Friday, July 25, 2014

டெல்லியின் இந்தி விளைவு- நேரு முதல் மோடி வரை!இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையையும், அது சார்ந்து நம்மூர் தலைவர்கள் ஆற்றிய எதிர்வினைகளையும் பல செய்திகளில் படித்திருப்பீர்கள்.  ஆனால் இந்தி திணிப்பைப் பற்றி நமது இளைய தலைமுறை என்ன நினைக்கிறது? அவர்களுக்கு இந்தி திணிப்புப் போரைப் பற்றிய வரலாறு தெரிந்திருக்கிறதா?  மோடி அரசின் இந்த செயலை ஏற்கிறார்களா, எதிர்க்கிறார்களா, கருத்தின்றி இருக்கிறார்களா என்பதெல்லாம் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள்.  ஏனெனில் மொழித் திணிப்பு என்பதை வெறும் மொழித்திணிப்பாக மட்டும் பார்க்க முடியாது.  கலாச்சாரத் திணிப்பாகத்தான் பார்க்க முடியும், பார்க்க வேண்டும்.  ஒட்டுமொத்தமாக இந்தியா என்ற நாட்டை இந்தி கலாச்சாரத்தை மட்டுமே பின்பற்றும் நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான் இந்தி பேசும் அரசியல்வாதிகளின், இந்துத்துவம் பேசும் அரசியல்வாதிகளின் தொலைநோக்குத் திட்டமாக இருந்திருக்கிறது, இருக்கிறது.  இதற்கு காங்கிரசும் சரி, பாஜகவும் சரி, அவ்வளவு ஏன் தென்மாநிலங்களில் இந்தியைப் பரப்புவதற்காக இந்தி பிரச்சார சபாவை துவக்கிய மகாத்மா காந்தி கூட விதிவிலக்கல்ல.  மொத்தத்தில் இந்தித் திணிப்பை, சில அரசியல்வாதிகளின் கொள்கை மட்டும் அல்ல.  இது, ஒரு சமூகம் மற்ற சமூகங்களின் மேல் தொடுக்கும் கலாச்சாரப் படையெடுப்பு!  அதனால்தான் நேரு, இந்திராகாந்தி, மன்மோகன்சிங், வாஜ்பாய், மோடி என யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த படையெடுப்பில் மட்டும் தேக்கநிலை ஏற்பட்டதே இல்லை.

2013ல் காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியில் அஞ்சல் தொடர்புகளை ஊக்குவிக்க வேண்டும், ஆங்கிலத்திற்கு எக்காலத்திலும் முன்னுரிமை கொடுக்கக் கூடாது என்றெல்லாம் நீளும் அரசாணை ரிசர்வ் வங்கியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.  ஒரு வங்கியின் செயல்பாடுகளில் இந்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்?  இன்றளவும் மத்திய அரசு வங்கிகளில், தினம் ஒரு இந்தி வார்த்தை’,‘தேசிய மொழியான இந்தியில் பேசுவோம்என்று எழுதப்பட்டிருக்கும் போர்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.  பல வங்கிகளிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தியில் மட்டுமே எழுதப்பட்ட துண்டுச்சீட்டுகள், பெயர் பலகைகளைக் காணலாம்.  உள்ளே நுழையும் ஒரு சராசரித் தமிழனுக்கு ஏதோ அன்னிய நாட்டுக்குள் நுழைவதைப் போன்ற பயமும், தயக்கமும் தான் ஏற்படுகிறது.  பற்றாக்குறைக்கு இந்தி மட்டுமே தெரிந்த அலுவலர்களும் உள்ளே இருப்பார்கள்.  இந்தி பேசாத மாநிலத்தவர்கள் மீதான மத்திய அரசின் உளவியல் போராகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தவர்க்கும், இனத்தவர்க்கும் இல்லாத ஒரு பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு.  இந்தி திணிப்பின் போது, முதுகை குனிந்து காட்டாமல், திமிறித் தள்ளிய ஒரே இனம் தமிழினம்.  திராவிட இயக்கங்கள் முன்னின்று நடத்திய இந்தி எதிர்ப்புப் போரால் தமிழகத்திற்கு மட்டும் சட்டரீதியாக இந்தி திணிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.  அதனால் தான் உள்துறை அமைச்சகம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் கூட தமிழ்நாடு தவிர்த்துஎன்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.  இன்று கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்தி எழுத்துக்களின் மீது தாள் ஒட்டி தங்கள் எதிர்ப்பை காண்பிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.  ஆனால் இதையெல்லாம் 1960களிலேயே தமிழகம் செய்து, தனக்குத்தானே இந்தித் திணிப்புக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொண்டது.  அப்போது அமைதியாக நம்மை வேடிக்கை பார்த்தவர்கள், நம்மை கேலி செய்தவர்கள் எல்லாம் இப்போது நம்மைப் பார்த்து பெருமூச்சு விடுகிறார்கள்.  கலைஞரின் அறிக்கை வந்தவுடன் அதைப் பகிர்ந்து சிலாகிக்கிறார்கள்.  ஜெயலலிதாவின் அறிக்கை வந்தவுடன் கொண்டாடுகிறார்கள்.  நம்மூரில் இப்படி தலைவர்கள் இல்லையே என சமூக வலைதளங்களில் புலம்புகிறார்கள்.  நம் முந்தைய தலைமுறை நமக்காக எத்தகைய தியாகத்தைச் செய்திருக்கிறது என்பது இன்றைய தமிழ்த் தலைமுறைக்கு தெரியுமா என்றால், பலருக்கு தெரியவில்லை.  அதில் பலர் தெரிந்துகொள்ள விரும்பவே இல்லை.  ஏனெனில் மத்திய அரசின் உளவியல் போருக்கு பலியாகி இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்!

