Monday, January 27, 2014

இந்திய அரசின் முதலாளி குடியரசுத்தலைவரின் உரையும், சில கேள்விகளும். -டான் அசோக்

”அரசு தர்மச்சத்திரம் அல்ல”, என ஆம் ஆத்மியை மறைமுகமாகத் தாக்குவதாய் நினைத்துக் கொண்டு ஜனநாயகத்தையும், குடியரசையும், அரசுக்கு நியாயமாக இருக்க வேண்டிய செயல்பாட்டுக் கொள்கைளையும் படுபயங்கரமாகத் தாக்கியிருக்கிறார், அல்லது உளறியிருக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ. டெல்லியில் மின்சார விலையை பாதியாகக் கொடுப்பதாகவும், இலவச குடிநீர் அளிப்பதாகவும் மக்களுக்கு ஆம் ஆத்மி தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தது. இதை மனதில் வைத்தே பிரணாப் முகர்ஜீ இந்த உரையை ஆற்றியிருக்கிறார்.  

இந்தியா போன்ற நாடுகளில் நிலவும் மக்களாட்சியை, அரசை, நாம் எப்படி அழைக்கிறோம்? People's welfare government, அதாவது மக்கள் நல அரசு என்கிறோம். மக்களின் வரிப்பணத்தை சரியான முறையில் நிர்வகித்து, அதை மூலமாக வைத்து மக்களுக்கு நலப்பணிகளை செய்வதுதான் மக்கள் நல அரசு. அதே நேரம் ரிலையன்ஸ், டாட்டா போன்ற நிறுவனங்களை நாம் ’மக்கள் நல நிறுவனங்கள்’ என அழைப்போமா? அழைத்தால் அந்நிறுவன முதலாளிகளே கூட சிரிப்பார்கள். ஏனெனில் அவை லாபத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள். மக்களை இந்நிறுவனங்கள் தங்கள் பொருட்களை வாங்கும் ’இயந்திரங்கள்’ என்ற அளவிலே மட்டும் தான் கணக்கில் கொள்கின்றன! இன்னும் சொல்லப் போனால் மக்களை, நாட்டின் வளத்தைப் பாதிக்கும் பல செயல்களை தங்கள் வியாபாரத்திற்காக, லாபத்திற்காக இந்நிறுவனங்கள் செய்யத் தயங்குவதில்லை.

அரசு என்பதை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலவும், அதன் முதலாளி தான்தான் என்ற கற்பனையிலும் தனது குடியரசுதின உரையை ஆற்றியிருக்கிறார் முகர்ஜீ. முதலில் ஒரு விஷயத்தை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய நாடு என்பது இந்திய மக்களினுடையதே தவிர ஒரு மன்னருக்கோ, ஒரு நிறுவனத்திற்கோ, ஏன் அரசுக்கே கூட சொந்தமானதல்ல. அரசு தர்மச்சத்திரமா இல்லையா எனப் பார்க்கும் முன், மக்கள் வரி தான் கட்டுகிறார்களேயொழிய நன்கொடை அளிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குடிமகன் தன் வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்கு அளிக்கிறான் என்றால் அதை அவன் தர்மகாரியமாக அளிக்கவில்லை. தன் வரி தனக்கு சாலையாக, குடிநீராக, வசதியாக, வாய்ப்பாக, நல்ல வாழ்வியல் சூழலாக என வேறு வேறு வடிவங்களில் அரசால் திருப்பித் தரப்படும் என்பதால் தான் கட்டுகிறான். அதாவது வரிப்பணத்தை நிர்வாகிப்பதன் மூலம் நாட்டை நிர்வாகிக்கும் உரிமையை அந்தக் குடிமகன் தன் நாட்டின் அரசுக்கு அளிக்கிறான். ஆனால் குடியரசுத் தலைவர் ஏதோ தனது நிறுவனத்தின் சொத்தை எடுத்து மக்களுக்கு இனாமாக அளிப்பதைப் போல ஆணவத்துடன் பேசியிருக்கிறார். யார் காசுக்கு யார் முதலாளி? இந்தியாவில் தேசிய வறுமைக்கோட்டின் கீழ், அதாவது ஒருநாளைக்கு 1.25 டாலர் வறுமானத்திற்கு கீழ் 32.7 சதவிகிதம் பேர் வாழ்வதாகவும், 70% பேர் 2 டாலர்களுக்குக் குறைந்த வருமானத்தில் வாழ்வதாகவும் கணக்கிட்டுள்ளது. இம்மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க வக்கில்லாத குடியரசின் தலைவர், ’அரசு தர்மச்சத்திரம் அல்ல’ எனப் பேசியிருப்பது முட்டாள்த்தனம் மட்டுமல்ல, மூர்த்தனமான அகங்காரமும் கூட.  

திருபாய் அம்பானிக்கும் இந்திரா காந்திக்கும் பாலமாக, ஏஜண்டாக இருந்தவர் என்ற முறையிலும், தன் அரசியல் வாழ்க்கை முழுதும் ரிலையன்ஸின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர் என்ற முறையிலும் பழைய கார்ப்பரேட் ஏஜண்ட் புத்தி அவரிடம் இன்னமும் ஒட்டி இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவரான பின்னரும் அதே புத்தியுடன் அரசை நிர்வகிக்க நினைப்பது கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

உலகமயமாக்கலுக்குப் பின் இந்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளில் ஒரு பெருமாற்றம் ஏற்பட்டுள்ளது. அவை பெரும்பாலும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்கை முடிவுகளைப் போல மாறியிருப்பதை கவனிக்கலாம். மக்களுக்கு நலப்பணிகள் செய்வதை விட, மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதை விட மக்களுடன் வியாபாரம் செய்வதில் தான் இந்த அரசுகள் ஆர்வமாக இருக்கின்றன. மக்களை குடிமக்களாகப் பார்க்காமல், நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கத் துவங்கியிருக்கின்றன இந்த கார்ப்பரேட் அரசுகள் (government corporates)!

இதற்கு சமீபத்திய உதாரணம் தமிழக அரசு. அரசுக்கு நிதி நெருக்கடி என்றால் மின்சார கட்டணத்தைப் பலமடங்காக உயர்த்தலாம், பால் விலையை ஏற்றலாம், பேருந்துக் கட்டணத்தை ஒரே இரவில் 200 மடங்கு அதிகரிக்கலாம் போன்ற, “நிதிப் பிரச்சினையா? மக்களிடம் வாங்கு. மக்களை வாட்டு” போன்ற கொள்கை முடிவுகள் ஒரு தேர்ந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்கை முடிவுகளேயன்றி ஒரு மக்கள் நல அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளாக அவற்றை ஏற்க முடியாது.  நிதிப் பிரச்சினை என்றால் வேலையாட்களை பணிநீக்கம் செய்வதும், தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதும் கார்ப்பரேட் நிறுவங்களின் வேலை. அது நியாயமும் கூட. ஆனால் ஒரு அரசின் வருமானத்திற்கு எத்தனையோ வழிகள் இருக்கும் போது நடுத்தர வர்க்க மக்களின் தலையில் காசுக்காக கை வைப்பதென்பதை, மனசாட்சியே இல்லாத, நிர்வாகத்திறனற்ற ஒரு அரசின் செயலாகத்தான் பார்க்கமுடியும்.

