Friday, November 29, 2013

பெரியார் ver2.0. -டான் அசோக்

தத்துவங்கள் பதிவு செய்யப்படத் துவங்கிய காலத்தில் இருந்து இந்த நொடி வரையில் புத்தர், சாக்ரடீஸ், கன்பூசியஸ், கார்ல் மார்க்ஸ் எனப் பல தத்துவ மேதைகளின் தத்துவங்களை எல்லாம் மேலோட்டமாக அலசினால் கூட சிலவிசயங்கள் தெளிவாகத் தெரியும். இவர்கள் அனைவருமே தாங்கள் சார்ந்த சமூகத்தினின்று வேறுபட்டு சிந்தித்தவர்கள். மற்றவர்களின் கருத்துக்கள் எதையுமே மூலாதாரமாகக் கொண்டு இவர்கள் தங்கள் சிந்தனையை அமைத்துக் கொள்ளவில்லை. சமூகத்தின் வாழ்வியல் நெறிகளில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டு செய்திருக்கிறது இவர்களது தத்துவங்கள். மேலும் தாங்கள் வாழ்ந்த சமூகத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கே பொருந்துபடியான சிந்தனைகளையும், வாழ்வியல் நெறிகளையும் இவர்கள் விட்டுப் போயிருக்கிறார்கள். அதனால்தான் உலக சிந்தனையாளர்களின் வரிசையில் இவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.

இப்போது தந்தை பெரியாரிடம் வருவோம். மேலே உள்ள சிந்தனையாளர்கள் உலக அளவில் பேசப்படுவதன் காரணங்கள் அப்படியே பெரியாருக்கும் பொருந்தினாலும், நாம் பெரியாரை தமிழ்நாட்டிலாவது ஒழுங்காக, முழுமையாகச் சேர்த்திருக்கிறோமா என்றால், இல்லை என்பதே வேதனையான உண்மை. ஒரு சராசரி தமிழ்க் குடிமகனை அழைத்து, "பெரியார் யார்?" என்று கேட்டால் பெரும்பான்மையானோரின் முதல் பதில், "பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர்!" என்பதாக மட்டுமே இருக்கும். பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாளராக மட்டுமே கருதுவதென்பது பூமியை காற்று மட்டுமே இருக்கும் ஒரு காற்றுப்பையாகக் கருதுவதைப் போன்றதொரு மிகக் குறுகியதொரு பார்வை தான். ஆனால் நாம் அவரை இத்தனைக் காலமாக அப்படித்தான் பெரும்பாலும் பரப்பி வருகிறோம்.

பெரியார் எந்த விசயத்தைப் பற்றிப் பேசவில்லை என்று கேட்டால் அதற்கு பதிலே கிடைக்காது. உணவுப்பழக்கம், உடை, பெண்கள் விடுதலை, வருங்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற தொலைநோக்கு, குடும்பக் கட்டுப்பாடு, மொழி, திருமணம், காதல், ஒழுக்கம், காமம், சமூக வாழ்வியல், கலாச்சாரம் எனப் பட்டியல் நீண்டுகொண்டே தான் போகும்.  இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் கருத்தடை, துரித உணவுக் கடைகள், உடனடி (instant) உணவுக் கலாச்சாரம், சோதனைக் குழாய் குழந்தைகள் என பலவிசயங்களை அவை கண்டுபிடிக்கப்படும் முன்பே பேசியிருக்கிறார். ஆனால் பெரியார் என்றால் கடவுள் மறுப்பு, மிஞ்சிப்போனால் சமூகநீதிக்காவலர் என்ற அளவிலே மட்டும்தான் தமிழகத்தில் பெரியார் பெரும்பாலும் சென்றடைந்திருக்கிறார்.

