Sunday, August 31, 2014

பாலியல் வன்முறைகளும், இந்தியக் கலாச்சார வேர்களும்!


ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவன் என்ற முறையில், ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்கலாம் என்றால், குழந்தைகளுடன் உடல் ரீதியாக ஈர்ப்படையும் பீடோஃபைல்களையும் அங்கீகரிக்கச் சொல்கிறீர்களா?என்ற குறிப்பிட்ட கேள்வியை சந்திக்க வேண்டியிருந்தது.  ஓரினச்சேர்கையைப் பொறுத்தவரை இருவரும் விரும்பிப் பங்கு கொள்ளும் உறவாக அதைப் பார்க்க வேண்டும்.  அதனால் அதை அங்கீகரிப்பதே சரி.  அதே நேரம் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் உடல் வன்முறையை அங்கீகரிக்கலாமா என்ற கேள்வியே அப்பட்டமான தவறு.  இதற்கு இப்படி எளிமையாக பதில் அளிக்கலாம் என்றாலும் இதில் இன்னொரு கோணமும் உண்டு.  ஓரினச்சேர்க்கை என்பது மனநோய் இல்லை என்றால் பீடோஃபைல் மட்டும் எப்படி மனநோய்? 

இதுகுறித்து நரம்பியல் விஞ்ஞானியான நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது காமத்திற்காக செய்யப்படுவதாக வெளிப்புறத்தில் தோன்றினாலும், வன்புணர்ச்சிகளில் சாடிச மனப்பான்மை மட்டுமே ஒளிந்திருக்கிறது என்றார்.  மனநோய்கள் என வகைப்படுத்தினால் நகம் கடிப்பது கூட ஒருவகையான மனநோய் தான்.  அதற்காக அதை மனநோய் என நாம் வகைப்படுத்துவதில்லை. வன்புணர்ச்சியையும், நகம் கடிப்பதையும் ஒரே தட்டில் வைத்து எடை போட முடியாது. ஒரு விஷயத்தை அது உண்டாக்கும் பாதிப்பை வைத்து மட்டுமே எடைபோட வேண்டும் என்று முடித்தார்.  இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் பெங்களூரில் ஆறு வயது சிறுமி ஒருத்தி வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு சரியாக 20நாட்கள் ஆகியிருக்கிறது.  மகளிர் அமைப்புகளின் தொடர் போராட்டம், சமூக வலைதளங்களில் எழுந்த கொந்தளிப்பு ஆகியவற்றுக்கெல்லாம் பின், பள்ளிச் செயலாளரையும், ஸ்கேட்டிங் பயிற்சியாளரையும் கைது செய்திருக்கிறார்கள். 

இது போன்ற குற்றங்கள் வெளிவரும் போதெல்லாம் மகளிர் அமைப்புகள் பெரும் போராட்டங்களில் ஈடுபடுகின்றன.  இளைஞர்கள் கொதிக்கிறார்கள்.  சமூக வலைதளங்கள் போர்க்களங்கள் போல காட்சியளிக்கின்றன.  ஆனால் அதே கர்நாடகா மாநிலத்தின் கிராமங்களில் இன்னமும் நூற்றுக்கணக்கான சிறுமிகள் தேவதாசிகளாக நேர்ந்து விடப்படும் அவலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  இந்தியாவின் எத்தனையோ கிராமங்களில் பெண்களும், சிறுமிகளும், சிறுவர்களும் பாலியல் துன்புறத்துலுக்கும், வன்புணர்சிக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.  ஆனால் நகரவாசிகளுக்கு இதெல்லாம் கண்ணில் படுவதே இல்லையே என்னும் கேள்வி எழும் அதே நேரம், கலாச்சாரத்தை தன் ஆன்ம பலமாக பறைசாற்றும் இந்தியா போன்ற நாட்டில், அதன் கலாச்சாரத்தில் இருந்து ஓரளவேணும் வெளிவர முடிந்த படித்த இளைஞர்களால் தான் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை கண்டு அநீதி என்றாவது புரிந்துகொள்ள முடிகிறது.  

