Monday, January 27, 2014

இந்திய அரசின் முதலாளி குடியரசுத்தலைவரின் உரையும், சில கேள்விகளும். -டான் அசோக்

”அரசு தர்மச்சத்திரம் அல்ல”, என ஆம் ஆத்மியை மறைமுகமாகத் தாக்குவதாய் நினைத்துக் கொண்டு ஜனநாயகத்தையும், குடியரசையும், அரசுக்கு நியாயமாக இருக்க வேண்டிய செயல்பாட்டுக் கொள்கைளையும் படுபயங்கரமாகத் தாக்கியிருக்கிறார், அல்லது உளறியிருக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ. டெல்லியில் மின்சார விலையை பாதியாகக் கொடுப்பதாகவும், இலவச குடிநீர் அளிப்பதாகவும் மக்களுக்கு ஆம் ஆத்மி தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தது. இதை மனதில் வைத்தே பிரணாப் முகர்ஜீ இந்த உரையை ஆற்றியிருக்கிறார்.  

இந்தியா போன்ற நாடுகளில் நிலவும் மக்களாட்சியை, அரசை, நாம் எப்படி அழைக்கிறோம்? People's welfare government, அதாவது மக்கள் நல அரசு என்கிறோம். மக்களின் வரிப்பணத்தை சரியான முறையில் நிர்வகித்து, அதை மூலமாக வைத்து மக்களுக்கு நலப்பணிகளை செய்வதுதான் மக்கள் நல அரசு. அதே நேரம் ரிலையன்ஸ், டாட்டா போன்ற நிறுவனங்களை நாம் ’மக்கள் நல நிறுவனங்கள்’ என அழைப்போமா? அழைத்தால் அந்நிறுவன முதலாளிகளே கூட சிரிப்பார்கள். ஏனெனில் அவை லாபத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள். மக்களை இந்நிறுவனங்கள் தங்கள் பொருட்களை வாங்கும் ’இயந்திரங்கள்’ என்ற அளவிலே மட்டும் தான் கணக்கில் கொள்கின்றன! இன்னும் சொல்லப் போனால் மக்களை, நாட்டின் வளத்தைப் பாதிக்கும் பல செயல்களை தங்கள் வியாபாரத்திற்காக, லாபத்திற்காக இந்நிறுவனங்கள் செய்யத் தயங்குவதில்லை.

அரசு என்பதை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலவும், அதன் முதலாளி தான்தான் என்ற கற்பனையிலும் தனது குடியரசுதின உரையை ஆற்றியிருக்கிறார் முகர்ஜீ. முதலில் ஒரு விஷயத்தை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய நாடு என்பது இந்திய மக்களினுடையதே தவிர ஒரு மன்னருக்கோ, ஒரு நிறுவனத்திற்கோ, ஏன் அரசுக்கே கூட சொந்தமானதல்ல. அரசு தர்மச்சத்திரமா இல்லையா எனப் பார்க்கும் முன், மக்கள் வரி தான் கட்டுகிறார்களேயொழிய நன்கொடை அளிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குடிமகன் தன் வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்கு அளிக்கிறான் என்றால் அதை அவன் தர்மகாரியமாக அளிக்கவில்லை. தன் வரி தனக்கு சாலையாக, குடிநீராக, வசதியாக, வாய்ப்பாக, நல்ல வாழ்வியல் சூழலாக என வேறு வேறு வடிவங்களில் அரசால் திருப்பித் தரப்படும் என்பதால் தான் கட்டுகிறான். அதாவது வரிப்பணத்தை நிர்வாகிப்பதன் மூலம் நாட்டை நிர்வாகிக்கும் உரிமையை அந்தக் குடிமகன் தன் நாட்டின் அரசுக்கு அளிக்கிறான். ஆனால் குடியரசுத் தலைவர் ஏதோ தனது நிறுவனத்தின் சொத்தை எடுத்து மக்களுக்கு இனாமாக அளிப்பதைப் போல ஆணவத்துடன் பேசியிருக்கிறார். யார் காசுக்கு யார் முதலாளி? இந்தியாவில் தேசிய வறுமைக்கோட்டின் கீழ், அதாவது ஒருநாளைக்கு 1.25 டாலர் வறுமானத்திற்கு கீழ் 32.7 சதவிகிதம் பேர் வாழ்வதாகவும், 70% பேர் 2 டாலர்களுக்குக் குறைந்த வருமானத்தில் வாழ்வதாகவும் கணக்கிட்டுள்ளது. இம்மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க வக்கில்லாத குடியரசின் தலைவர், ’அரசு தர்மச்சத்திரம் அல்ல’ எனப் பேசியிருப்பது முட்டாள்த்தனம் மட்டுமல்ல, மூர்த்தனமான அகங்காரமும் கூட.  

