Wednesday, January 7, 2015

தாலிபான்கள் முதல் சேஷாத்ரிகள் வரை.பயங்கரவாதம் என்பது என்ன?  பொதுவாக அரசியல் காரணங்களுக்காக, சட்டத்திற்கு புறம்பான வகையில் வன்முறையை பயன்படுத்துவது பயங்கரவாதம் எனப்படுகிறது. பொதுவாக துப்பாக்கி, வெடிகுண்டு, கைத்தடி போன்ற ஆயுதங்களின் துணையோடு உடல்ரீதியாக நிகழ்த்தப்படும் பயங்கரங்களை வன்முறை என்கிறோம்.  இதுமட்டும் தான் வன்முறையா?  ஹிட்லரின் நாஜிக்களில் இருந்து இன்றைய தாலிபான்கள் வரை ஆயுதம்சார் வன்முறையை உபயோகித்தவர்களை, உபயோகிப்பவர்களை மிக எளிதாக வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என நம்மால் வகைப்படுத்திவிட முடியும்.  ஆனால் காலம் காலமாக மனித சமூகத்தின் அறிவுதளத்தில், குறிப்பாக இந்திய சமூகத்தின் அறிவுதளத்தில் கத்தியின்றி ரத்தமின்றி நடந்து கொண்டிருக்கும் ஆயுதம் சாராத வன்முறையை நாம் ஏன் வன்முறையாகக் கொள்வதில்லை?

அறிவுதளத்தில் நடக்கும் வன்முறை கொஞ்சம் சிக்கலானது என்பதால் பெரும்பாலும் நாம் இதை கண்டுகொள்வதில்லை.  சுருக்கமாகச் சொல்வதானால், பள்ளியில் நுழைந்து பிள்ளைகளைச் சுடுவது ஆயுதம்சார் வன்முறை என்றால், நீ பள்ளிக்கே போகக்கூடாது என வேதங்களின் பெயரால், சாதியின் பெயரால், கடவுளின் பெயரால் தடுத்து நிறுத்துவது அறிவுதள வன்முறை.  (அதெல்லாம் அந்தக் காலம்தான்.  ஆனால் இப்போதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மறக்காதீர்கள்) இந்த வன்முறைக்கு பலியானவர்கள் இறப்பதில்லையே தவிர, அறிவுதளத்தில் கிட்டத்தட்ட மரணித்துவிடுகிறார்கள்.  தாங்கள் படிப்பதற்கே தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் பலநூறாண்டுகளாக அவர்களின் மனதில் பதிந்துவிடுகிறது.  தொடர்ந்து படிந்து- படிந்து ஒருகட்டத்தில் தாழ்வுமனப்பான்மை என்பது அந்த இனத்தின் குணக்கூறுகளில் ஒன்றாகவே மாறிவிடுகிறது.  இப்படியான அறிவுதள வன்முறைக்கு எதிரான போரை தான் அம்பேத்கார், பெரியார் உள்ளிட்டோர் இந்தியாவில் நடத்தினார்கள்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.  டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பத்ரி சேஷாத்ரி எழுதிய பார்ப்பன சுயபச்சாதாபக் கட்டுரையையும், சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் இந்துஞான மரபை நிலைநாட்ட பெரும்பாடுபட்ட ஜெயமோகனின் விளக்கக் கட்டுரையையும் படித்திருப்பீர்கள்.  பெரும்பாலும் அவற்றில், “நான் நல்லவன்” என அவர்களே சொல்லிக்கொள்வதும், “யார் சொன்னா?” என்ற கேள்வியையும் அவர்களே கேட்டுக்கொண்டு, அதற்கு “நான்தான் சொல்கிறேன்,” என்ற பதிலையே ஆதாரமாக வைத்து திருப்திப்பட்டிருப்பதையும் அறிந்திருப்பீர்கள் என்றாலும், ஜெயமோகனின் மொழியிலேயே  சொல்லவேண்டுமானால் அக்கட்டுரைகள் இரண்டும் பொருட்படுத்தத்தக்கவை அல்ல என்றாலும், இக்கட்டுரையில் தமிழக அறிவுதளத்தில் நிகழும் சாதிய வன்முறைகள், அடக்குமுறைகள் குறித்த பொதுவான சில விஷயங்களையும், அதன்மூலம் பாதிக்கப்படும் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.   