1946ல் இந்திய அரசியல் சட்டம் அமைக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் ஜான்சியைச் சேர்ந்த விடுதலைப்போராட்ட வீரர் ஆர்.வி.துலேகர் இந்தியில் பேசினார்.  இடைமறித்த குழுவின் தலைவர் சச்சிதானந்த் சின்கா, இங்கே இருக்கும் பல உறுப்பினர்களுக்கு இந்தி தெரியாது.  ஆங்கிலத்தில் பேசுங்கள்,என்றவுடன், இந்தி தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கவே தகுதியற்றவர்கள்என பதில் வந்தது.  இந்த பதிலை, அதே கூட்டத்தில் அமர்ந்திருந்த நேருவும் ரசித்தார் என்பது வரலாறு.  பிறகு தென்னகத்தில் இருந்து இந்தி திணிப்பிற்கு கடும் எதிர்ப்பு வந்தபோதும் நேரு தலைமையும், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை.  சென்னை மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி, தென்னகத்தில் ஏற்கனவே நிறைய பிரிவினை சக்திகள் (திராவிடர் கழகம்) இருக்கின்றன.  அவற்றுக்கெல்லாம் இன்னும் ஊக்கமளிப்பதைப் போலத்தான் நமது உத்திர பிரதேச அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் உள்ளன.  நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன்.  உங்களுக்கு ஒருங்கிணைந்த இந்தியா வேண்டுமா, அல்லது இந்தி-இந்தியா வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்என்றார். 

ஒரு நாடு, ஒரு மொழி என்ற கருத்தில் உறுதியாக இருந்த நேரு, இந்தி மொழி இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்ற இந்தி ஆதரவாளர்களின் கருத்துக்கு மாறாக, இந்தி திணிப்பு நேர்மாறான விளைவுகளையே தரும் என்பதை காலப்போக்கில் புரிந்துகொண்டார்.  பிறகு 15ஆண்டுகளுக்கு ஆங்கிலமே அலுவல் மொழியாக இருக்கும் என்றும், இந்த 15 ஆண்டுகளில் ஆங்கிலம் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு இந்தி தேசியமொழி ஆக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.  அதாவது அப்போதே வெடித்திருக்க வேண்டிய ஒரு வெடிகுண்டில் 15ஆண்டுகள் என்ற டைமர் பொறுத்தப்பட்டு டைம் பாம் ஆக மாற்றப்பட்டது.  அந்த டைம்பாம் சரியாக 15ஆண்டுகள் கழித்து, அதாவது 1965ல் வெடித்தபோது தமிழகம் இரண்டாவது மொழிப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.  1930களின் பிற்பகுதியில் துவங்கிய முதல் இந்தி எதிர்ப்புப் போரை பெரியார் முன்னின்று நடத்தியதைப் போல, 1960களில் நிகழ்ந்த இரண்டாம் மொழிப்போரை அறிஞர் அண்ணா முன்னின்று நடத்தினார்.  இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால், 1930களில் இந்திய அரசுக்கு ஆதரவாக, இந்தி திணிப்பிற்கு ஆதரவாக இருந்த மூதறிஞர் ராஜாஜி, 1960களின் போது இந்தியை திணித்தால் நானே பிரிவினைவாதியாக மாறுவேன்என அண்ணாவுடன் சேர்ந்து முழங்கினார். 

