Friday, February 21, 2014

திமிறும் தமிழர்கள்! நேற்று இன்று நாளை- கிளிமூக்கு அரக்கன் கட்டுரை

திமிறும் சோற்றாலடித்தப் பிண்டங்கள் - கட்டுரை

இமயவரம்பன் என பதிற்றுப்பத்து பாடல்களை வாசிக்கும்பொழுதும் சரி, கலிங்கம் வென்றான் என கலிங்கத்துப்பரணியை பாடத்திற்காகப் படிக்கும் போதும் சரி, இவை எல்லாம் தமிழர்களின் அதீத கற்பனை என்றிருந்த எண்ணம் சுனாமிக்குப்பின்னர் சங்கப் பாடல்களில் மிகைபுனைவுகளுக்கு இணையாக வரலாறும் ஒளிந்து இருக்கலாம் என்ற கருதுகோளாக மாறியது. ஆழத்தோண்டாமல் அகலத் தோண்டுதலாகவே இந்திய அகழ்வாராய்ச்சிகள் இருப்பதால் கருதுகோளிற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் கிடைக்காமலே போகலாம். ஆனால் ஆண்டாண்டு காலங்களாய் இவற்றிற்கான ஆதாரங்கள் சமூக அரசியல் தளங்களில் கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. என் குருநாதர் வினையூக்கி தனது பேஸ்புக் முகப்பில் இவ்வாறு எழுதியிருந்தார். 

"அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் வடக்கை அலறவைப்பது ஒன்றே ஒன்று ... தமிழ்" 

இந்தியம், சைவம், வைணவம் , காந்தியம், சமூகநீதி என அனைத்தையும் தாண்டி வடக்கத்தியர்கள் தமிழர்கள் நலன் சார்ந்த விசயம் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு வடக்கு என்ற சந்திப்பில் ஒன்று சேர்கின்றனர். இந்த வன்மம் , வெறுப்பா , பயமா , எரிச்சலா எனத் தெரியவில்லை. ஒருவேளை தெற்கின் கையோங்கியிருந்த காலங்களில் வடக்கில் அன்றைய 'ஆளும் சமூகத்தின் மீது' அமெரிக்கத்தனமாக தமிழர்கள் நடந்து கொண்டிருப்பனரோ என்ற எண்ணம் வராமாலுமில்லை. சிங்களவர்களைக் அடக்கி ஒடுக்கி வைத்திருந்த சென்ற நூற்றாண்டு ஈழத்தமிழர்கள், இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருவது இயல்பு. வரலாற்றுக் காயத்தின் வன்மம், 
வாய்வழிக்கதைகள் வழி மட்டுமல்லாது ஜீன்களின் வழியாகவும் கடத்தபட்டிருக்குமோ!! 

தமிழர் சாராத பிரச்சினைகளின் ஆங்கில ஊடக விவாதங்களைப்பாருங்கள். கொஞ்சம் முன்னபின்னே இருந்தாலும் ஓரளவிற்கு நியாயமான வழிநடத்தலுடன் மட்டுறுத்தலுடன் விவாத ஒழுங்கு இருக்கும். ஆனால் காவிரி நதி நீர்ப்பிரச்சினையாகட்டும், 
முல்லைப்பெரியாறு ஆகட்டும், ஈழப்பிரச்சினையாகட்டும் , கூடங்குளமாகட்டும் நடுவரே கையில் ஒன்றிற்கு இரண்டாய் கைத்தடிகளுடன் தமிழருக்காகப் பேசுபவரை முதல் வார்த்தையில் இருந்து திட்டித்தீர்ப்பார். அட ஆக்கப்பூர்வ விசயங்களை விடுங்கள், 
பொழுதுபோக்கு கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். வடக்கத்தியர்களுக்கான மற்றொரு அணியான சென்னை சூப்பர் கிங்ஸை கரித்துக் கொட்டுவதன் நோக்கம் அதன் தளம் தமிழ்நாடு, நிர்வாகிகள் தமிழர்கள். 

வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டு இன்று சிறப்பாக செயற்படுகின்றன, நல்லவிசயம்தான். ஆனால் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான முழுமுதற்காரணம் அன்று வங்கிகள் முழுக்க முழுக்க தென்னிந்தியர் கைவசம் , அதில் பாதி 
தமிழர்கள் வசம்இருந்தன. உலகக்கோப்பை போட்டிகளுக்குப்பின்னர் வரும் கிரிக்கெட் தொடர்களை , மக்கள் நினைவில் கொள்வதில்லை. கலவிக்குப்பின்னரான அயற்சியை ஒத்த மனநிலையில் ரசிகர்கள் இருப்பார்கள். அதைப்போல விடுதலைக்குப்பின்னர் தெற்கத்தியர் சுதந்திர மோகத்தில் இருந்த காலத்தில் , அவர்கள் ஹிந்'தீ'யாய் வேலைபார்த்து, பொருளாதாரக்குடுமியை பிடுங்கி தன் 
வசம் வைத்துக்கொண்டது அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படவில்லை. குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்கள் தெற்கில், குறிப்பாக தமிழகத்தில் அடிமட்டம் வரைக் கொண்டு செல்லப்பட்டதைப்போல வடக்கில் இருந்ததில்லை. அங்கு குடும்பக்கட்டுப்பாடு உறை என்றால் வாயால் ஊதி காற்றில் பறக்கவிடப்படும் பலூன் என்ற அளவில்தான் தெரிந்து இருந்தது. 

இத்தனையையும் மீறி தமிழர்கள் தமிழர்களாக இருப்பதன் காரணம் அவர்களின் திமிர்த்தனமும் திமிறும்தனமும் தான். சோற்றாலடித்தப் பிண்டமான தமிழன் கால்வயிறு அரைவயிறு கிடைக்கும்வரை பிரச்சினை தராமல் இருந்துகொண்டு, கடைசிக் கோவணத்தை உருவ வரும் வரை யார்வந்து அடித்தாலும் ஆண்டாலும் கருமம் கமலஹாசன் ரகளை ரஜினிகாந்த் என அமைதியாய் இருப்பான். எலியை விரட்டிக் கொண்டே போங்கள் , ஓரிடத்தில் போய் தன் பற்களைக் கோரமாகக் காட்டி எதிர்த்து நிற்கும். அத்தகைய சூழல்கள் வந்தால் மட்டும் தமிழர்களுக்கு 
கும்பகர்ணத்தூக்கம் போகும். இந்தித்திணிப்பு என்ற அரசாங்க உத்தரவு வந்தபொழுது எலிகள் புலிகள் ஆகின. எலிகள் புலிகளானால் மட்டுமே செவிமடுக்கப்படும். தமிழ் காகபட்டர்கள் , அனுமன்களாவர். 

விடுதலைக்கு முன்னரான திணிப்பின் சூத்திரதாரியான ராஜாஜி, இரண்டாம் திணிப்பின்போது தமிழர்களுடன் நின்றது வரலாற்று சுவாரசியம். குல்லுகபட்டர் , காகபட்டராய் அண்ணாதுரையுடன் இணைந்தார். இந்தித் திணிப்பைப் பார்த்து 'எனக்கே பிரிவினை 
எண்ணம் வந்துவிட்டது' என்று திருச்சி திமுக மாநாட்டில் ராஜாஜி பேசினார். பெரியார் , அண்ணாவினால் தமிழ் எலிகள் புலிகளாய் 
மாறிய சென்னை மாநிலம் பற்றி எரிய பாகிஸ்தானையே நடுநடுங்கச் செய்த ,லால்பகதூர் சாஸ்திர் இறங்கி வந்தார். நேரடி 
இந்தித்திணிப்பு நிறுத்தப்பட்டது. அன்றைய காங்கிரஸ்காரர்கள் புத்திசாலிகள். விடாக்கொண்டனாய் மொழிக்கொள்கையைத் திணித்து 
இருந்தால் உடனடி வெற்றி இந்தியத்திற்கு கிடைத்து இருந்தாலும் , சுயாட்சி தனித்தமிழகம் என்ற எண்ணங்கள் அடுத்தத் தலைமுறைக்கு வீரியமாய் கடத்தப்பட்டிருக்கும். பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்தியா சிப்பாய்கலகத்தின் காலங்களில் இருந்த 
இந்தியத் துணைக்கண்டமாக மாறியிருந்து இருக்கும். 