குடிமக்களுக்கு சுத்தமான குடிநீர், சாக்கடை வசதி, சாலை வசதி ஆகியவற்றை செய்து கொடுப்பது அரசின் கடமை. கேஜ்ரிவால் அதைத் தான் தன் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு அரசு தன் கடமையைச் செய்வதே நம் குடியரசுத் தலைவருக்கு ‘அரசு தர்மச் சத்திரம் ஆகிவிடுமோ?’ என்ற அச்சத்தைத் தருகிறதென்றால் அதைவிடக் கேவலம் வேறென்ன இருக்க முடியும்?

தமிழக அரசின் மினரல் வாட்டர் விற்பனை மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல திட்டமாகத் தெரியலாம். தனியார் நிறுவனங்களின் கொட்டத்தை அடக்குவதைப் போலக் கூடத் தெரியும். ஆனால் காற்று போல இலவசமாகக் கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீர், “தண்ணீர் போல செலவழிக்காதே” எனப் பழமொழிகளில் இடம் பிடித்த தண்ணீர் இன்று பால் விலை விற்கிறது என்றால் அதற்கு என்ன தீர்வு என்பதை சிந்திக்காமல், படிப்படியாக அதைச் சரி செய்ய நினைக்காமல், அத்தியாவசியத் தேவையான தண்ணீரை விற்கும் கோதாவில் அரசும் குதிப்பதென்பது சகிக்க முடியாத செயல். ஒரு மாநில அரசு, மினரல் வாட்டர் விற்பதென்பது அந்த மாநில மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம். எல்லோரும் காசு கொடுத்துதான் நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், காசில்லாதவர்கள் எங்கே போவார்கள்? அவர்களெல்லாம் சுத்தமான நீர் அருந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? அவர்களுக்கு இப்போது அரசு வழங்கும் குடிநீரை மற்ற வர்க்கத்தினர் அருந்தமாட்டார்கள் என அரசே நினைத்தால் அதைவிட அசிங்கம் அரசுக்கு இருக்க முடியுமா? காசு இருப்பவர்கள் அக்வாஃபீனா குடியுங்கள், இல்லாதவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்ற கொள்கை கொக்கோகோலா நிறுவனத்திற்கு சரி. அதையே அரசும் செய்தால் வியாபார நிறுவனங்களுக்கும், மக்கள் நல அரசிற்கும் பின் என்னதான் வித்தியாசம்? இப்படி அரசை நடத்த எதற்கு தேர்தல்? பெரிய பெரிய வியாபாரிகள் பங்குபெறும் ஒரு போர்ட் மீட்டிங் போதுமே!

உதாரணத்திற்கு, அரசு மருத்துவமனைகள் இலவச மருத்துவம் தருகின்றன. அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனைகளைப் போல தரமான மருத்துவமும், கவனிப்பும் தருகிறோம் எனச் சொல்லி அரசே “தரமான மருத்துவம் கிடைக்கும் அரசு மலிவு விலை மருத்துவமனை” என்று ஒன்றைத் தனியாகத் துவங்கினால் அது எவ்வளவு பெரிய கேலிக்கூத்தாக இருக்குமோ அதே போன்ற ஒன்றுதான் குடிநீரை விற்பதும். அப்போலோவிற்கு போட்டியாக அரசு செயல்பட வேண்டுமென்றால் இலவச மருத்துவம் வழங்கும் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு நம்பிக்கை வரவைக்க வேண்டுமேயன்றி அப்போலோவிற்கு போட்டியாக ஒரு காசு வாங்கும் மருத்துவமனை தொடங்குவதை ’மக்கள் நல அரசின்’கொள்கையாக ஏற்க முடியாது.

ஆக இப்படியான நிறுவனமய கொள்கைகள் தொடர்ந்துகொண்டே இருப்பதுடன் பலப்பல விஷயங்களில் கார்ப்பரேட்களாக மட்டுமே அரசுகள் நடந்துகொள்கின்றன. தனியார் நிறுவனங்களிலாவது அவற்றுள் போட்டி இருப்பதால்  மக்கள் தங்களுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி உண்டு. ஆனால் மின்சாரம், பேருந்து போன்ற அத்தியாவசியத் தேவைகளை ஒற்றை ஆளாகக் கையில் வைத்திருக்கும் அரசு, சர்வாதிகாரத்தனமாக கடும்  விலையேற்றச் சுமைகளை மக்கள் மீது ஏற்றும் போது, மக்கள் ஒரு முதலாளிக்கு அஞ்சுவதைப் போல அரசுக்கு அஞ்சும் நிலைமை தான் ஏற்படும், ஏற்பட்டிருக்கிறது. வரம் கொடுத்தவன் கையில் தலையை வைக்கும் வேலையைத் தான் லாப நோக்குடன் செயல்படும் கார்ப்பரேட் அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற கொள்கைகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக குடியரசுத் தலைவரின் பேச்சு அமைந்துள்ளது. கேஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு இலவசக் குடிநீர் குடிப்பதாக் அறிவித்திருப்பது தற்காலச் சூழலில் கேலியாகப் பார்க்கப்படலாம். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, அரசி மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்குவதைக் கூட கேலியாகப் பார்க்க வைக்கும் நிலைமையில் நாட்டைத் தள்ளியிருக்கும் காங்கிரசிற்கும், பிற கட்சிகளுக்கும் அவரது வாக்குறுதி வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை எப்படியேனும் நிறைவேற்றுவதுதான் அரசின் கடமையேயொழிய, லாபநோக்குடன் மக்களை நுகர்வோராக மட்டுமே அணுகுவதல்ல.  இதை முன்னாள் கார்ப்பரேட் ஏஜண்டான முகர்ஜீ மட்டுமல்லாது, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜண்டுகளாகச் செயல்படும் மத்திய, மாநில அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களாகவே செயல்படும் தமிழக அரசு போன்ற அரசுகளும் புரிந்துகொள்ள வேண்டும்.  புரிந்துகொண்டால் மட்டுமே மக்கள் நல அரசு என்று பீற்றுவதில் உண்மை இருக்க முடியும்.


Saturday, January 25, 2014

அழகிரி நீக்கம்! தாக்கமும், விளைவுகளும். சில கருத்துக்கள்.

அழகிரி நீக்கப்படுவது திமுகவில் புதிதல்ல. ஏற்கனவே ஒருமுறை நடந்திருக்கிறது. அப்போது அழகிரியின் எதிவினை எப்படி இருந்தது, திமுகவை அது எந்த வகையில் பாதித்தது என்பது குறித்து பார்க்கும் முன் அழகிரியை ஒரு குட்டி முன்னோட்டம் விட்டுவிடலாம்.

1) முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனித்துக் கொள்வதற்காக மதுரைக்கு தலைமையால் அனுப்பப்பட்டவர் அழகிரி. அப்படியே உள்ளூர் கட்சிக்காரர்களின் பழக்கம் ஏற்பட அழகிரிக்கென்ற தனி லாபியும் உருவானது.