1960களின் இறுதியில் நடந்த மொழிபோர், பல வரலாற்று ஆசிரியர்களால் உள்நாட்டுப் போராகவே பார்க்கப்படுகிறது.  ராணுவ பீரங்கிகள் தமிழக வீதிகளில் வலம் வந்ததை நேரில் பார்த்தவர்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களாகவே அந்த அனுபவத்தை விவரிக்கிறார்கள்.  72 மரணங்கள் என அரசு தரப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மொழிப்போரில் ஈடுபட்டவர்களும், வரலாற்று ஆசிரியர்களும் உயிர்ப்பலி 1000த்தை கண்டிப்பாகத் தாண்டும் என்கிறார்கள்.  பங்களாதேஷைச் சேர்ந்த எழுத்தாளர் ஷஃபிகிர் ரெஹ்மான், தமிழகத்தில் தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு இறந்த மொழிப்போர் தியாகிகளின் எண்ணிக்கை, வியட்நாம் போரில் தங்களைத் தாங்களே எரித்துக்கொண்ட புத்தபிட்சுக்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு அதிகம் என்கிறார்.  தமிழ்நாட்டில் நிலை கைமீறி போய்க்கொண்டிருப்பதையும், அதைத் தடுக்க இந்திய அரசு தவறிக் கொண்டிருப்பதையும் ஐநா சபை குறிப்பிட்டது.  இது குறித்து விவாதிக்க கூட்டமும் ஏற்பாடு செய்தது.  ஒருவழியாக பணிந்த சாஸ்திரியின் அரசு, ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாக நீடிக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தது.  தமிழகம் நடத்திய இந்த மொழிப்போரால், பின்னாட்களில் உலகமயமாக்கலின் போது ஒட்டுமொத்த இந்தியாவும் பயன் பெற்றது தனிக்கதை. 

இந்தியை சட்டத்தால் திணிக்க முடியாது என்ற உண்மையை 1930, 1960 என அடுத்தடுத்து தமிழகத்தின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரால் மத்திய அரசு நன்றாக உணர்ந்து கொண்டபின், அது கையிலெடுத்திருக்கும் யுக்திதான் உளவியல் ரீதியான போர்.  ஏன் இதை உளவியல் போர் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது?  இந்தியா என்பதை உங்கள் நாடாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.  பள்ளியில் இருந்தே ஜனகனமன பாடலுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றாலும், அதைக் கேட்கும் போதெல்லாம் உங்கள் நரம்புகள் புடைக்கின்றன.  இந்தியன், இந்தியன் என்றே சொல்லிக்கொடுத்து பழக்கப்படுத்துகிறார்கள்.  திடீரென உங்கள் நாட்டில் உங்களுக்கு முற்றிலும் தெரியாத மொழி பிரதானமாக உபயோகப்படுத்தப்படுகிறது.  நீங்கள் என்ன வேலையாக, எந்த அலுவலகம் சென்றாலும் இந்தி தான் எழுதப்பட்டிருக்கிறது.  இதெல்லாம் போதாதென்று, இந்தியன் என்கிறாய்!  இந்தி தெரியாமல் இருக்கிறாய்?என உங்களுடன் வேலை செய்யும் இந்திக்காரர்கள் கேட்கிறார்கள்.  இந்தி கற்றிருந்தால் தான் இந்தியனாக வாழ முடியும், இந்தியாவுக்குள் பயணிக்க முடியும் போன்ற பச்சைப் பொய்கள் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் மூளையில் திணிக்கப்படுகின்றன.  உங்களுக்கே தெரியாமல் ஒரு தாழ்வு மனப்பான்மை உங்களைத் தொற்றிக்கொள்கிறது.  நம்மில் சிலர், “நான் இந்தி கற்றிருந்தால் ஒபாமா ஆகியிருப்பேன்”, “இந்தி கற்றிருந்தால் அந்த ஆட்டோக்காரன் என்னை 20ரூபாய் ஏமாற்றியிருக்க மாட்டான்”, “என் இந்திக்கார வாட்ச்மேனுடன் என்னால் பேச முடியவில்லைஎன்றெல்லாம் புலம்புகிறார்கள்.  இவர்கள் அனைவருமே மத்திய அரசு பன்னெடுங்காலமாக நடத்திக்கொண்டிருக்கும் உளவியல் போரால் பாதிக்கப்பட்டவர்கள்.  இந்த உளவியல் சிக்கலில் கட்டுண்டு இருப்பவர்களுக்கு சில விஷயங்களை விளக்குவது அவசியம்.


