Saturday, December 28, 2013

யாரிடம் நியாயம் கேட்பது? -டான் அசோக்

“உயிரினங்களிலேயே மிகச் சிறந்தவன் மனிதன் தான்; ஆனால் சட்டத்தையும், நீதியையும் மனிதனிடம் இருந்து பிடுங்கிவிட்டால் உலகிலேயே மோசமான உயிரினமும் அவன் தான்.”
 -அரிஸ்டாட்டில்

மனித வாழ்க்கை தோன்றிய காலத்தில் இருந்தே எத்தனையோ பஞ்சங்களையும், வறட்சிகளையும் மனித சமூகம் சந்தித்திருக்கிறது. பஞ்சங்கள் உச்சகட்டத்தை அடையும் போதெல்லாம் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோன அவலங்களும் பூமியின் சரித்திரத்தில் ஏராளம். ஆனால் மனிதன் சமூகமாய் இணைந்து வாழத் துவங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை ஒருநாள் விடாமல் மனித சமூகத்தை விரட்டி வரும் பஞ்சம் ஒன்று இருக்கிறது. அது நியாயத்திற்கான - நீதிக்கான பஞ்சம்!

நீதி என்றால் என்ன என்பதற்கான புத்தக விளக்கங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சிந்தித்தால் சில விஷயங்கள் புலப்படும். மிகப் பெரிய புனிதமான வார்த்தை போல தோற்றமளித்தாலும், கையாளப்பட்டாலும் நீதிக்கான நடைமுறை அர்த்தம் மிகச் சராசரியானது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் போலியானது.  “நீதி வேண்டும்”, எனப் போராடுகிறவர்கள் தங்களுக்கான நீதி என்று எதை வேண்டுகிறார்கள்? இரண்டே இரண்டு விஷயங்கள் தான்,
1) பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநிறைவைத் தரும் வண்ணம் ஏதாவது தண்டனை தீங்கிழைத்தவருக்கு
த் தரப்பட வேண்டும்.
2) பாதிக்கப்பட்டவர்களுக்கோ, அவர்கள் சந்ததியினருக்கோ நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். 

இவ்வளவுதான்! உலக நாடுகளில் உள்ள எழுதப்பட்ட சட்டங்கள் எல்லாமே இதை ஒத்துதான் எழுதப்பட்டிருக்கின்றன.
அதோடு “தண்டனை இருந்தால் தான் தவறுகள் குறையும்” என்ற பிரதான நோக்கமும் நாட்டை ஆளும் சட்டங்களுக்கு உண்டு. ஆக மனிதர்களின் நீதி என்பது ஒரு குற்றத்தை ஒரு சரியால் சமன் செய்வதல்ல. பாதிக்கப்பட்டவருக்கு இழந்த வாழ்க்கையையோ, உடமையையோ, உயிரையோ திருப்பித் தருவதும் அல்ல.  அந்தக் குற்றத்தை அனுபவித்தவருக்கு ஏதாவது ஒரு வகையில் மனநிறைவைத் தருவதும், அந்தக் குற்றத்தை செய்தவர் திருந்தும் வண்ணம் (அல்லது மீண்டும் குற்றம் செய்யாதபடி அவரை அழிக்கும் வண்ணம்) தண்டனை தருவதும் தான் அதன் நோக்கம். ஆக பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையிலும் நூற்றுக்கு நூறு சரியான, சமாதானமான நியாயம் வழங்குவதென்பது முடியவே முடியாத காரியம். பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கைக் குளத்தில் குற்றவாளியின் கற்கள் ஏற்படுத்திய நீர்த்திவலைகளை நம் சட்டங்களால் ஓரளவிற்கு ஆற்றத்தான் முடியுமேயொழிய, கல்லால் அந்தக் குளம் இழந்த மீன்களையும், தவளைகளையும் சட்டத்தால் திருப்பித் தர முடியாது. மனித சமூகத்தில் நீதி என்பது சமாளிப்பு. மனிதனால் முடிந்தது அவ்வளவுதான்.
ஒருவேளை காலத்தைத் திருப்பி நடந்தவற்றையெல்லாம் மாற்றும் சக்தி மனிதர்களுக்கு இருந்தால் 100 சதவிகித நீதியும், நியாயமும் சாத்தியமாகியிருக்கக் கூடும். பாவம் செய்தவர்களுக்கு இறந்தபின் தண்டனை கொடுப்பதில் தான் மதக் கடவுள்கள் கூட கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களேயொழிய பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. கொலையாளியை எண்ணைச் சட்டியில் வறுப்பது தான் நியாயம் என்று எழுதப்பட்டிருக்கிறதே தவிர, கொலையுண்டவன் இழந்த வாழ்க்கையை அவனுக்குத் திருப்பித் தருவதைப் பற்றி கடவுளர் சட்டங்கள் கூட பேசுவதில்லை.    