2) தகுதிவாய்ந்த கட்சிக் காரர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவிகளை தன் ஆதரவாளர்களுக்குப் பெற்றுத் தருவதில் அழகிரியை மிஞ்ச யாராலும் முடியாது.

3) மதுரை மீதுகொண்ட தனிப்பாசத்தில் பல நலத்திட்டங்களையும், பாலங்களையும், கல்லூரிகளையும், சாலைகளையும் கொண்டு வந்தவர். மதுரைக்கு ‘டைல்ஸ் நகரம்’ என்ற பெயர் கிடைக்கச் செய்தவர். அவரைச் சுற்றி நல்ல விஷயங்களும் ஏராளமாக உண்டு.

4) தன்னைச் சுற்றி மிக மோசமான ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர் என நல்ல கட்சிக்காரர்கள் புலம்புகிறார்கள். அவர்களைத் தாண்டி அழகிரியை அணுகுவது அகழியைத் தாண்டி மன்னரை நெருங்குவதைப் போன்றது என்கிறார்கள். இதனால் மதுரை வட்டாரத்தில் உள்ள உணர்வுள்ள, உண்மையான கட்சிக்காரர்கள் அத்தனை பேருமே ஒருவித வெறுப்பில் தான் இருக்கிறார்கள்.

5) கட்சிப் பதவியே வேண்டாம் என அமைதி காத்தவர். ஆனால் கட்சி பணித்ததால் பதவிகளை ஏற்றுக் கொண்டார் என ஒரு சாராரும், பிடிவாதம் செய்து பதவிகளைப் பெற்றார் என ஒரு சாராரும் சொல்கிறார்கள். உண்மை அவர்களுக்கே வெளிச்சம்.

திமுகவிற்கு பாதிப்பா?

அழகிரியின் புதிய தலைமுறை பேட்டியைப் பார்த்தவர்களுக்கு அவர் திமுகவின் ஆண் ஜெயலலிதா என்பது புரிந்திருக்கும். விஜயகாந்தை கூட்டணியில் இழுக்க கட்சியின் மேல்மட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, “அவர் வந்தால் உருப்படாது” எனப் பொறுப்பில் இருந்து கொண்டே சொல்ல அழகிரியால் மட்டும் தான் முடியும். (அதில் நியாயம் இருந்தாலுமே கூட) ஆனால் இந்த அடாவடிக் குணம் ’இரு ஆள்’ கட்சியான அதிமுகவில் சரி வருமேயொழிய ஜனநாயகக் கட்சியான திமுகவில் சரி வராது. கூட்டணிக் கட்சிகளை மரியாதையாக நடத்தும் திமுக தலைமை இதுபோன்ற பேட்டிகளை ஒருபோதும் ஒப்புக் கொள்ளவும் கொள்ளாது. அதற்காக கட்சியை விட்டே நீக்க வேண்டியது அவசியம் தானா என்ற கேள்வியில் நியாயம் இருந்தாலும் தேமுதிக மீதான அழகிரியின் தான்தோன்றி விமர்சனம் என்பதையும் தாண்டி சில முக்கியமாக விஷயங்களைக் கருத்தில் கொண்டே திமுக தலைமை இந்த முடிவை எடுத்திருக்கிறது.

கலைஞருக்குப் பின் ஸ்டாலின் தான் திமுகவிற்கு தலைமையேற்கத் தகுதியானவர், திமுகவினர் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்களிடையே செல்வாக்கும் உடையவர் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்காது. அதனால் தான், ”என்னைக் கேட்டால் ஸ்டாலினை தலைவராக முன்மொழிவேன்” என அன்பழகன் குறிப்பிட்டார். கலைஞரும் அதை வழிமொழிந்திருக்கிறார். ஆனால் கலைஞரைத் தவிர என்னால் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என திருப்பித் திருப்பி அழகிரி சொல்லிக் கொண்டிருப்பது ஸ்டாலின் ஆதரவாளர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் கூட எரிச்சலடைய வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும் அழகிரியின் மனதில் இருக்கும் ஈகோவை பகிரங்கமாக வெளிப்படுத்தும் இது போன்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வருங்காலத்தில் வரப்போகும் பிரச்சினைகளை இப்போதே படம்பிடித்துக் காட்டுவதாகத்தான் இருக்கின்றன.

அழகிரி நீக்கத்தை வரவேற்றிருக்கும் திக தலைவர் வீரமணியின் முந்தையகால திமுக எதிர்ப்பு நிலையைக் குறிப்பிட்டு அழகிரி சீறியிருப்பது வியப்பைத்தான் தருகிறது. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர். அவருக்கும் திமுகவிற்கும் நேரடி சம்பந்தம் ஏதும் கிடையாது. கலைஞரை எதிர்க்கவும், அறிக்கையளிக்கவும் அவருக்கு எப்போதும் உரிமை உண்டு. (அதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பது தனி விவாதம்). இப்போது திமுகவிற்கு ஆதரவாக, துணையாக, தக்க நேரத்தில் கொள்கைசார் அறிவுரைகளை வழங்குகிறவராக இருக்கும் வீரமணி, திமுகவின் கட்டுப்பாட்டிற்கு பங்கம் விளைவித்தவரான அழகிரியை திமுக நீக்கியதை வரவேற்றுப் பேசியுள்ளதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் வீரமணியின் ஒருகாலத்தைய திமுக எதிர்ப்பைக் குறிப்பிட்டுச் சீறும் அழகிரி, ஏற்கனவே ஒருமுறை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது என்ன செய்தார் என நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்த 2001 ஆண்டு சமயத்தில் மதுரை முழுதும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த பல திமுக வேட்பாளர்களை 100, 200 ஓட்டுகளில் அதிமுகவிடம் அழகிரி தோற்க வைத்ததை திமுகவினர் மறந்திருக்க மாட்டார்கள். அப்படிப் பட்டவருக்கு வீரமணியைக் குறை சொல்ல தகுதி இருக்கிறதா!!!!