முதலில் பார்ப்பனர் என்ற சொல்லை இன்றைய இளைஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?  அவர்களுக்கு அது புளித்துப்போன பழைய அரசியல் சொல்லாக தெரிகிறது.  இளைஞர்கள் பொதுவாகவே க்ளிஷேக்களை விரும்புவதில்லை.  ஒரே பொருளைக் குறிக்கும் புதிய சொற்களுக்கான தேடல் இளைஞர்களிடையே காலம்காலமாக இருக்கும் ஒன்று.  அந்த வழக்கப்படி தனியார் நிறுவனங்கள், குறிப்பாக சென்னையின் ஐ.டி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்கள் பார்ப்பனர்களைக் குறிக்க ‘க்ராஸ்பெல்ட்’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்.  பார்ப்பனரல்லாத இளைஞர்கள், தங்களுக்குள், “மச்சி, அவன் க்ராஸ்பெல்டு.  பாத்து நடந்துக்கோ,” எனப் பேசுவது தனியார் நிறுவனங்களில் சகஜமான ஒன்று.  ஐடி துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு இது நன்றாகவே தெரியும். 

குறிப்பாக நிறுவனங்களின் விற்பனைப் பிரிவுக்கு ஆளெடுக்கும் போது கூச்சமின்றி தோளைத் தடவி நூல் இருக்கிறதா எனப் பார்த்துப் பார்த்துப் ஆளெடுக்கும் நடைமுறை மிக அதிகம்.  பார்ப்பனர்களின் அதிகாரத்தில் நேரடியாக இயங்கும் இந்திய கிரிக்கெட் துறையைப் பற்றி ஒரு ஆச்சரியமான தகவல் ஒன்றை சொல்கிறேன்.  எழுபத்தி ஐந்து ஆண்டுகால இந்திய கிரிக்கெட் அணியில் பல்வந்த் பலூ மற்றும் வினோத் காம்ப்ளி என இரண்டே இரண்டு தலித்கள் தான் இடம்பெற்றிருக்கிறார்கள்.  சமீபத்தில் தன்னை எப்படி சாதியின் பேரால் ஒதுக்கினார்கள் என மனம் திறந்திருக்கிறார் காம்ப்ளி.  தமிழகத்தில் இருந்து இதுவரை தேர்வாகியுள்ள பதினாறு பேரில் பதினான்கு பேர் பார்ப்பனர்கள்!  நூறு கருப்பு மீன்களும், ஐந்து சிகப்பு மீன்களும் உள்ள தொட்டியில் வலைவீசும் போது அதெப்படி வலைக்குள் ஐந்து சிகப்பு மீன்கள் மட்டுமே சிக்கும்?  பார்ப்பன லாபி இல்லாமல் இது சாத்தியமா? 

ஆனால் கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் இந்த அநியாயமான அடக்குமுறைகளை எல்லாம் நடைமுறையில் அனுபவிக்காதவர்கள் வேண்டுமானால் பார்ப்பனர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற பச்சைப் பொய்க்காக பரிதாபப்பட்டு உச்சுக்கொட்டுவார்களே தவிர, அவர்களும் சில ஆண்டுகள் கழித்து என் நண்பனைப் போல நேரம் வரும்போது உண்மையை புரிந்துகொள்வார்கள்.  இதில் வேடிக்கை என்னவென்றால், உண்மையை புரியவைக்கும் பணியையும் பார்ப்பன மேலதிகாரிகளே செய்துவிடுவார்கள் என்பதுதான்!  


