Friday, February 14, 2014

காதலர் தினக் கோமாளிகள் - கிளிமூக்கு அரக்கன்


மசூதியை இடிப்பவர்களும், மசூதியை இடித்ததற்காகப் போராடியவர்களும் கைகோர்க்கும் இடம் ஒன்று உண்டு. இருவருக்குமே கலாச்சாரக் காவல் என்றால் மிகவும் பிடிக்கும். ஓரினச்சேர்க்கையினருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பானாலும் சரி, பெண்கள் உடை விஷயம் என்றாலும் சரி, காதலர் தினக் கொண்டாட்டமானாலும் சரி, குல்லாயும்-காவியும் கட்டித் தழுவிக் கொள்ளும். 

காதலர் தினம் என்றால் காதல் என்னும் இயற்கையான மனித உணர்வைக் கொண்டாடும் தினம். அன்னையர் தினத்தைப் போல, தந்தையர் தினத்தைப் போல ஒரு நினைவுகூர் தினம். எப்படி ஆண்டு முழுதும் அம்மா பாசமாக இருக்கிறாரோ, அப்பா பாசமாக இருக்கிறாரோ அதேபோல... ஆண்டுமுழுதும் உலகின் எல்லா மூலைகளிலும் காதலர்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஒத்துவராமல் பிரிந்துகொண்டு தான் இருக்கிறார்கள், ஆண்டு முழுவதும் உடலுறவிலோ, காமக்கலைகளிலோ ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆண்டுமுழுதும் அன்பைப் பறிமாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆண்டுமுழுவதும் தங்கள் காதலை பழமைவாதத்திடமிருந்து காக்க போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள், காதலில் விழுந்துகொண்டே தான் இருக்கிறார்கள், திருமணம் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்டில் ஒரே ஒரு நாளை இதையெல்லாம் நினைவுகூர்வதற்காக ’காதலர்தினம்’ என்ற தினத்தை சிறப்புதினமாக, ஒரு குறியீடாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த காதலர் தினத்தை, அதாவது ஒரே ஒரு தினத்தை ஒழித்துவிட்டால் காதலை ஒழித்துவிடலாம், காதலில் பிரிதலை ஒழித்துவிடலாம், பழைய காதலை மறந்து புதிய காதலில் புகும் மனிதனின் இயற்கை குணத்தை ஒழித்துவிடலாம் என கலாச்சாரம், மதம் ஆகிய கூறுகளால் மனநலம் பாதிக்கப்பட்ட சில கூட்டங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. அன்னையர் தினத்தை நிறுத்திவிட்டால் தாய்ப்பாசம் உலகில் நின்றுபோகுமா? 

கடவுள், மதம், மொழி என எதுவும் தோன்றுவதற்கு முன்பே காதல் உருவாகிவிட்டது. ஆதாமும் ஏவாளும் உடலுறவு கொண்டபின் தள்ளிப் போய்விடவில்லை, காதலுடன் கட்டிக்கொண்டே தான் அலைந்தார்கள். காதல் என்பதற்கான அர்த்தம் ஒவ்வொருவனுக்கும் ஒருமாதிரியாக இருப்பது. சிலருக்கு காமம் தான் காதல். சிலருக்கு காமமே இல்லாத அன்புதான் காதல். சிலருக்கு காமமும், அன்பும் இணையும் புள்ளிதான் காதல். அவ்வளவு ஏன்? நம்முர் கலாச்சாரத்தில் நிச்சயிக்கட்ட திருமணம் செய்துகொள்வோர்க்கு உடல் இணையும் முதலிரவு தான் காதல்! இப்படி காதலை ஒரு வரையறைக்குள் அடக்கவே முடியாதபோது, ‘தாலி கட்டினால்தான் காதல்’ எனத் தாலியுடன் தரகர் போல அலையும் தறுக்கர்களையும், கற்பை காதல் கெடுக்கிறது எனப் போஸ்டர் ஒட்டி அலையும் கோமாளிகளையும் என்ன செய்வது? மனித இனத்திற்கு அப்பாற்பட்ட இந்த ஜந்துக்களுக்கு காதல் என்னும் மனித இயல்பை பொத்தாம் பொதுவாகப் புரியவைக்க வேண்டுமானால், நாம் இந்தியக் கலாச்சாரமாக அறியப்படும் ’நிச்சயிக்கப்பட்ட திருமணம்’ என்ற கருத்தியலை பகுப்பாய்வு செய்துபார்த்தல் அவசியம். 