திமுகவின் வளர்ச்சியில் அதை உருவாக்கிய அண்ணாவிற்கு அதில் இருக்கும் பங்கைப் போலவே அதை இத்தனை ஆண்டுகளாகக் கட்டிக் காத்த கலைஞருக்கும் பெரும் பங்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் அண்ணா காலத்தில் திமுகவில் ஏற்பட்ட பிரச்சினைகளை விட கலைஞர் காலத்தில் ஏற்பட்டவை மிகக் கடினமானவை. மிசாவில் தொடங்கி எம்.ஜி.ஆரில் நீண்டு வைகோவில் இழுத்தவரை திமுக சந்தித்திராத பிரச்சினைகளே கிடையாது. ஆனால் அப்போதெல்லாம் கலைஞரைத் தவிர அங்கே சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என யார் தலைவராக இருந்திருந்தாலும் திமுக காற்றோடு கரைந்து காணாமல் போயிருக்கும். ”வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். ஆனால் எனக்கு போராட்டமே வாழ்க்கையானது.”, எனக் கலைஞர் சொல்வதில் எள்ளளவும் மிகையில்லை. தன் தலைமைப் பண்பின் மேல் யார் யாருக்கெல்லாம் சந்தேகம் இருந்ததோ அதையெல்லாம் அடாவடியின் மூலம் அடக்காமல் தன் செயல்பாட்டால் அடக்கியவர் கலைஞர். திமுகவின் தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற போது, "கலைஞரை தலைவராக ஏற்க முடியாது" எனப் பேசியவர் தான் அன்பழகன். இப்போது வீரமணி எப்படி அழகிரியின் மீதான நடவடிக்கையை முன்பிருந்தே வற்புறுத்தி, இப்போது நடந்தவுடன் வரவேற்றிருக்கிறாரோ அதே போல பெரியார், அன்பழகன் மேல் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார். ஆனால் கலைஞர், தன் செயல்பாடுகளின் மூலம்தான் கேள்விகளையும், சந்தேகங்களையும், தன்னை விட வயது மூத்த கழகத் தலைவர்களின் 'ஈகோ'வையும் ஒழிக்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு வந்த தேர்தலில் கலைஞர் தலைமையிலான திமுக முந்தைய தேர்தலை விட மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து வந்த சோதனைகளை கலைஞர் எப்படி எதிர்கொண்டார் என்பதை, கூடவே இருந்து பார்த்த அன்பழகன் இன்று கலைஞரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க முடியாத நிலையில், கலைஞரின் உற்ற தோழனாக  இருக்கிறார். (கலைஞரிடம் இருந்த அந்த பண்பு ஸ்டாலினிடமும் இருக்கும் என நம்புவோம். அன்பழகனிடம் இருந்த பண்பு ஒருநாள் அழகிரிக்கும் வரக்கூடும்.)

 தயாளு அம்மாள் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த வரை அழகிரியால் தன் காரியங்களை தாய்ப்பாசத்தால் சாதித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. நீக்கத்தால் கோபப்பட்டு மீண்டும் 2001ல் போட்டி வேட்பாளர்களை நிறுத்தியதைப் போல் நிறுத்தினால் திமுகவிற்கு அங்கங்கு கொஞ்சம் அடி விழலாம். மிஞ்சிப்போனால் அழகிரியால் அவ்வளவுதான் செய்ய முடியும். ஆனால் பாராளுமன்றத் தேர்தல் என்பதால் சட்டசபை அளவிற்கு பாதிப்பு இருக்காது என்று நம்பலாம். மேலும் எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அழகிரி திமுகவில் இருப்பது திமுகவிற்கு பலம் தான் என்றாலும் அவர் இல்லாததால் திமுகவிகல்கு எந்த பலவீனமும் இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும்.

அதே நேரம் எந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தையும் அசைக்கவல்லது வாரிசுச் சண்டை. திமுகவில் வாரிசுச் சண்டை ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் கலைஞரால் மட்டும்தான் முடியும். அதனால் கலைஞர் நலமாக இருக்கும்போதே வாரிசுச் சண்டை என்ற புண்ணைக் கிளறி மருந்து போட்டு ஆற்றாவிட்டால் வருங்காலத்தில் பெரும் பிரச்சினையாக கண்டிப்பாக மாறும். அதன் தொடக்கமாகத்தான் இன்று அழகிரியின் தற்காலிக வெளியேற்றம் நடந்திருக்கிறது. அதே நேரம் புண்ணை ஆற்றுவதென்றால் கிளறுவதோடு நிறுத்துவதல்ல, புண்ணுக்கு மருந்தாக கலைஞர் நலமாக இருக்கும்போதே ஸ்டாலினை தலைவர் ஆக்கவேண்டும். அது மட்டுமே திமுகவை சமீபகால பின்னடைவுகளிலிருந்து மீட்டு திமுகவினருக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் கூட புது ரத்தமும் நம்பிக்கையும் பாய்ச்சும்.

Thursday, January 23, 2014

கேஜ்ரிவால்- சரஸ்வதி சபதம் கே.ஆர் விஜயா! சில ஒற்றுமைகள்! -டான் அசோக்

சரஸ்வதி சபதம் கே.ஆர் விஜயா என்றவுடன் தமிழகத்தைப் பற்றிய பதிவு என நினைத்துவிடாதீர்கள். :-) இது டெல்லி குழப்பத்தைப் பற்றி,

செய்திகள்: 

1) டெல்லி மால்வியா நகரில் உகாண்டா மக்கள் பாலியல் தொழிலிலும், போதை மருந்து விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவலின் பேரில் அங்கே சென்றிருக்கிறது சோம்நாத் பார்தியின் கும்பல்.

2) நடு இரவில் சோதனை என்ற பெயரில் உகாண்டா மக்கள் வாழ்ந்த வீடுகளுக்குள் நுழைந்துள்ளது சட்ட அமைச்சர் தலைமையிலான ‘ஆம் ஆத்மி’ கும்பல்.

3) அங்கே இருந்த கறுப்பினப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசி தாக்கியிருக்கிறது. மேலும்,  ”கருப்பா இருக்கவன் கெட்டவன்” என்ற இந்திய வெள்ளையர்களின் கலாச்சாரத்தின்படி ஆப்ரிக்க மக்கள் என்றாலே மோசமானவர்கள், அவர்களால் தான் டெல்லி கெடுகிறது, டெல்லியை காலி செய்துவிட்டு ஊருக்கு ஓடுங்கள் என்ற ரீதியில் பேசிக்கொண்டே போயிருக்கிறார் சட்ட அமைச்சர்.

4) அவருடன் வந்த ஆம் ஆத்மி போராளிகள் அந்தப் பெண்களைக் கடுமையாக கண்களிலும், உடலிலும் தாக்கியிருக்கிறார்கள். பத்து நிடத்தில் அங்கு வந்த போலீசிடம் “பாலியல், போதை தொழிலுக்காக அவர்களைக் கைது செய்யுங்கள்” என உத்தரவிட்டுள்ளார் சட்ட அமைச்சர்.

5) “வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. அதுவும் பெண்களை நடு இரவில் கைது செய்வது சட்டப்படி தவறு” என்று கூறி மறுத்திருக்கிறார் மாலியா பகுதியின் போலீஸ் உயரதிகாரி திரு.பால்.

6) சட்ட அமைச்சருக்கு கோபம் சுருக்கென்று ஏறியவுடன் அங்கே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு போலீஸ் அடிபட்ட பெண்களை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பிறகு வீட்டில் விட்டிருக்கிறார்கள்.

7) அதே போல வாடகைக் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த கறுப்பினப் பெண்கள் நால்வரை வழிமறித்து மிரட்டியிருக்கிறது ஆம் ஆத்மி கும்பல். போதை மருந்து சோதனைக்காக நடுரோட்டில் சிறுநீர் கழிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அப்பெண்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.

8) அதன் பின்பான கேஜ்ரிவாலில் நாடகங்கள் இந்தியாவே அறிந்த ஒன்று.


