சைவர்கள் பரப்புகிறார்கள்.  உலகெங்கிலும் உயிர்களிடத்தில் கருணை காட்டும் பொருட்டு சைவ உணவுப்பழக்கத்தை பிரச்சாரம் செய்யும் இயக்கங்களின் இந்தியக் கிளைகள் எல்லாம், இந்தியாவைப் பொறுத்தவரை வெறும் சாதிச் சங்கங்களாக மட்டுமே குறுகி இருப்பதுதான் இத்தகைய முட்டாள்த்தனமான பரப்புரைகளுக்கு காரணம்.  நல்ல நோக்கத்தோடு இந்தியாவில் கிளை பரப்பியிருக்கும் இவ்வியங்களில் 90% பிராமணர்களே உறுப்பினர்களாக, நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.  ஜீவகாருண்யத்தையும், இவர்களின் சாதி மேலாதிக்க மனோபாவத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள்.  அதனால்தான் மீனவர்கள் சுடப்படுவதைப் பற்றி யாரேனும் ட்வீட் செய்தால் கூட, “மீன்களை கொல்கின்றவர்கள் கொல்லப்பட்டால் அதில் என்ன நஷ்டம்?” என முட்டாள்தனமாக வாதிடும் அளவுக்கு இவர்களின் அறிவு இருக்கிறது! 

நோபல் பரிசு பெற்ற அறிஞர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் மாமிச உண்ணிகள் என்பதால், “மாமிசம் உண்டால் தான் அறிவு வளரும்.  சைவ உண்ணிகள் எல்லாம் முட்டாள்கள்,” என நாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?   ஹிட்லரும், கோட்சேவும், ஏன் பிற மதத்தவரின், மொழியினரின் உரிமைகள் பற்றி சற்றும் கவலைப்படாமல், ‘இதுக்கு போயி அலட்டிக்கலாமா?’ என ஊர்ஊராகச் சுற்றும் மோடி கூட சைவ உண்ணிதான்.  அதற்காக எல்லா சைவ உண்ணிகளும் அப்படித்தான் எனச் சொன்னால் சும்மா இருப்பார்களா?  

நியாயமாகப் பார்த்தால் ஹிப்போக்ரசியின் உச்சம் இந்திய சமூகம்!  ஆண்டெல்லாம் கறி சாப்பிட்டுவிட்டு புத்தபூர்ணிமா அன்று கறிக்கடைக்கு விடுமுறை விட்டால் போதும் என நினைப்பார்கள்.  ஆண்டெல்லாம் குடித்து கும்மாளம் போடும் ஒரு சமூகத்திற்கு, காந்தி ஜெயந்தி அன்று மட்டும் மதுக்கடைகளை மூடினால் போதும் என நினைப்பார்கள்.  இதே மாதிரியான ஒரு ஹிப்போக்ரஸி நிறைந்ததுதான் இந்திய உணவு அரசியல்!  காலம் காலமாக உணவுப்பழக்கத்தை வைத்து மனிதர்களை தரம்பிரிக்கும் தரங்கெட்ட செயல் நம்மூரில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.  சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிவுபடுத்திப் பார்க்கக் கூடாது என்று சொல்லும் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பாக உணவுப்பழக்கத்தை வைத்து தரம்பிரிக்கும் செயல் இன்னமும் இருக்கிறது. 
மிகப்பெரிய நிறுவனங்களில் எல்லாம் கூட அசைவ உணவு தடை செயப்பட்டிருக்கிறது.  எல்லா அசைவ உண்ணிகளும், சைவ உணவுகளை உண்ணுவார்கள் என்பதால் இந்த தடை நமக்கு பெரிய தவறில்லை எனத் தோன்றலாம்.  ஆனால் இது உளவியல் ரீதியாக ஒரு சாராரை மட்டப்படுத்தும் செயல் தான்.  எனக்கு தயிர்சோறும் மாம்பழமும் கலந்த வாடை அறவே பிடிக்காது.  வாந்தி வரவழைக்கும் அளவுக்கு எனக்கு கொமட்டும்!  அதனால் என் அலுவலக உணவறையில் யாரும் அதைக் கொண்டு வரக்கூடாது என நான் வாதிட்டால் சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?  ஆனால் அதே நேரம், “மட்டன் குழம்பா?  நாற்றமடிக்கிறதே!,” என அவர்கள் சொன்னால், உடனே அசைவ உணவை தடை செய்யும் அளவில் தான் உணவுக்கான உரிமை இந்தியாவில் இருக்கிறது. இது எப்பேர்பட்ட அயோக்கியத்தனம்? ஒரு சிறுபான்மையினரால் பெரும்பான்மை சமூகத்தின் மீது இப்படி ஆளுமை செலுத்த முடியுமென்றால் இந்தியாவில் உண்மையிலேயே சமத்துவம் இருக்கிறதா, இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்பதையெல்லாம் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது!      