பெரியாரின் கொள்கைகளை, இதுதான், இவ்வளவுதான் என அவ்வளவு சுலபத்தில் யாருமே வரையறுத்துப் பட்டியலிட முடியாதெனினும் அவரது கொள்கைகளுக்கெல்லாம் மூலமாக இருப்பது மனிதநேயம் தான் என்பதை அவரை சரியாக உள்வாங்கிய யாராலும் உடனே கூறிவிட முடியும். மனிதர்கள் மனிதர்களாக வாழவேண்டும்! அவ்வளவுதான் பெரியார்! பெரியார், தான் சார்ந்த சமூகத்தில் கடவுளின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டு, சக மனிதர்களை நசுக்க மட்டுமே அக்கருத்தியல் பயன்படுகிறது என்பதைப் புரிந்து கடவுள் மறுப்பு கருத்துக்களைப் பரப்பினார். ஒருவேளை கடவுள் என்பவரை சாதி-வர்ண பேதங்களுக்கு அப்பாற்பட்ட, மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட, காதில் பூச்சுற்றும் புராணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு 'சக்தி'யின் வடிவமாக மட்டுமே மக்கள் நம்பியிருப்பார்களேயானால் பெரியார் தன் கடவுள் மறுப்புக் கொள்கையை தனக்குள்ளேயே வைத்திருக்கக் கூடும்.  ஆனால் நம் ஊர் கடவுள்களோ அதற்கு முற்றிலும் மாறாக இருப்பதால், மக்களுக்குக் கடவுளின் மீதிருக்கும் பயத்தை, நம்பிக்கையைப் போக்கினால் கடவுளுக்கு உரிமை கொண்டாடும் சாதியினர் மீதான மக்களின் பக்தி ஒழியும், மூடநம்பிக்கை ஒழியும், சுயமரியாதை வளரும், மனிதனை மனிதனாய் மதிக்கும் மனிதநேயம் வளரும் என்று முடிவு செய்துகொண்டு கடவுள் மறுப்பு கொள்கையையும் பரப்பினார் பெரியார்.

ஆனால் அதிலே கூட கடவுளை மறுப்பவனுக்கு மட்டும்தான் சமூகநீதியும், உரிமைகளும் உரித்தானது போன்ற வறட்டுப் பிடிவாதங்களை அவர் முன்வைக்கவில்லை. உதாரணமாக, வைக்கம் போராட்டத்தில் கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படாத மக்களை நோக்கி, "அவன்தான் உள்ளே விட மாட்டேன் என்கிறானே! அவனது கடவுள் உங்களுக்கு எதற்கு?" என்ற கேள்வியை அவர் அங்கே அந்த இடத்திலே எழுப்பவில்லை. மாறாக அவர்கள் கோவிலின் உள்ளே நுழையும்படியான உரிமையைப் போராடிப் பெற்றுத்தந்தார்.  ஒருபுறத்திலே கடவுள் மறுப்பை பரப்பிக்கொண்டே மற்றொரு புறத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி கோவில்களுக்குள்ளேயும் கிடைக்க வேண்டும் என்பதே அவர் கொள்கையாக இருந்தது.  அதனால்தான் அம்பேத்கரின் புத்த மதமாற்ற முடிவை சிறிய விமர்சனங்களோடு வரவேற்று எழுதினாலும் சமூகநீதி என்பது இந்து மதத்திற்குள்ளேயே இருந்து பெறப்பட வேண்டியது என்ற கொள்கையில் திடமாக இருந்தார். இந்த முரண் ஆழ்ந்து நோக்கப்பட்டு, ஆராயப்பட வேண்டிய ஒன்று.

ஒருவேளை எல்லோரையும் கடவுள் மறுப்பாளர்களாய் ஆக்குவதுதான் பிரதான கொள்கையென்றும்அதன்மூலம் சமூகநீதியை நிலைநாட்டுவதுதான் உப-கொள்கை என்றும் வரையறுத்துக் கொண்டு எல்லோரும் கடவுள் மறுப்பாளராய் மாறுவதற்காகக் காத்திருந்திருந்தால் பெரியாரால் எந்த சாதனைகளையுமே செய்திருக்க முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. சமூகத்தின் நலன்களுக்காக, சமூகத்தின் நகை முரண்களை உள்வாங்கி செரித்துக் கொண்டவர் பெரியார். அதனால்தான் கடவுள் மறுப்பைப் பேசிக் கொண்டே கடவுளுக்கு அருகில் ஒதுக்கப்பட்டவனையும் அவரால் கொண்டு செல்ல முடிந்தது.