வெள்ளைக்காரர்களால் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டு பல தலைமுறைகளாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு இன்று நீதி கிடைத்துவிட்டதாகக் கருதுகிறோம். ஆனால் 1500களில், 1700களில், 1900களில் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு, நாய்களைப் போல எஜமானர்களிடம் மிருகங்கள் போல வாழ்ந்து, மிருகங்களாகவே செத்துப் போன லட்சக்கணக்கான கறுப்பின மக்களுக்கு எப்படி நீதி வழங்குவது? அவர்கள் இழந்த வாழ்க்கையை, குடும்ப உறவை, உரிமைகளை எப்படி திருப்பிக் கொடுப்பது?

பேர்ல் ஹார்பரின் மேல் ஜப்பான் குண்டு போட்ட காரணத்திற்காக, ஜப்பானிய மக்களின் தலையை சரியாகக் குறிபார்த்து அணுகுண்டை தூக்கிப் போட்டவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது? போன உயிர்களும், ஊனமான வம்சங்களும் எந்தக் கணக்கில் சேரும்?
ஸ்பானியர்களால் அழிக்கப்பட்ட நாகரீகங்களுக்கு என்ன நீதி? ஆஸ்திரேலியாவில் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட அந்த நாட்டின் பூர்வகுடிகளுக்கு ஏதாவது நியாயம் நம்மிடம் இருக்கிறதா? சாதியின் பேரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக படிப்பறிவே இல்லாமல், “நாம் அடிமையாய் வாழ்வதற்காகவே பிறந்தவர்கள் தான் என்ற உறுதியான நம்பிக்கையோடு கடைசி வரை வாழ்ந்து செத்த நம் முப்பாட்டன்களின் வாழ்வை எந்த நீதி திருப்பித் தரும்? நாடெங்கும் இருந்து தாழ்த்தப்பட்ட பெண்களையும், சமணப் பெண் துறவிகளையும் தாங்கள் கட்டிய கோவில்களில் தேவதாசிகளாக்கி அழகுபார்த்த மன்னர்களை இப்போது என்ன செய்ய முடியும்? அசாமில் சொந்த நாட்டின் ராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களுக்கான நீதியை எங்கு போய் கேட்பது? வாச்சாத்தி பெண்கள் அனுபவித்த கொடுமையின் கொடூர நினைவுகளை எந்தச் சட்டத்தால் அவர்கள் மூளையில் இருந்து துடைத்தெறிய முடியும்?
உயிர்வளியை சுவாசிக்கும் முன்பே நச்சுப் புகையை சுவாசித்து உயிர் விட்ட யூதக் குழந்தைகளுக்கான நியாயம் ஹிட்லரின் தற்கொலையால் கிடைத்துவிட்டதா? ராணுவ மரணங்கள் கொலைகளில் சேராது என்ற நியாயம், நிஜமாகவே நியாயம் தானா? போபாலில் விஷவாயு விபத்தில் தூங்கியபடியே செத்தவர்களுக்கான நீதி எந்த விஷவாயு தாக்கி செத்துப் போனது?

