Monday, April 14, 2014

பாராளுமன்றத் தேர்தலும் தமிழகக் கூட்டணிகளும்-டான் அசோக்

தமிழக மக்களின் மனநிலையை சட்டமன்றத் தேர்தல்களில் ஓரளவிற்கு கணித்துவிடலாம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டு வாங்கிய தீபாவளிப் பட்டாசைப் போல கடைசி நொடிவரை வெடிக்குமா வெடிக்காதா என ஒட்டுமொத்த ஊடகங்களையும், அரசியல் விமர்சகர்களையும் குழப்புவதில் கைதேர்ந்தவர்கள் தமிழக மக்கள்.  1977 மற்றும் 1980 நாடாளுமன்றத் தேர்தல்களை மனதில் வைத்துப் பார்த்தால் இது எளிதில் விளங்கும். மிசா காலத்திற்குப் பிறகு நடந்த 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் இந்திரா காந்தி எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருந்தது. தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்து களமிறங்கினார்கள். திமுக, ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்திருந்தது. அந்தத் தேர்தலில் இந்தியா முழுதும் ஜனதாதளம் பெருவாரியாக வென்று ஆட்சி அமைத்தாலும், தமிழகத்தில் பெருவெற்றி பெற்றது இந்திராகாந்தி-எம்.ஜி.ஆர் கூட்டணிதான். திமுகவிற்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இத்தனைக்கும் மிசா அடக்குமுறைகளை எதிர்த்து துணிச்சலாகப் போராடிய ஒரே முதல்வர் அப்போது கருணாநிதி மட்டுமே. 1975ல் காமராசரே கருணாநிதியை ஆதரித்தார் என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அவ்வளவு பெரிய அடக்குமுறைக்குப் பிறகும் இந்திராகாந்தி-எம்.ஜி.ஆர் கூட்டணியை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1977ல் எம்.ஜி.ஆருக்காகத்தான் மக்கள் இந்திரா காந்திக்கு வாக்களித்தார்கள் என்றும் கொள்ள முடியாது. ஏனெனில் 1980ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி-இந்திராகாந்தி கூட்டணி பெருவெற்றி பெற்றதும், எம்.ஜி.ஆர் படுதோல்வி அடைந்தார் என்பதும் வரலாறு. ஒருவேளை இந்திரா காந்தியால் மட்டும்தான் நிலையான ஆட்சி தர முடியும் என 1980ல் கருணாநிதி கணித்ததை தமிழகமக்கள் 1977லேயே கணித்துவிட்டார்களோ என்னவோ!

ஆக நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழக மக்களின் மனநிலையைக் கணிப்பதென்பது முடியாத காரியம். அதனால்தான் கருத்துக்கணிப்புகள் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள் கூட ஒரே போன்ற அலைவரிசையில் இல்லாமல், ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றது. இந்தத் தேர்தலில் இந்தியா முழுவதிலுமே காங்கிரஸ் எதிர்ப்பு அலை இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தமிழகத்தில் எப்போதும் போல இருமுனைப் போட்டி இல்லாத சூழலில், காங்கிரசுக்கு எதிரான அந்த அலை யாருக்கு சாதமாக இருக்கப் போகிறது என்பதுதான் இந்தக் குழப்பத்திற்கு மூலகாரணம். 

வாக்கு சதவிகிதத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த காங்கிரஸ், தமிழக தேர்தல்கள்  அனைத்திலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் முன்னெப்போதுமில்லாத அளவில் எழுந்துள்ள காங்கிரஸ் எதிர்ப்பு அலை, அதை இந்தத் தேர்தலில் உடன்-சேர்ப்பாரின்றி ஆக்கியிருக்கிறது. தொடர்ந்து தமிழர் விரோத விஷயங்களை முன்னெடுத்தது மட்டுமல்லாது, நிர்வாக ரீதியாகவும் தமிழர்களுக்கு காங்கிரஸ் அரசின் மேல் ஒரு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது. வெளிப்படையாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலர் தேர்தலில் நிற்கப் பயப்படுவது அதை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்த கணிப்புகளில் பலருக்கும் பல விஷயங்களில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்ற கருத்தில் மட்டும் ஒட்டுமொத்த தமிழகமும் உடன்பட்டு நிற்கிறது. 