பார்ப்பனர்களின் பண்பாட்டை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்ற புலம்பலையும் பார்ப்பனர்களின் அதிகாரபூர்வ எழுத்தாளர்கள் வசமிருந்து அவ்வப்போது கேட்க முடிகிறது.  பார்ப்பனர்கள் என்ன பண்பாட்டை இழந்து விட்டார்கள் என எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.  சென்னையில் சங்கீத சீசன் நடக்கும் டிசம்பர் மாதம் மியூசிக் அகாடமியின் பக்கம் செல்கின்றவர்கள், பார்ப்பனர்கள் எப்படி தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் கலையை காப்பாற்றுகிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.  பிறப்பால் பார்ப்பனரான கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக இசையில் ஒருகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இசைக்கருவிகளாக கருதப்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகியவற்றை (பார்ப்பனர்கள் தவில், நாதஸ்வரம் வாசிக்க மாட்டார்கள்.  அது தமிழர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டு வந்த வாத்தியங்கள்) எப்படி பார்ப்பனர்கள் திட்டமிட்டு ஒதுக்கினார்கள் என எழுதியிருக்கிறார்.  கோவில்களில் மட்டுமே வாசிக்கப்படும் வாத்தியங்களாக இன்று நாதஸ்வரமும், தவிலும் குறுகிப்போனதை வருத்ததுடன் தெரிவிக்கிறார்.  அதுமட்டுமல்லாது பிற சாதியினர் யாருமே நுழைய முடியாதபடி கர்நாடக இசையின் கதவுகளை பார்ப்பனர்கள் எப்படி இறுக அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலைப்பட்டிருக்கிறார்.  இதையெல்லாம் எதிர்த்து இதுவரை தமிழகத்தில் ஒரு துரும்பாவது அசைக்கப்பட்டிருக்குமா? இல்லையே!  தமிழர்களின் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கூத்து எல்லாம் கிட்டத்தட்ட அழிந்தே போயும்கூட, 4 சதவிகித பார்ப்பனர்களின் பண்பாட்டுக் கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றனவே!  இதுபோக, திருவையாறு பத்தாதென்று சென்னையில் திருவையாறு வேறு!  

பார்ப்பனப் பெண்களே பெரும்பாலும் பங்குகொள்ளும் பரதநாட்டியத்துக்கு கிடைக்கும் மரியாதையா தமிழ்நாட்டில் தமிழர் கலையான பறையிசைக்கு கிடைக்கிறது?  அதை சாவுமேளம் என்றல்லவா குறுக்கியிருக்கிறார்கள்!  யாருடைய பண்பாடு ஒடுக்கப்படுகிறது?  “அய்யோ பண்பாடு போச்சே,” எனப் புலம்ப வேண்டியது எனக்கென்ன என உட்கார்ந்திருக்கும் தமிழர்கள்தானே தவிர, டிசம்பர் மாதம் சூடாக காபியும், வடையும் அருந்தியபடியே மியூசிக் அகாடமியில் கச்சேரிகள் நடத்தும் சேஷாத்ரிகள் அல்ல!  
உண்மையில் சொல்லப்போனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒருவன் தன்னை ஒரு பெரியாரியராக வெளிக்காட்டிக் கொள்ள முடியாது.  கொலைவழக்கில் சிறை சென்று மனுநீதியால் விடுவிக்கப்பட்ட ஜெயேந்திரனின் சீடனாக காட்டிக்கொள்ளூம் ஒரு ஐயங்காருக்கு சகலமரியாதையும் கிடைக்கும் இடத்தில், பெரியாரை பின்பற்றும் ஒரு பார்ப்பனரல்லாத இளைஞன் தனியாக ஓரங்கட்டப்பட்டு விடுவான்.  பின் அவனது ஊதிய உயர்வு முதல் எல்லாவற்றுக்கும் ஆபத்து வரும்.  தனக்கு பிடித்த கொள்கையைக் கூட வெளிப்படையாக பின்பற்ற முடியாத நிலையிலேதான் தமிழக இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். 

