Thursday, June 5, 2014

ஸ்டாம்புச் சித்தரும் தமிழ்ச் சித்தர் கலைஞரும்!

கலைஞர் என்பவர் திமுகவினரைப் பொறுத்தவரை வெறும் தலைவர் மட்டுமல்ல, குடும்பப் பெரியவர்.  சின்ன வயதில் ”பிரச்சினைகள் எதாவது இருந்தா அந்த மனுசன் படத்தைப் பார்த்தா போதும்.  நமக்கு புத்துணர்ச்சி வந்துரும்,” என அப்பா சொல்வார்.  கலைஞரை அப்பாவுக்குப் பிடிக்கும், அதனால் எனக்கும் பிடிக்கும் என்ற அளவில் மட்டுமே அரசியல் ஞானம் இருந்த காலம் அது.  அதன்பிறகு கலைஞர் கடந்து வந்த பாதைகளை தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தபோதுதான் அப்பாவின் வார்த்தைகளுக்கான முழு அர்த்தமும் புரிந்தது.  கலைஞரை சென்ற ஆண்டு நேரில் சந்தித்தபோது அப்பாவின் வார்த்தைகளை வாழ்ந்து பார்த்த பாக்கியவானாகவும் ஆனேன்!

கலைஞர் மீதான எனது அன்பு மிகவும் சுயநலமான ஒன்று.  நான் அரசியலில் இல்லை, எனக்கு அவரால் தனிப்பட்ட முறையில் எந்த பிரதிபலனும் கிடைத்ததும் இல்லை, இனியும் கிடைக்க நான் எதிர்பார்க்கவும் இல்லை எனும்போது அது என்ன சுயநலம்?  பொதுவாகவே, ஏதேனும் பிரச்சினை, சிக்கல் என்றால் உடனே சோர்ந்து உட்காரும் பழக்கம் எனக்கு உண்டு.  நான் சோர்வுறும் போதெல்லாம் ஏதாவது ஒரு வகையில் கலைஞர் என்னை தூக்கி விடுவார்.  அண்ணா சொன்னதைப் போல, கலைஞருக்கு தண்டவாளமும் ஒன்றுதான், ஆட்சிக்கட்டிலும் ஒன்றுதான்.  தமிழகத்தில் எம்.ஜி.ஆர் என்ற ராட்சத பலத்திற்கு முன்னால் கலைஞரைத் தவிர எவர் அரசியல் செய்திருந்தாலும் எதிர்கட்சி என்பதே இல்லாமல் காணாமல் போயிருக்கும்.  நல்லாட்சி செய்திருப்பார், மக்கள் மனசாட்சியே இல்லாமல் தோல்வியைக் கொடுப்பார்கள்.  தேர்தல் முடிவு வெளிவரும் நாள் அதைப்பற்றி பேசுவார்.  அடுத்த நாள் அதே மிடுக்கு, அதே துடிப்புடன் எதிர்கட்சித்தலைவராக தொடையைத் தட்டியபடி கோதாவில் இறங்கிவிடுவார்.  விளையாட்டில் வெற்றியை விரும்புகின்றவனாக இருக்கும் வரை தான், விளையாட்டின் வெற்றி-தோல்விகள் நம்மை பாதிக்கும்.  விளையாட்டையே விரும்புகின்றன்வனை அதில் ஏற்படும் வெற்றித் தோல்விகள் கொஞ்சம் கூட பாதிக்காது என எனக்குக் கற்றுக்கொடுத்தவர் கலைஞர். இதைவிட ஒரு நல்ல பாடத்தை எந்த அரசியல்வாதி, எந்த தத்துவஞானி, எந்த இறைத்தூதர் உலகுக்கு தந்திருக்கிறார்?  கலைஞரை ரசிப்பதற்கான என் சுயநலம் அவர் எனக்குத் தந்த இந்தப் பாடம் தான்.

அரசியல்-இலக்கியம்-சினிமா-பேச்சு என சகலத்திலும் சித்தராக இருக்கும் கலைஞரை, சாதாரண ஸ்டாம்புச் சித்தரான நான் சென்ற ஆண்டு சந்தித்த நிமிடங்கள், போதிமரத்துடன் சித்தார்த்தன் உரையாடிய நிமிடங்கள்.  பொறியியல் படித்தபின் பொறியியல் சார்ந்த வேலையில் கொஞ்ச காலம், பின்னர் அனிமேஷன் துறையில் கொஞ்ச காலம், பிறகு தொழில் முனைவோராக கொஞ்ச காலம் என காற்றடித்த திசையில் பறந்துகொண்டிருந்த வாழ்க்கை, கலைஞருடனான சந்திப்பிற்குப் பிறகு, போகும் வழி அறிந்து போகும் மோட்டார் வாகனமாக மாறிவிட்டது.  