பெரும்பாலும் இந்தியா என்பது மகா-கலாச்சாரம் பொருந்திய நாடு என்பதே பெரும்பான்மைக் கருத்தாக, வெளிப்பாடாக இருக்கிறது. பற்றாக்குறைக்கு இந்தியாவை மேலோட்டமாக சுற்றிப் பார்த்த சில மேற்கத்திய 'அறிவுஜீவுகள்' இந்தியாவை அப்படியான, இப்படியான நாடு என்றெல்லாம் புகழ்ந்து எழுதியதும் காரணம். ஆனால் உண்மையில் இந்தியக் கலாச்சாரம் என்பது காலம்காலமாக இந்திய நாட்டில் நிலவும், இந்திய ஆண்கள் இந்தியப் பெண்களை அடக்கி ஆள்வதற்காகவே வடிவமைத்த ஒரு 'பயிற்சி' முறை!

இந்த பயிற்சி முறையின்படி பெண் ஒழுக்கமாய் இருக்கவேண்டும், பெண் உடலை மறைக்க வேண்டும், பெண் கற்போடு இருக்க வேண்டும், பெண் இழுத்துப் போர்த்த வேண்டும், பெண் குடிக்கக் கூடாது, பெண் ஊர் சுற்றக் கூடாது, பெண்ணுக்கு ஒரு கணவன் தான் இருக்க வேண்டும்!  ஆக பெண்களுக்கு மட்டுமே சட்டதிட்டங்களை ஒதுக்கித் தந்திருக்கும் ஒரு 'கலாச்சாரத்தை' எப்படி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான கலாச்சாரமாக, இந்தியக் கலாச்சாரமாக எடுத்துக் கொள்வது?  இந்தியப் 'பெண்' கலாச்சாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்!  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மது அருந்துவது தவறு எனச் சொல்வது சமூக நலன்.  உலக அளவில் பல நாடுகளும் இதைச் சொல்கின்றன, ஆனால் பெண்கள் மது அருந்துவது தவறு எனச் சொல்லும் 'தன்மை' வாய்ந்த விஷமத்தனமானது தான் இந்தியக் கலாச்சாரம்.

இந்தியா கலாச்சாரமிக்க நாடாக சினிமாக்களிலும், கதைகளிலும், நாடகங்களிலும், நாவல்களிலும் தன்னைத்தானே தொடர்ந்து பறைசாற்றி வரும் சூழலில் இந்தியாவில் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் குறையாமல் வன்புணர்வுகள் நடக்கின்றன‌. வன்புணர்வு சம்பவங்கள் ஒருபுறமிருக்க, இந்திய ஆண்களில் கொத்தனார்-சிற்றாளில் இருந்து மேலாளர்-தட்டச்சு செய்பவர், டீம் லீடர் - டீம் மெம்பர் என்பது வரை எதோ ஒரு வகையில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவும், தொல்லையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இதுவும் போக வயது வந்த ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான ஒரு சம்பவத்தை மனதில் புதைத்து வைத்திருக்கிறார்கள்.  உச்சக்கட்ட கொடுமை இந்திய கலாச்சாரத்தின்படி பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணை இந்திய சமூகம் ஒரு குற்றவாளியைப் போல நடத்தும் என்பதுதான்!!

பாலியல் என்ற சொல்லின் அர்த்தம் என்ன?  பால்+இயல். அதாவது பாலினம் சார்ந்த அறிவு அல்லது படிப்பு.  இந்தச் சொல்லை இந்திய சமூகத்தில் சாதாரணமாக ஒரு குடும்பம் உபயோகப்படுத்துகிறதா?  முடியுமா?  பாலியல் என்றாலே ஏதோ கெட்டவார்த்தை போன்ற ஒரு தோற்றமே இருக்கிறது.  சராசரி இந்தியக் குடும்பங்களிலும், ரஜினி, சிரஞ்சீவி, விஜய் போன்ற இந்தியக் கலாச்சார மாஸ் ஹீரோ பயிற்சியாளர்களால் உபதேசிக்கப்படும் சில வரிகளைப் பார்ப்போம்,
"நீ மட்டும் உண்மையான ஆம்பிளைன்னா.."
"நீ நிஜமாவே மீசை வச்ச ஆம்பிளைன்னா.."
"உங்க ஆத்தா ஒன்ன ஒருத்தனுக்கு பெத்திருந்தான்னா..."
"ஒரு பொம்பளைப் புள்ள ஒன்பது மணிக்கு மேல தூங்கலாமா?.."
"பொம்பளைப் புள்ளையா லட்சணமா நடந்துக்க.."
"பொம்பளை உனக்கே இவ்ளோ திமிரு இருந்தா ஆம்பிளை எனக்கு எவ்ளோ இருக்கும்?"
"பொண்ணுன்னா அடக்கம் வேணும், இப்படி ஆடக் கூடாது."
"பொம்பளப் புள்ள வெளிய போனா கெட்டுப் போயிடும். ஆம்பளப் புள்ள வீட்ல இருந்தா கெட்டுப் போயிடும்", இதர, இதர இன்னும் பல!  இப்படி கலாச்சாரம் என்ற பெயரில் ஆணாதிக்கத் தனத்தை சிறுவயது முதலே ஆண்பிள்ளைகள் மனதில் விதைத்தால் இந்த சமூகத்தில் ஆண்-பெண் சமநிலை எப்படி ஏற்படும்?  பெண் என்றால் தனக்கு கீழ்தான் என்ற மனநிலை வராதா?