ஜிலேபிக்கு தொட்டுக்கொள்ள சாம்பார் கொடுத்ததைப் போல கொள்கையளவில் சம்பந்தமேயில்லாத பலகட்சிகள் ஒன்றுசேர்ந்திருக்கும் பாஜக கூட்டணியை தமிழக மக்கள் காங்கிரசுக்கு மாற்றாக உணர்வார்களா என்பதில் பல சிக்கல்களும், கேள்விகளும் இருக்கின்றன. இயல்பிலேயே மதச்சார்பு அரசியலின் மீது வெறுப்போடும், மதநல்லிணக்கத்தின் மீது ஈர்ப்போடும் இருப்பவர்கள் தமிழக மக்கள். பெரியாரின், திராவிட இயக்கத்தின் கொள்கைகள் பெரும்பான்மைத் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்த ஒன்று. அதனால்தான் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும், உலகின் ஒரே நாத்திகக் கட்சி என முன்பொருமுறை வர்ணிக்கப்பட்ட திமுகவை ஆட்சியில் அமர்த்த தமிழக மக்களால் முடிந்தது. இச்சூழ்நிலையில் தமிழக வாழ்வியல் சூழலுக்கு முற்றிலும் புதிதான பாஜகவிற்கு தமிழகத்தில் என்ன விதமான நிகழ்காலம் இருக்கிறது என யோசித்தால் ’முற்றிலும் இல்லை’ என்றுதான் சொல்லமுடியும். ஒருவேளை இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு யாருமே தமிழகத்தில் பெரியாரைப் பற்றி பேசவில்லையென்றால், பாஜக கொஞ்சம் தலையெடுக்க முடியுமேயொழிய, மற்றபடி தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக முக்கியத்துவமே இல்லாத இதரக் கட்சியாகத்தான் எந்தக் காலத்திலும் இருக்கும். 

மேலும், காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் எள்ளளவும் வித்தியாசமே கிடையாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. மேலோட்டமாக கவனித்தாலே கூட தமிழர் நலப் பிரச்சினைகளான மீனவர் கொலை, சேதுசமுத்திர திட்டம் முடக்கம், அணு உலை, ஈழப்பிரச்சினை என அனைத்திலும் காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்து ஓரணியில் ஒற்றுமையாக இருப்பதைக் காணமுடியும். ஒருவேளை நாளை பாஜகவே ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் காங்கிரசை விட இன்னும் ஒரு படி அதிகமாகத்தான் பாஜக செயல்படுமேயொழிய மத்திய அரசின் தமிழர் நலன் சார்ந்த கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஏனெனில் ராஜபக்சேவின் அந்தரங்கச் செயலாளர் போலச் செயல்படும் சுப்பிரமணியசாமி பிரதான தலைவராக அங்கம் வகிக்கும் பாஜகவிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஆக காங்கிரஸை முற்றிலும் அழிப்பதுதான் முதன்மை நோக்கம் என்ற கொள்கையுடைய உண்மையான ஈழப்பற்றாளர்கள், தமிழுணர்வாளர்கள் யாரும் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். கருணாநிதியின், ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதங்களை பற்றி மேடைதோறும் முழங்கும் தமிழுணர்வாளர் வைகோ, ஈழத்தமிழர்களின் உயிர்க்காக துடிக்கும் வைகோ, இஸ்லாமியர்களின் படுகொலைக் குற்றச்சாட்டின் கரை படிந்திருக்கும் பாஜகவின் கூட்டணியில் அழையா விருந்தாளியாக ஏன் இருக்கிறார் என்பதையும், அது சந்தர்ப்பவாதமில்லாமல் என்ன வாதம் என்பதையும் அவர்தான் சொல்லவேண்டும்! 