பெரியார் காலத்திலிருந்த சமூக நிலைமை, கருத்துக்களை உள்வாங்கும் மக்களின் போக்கு இன்று மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. சமூக அடுக்குகளுக்கு இடையே உள்ள இடைவெளியை கல்வியின் மூலமும், சாதி ஏற்றத்தாழ்வுகளை எதிர்ப்பதன் மூலமும் தான் அடைக்க முடியும் என்ற பெரியாரின் கொள்கை தமிழகத்தில் ஜெயித்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளால் இந்தியாவில் நிகழ்த்த முடியாத ஒரு மாற்றத்தை தமிழகத்தில் பெரியார் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். பெரியாரின் சமகாலத்திலே வாழ்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் அடுத்த தலைமுறையினர் (அதில் ஒரு பகுதியினர்) இடஒதுக்கீட்டால் படித்து முன்னேறிவிட்டதால், இன்னமும் முன்னேற்றமடையாத பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் கட்டத்திற்கு நகரத் துவங்கியிருக்கிறார்கள். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் தாங்கள் வளர வளர, கீழே இருக்கும் தொடர்பை துண்டித்துக் கொண்டு தங்களுக்கு மேலே இருப்பவர்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பிற்படுத்தப்பட்டவர்களையும், தலித்துகளையும் கூறமுடியும். பிறப்பால் பார்ப்பனரல்லாத, ஆனால் பார்ப்பனீயத்தின் அம்சங்களைக் கடைபிடிக்கத் துவங்கியிருக்கும் இவர்களை neo-brahmins (நவயுகப் பார்ப்பனர்கள்) எனக் கொள்ளலாம்.  எனவே பார்ப்பனீயத்தைக் கடைபிடிப்போரின் எண்ணிக்கை சாதி வேறுபாடில்லாமல் அதிகமாயிருப்பதால் பெரியாரியத்திற்கான வேலை இந்தியாவிலே இன்னமும் அதிகமாகியிருக்கிறது!பெரியாரின் பரப்புரைகள் சென்றடைவதில் முன்னர் இருந்தப் பிரச்சினைகளை விட இப்போது பல புதிய பிரச்சினைகள் முளைத்திருக்கிறது. பெரியாரின் கூட்டங்களில் கல்லெறிந்தவர்கள் ஆகட்டும், செருப்பு எறிந்தவர்களாகட்டும் ஒருகாலத்தில் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். இப்போதோ பெரியாரின் கருத்துக்களின் மேல் கல்லெறியும் கூட்டத்தில் முன்வரிசையில் நிற்பது பெரியாரின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்டோர்.  இன்னமும் பெரியார் தன் சமகாலத்து எதிரிகளின் மேல் பிரயோகித்த ஆயுதங்களையே, முறைகளையே இவர்களுக்கு எதிராகவும் திராவிட இயக்கத்தவர்கள் எய்து கொண்டிருப்பது நடைமுறைக்கு உதவும் எனத் தோன்றவில்லை.

