Tuesday, September 23, 2014

தமிழ் நாஜிக்களும், தமிழ் சினிமாவும்!

 திரைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே, அதற்கும் அரசியலுக்குமான தொடர்பை நாம் அறிவோம்.  ஹிட்லரை தூக்கிப் பிடிக்க கோயபல்ஸ் எடுத்த திரைப்படங்களில் இருந்து, ஹிட்லரை நக்கல் செய்ய சாப்ளின் எடுத்த திரைப்படம் வரை உலகம் கண்டிருக்கிறது.  அமெரிக்காவில் இன்று அரசுக்கு எதிராக நிறைய படைப்புகள் வருகின்றன.  ஆனால் அங்கும் கூட ஆரம்ப காலங்களில் ஏராளமான திரைப்படங்களை தடை செய்திருக்கிறார்கள்.  இன்றளவிலும் பல நாடுகளில் அரசாங்கத்தினுடைய கொள்கைகளுக்கு மாறான கருத்தியலோடு வெளிவரும் படங்களை தடை செய்கிறார்கள்.  அரசுசார் தணிக்கை ஒருபுறமிருக்க, இந்த திரைப்படம் மதத்தை புண்படுத்துகிறது, இனத்தை புண்படுத்துகிறது, உடலை புண்படுத்துகிறது என்ற கோஷங்களோடு திரைப்படங்களை தடை செய்யவும், தணிக்கை செய்யவும் தனியார் தணிக்கை குழுக்கள் நிறைய முளைக்க  ஆரம்பித்திருக்கின்றன.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி திரைப்படத்தை தடை செய்ய 65 தமிழ் அமைப்புகள் கோரிக்கை எழுப்பியுள்ளன என்ற செய்தியை கேட்கும் போதே தலைசுற்றுகிறது.  இப்போது விஷயத்திற்கு வருவோம்.  சிறுகூட்டத்தை சேர்த்துக்கொண்டு கோஷமிடும் இந்த தனியார் தணிக்கை குழுக்களைப் பற்றிப் பார்க்கும் முன், முதலில் அரசுசார் தணிக்கையை பற்றிப் பார்ப்போம்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகப் பார்க்கப்படும் இரண்டு நாடுகள் இந்தியாவும், அமெரிக்காவும்.  அமெரிக்காவில் திரைப்படங்களுக்கு தணிக்கை கிடையாது.  ஆனால் தரமதிப்பிடல் (ரேட்டிங்) உண்டு.  ஆனால் மற்றொரு ஜனநாயக நாடான இந்தியாவில் எடுக்கப்படும் எல்லா படங்களையும் ஒரு குழு உட்கார்ந்து பார்த்துவிட்டுதான் அதை வெளியிடலாமா, வேண்டாமா என முடிவு செய்யும்.  அதுமட்டுமல்லாது திரைப்படத்தின் தொகுப்பாளர் செய்த வெட்டி ஒட்டும் வேலைகள் போக, இந்த அதிகாரிகளும் இதை வெட்டு அதை வெட்டு என்பார்கள்.  இதையெல்லாம் தாண்டித்தான் இந்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன.  அமெரிக்காவில் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சியில் இருந்த போதே அவர் இறப்பதைப் போல சித்தரிக்கப்பட்ட காட்சிகளுடன் டெத் ஆஃப் எ பிரசிடண்ட்என்ற திரைப்படம் வெளிவந்தது.  நம் நாட்டில் இப்படி ஒரு திரைப்படத்தை கற்பனை செய்துபாருங்கள்.  உண்மையான சம்பவங்களை கூட நம்மால் அப்படியே படமாக்க முடியாது.  இன்னமும் பாபர் மசூதி பற்றிய நேர்மையான ஒரு பதிவை உருவாக்க முடியாமல் தான் தவிக்கிறோம்.  சமூக ஏற்றதாழ்வுகள், மொழிச் சிக்கல்கள், சாதி,மதம் என இந்தியாவில் நிலவும் எந்த ஒரு பிரச்சினையையும் பற்றி அழுத்தமானதொரு திரைப்படப் பதிவை செய்யவேண்டுமென்றால் அது கடினமான காரியம் மட்டுமல்ல, இந்தியாவைப் பொறுத்தவரை முடியாத காரியமாகத்தான் இருக்கிறது.  மிஞ்சிப்போனால் மேம்போக்காக பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் காட்டலாம். 

சரி.  இவ்வளவு சிறப்பாக வேலை செய்யும் இந்திய தணிக்கைத் துறை அதிகாரிகள் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபீசர்களோஎன ஆச்சரியமாகப் பார்த்தால் அதுவும் கிடையாது.  திரைப்படங்களில் அரசுக்கு எதிரான கொள்கைகளைப் பற்றிதான் கருத்துக்களை வெளியிட முடியாதேயொழிய, நடிகைகளின் தொப்புள்களில் பம்பரம் விடுவது முதல் மார்பக இடுக்குகளில் பலமாடிக் கட்டிடம் கட்டுவது வரை அத்தனையும் செய்ய முடியும்.  மிட்நைட் மசாலா பாடல்களில் 99% பாடல்கள், குடும்பம் சகிதமாக குழந்தைகளுடன் அமர்ந்து குதூகலமாகப் பார்க்கலாம் என தணிக்கை துறை U தரச்சான்றிதழ் அளிக்கும் படங்களில் தான் இடம்பெற்றிருக்கின்றன.  இதையெல்லாம் விட பெரிய அபத்தம், அதிகாரிகளுக்கு ஏற்ப தணிக்கையும் மாறுபடுவதுதான்.  சிறிய இயக்குனர்களின் படங்களில் ஓசையற்று உச்சரிக்கப்படும் வார்த்தைகள், சில பெரிய இயக்குனர்களின் படங்களில் அப்படியே ஒலிப்பதை கவனித்திருக்கலாம்.  இதுதான் நம் இந்திய தணிக்கைத் துறை லாவகமாக செயல்படும் முறை!

