Tuesday, April 22, 2014

திமுகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? - நக்கீரன் கட்டுரை- டான் அசோக். (unedited version)

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இவ்வளவு சிக்கலான, இவ்வளவு சுவாரசியமான ஒரு சூழ்நிலை இதுவரை ஏற்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. இந்திய அரசியல் படுகுழப்பம் நிறைந்ததாக இருந்த நேரங்களில் கூட, யாரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பது, பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் யார் என்பதில் வாக்காளர்கள் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறார்கள். மிசா கொடுமைகளுக்குப் பின்பும் இந்திராகாந்தியைப் பிரதமராக்கியது, தமிழக வாக்கரசியலில் எல்லாம்வல்லவராக அறியப்பட்ட எம்.ஜி.ஆரின் அதிமுகவையே நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்தது, தடுமாறிக்கொண்டிருந்த நாடாளுமன்றத்திற்கு நிலையான அரசு தேவையென்ற சூழ்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை ஏகபோகமாகத் தேர்ந்தெடுத்தது என இந்திய-தமிழக மக்களின் மனத்தெளிவை எடுத்துரைக்கும் உதாரணங்கள் ஏராளம். ஆனால் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், யார் பிரதமராகத் தகுதியுள்ளவர் என்பது குறித்தும், மக்களுக்கு ஒருமித்தக் கருத்து ஏதும் நிலவவில்லை என்பதைத்தான் குழப்பமான கருத்துக்கணிப்புகளும், முன்னுக்குப் பின் முரணான சமூகவலைதள விவாதங்களும் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

ஒருபுறம் தமிழர்களின் முக்கியமான பிரச்சினைகளில் எல்லாம் பாராமுகமாக இருப்பதோடு, எதிரியாகவே பல நேரங்களில் செயல்படும் காங்கிரஸ். மறுபுறம், குஜராத் கலவரங்களின் போது நீரோவைப் போல இருந்தார்என உச்சநீதிமன்றத்தால் வர்ணிக்கப்பட்ட தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான மோடி. ஈழம் மற்றும் தமிழர்விரோத நடவடிக்கைகளால் காங்கிரஸ் மீது ஒவ்வாமை என்றால், இயல்பிலேயே மதச்சார்பு அரசியலின் மீது வெறுப்போடும், மதநல்லிணக்கத்தின் மீது ஈர்ப்போடும் இருக்கும் தமிழக மக்களுக்கு, பாஜக மீது ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பில்லை! ஒருவேளை காங்கிரஸ் மீதான வெறுப்பில் பாஜக தான் அரியணை ஏற வேண்டும் என முடிவு செய்தாலே கூட, அந்த அதிகாரத்தையும் திமுக அல்லது அதிமுக மூலம்தான், அதாவது கூட்டணியின் மூலம்தான் கொடுப்பார்களேயொழிய, தமிழக பாஜகவிடம் நேரிடையாக அதிகாரத்தை வழங்கமாட்டார்கள். காங்கிரஸை தோற்கடிப்பதை பிரதான கடமையாகக் கொண்டிருக்கும் மனசாட்சியுள்ள தமிழக ஈழ ஆதரவாளர்கள் யாரும் காங்கிரசிற்கு மாற்றாக, ராஜபக்சேவின் செயலாளர் போலச் செயல்படும் சுப்பிரமணியசாமி முக்கியத்தலைவராக இருக்கும் பாஜகவை ஆதரிக்கமாட்டார்கள். மேலும் அணு உலை, மீனவர் பிரச்சினை என தமிழர்களின் தலைவலிகள் ஒவ்வொன்றிலும் பாஜகவும்-காங்கிரசும் ஓரணியில் நிற்பதும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று மாற்று இல்லை என்பதற்கான சான்றுகள். பின் ஏன் வைகோ பாஜக கூட்டணியில் இருக்கிறார் என்ற கேள்விக்கான பதிலை நாம் அவர் மனசாட்சிக்கே விட்டுவிடலாம்!
மேலும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீதும் பாஜக மீதும் இந்திய மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையையும், ஈடுபாடின்மையையும் கணித்திருப்பதால்தான் மம்தா பானர்ஜி, மாயாவதி, முலாயம் சிங், ஜெயலலிதா, நிதிஷ்குமார் என, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமராக வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இத்தனை மாநிலக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. அவர்களும் அதற்கேற்ப தங்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். தேசியக் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காமல் பல மாநிலக்கட்சிகள் தேர்தலைச் சந்திக்கும் சூட்சமமும் அதுதான்.

இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலான சூழலில் தமிழக மக்கள் யாரை ஆதரிப்பார்கள், யாரை ஆதரித்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது, ஏன் ஆதரிக்கவேண்டும் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள் என்றெல்லாம் அதற்கான ஆதாரபூர்வமான விடைகள் தான் அடுத்தடுத்த பத்திகளில் இருக்கிறது. இப்போது தமிழக மக்களின் முன் இருக்கும் இரண்டே முக்கியத் தெரிவுகள் அதிமுகவும், திமுகவும் என்ற நிலையில், இவற்றில் எந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் மத்திய அரசில் அங்கம் வகிப்பது தமிழகத்திற்கு கொள்கை அளவிலும், உட்கட்டமைப்பு அளவிலும், நிர்வாக அளவிலும் நன்மை பயக்கும் எனப் பார்ப்பது அவசியம். அதன்பொருட்டு கொள்கைசார் அரசியல், நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள் என இரண்டாகப் பிரித்து புள்ளிவிவரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த இரண்டு கட்சிகளின் கடந்தகால மற்றும் நிகழ்கால செயல்பாடுகளைப் பார்க்கலாம்.

கொள்கைசார் அரசியல்:

இந்தியா போன்ற, பல தேசிய இனங்களும், சாதியினரும், மொழியினரும் வசிக்கும் ஒரு நாட்டில் நிர்வாக அரசியலைவிட கொள்கைசார் அரசியலுக்கு எப்போதுமே அதீத முக்கியத்துவம் உண்டு. உள்நாட்டுச் சிக்கல்கள் அங்கங்கே அவ்வப்போது தலைதூக்கினாலும், இட ஒதுக்கீடு, பன்மொழிக் கொள்கை போன்ற கொள்கைசார் அரசியல் விஷயங்கள் இந்தியாவில் சரியாக இருப்பதனால்தான் இவ்வளவு சிக்கல்களுக்கு இடையேயும் இந்திய ஒருமைப்பாட்டை குலையாமல் காக்க முடிகிறது.