சொல்லப்போனால் திராவிடம், ஆரியம், கடவுள் மறுப்பு, இட ஒதுக்கீடு, கருப்புச் சட்டை போன்ற வார்த்தைகளே இந்த 'புதிய' தலைமுறைக்கு ஒரு ஒவ்வாமையை உண்டு செய்கிறது. (இந்த நிலை வரும் என்பதையும் பெரியாரே தன் கட்டுரைகளில் கூறியிருக்கிறார் என்பது ஆச்சரியம்) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக வழக்கு நீதிமன்றத்திலே தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் பிற சாதியினர் கடவுளுக்கு அருகில் சென்றால் தீட்டு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தாலே கூட "அனைவரும் சமம்" எனச் சொல்லும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே புறம்பான இந்த வாதத்தை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதே தவறு என்பது புரியும். ஆனால் இந்த Neo Brahminsகளோ அந்த வழக்கிலே தாங்களும், தங்கள் இனமும் இழிவு செய்யப்படுவதைப் பற்றி கவலையே கொள்ளாமல், திராவிட இயக்கத்தவர்களின் கோயில் உள்நுழைவு போராட்டங்களைப் பார்த்து "இவர்களுக்கு வேறு வேலையே கிடையாது!", "கடவுள் இல்லை என்பவனுக்கு கோவிலின் உள்ளே என்ன நடந்தால் என்ன?" என கேள்விகளை எழுப்பிச் சலிப்படைகிறார்கள். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்சாதியினரோடு கைகோர்த்துக் கொள்கிறார்கள். கடவுளுக்கு எதிரான, பண்டிகைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை தனிப்பட்ட முறையில் offensiveஆக எடுத்துக் கொள்கிறார்கள், கோபமடைகிறார்கள்!  நாம்தான் முன்னேறிவிட்டோமே, பார்ப்பனர்கள் தான் முன்பு போல் இல்லையே (அதாவது நம்மைப் போலத்தானே அவர்களும் இருக்கிறார்கள் என்பதால் இந்த எண்ணம் வந்துவிடுகிறது போலும்), இவர்கள் யாருக்காக கத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பில் எரிச்சலடைகிறார்கள். அதனால் திராவிட இயக்கம் இந்த Neo Brahminsளுக்கும் புரியும் வண்ணம் விசயங்களை எடுத்து வைக்கும்வகையில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எப்படி ஒரு மென்பொருள் காலத்தின் கட்டாயங்களுக்கேற்ப தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்கிறதோ, எப்படி ஒரு நச்சுநிரற்கொல்லி புதிய வைரஸ்களுக்கு ஏற்ப தன்னை பலப்படுத்திக் கொள்கிறதோ அதைப் போல! அதற்கு பெரியாரின் கடவுள் மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை மட்டுமே இன்னமும் பிரதான உணவாகப் பரிமாறிக் கொண்டிருக்காமல் அவரது வாழ்வியல் கொள்கைகளையும் பிரதான உணவாகப் பரிமாறவேண்டிய கட்டாயத் தேவையும் சமகாலச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இன்று நாட்டின் முக்கியமானப் பிரச்சினைகளில் பலவும் கடவுள் நம்பிக்கையை மட்டுமே சார்ந்தவைகள் அல்ல. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், அன்றாட வாழ்வில் பொது விதிகளைப் பின்பற்றாத மக்களின் அலட்சியம், மதவாதம், கலாச்சாரக் காவலர்களின் அட்டகாசங்கள், காதலுக்கு எதிரான சாதிவெறியர்களின் வெறியாட்டம், கவுரமற்ற 'கவுரவக்' கொலைகள் எனப் பலப் பிரச்சினைகள் உள்ளன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இக்கால இளைஞர்கள் குழம்பியிருக்கிறார்கள்.  ஆனால் அனைத்திற்குமே பெரியாரிடம் விடை இருக்கிறது என்பதைத்தான் நாம் காலப்போக்கில் மறந்துவிட்டோம்.

பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் குறைய வேண்டுமானால் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே நிலவும் சமூக இடைவெளி குறையவேண்டும் என்கிறார் பெரியார். காதல் என்பது தெய்வீகமானதெல்லாம் அல்ல, மனிதனின் எல்லா ஆசைகளையும் போலவே காலப்போக்கில் மாறக்கூடியதுதான் என்கிறார். ஒழுக்கம் என்பது அடுத்தவனுக்கு பாதிப்பில்லாமல் வாழ்வதே என மிக அழகாகச் சொல்கிறார். கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் விதிமுறைகள் விதிப்பவன் ஏமாற்றுக்காரன் என்கிறார்! பெண்களின் விடுதலையை ஆண்களால் எப்போதுமே பெற்றுத்தர முடியாது, எலிகளுக்கு எப்படி பூனைகளால் விடுதலை கிடைக்கும் என்கிறார் பெரியார். இப்படி ஒவ்வொன்றிருக்கும் மிக அழகான, நேர்மையான கருத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார். பெண்களுக்கெதிரான வன்முறைகளை எப்படிக் குறைப்பது என்று இந்தியாவே புலம்பிக்கொண்டிருக்கும் சூழலில், ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் மோசமான இச்சூழ்நிலையை சாதமாகக் கொண்டு மீண்டும் வேதகால பெண்ணடிமைத்தனத்தை தோற்றுவிக்க முயற்சிக்கும் நிலையில் பெண்ணியம் குறித்த பெரியாரின் கருத்துக்கள் மட்டுமே நிரந்தரத் தீர்வளிக்கும் என்பதில் எள்ளளவும் மிகையில்லை.

