Tuesday, April 29, 2014

திமுகவினர் ஈழத்தமிழர்களின், புலிகளின் அரசியலை கடுமையாக விமர்சிப்பது குறித்து... -டான் அசோக்1) தமிழ்நாட்டு அரசியல் வேறு ஈழ அரசியல் வேறு என்பதை பல புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

2) இனப்படுகொலைக்கு ஈழத்தமிழர்களும், நாமும் வருந்துவதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் அதற்கு முழு காரணமாக தமிழக அரசியலையும், குறிப்பாக கலைஞரையும் மட்டும் அவர்கள் குற்றம் சாட்டிவிட்டு அதன்மூலம் விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் பெருந்தவறுகளையெல்லாம் மறைக்கப்பார்ப்பது மிகக் கடுமையாக, வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. அதைவிடக் கொடுமை, தமிழகத்தில் இருந்தபடியே ஈழத்தின் படுதோல்விக்காக களமாடி வெற்றிகண்ட ஜெவுக்கு அவர்கள் பரிந்துபேசுவது, அவர்களுக்கு அவர்களே சுய-துரோகிகள் என்பதைத்தான் காட்டுகிறது!

3) கலைஞரை மட்டும் சீண்டிக்கொண்டிருந்தவர்கள் இன்று ஒன்றுக்கும் பயன்படாத, பஞ்சத்திற்கு ’களமாடக்’ கிளம்பியிருக்கும் தமிழ்நாஜிக்களின் வழிகாட்டுதலில் பெரியார், திராவிட இயக்கம் என தமிழக அரசியலின் வேரில் கைவைக்கத் துவங்கியிருக்கிறார்கள். தமிழக அரசியல் வெற்றி அரசியல். திராவிட இயக்கம் வெற்றிகரமாக தனது அரசியல்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆரம்ப காலந்தொட்டே தமிழ்நாஜிக்களின் துரோகங்களால் அது அவ்வப்போது பின்னடைவுகளைச் சந்தித்தாலும், ஈழ அரசியலோடு ஒப்பிடும்போது தமிழக அரசியல், தமிழகத் தமிழர்களுக்கான போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அணிவிக்கப்பட்டிருந்த ’மூளைவேலியை’ அறுத்தெறிந்திருக்கிறது. இதையெல்லாம் ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். திராவிட இயக்கத்தின் அரசியலில் அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியதுதான் நிறைய இருக்கிறதே தவிர, அதைத் தூற்றும் வரலாற்றிவோ, அரசியல் தெளிவோ அவர்களுக்கு இருக்கிறதா என்பதை அவர்களே மறுபரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.

4) ஈழத்தமிழர்கள் திமுகவை தூற்றும்போது தமிழ்நாஜிக்கள், பாஜகவினர், அதிமுகவினர் என அனைவரும் கூட சேர்ந்து கம்பு சுத்த வருவார்கள். ஆனால் திமுகவினர் புலிகளின் மீதான தங்கள் விமர்சனங்களை வைக்கும் போது யாருமே வரமாட்டார்கள். அப்போதுதான் உண்மையாகவே இத்தனை நாள் ஈழத்தமிழர்களுக்கு யார் தார்மீக ஆதரவு அளித்தது என்பது அவர்களுக்குப் புரியும்.

5) எல்லாவற்றுக்கும் மேல் தமிழகத்திலேயே திமுகவில் தான் மிக அதிகமான ஈழ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். இத்தனை நாள் கலைஞர் மீதான புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அவதூறுகளை பல்லைக் கடித்துக்கொண்டு ‘defence game’ மட்டும் ஆடியதற்கு அந்த ஈழப்பற்று தான் காரணம். ஆனால் எந்தப் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? வரலாறும் தெரியாமல், அரசியலும் தெரியாமல் தமிழ்நாஜிக்களாலும், சில ஈழத்தமிழர்களாலும் இவ்வளவு பேச முடிகிறதென்றால் இரண்டிலும் பழம் தின்று கொட்டை போட்ட திமுககாரர்கள் சும்மாவா இருப்பார்கள்? தமிழ் நாஜிக்கள் புலிகளை 2009 யில் இருந்து பார்த்தவர்கள் என்றால், திமுகவினர் 80களில் இருந்து பார்த்தவர்கள். ஈழ விசயத்தில் , தமிழ் நாஜிக்கள் பஞ்சத்திற்கு களமாடுகின்றனர் என்றால், திமுகவினர் பரம்பரை பரம்பரையாக உணர்வுரீதியாக களமாடுபவர்கள். அதனால் ஆதரவும் தீர்க்கமாக இருக்கும், தங்கள் உணர்வின்மேல் பழிவிழுந்தால் தாக்குதலும் மூர்க்கமாக இருக்கும்.

அதனால்தான், ராஜபக்சே ஆட்சிக்கு வர உதவி செய்தது, ராஜீவைக் கொன்றது, எந்த நாட்டுடனும் பண்ணுறவான்மை பழகாதது, தமிழக முக்கியத் தலைவர்களையெல்லாம் கிள்ளுக்கீரைகளாக நினைத்துவிட்டு வைகோ, நெடுமாறன் போன்ற உதிரிகளை நம்பியது என புலிகளின் தவறுகளையெல்லாம் எடுத்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உங்கள் தோல்விக்கு அடுத்தவனை கைகாட்டி தப்பிக்காதீர்கள், உங்கள் தோல்விக்கு நீங்கள் தான் காரணம் என ஆதரங்களோடு சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். கலைஞர் மீது தேவையில்லாமல் அவர்கள் சுமத்தும் பழிகளுக்கு பதில் அளிக்க, புலிகள் மற்றும் ஈழ அரசியலின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதொன்றுதானே வழி! அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மை கடுமையாக, கசப்பாகத்தான் இருக்கும். வேறு வழி இல்லை. தாங்கித்தான் ஆகவேண்டும். அதுதான் தமிழக அரசியலுக்கு நல்லது. சில உடன்பிறப்புகள் கொஞ்சம் எல்லைமீறி போவதுபோல பதிவிட்டாலும், திமுகவினர் சரியான வழிமுறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! வேறு வழியும் இல்லை! எத்தனை நாட்கள் தான் பொய்களைச் சகித்துக் கொள்வது! திமுகவினர், தமிழ்நாஜிக்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு...

இணையத்தில் தமிழ் நாஜிக்கள் (போலித்தமிழ்தேசியவாதிகள்) கலைஞரைப் பற்றி தரக்குறைவாக பதிவிடுவதால் பதிலுக்கு சில திமுகவினர் பிரபாகரனை தரக்குறைவாகத் திட்டுகிறார்கள். இருவருமே புரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

1)ஈழத்தில் நடந்த விஷயங்களுக்கும், எழுவர் விடுதலை இன்று ஜெ அரசின் அவசரத்தனத்தால் அல்லது சதியால் தள்ளிப்போயிருப்பதற்கும் கலைஞரைத் திட்டுவதென்பது முற்றிலும் லாஜிக் இல்லாத விஷயம் என்பது தெரிந்தும் அதையே செய்துகொண்டிருக்கும் தமிழ் நாஜிகக்ள் பச்சையான அதிமுக ஆதரவாளர்கள்.  ஆக, அவர்களுக்கு ஈழப்பிரச்சினையிலும் சரி, எழுவர் விடுதலையிலும் சரி உண்மையான உணர்வெல்லாம் கிடையாது.  கலைஞரை தூற்றுவதன் மூலம் அவர்களின் தற்போதைய முதலாளி ஜெவுக்கு ஆதரவு திரட்டுவது மட்டுமே அவர்களின் இலக்கு. எனவே இந்தச் சூழ்நிலையில் திமுகவினருக்கு எப்படி கலைஞரோ, அப்படித்தான் போலித் தமிழ்தேசியவாதிகளுக்கு பிரபாகரன் என திமுகவினர் நினைத்தார்களேயானால் அது பெருந்தவறு.  பிரபாகரனைத் திட்டினால்தான் தமிழ் நாஜிக்களுக்கு வலிக்கும் என்ற கணக்கே அடிப்படையில் தவறு. அவர்களுக்கு வலிக்காது! பிரபாகரன் உயிரோடிந்தவரை அவர் சாவுக்காக களமாடிய ஜெவுக்காக இன்று வெட்கமே இல்லாமல் களமாடும்  தமிழ்நாஜிக்களுக்கு பிரபாகரனை யாரேனும் திட்டினால் சுகமாகத்தான் இருக்கும்.

2) கலைஞரைத் தரக்குறைவாக திட்டுவதன் மூலம் திமுகவினரின் கோபத்தைத் தூண்டி பிரபாகரனை திட்ட வைத்து, “பார்த்தீர்களா பார்த்தீர்களா... இதுதான் உபிக்களின் லட்சணம்” என பார்வையாளர்களிடம் ஒப்பாரி வைப்பதுதான் இணைய தமிழ்நாஜிக்களின் திட்டம்.  அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.  திமுகவினரும் அதற்கு இடமளிப்பது வருந்தத்தக்கது.