பாஜக இந்தத் தேர்தலில் ஒரு வேடிக்கையான குழப்பத்தைச் சந்தித்து மீண்டதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் வேட்பாளர் வாஜ்பாயா, அத்வானியா என்ற பிரச்சினை முன்பு எழுந்தபோது பெருவாரியானவர்களின் தேர்வு வாஜ்பாய். ஏனெனில் பாபர் மசூதி இடிப்பில் முக்கியப் பங்காற்றிய அத்வானியுடன் ஒப்பிடும்போது வாஜ்பாய் மிதவாதியாகத் தெரிந்தார். மேலும் வெகுஜன மக்களின் ஆதரவைப் பெற அன்று வாஜ்பாய் என்ற மிதவாத முகம் பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்சிற்கும் தேவைப்பட்டது. ஆனால் அத்வானியா, மோடியா என்ற கேள்வி எழுந்தபோது, ஒப்பீட்டளவில் அத்வானியை மிதவாதியாகக் கொள்ளலாம் என்றாலும் பாஜகவினர் ஒட்டுமொத்தமாக மோடிக்கு ஆதரவளித்து அவரைப் பிரதமர் வேட்பாளராக்கியதுதான் வேடிக்கை.  குஜராத் கோரப் படுகொலைகளுக்குப் பிறகும், “குஜராத் கலவரங்கள் நிகழ்ந்த போது நீரோ போல இருந்தார் மோடி,” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்த பிறகும் கூட குஜராத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் மூலம், இந்து பயங்கரவாத முகம் இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மாயத் தோற்றத்தை மோடி உருவாக்கியிருப்பதே பாஜகவின் முன்னுக்குப் பின் முரணான முடிவுக்குக் காரணம்.     

இதன் பின்னணியில் வலிந்து வலிந்து உருவாக்கப்பட்ட மோடி அலை இன்று கேஜ்ரிவாலின் வரவால் வெகுவாகத் தளர்ந்துள்ளது. மேலும் இளம்பெண் ஒருவரை உளவுத்துறையை வைத்து பின்தொடர்ந்தது, ரிலையன்சுடனான உறவு, வரலாற்று நிகழ்வுகளை சீமான் பாணியில் மாற்றிமாற்றி தவறாகப் பேசியது என இந்திய அளவிலேயே மோடியின் பெயர் சரிவைச் சந்திந்துள்ளது. மோடியை மிகப்பெரிய நிர்வாகியாகக் காட்ட எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் வலிந்து திணிக்கப்பட்டவை என்பதையும் மக்கள் பெருவாரியாக உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஆக இந்திய அளவிலேயே ஆட்டம் காண ஆரம்பித்திருக்கும் மோடி அலை தமிழகத்தில் ஒரு மெல்லிய நீரோடை அளவிற்குக் கூட வேகம் காட்டாது என்பதுதான் நிதர்சனம்! இந்த, அலையே இல்லாத அலையை நம்பி தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் எதுவுமே இல்லாத பாஜகவின் பக்கம் கரை ஒதுங்கியிருக்கும் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் போன்றோரின் நிலை தேர்தலுக்குப் பிறகு இன்னும் மோசமாக ஆகும் என்பதுதான் உண்மை.  

”கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணியில் தானே இருந்தார்கள்! சென்ற மாதம் கூட கம்யூனிஸ்ட்டுகளின் டெல்லி தலைவர்கள் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி பற்றி சிரித்த முகத்துடன் பேட்டி அளித்தார்களே! திடீரென என்ன ஆனது? ஏன் வெளியேற்றப்பட்டார்கள்?” என்பதைப்பற்றியெல்லாம் யாருக்குமே இல்லாத  அக்கறை நமக்கு எதற்கு என்றாலும், தேர்தலுக்குப் பின் பாஜகவிற்கு ஆதரவளிக்கும் எண்ணம் இருப்பதாலேயே கம்யூனிஸ்டுகளை ஜெயலலிதா வெளியேற்றியுள்ளார் என்று நிலவும் கருத்தை மறுப்பதற்கில்லை. ஏனெனில் தான் பேசும் எந்த பொதுக்கூட்டத்திலும் ஜெயலலிதா மோடியையோ, பாஜகவையோ கொஞ்சம் கூட விமர்சிக்கவில்லை. எதிர்ப்பு அரசியல் அனைத்தையும் காங்கிரசின் மீதே செலுத்துகிறார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் நடிகர் செந்தில், “மோடியைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என மேலிடம் கண்டிப்பாகச் சொல்லியுள்ளது,” என ஒரு கூட்டத்தில் உண்மையை உளறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜகவையும், காங்கிரசையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் தனித்து நிற்கும் கம்யூனிஸ்ட்டுகளின், “கூட்டணி என்றால் அதிமுகவோடு. இல்லையென்றால் தனியாக!” என்ற கொள்கை மறைமுகமாக வாக்குகளைப் பிரித்து அதிமுகவிற்கும், அதன் மூலம் பாஜகவிற்கும் நன்மை செய்யப்போகிறது என்பதுதான் உண்மை. எதிர்பார்க்காத நேரத்தில் தலையில் பலமாக அடித்தால் கொஞ்ச நேரத்திற்கு என்ன ஏது என்றே புரியாதல்லவா, அதுபோன்ற நிலையில் தான் தனித்து நிற்கும் முடிவை கம்யூனிஸ்ட்டுகள் எடுத்திருக்கிறார்கள்.  

தேர்தல் அறிக்கை சார்ந்த நகைச்சுவைக்கு அதிமுகவில் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. மூன்றே மாதத்தில் மின்வெட்டை நீக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக, மூன்றாண்டுகள் ஆனபின்னும் இன்னமும் திமுகவை குறை சொல்கிறதேயொழிய உருப்படியாக எதும் செய்ததாகத் தகவல் இல்லை.  பற்றாக்குறைக்கு திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 2 மணிநேர மின்வெட்டு, அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத 18 மணிநேர மின்வெட்டாக பரிணாமவளர்ச்சி பெற்றுள்ளது. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதை தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அதிமுக, பிறகு நீதிமன்றத்தில் ராமர் பால கதைக்கு ஆதரவாகப் பேசியதை யாரும் மறக்க முடியாது. எல்லா நகைச்சுவைக்கும் மகுடம் வைத்த்தைப்போல தற்போது தனி ஈழம் அமைப்பதை தேர்தல் வாக்குறுதியாக சொல்லிக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இதில் உள்ள நகைமுரணை அலச ஆரம்பித்தால் ஒரு பெரிய நூலகமே அமைக்கலாம். இன்று இந்திய அரசு தனி ஈழத்திற்கு எதிராக இவ்வளவு உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதற்குக் காரணமானவர்களில் ஜெயலலிதாவிற்கு மிகவும் முக்கியமான பங்கு உண்டு. 2009ல் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது கூட “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்,” எனச் சாதாரணமாகச் சொன்னவர், இன்று எல்லாம் முடிந்தபின் தனி ஈழம் அமைக்கிறேன் எனக் கிளம்பியிருப்பது வேடிக்கை என்றால், அதைவிட வேடிக்கை 40 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சியால் பெரும்பான்மை இந்திய எம்பிக்களின் ஆதரவைப் பெற்று தனி ஈழத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தையே முடிவெடுக்க வைக்க முடியும் என்பது! ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குனரிடம் நடிக்க வாய்ப்பு கேட்கும் ஒருவர் “ஸ்ட்ரெயிட்டா ஹீரோ ஆகனும் சார்,” என்பார். அதைப்போலத்தான் இருக்கிறது ஜெயலலிதாவின் இந்த வாக்குறுதியும். 