இப்படிப் பெரியாரின் பன்முகங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு அவரது கடவுள் மறுப்பு கொள்கையை மட்டுமே முக்கியக் கருப்பொருளாக வைத்து பல பெரியாரியர்கள் பரப்புவதிலே இன்னொரு வருந்தத்தக்க சூட்சமமும் இருக்கிறது. பெரியாரின் கொள்கைகளிலேயே கடைபிடிக்க மிகச் சுலபமானது கடவுள் மறுப்பு தான். பெரியார் முன்வைத்த பெண்ணுரிமைக் கருத்துக்களை பல தீவிர பெரியாரியர்களே கடை பிடிப்பதில்லை, கடைபிடிக்க முடிவதில்லை என்பதுதான் வேதனையான உண்மை. அதனால்தான் பல பெரியாரியர்களை பெரியாரை நாத்திகர் என்ற வட்டத்தில் மட்டும் அடைக்க விரும்புகிறார்களோ என்ற மிக நியாயமான ஐயமும் நமக்கு ஏற்படுகிறது.
இங்கே பெரியாரியர்களை நோக்கி ஒரு முக்கியமான கேள்வியை வைக்க வேண்டியது அவசியமாகிறது. "பெரியார் சொல்லியிருக்கும் பெண்ணுரிமை விசயங்களையும் உங்கள் இல்லங்களில் கடைபிடிக்கிறீர்களா?", “உங்கள் மகளை தன் விருப்பப்படி ஒரு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விடுவீர்களா?” ”சமைக்க வேண்டியதும், வீட்டு வேலை செய்வதும் உங்கள் துணைவியின் கடமை மட்டுமல்ல உங்கள் கடமையும் தான் என நினைக்கிறீர்களா?” இதற்கு "இல்லை" எனப் பதிலளிக்கும் பெரியாரியர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு மாறவேண்டியது அவசியம்.

அதுமட்டுமல்லாது கடைபிடிக்கக் கடினமான பெரியாரின் மற்ற வாழ்வியல் கொள்கைகளையும் பரப்ப முன்வரவேண்டும். பெண் என்ன அணிய வேண்டும் என ஆண் தீர்மானிப்பதும், அவர்கள் அப்படி அணிந்தால் வன்புணர்வுகள் நடக்கத்தானே செய்யும் எனப் பேசுவதும் எவ்வளவு முட்டாள்த்தனமானது என்பது கூட இங்கே பலருக்குப் புரிவதில்லை. உயிருடன் இருப்பதால்தான் கொலை செய்கிறார்கள் என்பது எப்படியொரு முட்டாள்த்தனமான வாதமோ அப்படித்தானே இதுவும்!

நம் ஊர் இருபாலர் பள்ளிகள் கூட ஆணும் பெண்ணும் தள்ளி இருக்கும் வகையில் தானே அமைக்கப்பட்டிருக்கின்றன.ஆண்-பெண் உறவில், பார்வையில் நம் சமூகம் கடக்க வேண்டிய தூரம் பல லட்சம் மைல்கள் இருக்கிறது.  இந்த தூரத்தை கண்டிப்பாக பெரியாரின் பெண்ணியக் கொள்கைகளைப் பரப்புவதன் மூலம் நிச்சயம் சுலபமாகக் கடக்கமுடியும். கட்சி, மதம், இயக்கம், சாதி என எந்த வேற்றுமையும் இல்லாமல் அனைத்துப் பெண்களும் எப்போது பெரியாரின் கொள்கைகளை கையில் எடுக்கிறார்களோ, பிறகு பெரியார் என்பவர் ஒரு இயக்கத்திற்கு மட்டுமே சொந்தம் என்ற ஒரு மாயநிலை மாறி, மனித இனத்திற்கே சொந்தம் என்ற நிலை தோன்றிவிடும்.