இன்னும் பார்க்கப்போனால் இந்தியாவில் சைவம் எனச் சொல்லப்படும் உணவுகளை சைவம் என்றே ஏற்றுக்கொள்ள முடியாது.  ஆங்கிலத்தில் ‘வீகன்’ (VEGAN) எனக் குறிப்பிடுகிறார்களே, அதுதான் சுத்தமான, உண்மையான சைவம்.  வீகன் உணவுப்பழக்கத்தை பின்பற்றுகின்றவர்கள் மிருகங்களின் மூலம் வரும் எவ்வகையான உணவுகளையும் தொட மாட்டார்கள்.  தயிர், பால், வெண்ணை என எதையுமே உண்ண மாட்டார்கள்.  ‘எத்திகல் வீகன்’ (ETHICAL VEGANS) எனப்படுகின்றவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் மிருகத் தோலில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள்.  ஆனால் இந்தியாவில் ஜீவகாருண்யத்தை ஏகத்துக்கும் பறைசாற்றுகின்றவர்கள் லட்சக்கணக்கான பட்டுப்புழுக்களைக் கொன்று உருவாக்கப்படும் பட்டாடைகளை கட்டிக்கொண்டு, மாட்டுத்தோல் செருப்பின் மீது ஏறி நின்றுகொன்று, மாட்டு ரத்தத்தினால் செய்யப்படும் ஐஸ்க்ரீம்களை சுவைத்தபடியே ஜீவகாருண்யம் பேசுவார்கள்.  நம் ஆட்களும் “சாமி சொன்னா சரியாத்தான் இருக்கும்.  அவங்களாம் அதான் அறிவாளியா இருக்காங்க,” என தங்களுக்குள் பேசியபடியே தலையாட்டுவார்கள்! 

உண்மையில் இந்திய சைவர்கள் எல்லோருமே அசைவ உண்ணிகள் தான், வீகன்களைத் தவிர!  ஜீவகாருண்யத்தைப் பற்றி எவனாவது உங்களுக்கு அடுத்தமுறை வகுப்பெடுத்தால் அவன் ‘வீகன்’ உணவுப் பழக்கம் உள்ளவனா எனக் கேளுங்கள். ‘ஆம்’ என பதில் அளித்தால் மட்டுமே பேச்சைத் தொடருங்கள்.  ‘இல்லை.  நான் ப்யூர் வெஜிடேரியன்’ எனச் சொன்னால் அவனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதீர்கள்.  ஏனெனில் எல்லா அசைவ உண்ணிகள் போல, அவனும் ஜீவகாருண்யம் பேச தகுதியில்லாதவனே!

இறுதியாக, உங்கள் உணவு உங்கள் கலாச்சாரத்தோடு இயைந்தது.  அதை தீட்டு எனச் சொல்வதும், அதை புனிதமற்றது என ஒதுக்குவதும் உங்களை தாழ்த்துவதற்கு ஒப்பான செயல்கள் தான்.  சாதியின் பேரால் ஒருவன் உங்களைத் தாழ்த்த எப்படி எப்படி அனுமதிக்க மட்டீர்களோ, அதைப் போலவே உணவின் பேரால் உங்களைத் தாழ்த்தவும் அனுமதிக்காதீர்கள்.  சாதியை விட ஆபத்தான காரியங்களை உணவின் பேரால் இந்திய சமூகத்தின் ஆதிக்கம் நிறைந்த பிரிவினர் செய்து கொண்டிருக்கிறார்கள், கவனம்!  

writerdonashok@yahoo.com
Related Posts Plugin for WordPress, Blogger...