இந்தியாவில் பேருக்கு இருபாலர் பள்ளி என நடத்துகிறார்களேயொழிய 99% பள்ளிகளில் ஆண்குழந்தைகளும், பெண்குழந்தைகளும் நண்பர்களாக பழக முடியாத நிலையில் தான் இருக்கிறது.  சில பள்ளி, கல்லூரிகளில் இதை பெருமையாகக் கூட கூறுகிறார்கள்.  ஆண்-பெண் மாணவர்கள் பேசினால் பழகினால் தண்டனை தரும் இருபாலர் பள்ளி, கல்லூரிகள் கூட உண்டு.  இப்படி சிறுவயது முதலே பெண்களை 'ஏலியன்கள்' போல தள்ளி தள்ளி வைத்து வளர்க்கும்போது, அச்சமூகத்தில் வளரும் ஆண்கள், பெண்களை சமமாக கருதி வளரும் வாய்ப்பை இழக்கிறார்கள்.  ஒரு வயதிற்குப் பின் பெண்களை காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் மனநிலை மட்டுமே ஏற்பட்டுவிடுகிறது. கலாச்சாரம், பண்பாடு என நீட்டி முழக்கும் இந்திய ஆண்களில் 90% பேர் பெண்களின் கண்களைப் பார்த்து பேச முடியாத ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் பலருக்கு பெண்கள் என்றாலே கண் மார்பு நோக்கிதான் செல்கிறது!

பெங்களுருவில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அந்த சிறுமிக்கு 'குட் டச்' 'பேட் டச்' போன்ற பாலியல் குறித்த அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால் நடந்த கொடூரத்தை ஒருவேளை அந்தச் சிறுமி ஆரம்பத்திலேயே தன் பெற்றோர்களிடம் தெரிவித்திருப்பாள்.  இந்த சம்பவத்தை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம்.  சூழல் இப்படியிருக்க நம் ஊர் கலாச்சாரக் காவலர்கள் பாலியல் கல்வியை கலாச்சாரத்துக்கு எதிரானதாகத்தான் இன்னமும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது நீங்கள் அன்றாடம் கடந்துபோகும் ஒரு விசயத்தை உங்கள் முன் வைக்கிறேன். அமெரிக்க சினிமாக்களில் ஒரு காதல் ஜோடியோ, திருமண ஜோடியோ இணைகிறதென்றால், இணைவதற்கு அறிகுறியாக உதட்டு முத்தக் காட்சியையோ, உடலுறவுக் காட்சியையோ காட்டுவார்கள்.  இயல்பு வாழ்க்கையிலும் திருமணமான தம்பதிகள் இதைத் தான் செய்வார்கள்.  (உடலுறவுக் காட்சிகள் வயது வந்தோர்க்கான ‘A’ படங்களில் மட்டுமே இருக்கும். அமெரிக்கக் குழந்தைகள் இக்காட்சிகளைப் பார்க்க முடியாது.)  நம்மூர் சினிமாவில் என்ன நடக்கிறது?  நாயகன், நாயகியின் தொப்புளில் பம்பரம் விடுவான், பாடல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி ஆடுவார்கள்,  கதாநாயகி மார்பை மட்டும் ஆட்டும்போது காமிரா அங்கே ஜூம் போகும்,  பின்புறத்தைக் காட்டுவார்கள்,  இப்படி எவ்வளவோ!  படத்தைப் பார்க்கும் ஆணின் மனதில் காம உணர்வுவரவேண்டும்;  ஆனால் அதே நேரத்தில் 'A' படமாகவும் ஆகிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இக்காட்சிகள் வைக்கப்படுகின்றன.  இதில் என்ன பெரிய கொடுமை என்றால் மனித இயல்பான உடலுறவுக் காட்சிக்கு ‘A’ சான்றிதழ் கொடுக்கும் சென்சார் போர்டு இதுபோன்ற வக்கிரக் காட்சிகளுக்கு ‘A’ கொடுப்பதில்லை.
ஆக வெகுஜனப் படங்களாக இக்காட்சிகளை தாங்கி வெளிவரும் திரைப்படங்களையும், பாடல் காட்சிகளையும் நம் மக்கள் தங்கள் குழந்தைகள் சகிதமாக குடும்பத்துடன் கண்டுகளிக்கிறார்கள்.  இந்திய சமூகத்தில் உடலுறவு என்பது ஆபாசமாகவும், பெண் உடலைச் சார்ந்த வக்கிரக் காட்சிகள் சாதாரணமாகவும் மக்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  நம் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே ஆபாசங்களும், வக்கிரங்களும் வெகுஜனப் பொழுதுபோக்குகளில் இரண்டறக் கலந்திருப்பதுதான்.