இந்திய வரலாற்றில் வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மக்களுக்கு கொண்டாட்டத்தின் மீதான மோகம் பெருகியிருக்கிறது. நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கி, இயந்திரங்களாய் மாறிப்போயிருக்கும் குடிமக்களுக்கு திருவிழாக்கள் அவசியமாகத் தெரிகின்றன. தீபாவளி போன்ற பண்டிகைகளை கடன் வாங்கியேனும் சிறப்பாகக் கொண்டாடிவிட வேண்டும் என்ற எண்ணம் சமீப காலங்களில் நடுத்தரவர்க்கத்தினரிடையே பெருகியிருக்கிறது. அவர்கள், பண்டிகைகள் கொண்டாடக் காரணமாய் இருக்கும் புராணக் கதைகளைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. அவர்களுக்கு தேவையெல்லாம் ஒருநாள் அளவில்லாத கொண்டாட்டம் மட்டுமே! அப்படி காரணங்களைச் சாராமல் கொண்டாடுகிறவர்களிடம் சென்று பெரியார் காலத்தில் செய்தததைப் போலவே பண்டிகை சார்ந்த புராணக் கதைகளையும், அதில் நாம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதையும் எடுத்துச் சொல்லி பண்டிகைகளை புறக்கணிக்கச் சொன்னால் நம் பக்கம் திரும்பக் கூட மாட்டார்கள்! மாறாக சலிப்படையவே செய்வார்கள். பண்டிகைகளுக்கான வாழ்த்துக்களுடன் அவை கொண்டாடப்படும் காரணங்களை கொஞ்சம் கொஞ்சமாக திசைதிருப்பும் வேலையை அமைதியாகச் செய்தால் உடனே ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் காலப்போக்கில் ஏற்றுக்கொள்வார்கள். இப்படிப்பட்ட திரிபுகளால் தானே இன்றைய பண்டிகைகளே உருவாக்கப்பட்டிருக்கின்றன!