இதுப்போன்ற அதிபயங்கர, பிரம்மாண்ட வாக்குறுதிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் மத்திய அரசுக்கும், அதிமுகவிற்கும் எந்தக் காலத்திலுமே சுமூக உறவு இருந்ததில்லை என்பதும், எந்தக் காலத்திலும் ஆக்கபூர்வமான எதையுமே தமிழகத்திற்கு அதிமுகவால் மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர முடிந்ததில்லை என்பதும் அதிமுகவின் வாக்குறுதிகளை நகைப்போடு நோக்க முக்கியக் காரணங்கள். பாஜகவுடனான கூட்டணியை அதிமுக வாபஸ் வாங்கிய மறுநாள், நாகரீகத்திற்குப் பெயர்போன வாஜ்பாயே “இன்று இரவு நான் நிம்மதியாகத் தூங்குவேன்,” என வெளிப்படையாகச் சொன்னதை யாரும் மறக்கமுடியாது. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்து தமிழகத்திற்கு நன்மைகளைப் பெறுவதோ, மூன்றாம் அணிக்குத் தலைமை வகித்து கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து வழிநடத்துவதோ அதிமுகவால் எந்தக் காலத்திலும் முடியாத ஒன்று. அதிமுகவின் இயல்பிலேயே ’ஒன்று சேர்ந்து ஆக்கபூர்வமாக இயங்குதல்’ என்ற பண்பு இல்லவே இல்லை என்பதைத்தான் அதன் கூட்டணி வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குத் தெரிவிக்கிறது. அதனால், அதிமுகவிற்கு வாக்களித்தால் தனி ஈழம் அமையும், அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்திற்கு நன்மைகள் மழைபோலக் கொட்டும் போன்ற வாக்குறுதிகள் எல்லாம் ”இந்த தாயத்தைக் கட்டினால் இரவு பண்ணிரண்டு மணிக்குக் கூட சுடுகாட்டுக்குப் போகலாம்,” எனச் சொல்லி விற்பவர்களின் வாக்குறுதியை ஒத்தே இருக்கிறது. ஏனென்றால் பாலுக்கும், பேருந்துக்கும் தங்கள் வருமானத்தில் பாதியை செலவழிக்கும் தமிழக மக்கள், ஒருநாளைக்கு பதினெட்டுமணிநேர மின்வெட்டை அனுபவிக்கும் தமிழக மக்கள்,  தொழிற்வளர்ச்சி அதலபாதாளத்திற்குப் போனதால் வேலையிழந்து தவிக்கும் தமிழக மக்கள், உள்நாட்டு உற்பத்தி குறைந்த்தால் தெருவுக்கு வந்த தமிழக முதலாளிகள், எதற்காக இரவு பண்ணிரண்டு மணிக்கு சுடுகாட்டுக்குச் செல்ல விரும்பப் போகிறார்கள்?

இது எல்லாவற்றுக்கும் மேல், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் இன்னமும் திமுகவையும், காங்கிரசையும் மேடைக்கு மேடை குறைசொல்லிக் கொண்டிருப்பதால், “மூண்று ஆண்டு ஆகியும் அவங்களையே குறை சொன்னா, இவங்க எதுக்குதான் ஆட்சிக்கு வந்தாங்களாம்?” என்ற இயல்பான கேள்வி பாமர மக்களிடையே கூட எழுந்திருக்கிறது. ஒருவேளை 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்து டெல்லிக்கு அனுப்பினாலும் கூட, ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், உலகப் பொருளாதார நிலையையோ, ஒபாமாவையோ குறைசொல்லியே அடுத்த ஐந்தாண்டுகளை ஜெயலலிதா போக்குவாரோ என்ற நியாயமான ஐயமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. 