இப்படி, ஆபாசமாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம், ஆனால் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் படம் எடுத்தால் கத்தரிப்போம் அல்லது தடை போடுவோம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் தணிக்கை துறைக்கு அனுப்பப்படும் ஈழ ஆதரவு, புலி ஆதரவு படங்கள் தடை செய்யப்படுவது இயல்பே என்பதையும், அதே நேரம் புலி எதிர்ப்புடன் வெளிவரும் திரைப்படங்களை தணிக்கைத்துறை தாராளமாக அனுமதிக்கும் என்பதையும் முதலில் நாம் உணர்ந்துகொண்டு, எதற்கெடுத்தாலும் தடை தடை என முழுங்கும் நம் ஊர் தமிழ்தேசிய இயக்கங்களின் தடைகோரும் அரசியலுக்குள் நுழைவோம்.


தமிழ் நாஜிக்கள் என இணையத்தில் உண்மையான தமிழுணர்வாளர்களால் செல்லமாக அழைக்கப்படும் போலித் தமிழ்தேசியவாதிகள், ஏற்கனவே தணிக்கைத்துறை என்னும் அரசு கத்தரியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தனியார் தணிக்கை என்ற கத்தரியையும் நுழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  மெட்ராஸ் கஃபே, இனம், டாம்999 போன்ற படங்களுக்கு ஏன் தடை கோருகிறார்கள் என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம், எங்கள் அரசியலைப் பேசும் படங்களுக்கு அனுமதிக்காத தணிக்கைத்துறை எங்களுக்கு எதிரான அரசியலைப் பேசும் படங்களை அனுமதிக்கிறது.  அதனால் தடை கோருகிறோம்,என்பது.  இதை மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமாகத் தெரியும்.  ஆனால் தணிக்கைத் துறை என்பது இந்திய அரசின் கொள்கைகளை கட்டிக் காப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள கருத்துத்தடை கழகம்!  ஏற்கனவே தடை செய்வதிலும், கத்தரிப்பதிலும் வல்லவனாகத் திகழும் அதன் கையில் மேலும் மேலும்  ‘தடைஆயுதத்தை திணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது இதுபோன்ற போராட்டங்கள் இவர்களின் அரசியலுக்கே ஆபத்தாக முடியும் என்பதுதான் உண்மை.  இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை தவறாக சித்தரித்து எடுத்தப் படத்தை இவர்கள் தடை செய்யக்கோரினால்  நாளை ஒருவேளை தமிழர்களின் அரசியலைப் பேசும் படம் ஒன்றை எடுக்க நினைத்தால், அதற்கு தடை போடுவது இந்திய அரசிற்கு மிகவும் சுலபம் ஆகிவிடுமே!  ஏற்கனவே காற்றுக்கென்ன வேலி, எள்ளாளன், ஆணிவேர் போன்ற படங்களை வெளியிடவிடாமல் தணிக்கை துறை தடுத்ததை நாம் அறிவோம். 

திரைப்படங்களை எதிர்ப்பதில் காட்டும் இந்தப் ஆர்வத்தை, வெறியை, ஆத்திரத்தை, போராட்டத்தையெல்லாம், தணிக்கை துறை தடை செய்த தமிழர் அரசியல் ஆதரவுப் படங்களுக்கு அனுமதி வாங்கவேண்டி இவர்கள் செய்தார்களேயானால் நமக்குப் பயனுண்டு.  இந்திய அரசு அனுமதி அளிக்கும் விசயங்களுக்குத் தடை போடப் போராடுவதைக் காட்டிலும்,  இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் விசயங்களுக்கு அனுமதி வேண்டிப் போராடுவதே நியாயமான, ஆக்கபூர்வமான போராட்டமாக இருக்கும்.  மெட்ராஸ் கஃபே, டாம்999, இனம், புலிப்பார்வை போன்ற படைப்புகளுக்கு படைப்புகளின் மூலமாகவே பதில் சொல்ல முடியாததுதான் நமது பிரச்சினையேயொழிய அந்தப் படங்கள் பிரச்சினை அல்ல!

ஆக்கபூர்வமான அரசியலுக்கு உதாரணமாக திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலப் போராட்டங்களை சொல்லலாம்.  1950களின் சமூகச் சூழலுக்கு, அரசியல் சூழலுக்கு எதிராக உள்ளது என அப்போதைய அரசினால் பார்க்கப்பட்ட பராசக்தி திரைப்படத்தை தடை செய்தார்கள்.  அண்ணாவின் ஆரிய மாயையை தடை செய்தார்கள்.  அதற்காக திராவிட இயக்கத்தினர் தங்கள் அரசியலைப் பேசும் படைப்புகளை நிறுத்திக்கொண்டார்களா என்ன?  அரசின் கொள்கைகளுக்கு மாறாக ஒரு புதிய கருத்தியலை முன்வைக்கும் போது தடைகள் வராமல் மாலைகளும், பூங்கொத்துக்களுமா வரும்?  அவர்கள் எங்கள் கருத்தை தடை செய்வதால் நாங்களும் தடை கேட்கிறோம் என்பது அபத்தத்தின் உச்சம். 