பார்ப்பனர்கள் சமூக தளத்தில் இழிவாக நடத்தப்படுகிறார்கள் என்பதைவிடவும் ஒரு பச்சைப் பொய் இருக்குமா என்றால் இந்த நூற்றாண்டில் கண்டிப்பாக கிடையாது.  இன்றளவும் படிக்காதவர்கள் பலர் பார்ப்பனர்களை ‘சாமி’ என்றழைக்கும் பழக்கத்துடனேயே இருக்கிறார்கள்.  வெள்ளைத் தோலுடன் சிவப்பாக ஒருவர் வந்தாலே போதும், பல தமிழர்களைப் பொறுத்தவரை அவர் ‘சாமி’ தான்.  பல்லாயிரம் வருட சாதியத்தின் அடையாளமாக இன்னும் பல ஊர்களில், ஏன் சென்னையிலேயே கூட இந்தப் பழக்கம் இருக்கிறது.  ஆனால் முன்பை விட பெருமளவில் குறைந்து, சரிக்கு சமமாக பார்ப்பனர்களை பெயர் சொல்லி அழைக்கும் பழக்கமும் இளைஞர்களிடையே வளர்ந்துகொண்டு இருப்பதால், அதைத்தான் ஒருவேளை ‘பிராமணர்கள் சமூகதளத்தில் இழிவாக நடத்தப்படுகிறார்கள்,’ என சேஷாத்ரிகளும், ஒத்து ஊதும் எழுத்தாளர்களும் கூறுகிறார்களோ என்னவோ! 

பார்ப்பனர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஒன்று இருக்கிறது.  மெளரிய சாம்ராஜ்யம் ஆனாலும் சோழ சாம்ராஜ்யம் ஆனாலும் பார்ப்பனர்கள் ராஜாவாக ஆசைப்பட்டதே கிடையாது.  அவர்களின் ஆசையெல்லாம் ராஜகுரு இடத்திற்கு தான்!  அதனால் தான் எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் மாறினாலும் பார்ப்பனர்களின் ஆளுமை மட்டும் சோழர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் எனத் தொடர்ந்து இன்று சோ, சுப்பிரமணியஸ்வாமி போன்ற ஆட்களின் மூலம் மோடியின் ஆட்சி வரை தொடர்கிறது.  இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி ஜெயித்திருந்தால் பார்ப்பனர்கள் ஜெர்மன் பயின்றிருப்பார்கள், ஜப்பான் ஜெயித்திருந்தால் ஜப்பானிய மொழி பயின்றிருப்பார்கள்.  ஆட்சியாளர்களுக்கு ஏற்றவாறு பிழைப்புக்காக நெகிழும் தன்மைதான் பார்ப்பனர்களை அதிகார மையங்களாகவே இன்றளவும் வைத்திருக்கிறது.  தமிழை நீசமொழி என எழுதித்தீர்க்கும் பார்ப்பனர்கள், நாளையே தமிழ் படித்தவர்களுக்கு மட்டும் தான் வேலை என அறிவித்தால் முதல் ஆளாக தமிழ்படிக்க வரிசையில் நிற்பார்கள் என்று சொல்வார் பேராசிரியர் நன்னன். 

ஊடகத்தை கட்டுப்படுத்துகின்றவன் மக்களை கட்டுப்படுத்துகிறான் என்பார்கள்.  நீங்கள் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யவேண்டாம்.  அதிகார மையங்களை முடிவுசெய்யும் இன்றைய ஊடக முதலாளிகளின் பின்புலன்களைப் பாருங்கள்.  பார்ப்பனர்கள்தான் மிகப்பெரும்பான்மையாக இருப்பார்கள்.  ஊடகங்களின் ஏகோபித்த ஆதரவு மட்டும் இல்லையென்றால் மோடியால் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?  அதுமட்டுமல்லாது நீதிபதிகள், ஆட்சியர்கள் என எந்த உயர்பதவியை எடுத்துக்கொண்டாலும் தங்கள் விகிதாச்சாரத்துக்கு பல மடங்கு அதிகமாக பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.  இந்திய ஊடகங்கள், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலுவுக்கு ஒருமாதிரியாகவும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு ஒரு மாதிரியாகவும் தீர்ப்பெழுதுவது ஒரு உதாரணம்.  இன்னும் பச்சையாக சொல்லப்போனால் இந்திய மக்களின் மூளைகளில் ஒரு கருத்தியல் திணிப்பை சதாசர்வ காலமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் பெரும்பான்மையாக இருக்கும் பார்ப்பன ஊடகவிலாளர்கள்.  அட அவ்வளவு ஏன்?  ஜனாதிபதிகளிடையே கூட சாதி பார்த்து, அப்துல் கலாமுக்கு தரையையும், பிரணாப் முகர்ஜிக்கு நாற்காலியையும் ஒதுக்கும் காஞ்சி மடத்தை விட பேரதிகார மையம் இந்தியாவில் இருக்கிறதா என்ன?  அனைத்து சாதியினரையும் இந்துத்துவா போர்வைக்குள் மூடி மறைக்கப்பார்க்கும் இந்துதுவவாதிகளை கேட்கிறேன், ஒரு பார்ப்பனரல்லாதவனால் சங்கராச்சாரி ஆக முடியுமா?