விட்டுக்கொடுத்தல் பின்னர் மெல்ல நஞ்சைக் கலக்கல் என்ற இந்திய இயந்திரத்தின் ஆதி 'மனு' அறிவு, காங்கிறஸைத் தோற்கடித்து, மோடியை பிரதமர் ஆக்கவேண்டும் என்ற கண்மூடித்தனமான இராமபக்தியில் மங்கிவிட்டதோ என்று தோன்றுகின்றது. 
பெருந்தன்மையைக் காட்டி இந்தியத்தை , தொலைக்காட்சித்தொடராய் அடுத்தத் தவணைக்கு நீட்டிப்பதை விட்டுவிட்டு எழுவருக்கு 
எதிராக அரசாங்கம் தடை வாங்கியிருப்பது உண்மையில் வடக்கத்தியர்களைக் காட்டிலும் தமிழர்களுக்குத்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கவேண்டும். 

மாலிக்காபூரை மதுரைக்குக் கொண்டு வந்த காலம் தொட்டு, எழும் தீப்பொறிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அணைந்துப்போய்க்கொண்டிருக்கையில், வென்றாலும் தோற்றாலும் கிடைத்திருக்கும் எழுவர் விடுதலை என்பது ஓர் அட்டகாசமான 
துருப்புச்சீட்டு. இந்தியத்திற்கு திட்டித்தீர்த்தவுடன் இருக்கும் எரிச்சலுக்குப்பின்னர் பயம் வரும். பயம் காரணமாக கடைசி நேரத்தில் காகபட்டர்களினால், இந்தியம் இறங்கிவருதலை மனமுவந்து ஏற்றுக்கொண்டு மீண்டும் எலிகள் ஆகிவிடாமல் அடுத்தத் தலைமுறைக்கு வரலாற்றைக் கடத்துங்கள். யார் கண்டது, ஆழத்தோண்டி இமயவரம்பனை மீட்டு எடுக்கலாம். குரலை உயர்த்துங்கள்.

மண்ணும் 

மனிதமும் இருப்பதால் தமிழகத்தின் மீதான பன்னாட்டு அரசுகளின் விருப்பம் அதீதமானது. ஆக மூட்டைப்பூச்சியை நசுக்குவதைப்போல காஷ்மீரத்தை நசுக்குவதைப்போல தமிழகத்தை நசுக்க முடியாது. பத்து பேர் சேர்ந்தால் கும்பல். நூறு பேரானால் கூட்டம். நூறாயிரம் ஆனால் எழுச்சி. கோடியானால் அது மறுமலர்ச்சி. தமிழ்க்கும்பல் என்று கேலி செய்த, அந்தக்கால ராஜாஜி போன்ற தமிழ் காகபட்டர்கள் வரப்போகும் தமிழ் மறுமலர்ச்சியில் துண்டு போட, ஏற்கனவே தமிழ் பேச ஆரம்பித்துவிட்டார்கள். 
அவர்கள் இப்பொழுது பேசட்டும். கூடிவாழ்ந்து கோடிநன்மையாகப்போகும் அடுத்தத் தலைமுறையில் நமக்கான காக்காசூத்திரர்களை நாம் உருவாக்கிவிடலாம்.

-கிளிமூக்கு அரக்கன்

1 comment:

kannan .dk said...

arumai nanpare
vazthukal

Related Posts Plugin for WordPress, Blogger...