அதுவும் போக ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்தை மிஞ்சிப்போனால் இரண்டு ப்ரிண்ட் போடுவார்கள்.  திரையிடுவதை தடுத்துவிட்டாலே யாராலும் அத்திரைப்படங்களை பார்க்க முடியாத நிலை இருந்தது.  ஆனால் இந்தக் காலத்தில் திரைப்படத்தை மடிக்கணினியில் தரவிறக்கம் செய்துகொண்டு ஆளுக்கொரு ப்ரிண்ட் போடும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.  இச்சூழ்நிலையில் படத்துக்கு தடை கோருவதன் மூலம் ஒரு படத்தை மக்கள் பார்க்கமுடியாதபடி செய்துவிடமுடியும் என்ற பார்வையே படு முட்டாள்தனமானது!  தடை செய்துவிட்டதாக தமிழ்தேசியவாதிகள் பெருமிதம்கொள்ளும் தமிழர் விரோத படங்களான மெட்ராஸ் கஃபே, டாம்999, இனம் என எந்தப் படத்தையும் நம்மால் இன்று பார்க்க முடியும்.  ஆனால் தமிழர் ஆதரவுப் படங்கள் என எத்தனை படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன?  தேடித் தேடிப்பார்த்தாலும் ஏமாற்றம் தான் மிஞ்சும்.  இன்று பராசக்தியும் சரி, ஆரியமாயையும் சரி, காலத்தை வென்று நிற்கிறது.  ஆனால் இன்னும் ஒரு 30வருடங்கள் கழித்து மெட்ராஸ் கஃபே இருக்கும், டாம்999 இருக்கும். ஆனால் தமிழர் ஆதரவுப் படம் என ஏதாவது ஒரு படைப்பாவது இருக்குமா?  (ஒரு சிறிய யோசனை:  சமீபத்தில் சீமான் அவர்கள், தயாரிப்பாளர் தாணு இரண்டு வருடங்களாக தன்னை படம் இயக்கச் சொல்லி நச்சரிப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.  அந்த வாய்ப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வரலாற்றை படமாக எடுப்பார் என நம்புவோம்.  நடிப்பும் அவருக்கு கைவந்த கலை என்பதால் அவரே கூட நடிக்கலாம்.  அப்படத்தை வெளியிட தணிக்கைத்துறை தடை போடும்போது அதை எதிர்த்துக் களமாடி அப்படத்தை வெளியே கொண்டு வந்தார் என்றால் அவரை வாழ்த்தி வணங்கலாம்.)

ஆக இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன?  அமெரிக்காவில் இருப்பதைப் போல தணிக்கைத் துறை என்பது தரமதிப்பு வழங்கும் துறையாக மட்டும் இருக்கட்டும், அதற்கு கருத்து தடை செய்யும் உரிமையை அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைக்கும் போராட்டம் மட்டுமே நிரந்தரத் தீர்வை நோக்கிய போராட்டமாக இருக்கும்.  ஆனால் ஏன் அதை நோக்கி தமிழ் தேசியவாத இயக்கங்கள் என தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் நாம் தமிழர், மே17 போன்ற இயக்கங்கள் நகர மறுக்கின்றன?  நோய் இருக்கும் வரைதான் மருத்துவனுக்கு வேலை என்பதைப் போல, தமிழர் எதிர்ப்பு அரசியல் இருக்கும் வரை தான் இவர்களுக்கு வேலை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.  அதுமட்டுமல்லாது யாரென்றே தெரியாத யாரோ எடுத்த எள்ளாளனுக்கும், ஆணிவேருக்கும் ஆதரவாகப் போராடினால் என்ன விளம்பரம் கிடைத்துவிடப்போகிறது?  ஜான் ஆபிரகாமுக்கும், விஜய்க்கும், பாரிவேந்தருக்கும் எதிராகப் போராடினால் அமோகமான விளம்பரம் அல்லவா கிடைக்கும்.  புண்ணை ஆற்றுவதில் அக்கறை இல்லாத இவர்கள், புண்ணை சொறிந்து கொள்வதோடு நிறுத்தும் காரணம் இதுதான். 

2009ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு அவ்வின அழிப்பை தங்கள் அரசியலுக்கான உரமாக விழுங்கிச் செரித்து, முளைத்திருக்கும் இந்த இயக்கங்களின் அடிப்படை அரசியலே எதிர்ப்பு-அரசியல் தான்.  அந்த எதிர்ப்பு அரசியலையேனும் சரியான இடங்களில் காண்பித்தார்களா என்றால் இல்லை.  சுற்றுலா வந்த அப்பாவி புத்தபிட்சுக்களை அடிப்பதும், விடுமுறைநாளில் மூடப்பட்டிருக்கும் தூதரகத்தின் முன்பு கோஷம் போடுவதும், வேண்டாத திரைப்படத் தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு போடுவதும், போராட்டங்களைக் காட்டி பேரம் பேசுவதுமாகத்தான் இவர்களின் அரசியல் இருக்கிறது.

விடமாட்டோம் விடமாட்டோம் மலையாளிகளை விட மாட்டோம், என்ற கொலைவெறி கோஷங்களை தங்கள் கட்சியின் அதிகாரபூர்வ கோஷமாக கட்சி ஆவணத்தில் வெளியிடும் அளவிற்கு (ஏன் இவ்வியக்கங்களை இணையத்தில் தமிழ் நாஜிக்கள் என அழைக்கப்படுகிறார்கள் என புரிந்திருக்குமே!) தங்களது நாடி, நரம்பு, ரத்தத்தில் தமிழ்வெறி ஊறிய நாம் தமிழர் கட்சியினர், கத்தி மற்றும் புலிப்பார்வை பட விவகாரங்களில் அடித்திருக்கும் அந்தர் பல்டி, அண்ணாவின் இரட்டை நாவுடையாய் போற்றி என்ற புகழ்பெற்ற வாசகத்தோடு அப்படியே பொருந்துகிறது.
ஆரம்பத்தில் தமிழர் விரோதமாக எப்படம் வந்தாலும் எதிர்ப்போம் என்ற லட்சிய தாகத்தோடு களமிறங்கியவர்கள், இன்று யார் தயாரிப்பாளர்கள், யார் நடிகர்கள் என்பதைப் பார்த்துதான் அந்த படம் எதிர்க்கப்படவேண்டிய படமா, அல்லது இசை வெளியீட்டு விழாவில் துதிக்கப்பட வேண்டிய படமா என்பதை முடிவு செய்கிறார்கள்.  எதிர்ப்பு அரசியலே தவறு எனும் போது, இன்றைய தமிழ்நாஜிக்களின் நிலை எதை எதிர்க்க வேண்டும் என்ற நிலையில் இருந்து மாறி, யாரை எதிர்க்க வேண்டும் என்பதற்கு தாவி இருக்கிறது. 