பார்ப்பன ஊடகங்கள் காலம்காலமாக பின்பற்றும் ஒரு விஷயம் தங்கள் கருத்தை பொதுக்கருத்தாக திரித்துச் சொல்வது.  இடஒதுக்கீடு தங்களுக்கு எதிரானது என்றால் அது இந்தியாவின் வளர்ச்சிக்கே விரோதமானது என்ற கருத்தை ஊடகங்களின் மூலம் உருவாக்குவார்கள்.  இந்தியாவிற்கு தேசிய மொழியே இல்லை என இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியாகக் கூறினாலும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் ‘பாரத் கா ராஷ்ட்ரபாஷா இந்தி ஹை’ என விடாது எழுதிகொண்டே இருப்பார்கள்.  உண்மையை மறைத்து பொய்களைப் புனைந்து, விஷ ஊசியைப் போல கருத்துக்களை திணிப்பதன் மூலம் மக்களின் அறிவுதளத்தில் நிகழ்த்தப்படும் இந்த பயங்கரவாதத்தைதான் அறிவுதள வன்முறை என்கிறேன்.  காலம்காலமாக ஒரு பேனாவால் அதைச் செய்துகொண்டேதான் இன்னொரு பேனாவால், “எங்களுக்கு அதிகாரமே இல்லை!  ஐயாம் பாவம்” என்று கைக்கூசாமல் இவர்களால் எழுத முடிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக “பார்ப்பனர்கள் எல்லாம் ஊரைக் காலி செய்யவேண்டியிருக்கிறது,” என்ற கேலிக்கூத்தான ஒரு  பொய்யையும் முன்வைக்கிறார்கள்.  சென்னையில் தனியார் நிறுவனங்கள் பெருகத் துவங்கிய போது தமிழர்கள் எல்லோரும் சொந்த ஊர்ப்பாசத்தில் அங்கேயே தங்கிவிட, பார்ப்பனர்கள் மட்டும் தான் சென்னையில் குடியேறினார்கள்.  பின்னர் உலகமயமாக்கலில் வாய்ப்புகள் விரிவடைய விரிவடைய அமெரிக்கா போனார்கள்.  நாளை செவ்வாய்கிரகத்தில் நல்ல வேலை வாய்ப்பு என்றால் உடனே செவ்வாய்கிரகம் செல்கின்றவர்களாக பார்ப்பனர்கள் தான் இருப்பார்கள்.  ஏதோ பார்ப்பனர்கள் எல்லாம் ஆந்திரத்தின் ராயலசீமா பகுதிக்கு கொத்தடிமைகளாக கல்லுடைக்கச் சென்றுவிட்டதைப் போல ஜெயமோகனும், பத்ரியும் புலம்பிருப்பதைப் படித்தால் சிரிப்பு தான் வருகிறது. 