3) ஈழம் என்பது வேறு தமிழகம் என்பது வேறு. வாழ்வியல் முறை, சாதிய நடைமுறைகள், பிரதானப் பிரச்சினைகள், எதிரிகளின் இயங்குதளம் என பல்வேறு பரிமாணங்களில் இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஈழத்தில் ஆயுதத்தளத்தில் இயங்க வேண்டிய தேவை இருக்கிறதென்றால், தமிழகத்தில் அறிவுத்தளத்திலும், அதிகாரதளத்திலும் இயங்க வேண்டிய தேவை இருக்கிறது.  இதை ஈழத்தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.  உங்களுக்கு உங்கள் அரசியல் எவ்வளவு முக்கியமோ அதேபோல இங்கேயுள்ள தமிழர்களுக்கு தமிழக அரசியல் முக்கியம்.  உங்களுக்கு தந்தை செல்வாவும், பிரபாகரனும் எப்படியோ அப்படித்தான் இங்கே இருப்பவர்களுக்கு பெரியாரும், அண்ணாவும், கலைஞரும்.  இதை உணர்ந்துகொண்டு கொஞ்சமாவது பொறுப்புடன் பதிவிட வேண்டும்.  ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழகத்தால் குறைந்தபட்ச தார்மீக ஆதரவுதான் அளிக்கமுடியுமேயொழிய எந்தக் காலத்திலும் அதற்கு மேல் உதவ முடியாது.  யார் முதல்வராக ஆனாலும் இதுதான் நிலைமை.  இதெல்லாம் வைகோ, நெடுமாறன், சீமான் மற்றும் இணையத்தில் இயங்கும் போலித் தமிழ்தேசியவாதிகள் அனைவருக்குமே தெரியும்.  ஆனால் சொல்லமாட்டார்கள்.  சொல்லிவிட்டால் அவர்களின் பிழைப்பு போய்விடும். புலம்பெயர் தமிழர்களின் பணம்தானே அவர்களின் வாழ்வாதாரம்.

4) தயவு செய்து தமிழகத் தமிழர்களை உங்கள் அரசியலுக்காக நம்பாதீர்கள்.  பெரியார் சொல்லியதைப் போல ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது.  இங்கே எங்கள் மீனவர்களைக் காப்பாற்றவே துப்பில்லாதவர்கள் நாங்கள்.  எங்கள் ஆதரவோடு ஒரு தனிநாடு அமைக்க முடியும் என எந்த நம்பிக்கையில் நினைக்கிறீர்கள்? தயவுசெய்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் தமிழக அரசியல்வாதிகளையும், தமிழக போலிப்போராளிகளையும் நம்பாதீர்கள்.  கல்லூரிக்கு விடுமுறை விட்டாலே போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும் வீராதிவீரர்கள் தான் எங்கள் ஊர் போலித் தமிழ்தேசியப் போராளிகள்.  இவர்களால் ஒரு நரை மயிரைக் கூட பிடுங்கமுடியாது. இவர்களை நம்பி நீங்கள் தமிழகத் தலைவர்களை இணையத்தில் தூற்றுவது ஈழத்திற்கு தார்மீக ஆதரவளிக்கும் உண்மையான உணர்வாளர்களை சோர்வடையச் செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் தமிழகக் கட்சிகளில் பெரும்பான்மையான ஈழ ஆதரவாளர்கள் நிறைந்த கட்சி திமுக மட்டுமே.  அவர்களையெல்லாம் உங்கள் பொறுப்பற்ற பதிவுகளும், அரைவேக்காட்டுத்தனமான எதிர்பார்ப்புகளும் எரிச்சலடையச் செய்கின்றன.  எங்களால் உங்களுக்கோ, உங்களால் எங்களுக்கோ உதவ முடியாது.  தார்மீக ஆதரவு மட்டுமே அளிக்கமுடியும். தமிழக அரசியல் பிரச்சினைக்கு பிரபாகரன் உதவவில்லை என அவரை தமிழகத் தமிழர்கள் திட்டினால் ஏற்பீர்களா?  தேர்தலைப் புறக்கணித்து ராஜபக்சே ஆட்சிக்கு வர வழிசெய்தது,  இறுதிவரை முக்கியத்தலைவர்கள் யாருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாமல் நெடுமாறன், வைகோ போன்ற குட்டித்தலைவர்களை நம்பியது, சர்வதேச சக்திகளின் வாக்குறுதிகளை நம்பி ராஜீவைக் கொன்றது, இறுதிவரை பண்ணுறவான்மை அரசியலை வளர்த்துக்கொள்ளாதது என புலி அரசியலில் ஏராளமான வரலாற்றுப்பிழைகள் இருக்க, தமிழகத் தலைவர்களை நீங்கள் எந்த நியாயத்தை வைத்து குற்றம் சாட்டுகிறீர்கள்?

5) ஆக இந்த தரக்குறைவான சண்டை இரு அரசியல்களுக்குமே நல்லதல்ல. இதனால் தமிழர்களுக்கும் சரி, ஈழத்தமிழர்களுக்கும் சரி எந்த நன்மையும் விளையாது.  நன்மையடைகிறவர்கள் தமிழ்நாஜிக்கள் மட்டும்தான்.    

Tuesday, April 22, 2014

திமுகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? - நக்கீரன் கட்டுரை- டான் அசோக். (unedited version)

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இவ்வளவு சிக்கலான, இவ்வளவு சுவாரசியமான ஒரு சூழ்நிலை இதுவரை ஏற்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. இந்திய அரசியல் படுகுழப்பம் நிறைந்ததாக இருந்த நேரங்களில் கூட, யாரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பது, பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் யார் என்பதில் வாக்காளர்கள் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறார்கள். மிசா கொடுமைகளுக்குப் பின்பும் இந்திராகாந்தியைப் பிரதமராக்கியது, தமிழக வாக்கரசியலில் எல்லாம்வல்லவராக அறியப்பட்ட எம்.ஜி.ஆரின் அதிமுகவையே நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்தது, தடுமாறிக்கொண்டிருந்த நாடாளுமன்றத்திற்கு நிலையான அரசு தேவையென்ற சூழ்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை ஏகபோகமாகத் தேர்ந்தெடுத்தது என இந்திய-தமிழக மக்களின் மனத்தெளிவை எடுத்துரைக்கும் உதாரணங்கள் ஏராளம். ஆனால் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், யார் பிரதமராகத் தகுதியுள்ளவர் என்பது குறித்தும், மக்களுக்கு ஒருமித்தக் கருத்து ஏதும் நிலவவில்லை என்பதைத்தான் குழப்பமான கருத்துக்கணிப்புகளும், முன்னுக்குப் பின் முரணான சமூகவலைதள விவாதங்களும் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

ஒருபுறம் தமிழர்களின் முக்கியமான பிரச்சினைகளில் எல்லாம் பாராமுகமாக இருப்பதோடு, எதிரியாகவே பல நேரங்களில் செயல்படும் காங்கிரஸ். மறுபுறம், குஜராத் கலவரங்களின் போது நீரோவைப் போல இருந்தார்என உச்சநீதிமன்றத்தால் வர்ணிக்கப்பட்ட தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான மோடி. ஈழம் மற்றும் தமிழர்விரோத நடவடிக்கைகளால் காங்கிரஸ் மீது ஒவ்வாமை என்றால், இயல்பிலேயே மதச்சார்பு அரசியலின் மீது வெறுப்போடும், மதநல்லிணக்கத்தின் மீது ஈர்ப்போடும் இருக்கும் தமிழக மக்களுக்கு, பாஜக மீது ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பில்லை! ஒருவேளை காங்கிரஸ் மீதான வெறுப்பில் பாஜக தான் அரியணை ஏற வேண்டும் என முடிவு செய்தாலே கூட, அந்த அதிகாரத்தையும் திமுக அல்லது அதிமுக மூலம்தான், அதாவது கூட்டணியின் மூலம்தான் கொடுப்பார்களேயொழிய, தமிழக பாஜகவிடம் நேரிடையாக அதிகாரத்தை வழங்கமாட்டார்கள். காங்கிரஸை தோற்கடிப்பதை பிரதான கடமையாகக் கொண்டிருக்கும் மனசாட்சியுள்ள தமிழக ஈழ ஆதரவாளர்கள் யாரும் காங்கிரசிற்கு மாற்றாக, ராஜபக்சேவின் செயலாளர் போலச் செயல்படும் சுப்பிரமணியசாமி முக்கியத்தலைவராக இருக்கும் பாஜகவை ஆதரிக்கமாட்டார்கள். மேலும் அணு உலை, மீனவர் பிரச்சினை என தமிழர்களின் தலைவலிகள் ஒவ்வொன்றிலும் பாஜகவும்-காங்கிரசும் ஓரணியில் நிற்பதும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று மாற்று இல்லை என்பதற்கான சான்றுகள். பின் ஏன் வைகோ பாஜக கூட்டணியில் இருக்கிறார் என்ற கேள்விக்கான பதிலை நாம் அவர் மனசாட்சிக்கே விட்டுவிடலாம்!
மேலும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீதும் பாஜக மீதும் இந்திய மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையையும், ஈடுபாடின்மையையும் கணித்திருப்பதால்தான் மம்தா பானர்ஜி, மாயாவதி, முலாயம் சிங், ஜெயலலிதா, நிதிஷ்குமார் என, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமராக வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இத்தனை மாநிலக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. அவர்களும் அதற்கேற்ப தங்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். தேசியக் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காமல் பல மாநிலக்கட்சிகள் தேர்தலைச் சந்திக்கும் சூட்சமமும் அதுதான்.

இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலான சூழலில் தமிழக மக்கள் யாரை ஆதரிப்பார்கள், யாரை ஆதரித்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது, ஏன் ஆதரிக்கவேண்டும் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள் என்றெல்லாம் அதற்கான ஆதாரபூர்வமான விடைகள் தான் அடுத்தடுத்த பத்திகளில் இருக்கிறது. இப்போது தமிழக மக்களின் முன் இருக்கும் இரண்டே முக்கியத் தெரிவுகள் அதிமுகவும், திமுகவும் என்ற நிலையில், இவற்றில் எந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் மத்திய அரசில் அங்கம் வகிப்பது தமிழகத்திற்கு கொள்கை அளவிலும், உட்கட்டமைப்பு அளவிலும், நிர்வாக அளவிலும் நன்மை பயக்கும் எனப் பார்ப்பது அவசியம். அதன்பொருட்டு கொள்கைசார் அரசியல், நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள் என இரண்டாகப் பிரித்து புள்ளிவிவரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த இரண்டு கட்சிகளின் கடந்தகால மற்றும் நிகழ்கால செயல்பாடுகளைப் பார்க்கலாம்.