கருத்துக்கள்:

1) ”இந்தியாவில் எதுவுமே சட்டப்படி நடக்கவில்லை, நாங்கள் வந்தால் சட்டப்படி எல்லாம் நடந்து ஊழலை ஒழித்து புதிய சமுதாயம் படைப்போம்”, என வாக்குக் கொடுத்து ஆட்சிக்கு வந்த கேஜ்ரிவாலின் சட்ட அமைச்சர், தன்னைத் தானே பேட்மேன், ஸ்பைடர்மேன், ரஜினிகாந்த் என எண்ணி சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டிருப்பது மகா அயோக்கியத்தனம்! சட்டம் காங்கிரசிற்கும், பிஜேபிக்கும், பொதுமக்களுக்கும் தானா? ஆம் ஆத்மி என்ன கடவுளா?

2) பெண்கள் பாதுகாப்பை டெல்லியில் உறுதி செய்வோம் எனக் கூறிவிட்டு தன் தொகுதியில் தங்கியிருக்கும் உகாண்டா பெண்களின் கதவுகளை நடு இரவில் தட்டிய அமைச்சரின் செயலை என்ன செய்வது? எவ்வளவு பெரிய தவறான முன்னுதாரணம் இது!!

3) நடுராத்திரியில் வாரண்ட் இல்லாமல் முன்னாள் முதல்வரின் வீட்டிற்குள்ளேயே புகுந்து கைது செய்யும் அளவிற்கு ஆளுங்கட்சிக்கு அடியாளாய் செயல்படும் போலீஸ் அதிகாரிகள் இருக்கும் நாட்டில், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒரு அதிகாரி சட்டத்தை மீறி தன்னால் நடக்க முடியாது எனச் சொல்லியிருக்கிறார். பர்மா பம்பர் குலுக்கலில் திடீர் அமைச்சரான சோம்நாத் பார்திக்குதான் சட்டம் தெரியவில்லை என்றால் அதிகாரி சொன்னதைக் கேட்டு அமைதியாக வந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அங்கே மல்லுக்கு நின்றது மகா பெரிய தவறு! அதிகார வெறி! போதை!

4) ஆம் ஆத்மி கும்பலால் குற்றம் சாட்டப்பட்ட  எந்தப் பெண்ணிலும் போதை மருந்துக்கான தடயங்களே இல்லை என முறையான சோதனைகளுக்குப் பின்னர் போலீசாரால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சோம்நாத்தோ, சோம்நாத்திற்க்காக போராடும் கேஜ்ரிவாலோ இதுபற்றி வாயே திறக்கவில்லை.

5) சோம்நாத்தின் அடாவடித்தனத்திற்கும், ஆணவத்திற்கும், அதிகார போதைக்கும் எதிராக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அவரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி கேட்கும் போதும் கேஜ்ரிவால் அமைதி காப்பதோடு சோம்நாத்திற்கு ஆதரவாகவும் இருப்பது கேஜ்ரிவால் இனி அரசியலில் எப்படிச் செயல்படுவார் என்பதற்கு போதுமான உதாரணமாக இருக்கிறது!

6) எல்லாவற்றுக்கும் மேல் மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேஜ்ரிவால் தன்னை ஒரு ‘அனார்கிஸ்ட்’ (அரசு என்பதே தேவையில்லை எனப் போராடுகிறவர்)ஆக அறிவித்துக் கொள்வதும், சட்டப்படி நடந்தார் என்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்யச் சொல்வதும், நடு இரவில் அசிங்கமாகவும், மிகக்கேவலமாகவும் நடந்து கொண்ட தன் அமைச்சருக்கு வக்காலத்து வாங்குவதும் நிச்சயம் காங்கிரசிடமும், பாஜகவிடமும் இல்லாத மாற்று அரசியல் தான். அந்த வகையில் கேஜ்ரிவாலை மாற்று அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ளலாம்.


ஆக மொத்தம் ஒரு அரசு, சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் பிச்சைக்காரியாக இருக்கும் கே.ஆர் விஜயா ஒரே நொடியில் மகாராணி கே.ஆர்.விஜயாவாக மாறி ஆட்சிக்கு வருவதைப் போல மந்திரத்தால், அதிர்ஷ்டத்தால்  ஆட்சிக்கு வந்தால் அரசியல் அறிவோ, சட்ட அறிவோ, மதிநுட்பமோ, நாகரீகமோ இல்லாமல் பைத்தியக்காரத்தனமான அரசாகத்தான் இருக்கும் என்பதற்கு டெல்லி ஆம் ஆத்மி அரசு ஒரு உன்னத உதாரணம்!!!