1)       தமிழகத்தைத் தவிர இந்தியாவின் எல்லா ஊர்களிலும், எல்லா ஆட்களுக்கும் இந்தி தெரியும், இந்தி தெரிந்தால் இந்தியா முழுதும் சுற்றிவரலாம் என்ற நம்பிக்கைதான் இந்தியாவில் நிலவி வரும் கோடிக்கணக்கான மூடநம்பிக்கைகளிலேயே முதன்மையானதாகும்.  இந்தியாவில் இந்தி பேசுகிறவர்கள் வெறும் 40% பேர்.  அதில் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மிகவும் குறைவு.  ஏனெனில் இந்த 40%த்தில் இந்திக்கு நெருங்கிய மொழிகளாக கருதப்பட்டும் பஞ்சாபி, மராட்டி, குஜராத்தி, மைதிலி, போஜ்பூரி போன்ற மொழிகளையும் சேர்த்திருக்கிறார்கள்.  நீங்கள் பள்ளியில் குட்டிக்கரணம் போட்டு இந்தி படித்தாலும் நீங்கள் இந்தியாவெங்கும் சந்திக்கும் நபர்களில், 10ல் 3பேர் தான் உங்களுக்குப் புரியும் வகையில் இந்தி பேசுகிறவராக இருப்பார்.  மீதி 7 பேரிடமும் பேச இன்னும் எத்தனை மொழிகளை பள்ளியில் இருந்தே கற்றுக்கொள்ள முடியும்?  இதற்கு ஒரே தீர்வு அந்த 10 பேரும், நீங்களும், அதாவது இருதரப்பினருக்கும் பொதுமொழியாக இருக்கும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு அதில் உரையாடுவதுதானே?  இதைத்தான் திராவிட இயக்கத்தவர்களும், இந்தி திணிப்பிற்கு எதிரானவர்களும் வலியுறுத்துகிறார்கள்.

2)       இந்தி தெரியாதவர்களுக்கு கார்பரேட் கம்பனிகளில் முன்னுரிமை கிடைப்பதில்லை என்பது மிகவும் மொன்னைத்தனமான பொய்.  தமிழகத்தில் இருந்து இந்தி தெரியாத பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் எத்தனையோ பேர் இந்தியாவெங்கும் பல நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.  ஏதாவது ஒரு நிறுவனத்திலேனும் உங்களுக்கு இந்தி தெரியவேண்டும்என்ற நிபந்தனையை விதித்திருக்கிறார்களா?  கிடையவே கிடையாது என்பதுதான் உண்மை.  ஆங்கிலத்தை மட்டுமே பிரதானமாக எதிர்பார்க்கிறார்கள்.  மேலும் இந்தி தெரியவேண்டும் போன்ற நிபந்தனைகளை எல்லாம் போட்டால் நல்ல வேலையாட்கள் கிடைக்கவே மாட்டார்கள் என்பது இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நிறுவன முதலாளிகளுக்கே கூட நன்றாகவே தெரியும்.