பெட்டை நாய்களை பருவகாலத்தில் ஆண் நாய்களுடன் கூடுவதற்காக அதன் உரிமையாளர்கள் கூட்டிச் செல்வார்கள். ஆண் நாயின் சாதி, உயரம், எடுப்பு, அதன் பரம்பரை பெருமை ஆகியற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் இரண்டு நாய்களையும் கூட வைப்பார்கள். அவைகளும் பருவ நேர இயற்கை உந்துததாலும், குட்டி ஈனுவதற்காகவும் கூடிக்கொள்ளும். கூடி முடிந்தபின் அதனதன் வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள். பிறகு அடுத்த பருவத்தில் தான் கூடல். 

மனிதனின் திருமணக் கதையும் இதே போன்றதுதான் என்றாலும் மனிதன் இதிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டவன். அவனுக்கு வருஷமெல்லாம் வசந்தம் தான்! வருஷமெல்லாம் குட்டி ஈனுவதற்கும், உடலுறுவு கொள்வதற்கும் எந்நேரமும் தயாராக இருப்பவன் மனிதன். அதனால் அவனுக்குப் பருவ வயது வந்தவுடன் ஜோடி சேர்ப்பதற்காக பருவமெய்திய மற்றொரு மனிதனைத் தேடுவார்கள். சாதி, அழகு, உயரம், பரம்பரை பெருமை, குடும்பப் பெருமை ஆகியற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் கட்டிலறைக்குள் தள்ளுவார்கள். பருவம் தரும் இயற்கை உந்துததாலும், திருமணம் ஆகிவிட்ட காரணத்தாலும் இருவரும் கூடுவார்கள். ஆனால் நாய்கள் போல ’வேலை முடிந்தபின்’ அவரவர் வீட்டிற்குச் செல்லாமல், வருஷமெல்லாம் வசந்தம் என்பதால் தனியாகத் தங்கி தனிக் குடும்பத்தை உற்பத்திசெய்து வளர்ப்பார்கள். உடலுறவு தரும் சுகம், காதலோ என ஐயம் கொள்ளும் அளவிற்கு கொஞ்சநாளைக்கு அவர்களுக்குள் ஒரு ஈர்ப்பைத் தரும். சில அதிர்ஷ்டசாலி ஜோடிகளுக்கு, புரிதல் ஏற்பட்டபின் இந்த உடலுறவு ஈர்ப்பு காதலாக மாறும். அப்படி மாறாத ஜோடிகள் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த பாவத்திற்காகவும், குழந்தை பெற்றுக்கொண்ட பாவத்திற்காகவும், பிரிந்துபோதலைப் பாவமெனச் சொல்லும் தரங்கெட்ட சமூகத்திற்கு பயந்தும், ஒன்றாக வாழ்ந்தே காலத்தைத் தள்ளுவார்கள். காமமும் அன்பும் கலக்கும் புள்ளிதான் காதல் என்பதே தெரியாமல் வாழ்ந்து ஒருநாள் செத்தும் போய்விடுவார்கள். சமூகம் கட்டமைத்திருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண-பந்தத்தின் சிக்கல் இதுதான். 
மனிதனின் இயற்கையே நிச்சயித்த திருமணங்களுக்கு எதிரானது. காதல் இயற்கையாக ஏற்படுவது. 
1) மன ஈர்ப்போ, உடல் ஈர்ப்போ ஏற்படுகிறது. 
2)அன்பு பரிமாறப்படுகிறது. 
3)காமமும், அன்பும் ஒரு புள்ளியில் இணைந்து காதலாக மாறுகிறது. 
4) வாழ்க்கை நகர்கிறது. 
5)மற்ற பரிமாணங்கள் தெரிகிறது. 
6)அவையாவும் ஒத்துவந்தால் சட்டவசதிக்காக, சமூக வசதிக்காக திருமணமாகிறது. 7)இல்லையெனில் உறவு முறிகிறது. 
8)மீண்டும் எண் ஒன்றைப் படிக்கவும். 