கொள்கைசார் அரசியல்:

இந்தியா போன்ற, பல தேசிய இனங்களும், சாதியினரும், மொழியினரும் வசிக்கும் ஒரு நாட்டில் நிர்வாக அரசியலைவிட கொள்கைசார் அரசியலுக்கு எப்போதுமே அதீத முக்கியத்துவம் உண்டு. உள்நாட்டுச் சிக்கல்கள் அங்கங்கே அவ்வப்போது தலைதூக்கினாலும், இட ஒதுக்கீடு, பன்மொழிக் கொள்கை போன்ற கொள்கைசார் அரசியல் விஷயங்கள் இந்தியாவில் சரியாக இருப்பதனால்தான் இவ்வளவு சிக்கல்களுக்கு இடையேயும் இந்திய ஒருமைப்பாட்டை குலையாமல் காக்க முடிகிறது.

இந்திய அரசின் மொழிக்கொள்கையை மாற்றி இந்தி அல்லாத பிற மொழியினரின் உரிமைகளைப் பாதுகாத்தது,  இட ஒதுக்கீட்டுக்கோரிக்கையை தீவிரமாக முன்னெடுத்து வி.பி.சிங் அரசின் மூலம் சாதித்தது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியதில் முன்னோடியாகத் திகழ்ந்து இன்று பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து குரல் கொடுப்பது என ஏராளமான வகைகளில் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் இந்திய-தமிழக நலன் சார்ந்த ஆக்கபூர்வ மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது திமுக. ஈழப்பிரச்சினையிலும் ஆரம்பத்தில் இருந்தே கொண்ட கொள்கையில் மாறாதிருக்கும் பெரிய கட்சியும் திமுகதான். 1991ல் ராஜீவ் கொலைக்காக திமுகவை எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டு குற்றம்சாட்டியதும், அதன் தொடர்ச்சியாக திமுக தேர்தலில் படுதோல்வி அடைந்ததும் வரலாறு. ஆனால், அதன்பின்னும் கூட திமுக தொடர்ந்து ஈழ ஆதரவு நிலையிலே இருக்கிறதேயொழிய அதை மாற்றிக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாது, தொடர்ந்து மத்திய அரசை தன் அதிகார எல்லைக்குட்பட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட நிர்பந்தித்து வருவதையும் திமுக கைவிடவில்லை. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால் 2ஜி போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தன் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டபோதும்கூட காங்கிரஸ் கூட்டணியில் நீடித்த திமுக, இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக உப்புச்சப்பின்றி நடந்துகொண்டதாலேயே வெளியேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் விடுதலைப்புலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி சாதித்தது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நீதிமன்றத்தின் மூலம் சண்டையிட்டு மத்திய அரசு இதழில் வெளியிடச் செய்தது, கச்சத்தீவுக்காக வழக்கு போட்டது என அதிமுக அடிக்கடி பறைசாற்றும் சாதனைகளையும் சொல்லலாம் என்றாலும், மத்திய அரசுடன் அத்தனை விஷயங்களிலும் நீதிமன்றத்தில் சண்டையிடுவதால் சில தற்காலிக மகிழ்ச்சிகள் ஏட்டளவில் கிடைக்கலாமேயொழிய, மாநிலத்திற்கு எந்த நடைமுறைத் தீர்வும் கிடைத்துவிடாது என்பதே உண்மை. சில விஷயங்களைச் சாதிக்க விட்டுக்கொடுக்கும் அணுகுமுறையும், மிதவாத சாதுர்யமும் அவசியம். தமிழக எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல எம்.ஜி.ஆரும், கலைஞரும் காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுடன் நயமாக நடந்து, ஒவ்வொருமுறையும் தமிழக விவசாயத்திற்கு காவிரிநீரை உறுதி செய்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதே போல ஈழப்பிரச்சினை விவகாரத்தில் அதிமுகவின் கொள்கை முடிவுகள் சமீப காலங்களில் முற்றிலுமாக மாறியிருப்பது மத்திய அரசையே குழப்பி உள்ளது என்பதே உண்மை. நளினிக்கு பரோல் கொடுத்தால் சட்ட ஒழுங்கு கெடும் என நீதிமன்றத்தில் தெரிவித்து பரோலைத் தடுத்த அதே அரசு, சில நாட்களிலேயே நளினியை விடுதலை செய்யப்போவதாக அறிவித்தது பல அதிமுக ஆதரவாளர்களுக்கே அதிர்ச்சியளித்தது. அதேபோல சேது சமுத்திர திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்த அதிமுக, பின்னர் அதற்கு நேர்மாறாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டதும் நாம் அறிந்ததே. ஆக, அதிமுகவின் கொள்கைசார் முடிவுகள் என்றுமே நம்பத்தகுந்தவை அல்ல. இன்று தனி ஈழ வாக்கெடுப்பை தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு 40எம்பிக்கள் கிடைத்தாலும் அதைச் செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனம். தனி ஈழத்தைப் பொறுத்தவரை, தேசிய அளவில் பெரிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருப்பதால், இந்திய அளவில் ஒரு ஒட்டுமொத்த கருத்தியல் மாற்றம் தேவைப்படுகிறது. ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட வெகுசனக் கட்சியான திமுக முன்னெடுத்திருக்கும் டெசோ போன்ற தமிழீழ ஆதரவு அமைப்புகளின் தொடர்பரப்புரைகளினாலும், இந்தியத் தலைவர்களையும், பிறமாநிலத் தலைவர்களையும் அக்கூட்டங்களில் பங்குபெறச் செய்வதினாலும் மட்டுமே பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று ஈழத்தமிழர்களுக்கு சாதகமான காரியங்களை நிறைவேற்ற முடியுமேயொழிய, எடுத்தேன் கவிழ்த்தேன் என வாக்குறுதிகளை அளிப்பது பகல்கனவு மட்டுமே! மேலும் மத்திய அரசுத் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கும் மத்திய அரசின் போக்கை முதல் கட்சியாக முன்னின்று கண்டிப்பதும் திமுக தான். மொத்தத்தில், எப்போதெல்லாம் மத்திய அரசின் செயல்பாடுகள் மாநில மக்களுக்கு விரோதமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் வலுவான எதிர்ப்புக் குரலை மத்தியில் எழுப்பும் முதல் கட்சியாக திமுக இருந்திருக்கிறது.

ஆக எப்படி கூட்டிக்கழித்துப் பார்த்தாலும், மத்திய அரசின் கொள்கைசார் முடிவுகளை தமிழகத்திற்கு ஆதரவாக மாற்றிய வரலாறும், மாற்றும் நிகழ்காலமும், தமிழகத்தின் பிரதிநிதியாக மத்தியில் திமுக இருக்கவேண்டிய அத்தியாவசியத்தையே உணர்த்துகிறது.


நிர்வாக மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள்:

1969ல் இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் நடந்த தேசியவளர்ச்சிக்குழு கூட்டத்தில் முதன்முறையாக வங்கிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியவர் கலைஞர். அப்போது பல வட இந்தியத்தலைவர்களால் கிண்டலடிக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை ஒரே ஆண்டில் இந்திராகாந்தி நிறைவேற்றினார்.  அடுத்து 1970ல் நடந்த தேசியவளர்ச்சிக் கூட்டத்தில், சேலம் உருக்காலையையும் அதே திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்றும், இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக திட்டத்தையே ஏற்க முடியாது என்றும் தீர்மானமாக வாதாடியதன் பலனாக மத்திய அரசு அடுத்தமாதமே சேலத்தில் உருக்காலை அமைக்க ஒப்புதல் அளித்தது. இது தொடங்கி, மத்திய அரசுடன் மோத வேண்டிய இடத்தில் மோதி, பணிய வேண்டிய இடத்தில் பணிந்து, தந்திரமாக நடக்க வேண்டிய இடத்தில் தந்திரமாக நடந்து தமிழகத்துக்கு திமுக மத்திய அமைச்சர்கள் கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியில் மத்திய அரசை வற்புறுத்தி, பெருவாரியான தொழிற்சாலை முதலீடுகளை திரு.முரசொலிமாறனின் மூலம் தமிழகத்திற்கு கொணர்ந்ததும், அதன் தொடர்ச்சியாக தொழில்துறை அசுரவளர்ச்சி கண்டதும், வேலைவாய்ப்புகள் பெருகியதும் உதாரணங்கள். தமிழகத்தில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சீரியமுயற்சியால் நிறைவேறிய ஒன்று. சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்பேசியில் பேச
எஸ்.டி.டி கட்டணம் என்றிருந்த நிலையை மாற்றி உள்ளூர் கட்டணம் ஆக்கியது, இந்தியா முழுதும் பேச ஒருரூபாய் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது என திரு.தயாநிதிமாறனின் சாதனைகளோடு, பணக்காரர்கள் மட்டுமே செல்பேசி பயன்படுத்த முடியும் என்ற நிலையை மாற்றி, அந்த அத்தியாவசிய சாதனத்தை ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றிஆ.ராசாவின் சாதனைகள் வரை தொலைதொடர்புத் துறையைப் பொருத்தமட்டில் அடுக்கலாம். வாஜ்பாய் அரசில் திமுக பங்குபெற்றபோது உருவான தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித்திட்டம் இன்று இந்தியா முழுதும் பயணத்தை இலகுவாக்கியிருக்கிறது. பின்னர் காங்கிரஸ் அரசிலும் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு, அந்தத் திட்டத்தை இன்னும் அதிக வீரியத்தோடு விரைவுபடுத்தியதும், இன்று இந்தியாவின் மகுடங்களில் ஒன்றாக அதன் தேசிய நெடுஞ்சாலைகள் திகழ்வதும் கண்கூடு.