இதெல்லாம் ஒருபுறமிருக்க, மத்திய அரசைப் பொறுத்துவரை திமுகவின் அணுகுமுறை என்றுமே அதிமுகவிற்கு முற்றிலும் மாறுபட்டது. இந்திரா காந்தி சொன்னதைப் போல, “கருணாநிதி எதிர்த்தால் உறுதியாக எதிர்ப்பார். ஆதரித்தால் உறுதியாக ஆதரிப்பார்,” என்ற கருத்தில் இருந்து திமுக என்றும் பிறழ்ந்ததில்லை. இந்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கை, பன்மொழிக்கொள்கை, பெண்ணுரிமைக் கொள்கை, தமிழை செம்மொழி ஆக்கியது எனப் பலவற்றிலும் மூலகாரணமாக இருந்துள்ள திமுக, சேலம் உருக்காலை, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி, கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் அமைப்பு, 1996-2001 வரையிலான ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலை முதலீடுகள், மெட்ரோ ரயில் திட்டம், செல்பேசி சேவையின் விலையைக் குறைத்தது, இணையத்தை பரவலாக்கியது என எண்ணற்ற நலப்பணிகளையும், வளர்ச்சித்திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் தொழிற்வளர்ச்சியில் திமுகவின் பங்கு மதிப்பிடமுடியாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற ஒன்று. 

திமுக ஆட்சியில் 14%ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தித் திறன், அதிமுக ஆட்சியில் 4%ஆகக் குறைந்து அதலபாதாளத்தில் விழுந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். ”தமிழகத்தை நியூமரோ யூனோ மாநிலமாக ஆக்குவேன்,” என வாக்களித்து ஆட்சிக்கு வந்த முதல்வர், இந்திய அளவில் 4ஆம் இடத்தில் இருந்த தமிழகத்தை தன் சீரிய பணிகளால் 18ஆம் இடத்திற்கு தள்ளியுள்ளார் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளே சீழ்பிடித்திருக்கும் புண்ணை பெயிண்ட் தடவி மறைப்பதைப் போல தமிழக மக்களிடமிருந்து உண்மையை மறைக்க எவ்வளவுதான் அரசும், சில முக்கிய ஊடகங்களும் முயன்றாலும் புண் ஏற்படுத்தும் தாங்கமுடியாத வலி மக்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது.      

ஆக இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்க, மக்கள் ஊடகங்களையும், கட்சிகளின் பிரச்சாரங்களையும் மட்டும் நம்பாமல், வரலாற்றையும், நிகழ்கால உண்மைகளையும் கொஞ்சம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டியத் தேவை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியையும், தலையெழுத்தையும் மட்டுமல்லாது தமிழகத்தின் வருங்காலத்தையும் நிர்ணயிக்கப்போகும் தேர்தலாக இந்த தேர்தல் இருப்பதால், தேசியக்கட்சிகளைப் புறந்தள்ளி, தங்கள் மாநிலத்தில் சிறந்ததாக தாங்கள் நினைக்கும் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மத்தியில் மாநிலங்களின் குரல் வலுவாக ஒலிக்கும் வண்ணம் மீண்டும் ஒரு வி.பி.சிங் வகை ஆட்சியை இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் உருவாக்க உதவ வேண்டும். அது மட்டுமே தமிழகம் சமீபகாலமாக தேசிய அளவில் புறக்கணிக்கப்படுவதற்கு மருந்தாகவும், ஒரே தீர்வாகவும் இருக்கும். 


-டான் அசோக்


writerdonashok@yahoo.com

நன்றி உயிர்மை


3 comments:

R.Puratchimani said...

கவலையே வேண்டாம் திமுகவிற்கு நிச்சயமாக ஓட்டளிக்க மாட்டோம்

Anonymous said...

மிகச் சிறந்த பதிவு. உணர்ச்சிக்கு இடம் கொடாமல் புத்திக்கு இடம் கொடுத்தால் தற்சமயம் எது முக்கியம் என்பதை அறிந்து வாக்களித்தலே தமிழகத்துக்கு நன்மை தரும்..

Anonymous said...

nanum poona. mani solvathupol seikiren.

Related Posts Plugin for WordPress, Blogger...