பொழுதுபோக்கு என்ற பெயரில் வெளிவரும் வெகுஜன இதழ்கள் பல, முதல்பக்கம் முதல் கடைசி பக்கம் வரை வக்கிரமான படங்களையே தாங்கி வருகிறது.  வெகுஜனப் பத்திரிக்கை என்ற முகமூடியுடன் வெளிவரும் இத்தகைய புத்தகங்களைப் படிக்கும், அல்லது தொப்புளில் ஆப்பாயில் போடும் திரை காட்சிகளைப் பார்க்கும் ஒரு குழந்தையின் மனநிலை என்ன ஆகும்?  மனதில் என்ன பதியும்?  மேற்கத்தியக் கலாச்சாரம் வக்கிரமானது எனச் சொல்ல இந்தியர்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும்!!

இது ஒரு பக்கம் என்றால் ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, வி.எச்.பி, மற்றும் சில இஸ்லாமிய மதவாதிகள் ஒருபுறம் 'பெண்கள் குடித்தால் அடிப்போம், பெண்கள் ஆடினால் அடிப்போம், ஜீன்ஸ் போட்டால் ஆசிட் ஊற்றுவோம்' என மதம் சார்ந்த கலாச்சாரத்தைக் காக்கக் கிளம்பியிருக்கிறார்கள்.  டெல்லி பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விஷயம் பரபரப்பாக பேசப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஓர் 'அருமையான' கருத்தை உதிர்த்திருந்தார்.  அதாவது பெண்கள் அடுப்படியில் இருந்தவரை எந்த வன்புணர்வு சம்பவங்களும் நடக்கவில்லையாம். மேற்கத்திய கலாச்சாரம் வந்தபின் தான் இச்சம்பவங்கள் நடக்கிறதாம்!   ஒருவன் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் உயிரோடிருப்பதுதான் எனச் சொல்வதைப் போன்ற முட்டாள்தனமான கருத்து தானே இதுவும்?  ஆனால் இதையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் காட்டுமிராண்டிகள் ஏராளமாக இந்தியாவில் உண்டு.  கண்டிப்பாக தடை செய்யப்படவேண்டிய இந்த பயங்கரவாத இயக்கங்கள் இளைஞர்களுக்கு கற்று கொடுப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  பெண் என்பவள் அடிமை என்ற கருத்தை மட்டுமே!

சரி. இத்தோடு விட்டார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு வன்புணர்வு நிகழ்வின் போதும் பெண்களின் உடைப் பழக்கத்தை குறை சொல்கிறார்கள்.  சில மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் ஒரு 12ஆம் வகுப்புப் பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து புதுவை அரசு ஒரு உலகப் புகழ் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டது.  அதாவது, இனி பள்ளி மாணவிகள் சீருடையுடன் சேர்த்து 'ஓவர்கோட்' அணியவேண்டும் என்கிறது உத்தரவு!  இத்தகைய அணுகுமுறையை சமூகத்தில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் பொருத்திப் பார்த்தால் என்ன ஆகும்?  கொள்ளையடிக்கப்படும் வாய்ப்பிருப்பதால் யாருமே பணம் வைத்திருக்கக் கூடாது, கொலை செய்யப்பட வாய்ப்புள்ளதால் யாரும் உயிரோடிருக்கவே கூடாது போன்ற கேலிக்குரிய சட்டங்களில் தான் போய் முடியும்!  ஒரு மாநிலத்தின் அரசே இவ்வளவு பிற்போக்குத்தனமாக செயல்பட்டால் குடிமக்களைப் பற்றி என்ன சொல்வது!