அதிமுக அமைச்சர்கள், அதிமுக தலைமையின் ஒத்துழையாமைப் பண்பால் மிகச்சொற்ப காலமே மத்திய அமைச்சரவையில் இருந்திருக்கிறார்கள் என்பதால் அதிமுக மற்றும் திமுகவின் தமிழக உட்கட்டமைப்புப் பணிகளை ஒப்பிடுவதன் மூலம், உட்கட்டமைப்பு மீது அந்தந்த கட்சிகளுக்கு இருக்கும் அக்கறையை நாம் அறிந்துகொள்ளலாம். இதற்கு பெரிய ஆராய்ச்சிகளையோ, ஆவணத் தேடல்களையோ மேற்கொள்ளத் தேவையில்லை. அவரவர் வசிக்கும் ஊரில் இருக்கும் பிரதான சாலைகள், பாலங்கள், பூங்காக்கள், தொழிற்சாலைகள் ஆகியவை எந்த ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது, யாரால் கட்டப்பட்டுள்ளது என்பதை அறியமுற்பட்டாலே, அதில் மிகப் பெரும்பான்மையானவை திமுக அரசால் உண்டாக்கப்பட்டவை என்பதை அறியலாம்.

திமுகவின் கொள்கை மற்றும் நிர்வாகசார் பணிகளை நாம் ஆதாரங்களுடன் மேலே பார்த்தாலும் 2ஜி விவகாரங்கள், குடும்ப அரசியல் போன்ற குற்றச்சாட்டுகள் மீதான கேள்விகள் பலருக்கும் எழத்தான் செய்கின்றன. ஆனால் 1,76,000 கோடி என ஆரம்பித்த 2ஜி விவகாரம் பின்னர் 30000கோடி, 200கோடி என சிறுத்துக்கொண்டே வருவதை கவனிக்கும் பாமர மக்கள் கூட 2ஜி என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்ட விவகாரம் என்பதை உணரத்துவங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவை மக்கள் முதல்வராக ஏற்றுக்கொண்டதைப் பார்க்கும்போது இந்தக் கேள்விகள் எல்லாம் அடிபட்டுப் போகின்றன. அழகிரியின் அதிரடி நீக்கத்தின் மூலம் கட்சிக்கட்டுப்பாட்டை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை திமுக உணர்த்தியிருப்பது அதன்மீதான குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளையும் மக்கள் மத்தியில் நீர்த்துப் போகச்செய்திருக்கிறது.

மேலும் தமிழக அளவில் பார்த்தாலும், மத்திய காங்கிரஸ் அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதே அதிருப்தி, திமுக ஆட்சியில் 14% ஆக இருந்த உள்ளூர் உற்பத்தித் திறன், அதிமுக ஆட்சியில் 4% ஆக வீழ்ச்சி அடைந்திருப்பது, ஆட்சிக்கு வந்து 3ஆண்டுகள் ஆகியும் மின்வெட்டை சரி செய்யாததோடு நிலைமையை இன்னும் மோசமாக்கியது போன்ற காரணங்களால் அதிமுகவின் மேலும் பெருமளவில் இருக்கிறது.

திமுகவின் சமீபகால அதிரடி செயல்திட்டங்கள், திருச்சி மாநாட்டில் பிரம்மாண்டமாக மீண்டெழுந்த வேகம், தேசியக் கட்சிகளைக் கறாராகப் புறக்கணித்த உறுதி, 35 வேட்பாளர்களில் 27பேரை புதுமுகங்களாக, இளைஞர்களாக, படித்தவர்களாக தேர்ந்தெடுத்திருப்பது என பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள அத்தனை விஷயங்களின் பின்னும் திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பது சோர்ந்திருக்கும் தமிழகப் பொதுமக்களுக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் தமிழக-தமிழர் விரோத எண்ணங்களை தொடர்ந்து வெளிப்படுத்தும் நபர்களும் சரி, ஊடகங்களும் சரி, திமுக எதிர்ப்பில் ஒன்றாக கைகோர்த்து நிற்பதன் சூட்சமத்தை உணர்ந்துகொண்டாலே தமிழகத்திலும், இந்தியாவிலும் திமுகவின் அத்தியாவசியத் தேவையைப் புரிந்துகொள்ளலாம். ஆக கொள்கைரீதியாகவும் சரி, நிர்வாகரீதியாகவும் சரி, தமிழகத்தின் வருங்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டாலும் சரி, எந்த கோணத்தில் பார்த்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியாக, நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டணியாக, தமிழகத்தை மத்தியில் ஆக்கபூர்வமாக வழிநடத்தும் கூட்டணியாக  திமுக கூட்டணி மட்டுமே இருக்கிறது. தமிழகம் சமீபகாலமாக சந்தித்து வரும் சரிவுகளில் இருந்து அதை மீட்க, திமுக கூட்டணியின் 40 நாடாளுமன்ற வேட்பாளர்களையும் தமிழக மற்றும் பாண்டிச்சேரி பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மட்டுமே ஒரே வழிமுறையாக, மிகச்சரியான வழிமுறையாக இருக்கும்.

-டான் அசோக்
writerdonashok@yahoo.com


Friday, April 18, 2014

தமிழகத்தில் காரல் மார்க்ஸ் - தேர்தல் பரப்புரை சிறப்பு குறுங்கதை

இந்த ஆண்டு எங்கே போவது?  சாக்ரடீஸ் கண்ணில் பட்டுவிடக் கூடாது. எப்போது பார்த்தாலும் க்ரேக்கம் போ என்பார். எனக்கு மிகவும் பிடித்தது ருஷ்யாதான். ருஷ்யாதான் உடைந்துவிட்டதே என்கிறீர்களா?  கல் எத்தனையாக உடைந்தாலும் கல் கல் தானே! மண்ணாகப் போயிருக்கவேண்டிய ருஷ்யா, மண்ணாகாமல் சிறிய கல்லாக மட்டும் குறுகிக்கொண்டதற்கு கம்யூனிசம் தான் காரணம் என நினைக்கிறேன்.  அமெரிக்கர்கள் தொட்டதற்கெல்லாம் இரண்டு விஷயங்களை காரணம் சொல்வார்கள்.  ஒன்று கம்யூனிசம். மற்றொன்று அரேபியர்கள்.

புதின் பிரச்சினை சூடுபிடித்திருக்கும் வேளையில் நான் ருஷ்யா செல்வது என் மனதுக்கு நல்லதாக இருக்காது.  உலகின் எங்காவது ஒரு மூலையிலேனும் கம்யூனிசம் கொஞ்சமேனும் நிலைபெற்றிருக்கிறதா எனப் பார்க்கும் என் ஆவல் ருஷ்யா போகும் மட்டும்தான் கொஞ்சமே கொஞ்சமாக நிறைவேறுகிறது.  இந்தமுறை அங்கேயும் கலவரமாக இருப்பதால் அந்த ஆசையையும் நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நேற்று மாலை உலாவிக்கொண்டிருந்த போது ஒரு பெரியவரை சந்தித்தேன். எங்களை இங்கே பாதுகாத்து வைத்திருக்கும் இயற்கைக்கு மிகவும் பிடித்த பெரியவர் அவர். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அரிஸ்டாட்டிலுக்கும், சாக்ரடீசுக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் அவர்.  அவரைப் பார்ப்பதென்றால் என்னைப் போன்ற பல பெரிய பெரிய ஆட்களே பதறுவார்கள். ஆனால் எனக்கு வேற வழி இல்லை. இந்த ஆண்டு சுற்றுலாவிற்கு எங்கே போவது என அவரிடம் தான் கேட்க வேண்டும்.

சாக்ரடீஸ் புண்ணியத்தில் அவரைச் சந்திக்க முடிந்து கேட்டதற்கு, “தமிழ்நாட்டுக்குப் போ. அங்கே கம்யூனிஸ்ட்னு யாருமே கிடையாது. ஆனா கம்யூனிசம் இருக்கும்” எனச் சொன்னார். என்னடா இந்தாள் குழப்புகிறாரே எனத் தோன்றினாலும் தமிழ்நாட்டுக்குப் போக முடிவு செய்துவிட்டேன்.  ஓ... உங்களுக்கு தமிழ்நாடு என்றால் எது என தெரியாதல்லவா? அது ஒருகாலத்தில் தனி அரசாக இருந்த நாடு.  கிரேக்க, எகிப்திய பாரம்பரியங்களையெல்லாம் ஒத்த பழம்பெரும் இனமாக தமிழினத்தைச் சொல்கிறார்கள். ஆனால் இப்போது இந்தியா எனும் ஒரு நாட்டின் பகுதியாக சிறுத்துக் கிடக்கிறது. அதைப்பற்றி அந்த இன மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அலட்டுவதைப் போல் நடிப்பவர்கள் அங்கே அதிகம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் இறங்கியதில் இருந்து ஒரே குழப்பம். அங்கங்கே கொடி கட்டி கத்திக்கொண்டிருந்தார்கள். பிறகு சிகப்புச்சட்டையணிந்த கருப்புத்தோல்காரர் ஒருவர் யாருமே இல்லாத ஒரு சிறிய கூடாரத்தில் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவரிடம் விவரம் கேட்கச் சென்றேன். அவர் கூடாரத்தில் அரிவாள், சுத்தியல் இருந்தது. அட... பெரியவர் கம்யூனிஸ்ட் யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்றாரே! இங்கே ஒருவர் இருக்கிறாரே என மகிழ்ச்சி எனக்கு. “என்ன இது அங்கங்கே கத்துகிறார்களே?” எனக் கேட்டதற்கு “தேர்தல் நேரம். அதான். எங்களைத்தான் தனியாக விட்டுவிட்டார்கள்” என வருத்தமாகச் சொன்னார். “என்னைத் தெரிகிறதா?” எனக் கேட்டேன். “எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா ஞாபகம் இல்லையே” என்றார் அந்த கருந்தோல்காரர். “ஞாபகம் இருந்திருந்தாதான் தனியா இருந்திருக்க மாட்டீங்களே” என மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

”தமிழ்நாட்ல பெரிய கட்சிகள் எல்லாம் என்ன கொள்கையை பின்பற்றுகிறார்கள்?” என்றேன். திராவிடம் தான் இங்கே அதிகமாக விற்பனையாகும் கொள்கை. ”திராவிடம் என்றால் என்ன?” என்றதற்கு, “எனக்கு அதைப்பற்றி அவ்வளவாகத் தெரியாது. வேறு யாரையாவது கேளுங்கள். எனக்கு போயஸ் தோட்டத்தில் வாட்ச்மேன் வேலைக்கு நேரமாகிவிட்டது” எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். கம்யூனிச கூடாரம் காலியாக இருந்ததை வருத்தமாகப் பார்த்தபடியே நகர்ந்தேன்.