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் மட்டுமல்ல, தாமதமாகிப் போன நீதியும் கூட திரும்பி வராது. இதற்காக மனிதர்களின் சட்டங்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. மனிதனால், மனித புத்திக்கு உட்பட்டு அவ்வளவுதான் முடியும்.  மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் அளவும் அவ்வளவுதான்!  

ஆக மனித சமூகம் நிர்ணயித்திருக்கும் நீதிக்கு இவ்வளவு வரையறைகள் ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் அந்த நீதியேனும் மக்களுக்கு ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதைப் பார்த்தால் அதில் தான் எத்தனை ஆயிரம் தடைகள், எத்தனை ஆயிரம் அரசியல்கள், எத்தனை ஆயிரம் பாகுபாடுகள், விஷமங்கள், காரணிகள்!  

இனப்படுகொலை நடத்திய இலங்கையிலே அமர்ந்துகொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு, தேர்தலை நடத்தவில்லை என்ற காரணத்திற்காக மாலத்தீவுகளை வெளியேற்றுகிறது. அதுவும் பிரச்சினையை விசாரிக்காமலேயே! விசாரித்ததில் தவறேதும் நடக்கவில்லை என்பதால் இப்போது தடை நீக்கப்பட்டுள்ளது. ஐ.நா விசாரித்து மனித உரிமை மீறல்கள் நடந்த நாடு எனத் தெளிவாக அறிவித்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடிந்த கூட்டமைப்பிற்கு விசாரணைக்கு முன்பே மாலத்தீவு குற்றவாளியாய் தெரிவதை என்னவென்று சொல்வது? விசாரணைக்குப் பின்பும் இலங்கை குற்றவாளியாய் தெரியாததாய் என்ன என்னவென்று சொல்வது?
ராஜபக்சே செய்யாத எதை சதாம் உசேன் செய்துவிட்டார்? ஆயுதங்களைத் தேடுகிறேன் என நுழைந்து ஈராக்கைப் போர்க்களமாக்கிய அமெரிக்காவிற்கு இன்னமும் இலங்கையில் நடந்த கொடுமைகள் எதுவும் எப்படித் தெரியாமல் இருக்கிறது? சர்வதேச நாடுகளின் நீதிகளூம், நியாயங்களும் கூட முன்முடிவு செய்யப்பட்டவை தான். இந்நேரம் இலங்கையில் எண்ணெய் வளம் இருந்திருந்தால் ராஜபக்சே தூக்கில் தொங்கி மூன்று வருடம் ஆகியிருக்கும்.

சர்வதேச விசாரணைகளில், சர்வதேச நியாயங்களில் இருக்கும் முரண்களையெல்லாம் கூட விட்டு விடுவோம். நம் ஊரில், நம் சட்டங்களில், பொதுமக்களின் பார்வைகளில் கூட எத்தனை முரண்கள்?
ஏ.டி.எம்மில் திருடன் ஒருவரால் தாக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய செய்தியை தொலைக்காட்சி ஒன்று விடாமல் அத்தனையிலும் சென்ற வாரம் ஒளிபரப்பினார்கள். மீண்டும், மீண்டும் தொடர்ந்து சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்த அந்தக் கொடூரக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. இந்தியப் பொதுமக்களுக்கோ அதைப் பார்த்து மிகவும் வருத்தம். ஆனால் கேள்வி என்னவென்றால் தினமும் ஆயிரக்கணக்கான கொலைகள் இந்தியாவில் நடக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களின் கழுத்தை அறுத்து நகைகளைத் திருடிய சம்பவங்களைப் பற்றி ஏராளமாகப் படித்திருக்கிறோம். எத்தனையோ ஏடிஎம்களில் எத்தனையோ காவலாளிகள் கொலையுண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு தாக்குதலை காணொளிப் பதிவாக பார்த்தவுடன் நெஞ்சம் துடிக்கிறது. உடனே ஊடகங்கள் எல்லாம் அதை முக்கியச் செய்தியாக்கி, அந்த தாக்குதலை நடத்திய சராசரித் திருடனைத் (இதைவிட கொடூரங்களை எல்லாம் செய்த சராசரிக்கு மேற்பட்ட திருடர்கள் ஏராளமாக இருக்கும் நாடு இது என்பதை நினைவில் கொள்க) தேட இரண்டு மாநிலங்கள் தனிப்படை அமைக்கின்றன.  மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் ஒரு தாக்குதல் காணொளிக் காட்சியாக பதிவாகிவிட்டதாலேயே அந்தத் திருடன் மிகக்  கொடூரமானவனாக சித்தரிக்கப்படுகிறான் என்றால் இதை விடக் சோகமான நகைச்சுவை எதாவது இருக்க முடியுமா? இதுவரை இந்தியாவில் கொடூரமாக உயிரிழந்த, தாக்கப்பட்ட பெண்கள் எல்லாம் காணொளியில் பதிவாகாத காரணத்தாலேயே துரித நீதிக்கு அப்பாற்பட்டவர்களா?  