3)       நம் தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொள்ளாமல் இருக்கலாமா என்ற வாதத்தை சிலர் முன்வைக்கும் போது, மொழி ஆர்வம் இவ்வளவு அதிகமாக உள்ளவர்கள், பொது அறிவில் படுமோசமாக இருக்கிறார்களே என்ற பரிதாபம் தான் ஏற்படுகிறது.  இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.  இதை அகமதாபாத் நீதிமன்றம் சமீபத்திய வழக்கு ஒன்றில் உறுதி செய்துள்ளது.  இந்த விஷயம் நம் உள்துறை இணை அமைச்சருக்கே தெரியாததுதான் காலக்கொடுமை.  கலைஞருக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், இந்தியை தேசியமொழி எனக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

4)       இந்தி கற்காததால்தான் தமிழகம் பின்தங்கியுள்ளது, தமிழர்கள் பின்தங்கியுள்ளார்கள் என சிலர் புலம்புவதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை கொஞ்சம் கண் திறந்து பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.  அத்தனை வட மாநிலங்களைவிடவும் தென் மாநிலங்கள், தொழில்வளர்ச்சியிலும், உட்கட்டமைப்பிலும், வேலைவாய்ப்பிலும் பன்மடங்கு முன்னேறியிருக்கின்றன.  குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சி மற்ற எல்லா மாநிலங்களைவிடவும் அபரிமிதமானது.  இந்தி பேசும் லட்சக்கணக்கான பேர் தமிழகத்தில் கூலித்தொழிலாளர்களாக இருப்பதையும், இந்தியே தெரியாத பல லட்சக்கணக்கான தென்மாநிலத்தவர்கள், வட இந்தியாவில் இருக்கும் பல பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருப்பதையும் கண்கூடாகக் காணலாம்.  வளர்ச்சிக்கும், தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவும் ஆங்கிலமொழி அவசியம் என்ற கருத்தில் உண்மை இருக்கிறது.  ஆனால் இந்தி தேவை என்ற கருத்து பச்சைப் பொய்யே தவிர வேறில்லை.

5)       வட மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் போது இந்தி தெரியாமல் சிரமமாக இருக்கிறது என்ற கூற்று தாழ்வுமனப்பான்மையின் ஒரு வடிவம் தான்.  வட இந்தியர்கள் நம் ஊருக்கு வந்தால் நமக்கு இந்தி தெரியவில்லையே என தங்கள் கடுப்பை வெளிக்காட்டுவார்கள்.  நாம் வடநாடு செல்லும்போது நாம் இந்தி கற்கவில்லையே என உள்ளுக்குள் புலம்புவோம்!  இது தாழ்வு மனப்பான்மையே அன்றி வேறென்ன?  மேலும் நம் ஊரில் வியாபாரம் செய்யும் ஏராளமான மார்வாடிகள் என்ன அவர்கள் ஊரில் கட்டாய தமிழ் பயின்றுவிட்டா வந்தார்கள்?  எந்த மொழியையும் மூன்று மாதங்களில் கற்றுக்கொள்ள முடியும்.  பள்ளியில் படிப்பதைவிட, அந்த மொழி பேசப்படும் சூழலில் ஒரு மொழியை கற்றுக்கொள்வது மிகவும் சிறப்பானதும், வேகமான முறையும் ஆகும்.  வடநாட்டவர்கள் இப்படித்தான் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள்.  நீங்களும் வட இந்தியாவிற்கு வேலைக்குப் போனால் வெகுவிரைவில் கற்றுக்கொள்ளலாம்.  நீங்கள் வட இந்தியாவில் வேலை பார்க்கப்போகிறீர்கள் (அதுவும் நிச்சயமில்லை) என்பதற்காக ஒட்டுமொத்த தமிழ்க் குழந்தைகளும் பள்ளியில் கட்டாய இந்தி படிக்க வேண்டும் என்பது முட்டாள்த்தனத்தின் உச்சம்!