விடுதலைப்புலிகளுக்கு எதிராக உலக அளவில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று அவர்கள் குழந்தைகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தார்கள் என்பது.  அதை மெய் எனச் சொல்லும் வகையில் புலிப்பார்வை திரைப்படத்தின் சுவரொட்டிகள் அமைத்திருக்கின்றன.  பாலச்சந்திரனாக நடிக்கும் சிறுவனின் கையில் துப்பாக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதை அவனது அப்பா, அதாவது பிரபாகரன் பெருமிதத்தோடு பார்ப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  இப்படி வெளிப்படையாக புலிகளின் மேல் அவதூறு வீசும் நோக்கில் வந்திருக்கும் ஒரு படத்தை வழக்கம்போல் எதிர்க்காமல், அதை வெட்டச் சொன்னேன், இதை வெட்டச் சொன்னேன், நகாசு வேலை பார்க்கச் சொன்னேன், என பூசி மெழுகுவதுதான் மண்டியிடாத மானமா?  பாரிவேந்தருக்கு ஒரு தராசு, லிங்குசாமிக்கு ஒரு தராசா?  புலிகளின் அரசியலை விமர்சிப்பவர்களை எல்லாம் தமிழின விரோதிகள், வந்தேறிகள் என முத்திரை குத்தி சான்றிதழ் அளிக்கும் வேலையை செவ்வனே செய்யும் நாம் தமிழர் கட்சியின் புலிப்பார்வை ஆதரவை எதில் கொண்டுபோய்  சேர்ப்பது?  விடுதலைப்புலிகளின் நேரடி தமிழக கிளை போல தன்னை பறைசாற்றிக் கொள்ளும் சீமான் புலிகளுக்கு செய்யும் பச்சை துரோகம் அல்லவா இது?

நாம் தமிழர் கட்சிதான் இரட்டை நாக்குடன் வீறுநடை போடுகிறது என்றால் மே17 இயக்கம் போன்ற இயக்கங்கள் கத்தி திரைப்படத்தை எதிர்க்கச் சொல்லும் காரணங்கள் சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது.  தமிழ்தேசிய இயக்கங்களிலேயே, கத்தி தயாரிப்பாளர்களான லைக்கா நிறுவனம் தமிழர் நிறுவனம் என்று ஒரு தரப்பும், சிங்கள நிறுவனம் என ஒரு தரப்பும் சொல்கிறது.  அவற்றை நாம் சிங்கள தரப்பு என்றே எடுத்துக்கொண்டாலும் தமிழகத்தில் சிங்கள முதலீடு லைக்கா நிறுவனம் மட்டும் தானா?  எத்தனையோ விமானங்கள் தினமும் இலங்கையில் இருந்து சென்னைக்கும், திருச்சிக்கும் வருகின்றன.  அதில் ராஜபக்சேவுக்கு சொந்தமான விமானசேவை நிறுவனங்களே உண்டு.  எல்லா சிங்கள முதலீடுகளையும் இவர்களால் தடுக்க முடியுமா?  விஜய் படம் என்பதால் விளம்பரம் கிடைக்கும் என்பதுதானே இவர்கள் கத்தி திரைப்படத்தை எதிர்க்க ஒரே நோக்கமாக இருக்க முடியும்?  

ஆக நடிகர்களை எதிர்க்கும் இவர்கள் நடிகர்களை விட பெரிய நடிகர்களாகவும், படைப்பாளிகளை எதிர்க்கும் இவர்கள் படைப்பாளிகளை விட பெரிய படைப்பாளிகளாகவும் இருப்பதையும், இவர்களையும் நம்பி தமிழ் இளைஞர்கள் சிலர் தங்கள் வாழ்வை தொலைத்துவிட்டு திக்கற்றுத் திரிவதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.  இப்படி சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் இருத்தலுக்காகவும் தமிழ்நாஜிக்கள் முன்னெடுக்கும் போலிப் போராட்டங்கள், ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யமுடியாதா என ஏங்கும் உண்மையான தமிழுணர்வாளர்களுக்கும் கூட ஃபாசிஸ்ட்டுகள் என்ற மோசமான அவப்பெயரையே பெற்றுத் தரும்.  தமிழகத்தில் இணைய கருத்து சுதந்திரத்திற்கு எதிராக குண்டர் சட்டம் என்ற மிகப்பெரிய தடை போடப்பட்டிருக்கிறது.  இந்தப் போராளிகள் அதற்காக போராடவெல்லாம் வேண்டாம், குறைந்தபட்சம் அதைப்பற்றி தெரிந்தாவது வைத்திருக்கிறார்களா என்பதே மர்ம்மாக உள்ளது.  இப்படி தமிழகத்தில் இருக்கும் எத்தனையோ பிரச்சினைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழர்களின் தலையாய பிரச்சினை, புலிகளுக்கு எதிரான திரைப்படங்கள்தான் என்ற பிம்பத்தை மீண்டும் மீண்டும் உருவாக்கி, இலக்கின்றி தேங்கிக்கிடக்கும் குட்டை போல அப்படியேக் கிடக்கும் இவர்களை தமிழர்கள் நாம் முற்றிலும் புறம் தள்ளிவிட்டு கருத்துரிமையை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் போராட வேண்டிய அத்தியாவசிய சூழலில் நிற்கிறோம்.  அதை நோக்கி நம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதே, ஈழப்பிரச்சினையையும் உள்ளிட்ட நம் அனைத்து அரசியல் சிக்கல்களுக்கும் ஆக்கபூர்வமான நகர்வாக இருக்க முடியும். 
-டான் அசோக்
writerdonashok@yahoo.com