-டான் அசோக்
writerdonashok@yahoo.com
Sunday, January 19, 2014

புலி, ஜில்லா விமர்சனம்

புலி

சினிமாவுக்கு எழுத ஆரம்பித்த பிறகு சினிமா விமர்சனங்கள் எழுதுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டேன். இருப்பினும் 'புலி' பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.
வெளிநாடுகளில் சமூக வலைதளங்கள் ஆரோக்கியமான விஷயங்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தியாவில் மட்டும் இரண்டே இரண்டு உருப்படாத விஷயங்களுக்குதான் பிரதானமாக பயன்படுகிறது.
1)பொய்களையும், வதந்திகளையும் செய்திகள் போல பரப்புவது.
2)கேலி செய்வது.
முதல்விஷயத்தை இப்போதைக்கு விடுங்கள். இரண்டாவது விஷயமான 'கேலி செய்வது' என்பது ஒரு மனநோயைப் போலவே தமிழ்ச்சமூகத்தில் பரவி இருக்கிறது. எதையும், எல்லோரையும் கேலி செய்வது என்பதில் நம் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். என்ன விஷயம் நடந்தாலும் உடனே ஒரு MIME உடனே ஒரு TROLL!! அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் துளியும் கவலை கிடையாது. நமக்கு உருட்ட ஒரு தலை வேண்டும். அது விஜயகாந்தோ, விஜய்யோ, ஸ்டாலினோ, அஜீத்தோ. (ஜெயலலிதா இதில் சேரமாட்டார். ஏனெனில் வீரம் விளையும் இனமல்லவா, அதனால் அவதூறு வழக்கு போடாத ஆபத்தில்லாத தலைகளை தான் உருட்டுவார்கள்.)
புலி திரைப்படத்தின் முதல் அரைமணி நேரம் பாடாவதி தான். அதிலும் நகைச்சுவை எல்லாம் எரிச்சல் ரகம். ஆனால்...
புலி ஒரு ஃபாண்டசி படம். அதில் ஸ்ரீதேவி போத்தீஸ் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு நடிக்க மாட்டார் என்பதையும், இயல்புக்கு அப்பாற்பட்ட காட்சிகள்தான் இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள சராசரியாக சினிமா பற்றிய அறிவு இருந்தாலே போதும். புலியை பக்கம் பக்கமாக ஓட்டுகின்றவர்கள் அப்படி என்னதான் எதிர்பார்த்து போய் புலி படத்தில் உட்கார்ந்தார்கள் என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. பாகுபலியை புலியில் எதிர்பார்த்தால் எதிர்பார்ப்பில் தான் தவறு. பாகுபலி கூட சரித்திரப் படத்துக்கும், ஃபாண்டசி படத்துக்கும் இடையில் தத்தளித்த படம். ஆனால் புலி மிகத் தெளிவான 'ஃபாண்டசி' திரைப்படம். ஸ்ரீதேவி தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் பின்னி எடுத்திருக்கிறார். இதையே ஒரு ஹாலிவுட் படத்தில் சார்லிஸ் தெரானோ, காமரூன் டயாஸோ செய்திருந்தால் வாயை மூடிக்கொண்டு பார்த்திருப்போம். தமிழ்நாட்டில் செய்யப்பட்டவுடன் பொட்டியை எடுத்துக்கொண்டு கேலி செய்ய கிளம்பிவிட்டார்கள். வழக்கமான படங்களிலேயே நடித்தால், "ஒரே மாதிரி நடிக்கிறான்யா," என கிண்டல் செய்ய வேண்டியது. புதிதாக எதையாவது செய்தால் "இவனுக்கு எதுக்கு இந்த வேலை?" என கிளம்ப வேண்டியது.
ஒரு ஃபாண்டசி படத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டுமோ அதை எதிர்பார்க்க வேண்டும். ஆரியபவனில் போய் எனக்கு கோலா உருண்டைதான் வேண்டும் எனக் கேட்டால் அது ஆரியபவனின் குற்றமல்ல, கேட்பவனின் குற்றம். ஸ்ரீதேவி சிரிப்பது பயமாக இருக்கிறதாம். ஒரு ஃபாண்டசி படத்தில் வரும் வில்லி மகராணி வேறு எப்படி சிரிப்பார்? விமர்சனம் எழுதுகின்றவர்களைப் பிடித்து சிரித்துக்காட்டச் சொல்லவேண்டும். கை இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? ஒரு நல்ல முயற்சி அநியாயமாக இப்படி கேலி செய்யப்படுவதால் அடுத்த பல ஆண்டுகளுக்கு ஃபாண்டசி என்கிற ஜானர் பக்கமே யாரும் போக மாட்டார்கள்.
"ஒழுங்காக படம் எடு," எனச் சொல்ல காசு கொடுத்து படம் பார்க்கும் எல்லோருக்கும் எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே போல, "படம் பார்க்க முதலில் கற்றுக்கொள்," என புலி படத்தை கிண்டலடிப்பவர்களைப் பார்த்துச் சொல்லும் உரிமை சிம்புதேவனுக்கு கண்டிப்பாக இருக்கிறது. நானும் அதையேதான் சொல்கிறான். தயவுசெய்து முதலில் படம் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் புரளிகளையும், பொய்களையும், கேலிகளையும், கிண்டல்களையும் ஆட்டுமந்தைகளைப் போலப் பரப்பாதீர்கள். சுயமாக சிந்தியுங்கள். படம் பார்ப்பதற்காக தியேட்டருக்குப் போங்கள், ஆடுகளுடன் சேர்ந்து ஆடாக மாறி கிண்டல் செய்வதற்காகவே போகாதீர்கள்.
புலி ஒரு 100% பெர்ஃபெக்டான படம் கிடையாதுதான். ஆனால் தியேட்டரில் உட்காரவே முடியவில்லை, சுறாவை விட மோசம், சிம்புதேவன் விஜய்யை ஏமாற்றிவிட்டார் என்பதெல்லாம் பச்சையாக, கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே படம் பார்ப்பவர்கள் கிளப்பி விடும் பொய்கள். பலர் படம் பார்க்காமலேயே அந்த கும்பலோடு கோவிந்தா போடுவதுதான் இன்னும் பரிதாபம். இன்னும் சிலரோ படம் பிடித்திருந்தாலும், "நம்ம மட்டும் எதுக்கு தனியா பேசிகிட்டு," என நினைத்து ஆட்டுமந்தை கும்பலில் இரண்டறக் கலந்துவிட்டார்கள். குழந்தைகள் புலியை மிகவும் ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதுதான் திரையரங்குகளில் நடந்து கொண்டிருக்கும் நிஜம். அந்த வகையில் சிம்புதேவனும், விஜய்யும் ஜெயித்திருக்கிறார்கள்.
-டான் அசோக்ஜில்லா
மோகன்லால் என்று ஒரு நடிகர். அவர் ஊரில் அவர்தான் நடிப்புக்கு குருநாதர். பெரிய நடிகர் என்றால் விஜய் போல அல்லாமல் ’ஜெயிச்சு கப் வாங்கும்’ நடிகர். முப்பது வருட தமிழ்சினிமாவை மென்று வாந்தி எடுத்ததைப் போல இருந்த தலைவா படத்திற்கு அரசு தரப்பு, மக்கள் தரப்பு, வர்றவன் போறவன் தரப்பு என அனைத்துத் தரப்பில் இருந்தும் பயங்கர வரவேற்பு என்பதால், "குருநாதா...... இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா...." என பொங்கி எழுந்து தன் அடுத்த படமான ஜில்லாவில் சப்போர்ட்டுக்காக மோகன்லாலை அழைத்து வந்திருக்கிறார் விஜய்.

எல்லா விஜய் படத்திலும் வருவதைப் போல இதிலும் முதல் காட்சியில் சண்டை வருகிறது. ஆனால் வேறு வில்லனை வைத்து வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள். பிறகு அறிமுகப் பாடல் ஒன்று வருகிறது. அப்புறம் ஹீரோயின் வருகிறார். அப்புறம் நகைச்சுவை நடிகர் வருகிறார். அப்புறம் பாட்டு வருகிறது. அப்புறம் சண்டை வருகிறது. அப்புறம் பாட்டு வருகிறது. அப்புறம் சண்டை வருகிறது. கதை மட்டும் வரவே இல்லையே என நினைக்கும் போதுதான் அந்த அதிர்ச்சி வருகிறது.

தலைவா படத்தின் கடைசிக் காட்சியில் மெரூன் நிறத்தில் சுடிதார் போட்டு கம்பீரமாக நிற்கும் விஜய்யைப் பார்த்த ஹேங்க் ஓவரே நமக்கின்னும் தீராத நிலையில் ஜில்லாவில் போலீஸ் உடையில் தோன்றி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் விஜய்.  ஆம்! 'போலீஸ் ரவி'யாக விஜய் நடித்த வேட்டைக்காரனில் எது நடக்கவில்லை என நாமெல்லாம் நிம்மதியாக இருந்தோமோ அந்த அசம்பாவிதம் ஜில்லாவில் நடந்துவிடுகிறது. விஜய் போலீஸ் ஆகிவிடுகிறார்! இந்தியாவுலயே, ஏன் இந்த வேர்ல்டுலயே குறுந்தாடி வைத்து போலீசாக வலம் வரும் கரகாட்ட கோஷ்டி ஜில்லா கரகாட்ட கோஷ்டி தான்!