இவ்வளவுதான் காதல். இதுதான் இயற்கை. இதற்கு மாறாக, பருவமெய்துவிட்ட காரணத்தாலும், சம்பாதிக்கத் துவங்கிவிட்ட காரணத்தாலும் திடீரென யாரோ ஒரு மூன்றாவது மனிதரை செய்துகொள்ளும் திருமணம் இயற்கையானதல்ல. கலாச்சாரம், கலாச்சாரம் என்று வகுப்பெடுக்கிறார்களே, நேரடியாக முதலிரவில், உடலுறவில் வாழ்க்கையை முளைக்க வைப்பதைவிடவா ஒரு கலாச்சாரச் சீரழிவு இருக்க முடியும்? 

ஆர்.எஸ்.எஸ் போன்ற சமூக பயங்கரவாத அமைப்புகள் இருதார மணங்களை எதிர்ப்பதில்லை, வன்புணர்வுகளுக்கு எதிரான பொங்கியிருக்கிறார்களா என்றால் இல்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தவறு எனக் கண்டித்திருக்கிறார்களா என்றால் இல்லை, ஊழலுக்கு எதிராக, மலத்தை வாயில் திணிக்கும் சாதியத்திற்கு எதிராகப் பொங்கியிருக்கிறார்களா என்றால் இல்லை. மதத்தையும்-சாதிய கட்டமைப்பையும், சாதி உணர்வையும் நிச்சயித்த திருமணங்களால் மட்டுமே தலைமுறை தலைமுறையாகக் கடத்த முடியும் என்பதில் தெளிவாக இருப்பதனால்தான் காதலை எதிர்க்கிறார்கள். தாலி கொடுத்து கட்டச் சொல்வது காதலர்களை கணவன்-மனைவிகளாக ஆக்கும் நல்லெண்ணத்தில் அல்ல. (அப்படி நல்லெண்ணம் இருந்தால் ஒரு அமைப்பை நிறுவி “எந்த மதம், சாதியைச் சேர்ந்த காதலர்களானாலும் வாருங்கள். நாங்கள் திருமணம் செய்துவைப்போம்” என அறிவிக்கட்டுமே பார்ப்போம்!!!) அவர்கள் நோக்கம் காதலர்களை பயப்பட வைப்பது, மனரீதியாகத் துன்புறுத்துவது மட்டுமே. அடுத்த வருடம் திருமணம் செய்யலாம் என சிலர் இருப்பார்கள், வேலை கிடைத்தபின் வீட்டில் சொல்லலாம் என சிலர் காத்திருப்பார்கள், சிலர் இந்தக் காதல் எவ்வளவு தொலைவு போகிறதோ போகட்டும் என இருப்பார்கள், சிலர் இதே காதல் இரண்டு வருடங்கள் தொடர்ந்தால் திருமணம் செய்யலாம் என்றிருப்பார்கள். அட, அவர்கள் காமத்திற்காக காதலிப்பவர்களாகவே இருக்கட்டுமே? இரு வயதுவந்தவர்கள் மனமுவந்து என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகிறார்கள், உனக்கென்ன வந்தது? உன்னையா புணர்ச்சிக்கு அழைத்தார்கள்? உங்கள் புராணங்களைவிட, பாஞ்சாலியின் ஐவர் படையை விட, கிருஷ்ணனின் லீலைகளைவிட, மனிதர்களின் காதல் எந்த விதத்தில் குறைந்துபோய்விட்டது? 

அதே நேரம் இந்தப் பக்கம் பார்த்தால், ’காதல் கற்பை நாசம் செய்கிறது,’ ‘காதலர் தினம் என்பது காமுகர்களின் வேலை’ என்றெல்லாம் போஸ்டர் ஒட்டிக்கொண்டு அலைகின்றன தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள். அப்படிப்பட்ட அறிவுஜீவி, தீவிர மதவாத அமைப்புகளிடம் நான் கேட்க விரும்பும் அதிமுக்கியமான கேள்வி, ’கற்பு என்றால் என்ன?’ என்பது! 