-நன்றி உயிர்மை

Sunday, August 31, 2014

பாலியல் வன்முறைகளும், இந்தியக் கலாச்சார வேர்களும்!


ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவன் என்ற முறையில், ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்கலாம் என்றால், குழந்தைகளுடன் உடல் ரீதியாக ஈர்ப்படையும் பீடோஃபைல்களையும் அங்கீகரிக்கச் சொல்கிறீர்களா?என்ற குறிப்பிட்ட கேள்வியை சந்திக்க வேண்டியிருந்தது.  ஓரினச்சேர்கையைப் பொறுத்தவரை இருவரும் விரும்பிப் பங்கு கொள்ளும் உறவாக அதைப் பார்க்க வேண்டும்.  அதனால் அதை அங்கீகரிப்பதே சரி.  அதே நேரம் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் உடல் வன்முறையை அங்கீகரிக்கலாமா என்ற கேள்வியே அப்பட்டமான தவறு.  இதற்கு இப்படி எளிமையாக பதில் அளிக்கலாம் என்றாலும் இதில் இன்னொரு கோணமும் உண்டு.  ஓரினச்சேர்க்கை என்பது மனநோய் இல்லை என்றால் பீடோஃபைல் மட்டும் எப்படி மனநோய்? 

இதுகுறித்து நரம்பியல் விஞ்ஞானியான நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது காமத்திற்காக செய்யப்படுவதாக வெளிப்புறத்தில் தோன்றினாலும், வன்புணர்ச்சிகளில் சாடிச மனப்பான்மை மட்டுமே ஒளிந்திருக்கிறது என்றார்.  மனநோய்கள் என வகைப்படுத்தினால் நகம் கடிப்பது கூட ஒருவகையான மனநோய் தான்.  அதற்காக அதை மனநோய் என நாம் வகைப்படுத்துவதில்லை. வன்புணர்ச்சியையும், நகம் கடிப்பதையும் ஒரே தட்டில் வைத்து எடை போட முடியாது. ஒரு விஷயத்தை அது உண்டாக்கும் பாதிப்பை வைத்து மட்டுமே எடைபோட வேண்டும் என்று முடித்தார்.  இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் பெங்களூரில் ஆறு வயது சிறுமி ஒருத்தி வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு சரியாக 20நாட்கள் ஆகியிருக்கிறது.  மகளிர் அமைப்புகளின் தொடர் போராட்டம், சமூக வலைதளங்களில் எழுந்த கொந்தளிப்பு ஆகியவற்றுக்கெல்லாம் பின், பள்ளிச் செயலாளரையும், ஸ்கேட்டிங் பயிற்சியாளரையும் கைது செய்திருக்கிறார்கள். 

இது போன்ற குற்றங்கள் வெளிவரும் போதெல்லாம் மகளிர் அமைப்புகள் பெரும் போராட்டங்களில் ஈடுபடுகின்றன.  இளைஞர்கள் கொதிக்கிறார்கள்.  சமூக வலைதளங்கள் போர்க்களங்கள் போல காட்சியளிக்கின்றன.  ஆனால் அதே கர்நாடகா மாநிலத்தின் கிராமங்களில் இன்னமும் நூற்றுக்கணக்கான சிறுமிகள் தேவதாசிகளாக நேர்ந்து விடப்படும் அவலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  இந்தியாவின் எத்தனையோ கிராமங்களில் பெண்களும், சிறுமிகளும், சிறுவர்களும் பாலியல் துன்புறத்துலுக்கும், வன்புணர்சிக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.  ஆனால் நகரவாசிகளுக்கு இதெல்லாம் கண்ணில் படுவதே இல்லையே என்னும் கேள்வி எழும் அதே நேரம், கலாச்சாரத்தை தன் ஆன்ம பலமாக பறைசாற்றும் இந்தியா போன்ற நாட்டில், அதன் கலாச்சாரத்தில் இருந்து ஓரளவேணும் வெளிவர முடிந்த படித்த இளைஞர்களால் தான் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை கண்டு அநீதி என்றாவது புரிந்துகொள்ள முடிகிறது.  

பெரும்பாலும் இந்தியா என்பது மகா-கலாச்சாரம் பொருந்திய நாடு என்பதே பெரும்பான்மைக் கருத்தாக, வெளிப்பாடாக இருக்கிறது. பற்றாக்குறைக்கு இந்தியாவை மேலோட்டமாக சுற்றிப் பார்த்த சில மேற்கத்திய 'அறிவுஜீவுகள்' இந்தியாவை அப்படியான, இப்படியான நாடு என்றெல்லாம் புகழ்ந்து எழுதியதும் காரணம். ஆனால் உண்மையில் இந்தியக் கலாச்சாரம் என்பது காலம்காலமாக இந்திய நாட்டில் நிலவும், இந்திய ஆண்கள் இந்தியப் பெண்களை அடக்கி ஆள்வதற்காகவே வடிவமைத்த ஒரு 'பயிற்சி' முறை!