ஒருவழியாக எழுத்துத் துறையில் வேலை, சிறுகதைத் தொகுப்பு, சினிமா வசனம் அடுத்ததடுத்து விளையாட என்னை தயார்படுத்திய சந்திப்பு அதுதான்.  மன உறுதிக்கான விதை கலைஞருடனான 20நிமிட சந்திப்பில் தான் தூவப்பட்டது.  அதற்கு நீரூற்றி வளர்த்தவர்கள், கலைஞர் மீதான வன்மத்தை என் மீதும் தூவிய வசவாளர்கள். கலைஞர் ஆக்கபூர்வமாக என்னை பாதித்தார் என்றால், இவர்கள் என்னை பாதிக்கவேண்டும் என நினைத்துச் செய்த எல்லாவற்றையும் கலைஞரைப் போல நான் ஆக்கபூர்வமாக மாற்றிக்கொண்டேன். 
  
நான் இளைஞர்களிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  கலைஞரை வெறும் அரசியல்வாதியாகப் பார்க்காதீர்கள்.  அவர் ஆகச்சிறந்த உதாரண மனிதர்.  மகள் சிறையில் இருக்கும் சமயங்களிலும் அவரால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலகலப்பாக உரையாட முடியும்.  91 வயதிலும் கட்சி அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய முடியும்.  இன்றளவும் ஜெயலலிதாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் உடனுக்குடன் பதில் அளிக்க முடியும். “முகநூலில் வரும் எந்த பின்னூட்டத்தையும் அழிக்காதீர்கள்.  அத்தனையும் என் பார்வைக்கு வர வேண்டும்” என தனது முகநூல் பக்கத்தை நிர்வகிக்கும் ஆட்களிடம் சொல்ல முடியும்.  எத்தனையோ தரம் தாழ்ந்த பின்னூட்டங்களை நாகரீகமற்ற மிருகக் கூட்டம் பதிந்தாலும், தொடர்ந்து முகநூலில் இயங்க முடியும்.  அந்தந்த பிரச்சினை அந்தந்த நிமிடங்கள் மட்டுமே அவரை பாதிக்கும். அந்த பிரச்சினைக்கான தீர்வை நோக்கித்தான் அவர் அணுகுமுறை இருக்குமேயொழிய, இதுவரை எந்தப் பிரச்சினையும் அவரை பின்னுக்கு இழுத்ததோ, தேங்க வைத்ததோ இல்லை.  அவரைப் போல நம்மால் அலுவலகத்தில், தொழில் வாழ்க்கையில் இயங்க முடிந்தால் எப்படியொரு அபரிமிதமான வளர்ச்சி நமக்கு இருக்கும் என நினைத்துப் பாருங்கள். 

இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது, நக்கீரன் சின்னக்குத்தூசி அறக்கட்டளைக்கான விருது என் பெரியார் ver2.0 கட்டுரைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நற்செய்தி வந்து சேர்ந்துள்ளது.  விருது கிடைத்ததில் பன்மடங்கு மகிழ்ச்சி.  ஒராண்டுக்கு முன், கலைஞரை சந்திக்கும் முன் விருதும், பாராட்டும் மட்டுமே நோக்கமாக இருந்தது.  ஆனால் இப்போது விருதுகளும், வெற்றிகளிலும் மகிழ்ச்சி என்றாலும் கூட, அவை மட்டுமே என் இலக்கல்ல.  விளையாடுவதுதான் என் இலக்கு.  விளையாட்டில் பங்குபெறுவதுதான் நோக்கம். விளையாட்டில் வெற்றி பெறுவது மட்டுமே வெற்றி அல்ல, விளையாட்டே வெற்றிதான்!  கலைஞரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது அதைத்தான்.  விளையாடுவதற்காக விளையாடுகின்றவர்களின் வாழ்க்கையில் இருந்து, எந்தச் சூழலும், பிரச்சினையும், சிக்கலும் மகிழ்ச்சியைப் பறித்துவிட முடியாது.  கலைஞரின் ஆயுளுக்கும் அதுதான் காரணம்.  தொடர்ந்து விளையாடுவோம்!  என் தலைவனுக்கு, உதாரண மனிதனுக்கு, விளையாடு என என்னை விரட்டியவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-டான் அசோக்
Related Posts Plugin for WordPress, Blogger...