Sunday, May 25, 2014

பத்து வரிகளில் கோச்சடையான் விமர்சனம் - டான் அசோக்

1) கமல் என்ன செய்தாலும் புதுமுயற்சி எனப் பாராட்டுவதும், ரஜினி தப்பித்தவறி ஏதாவது செய்துவிட்டால் கேலியும், கிண்டலும் செய்வதும் ஏன் எனத் தெரியவில்லை.  மேக்கப் என்ற பெயரில் மாவுக்கலவையை முகத்தில் பூசிக்கொண்டு, சின்ன உடலில் பெரிய தலையோடு நடிப்பது புதிய முயற்சி என்றால், கொஞ்சம் எசக்குபிசக்காக, தொழில்நுட்ப ரீதியில் ரொம்பவே மொக்கையாக இருந்தாலும், கோச்சடையானில் ரஜினி செய்திருக்கும் motion capture முயற்சியை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.  

2) சுல்தான் துவங்கியபோதே, "இந்தப் பொண்ணுக்கு ஒன்னுமே தெரியல.  தேவையில்லாம கிளம்பி வந்து உயிர எடுக்குது," என சவுந்தர்யாவைப் பற்றி அனிமேஷன் துறையில் விஷயமறிந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். (அந்தத்துறையில் இருந்தவன் என்ற முறையில் எனக்கும் இந்தச் செய்தி வந்தது.)  பிறகு சுல்தான் நிறுத்தப்பட்டதும், அவசர அவசரமாக கே.எஸ்.ரவிகுமார் உள்ளே கொண்டு வரப்பட்டதும் ஏன் என்பது கோச்சடையான் பார்க்கும்போது அப்பட்டமாகத் தெரிந்தது.  கோச்சடையானை ரஜினி, ரவிகுமார், ரெஹ்மான் என மூன்று 'R'கள் படைதான் தூக்கி நிறுத்துகிறது.

3)ஏகப்பட்ட பாடல்களை சொருகியதற்குப் பதிலாக அனிமேஷனில் கவனம் செலுத்தியிருக்கலாம்.  மோஷன் கேப்சர் என்றாலும் அனிமேட்டர்களை வைத்து கொஞ்சம் அனிமேட் செய்தால்தான் படம் உயிர்பெற்று முழுமை அடையும்.  அல்லது புவி ஈர்ப்பு விசையே இல்லாததைப்போல எல்லா பொருட்களும் திரையில் காற்றில் மிதப்பதைப் போலத்தான் நகரும். மேனுவலாக அனிமேட் செய்தார்களா எனத் தெரியவில்லை.  ஆனால் கோச்சடையானில் அனிமேஷனுக்கான மெனெக்கெடல் சுத்தமாக இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.  தொழில்நுட்ப ரீதியாக நிறைய குறைகள் இருந்தாலும், முன்னரே சொன்னதைப் போல புதிய முயற்சி, முதல் முயற்சி, எனவே வாழ்த்துக்கள்!


4) தீபிகா படுகோனே முகத்தையெல்லாம் அனிமேஷனில் பார்க்கச் சகிக்கவில்லை.  வேறு நடிகையையேனும் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  மற்றபடி ஆதி, நாசர், ரஜினி, ஷோபனா ஆகியோர் அழகாகப் பொருந்துகிறார்கள்.  மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை பொம்மைப் படம் என கிண்டல் செய்பவர்கள் இப்போதைக்கு கிண்டல் செய்துகொள்ளுங்கள்.  வெகுவிரைவில், மறைந்த நடிகர்களை எல்லாம் உங்கள் முன் அப்படியே கொண்டுவந்து நிறுத்தப்போவது இந்த தொழில்நுட்பம் தான்.  கோச்சடையானில் வரும் நாகேஷ் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்.  இன்னும் சில வருடங்களில் மிக தத்ரூபமாக இந்த தொழில்நுட்பம் சாத்தியப்படும்போது பலன்கள் அட்டகாசமாக இருக்கும். Live action எனப்படும் சாதாரண திரைப்படங்களிலேயே சிவாஜி, நாகேஷ் போன்ற நடிகர்களை சொருக முடியும். முடிந்தால் 'dawn of the planet of the apes' படத்தின் motion capture trailer பாருங்கள்.  மோஷன் கேப்சரின் உச்சகட்ட விஸ்வரூபம் இப்போதைக்கு அதுதான்.

5) கதை நன்றாக இருக்கிறது.  வசனங்களும் அருமை. காட்சிகளில் மனம் ஒன்றாததால் வசனங்கள் தான் நம்மை படத்தில் ஒன்ற வைக்கிறது.  குறிப்பாக ரஜினி, நாசர் ஆகியோரின் குரல்கள்!  அட்டகாசம்!

6) பொம்மைப்படம் என ஏளனமாகப் பார்த்தாலும், நிஜம் போன்ற உணர்வை கே.எஸ்.ரவிகுமாரின் வசனங்கள் தந்துவிடுகின்றன, கோச்சடையான் கொல்லப்படும்போது நமக்கு வரும் வருத்தம்தான் படத்தின் வெற்றி.  சேனா ரஜினி எதற்காக கடைசி காட்சியில் எல்லாம் முடிந்தபின் வருகிறார் எனத் தெரியவில்லை!  எல்லாம் முடியும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு பொறுமையாக வந்ததைப் போல இருந்தது.  வராமலே இருந்திருக்கலாம்!

7) ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை அபாரம்.  பாடல்களில் சில, அவரது பழைய பாடல்களை நினைவுபடுத்துகின்றன.  தெனாலியில் வரும் 'அத்தினி சித்தினி' பாடலில் வரும் மெட்டு கூட அப்படியே ஒரு பாடலில் வருகிறது.

8) தளபதி படத்தில் வரும் 'யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே' பாடலில் ரஜினி ஒரு கெட்டப்பில் வருவார். கோச்சடையான் கெட்டப் அதைத்தான் நினைவுபடுத்தியது.  கூடவே ஷோபனாவும் வருவது வேண்டுமென்றே தளபதியை நினைவில் வைத்து செய்தார்களா எனத் தெரியவில்லை.  ஆனால் நன்றாக இருக்கிறது.

9) நிறைய எடுத்துவிட்டு பிறகு கத்தரித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.  சரத்குமாரை பாதியில் காணவில்லை.  கல்யாணம் ஆனால் போதும் பாதி கதையில் ஓடிவிட்டார்.  சட்டசபை வேலை எதுவும் வந்துவிட்டதோ என்னவோ!

10) மொத்தத்தில் ஆகச்சிறந்த படமெல்லாம் இல்லை என்றாலும் மொக்கைப்படமும் இல்லை.  கேலி கிண்டல்களை எல்லாம் உடைத்து நல்ல பொழுதுபோக்கு படமாகத்தான் வெளிவந்திருக்கிறது கோச்சடையான். கண்டிப்பாக அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். பார்க்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...