6)       திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் இந்தியை தடை செய்ததால்தான் இந்தி கற்க முடியவில்லை என்ற கூற்று அறியாமையின் வெளிப்பாடு.  பொதுவாகவே திராவிட இயக்கம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவை. அதனால் தான் இந்திக்கு எதிராக போராடாத (இப்போது போராட துவங்கியிருப்பது தனிவிஷயம்) கர்நாடகத்தில் கன்னடம் கட்டாயப்பாடமாக இருக்கும்போது தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை.  திராவிட இயக்கம் இந்தி திணிப்பிற்கு எதிராகத்தான் போராடியதேயொழிய இந்திக்கு எதிராகவோ, இந்தி படிப்பதற்கு எதிராகவோ போரடவில்லை.  நம்மூரில் தான், எங்க சுரேஷுக்கு தமிழ் படிக்கவே தெரியாது.  அவன் செகண்ட் லாங்குவேஜ் இந்திஎனப் பெருமை பீற்றும் அடிமைகள் மிக அதிகமாக இருக்கிறார்கள். ஏதோ தமிழ்நாட்டில் இந்தியை ஒட்டுமொத்தமாக தடை செய்துவிட்டதைப் போல புலம்புவதெல்லாம் தன் கையாளாகாத்தனத்தை அடுத்தவர் மேல் போட்டு தப்பிக்கப் பார்க்கும் செயல்தான்.  இந்தி பிரச்சார சபா, மத்திய அரசின் இந்தி இயக்குனரகம் என இந்தியைப் பரப்ப ஏராளமான அமைப்புகள் உள்ளன.  இந்தி இலவசமாகவே கற்றுக்கொடுக்கப்படுகிறது.  இந்தி படித்தால் தான் வாழ்க்கையில் பெரிய ஆளாக வர முடியும் என நினைப்போர் தாராளமாக படிக்கலாம்.  எந்த தடையும் இல்லை.  ஆனால் எல்லோரும் கட்டாய இந்தி படிக்க வேண்டும் எனப் பிதற்றுவது கடும் கண்டனத்திற்கு உரியது.

7)       ஆங்கிலம் என்னும் அந்நிய மொழியைக் கற்கும் நாம் ஏன் நம் நாட்டு மொழியான இந்தியைக் கற்க கூடாது என சிலர் தேசப்பற்றோடு கேள்வி எழுப்புகிறார்கள்.  நம் வீட்டில் இருக்கிறது என்பதற்காக உடலுக்கு தேவையே இல்லாத இல்லாத விஷயங்களை எல்லாம் எடுத்து கட்டாயத்தின் பேரில் தின்ன முடியுமா?  உலகமயமாக்கலில் ஆங்கிலம் நமக்கு மிக அருமையான வாய்ப்புகளை வழங்குகிறது.  சர்வதேச தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம்.  அதைக் கற்பதற்கு பதிலாக இந்தியை கற்றுக்கொள்ளேன் எனச் சொல்வது பொருந்தா ஒப்பீடு.  மேலும் ஆங்கிலம் நமக்கு எவ்வளவு அந்நியமோ அதே அளவிற்கு அந்நியமான மொழிகள் இந்தியும், சமஸ்கிருதமும்.  திராவிட மொழிக்குடும்பமும், இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பமும் முற்றிலும் வேறானவை.  இதெல்லாம் தவிர இந்தியை விட இன்று இந்தியாவில் எல்லாவற்றிலும் முதன்மை பெற்றுள்ள மொழி ஆங்கிலம். இந்தி பேசாத 60% மக்களுக்கு இந்தியை விட ஆங்கிலம் நெருக்கமான மொழி.  அதுமட்டுமல்லாது அமெரிக்காவுக்கு அடுத்து ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கையில் இந்தியாதான் இருக்கிறது!  இப்படி ஒரு சர்வதேச மொழிக்கான இடம் இந்தியாவில் ஏற்கனவே சிறப்பாக இருக்கும் போது மூன்றாவதாக ஒரு மொழியைக் கட்டாயமாகப் படி என வேற்று இனத்தவர்களை வற்புறுத்துவதென்பது பச்சையான இனவெறி பாசிசமேயன்றி, தேசப்பற்று அல்ல! 