திருபாய் அம்பானிக்கும் இந்திரா காந்திக்கும் பாலமாக, ஏஜண்டாக இருந்தவர் என்ற முறையிலும், தன் அரசியல் வாழ்க்கை முழுதும் ரிலையன்ஸின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர் என்ற முறையிலும் பழைய கார்ப்பரேட் ஏஜண்ட் புத்தி அவரிடம் இன்னமும் ஒட்டி இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவரான பின்னரும் அதே புத்தியுடன் அரசை நிர்வகிக்க நினைப்பது கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

உலகமயமாக்கலுக்குப் பின் இந்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளில் ஒரு பெருமாற்றம் ஏற்பட்டுள்ளது. அவை பெரும்பாலும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்கை முடிவுகளைப் போல மாறியிருப்பதை கவனிக்கலாம். மக்களுக்கு நலப்பணிகள் செய்வதை விட, மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதை விட மக்களுடன் வியாபாரம் செய்வதில் தான் இந்த அரசுகள் ஆர்வமாக இருக்கின்றன. மக்களை குடிமக்களாகப் பார்க்காமல், நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கத் துவங்கியிருக்கின்றன இந்த கார்ப்பரேட் அரசுகள் (government corporates)!

இதற்கு சமீபத்திய உதாரணம் தமிழக அரசு. அரசுக்கு நிதி நெருக்கடி என்றால் மின்சார கட்டணத்தைப் பலமடங்காக உயர்த்தலாம், பால் விலையை ஏற்றலாம், பேருந்துக் கட்டணத்தை ஒரே இரவில் 200 மடங்கு அதிகரிக்கலாம் போன்ற, “நிதிப் பிரச்சினையா? மக்களிடம் வாங்கு. மக்களை வாட்டு” போன்ற கொள்கை முடிவுகள் ஒரு தேர்ந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்கை முடிவுகளேயன்றி ஒரு மக்கள் நல அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளாக அவற்றை ஏற்க முடியாது.  நிதிப் பிரச்சினை என்றால் வேலையாட்களை பணிநீக்கம் செய்வதும், தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதும் கார்ப்பரேட் நிறுவங்களின் வேலை. அது நியாயமும் கூட. ஆனால் ஒரு அரசின் வருமானத்திற்கு எத்தனையோ வழிகள் இருக்கும் போது நடுத்தர வர்க்க மக்களின் தலையில் காசுக்காக கை வைப்பதென்பதை, மனசாட்சியே இல்லாத, நிர்வாகத்திறனற்ற ஒரு அரசின் செயலாகத்தான் பார்க்கமுடியும்.

குடிமக்களுக்கு சுத்தமான குடிநீர், சாக்கடை வசதி, சாலை வசதி ஆகியவற்றை செய்து கொடுப்பது அரசின் கடமை. கேஜ்ரிவால் அதைத் தான் தன் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு அரசு தன் கடமையைச் செய்வதே நம் குடியரசுத் தலைவருக்கு ‘அரசு தர்மச் சத்திரம் ஆகிவிடுமோ?’ என்ற அச்சத்தைத் தருகிறதென்றால் அதைவிடக் கேவலம் வேறென்ன இருக்க முடியும்?

தமிழக அரசின் மினரல் வாட்டர் விற்பனை மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல திட்டமாகத் தெரியலாம். தனியார் நிறுவனங்களின் கொட்டத்தை அடக்குவதைப் போலக் கூடத் தெரியும். ஆனால் காற்று போல இலவசமாகக் கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீர், “தண்ணீர் போல செலவழிக்காதே” எனப் பழமொழிகளில் இடம் பிடித்த தண்ணீர் இன்று பால் விலை விற்கிறது என்றால் அதற்கு என்ன தீர்வு என்பதை சிந்திக்காமல், படிப்படியாக அதைச் சரி செய்ய நினைக்காமல், அத்தியாவசியத் தேவையான தண்ணீரை விற்கும் கோதாவில் அரசும் குதிப்பதென்பது சகிக்க முடியாத செயல். ஒரு மாநில அரசு, மினரல் வாட்டர் விற்பதென்பது அந்த மாநில மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம். எல்லோரும் காசு கொடுத்துதான் நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், காசில்லாதவர்கள் எங்கே போவார்கள்? அவர்களெல்லாம் சுத்தமான நீர் அருந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? அவர்களுக்கு இப்போது அரசு வழங்கும் குடிநீரை மற்ற வர்க்கத்தினர் அருந்தமாட்டார்கள் என அரசே நினைத்தால் அதைவிட அசிங்கம் அரசுக்கு இருக்க முடியுமா? காசு இருப்பவர்கள் அக்வாஃபீனா குடியுங்கள், இல்லாதவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்ற கொள்கை கொக்கோகோலா நிறுவனத்திற்கு சரி. அதையே அரசும் செய்தால் வியாபார நிறுவனங்களுக்கும், மக்கள் நல அரசிற்கும் பின் என்னதான் வித்தியாசம்? இப்படி அரசை நடத்த எதற்கு தேர்தல்? பெரிய பெரிய வியாபாரிகள் பங்குபெறும் ஒரு போர்ட் மீட்டிங் போதுமே!