கொஞ்ச தூரத்தில் கருப்பு, சிகப்பு, வெள்ளைக் கலரில் ஒரு கூடாரம் இருந்தது. அங்கே பெருங்கூட்டம். எல்லோரும் தரையோடு தரையாக இருந்தார்கள். என்ன ஏது எனக் கேட்கும்  முன் பெரிதாக மீசை வைத்த ஒருவன் என்னையும் தரையில் அமுக்கினான். “அம்மா வர்றாங்க. என்னய்யா நிக்கிற? படு படு” என தரையில் நசுக்கினான். இவன் அம்மாவுக்கு நான் ஏன் மரியாதை கொடுக்கவேண்டும் என படுத்துக்கொண்டே யோசித்தேன். நீண்ட நேரத்துக்கு யாருமே வரவில்லை.  சிறிது நேரம் கழித்து ஒரு ஹெலிகாப்டர் மேலே வானத்தில் பறந்து சென்றது. எல்லோரும் ”அம்மா... அம்மா” எனக் கத்திக்கொண்டு கையெடுத்துத் தொழுதார்கள்.  எனக்கு எதுவுமே புரியாமல் முகத்தில் ஒட்டியிருந்த மணலைத் துடைத்துக்கொண்டு எழுந்து மேலும் நடந்தேன்.

கடைசியாக கருப்பு சிவப்பில் ஒரு கூடாரம் இருந்தது. அங்கேயும் பெருங்கூட்டம். வந்தது வந்தோம். இங்கேயும் போய் என்னவெனப் பார்ப்போம் என முடிவு செய்துகொண்டு உள்ளே நுழைந்தேன். பலபேர் கருப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் அடையாளங்கண்டுகொண்டு “அய்யா நீங்களா? அய்யா நீங்களா?” என ஆச்சரியத்தோடு மரியாதை செய்தார்கள். நடுவில் சக்கர நாற்காலியில் மிகவும் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.  அவரும் தன்னால் முடிந்தவரை தன் நாற்காலியில் இருந்து எழ முயற்சித்து தன் இருகைகளைக் கூப்பி வணங்கினார். சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். எங்கேயும் சுத்தியலையோ, கதிரையோ, அரிவாளையோ காணவில்லை. அங்கங்கே சூரியன் படம் மட்டும் இருந்தது. பெரியவர் கிளம்பியபின் அங்கே இருந்த ஒரு கருப்புச் சட்டைக்காரரிடம் பேச்சு கொடுத்தேன்.

“உங்கள் கொள்கை என்ன?” என்றேன்.

“திராவிடக் கொள்கை” என்றார் பெருமையாக.

“அப்படின்னா?”

”அப்படின்னா... நான் ஒரு கேள்வி கேக்குறேன். உங்க கொள்கை கம்யூனிசம் என்ன சொல்லுது?”

யாருடா இவன்? நம்மிடமே கேள்வி கேட்கிறானே என எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் என்னதான் சொல்கிறான் பார்ப்போமே என பதில் சொன்னேன், ”எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது. பணக்காரங்க, ஏழைங்க - முதலாளிகள்,தொழிலாளிகள்னு பேதம் இருக்க கூடாது, அப்படிங்குறதுதான் கம்யூனிசக் கொள்கை.” என்றேன்.

அவன் உடனே சொன்னான், "திராவிடக் கொள்கையும் பேதமில்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான்."

"அப்படியென்றால் அதுவும் பொதுஉடைமை தானே?" என்றேன்.

"ஆமாம். ஆனால் கம்யூனிசத்தை விட திராவிட கொள்கை சந்தித்த சிக்கல்கள் அதிகம். உங்கள் நாட்டில் ஏற்றத்தாழ்வு பணத்தால் மட்டுமல்ல, பிறப்பாலும் என்றால் எதை எதிர்த்து முதலில் போராடியிருப்பீர்கள்?" என்றான் அவன்.

என்னடா இவன்? நாம் இவனை கேள்வி கேட்டால் இவன் நம்மைக் கேட்கிறானே என எண்ணிக்கொண்டே "பிறப்பால் ஏற்றத்தாழ்வு எங்கே அப்பா இருக்கிறது? அப்படி இருந்தால் அதைவிட ஒரு கொடுமை இருக்காது. அதை ஒழிக்கத்தான் முதலில் போராடியிருப்பேன்."

அவன் முகம் மலர்ந்தது. "அதைத்தான் திராவிடம் செய்தது. இங்கே பணமுள்ளவர்கள்தான் முதலாளிகள் என்ற கொடுமை இருந்தால் கூட பரவாயில்லை. இங்கே இந்த சாதிதான் முதலாளிகளாக இருக்கவேண்டும், இந்த சாதிதான் மதிக்கப்படவேண்டும், இந்த சாதிதான் கூலிவேலை செய்யவேண்டும் என ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் எழுதி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒரு சூத்திரன் பணக்காரனாய் இருந்தாலும் கூட ஒரு பிராமணனுக்கு அவன் தாழ்ந்தவன் தான். அவனுக்கு படிப்பு முதல் வழிபாட்டு உரிமை வரை அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தது. அதை தகர்த்தெறிந்து வாழ்வுரிமையை பொது உடைமை ஆக்கியது எங்கள் திராவிடக் கொள்கை தான்."

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இப்படி கூடவா ஒரு நாடு இருக்கும்? இப்படியெல்லாமா எழுதி வைத்திருப்பார்கள்? ஒருமுறை நீட்சேவோடு பேசிக்கொண்டிருந்தபோது ஆரியர்கள் எழுதிய மனுதர்மம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அதில் ஆரியர்களை சூப்பர்மேன் போலவும், மற்றவர்களை அவர்களுக்கு ஏவல் வேலை செய்யும் அடிமைகளாகவும் எழுதியிருப்பார்களாம். அந்தப் புத்தகத்தை உண்மையில் பின்பற்றும் நாடாகவா இந்தியா இருக்கிறது? அவ்வளவு முட்டாள்களா இவர்கள்? என்றெல்லாம் எனக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடியது. "ஏனப்பா? சமநிலையை உண்டாக்கிவிட்டீர்களா? அல்லது எங்கள் பொது உடைமை போல அது பாதிதான் ஜெயித்ததா?"

"இன்னும் முழு சமநிலையை எட்டவில்லை, நீதிக்கட்சி தொடங்கி இன்று எங்கள் கட்சிவரை முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களால் நிலைமை ஓரளவிற்கு சீராகியுள்ளது. இட ஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் நானெல்லாம் உங்களிடம் இப்படி பேசிக்கொண்டிருக்கவே மாட்டேன். என் சாதிக்கான இலக்கணப்படி நான் எங்காவது செருப்பு தைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் கொடுமை என்னவென்றால் இட ஒதுக்கீட்டின் மூலம் படித்தவர்களே இன்று இட ஒதுக்கீடுக்கு எதிராக பிராமணர்களுடன் கைகோர்த்து நிற்பதுதான். தான் ஏறிவிட்டால், அடுத்தவன் ஏறிவரும் ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் திராவிட இனத்திற்கும் தொற்றிவிட்டது"

"ஓஹோ... கல்வியுமா மறுக்கப்பட்டது?"

"ஆமாம். மெக்காலே என்றொருவர் இல்லையென்றால் நாங்கள் கல்வி வாடையைக் கூட பிடித்திருக்க முடியாது. இங்கே வெள்ளைக்காரர்களுக்கு வேலை செய்ய போதிய அளவிற்கு படித்தவர்கள் கிடைக்கவில்லை. படித்த பிராமணர்கள் பாதிநாள் பூஜை புனஸ்காரத்தில் பொழுதை போக்கி திமிர்த்தனம் செய்தபோது ப்ரிட்டிஷ் அரசு மற்ற சாதியினரையும் படிக்க வைத்தால்தான் நிலைமை இந்தியாவில் சரியாகும் என முடிவு செய்து மெக்காலே அவர்களை அனுப்பியது. அவர்கள்தான் பிராமணர்கள் மட்டுமே படிக்க முடிந்த குருகுல கல்வியில் இருந்து எங்களைக் காப்பாற்றினார். அவரை எங்கள் ஊரின் பிராமணர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது! ஹா ஹா ஹா! அவர் பேரைச் சொன்னாலே வேப்பங்காயாய் முகம் சுழிப்பார்கள். இதில் கொடுமை என்னவென்றால் என்னைப் போன்ற திராவிடர்கள் பலரும் கூட பிராமணர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்றலைகிறார்கள்." என்றான் சோகமாக!

"கல்வியின் நிலை இன்று எவ்வாறுள்ளது?" என ஆவல் மிகுதியில் கேட்டேன்.