இன்று சென்னையின் பிரதான இடங்களான அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், கேகே நகர், பெசண்ட் நகர் என எங்கே திரும்பினாலும் பார்ப்பனர்களுடைய வீடாகத்தான் இருக்கிறது.  அடையார் டைம்ஸ் உள்ளிட்ட உள்ளூர் ஏடுகளை எடுத்துப் புரட்டினால் வீடு வாடகைக்கு விடும் பார்ப்பனர்கள் கூச்சநாச்சமேயின்றி ‘non Brahmins excuse’ என விளம்பரம் செய்திருப்பதைப் பார்க்கலாம்!  கொஞ்சம் சூட்சமமான பார்ப்பனர்கள் ‘vegetarians only’ என விளம்பரம் கொடுக்கிறார்கள்.  சமீப காலத்தில் பெங்களுருவில் பார்ப்பனர்கள் மட்டுமே குடியேற ஒரு குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டது.  வேதகால அக்கிரகார முறையை மீண்டும் ஏற்படுத்தப்போவதாக பெருமையாக அறிவித்திருந்தார்கள்.  சென்னையிலும் அப்படியான விளம்பரங்கள் வரத் துவங்கியிருக்கின்றன.  தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் செட்டியார் தெரு, முதலியார் தெரு என சாதிக்கொரு தெருக்கள் உண்டு.  ஆனால் அவர்களில் இளையதலைமுறையினர் படித்து ஓரளவிற்கு உலகம் தெரிந்த பின் பெரும்பாலும் சாதிப்பற்றை விட்டுவிடுகிறார்கள், அல்லது வெளிக்காட்ட கூச்சப்படுகிறார்கள்.  ஆனால் சென்னை வந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், அமெரிக்கா போய் வெள்ளையனுடன் கைகுலுக்கினாலும் ஐயர், ஐயங்கார் என பெயருடன் சாதிப்பெயரை சேர்த்துக்கொண்டு பெருமை தேடும் பழக்கம் தமிழகத்தில் பார்ப்பனர்களிடம் மட்டுமே பெருவாரியாக இருக்கிறது!

‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது எனக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது,’ என டீவீட் செய்யும் அளவிற்கு அன்பொழுகும் பரந்த மனம் படைத்த சேஷாத்ரிக்களும், அவர்களுக்கு சொம்பு தூக்கும் இந்துஞானமரபு கோஷ்டிகளும் திராவிட இயக்கத்தை வெறுப்பை மையமாகக் கொண்டு இயங்கிய, இயங்கும் இயக்கம் என்று திரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  நான் அடிக்கச் சொல்லும் ஒரு விஷயத்தை நினைவுகூர்கிறேன்.  பார்ப்பனர்கள் நிறுவிய ஆயிரமாயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தில் இருந்து மக்களை வெளிக்கொண்டுவர அம்பேத்கார், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் கையிலெடுத்த ஆயுதம் எது தெரியுமா?  பரப்புரை!  வெறும் விழிப்புணர்வுப் பரப்புரை!  குறிப்பாக பெரிய பணக்காரராக, செல்வாக்கு மிக்கவராக விளங்கிய பெரியாருக்கு அந்தக் காலத்தில் பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுவதொன்றும் பெரிய விஷயமாக இருந்திருக்காது.  ஆனால் அவர் எக்காலத்திலும் அதைச் செய்யவில்லை.  தன் மேடைகளில் செருப்பு வீசிய பார்ப்பனர்களைக் கூட அவர் அச்செருப்புகளை ஏலம் விடுவதன் மூலமே எதிர்கொண்டார்.  பிள்ளையார் சிலை உடைப்பின் போதும் தன் சொந்தக் காசில் பிள்ளையார் சிலை வாங்கி உடைத்தாரேயொழிய கோவிலுக்குள் புகுந்து அங்கிருக்கும் சிலையை உடைக்கவில்லை.  அண்ணா இன்னும் ஒருபடி மேலே போய் ‘திராவிடர்’ கழகத்தில் இருந்து பிரிந்தாலும், தான் ஆரம்பித்த கட்சிக்கு ‘திராவிட’ முன்னேற்றக் கழகம் என பார்ப்பனர்களையும் உள்ளடக்கிய நிலப்பரப்பை குறிக்கும் வண்ணம் பெயர் வைத்தார்.  இந்தியாவெங்கும் மிகவும் இழிவாக நடத்தப்படும் கிழக்கு மாகாணத்தவர்கள் திராவிட இயக்கம் தோன்றிய தமிழ்நாட்டில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது ஒன்றே போதும் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட நாகரீகத்தை வளர்த்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள.  திராவிட இயக்கத்தில் முனைப்பாக உள்ள இளைஞர்கள் பலருக்கு பார்ப்பன நண்பர்கள் உண்டு.  எனக்கும் தனிப்பட்ட முறையில் ஏராளமான பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள். 