1) கற்பு என்பது ஆண்பாலா, பெண்பாலா? அல்லது இருபாலுக்கும் பொதுவானதா?
2)கற்பு என்பது ஆண்பால் என்றால் பலதார மணங்களை எப்படி இஸ்லாத் அனுமதிக்கிறது? 
3) கற்பு என்பது பெண்பால் என்றால் விவகாரத்துக்களையும், பெண் மறுமணத்தையும் இஸ்லாத் எப்படி ஆதரிக்கிறது? 
4) கற்பு என்பது திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதா?
5) பல திருமணங்களை அனுமதிக்கும் இஸ்லாத்தில், விவாகரத்தை எளிதாக அருளும் இஸ்லாத்தில், முதல் திருமணத்திற்கு முன்பு எப்படியோ கஷ்டப்பட்டு கற்பை காத்துக் கொள்கிறார்கள் சரி, இரண்டாம் திருமணத்தின்போது முதல் திருமணத்தால் கற்பு பறிபோய், கற்பின்றிதானே இருப்பார்கள். அது தவறில்லையா? இல்லை மீண்டும் கற்பை புதுப்பித்துக்கொள்ள இஸ்லாம் எதும் வழிவகை செய்திருக்கிறதா?
6) காதல் காமுகர்களின் வேலை என்றால், காதலற்ற, நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்குப் பின்பான காமம் யாரின் வேலை? காதலுடன் காமமுறுகிறவர்களே காமுகர்கள் என்றால், காதலின்றி காமமுறுகிறவர்கள் யார்? 

இஸ்லாத்தில் நான் பெரிதும் மதிக்கும் ஒரு விஷயம் ஆண்-பெண் பேதமின்றி அது தரும் ‘திருமண பந்தத்தை முறித்து பிரிந்து போதலுக்கான உரிமை’. திருமணவாழ்க்கைகள் பெரும்பாலும் பிரச்சினைக்குள்ளாவது இந்த பிரிந்துபோவதற்கான உரிமை இல்லாமை தான். இந்து மதத்தில் அவ்வளவு சுலபமாக ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்துவிடமுடியாது. அப்படியே போராடி விவாகரத்து பெற்றுவிட்டாலும் அவளை ஏதோ மோசமான பெண்ணாக, உடலுறவுக்கு ஏங்கும் பெண்ணாக மட்டுமே பார்க்கும் ‘கலாச்சாரம்’ உண்டு. ஆனால் இஸ்லாம் அந்தக் ’கலாச்சாரம்’ இல்லாத ஒன்று. விவாகரத்து பெற்று மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் பல இஸ்லாமியப் பெண்களை நான் பார்த்திருக்கிறேன். பல விஷயங்களில் முரட்டுத்தனமான பழமைவாதத்துடன் இருந்தாலும், இஸ்லாத்தில் இருக்கும் வெகுசில முற்போக்கான விஷயங்களில் இதுவும் ஒன்று. 

ஆக, இருக்கும் சில முற்போக்கான விஷயங்களையும் கூட அழித்து, இஸ்லாத்தை வெகுஜன மக்களிடம் வெகுதூரம் அழைத்துச் செல்லும் வேலையைத்தான் வலதுசாரி அமைப்புகளான தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் செய்கின்றன. ஏற்கனவே இந்து மத அமைப்புகளால் இஸ்லாமிய அமைப்புகள் தவறாகச் சித்தரிக்கப்படும் சூழலில் தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் உண்மையிலேயே தவறுகளைச் செய்து எரியும் தீயில் எண்ணை ஊற்றும் வேலையைச் செய்கின்றன. அவற்றை இஸ்லாமியர்களே புறக்கணித்தல் நல்லது. 