இந்த பயிற்சி முறையின்படி பெண் ஒழுக்கமாய் இருக்கவேண்டும், பெண் உடலை மறைக்க வேண்டும், பெண் கற்போடு இருக்க வேண்டும், பெண் இழுத்துப் போர்த்த வேண்டும், பெண் குடிக்கக் கூடாது, பெண் ஊர் சுற்றக் கூடாது, பெண்ணுக்கு ஒரு கணவன் தான் இருக்க வேண்டும்!  ஆக பெண்களுக்கு மட்டுமே சட்டதிட்டங்களை ஒதுக்கித் தந்திருக்கும் ஒரு 'கலாச்சாரத்தை' எப்படி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான கலாச்சாரமாக, இந்தியக் கலாச்சாரமாக எடுத்துக் கொள்வது?  இந்தியப் 'பெண்' கலாச்சாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்!  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மது அருந்துவது தவறு எனச் சொல்வது சமூக நலன்.  உலக அளவில் பல நாடுகளும் இதைச் சொல்கின்றன, ஆனால் பெண்கள் மது அருந்துவது தவறு எனச் சொல்லும் 'தன்மை' வாய்ந்த விஷமத்தனமானது தான் இந்தியக் கலாச்சாரம்.

இந்தியா கலாச்சாரமிக்க நாடாக சினிமாக்களிலும், கதைகளிலும், நாடகங்களிலும், நாவல்களிலும் தன்னைத்தானே தொடர்ந்து பறைசாற்றி வரும் சூழலில் இந்தியாவில் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் குறையாமல் வன்புணர்வுகள் நடக்கின்றன‌. வன்புணர்வு சம்பவங்கள் ஒருபுறமிருக்க, இந்திய ஆண்களில் கொத்தனார்-சிற்றாளில் இருந்து மேலாளர்-தட்டச்சு செய்பவர், டீம் லீடர் - டீம் மெம்பர் என்பது வரை எதோ ஒரு வகையில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவும், தொல்லையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இதுவும் போக வயது வந்த ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான ஒரு சம்பவத்தை மனதில் புதைத்து வைத்திருக்கிறார்கள்.  உச்சக்கட்ட கொடுமை இந்திய கலாச்சாரத்தின்படி பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணை இந்திய சமூகம் ஒரு குற்றவாளியைப் போல நடத்தும் என்பதுதான்!!

பாலியல் என்ற சொல்லின் அர்த்தம் என்ன?  பால்+இயல். அதாவது பாலினம் சார்ந்த அறிவு அல்லது படிப்பு.  இந்தச் சொல்லை இந்திய சமூகத்தில் சாதாரணமாக ஒரு குடும்பம் உபயோகப்படுத்துகிறதா?  முடியுமா?  பாலியல் என்றாலே ஏதோ கெட்டவார்த்தை போன்ற ஒரு தோற்றமே இருக்கிறது.  சராசரி இந்தியக் குடும்பங்களிலும், ரஜினி, சிரஞ்சீவி, விஜய் போன்ற இந்தியக் கலாச்சார மாஸ் ஹீரோ பயிற்சியாளர்களால் உபதேசிக்கப்படும் சில வரிகளைப் பார்ப்போம்,
"நீ மட்டும் உண்மையான ஆம்பிளைன்னா.."
"நீ நிஜமாவே மீசை வச்ச ஆம்பிளைன்னா.."
"உங்க ஆத்தா ஒன்ன ஒருத்தனுக்கு பெத்திருந்தான்னா..."
"ஒரு பொம்பளைப் புள்ள ஒன்பது மணிக்கு மேல தூங்கலாமா?.."
"பொம்பளைப் புள்ளையா லட்சணமா நடந்துக்க.."
"பொம்பளை உனக்கே இவ்ளோ திமிரு இருந்தா ஆம்பிளை எனக்கு எவ்ளோ இருக்கும்?"
"பொண்ணுன்னா அடக்கம் வேணும், இப்படி ஆடக் கூடாது."
"பொம்பளப் புள்ள வெளிய போனா கெட்டுப் போயிடும். ஆம்பளப் புள்ள வீட்ல இருந்தா கெட்டுப் போயிடும்", இதர, இதர இன்னும் பல!  இப்படி கலாச்சாரம் என்ற பெயரில் ஆணாதிக்கத் தனத்தை சிறுவயது முதலே ஆண்பிள்ளைகள் மனதில் விதைத்தால் இந்த சமூகத்தில் ஆண்-பெண் சமநிலை எப்படி ஏற்படும்?  பெண் என்றால் தனக்கு கீழ்தான் என்ற மனநிலை வராதா?

இந்தியாவில் பேருக்கு இருபாலர் பள்ளி என நடத்துகிறார்களேயொழிய 99% பள்ளிகளில் ஆண்குழந்தைகளும், பெண்குழந்தைகளும் நண்பர்களாக பழக முடியாத நிலையில் தான் இருக்கிறது.  சில பள்ளி, கல்லூரிகளில் இதை பெருமையாகக் கூட கூறுகிறார்கள்.  ஆண்-பெண் மாணவர்கள் பேசினால் பழகினால் தண்டனை தரும் இருபாலர் பள்ளி, கல்லூரிகள் கூட உண்டு.  இப்படி சிறுவயது முதலே பெண்களை 'ஏலியன்கள்' போல தள்ளி தள்ளி வைத்து வளர்க்கும்போது, அச்சமூகத்தில் வளரும் ஆண்கள், பெண்களை சமமாக கருதி வளரும் வாய்ப்பை இழக்கிறார்கள்.  ஒரு வயதிற்குப் பின் பெண்களை காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் மனநிலை மட்டுமே ஏற்பட்டுவிடுகிறது. கலாச்சாரம், பண்பாடு என நீட்டி முழக்கும் இந்திய ஆண்களில் 90% பேர் பெண்களின் கண்களைப் பார்த்து பேச முடியாத ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் பலருக்கு பெண்கள் என்றாலே கண் மார்பு நோக்கிதான் செல்கிறது!

