Thursday, January 9, 2014

நேருக்கு நேர் வீரபாண்டியன், சில கேள்விகள், சில கருத்துக்கள்

பதினாறு, பதினேழு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒளிபரப்பான ஒரே ஒரு அரசியல் நிகழ்ச்சி என்றால் அது வீரபாண்டியனின் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சி தான். இன்று அரசியல் பேசும் இளைஞர்கள் அத்தனைபேரும் கொஞ்சமேனும் வீரபாண்டியனிடமிருந்து சிறு வயதில் அரசியல் பார்வையைக் கற்றிருப்பார்கள். நிகழ்ச்சியின் போது பதறாமல், நிதானமாக, பேட்டி கொடுப்பவரின் கண்களை நோக்கி கேள்விகளை முன்வைத்து விஷயங்களைக் கறக்கும் ஆற்றல் உள்ளோர், வியாபார நோக்குடன் எதையும் அணுகும் இந்தக் காலத்தில் மிகச் சிலர் தான். இந்திய ஊடகத் துறையில் கரன் தப்பாருக்க்கு அடுத்து அந்த ஆற்றலைக் கொண்டிருந்தவர், கொண்டிருப்பவர் நேருக்கு நேர் வீரபாண்டியன் மட்டுமே.

இன்று தந்தி, புதிய தலைமுறை, சத்யம் என எத்தனையோ ‘பரபரப்பு’ தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. எதிலும் எப்போதும் எங்கும் எதாவது விவாதம் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. பாண்டே, குப்தா, சஞ்சய் மஞ்சரேக்கர் என்ற பெயருள்ளோர் எல்லாம் கூட தமிழகப் பிரச்சினைகளைப் பற்றி நுனிப்புல் அலசல் அலசுகிறார்கள், தமிழக அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுக்கிறார்கள். ஆனால் அவற்றில் எல்லாம் இரண்டு விஷயங்களை நீங்கள் தெளிவாகக் கவனிக்கலாம்.

1) அவர்கள் கேட்கும் கேள்விகள் அத்தனையுமே யாரையாவது ஒரு பிரபலத்தையோ, கட்சியையோ, கொள்கையையோ பற்றி நிகழ்ச்சிக்கு வந்திருப்பவரை நாலு வார்த்தை பரபரப்பாக அல்லது அவதூறாகப் பேசச் செய்து விடமாட்டோமா... அதன் மூலம் ரேட்டிங் கிடைக்காதா என்ற நோக்கில் இருக்கும்.  (அழகிரியிடம் ஸ்டாலினைப் பற்றி எதேனும் அவதூறு கிடைக்காதா என்ற எண்ணத்தில், முற்றிலும் அதை நோக்கியே நகர்ந்த சமீபத்திய புதிய தலைமுறை பேட்டி இதற்கு உதாரணம்.)

2) சராசரி குடிமக்களான நாம் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் கேட்க விரும்பும் முக்கியமான கேள்விகளைக் கூட அவர்கள் அந்தக் குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் கேட்க மாட்டார்கள்.

தமிழக ஊடகங்கள் என்றில்லை, இந்திய அளவில் எதை எடுத்துக் கொண்டாலும் இதே கதை தான். உதாரணமாக இந்தியாவின் அத்தனை விவாதங்களிலும் ராஜீவ் கொலை பற்றியும், புலிகள் பற்றியும் பொங்கி எழும் சாமியிடம் “உங்களையும் விசாரிக்கச் சொல்லி ஜெயின் கமிஷன் பரிந்துரை செய்ததே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என ஒரே ஒருவனாவது கேட்டிருக்கிறானா? ஏன் எவனுக்குமே ஜெயின் கமிஷன் பற்றித் தெரியாதா என்ன? (சு.சாமியிடம் ஒரே ஒருவர் ஒருமுறை இந்தக் கேள்வியைக் கேட்டார். அந்தக் கேள்வி வெளிப்பட்டதுமே அரங்கை விட்டு எழுந்துபோய்விட்டான் சு.சாமி. அந்தக் கேள்வியைக் கேட்டது நிகழ்ச்சியை நடத்தியவர் அல்ல. அதில் மற்றொரு விருந்தினராகப் பங்கு கொண்ட அய்யா சு.ப.வீரபாண்டியன்)