"மெக்காலேவில் தொடங்கி இன்று எங்கள் தலைவர் கொண்டுவந்த சமச்சீர் கல்வி வரை எங்களின் போராட்டம் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அனைவரும் சமச்சீரான கல்வி பெற, கல்வியிலும் பொது உடைமை வெற்றிபெற பல திராவிடர்களே தடையாய் இருப்பதுதான் பெருங்கவலை!"
வரும்போது பார்த்திருப்பீர்களே?"

"ஆமாம். பெரிய மீசை வைத்திருந்த பலர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஹெலிகாப்டரை வணங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களைத்தான் சொல்கிறாயா?"

"ஆமாம். அவர்கள் எல்லாம் ஆதிக்கசாதிக்காரர்கள். சக மனிதனை சாதியின் பேரால் கேவலமாக நடத்துவார்கள். ஆனால் பிராமணர்களுக்கு அடிமையாய் இருப்பது அவர்களுக்கு சுகமான ஒன்று. அதே ஹெலிகாப்டரில் ஒரு சூத்திரப் பெண் போனால் இப்படிக் கும்பிடுவார்களா என்ன? ஆதிக்கம், ஆண்டபரப்பரை பெருமை எல்லாம் ஆரியத்தோலின் முன் செல்லாது அவர்களுக்கு!"

"என்னப்பா இது? இவ்வளவு சிக்கல் இருக்கிறது? இதையெல்லாம் மீறியா நீங்கள் ஜெயித்தீர்கள்?"

"ஆம். முதலில் சமூகப் பொது உடைமை ஏற்பட்டு, வாழ்வுரிமை எல்லோருக்கும் ஒன்றுதான் என்ற நிலை ஏற்பட்டால்தான் அடுத்து பொருளாதார பொது உடைமையை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதுதான் எங்கள் தீர்க்கமான கொள்கை. ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலம் என்ற சட்டத்தை இந்த நாட்டில் நிறைவேற்ற முடியவில்லை. எல்லோரும் சமம் எனச் சொல்லும் இந்தியா, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறதென்றால் இந்த நாட்டில் நீதி என்ன லட்சணம் என்பதைப் பாருங்கள்."

"பொது உடமைக்கு ஒரே எதிரிதான். முதலாளிகள்! ஆனால் உங்களுக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்களே! இவர்களையெல்லாம் வென்று இன்றைக்கு முன்னேறியிருக்கிறீர்கள் என்றால் பெரிய விஷயம் தான். ஆமாம் உங்கள் தலைவர்கள் யார்?"

"டி.எம்.நாயர், நடேசன், பொப்பிலி ராஜா, தியாகராயர், பி.டி.ராஜன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா எனப் பலர் உண்டு. 1969ல் இருந்து இன்றுவரை எங்களுக்குத் தலைவராக இருந்து, திராவிடக் கொள்கைகளுக்கு இழுக்கு வந்தபோதெல்லாம் காப்பவர் எங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதி. சற்றுமுன் சக்கரநாற்காலியில் பார்த்தீர்களே அவர்தான்."

"அவரா? அவர் ஏன் ஹெலிகாப்டர் பயன்படுத்தாமல் ஊர்தியில் செல்கிறார்?"

"அவர் பயன்படுத்த மாட்டார். நெடுந்தூர பயணங்களைக் கூட ரயிலில் தான் மேற்கொள்வார். அதனால்தானோ என்னவோ பலருக்கு அவரைப் பார்த்தால் இளக்காரமாக இருக்கிறது! மகாராணியைப் போல் மக்கள் பணத்தில் வலம்வருகிறவர்களை மதிக்கும் போதாத காலம் தானே இது!" சொல்லும்போதே அவன் கண்களில் நீர் துளிர்த்தது

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே ஒரு இளம்தலைவர் சுறுசுறுப்பாக எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் அங்கே இருந்த இளைஞர்கள் எல்லாம் உற்சாகத்தில் துள்ளினார்கள். யாரப்பா அது? என்றேன். "அவர்தான் எங்கள் திராவிட இயக்கத்தை அடுத்ததாக வழிநடத்தப்போகிறவர். ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு ஆடும் பெரிய பெரிய கோலியாத்களை உண்மை என்ற சிறிய கல்லைக் கொண்டு வீழ்த்தப்போகும்  டேவிட்!""எனச் சொல்லும்போது அவன் முகத்தில் தான் எத்தனை ஆனந்தம்.

"அவர் பெயர் என்னப்பா?"

"ஸ்டாலின். அவர் பெயர் மு.க.ஸ்டாலின்."

எனக்கு பேச்சே வரவில்லை. திராவிட இயக்கத்தை 'ஸ்டாலின்' வழிநடத்தப்போகிறார். கம்யூனிசத்தின் முகவரி, திராவிட இயக்கத்தின் தலைமைக்கு பெயராக வைக்கப்பட்டிருக்கிறது. சக்கரநாற்காலியில் இருந்த பெரியவரை ஒருமுறை மனதில் நினைத்துக்கொண்டேன். மேலே கேட்க எனக்கு ஒன்றும் கேள்வி இல்லை. ருஷ்யா உடையாமல், அங்கே கம்யூனிசம் பீடுநடை போட்டிருந்தாலும் எனக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்காது.  தமிழகத்திலே கம்யூனிசத்திற்கு கம்பீரமான கருப்புப் போர்வை போர்த்தி அத்தத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் திராவிட இயக்கத்தினர்.

"இவ்வளவு நேரம் பேசினாயே. என் பெயர் உனக்குத் தெரியுமா தம்பி?"

"என்னய்யா இப்படி கேட்டுட்டீங்க? உங்க கட்சிக்காரங்களை விட எங்களுக்குத்தான் உங்களை நல்லாத் தெரியும். நீங்கள் பொது உடைமைச் சித்தாந்தத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்!"

எனக்கு புல்லரித்தது. "தம்பி எனக்கொரு கருப்புச்சட்டை கொடுக்கிறாயா?"

"எதற்கய்யா?"

"உலகிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பொது உடமைத்தத்துவம் சமுக அளவில் வெற்றிபெற்றிருக்கிறது. உங்கள் ஊரைப் பொறுத்தவரை கம்யூனிசத்தின் நிறம் கருப்பு! அதையே இனி அணிந்துகொள்கிறேன்" எனச் சொல்லி கருப்புச்சட்டைக்கு மாறினேன்.

என்னை ஏன் அந்தப் பெரியவர் இங்கே அனுப்பினார் எனப் புரிந்துகொண்டேன். அந்தப்பெரியவரின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேனே! அவர் பெயர் ஈ.வே.ராமசாமி. அவரைப் பார்க்கும் போது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்! 

Monday, April 14, 2014

பாராளுமன்றத் தேர்தலும் தமிழகக் கூட்டணிகளும்-டான் அசோக்

தமிழக மக்களின் மனநிலையை சட்டமன்றத் தேர்தல்களில் ஓரளவிற்கு கணித்துவிடலாம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டு வாங்கிய தீபாவளிப் பட்டாசைப் போல கடைசி நொடிவரை வெடிக்குமா வெடிக்காதா என ஒட்டுமொத்த ஊடகங்களையும், அரசியல் விமர்சகர்களையும் குழப்புவதில் கைதேர்ந்தவர்கள் தமிழக மக்கள்.  1977 மற்றும் 1980 நாடாளுமன்றத் தேர்தல்களை மனதில் வைத்துப் பார்த்தால் இது எளிதில் விளங்கும். மிசா காலத்திற்குப் பிறகு நடந்த 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் இந்திரா காந்தி எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருந்தது. தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்து களமிறங்கினார்கள். திமுக, ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்திருந்தது. அந்தத் தேர்தலில் இந்தியா முழுதும் ஜனதாதளம் பெருவாரியாக வென்று ஆட்சி அமைத்தாலும், தமிழகத்தில் பெருவெற்றி பெற்றது இந்திராகாந்தி-எம்.ஜி.ஆர் கூட்டணிதான். திமுகவிற்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இத்தனைக்கும் மிசா அடக்குமுறைகளை எதிர்த்து துணிச்சலாகப் போராடிய ஒரே முதல்வர் அப்போது கருணாநிதி மட்டுமே. 1975ல் காமராசரே கருணாநிதியை ஆதரித்தார் என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அவ்வளவு பெரிய அடக்குமுறைக்குப் பிறகும் இந்திராகாந்தி-எம்.ஜி.ஆர் கூட்டணியை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1977ல் எம்.ஜி.ஆருக்காகத்தான் மக்கள் இந்திரா காந்திக்கு வாக்களித்தார்கள் என்றும் கொள்ள முடியாது. ஏனெனில் 1980ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி-இந்திராகாந்தி கூட்டணி பெருவெற்றி பெற்றதும், எம்.ஜி.ஆர் படுதோல்வி அடைந்தார் என்பதும் வரலாறு. ஒருவேளை இந்திரா காந்தியால் மட்டும்தான் நிலையான ஆட்சி தர முடியும் என 1980ல் கருணாநிதி கணித்ததை தமிழகமக்கள் 1977லேயே கணித்துவிட்டார்களோ என்னவோ!

ஆக நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழக மக்களின் மனநிலையைக் கணிப்பதென்பது முடியாத காரியம். அதனால்தான் கருத்துக்கணிப்புகள் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள் கூட ஒரே போன்ற அலைவரிசையில் இல்லாமல், ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றது. இந்தத் தேர்தலில் இந்தியா முழுவதிலுமே காங்கிரஸ் எதிர்ப்பு அலை இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தமிழகத்தில் எப்போதும் போல இருமுனைப் போட்டி இல்லாத சூழலில், காங்கிரசுக்கு எதிரான அந்த அலை யாருக்கு சாதமாக இருக்கப் போகிறது என்பதுதான் இந்தக் குழப்பத்திற்கு மூலகாரணம். 