1962ல் விடுதலையில் வெளியான பெரியாரின் அறிக்கையில், பார்ப்பனிய எதிர்ப்பைப் பற்றி, “பார்ப்பனத் தோழர்களே!  நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல.  தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள்-பெரியோர்களுக்கு அன்பனாகவும், நண்பனாகவும் இருந்து வருகிறேன்.  சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.  சமுதாயத்தில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது.  இது பார்ப்பனர்களிடம் மட்டுமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடமும் நான் வெறுப்பு கொள்கிறேன்……………   உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மகள் யாவரும் ஒருதாய் மக்கள் என்றும், தாயின் செல்வத்துக்கும் வளப்பத்திற்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால் இந்நாட்டிலே சமுதாயப்போராட்டமும், சமுதாய வெறுப்பு ஏற்பட வாய்ப்பே இருக்காது,” என தெளிவாக எழுதியிருக்கிறார் பெரியார். 

சிந்துசமவெளி புகழ் ஜெயமோகனின் கட்டுரையில் அவரையே அறியாமல் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.  நீண்டகாலமாகவே கல்வியை தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் என்பதனால் பிராமணர்களுக்கு கல்விகற்பதில் ஊக்கம் இயல்பாகவே இருக்கிறதாம்அவர்களின் குடும்பச்சூழலும் அதற்குச் சாதகமாக உள்ளதாம்.  கற்பதையும் கற்பிப்பதையும் அவர்கள் தங்களுக்குரிய தொழிலாக கொண்டிருந்தமையால் உருவான இயல்பான மனநிலையாம் அது.  அதாவது  மீன்குஞ்சுக்கு நீச்சல் போல!  ஆக கடந்த சில பத்தாண்டுகளாக மட்டுமே நீந்தக் கற்றுக்கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு அளித்தது முற்றிலும் நியாயம் தானே?  ஆயிரம் ஆண்டுகளாக படிக்கின்றவர்களையும், முப்பது ஆண்டுகளாக படிக்கின்றவர்களையும் ஒரே தட்டில் வைத்து அளவிட முடியாதுதானே?  ஆக, கல்வி கற்கும் ‘இயல்பில்’ ஒரு சமநிலை ஏற்படும் வரை இடஒதுக்கீடு இருப்பதுதான் நியாயம்!  ஜெயமோகனின் இந்துஞானமரபின்படி நியாயமில்லை என்றாலும் இந்துஞானமரபிற்கு சம்பந்தமேயில்லாத மனிதநேயமரபின்படி, பெரியாரிய மரபின்படி அதுதான் நியாயம்!   

இதெல்லாவற்றுக்கும் மேல் நாம் மிகக்கவனமாக கையாள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.  அது பார்ப்பனர்கள் சிலர் முன்னெடுக்கும் தலித் ஆதரவு.  தலித்துகளுக்கு எதிரான ஆதிக்க சாதியினர் பலரின் போக்கு மிகக்கேவலமானதாக உள்ளது என்றாலும் அதைச் சுட்டிக்காட்டும் தகுதி பார்ப்பன சாதி வெறியர்களுக்கு இருக்கிறதா என்பதை நாம் கூர்ந்து நோக்க வேண்டும்!  அதுமட்டுமல்லாது சமூகதளத்தில் இயங்கும் சாதிமறுப்பாளர்களையும், திராவிட இயக்கத்தினரையும் அர்ச்சிக்கும், எதிர்க்கும் இரு தரப்பினர் ஆதிக்க சாதி வெறியர்களும், பார்ப்பனியத்தை அடிப்படை தத்துவமாகக் கொண்ட இந்துத்துவ இயக்கங்களும் தான்.  சாதி வெறியர்கள் அனைவரும் சேர்ந்து நடத்திய தலித் அல்லாதார் பாதுகாப்பு மாநாட்டில் பார்ப்பன சங்கத்தின் தலைவர் ஏன் போய் உட்காந்திருந்தார் என்பதை சேஷாத்ரியோ, ஜெயமோகனோ விளக்குவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.  நாம் தான் யோசிக்க வேண்டும்.  எந்த சாதியைச் சேர்ந்த சாதிவெறியர்கள் என்றாலும் சாதி என்ற புள்ளியில் ஒன்றாக இணைந்து கொள்கிறார்கள். 