ஆனால் இது இரண்டையுமே நீங்கள் நேருக்கு நேர் வீரபாண்டியனின் நிகழ்ச்சியில் காண முடியாது. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை பெரும்பாலும் அடுத்த நொடி அவர் கேட்டிருப்பார். அதே நேரத்தில் எந்த அரசியல் முன்முடிவுகளும் இல்லாமல், பாரபட்சமும் இல்லாமல் இருக்கும் அவர் கேள்விகள். அதனால் தானோ என்னவோ தமிழக ஊடகங்களின் துவக்க காலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தரமான நிகழ்ச்சியை எந்த அலட்டலும் இல்லாமல் அட்டகாசமாக வழங்குகிறவர் அந்த நிகழ்ச்சியோடு மட்டுமே குறுகிப் போய்விட்டார்! நிகழ்ச்சி இயக்குனரின் வார்த்தைகளை அப்படியே காமிரா முன் கொட்டும் நேற்று வந்த ’மொக்கை’ தொகுப்பாளர்கள் எல்லாம் எங்கோ உயரத்தில் போய்க் கொண்டிருக்க, வீரபாண்டியனின் வளர்ச்சி சன்டிவியோடும், நேருக்கு நேர் நிகழ்ச்சியோடும் குறுகி நின்றுவிட்டது. ஒருவேளை ஜெயா டிவியில் சேர்ந்து ரபி பெர்னாட் போல ’திறமையான’ முறையில் நிகழ்ச்சி நடத்திருந்தால் ராஜ்யசபா சீட் கொடுத்திருப்பார்களோ என்னவோ!

இன்று அந்த நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சன்டிவி. முசாஃபர் நகர் கலவரத்தில் இந்துத்துவ சக்திகளின் பங்கையும், மோடியின் கொள்கைகளைப் பற்றியும் ஒரு கூட்டத்தில் எதிர்மறையாகப் பேசியதால் வீரபாண்டியனின் நேருக்கு நேர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் நிறுத்தியிருக்கிறது சன் நிர்வாகம். பி.ஜே.பிக்காரர்களின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கையாம்! கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது. சுய கருத்துக்களே இல்லாமல் இருக்கச் சொல்கிறதா சன் டிவி? அல்லது பிஜேபிக்கு எதிரான கருத்துக்கள் இல்லாமல் இருக்கச் சொல்கிறாதா?

எது எப்படியாகிலும் இந்தியாவின் ஒரே ஒரு உருப்படியான, நேர்மையான நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டியது நம் கடமை. கொஞ்சமேனும் நேர்மையோடும், நெஞ்சில் பட்டதைப் பேசும் தைரியமும் இருக்கும் ஊடகவியலாளர்களையும் இப்படி நீக்கிக் கொண்டிருந்தால் பத்திரிக்கைகள், டிவிக்கள் எல்லாம் துக்ளக் போல ‘சோ கருத்து’ ‘கலாநிதிமாறன் கருத்து’ ‘பச்சைமுத்து கருத்து’ என ஊடக முதலாளிகளின் சுய கருத்து வலைப்பூக்களாக வெளிவர வேண்டியதுதான். கிடைத்துக் கொண்டிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் உண்மையும் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். வீரபாண்டியனின்  நேருக்கு நேர் விரைவில் விடுதலை செய்யப்படும் என நம்புவோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் சன்டிவியை விட்டு விலகி வேறு எதாவது தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியை வழங்க வேண்டும் என்பது என் கோரிக்கை. சிறு வயதில் நேருக்கு நேரின் மூலம் அரசியல் பார்வையை செழுமையாக்கிக் கொண்டவன் என்ற முறையில் என் முழு ஆதரவும் வீரபாண்டியனுக்கு உண்டு.

3 comments:

valampuri said...

Yes.your words is very correct.
I know personaly Mr Veerapandian when he was work in singapore oli.
Could pls give me his hp no.
Thanam

பரிமள ராசன் said...

எப்படீங்க சன் டீவி எனும் அரைபார்ப்பன,பார்ப்பன அடிமைகள் குறித்து ஒரே ஒரு கடுமையான வார்த்தைகளைக்கூட பயன் படுத்தாமல் எழுத முடிகிறது?
குறைந்தபட்ச உறுத்துதல் ஏதும் இல்லாமல் !
///எதிர்மறையாகப் பேசியதால்///என்ன எதிர் மறையாக பேசினார்?
//// பி.ஜே.பிக்காரர்களின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கையாம்! கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது.////இதில் வேடிக்கையும்,நகையும்தான் வருமா?ஏன் கோபம் அல்லது குறைந்த பட்சம் கவலை கூட இல்லை?
/// விரைவில் விடுதலை செய்யப்படும் என நம்புவோம்.///ஆத்திகர்களின் வார்த்தை நம்புவோம்.பெரியார் தொண்டர்களின் வார்த்தை 'விரைவில் விடுதலை செய்ய போராடுவோம்'
///அவர் சன்டிவியை விட்டு விலகி வேறு எதாவது ///நல்ல ஆலோசனை !

ராம்ஜி_யாஹூ said...

சண் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சியை முதலில் நடத்தியவரே ரபி பெர்னார்ட் தான்.
அவரின் உதவியாளராக இருந்தவரே வீர பாண்டியன்.
நீங்கள் ரபி பெர்னார்ட் காலத்தில் நேருக்கு நேர் பார்த்தது இல்லை போல, பல மடங்கு சிறப்பாக இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...