வாக்கு சதவிகிதத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த காங்கிரஸ், தமிழக தேர்தல்கள்  அனைத்திலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் முன்னெப்போதுமில்லாத அளவில் எழுந்துள்ள காங்கிரஸ் எதிர்ப்பு அலை, அதை இந்தத் தேர்தலில் உடன்-சேர்ப்பாரின்றி ஆக்கியிருக்கிறது. தொடர்ந்து தமிழர் விரோத விஷயங்களை முன்னெடுத்தது மட்டுமல்லாது, நிர்வாக ரீதியாகவும் தமிழர்களுக்கு காங்கிரஸ் அரசின் மேல் ஒரு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது. வெளிப்படையாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலர் தேர்தலில் நிற்கப் பயப்படுவது அதை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்த கணிப்புகளில் பலருக்கும் பல விஷயங்களில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்ற கருத்தில் மட்டும் ஒட்டுமொத்த தமிழகமும் உடன்பட்டு நிற்கிறது. 

ஜிலேபிக்கு தொட்டுக்கொள்ள சாம்பார் கொடுத்ததைப் போல கொள்கையளவில் சம்பந்தமேயில்லாத பலகட்சிகள் ஒன்றுசேர்ந்திருக்கும் பாஜக கூட்டணியை தமிழக மக்கள் காங்கிரசுக்கு மாற்றாக உணர்வார்களா என்பதில் பல சிக்கல்களும், கேள்விகளும் இருக்கின்றன. இயல்பிலேயே மதச்சார்பு அரசியலின் மீது வெறுப்போடும், மதநல்லிணக்கத்தின் மீது ஈர்ப்போடும் இருப்பவர்கள் தமிழக மக்கள். பெரியாரின், திராவிட இயக்கத்தின் கொள்கைகள் பெரும்பான்மைத் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்த ஒன்று. அதனால்தான் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும், உலகின் ஒரே நாத்திகக் கட்சி என முன்பொருமுறை வர்ணிக்கப்பட்ட திமுகவை ஆட்சியில் அமர்த்த தமிழக மக்களால் முடிந்தது. இச்சூழ்நிலையில் தமிழக வாழ்வியல் சூழலுக்கு முற்றிலும் புதிதான பாஜகவிற்கு தமிழகத்தில் என்ன விதமான நிகழ்காலம் இருக்கிறது என யோசித்தால் ’முற்றிலும் இல்லை’ என்றுதான் சொல்லமுடியும். ஒருவேளை இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு யாருமே தமிழகத்தில் பெரியாரைப் பற்றி பேசவில்லையென்றால், பாஜக கொஞ்சம் தலையெடுக்க முடியுமேயொழிய, மற்றபடி தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக முக்கியத்துவமே இல்லாத இதரக் கட்சியாகத்தான் எந்தக் காலத்திலும் இருக்கும். 

மேலும், காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் எள்ளளவும் வித்தியாசமே கிடையாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. மேலோட்டமாக கவனித்தாலே கூட தமிழர் நலப் பிரச்சினைகளான மீனவர் கொலை, சேதுசமுத்திர திட்டம் முடக்கம், அணு உலை, ஈழப்பிரச்சினை என அனைத்திலும் காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்து ஓரணியில் ஒற்றுமையாக இருப்பதைக் காணமுடியும். ஒருவேளை நாளை பாஜகவே ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் காங்கிரசை விட இன்னும் ஒரு படி அதிகமாகத்தான் பாஜக செயல்படுமேயொழிய மத்திய அரசின் தமிழர் நலன் சார்ந்த கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஏனெனில் ராஜபக்சேவின் அந்தரங்கச் செயலாளர் போலச் செயல்படும் சுப்பிரமணியசாமி பிரதான தலைவராக அங்கம் வகிக்கும் பாஜகவிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஆக காங்கிரஸை முற்றிலும் அழிப்பதுதான் முதன்மை நோக்கம் என்ற கொள்கையுடைய உண்மையான ஈழப்பற்றாளர்கள், தமிழுணர்வாளர்கள் யாரும் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். கருணாநிதியின், ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதங்களை பற்றி மேடைதோறும் முழங்கும் தமிழுணர்வாளர் வைகோ, ஈழத்தமிழர்களின் உயிர்க்காக துடிக்கும் வைகோ, இஸ்லாமியர்களின் படுகொலைக் குற்றச்சாட்டின் கரை படிந்திருக்கும் பாஜகவின் கூட்டணியில் அழையா விருந்தாளியாக ஏன் இருக்கிறார் என்பதையும், அது சந்தர்ப்பவாதமில்லாமல் என்ன வாதம் என்பதையும் அவர்தான் சொல்லவேண்டும்! 

பாஜக இந்தத் தேர்தலில் ஒரு வேடிக்கையான குழப்பத்தைச் சந்தித்து மீண்டதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் வேட்பாளர் வாஜ்பாயா, அத்வானியா என்ற பிரச்சினை முன்பு எழுந்தபோது பெருவாரியானவர்களின் தேர்வு வாஜ்பாய். ஏனெனில் பாபர் மசூதி இடிப்பில் முக்கியப் பங்காற்றிய அத்வானியுடன் ஒப்பிடும்போது வாஜ்பாய் மிதவாதியாகத் தெரிந்தார். மேலும் வெகுஜன மக்களின் ஆதரவைப் பெற அன்று வாஜ்பாய் என்ற மிதவாத முகம் பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்சிற்கும் தேவைப்பட்டது. ஆனால் அத்வானியா, மோடியா என்ற கேள்வி எழுந்தபோது, ஒப்பீட்டளவில் அத்வானியை மிதவாதியாகக் கொள்ளலாம் என்றாலும் பாஜகவினர் ஒட்டுமொத்தமாக மோடிக்கு ஆதரவளித்து அவரைப் பிரதமர் வேட்பாளராக்கியதுதான் வேடிக்கை.  குஜராத் கோரப் படுகொலைகளுக்குப் பிறகும், “குஜராத் கலவரங்கள் நிகழ்ந்த போது நீரோ போல இருந்தார் மோடி,” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்த பிறகும் கூட குஜராத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் மூலம், இந்து பயங்கரவாத முகம் இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மாயத் தோற்றத்தை மோடி உருவாக்கியிருப்பதே பாஜகவின் முன்னுக்குப் பின் முரணான முடிவுக்குக் காரணம்.     

இதன் பின்னணியில் வலிந்து வலிந்து உருவாக்கப்பட்ட மோடி அலை இன்று கேஜ்ரிவாலின் வரவால் வெகுவாகத் தளர்ந்துள்ளது. மேலும் இளம்பெண் ஒருவரை உளவுத்துறையை வைத்து பின்தொடர்ந்தது, ரிலையன்சுடனான உறவு, வரலாற்று நிகழ்வுகளை சீமான் பாணியில் மாற்றிமாற்றி தவறாகப் பேசியது என இந்திய அளவிலேயே மோடியின் பெயர் சரிவைச் சந்திந்துள்ளது. மோடியை மிகப்பெரிய நிர்வாகியாகக் காட்ட எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் வலிந்து திணிக்கப்பட்டவை என்பதையும் மக்கள் பெருவாரியாக உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஆக இந்திய அளவிலேயே ஆட்டம் காண ஆரம்பித்திருக்கும் மோடி அலை தமிழகத்தில் ஒரு மெல்லிய நீரோடை அளவிற்குக் கூட வேகம் காட்டாது என்பதுதான் நிதர்சனம்! இந்த, அலையே இல்லாத அலையை நம்பி தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் எதுவுமே இல்லாத பாஜகவின் பக்கம் கரை ஒதுங்கியிருக்கும் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் போன்றோரின் நிலை தேர்தலுக்குப் பிறகு இன்னும் மோசமாக ஆகும் என்பதுதான் உண்மை.  

”கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணியில் தானே இருந்தார்கள்! சென்ற மாதம் கூட கம்யூனிஸ்ட்டுகளின் டெல்லி தலைவர்கள் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி பற்றி சிரித்த முகத்துடன் பேட்டி அளித்தார்களே! திடீரென என்ன ஆனது? ஏன் வெளியேற்றப்பட்டார்கள்?” என்பதைப்பற்றியெல்லாம் யாருக்குமே இல்லாத  அக்கறை நமக்கு எதற்கு என்றாலும், தேர்தலுக்குப் பின் பாஜகவிற்கு ஆதரவளிக்கும் எண்ணம் இருப்பதாலேயே கம்யூனிஸ்டுகளை ஜெயலலிதா வெளியேற்றியுள்ளார் என்று நிலவும் கருத்தை மறுப்பதற்கில்லை. ஏனெனில் தான் பேசும் எந்த பொதுக்கூட்டத்திலும் ஜெயலலிதா மோடியையோ, பாஜகவையோ கொஞ்சம் கூட விமர்சிக்கவில்லை. எதிர்ப்பு அரசியல் அனைத்தையும் காங்கிரசின் மீதே செலுத்துகிறார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் நடிகர் செந்தில், “மோடியைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என மேலிடம் கண்டிப்பாகச் சொல்லியுள்ளது,” என ஒரு கூட்டத்தில் உண்மையை உளறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜகவையும், காங்கிரசையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் தனித்து நிற்கும் கம்யூனிஸ்ட்டுகளின், “கூட்டணி என்றால் அதிமுகவோடு. இல்லையென்றால் தனியாக!” என்ற கொள்கை மறைமுகமாக வாக்குகளைப் பிரித்து அதிமுகவிற்கும், அதன் மூலம் பாஜகவிற்கும் நன்மை செய்யப்போகிறது என்பதுதான் உண்மை. எதிர்பார்க்காத நேரத்தில் தலையில் பலமாக அடித்தால் கொஞ்ச நேரத்திற்கு என்ன ஏது என்றே புரியாதல்லவா, அதுபோன்ற நிலையில் தான் தனித்து நிற்கும் முடிவை கம்யூனிஸ்ட்டுகள் எடுத்திருக்கிறார்கள்.  