விஜய் என்ன செய்தாலும் சூரி ஒரு பக்கமாக நின்றுகொண்டு, 'வந்துட்டான் டா' 'செஞ்சுட்டான் டா' 'ஆரம்பிச்சுட்டான் டா', என ரன்னிங் கமண்ட்ரி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். காமடி செய்கிறாராம்!! ஏற்கனவே விஜய், காமடி என்ற பெயரில் செய்யும் கொடுமைகளை எல்லாம் 'ரசித்துப்' பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு இந்தக் கமண்ட்ரி மரண தண்டனைக்குப் பின் ஆயுள் தண்டனை கொடுத்ததைப் போல இருக்கிறது. வழக்கமாக முதுகை முன்புறமாய் வளைத்து பின்புறத்தை மட்டும் ஆட்டி ஆட்டி அட்டகாசமாகக் காமடி பண்ணும் விஜய் இந்தப் படத்தில் தன் காமடி நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். ஒரு காட்சியில் சூரியின் டிக்கியில் ஊசியால் குத்தி காமடி செய்கிறார். இன்னொரு காட்சியில் காஜல் அகர்வாலின் பின்புறத்தை பல நூறு போலீஸுகளுக்கு மத்தியில் பிடிக்கிறார். இப்படியாக காதல் காட்சிகளிலும் விஜய்யின் நடிப்பு வேறு பரிமாணத்தைத் தொட்டிருக்கிறது.  படம் நெடுகே வரும் ஏராளமான காதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு சிரிப்பைத் தவிர மற்ற எல்லாமே வருகிறது!

முதல் பாதி வரை சகல பொறுக்கித்தனங்களையும் செய்யும் கெட்ட விஜய், இரண்டாம் பாதியில் ஒரு சோகக் காட்சியைப் பார்த்தவுடன் மனம் மாறி நல்ல விஜய்யாக மாறுகிறார். தேவர் மகன் படத்தையோ, அவரே நடித்த தமிழன் படத்தையோ கூட பார்த்துத் தொலைத்திருந்தால் முதல் பாதியிலேயே மாறித் தொலைத்திருக்கலாம். மாறியதை கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அதுவரை விஜய்யின் தோஸ்துகளாக இருந்த ரவுடிகளை எல்லாம் 'ஒரு வார்னிங்' கூட இல்லாமல் திடீரென பந்தாடுவதை தான் சகித்துக் கொள்ளமுடியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேல் படம் நெடுக தமிழை ஜப்பானிய மொழியில் பேசியிருக்கிறார் விஜய். சீரியசான காட்சிகளில் கூட "ஹ்ஹ்ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம மாறிரூஊஊஊஊ..." "விட்ட்ட மா...ட்டே....ன்ன்ன்..." "எங்கப்ப்ன்ன்ன் தப்---பண்ண கூஊஊடாஆஆஅ.....து..."என அவர் பேசும் போது நம் காதுகளில் இன்பத் தேன் வந்து பாய்கிறது. அந்த ஃபிரஞ்சு தாடி, போலீஸ் உடை, தமிழ் பேசுற சுடைல், சூரியை "கு"வில் குத்தும் லாவகம், காஜல் அகர்வாலை பின்னாடி பிடிக்கும் 'ரொமாண்ஸ்' என ஒவ்வொரு விஷயத்திற்காகவும் நிறைய ஹோம் வொர்க் செய்திருக்கிறார் விஜய்.

படத்தில் விஜய்க்கு 'ஜில்லா' என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. ஏனென்றால் அவர் அடித்தால் அடி வாங்கியவன் ஜில்லாவிலேயே இருக்க மாட்டானாம்! இதுபோன்ற வசனங்களை விஜய் பேசும்போது ஏனோ நமக்கு தலைவாவின் கேப்ஷனான 'டைம் டு லீட்'ஐ அழித்துவிட்ட ரிலீஸ் செய்தது தான் நினைவுக்கு வருகிறது. விஜய் இனி பஞ்ச் டயலாக்குகளை குறைத்துக் கொண்டால் பஞ்ச் டயலாக்குகளுக்கு நல்லது.


மோகன்லால், 'இந்த ஷிவன் இருக்கானே....' 'ஷிவன் சொன்னா....' 'உஷிர எடுப்பவன் தான் ஷிவன்' என எல்லாக் காட்சியிலும் பேசுகிறார். யாருடா ஷிவன் எனப் பார்த்தால் மோகன்லால் தான் சிவனாம்! பிறகு எதற்கு படம் நெடுக தன்னைத் தானே மூன்றாவது நபர் போல குறிப்பிட்டுக் கொள்கிறார் எனத் தெரியவில்லை. குருநாதர் செம அடி வாங்கியிருக்கிறார். கண்டிப்பாக படத்தைப் பார்த்தபின் கூடாநட்பை எண்ணி வருத்தப்பட்டிருப்பார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அஜீத் வரிசையாக ஆஞ்சநேயா, ஜனா போன்ற உலகத்தரமிக்க படங்களில் நடித்தபோது "ஒன்னு கார் ரேஸ்க்கு போனும். இல்லேனா சினிமால நடிக்கனும். ஏன் இப்படி ஆர்வமே இல்லாம அஜீத் நடிக்கிறார்" என்ற பேச்சு பரவலாக எழுந்தது. அஜீத் நடிப்பதையே நிறுத்தப் போகிறார் என்றெல்லாம் பேசினார்கள். அது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தான் இப்போது விஜய் இருக்கிறார்.

துப்பாக்கி போல ஒரு படத்தில் நடித்த பின்னும் எதற்கு ஜில்லா போன்ற கதைகளை விஜய் தேர்வு செய்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் அவரது 'ஃபீல்ட் ஆஃப் இன்டெரெஸ்ட்டை' அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் விஜய் ரசிகர்கள் எல்லாம் மதம் மாற ஆரம்பித்துவிடுவார்கள். படம் ஓரளவு கேவலம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேவலமான படத்தை தன் வித்தியாசமான நடிப்பால் படு கேவலமாக மாற்றினால் என்ன சொல்வது!

இறுதியாக ஜில்லா நல்ல படமா கெட்ட படமா எனச் சொல்வது மட்டுமல்ல அது படமா எனச் சொல்வதே கஷ்டம் தான்!! உங்களுக்கு வேறு வேலையே இல்லையென்றால், யூட்யூபில் சாம் ஆண்டர்சன், வில்பர் சர்குணராஜ், பவர் ஸ்டார் வீடியோக்கள் அத்தனையையும் பார்த்துவிட்டீர்கள் என்றால் வேறு வழியின்றி ஜில்லா பார்க்கலாம்.

Thursday, January 9, 2014

நேருக்கு நேர் வீரபாண்டியன், சில கேள்விகள், சில கருத்துக்கள்

பதினாறு, பதினேழு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒளிபரப்பான ஒரே ஒரு அரசியல் நிகழ்ச்சி என்றால் அது வீரபாண்டியனின் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சி தான். இன்று அரசியல் பேசும் இளைஞர்கள் அத்தனைபேரும் கொஞ்சமேனும் வீரபாண்டியனிடமிருந்து சிறு வயதில் அரசியல் பார்வையைக் கற்றிருப்பார்கள். நிகழ்ச்சியின் போது பதறாமல், நிதானமாக, பேட்டி கொடுப்பவரின் கண்களை நோக்கி கேள்விகளை முன்வைத்து விஷயங்களைக் கறக்கும் ஆற்றல் உள்ளோர், வியாபார நோக்குடன் எதையும் அணுகும் இந்தக் காலத்தில் மிகச் சிலர் தான். இந்திய ஊடகத் துறையில் கரன் தப்பாருக்க்கு அடுத்து அந்த ஆற்றலைக் கொண்டிருந்தவர், கொண்டிருப்பவர் நேருக்கு நேர் வீரபாண்டியன் மட்டுமே.