பெங்களுருவில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அந்த சிறுமிக்கு 'குட் டச்' 'பேட் டச்' போன்ற பாலியல் குறித்த அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால் நடந்த கொடூரத்தை ஒருவேளை அந்தச் சிறுமி ஆரம்பத்திலேயே தன் பெற்றோர்களிடம் தெரிவித்திருப்பாள்.  இந்த சம்பவத்தை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம்.  சூழல் இப்படியிருக்க நம் ஊர் கலாச்சாரக் காவலர்கள் பாலியல் கல்வியை கலாச்சாரத்துக்கு எதிரானதாகத்தான் இன்னமும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது நீங்கள் அன்றாடம் கடந்துபோகும் ஒரு விசயத்தை உங்கள் முன் வைக்கிறேன். அமெரிக்க சினிமாக்களில் ஒரு காதல் ஜோடியோ, திருமண ஜோடியோ இணைகிறதென்றால், இணைவதற்கு அறிகுறியாக உதட்டு முத்தக் காட்சியையோ, உடலுறவுக் காட்சியையோ காட்டுவார்கள்.  இயல்பு வாழ்க்கையிலும் திருமணமான தம்பதிகள் இதைத் தான் செய்வார்கள்.  (உடலுறவுக் காட்சிகள் வயது வந்தோர்க்கான ‘A’ படங்களில் மட்டுமே இருக்கும். அமெரிக்கக் குழந்தைகள் இக்காட்சிகளைப் பார்க்க முடியாது.)  நம்மூர் சினிமாவில் என்ன நடக்கிறது?  நாயகன், நாயகியின் தொப்புளில் பம்பரம் விடுவான், பாடல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி ஆடுவார்கள்,  கதாநாயகி மார்பை மட்டும் ஆட்டும்போது காமிரா அங்கே ஜூம் போகும்,  பின்புறத்தைக் காட்டுவார்கள்,  இப்படி எவ்வளவோ!  படத்தைப் பார்க்கும் ஆணின் மனதில் காம உணர்வுவரவேண்டும்;  ஆனால் அதே நேரத்தில் 'A' படமாகவும் ஆகிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இக்காட்சிகள் வைக்கப்படுகின்றன.  இதில் என்ன பெரிய கொடுமை என்றால் மனித இயல்பான உடலுறவுக் காட்சிக்கு ‘A’ சான்றிதழ் கொடுக்கும் சென்சார் போர்டு இதுபோன்ற வக்கிரக் காட்சிகளுக்கு ‘A’ கொடுப்பதில்லை.
ஆக வெகுஜனப் படங்களாக இக்காட்சிகளை தாங்கி வெளிவரும் திரைப்படங்களையும், பாடல் காட்சிகளையும் நம் மக்கள் தங்கள் குழந்தைகள் சகிதமாக குடும்பத்துடன் கண்டுகளிக்கிறார்கள்.  இந்திய சமூகத்தில் உடலுறவு என்பது ஆபாசமாகவும், பெண் உடலைச் சார்ந்த வக்கிரக் காட்சிகள் சாதாரணமாகவும் மக்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  நம் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே ஆபாசங்களும், வக்கிரங்களும் வெகுஜனப் பொழுதுபோக்குகளில் இரண்டறக் கலந்திருப்பதுதான்.

பொழுதுபோக்கு என்ற பெயரில் வெளிவரும் வெகுஜன இதழ்கள் பல, முதல்பக்கம் முதல் கடைசி பக்கம் வரை வக்கிரமான படங்களையே தாங்கி வருகிறது.  வெகுஜனப் பத்திரிக்கை என்ற முகமூடியுடன் வெளிவரும் இத்தகைய புத்தகங்களைப் படிக்கும், அல்லது தொப்புளில் ஆப்பாயில் போடும் திரை காட்சிகளைப் பார்க்கும் ஒரு குழந்தையின் மனநிலை என்ன ஆகும்?  மனதில் என்ன பதியும்?  மேற்கத்தியக் கலாச்சாரம் வக்கிரமானது எனச் சொல்ல இந்தியர்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும்!!

இது ஒரு பக்கம் என்றால் ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, வி.எச்.பி, மற்றும் சில இஸ்லாமிய மதவாதிகள் ஒருபுறம் 'பெண்கள் குடித்தால் அடிப்போம், பெண்கள் ஆடினால் அடிப்போம், ஜீன்ஸ் போட்டால் ஆசிட் ஊற்றுவோம்' என மதம் சார்ந்த கலாச்சாரத்தைக் காக்கக் கிளம்பியிருக்கிறார்கள்.  டெல்லி பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விஷயம் பரபரப்பாக பேசப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஓர் 'அருமையான' கருத்தை உதிர்த்திருந்தார்.  அதாவது பெண்கள் அடுப்படியில் இருந்தவரை எந்த வன்புணர்வு சம்பவங்களும் நடக்கவில்லையாம். மேற்கத்திய கலாச்சாரம் வந்தபின் தான் இச்சம்பவங்கள் நடக்கிறதாம்!   ஒருவன் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் உயிரோடிருப்பதுதான் எனச் சொல்வதைப் போன்ற முட்டாள்தனமான கருத்து தானே இதுவும்?  ஆனால் இதையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் காட்டுமிராண்டிகள் ஏராளமாக இந்தியாவில் உண்டு.  கண்டிப்பாக தடை செய்யப்படவேண்டிய இந்த பயங்கரவாத இயக்கங்கள் இளைஞர்களுக்கு கற்று கொடுப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  பெண் என்பவள் அடிமை என்ற கருத்தை மட்டுமே!