8)       இந்தி தேசியமொழி ஆக்கப்பட்டால் அரசு தேர்வுகள் அனைத்தும் இந்தியில் நடைபெறும் சூழல் ஏற்படும்.  பிறந்தது முதல் இந்தியிலேயே தாலாட்டு கேட்டு வளரும் ஒரு குழந்தையுடன், பள்ளியில் ஒரு பாடமாக மட்டுமே இந்தியைப் படித்து வளரும் நம் குழந்தைகள் போட்டியிட முடியுமா?  அது நியாயமான போட்டியாக இருக்குமா?  நமக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ஒரு ஆங்கிலேயனுடன் நாம் ஆங்கில மொழியில் போட்டி போட முடியுமா?  இது நடந்தேறினால் அரசின் அனைத்து இடங்களிலும் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, நாம் அனைவரும் புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகும்.  இந்தி தேசியமொழி ஆக்கப்படும் பட்சத்தில் இந்தி பேசாதவர்கள் சந்திக்கப்போகும் மிகப்பெரிய அபாயம் இது. 

மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாம் நூற்றில் ஒரு பங்குதான்.  ஏற்கனவே தமிழக கிராமங்களில் கூட சொல்லுங்க ஜீ’  ‘வாங்க ஜீஎன ஜீ போட்டுப் பேசும் பழக்கம் வந்துவிட்டது.  இளையதலைமுறையினர் கமான் யார்.. அரே டெல் யார்எனப் படுகேவலமாக ஆங்கிலத்துடன் இந்தியைக் கலந்து கர்ணகொடூரமாக பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.  தமிழைத் தமிழிலும், ஆங்கிலத்தை ஆங்கிலத்திலும், இந்தியை இந்தியிலும் பேசவேண்டும் என்ற அடிப்படை அறிவே இல்லாமல் நம் இளையதலைமுறை இருக்கிறது.  மீண்டும் வடமொழிக் கலப்பு துவங்கியிருக்கிறது.  ஒரு கருத்தை தமிழில் தெரிவிக்க வேண்டுமென்றால்  “மே பீ... லைக்... ஹவ் டூ சே இன் டேமில்என இழு இழு என்று இழுக்கிறார்கள்.  (ஹவ் டூ சே இன் இங்கிலிஷ் என்பதும் தெரியாது என்பது வேறு விஷயம்)  மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதே கஷ்டம் என்ற சூழல் உருவாகியிருக்கிறது.  இதெல்லாம், நாம் நம் பக்கத்தில் சரி செய்ய வேண்டிய விஷயங்கள்.  இதோடு மத்திய அரசின் உளவியல் போரையும் நாம் எதிர்கொண்டு, இளைஞர்களுக்கு கட்டாய இந்தி அவசியமற்றது என்பதைப் புரிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தமும், அவசியமும், கடமையும் நமக்கு இருக்கிறது.

மேலும் ஒரு பன்மொழிக் கலாச்சாரம் கொண்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியை, ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை மற்ற அனைவரின் மீதும் திணிப்பது என்பது கொள்ளிக்கட்டையை வைத்து தலையைச் சொரியும் கதைதான் என உலக நாடுகளின் வரலாறு அறிந்த யாவரும் அறிவார்கள்.  பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்தது, ரஷ்யா உடைந்தது என எதை எடுத்துக்கொண்டாலும், பிரிவினைகள் அத்தனையிலும் மொழித்திணிப்பு, கலாச்சாரத் திணிப்பு ஆகியவை முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.  தேசப்பற்று என்ற பெயரில், ஏக் தேஷ் ஏக் பாஷா எனக் கிளம்புகின்றவர்கள் தங்கள் தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு மிகப்பெரும் கேட்டையே உண்டாக்குகிறார்கள் என்பதுதான் உண்மை.  அதனால் தான் பெரிய மொழிப் பற்றெல்லாம் இல்லாத ஆட்கள் கூட, தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து இந்தித்திணிப்பை எதிர்க்கிறார்கள். 
அதனால் இந்தி பேசாத மாநிலத்தவர்கள் அனைவரும், மத்திய அரசில் இந்திக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனைவரின் மீதும் இந்தியைத் திணிப்பதை ஒரே குரலில் எதிர்க்க வேண்டும்.  தமிழகத்திற்கு இந்தி திணிப்பிற்கு எதிரான சட்ட ரீதியிலான பாதுகாப்பு இருக்கிறது என்றாலும்  மத்திய அரசின் சமீபத்திய செயலுக்கு எதிராக முதல் குரலாக கலைஞரின் குரல் தமிழகத்தில் இருந்து எழுந்ததையும், மொழிப்போர் களம் இன்னும் காய்ந்துபோய்விடவில்லை என அவர் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  மாஹாராஷ்ட்ரா, வங்காளம், கர்நாடகா, ஆந்திரா, கிழக்கு மாகாணங்கள் என இந்தி பேசாத பல மாநிலத்தவர்கள் இந்த விஷயத்தில் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் முன்னோடியாக எடுத்துக்கொண்டு போராடத் துவங்கியிருக்கிறார்கள்.  மொழியையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க விரும்பும் சக குடிகளாக, அவர்களுக்கு நம் தார்மீக ஆதரவை அளிப்பது அவசியம்.  அதைவிட அவசியம் மத்திய அரசின் உளவியல் போரில் பாதிக்கப்பட்டு, தாழ்வு மனப்பான்மையில் உழல்கின்றவர்களை மீட்பது.  எல்லாவற்றுக்கும் மேல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை எட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையையும், ஆங்கிலத்தை தேசிய மொழி ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் விடாமல் எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.  டெல்லிக்கு எதிராக பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரில் இந்த மூன்று விஷயங்களில் நாம் கவனமாக இருந்தால் மட்டுமே போரின் முடிவு எப்போதும் நமக்கு சாதகமாகவே இருக்கும். 