இன்று தந்தி, புதிய தலைமுறை, சத்யம் என எத்தனையோ ‘பரபரப்பு’ தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. எதிலும் எப்போதும் எங்கும் எதாவது விவாதம் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. பாண்டே, குப்தா, சஞ்சய் மஞ்சரேக்கர் என்ற பெயருள்ளோர் எல்லாம் கூட தமிழகப் பிரச்சினைகளைப் பற்றி நுனிப்புல் அலசல் அலசுகிறார்கள், தமிழக அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுக்கிறார்கள். ஆனால் அவற்றில் எல்லாம் இரண்டு விஷயங்களை நீங்கள் தெளிவாகக் கவனிக்கலாம்.

1) அவர்கள் கேட்கும் கேள்விகள் அத்தனையுமே யாரையாவது ஒரு பிரபலத்தையோ, கட்சியையோ, கொள்கையையோ பற்றி நிகழ்ச்சிக்கு வந்திருப்பவரை நாலு வார்த்தை பரபரப்பாக அல்லது அவதூறாகப் பேசச் செய்து விடமாட்டோமா... அதன் மூலம் ரேட்டிங் கிடைக்காதா என்ற நோக்கில் இருக்கும்.  (அழகிரியிடம் ஸ்டாலினைப் பற்றி எதேனும் அவதூறு கிடைக்காதா என்ற எண்ணத்தில், முற்றிலும் அதை நோக்கியே நகர்ந்த சமீபத்திய புதிய தலைமுறை பேட்டி இதற்கு உதாரணம்.)

2) சராசரி குடிமக்களான நாம் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் கேட்க விரும்பும் முக்கியமான கேள்விகளைக் கூட அவர்கள் அந்தக் குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் கேட்க மாட்டார்கள்.

தமிழக ஊடகங்கள் என்றில்லை, இந்திய அளவில் எதை எடுத்துக் கொண்டாலும் இதே கதை தான். உதாரணமாக இந்தியாவின் அத்தனை விவாதங்களிலும் ராஜீவ் கொலை பற்றியும், புலிகள் பற்றியும் பொங்கி எழும் சாமியிடம் “உங்களையும் விசாரிக்கச் சொல்லி ஜெயின் கமிஷன் பரிந்துரை செய்ததே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என ஒரே ஒருவனாவது கேட்டிருக்கிறானா? ஏன் எவனுக்குமே ஜெயின் கமிஷன் பற்றித் தெரியாதா என்ன? (சு.சாமியிடம் ஒரே ஒருவர் ஒருமுறை இந்தக் கேள்வியைக் கேட்டார். அந்தக் கேள்வி வெளிப்பட்டதுமே அரங்கை விட்டு எழுந்துபோய்விட்டான் சு.சாமி. அந்தக் கேள்வியைக் கேட்டது நிகழ்ச்சியை நடத்தியவர் அல்ல. அதில் மற்றொரு விருந்தினராகப் பங்கு கொண்ட அய்யா சு.ப.வீரபாண்டியன்)

ஆனால் இது இரண்டையுமே நீங்கள் நேருக்கு நேர் வீரபாண்டியனின் நிகழ்ச்சியில் காண முடியாது. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை பெரும்பாலும் அடுத்த நொடி அவர் கேட்டிருப்பார். அதே நேரத்தில் எந்த அரசியல் முன்முடிவுகளும் இல்லாமல், பாரபட்சமும் இல்லாமல் இருக்கும் அவர் கேள்விகள். அதனால் தானோ என்னவோ தமிழக ஊடகங்களின் துவக்க காலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தரமான நிகழ்ச்சியை எந்த அலட்டலும் இல்லாமல் அட்டகாசமாக வழங்குகிறவர் அந்த நிகழ்ச்சியோடு மட்டுமே குறுகிப் போய்விட்டார்! நிகழ்ச்சி இயக்குனரின் வார்த்தைகளை அப்படியே காமிரா முன் கொட்டும் நேற்று வந்த ’மொக்கை’ தொகுப்பாளர்கள் எல்லாம் எங்கோ உயரத்தில் போய்க் கொண்டிருக்க, வீரபாண்டியனின் வளர்ச்சி சன்டிவியோடும், நேருக்கு நேர் நிகழ்ச்சியோடும் குறுகி நின்றுவிட்டது. ஒருவேளை ஜெயா டிவியில் சேர்ந்து ரபி பெர்னாட் போல ’திறமையான’ முறையில் நிகழ்ச்சி நடத்திருந்தால் ராஜ்யசபா சீட் கொடுத்திருப்பார்களோ என்னவோ!

இன்று அந்த நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சன்டிவி. முசாஃபர் நகர் கலவரத்தில் இந்துத்துவ சக்திகளின் பங்கையும், மோடியின் கொள்கைகளைப் பற்றியும் ஒரு கூட்டத்தில் எதிர்மறையாகப் பேசியதால் வீரபாண்டியனின் நேருக்கு நேர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் நிறுத்தியிருக்கிறது சன் நிர்வாகம். பி.ஜே.பிக்காரர்களின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கையாம்! கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது. சுய கருத்துக்களே இல்லாமல் இருக்கச் சொல்கிறதா சன் டிவி? அல்லது பிஜேபிக்கு எதிரான கருத்துக்கள் இல்லாமல் இருக்கச் சொல்கிறாதா?

எது எப்படியாகிலும் இந்தியாவின் ஒரே ஒரு உருப்படியான, நேர்மையான நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டியது நம் கடமை. கொஞ்சமேனும் நேர்மையோடும், நெஞ்சில் பட்டதைப் பேசும் தைரியமும் இருக்கும் ஊடகவியலாளர்களையும் இப்படி நீக்கிக் கொண்டிருந்தால் பத்திரிக்கைகள், டிவிக்கள் எல்லாம் துக்ளக் போல ‘சோ கருத்து’ ‘கலாநிதிமாறன் கருத்து’ ‘பச்சைமுத்து கருத்து’ என ஊடக முதலாளிகளின் சுய கருத்து வலைப்பூக்களாக வெளிவர வேண்டியதுதான். கிடைத்துக் கொண்டிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் உண்மையும் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். வீரபாண்டியனின்  நேருக்கு நேர் விரைவில் விடுதலை செய்யப்படும் என நம்புவோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் சன்டிவியை விட்டு விலகி வேறு எதாவது தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியை வழங்க வேண்டும் என்பது என் கோரிக்கை. சிறு வயதில் நேருக்கு நேரின் மூலம் அரசியல் பார்வையை செழுமையாக்கிக் கொண்டவன் என்ற முறையில் என் முழு ஆதரவும் வீரபாண்டியனுக்கு உண்டு.

Related Posts Plugin for WordPress, Blogger...