சரி. இத்தோடு விட்டார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு வன்புணர்வு நிகழ்வின் போதும் பெண்களின் உடைப் பழக்கத்தை குறை சொல்கிறார்கள்.  சில மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் ஒரு 12ஆம் வகுப்புப் பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து புதுவை அரசு ஒரு உலகப் புகழ் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டது.  அதாவது, இனி பள்ளி மாணவிகள் சீருடையுடன் சேர்த்து 'ஓவர்கோட்' அணியவேண்டும் என்கிறது உத்தரவு!  இத்தகைய அணுகுமுறையை சமூகத்தில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் பொருத்திப் பார்த்தால் என்ன ஆகும்?  கொள்ளையடிக்கப்படும் வாய்ப்பிருப்பதால் யாருமே பணம் வைத்திருக்கக் கூடாது, கொலை செய்யப்பட வாய்ப்புள்ளதால் யாரும் உயிரோடிருக்கவே கூடாது போன்ற கேலிக்குரிய சட்டங்களில் தான் போய் முடியும்!  ஒரு மாநிலத்தின் அரசே இவ்வளவு பிற்போக்குத்தனமாக செயல்பட்டால் குடிமக்களைப் பற்றி என்ன சொல்வது!

தண்டனைகளைக் கடுமையாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் நியாயமானதாக இருந்தாலும், உண்மையில் நடப்பதென்னவோ துப்பறிவதில் உள்ள குறைபாடு தான்.  விஞ்ஞான ரீதியில் சாட்சிகளைச் சேகரிக்காமல் இன்னமும் நம் நீதித்துறை மனித சாட்சிகளையே பெரிதும் நம்பியிருக்கிறது. பெரும்பாலும் பாதிக்கப்படும் பெண்ணும் குற்றவாளியும் மட்டுமே இருக்கும் ஒரு பாலியல் குற்றச் சூழ்நிலையில் நடந்ததைப் பற்றி வேறு யார் சாட்சி சொல்வார்கள்?  சாட்சிகள் இல்லாததால் ஏராளமான வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அவலம் தொடர்கிறது.  பெரும்பாலும் அக்குற்றவாளிகள் தங்களது அடுத்து குற்றத்தை அரங்கேற்றி விடுகிறார்கள். டி.என்.ஏ போன்ற விஞ்ஞான ரீதியிலான சாட்சிகளை இவ்வழக்குகளில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். 

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதை மேலோட்டமாகப் பார்த்தால் அது சமூகத் தோலில் ஏற்பட்டிருக்கும் ஒரு 'கட்டி'.  ஆனால் அக்கட்டியின் வேர் சமூகத்தின் அடி ஆழம் வரை நீள்கிறது.   ஒரு இந்தியக் குழந்தை பிறந்த அடுத்த நொடியில் இருந்தே அது வேர்விடத் துவங்குகிறது.  மேலோட்டமாக இக்கட்டியை நீக்கினாலும், நீக்க முற்பட்டாலும் அது தற்காலிகமான தீர்வாக இருக்குமேயொழிய கட்டிகள் தோன்றுவதை தடுக்க முடியாது.  இந்தியாவில் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நிலவும் புற்றுநோய் வேரோடு தோண்டியெடுக்கப் பட்டாலேயொழிய நிரம்பி வழியும் பாலியல் குற்றங்களை குறைக்க முடியாது. ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்தால், நைட் கிளப் போனால், இரவில் நண்பர்களுடன் நடந்துபோனால், நைட் ஷோ சினிமா போனால் பாலியல் வன்முறைகள் நடக்கத்தான் செய்யும் என இந்தியத் தாய்மார்களில் பலரே நியாயப்படுத்தும் அவலமான சூழ்நிலையை தான் நம் கலாச்சாரம் நமக்கு தந்திருக்கிறது. 

ஒரு சின்ன சம்பவத்தை பகிர்கிறேன்.  ஒருநாள் நள்ளிரவில் வாழ்க்கைத்துணையுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பேருந்து நிறுத்தம் தென்பட்டது.  ஆள் அரவமற்ற அந்த இடத்தில், மழை பெய்து குளிருடன் ரம்மியமாக இருந்த சூழலை ரசித்தபடியே நான்கைந்து ஆண் நண்பர்கள் ஏதோ பக'டியாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  அந்த நண்பர்களைப் பார்த்துக்கொண்டே என் துணைவி, "எவ்ளோ ஜாலியா பேசி சிரிச்சுட்டு இருக்காங்க.  இது நடு ராத்திரிங்குற பயமே அவங்க முகத்துல இல்ல.  ஆனா நம்ம ஊருல இதே மாதிரி ஒரு நடுராத்திரில நானும் என் பெண் தோழிகளும் எங்கயாச்சும் நின்னு பேசி சிரிக்க முடியுமா?" என்று கேட்டாள்.  என்னிடம் பதில் இல்லை.  என்னிடம் மட்டுமல்ல நம் நாட்டில் யாரிடமும் இதற்கான பதில் இருக்காது.  ஆனால் எதிர்காலத்திலாவது நாம் அந்த பதிலைத் தேடி பயணிப்பதில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை குறைப்பதற்கான வழி இருக்கிறது! 


-டான் அசோக்
writerdonashok@yahoo.com
Related Posts Plugin for WordPress, Blogger...