பாதிக்கப்பட்டவர்களிடம் இரக்கப்படும் அளவை நிர்ணயிப்பதில் கூட ஏராளமான காரணிகள் நம் மனித சமூகத்தில் உண்டு. குழந்தைகளின் மரணங்களைப் பற்றிய செய்தியைக் கேட்கும் போது கூட, “”பாவம். அழகான குழந்தை” என்கிறோம். இதன் மற்றொரு பொருள் என்ன? குழந்தை அவலட்சணமாக இருந்தால் சாகலாம் என்பதா? சிகப்பான , நமக்கு அழகாகத் தோற்றமளிக்கும் குழந்தையின் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவிற்கு சோமாலியாவில் உணவின்றி உயிரோடு எலும்புக்கூடுகளாகிச் சாகும் ஒரு குழந்தையின் மரணம் நம்மை பாதிப்பதில்லை. எல்லாவற்றிலும் ஒரு முன்முடிவு. எல்லாவற்றிலும் ஒரு காரணி. மக்களின் மனசாட்சி வழங்கும் நீதியை இந்தக் காரணங்கள் எல்லாம் பாதிக்கின்றன என்றால் சர்வதேச நாடுகளின் நீதிகளுக்கு அரசியல் காரணங்கள். இவ்வளவுதான் வித்தியாசம்.

’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதெல்லாம் ஏட்டில் எழுத நன்றாக இருக்கிறது. பிற உயிரினங்களிடத்தில் இருந்து மனிதனை உயர்த்திக் காட்டும் பொருட்டு இதுபோன்ற சொற்றொடர்கள் காலம் காலமாக மனிதனின் ஈகோவிற்கு தீனி போட்டு வந்துள்ளனவே தவிர்த்து மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றுமில்லை. காட்டில் எப்படி வலுத்த மிருகம் வைத்தது சட்டமாகிறதோ அதே நிலைதான் நாட்டிலும் இருக்கிறது. என்ன அங்கே சிங்கம் சிங்கமாகவும், புலி புலியாகவும், பாம்பு பாம்பாகவும், முயல் முயலாகவும், கேரட் கேரட்டாகவும், முள்ளங்கி முள்ளங்கியாகவும் இருக்கிறது. இங்கே எல்லா மிருகங்களாகவும் மனிதனே இருக்கிறான்! பிரச்சினையே அதுதானே!

நம் நாட்டிலேயே நமக்குத் தெரிந்து எத்தனைக் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்! தவறு இழைத்தவனுக்கு பணமும், நல்ல வக்கீலைப் பிடிக்கும் திறனும் இருந்தால் போதும், அவன் பிழைத்துக் கொள்ளலாம் என்ற வகையில் தான் எல்லா நாட்டின் சட்டமும் இருக்கிறது. ராம்ஜெத்மலானிக்கு கட்டணம் கொடுத்து வழக்காட வைக்க முடிந்தவன் பிழைப்பான். காசில்லாத காரணத்தால் வக்கீல் வண்டு முருகன்களை வழக்காட வைப்பவன் தூக்கில் தொங்குவான். நடைமுறையில் எல்லா நாடுகளிலும் சட்டத்தின் லட்சணம் இதுதான்.