-டான் அசோக்


7 comments:

v.pitchumani said...

நல்ல கட்டுரை. நிறைய தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.ஹிந்திபேச மற்ற மாநில வடகிழக்கு மாநில மக்கள் புரியும் வண்ணம் ஆங்கில பதிவை வெளியிடுங்கள். பல கையோசை பலன் தரும்

Aachi Yamini said...

http://www.aachinews.com/2014/07/blog-post_25.html

உலகளந்த நம்பி said...

அனைத்துத் தமிழர்களும், குறிப்பாக, இந்திக்குச் சாமரம் வீசுபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தமிழன் என்ற வகையில் என் நன்றி.

தெம்மாங்குப் பாட்டு....!! said...

நல்ல பதிவு.. இப்போதைக்கு அவசியமானப் பதிவு..!! பல வெங்காயங்கள் என்னை இந்தி தெரியாத நீயெல்லாம் இந்தியனா என்று கேட்டிருக்கிறார்கள்... பாகிஸ்தானி கூட இந்தி பேசுறான் என்றார்கள்..!! இப்பொதுத் தெரியும் பாகிஸ்தானிப் பேசுவது உருது என்று..! இந்திய அரசியல் வாதிகள் மொழி விசயத்தில் மிகவும் ஆபத்தானவர்கள்...!

தெம்மாங்குப் பாட்டு....!! said...

நல்ல பதிவு.. இப்போதைக்கு அவசியமானப் பதிவு..!! பல வெங்காயங்கள் என்னை இந்தி தெரியாத நீயெல்லாம் இந்தியனா என்று கேட்டிருக்கிறார்கள்... பாகிஸ்தானி கூட இந்தி பேசுறான் என்றார்கள்..!! இப்பொதுத் தெரியும் பாகிஸ்தானிப் பேசுவது உருது என்று..! இந்திய அரசியல் வாதிகள் மொழி விசயத்தில் மிகவும் ஆபத்தானவர்கள்...!

M.Kumaran said...

நான் மூன்று வருடங்களுக்கு மேலாக மும்பையில் பணியாற்றியுள்ளேன். அந்த மூன்று வருடத்தில் எந்த ஒரு நிலையிலும் "ஐயோ என்னால் இந்தி பேசமுடியவில்லையே" என்று நினைத்ததில்லை. அங்குள்ள அனைவரும் ஆங்கிலம் புரிந்துகொள்கிறார்கள்.
"இந்தி தெரிந்திருந்தால் என்னால் இந்தியாவெங்கும் பயணிந்திருக்கமுடியும்" என்று யாராவது கூறினால் அவர்களைப்போல் அறியாமையில் இருப்பவர் எவருமில்லை.

Anonymous said...

tamil la irundhu sanskrit vaarthaigalai agatri pesavum. edhuthukaatu 'nijam, vishayam, thesiyam'. oru katchiyin kozhgaikaga katturai ezhudhuvadhaal neengal unmaikku kurudaraga pattirukireergal, vizhithu kollungal nanbare

Related Posts Plugin for WordPress, Blogger...