இந்திய அரசின் மொழிக்கொள்கையை மாற்றி இந்தி அல்லாத பிற மொழியினரின் உரிமைகளைப் பாதுகாத்தது,  இட ஒதுக்கீட்டுக்கோரிக்கையை தீவிரமாக முன்னெடுத்து வி.பி.சிங் அரசின் மூலம் சாதித்தது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியதில் முன்னோடியாகத் திகழ்ந்து இன்று பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து குரல் கொடுப்பது என ஏராளமான வகைகளில் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் இந்திய-தமிழக நலன் சார்ந்த ஆக்கபூர்வ மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது திமுக. ஈழப்பிரச்சினையிலும் ஆரம்பத்தில் இருந்தே கொண்ட கொள்கையில் மாறாதிருக்கும் பெரிய கட்சியும் திமுகதான். 1991ல் ராஜீவ் கொலைக்காக திமுகவை எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டு குற்றம்சாட்டியதும், அதன் தொடர்ச்சியாக திமுக தேர்தலில் படுதோல்வி அடைந்ததும் வரலாறு. ஆனால், அதன்பின்னும் கூட திமுக தொடர்ந்து ஈழ ஆதரவு நிலையிலே இருக்கிறதேயொழிய அதை மாற்றிக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாது, தொடர்ந்து மத்திய அரசை தன் அதிகார எல்லைக்குட்பட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட நிர்பந்தித்து வருவதையும் திமுக கைவிடவில்லை. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால் 2ஜி போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தன் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டபோதும்கூட காங்கிரஸ் கூட்டணியில் நீடித்த திமுக, இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக உப்புச்சப்பின்றி நடந்துகொண்டதாலேயே வெளியேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் விடுதலைப்புலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி சாதித்தது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நீதிமன்றத்தின் மூலம் சண்டையிட்டு மத்திய அரசு இதழில் வெளியிடச் செய்தது, கச்சத்தீவுக்காக வழக்கு போட்டது என அதிமுக அடிக்கடி பறைசாற்றும் சாதனைகளையும் சொல்லலாம் என்றாலும், மத்திய அரசுடன் அத்தனை விஷயங்களிலும் நீதிமன்றத்தில் சண்டையிடுவதால் சில தற்காலிக மகிழ்ச்சிகள் ஏட்டளவில் கிடைக்கலாமேயொழிய, மாநிலத்திற்கு எந்த நடைமுறைத் தீர்வும் கிடைத்துவிடாது என்பதே உண்மை. சில விஷயங்களைச் சாதிக்க விட்டுக்கொடுக்கும் அணுகுமுறையும், மிதவாத சாதுர்யமும் அவசியம். தமிழக எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல எம்.ஜி.ஆரும், கலைஞரும் காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுடன் நயமாக நடந்து, ஒவ்வொருமுறையும் தமிழக விவசாயத்திற்கு காவிரிநீரை உறுதி செய்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதே போல ஈழப்பிரச்சினை விவகாரத்தில் அதிமுகவின் கொள்கை முடிவுகள் சமீப காலங்களில் முற்றிலுமாக மாறியிருப்பது மத்திய அரசையே குழப்பி உள்ளது என்பதே உண்மை. நளினிக்கு பரோல் கொடுத்தால் சட்ட ஒழுங்கு கெடும் என நீதிமன்றத்தில் தெரிவித்து பரோலைத் தடுத்த அதே அரசு, சில நாட்களிலேயே நளினியை விடுதலை செய்யப்போவதாக அறிவித்தது பல அதிமுக ஆதரவாளர்களுக்கே அதிர்ச்சியளித்தது. அதேபோல சேது சமுத்திர திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்த அதிமுக, பின்னர் அதற்கு நேர்மாறாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டதும் நாம் அறிந்ததே. ஆக, அதிமுகவின் கொள்கைசார் முடிவுகள் என்றுமே நம்பத்தகுந்தவை அல்ல. இன்று தனி ஈழ வாக்கெடுப்பை தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு 40எம்பிக்கள் கிடைத்தாலும் அதைச் செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனம். தனி ஈழத்தைப் பொறுத்தவரை, தேசிய அளவில் பெரிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருப்பதால், இந்திய அளவில் ஒரு ஒட்டுமொத்த கருத்தியல் மாற்றம் தேவைப்படுகிறது. ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட வெகுசனக் கட்சியான திமுக முன்னெடுத்திருக்கும் டெசோ போன்ற தமிழீழ ஆதரவு அமைப்புகளின் தொடர்பரப்புரைகளினாலும், இந்தியத் தலைவர்களையும், பிறமாநிலத் தலைவர்களையும் அக்கூட்டங்களில் பங்குபெறச் செய்வதினாலும் மட்டுமே பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று ஈழத்தமிழர்களுக்கு சாதகமான காரியங்களை நிறைவேற்ற முடியுமேயொழிய, எடுத்தேன் கவிழ்த்தேன் என வாக்குறுதிகளை அளிப்பது பகல்கனவு மட்டுமே! மேலும் மத்திய அரசுத் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கும் மத்திய அரசின் போக்கை முதல் கட்சியாக முன்னின்று கண்டிப்பதும் திமுக தான். மொத்தத்தில், எப்போதெல்லாம் மத்திய அரசின் செயல்பாடுகள் மாநில மக்களுக்கு விரோதமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் வலுவான எதிர்ப்புக் குரலை மத்தியில் எழுப்பும் முதல் கட்சியாக திமுக இருந்திருக்கிறது.

ஆக எப்படி கூட்டிக்கழித்துப் பார்த்தாலும், மத்திய அரசின் கொள்கைசார் முடிவுகளை தமிழகத்திற்கு ஆதரவாக மாற்றிய வரலாறும், மாற்றும் நிகழ்காலமும், தமிழகத்தின் பிரதிநிதியாக மத்தியில் திமுக இருக்கவேண்டிய அத்தியாவசியத்தையே உணர்த்துகிறது.


நிர்வாக மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள்:

1969ல் இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் நடந்த தேசியவளர்ச்சிக்குழு கூட்டத்தில் முதன்முறையாக வங்கிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியவர் கலைஞர். அப்போது பல வட இந்தியத்தலைவர்களால் கிண்டலடிக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை ஒரே ஆண்டில் இந்திராகாந்தி நிறைவேற்றினார்.  அடுத்து 1970ல் நடந்த தேசியவளர்ச்சிக் கூட்டத்தில், சேலம் உருக்காலையையும் அதே திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்றும், இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக திட்டத்தையே ஏற்க முடியாது என்றும் தீர்மானமாக வாதாடியதன் பலனாக மத்திய அரசு அடுத்தமாதமே சேலத்தில் உருக்காலை அமைக்க ஒப்புதல் அளித்தது. இது தொடங்கி, மத்திய அரசுடன் மோத வேண்டிய இடத்தில் மோதி, பணிய வேண்டிய இடத்தில் பணிந்து, தந்திரமாக நடக்க வேண்டிய இடத்தில் தந்திரமாக நடந்து தமிழகத்துக்கு திமுக மத்திய அமைச்சர்கள் கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியில் மத்திய அரசை வற்புறுத்தி, பெருவாரியான தொழிற்சாலை முதலீடுகளை திரு.முரசொலிமாறனின் மூலம் தமிழகத்திற்கு கொணர்ந்ததும், அதன் தொடர்ச்சியாக தொழில்துறை அசுரவளர்ச்சி கண்டதும், வேலைவாய்ப்புகள் பெருகியதும் உதாரணங்கள். தமிழகத்தில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சீரியமுயற்சியால் நிறைவேறிய ஒன்று. சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்பேசியில் பேச
எஸ்.டி.டி கட்டணம் என்றிருந்த நிலையை மாற்றி உள்ளூர் கட்டணம் ஆக்கியது, இந்தியா முழுதும் பேச ஒருரூபாய் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது என திரு.தயாநிதிமாறனின் சாதனைகளோடு, பணக்காரர்கள் மட்டுமே செல்பேசி பயன்படுத்த முடியும் என்ற நிலையை மாற்றி, அந்த அத்தியாவசிய சாதனத்தை ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றிஆ.ராசாவின் சாதனைகள் வரை தொலைதொடர்புத் துறையைப் பொருத்தமட்டில் அடுக்கலாம். வாஜ்பாய் அரசில் திமுக பங்குபெற்றபோது உருவான தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித்திட்டம் இன்று இந்தியா முழுதும் பயணத்தை இலகுவாக்கியிருக்கிறது. பின்னர் காங்கிரஸ் அரசிலும் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு, அந்தத் திட்டத்தை இன்னும் அதிக வீரியத்தோடு விரைவுபடுத்தியதும், இன்று இந்தியாவின் மகுடங்களில் ஒன்றாக அதன் தேசிய நெடுஞ்சாலைகள் திகழ்வதும் கண்கூடு.

அதிமுக அமைச்சர்கள், அதிமுக தலைமையின் ஒத்துழையாமைப் பண்பால் மிகச்சொற்ப காலமே மத்திய அமைச்சரவையில் இருந்திருக்கிறார்கள் என்பதால் அதிமுக மற்றும் திமுகவின் தமிழக உட்கட்டமைப்புப் பணிகளை ஒப்பிடுவதன் மூலம், உட்கட்டமைப்பு மீது அந்தந்த கட்சிகளுக்கு இருக்கும் அக்கறையை நாம் அறிந்துகொள்ளலாம். இதற்கு பெரிய ஆராய்ச்சிகளையோ, ஆவணத் தேடல்களையோ மேற்கொள்ளத் தேவையில்லை. அவரவர் வசிக்கும் ஊரில் இருக்கும் பிரதான சாலைகள், பாலங்கள், பூங்காக்கள், தொழிற்சாலைகள் ஆகியவை எந்த ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது, யாரால் கட்டப்பட்டுள்ளது என்பதை அறியமுற்பட்டாலே, அதில் மிகப் பெரும்பான்மையானவை திமுக அரசால் உண்டாக்கப்பட்டவை என்பதை அறியலாம்.

திமுகவின் கொள்கை மற்றும் நிர்வாகசார் பணிகளை நாம் ஆதாரங்களுடன் மேலே பார்த்தாலும் 2ஜி விவகாரங்கள், குடும்ப அரசியல் போன்ற குற்றச்சாட்டுகள் மீதான கேள்விகள் பலருக்கும் எழத்தான் செய்கின்றன. ஆனால் 1,76,000 கோடி என ஆரம்பித்த 2ஜி விவகாரம் பின்னர் 30000கோடி, 200கோடி என சிறுத்துக்கொண்டே வருவதை கவனிக்கும் பாமர மக்கள் கூட 2ஜி என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்ட விவகாரம் என்பதை உணரத்துவங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவை மக்கள் முதல்வராக ஏற்றுக்கொண்டதைப் பார்க்கும்போது இந்தக் கேள்விகள் எல்லாம் அடிபட்டுப் போகின்றன. அழகிரியின் அதிரடி நீக்கத்தின் மூலம் கட்சிக்கட்டுப்பாட்டை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை திமுக உணர்த்தியிருப்பது அதன்மீதான குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளையும் மக்கள் மத்தியில் நீர்த்துப் போகச்செய்திருக்கிறது.