இந்த இரு கலாச்சாரக்காவலர்களையும் தாண்டி ‘சீ சீ இந்தப்பழம் புளிக்கும்’ என்ற கோஷ்டி ஒன்றும் உள்ளது. அது குறித்து என் குருநாதர் வினையூக்கியின் நண்பர் டான் அசோக் நேற்று, 
”காதலர் தினம் அன்னைக்கு எவன்லாம் கலாச்சார வகுப்பு எடுக்குறான்றதை நோட் பண்ணிட்டு அவன் பின்புலத்தை ஆராய்ஞ்சீங்கன்னா, வயசுப் பருவத்துல காதலுக்காக லோ லோ லோனு அலைஞ்சு, ஃபிகர் கிடைக்காதானு தெருத்தெருவா திரிஞ்சி, கடைசில ஒரே ஒரு லவ் கூட பண்ண முடியாம நொந்து நூடுல்ஸ் ஆகி, ஒரு பொண்ணோட கூட நட்பு வைக்கவே முடியாத லூசுப்பயலா இருந்து, கடைசியா வேற வழியே இல்லாம இந்த ’கலாச்சாரக் காவலன்’ வேஷம் போட்டவனாதான் இருப்பான்! எந்த வயது வந்த ஆணுக்கும்-பெண்ணுக்கும் காதலிக்கும் உரிமை இருக்கிறது என்பதையும், அதேபோல் பிரிந்து போகும் உரிமையும் இருக்கிறது என்பதையும், அது முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதும் புரியலைன்னா, நீங்கள்லாம் எல்.கே.ஜில சேர்றதுக்குக்கூட லாயக்கில்லாதவய்ங்கனு அர்த்தம். மூளையே தேவைப்படாத ஆர்.எஸ்.எஸ்லயும், தவ்ஹீத் ஜமாத்லயும் மட்டும் தான் சீட்டு கிடைக்கும். காதலர்கள் அனைவருக்கும், காதலிக்க நினைக்கும் அனைவருக்கும், ’கணவன் -மனைவி’கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். ” 
என்று ஒரு நிலைத்தகவல் போட்டிருந்தார். அதுவே பல கட்டுரைகளுக்கான விஷயத்தைச் சொல்லிவிட்டதால் இந்த ‘சீ சீ புளிக்கும்’ குழுவைப் பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்தக் சீ சீ குழுவைச் சேர்ந்த பலர் காலப்போக்கில் காதலை சந்திக்கும்போது தானாகவே திருந்திவிடுவார்கள். கடைசிவரை பெண்களைப் புரிந்துகொள்ளாத, அல்லது காதலே கிடைக்காமல், காய்ந்து போனவர்கள் ஏதாவது வலதுசாரி அமைப்போடு ஒன்றிவிடுவார்கள். அவர்களைத் தான் மேலே தாக்கிவிட்டோமே, அதனால் தனிப்பகுதி தேவையில்லை. 

காதலைக் கொண்டாடுங்கள். காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என அலையும், முழுமனிதர்களாக பரிணாமவளர்ச்சி அடையாத கோமாளிகளைப் பார்த்து “ஏய் அங்க பாரு கோமாளி” எனச் சிரியுங்கள். காதலை எந்த நூற்றாண்டிலுமே எவராலுமே எதுவும் செய்யமுடியவில்லை. அட... ஈடன் கார்டனில் கடவுளாலேயே காதலை எதுவும் செய்ய முடியாதபோது, இந்தக் கோமாளிகள் எம்மாத்திரம்!! கிளிமூக்கு அரக்கனின் அனைத்து ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள். 

-அன்புடன் கிளிமூக்கு அரக்கன். 
(தோழர் கிளிமூக்கு அரக்கன் பிரபலமான முகநூல் எழுத்தாளர். அவரின் எழுத்துக்களைப் பின்தொடர இந்தச் சுட்டியை அழுத்தவும்   
https://www.facebook.com/kilimookku )

1 comment:

Antony Raj said...

மிக நல்ல பதிவு... நானும் கூட எனது பதிவில் காதலுக்கு எதிராக உள்ள சிலவர்கலை பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் என்னால் இவ்வளவு தெளிவாக நன்றாக அலசி எழுதமுடியவில்லை நீங்கள் மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...