தண்டனைகளைக் கடுமையாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் நியாயமானதாக இருந்தாலும், உண்மையில் நடப்பதென்னவோ துப்பறிவதில் உள்ள குறைபாடு தான்.  விஞ்ஞான ரீதியில் சாட்சிகளைச் சேகரிக்காமல் இன்னமும் நம் நீதித்துறை மனித சாட்சிகளையே பெரிதும் நம்பியிருக்கிறது. பெரும்பாலும் பாதிக்கப்படும் பெண்ணும் குற்றவாளியும் மட்டுமே இருக்கும் ஒரு பாலியல் குற்றச் சூழ்நிலையில் நடந்ததைப் பற்றி வேறு யார் சாட்சி சொல்வார்கள்?  சாட்சிகள் இல்லாததால் ஏராளமான வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அவலம் தொடர்கிறது.  பெரும்பாலும் அக்குற்றவாளிகள் தங்களது அடுத்து குற்றத்தை அரங்கேற்றி விடுகிறார்கள். டி.என்.ஏ போன்ற விஞ்ஞான ரீதியிலான சாட்சிகளை இவ்வழக்குகளில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். 

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதை மேலோட்டமாகப் பார்த்தால் அது சமூகத் தோலில் ஏற்பட்டிருக்கும் ஒரு 'கட்டி'.  ஆனால் அக்கட்டியின் வேர் சமூகத்தின் அடி ஆழம் வரை நீள்கிறது.   ஒரு இந்தியக் குழந்தை பிறந்த அடுத்த நொடியில் இருந்தே அது வேர்விடத் துவங்குகிறது.  மேலோட்டமாக இக்கட்டியை நீக்கினாலும், நீக்க முற்பட்டாலும் அது தற்காலிகமான தீர்வாக இருக்குமேயொழிய கட்டிகள் தோன்றுவதை தடுக்க முடியாது.  இந்தியாவில் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நிலவும் புற்றுநோய் வேரோடு தோண்டியெடுக்கப் பட்டாலேயொழிய நிரம்பி வழியும் பாலியல் குற்றங்களை குறைக்க முடியாது. ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்தால், நைட் கிளப் போனால், இரவில் நண்பர்களுடன் நடந்துபோனால், நைட் ஷோ சினிமா போனால் பாலியல் வன்முறைகள் நடக்கத்தான் செய்யும் என இந்தியத் தாய்மார்களில் பலரே நியாயப்படுத்தும் அவலமான சூழ்நிலையை தான் நம் கலாச்சாரம் நமக்கு தந்திருக்கிறது. 

ஒரு சின்ன சம்பவத்தை பகிர்கிறேன்.  ஒருநாள் நள்ளிரவில் வாழ்க்கைத்துணையுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பேருந்து நிறுத்தம் தென்பட்டது.  ஆள் அரவமற்ற அந்த இடத்தில், மழை பெய்து குளிருடன் ரம்மியமாக இருந்த சூழலை ரசித்தபடியே நான்கைந்து ஆண் நண்பர்கள் ஏதோ பக'டியாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  அந்த நண்பர்களைப் பார்த்துக்கொண்டே என் துணைவி, "எவ்ளோ ஜாலியா பேசி சிரிச்சுட்டு இருக்காங்க.  இது நடு ராத்திரிங்குற பயமே அவங்க முகத்துல இல்ல.  ஆனா நம்ம ஊருல இதே மாதிரி ஒரு நடுராத்திரில நானும் என் பெண் தோழிகளும் எங்கயாச்சும் நின்னு பேசி சிரிக்க முடியுமா?" என்று கேட்டாள்.  என்னிடம் பதில் இல்லை.  என்னிடம் மட்டுமல்ல நம் நாட்டில் யாரிடமும் இதற்கான பதில் இருக்காது.  ஆனால் எதிர்காலத்திலாவது நாம் அந்த பதிலைத் தேடி பயணிப்பதில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை குறைப்பதற்கான வழி இருக்கிறது! 


-டான் அசோக்
writerdonashok@yahoo.com
Related Posts Plugin for WordPress, Blogger...