தேர்தல் அறிக்கை சார்ந்த நகைச்சுவைக்கு அதிமுகவில் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. மூன்றே மாதத்தில் மின்வெட்டை நீக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக, மூன்றாண்டுகள் ஆனபின்னும் இன்னமும் திமுகவை குறை சொல்கிறதேயொழிய உருப்படியாக எதும் செய்ததாகத் தகவல் இல்லை.  பற்றாக்குறைக்கு திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 2 மணிநேர மின்வெட்டு, அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத 18 மணிநேர மின்வெட்டாக பரிணாமவளர்ச்சி பெற்றுள்ளது. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதை தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அதிமுக, பிறகு நீதிமன்றத்தில் ராமர் பால கதைக்கு ஆதரவாகப் பேசியதை யாரும் மறக்க முடியாது. எல்லா நகைச்சுவைக்கும் மகுடம் வைத்த்தைப்போல தற்போது தனி ஈழம் அமைப்பதை தேர்தல் வாக்குறுதியாக சொல்லிக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இதில் உள்ள நகைமுரணை அலச ஆரம்பித்தால் ஒரு பெரிய நூலகமே அமைக்கலாம். இன்று இந்திய அரசு தனி ஈழத்திற்கு எதிராக இவ்வளவு உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதற்குக் காரணமானவர்களில் ஜெயலலிதாவிற்கு மிகவும் முக்கியமான பங்கு உண்டு. 2009ல் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது கூட “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்,” எனச் சாதாரணமாகச் சொன்னவர், இன்று எல்லாம் முடிந்தபின் தனி ஈழம் அமைக்கிறேன் எனக் கிளம்பியிருப்பது வேடிக்கை என்றால், அதைவிட வேடிக்கை 40 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சியால் பெரும்பான்மை இந்திய எம்பிக்களின் ஆதரவைப் பெற்று தனி ஈழத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தையே முடிவெடுக்க வைக்க முடியும் என்பது! ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குனரிடம் நடிக்க வாய்ப்பு கேட்கும் ஒருவர் “ஸ்ட்ரெயிட்டா ஹீரோ ஆகனும் சார்,” என்பார். அதைப்போலத்தான் இருக்கிறது ஜெயலலிதாவின் இந்த வாக்குறுதியும். 

இதுப்போன்ற அதிபயங்கர, பிரம்மாண்ட வாக்குறுதிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் மத்திய அரசுக்கும், அதிமுகவிற்கும் எந்தக் காலத்திலுமே சுமூக உறவு இருந்ததில்லை என்பதும், எந்தக் காலத்திலும் ஆக்கபூர்வமான எதையுமே தமிழகத்திற்கு அதிமுகவால் மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர முடிந்ததில்லை என்பதும் அதிமுகவின் வாக்குறுதிகளை நகைப்போடு நோக்க முக்கியக் காரணங்கள். பாஜகவுடனான கூட்டணியை அதிமுக வாபஸ் வாங்கிய மறுநாள், நாகரீகத்திற்குப் பெயர்போன வாஜ்பாயே “இன்று இரவு நான் நிம்மதியாகத் தூங்குவேன்,” என வெளிப்படையாகச் சொன்னதை யாரும் மறக்கமுடியாது. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்து தமிழகத்திற்கு நன்மைகளைப் பெறுவதோ, மூன்றாம் அணிக்குத் தலைமை வகித்து கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து வழிநடத்துவதோ அதிமுகவால் எந்தக் காலத்திலும் முடியாத ஒன்று. அதிமுகவின் இயல்பிலேயே ’ஒன்று சேர்ந்து ஆக்கபூர்வமாக இயங்குதல்’ என்ற பண்பு இல்லவே இல்லை என்பதைத்தான் அதன் கூட்டணி வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குத் தெரிவிக்கிறது. அதனால், அதிமுகவிற்கு வாக்களித்தால் தனி ஈழம் அமையும், அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்திற்கு நன்மைகள் மழைபோலக் கொட்டும் போன்ற வாக்குறுதிகள் எல்லாம் ”இந்த தாயத்தைக் கட்டினால் இரவு பண்ணிரண்டு மணிக்குக் கூட சுடுகாட்டுக்குப் போகலாம்,” எனச் சொல்லி விற்பவர்களின் வாக்குறுதியை ஒத்தே இருக்கிறது. ஏனென்றால் பாலுக்கும், பேருந்துக்கும் தங்கள் வருமானத்தில் பாதியை செலவழிக்கும் தமிழக மக்கள், ஒருநாளைக்கு பதினெட்டுமணிநேர மின்வெட்டை அனுபவிக்கும் தமிழக மக்கள்,  தொழிற்வளர்ச்சி அதலபாதாளத்திற்குப் போனதால் வேலையிழந்து தவிக்கும் தமிழக மக்கள், உள்நாட்டு உற்பத்தி குறைந்த்தால் தெருவுக்கு வந்த தமிழக முதலாளிகள், எதற்காக இரவு பண்ணிரண்டு மணிக்கு சுடுகாட்டுக்குச் செல்ல விரும்பப் போகிறார்கள்?

இது எல்லாவற்றுக்கும் மேல், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் இன்னமும் திமுகவையும், காங்கிரசையும் மேடைக்கு மேடை குறைசொல்லிக் கொண்டிருப்பதால், “மூண்று ஆண்டு ஆகியும் அவங்களையே குறை சொன்னா, இவங்க எதுக்குதான் ஆட்சிக்கு வந்தாங்களாம்?” என்ற இயல்பான கேள்வி பாமர மக்களிடையே கூட எழுந்திருக்கிறது. ஒருவேளை 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்து டெல்லிக்கு அனுப்பினாலும் கூட, ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், உலகப் பொருளாதார நிலையையோ, ஒபாமாவையோ குறைசொல்லியே அடுத்த ஐந்தாண்டுகளை ஜெயலலிதா போக்குவாரோ என்ற நியாயமான ஐயமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. 

இதெல்லாம் ஒருபுறமிருக்க, மத்திய அரசைப் பொறுத்துவரை திமுகவின் அணுகுமுறை என்றுமே அதிமுகவிற்கு முற்றிலும் மாறுபட்டது. இந்திரா காந்தி சொன்னதைப் போல, “கருணாநிதி எதிர்த்தால் உறுதியாக எதிர்ப்பார். ஆதரித்தால் உறுதியாக ஆதரிப்பார்,” என்ற கருத்தில் இருந்து திமுக என்றும் பிறழ்ந்ததில்லை. இந்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கை, பன்மொழிக்கொள்கை, பெண்ணுரிமைக் கொள்கை, தமிழை செம்மொழி ஆக்கியது எனப் பலவற்றிலும் மூலகாரணமாக இருந்துள்ள திமுக, சேலம் உருக்காலை, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி, கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் அமைப்பு, 1996-2001 வரையிலான ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலை முதலீடுகள், மெட்ரோ ரயில் திட்டம், செல்பேசி சேவையின் விலையைக் குறைத்தது, இணையத்தை பரவலாக்கியது என எண்ணற்ற நலப்பணிகளையும், வளர்ச்சித்திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் தொழிற்வளர்ச்சியில் திமுகவின் பங்கு மதிப்பிடமுடியாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற ஒன்று. 

திமுக ஆட்சியில் 14%ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தித் திறன், அதிமுக ஆட்சியில் 4%ஆகக் குறைந்து அதலபாதாளத்தில் விழுந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். ”தமிழகத்தை நியூமரோ யூனோ மாநிலமாக ஆக்குவேன்,” என வாக்களித்து ஆட்சிக்கு வந்த முதல்வர், இந்திய அளவில் 4ஆம் இடத்தில் இருந்த தமிழகத்தை தன் சீரிய பணிகளால் 18ஆம் இடத்திற்கு தள்ளியுள்ளார் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளே சீழ்பிடித்திருக்கும் புண்ணை பெயிண்ட் தடவி மறைப்பதைப் போல தமிழக மக்களிடமிருந்து உண்மையை மறைக்க எவ்வளவுதான் அரசும், சில முக்கிய ஊடகங்களும் முயன்றாலும் புண் ஏற்படுத்தும் தாங்கமுடியாத வலி மக்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது.      

ஆக இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்க, மக்கள் ஊடகங்களையும், கட்சிகளின் பிரச்சாரங்களையும் மட்டும் நம்பாமல், வரலாற்றையும், நிகழ்கால உண்மைகளையும் கொஞ்சம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டியத் தேவை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியையும், தலையெழுத்தையும் மட்டுமல்லாது தமிழகத்தின் வருங்காலத்தையும் நிர்ணயிக்கப்போகும் தேர்தலாக இந்த தேர்தல் இருப்பதால், தேசியக்கட்சிகளைப் புறந்தள்ளி, தங்கள் மாநிலத்தில் சிறந்ததாக தாங்கள் நினைக்கும் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மத்தியில் மாநிலங்களின் குரல் வலுவாக ஒலிக்கும் வண்ணம் மீண்டும் ஒரு வி.பி.சிங் வகை ஆட்சியை இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் உருவாக்க உதவ வேண்டும். அது மட்டுமே தமிழகம் சமீபகாலமாக தேசிய அளவில் புறக்கணிக்கப்படுவதற்கு மருந்தாகவும், ஒரே தீர்வாகவும் இருக்கும். 


-டான் அசோக்


writerdonashok@yahoo.com

நன்றி உயிர்மை


Related Posts Plugin for WordPress, Blogger...