1931ல் நாகையில் நடந்த மாநாடு ஒன்றில், “சாதியை நாங்கள் ஒன்றாக்குகிறோம்.  ஆம்! ஆக்க முயற்சிக்கின்றோம்.  மனிதசாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும்.  அதை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள், மடையர்கள் என்று தைரியமாகச் சொல்கிறோம்.  நாங்கள் ஆதிதிராவிடர்களின் நன்மை குறித்து பேசும்போது பார்ப்பனர்கள் மனவருத்தம் அடைவதில் அர்த்தம் உண்டு.  ஆனால் பார்ப்பனரல்லாதார் (பிற்படுத்தப்பட்டவர்கள்) மனவருத்தம் அடைவதில் சிறிதும் அர்த்தமில்லை.  அது முட்டாள்தனமாகும்.  பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப்பட்டம் போய்விடும் என நம்பினால் நீங்கள் வடிகட்டிய முட்டாள்களேயாவீர்கள்.  ஆதித்திராவிடர் நன்மையைக் கோரி பேசப்படும் பேச்சுக்களும், செய்யப்படும் முயற்சிகளும் பார்ப்பனரல்லாத எல்லா மக்களுக்குமானது என்பதை உணருங்கள்,” எனப் பேசியிருக்கிறார் பெரியார்.  இவரைத்தான் தலித் விரோதியாக சித்தரிக்க முயல்கிறது புனைவுகளை வரலாறாகத் திரிக்கும் கூட்டம்!
பெஷாவருக்காக வருந்தும் அதே தருணத்தில், அதிகாரத்தின் மையத்தில் நின்றுகொண்டு, சுயபச்சாதாபம் தேடுகிறேன் பேர்வழி என நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் மக்கள் மீது காலம்காலமாக நடத்திக்கொண்டிருக்கும் அறிவுசார் வன்முறையையும் நாம் கவனிக்க வேண்டும்.  பெரியார் காலத்தில் இருந்தே வரலாற்றை திரித்து, நிகழ்காலத்தை பொய்யாகப் புனைந்து கூறும் எழுத்தாளர்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.  இன்றளவும் அது தொடர்கிறது.  தகவல் தொழில்நுட்பமும், ஊடக வீச்சும் உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த காலத்தில், அறிவுதளத்தில் நிகழ்த்தப்படும் இந்த வன்முறைக்குப் பலியாகாமல் எதையும் ஆராய்ந்து, மெய்ப்பொருள் அறிந்து, அறிவையும், உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதும் அவசியத்திலும் அவசியம்.  ஏனெனில் பயங்கரவாதிகள் பேனாக்களைக் கூட ஆயுதமாக ஏந்தி வரும் நாடு இது!


-டான் அசோக்

writerdonashok@yahoo.com  

4 comments:

நம்பள்கி said...

Best!
Could have been better, if the post is divided into parts with subheadings that would help the readers to grasp more with ease.

My Tamil software is malfunctioning. Will record the same in my language--Tamil or Hindi!

Anonymous said...

Good write-up! Thanks

nrc said...

ஜெயமோகனின் பொய்ப்புலம்பலுக்கு நல்லதொரு விளக்கம்.

Anonymous said...

A hate filled biased article. Let us keep destroying ourselves by demeaning every aspect of this culture. Let us turn a blind eye to the positive aspects of this civilisation. And when everything is destroyed let us welcome Taliban and Vatican to give us a golden age.

Related Posts Plugin for WordPress, Blogger...