மக்களுக்கு இப்படியென்றால் ராஜபக்சே போன்றவர்கள் திறமையான சர்வதேச அரசியல் ப்ரோக்கர்களை உபயோகித்துக் கொள்கிறார்கள். தண்டனை தரவல்ல அமெரிக்கா, சீனா போன்ற ஆதிக்க நாடுகளை குளிர்வித்துக் கொள்கிறார்கள். அவைகளின் மனம் கோணாதபடி நடந்து கொள்கிறார்கள். உலக நாடுகளின் குற்றங்களில் இருந்து தமிழகத்தின் கடைசிக் குடிமகனாக தெருவோரத்தில் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் எவனோ ஒருவனின் குற்றம் வரையில் சட்டம் மாறி மாறித்தான் செயல்படுகிறது. ஒவ்வொரு குற்றத்தை எடை போடும் முன்பும், குற்றம் சாட்டப்படுகிறவருக்கு ஏற்ப நீதித் தராசு திருத்தப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மனிதனின் இயல்புக்கே அப்பாற்பட்டதாகத்தான் நீதியும், நியாயமும் இருக்கிறது. ஒருவேளை இன்னும் 1000 வருடம் கழித்து ‘முன்முடிவுகளும், அரசியலும், சுயநலங்களும் அற்ற நியாயத்தை’ வழங்கும் அளவிற்கு மனித மனம் பரிணாம வளர்ச்சி பெற்றால் வேண்டுமானால் சமநீதி என்பது மனித சமூகத்தில் சாத்தியப்படலாம். அதுவரையில் மனிதனை மனிதன் வகுத்த சட்டங்களால் மனிதனே ஆளும் உலகத்தில் நீதி என்பது இல்லாத ஒன்று தான்.

சட்டங்கள், திட்டங்கள், சமூகங்கள், தேசங்கள் எல்லாம் பொய்த்துப் போகும் நேரங்களில் எல்லாம் மனித இனத்திற்கு எப்போதும் இருக்கும் கடைசி நம்பிக்கை தனி மனிதர்களின் மனசாட்சி. தனக்காக மட்டுமல்லாமல், அறிமுகமே இல்லாத சக மனிதர்களின் வாழ்வுக்காகவும், அறிமுகமே இல்லாத சக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்காகவும் ஒவ்வொரு தனி மனிதனும் எப்போது போராடத் துவங்குகிறானோ, வருந்தத் தொடங்குகிறானோ, மெனெக்கெடத் துவங்குகிறானோ, அப்போதுதான் நீதிக்கான அர்த்தம் முழுமையடையும். அதுவரையில் நட்சத்திரங்கள் ஒருநாள் கீழே விழும் என்ற விடாத நம்பிக்கையில் வானத்தை நோக்கி கல்லெறிந்து கொண்டிருக்க வேண்டியதுதான். ஈழ இனப் படுகொலைகளுக்கான நீதியைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் போல!

”ஒவ்வொரு தனி மனிதனின் இதயத்திலும் நீதிக்கான முக்கியத்துவம் நிலைகொள்ளும் போதுதான் உலகத்தில் உண்மையான நீதியும், நியாயமும் நிலைபெறும் சூழல் உருவாகும்.”  -ப்ளேட்டோ

-டான் அசோக்

writerdonashok@yahoo.com

நன்றி உயிர்மை.

2 comments:

நம்பள்கி said...

நல்ல பதிவு! தமிழ்மணம்+1

திண்டுக்கல் தனபாலன் said...

// எல்லா மிருகங்களாகவும் மனிதனே இருக்கிறான்...! //

உண்மை...

முடிவில் சரியான தீர்வு : ப்ளேட்டோ

Related Posts Plugin for WordPress, Blogger...