உதாரணத்திற்கு, அரசு மருத்துவமனைகள் இலவச மருத்துவம் தருகின்றன. அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனைகளைப் போல தரமான மருத்துவமும், கவனிப்பும் தருகிறோம் எனச் சொல்லி அரசே “தரமான மருத்துவம் கிடைக்கும் அரசு மலிவு விலை மருத்துவமனை” என்று ஒன்றைத் தனியாகத் துவங்கினால் அது எவ்வளவு பெரிய கேலிக்கூத்தாக இருக்குமோ அதே போன்ற ஒன்றுதான் குடிநீரை விற்பதும். அப்போலோவிற்கு போட்டியாக அரசு செயல்பட வேண்டுமென்றால் இலவச மருத்துவம் வழங்கும் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு நம்பிக்கை வரவைக்க வேண்டுமேயன்றி அப்போலோவிற்கு போட்டியாக ஒரு காசு வாங்கும் மருத்துவமனை தொடங்குவதை ’மக்கள் நல அரசின்’கொள்கையாக ஏற்க முடியாது.

ஆக இப்படியான நிறுவனமய கொள்கைகள் தொடர்ந்துகொண்டே இருப்பதுடன் பலப்பல விஷயங்களில் கார்ப்பரேட்களாக மட்டுமே அரசுகள் நடந்துகொள்கின்றன. தனியார் நிறுவனங்களிலாவது அவற்றுள் போட்டி இருப்பதால்  மக்கள் தங்களுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி உண்டு. ஆனால் மின்சாரம், பேருந்து போன்ற அத்தியாவசியத் தேவைகளை ஒற்றை ஆளாகக் கையில் வைத்திருக்கும் அரசு, சர்வாதிகாரத்தனமாக கடும்  விலையேற்றச் சுமைகளை மக்கள் மீது ஏற்றும் போது, மக்கள் ஒரு முதலாளிக்கு அஞ்சுவதைப் போல அரசுக்கு அஞ்சும் நிலைமை தான் ஏற்படும், ஏற்பட்டிருக்கிறது. வரம் கொடுத்தவன் கையில் தலையை வைக்கும் வேலையைத் தான் லாப நோக்குடன் செயல்படும் கார்ப்பரேட் அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற கொள்கைகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக குடியரசுத் தலைவரின் பேச்சு அமைந்துள்ளது. கேஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு இலவசக் குடிநீர் குடிப்பதாக் அறிவித்திருப்பது தற்காலச் சூழலில் கேலியாகப் பார்க்கப்படலாம். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, அரசி மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்குவதைக் கூட கேலியாகப் பார்க்க வைக்கும் நிலைமையில் நாட்டைத் தள்ளியிருக்கும் காங்கிரசிற்கும், பிற கட்சிகளுக்கும் அவரது வாக்குறுதி வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை எப்படியேனும் நிறைவேற்றுவதுதான் அரசின் கடமையேயொழிய, லாபநோக்குடன் மக்களை நுகர்வோராக மட்டுமே அணுகுவதல்ல.  இதை முன்னாள் கார்ப்பரேட் ஏஜண்டான முகர்ஜீ மட்டுமல்லாது, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜண்டுகளாகச் செயல்படும் மத்திய, மாநில அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களாகவே செயல்படும் தமிழக அரசு போன்ற அரசுகளும் புரிந்துகொள்ள வேண்டும்.  புரிந்துகொண்டால் மட்டுமே மக்கள் நல அரசு என்று பீற்றுவதில் உண்மை இருக்க முடியும்.


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...