மேலும் தமிழக அளவில் பார்த்தாலும், மத்திய காங்கிரஸ் அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதே அதிருப்தி, திமுக ஆட்சியில் 14% ஆக இருந்த உள்ளூர் உற்பத்தித் திறன், அதிமுக ஆட்சியில் 4% ஆக வீழ்ச்சி அடைந்திருப்பது, ஆட்சிக்கு வந்து 3ஆண்டுகள் ஆகியும் மின்வெட்டை சரி செய்யாததோடு நிலைமையை இன்னும் மோசமாக்கியது போன்ற காரணங்களால் அதிமுகவின் மேலும் பெருமளவில் இருக்கிறது.

திமுகவின் சமீபகால அதிரடி செயல்திட்டங்கள், திருச்சி மாநாட்டில் பிரம்மாண்டமாக மீண்டெழுந்த வேகம், தேசியக் கட்சிகளைக் கறாராகப் புறக்கணித்த உறுதி, 35 வேட்பாளர்களில் 27பேரை புதுமுகங்களாக, இளைஞர்களாக, படித்தவர்களாக தேர்ந்தெடுத்திருப்பது என பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள அத்தனை விஷயங்களின் பின்னும் திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பது சோர்ந்திருக்கும் தமிழகப் பொதுமக்களுக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் தமிழக-தமிழர் விரோத எண்ணங்களை தொடர்ந்து வெளிப்படுத்தும் நபர்களும் சரி, ஊடகங்களும் சரி, திமுக எதிர்ப்பில் ஒன்றாக கைகோர்த்து நிற்பதன் சூட்சமத்தை உணர்ந்துகொண்டாலே தமிழகத்திலும், இந்தியாவிலும் திமுகவின் அத்தியாவசியத் தேவையைப் புரிந்துகொள்ளலாம். ஆக கொள்கைரீதியாகவும் சரி, நிர்வாகரீதியாகவும் சரி, தமிழகத்தின் வருங்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டாலும் சரி, எந்த கோணத்தில் பார்த்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியாக, நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டணியாக, தமிழகத்தை மத்தியில் ஆக்கபூர்வமாக வழிநடத்தும் கூட்டணியாக  திமுக கூட்டணி மட்டுமே இருக்கிறது. தமிழகம் சமீபகாலமாக சந்தித்து வரும் சரிவுகளில் இருந்து அதை மீட்க, திமுக கூட்டணியின் 40 நாடாளுமன்ற வேட்பாளர்களையும் தமிழக மற்றும் பாண்டிச்சேரி பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மட்டுமே ஒரே வழிமுறையாக, மிகச்சரியான வழிமுறையாக இருக்கும்.

-டான் அசோக்
writerdonashok@yahoo.com


4 comments:

sivaje36 said...

எந்த கோணத்தில் பார்த்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியாக, நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டணியாக, தமிழகத்தை மத்தியில் ஆக்கபூர்வமாக வழிநடத்தும் கூட்டணியாக திமுக கூட்டணி மட்டுமே இருக்கிறது. தமிழகம் சமீபகாலமாக சந்தித்து வரும் சரிவுகளில் இருந்து அதை மீட்க, திமுக கூட்டணியின் 40 நாடாளுமன்ற வேட்பாளர்களையும் தமிழக மற்றும் பாண்டிச்சேரி பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மட்டுமே ஒரே வழிமுறையாக, மிகச்சரியான வழிமுறையாக இருக்கும். அப்ப தமிழ்நாடு தற்கொலை பண்ணவேண்டியதுதான்

P.K.K.BABU said...

THE RIGHT POST AT VERY IMPORTANT TIME.THE ARGUMENTS AND ANALYSIS IS SLIGHTLY SIMPLE,BUT VERY EFFECTIVE. I APPRECIATE YOUR EFFORT........... THANK YOU.

hameedu jaman said...

நல்லது

Anonymous said...

Totally wrong analysis. These two parties are erased from TN.Peoples must avoid voting these two parties.

Related Posts Plugin for WordPress, Blogger...