இன்று பெரியாரியம் சார்ந்த கூட்டங்களில் பெரியாரியர்கள் மட்டுமே பங்கு கொள்கிறார்கள். அதில் பகிரப்படும் கருத்துக்கள் பெரும்பாலும் அவர்களுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் எந்த ஒரு விசயத்தையும் முழுதாக மாற்றவேண்டுமானால் இயக்கம், கட்சி, அரசியல், கொள்கை என எதையுமே சாராமல் ஒதுங்கியிருக்கும் மிதவாதிகளின் பங்களிப்பு அவசியம். அப்படிப்பட்ட மக்களிடம் சென்று சேரவேண்டுமானால் எதையுமே ஜனரஞ்சகமாக, அவர்களுக்குப் பிடித்த முறையில் சொன்னாலேயொழிய வேறு வழி இல்லை! எதிலுமே பெருமளவு நாட்டம் காட்டாத இப்படியான மக்கள் நாத்தீகம் போன்ற தீவிர கருத்துக்களை ஏற்கவே மாட்டார்கள். உலகில் தோன்றிய தத்துவ ஞானிகளில் ஏறத்தாழ அனைவருமே நாத்திகர்கள் தான் என்றாலும், உலகின் பெரும்பான்மை மக்கள் ஆத்தீகர்களாக இருப்பதன் ரகசியம் இதுதான். மக்கள் இயற்கையிலேயே பலவீனமானவர்கள். அவர்களில் சிலர் வேண்டுமானால் எந்த வெளிப்பிடிமானமும் இல்லாமல் இயங்குவார்களேயொழிய எந்தக் காலகட்டத்திலும் அந்தக் குணமும், தைரியமும் பெரும்பான்மை மக்களுக்கு வாய்க்காது. ஆக கம்யூனிசம் எப்படி நாத்திகத்தை உள்ளே ஒளித்து வைத்திருக்கிறதோ அதைப் போல பெரியாரின் கொள்கைகளில் நாத்திகம் இருக்கலாமேயொழிய நாத்திகத்தையே முகமாய்க் கொண்டு அதைப்  பிரச்சாரம் செய்தால் முழுமையாக ஜெயிக்கவோ, பெரியாரைப் பரப்பவோ முடியாது! நாத்திகத்தை முகமாக வைத்துக்கொண்டு கூறப்படும் எந்த கருத்துமே வெகுஜன மக்களிடம் முழுமையாகப் போய்ச் சேராது. ஒருகட்டத்தில் ஒரு இயக்கத்துடனேயே அதன் பரவல் நின்றுவிடும். பெரியாரின் வாழ்வியல் நெறிகள் இயக்கத்தைத் தாண்டி வெகுஜன மக்களின் வாழ்வியலாக மாற வேண்டுமானால் இதிலே கொஞ்சம் சமரசம் செய்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரு தெய்வங்கள்- சிறுதெய்வங்கள் என ஒரே மதத்தின் தெய்வங்களுக்கிடையே கூட சாதி பாகுபாடு இருப்பது இந்து மதத்தில் மட்டும் தான். உதாரணத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள மதில்சுவர்களை ஒட்டி சிறுதெய்வக் கோவில்கள் இருக்கின்றன. அதாவது மீனாட்சியம்மன் கோவிலின் வாட்ச்மேன்கள் போல தமிழர்களின் முன்னோரான ஒண்டிவீரனும், மதுரைவீரனும், கருப்பசாமியும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக மீனாட்சியம்மனுக்கு பார்ப்பனரல்லாதார் அர்ச்சனை செய்தால் அம்மனுக்கு தீட்டு. தமிழரின் சிறுதெய்வங்களுக்கு பார்ப்பனர்கள் அர்ச்சனை செய்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டு. ஒரு இனத்தையும், அந்த இனத்தின் குல தெய்வங்களாக இருக்கும் முன்னோர்களையும் இதைவிட இழிவு செய்ய முடியுமா? இது பற்றி என்ன விழிப்புணர்வை நாம் கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறோம்?   மேலே சொன்னதைப் போல எக்காலத்திலும் கடவுள் மறுப்பாளர்களாக ஆக விரும்பாத மக்களுக்கு குறைந்தபட்சம் அவர்களின் சுயமரியாதையைச் சூறையாடாத கடவுள்களை காண்பிக்கும் பொறுப்பு சுயமரியாதைக்காரர்களுக்கு இருக்க வேண்டாமா? கடவுளே இல்லை எனச் சொன்ன பெரியார் வைக்கம் கோவிலுக்குள் நுழைய சூத்திரர்களுக்கு உரிமை பெற்றுத் தந்தார் என்றால், தமிழரின் சுயமரியாதையை நிலைநாட்டவும், கடவுளுக்கு உரிமை கொண்டாடும் ஒரு சாதியினரின் ஆதிக்கத்தை உடைக்கவும் கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களிடையே சிறுதெய்வ வழிபாட்டை பரப்புரை செய்வதையும் தனியொரு கடமையாகச் செய்தால் என்னஎன்ன கெட்டு விடப் போகிறது?

இப்படி பெரியாரின் காலச் சமூகத்திற்கும், நம் சமகாலச் சமூகத்திற்கும் இடையே மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள சூழலில் பெரியாரியமும் காலத்திக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. பெரியாரின் முன் இருந்தது மிகப்பெரிய பாறை. அதை ஓங்கி அடித்து உடைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. மக்களின் மன ஓட்டத்திற்கு முற்றிலும் முரணான அவரது அதிரடிக் கருத்துக்களால் அந்தப் பாறை ஓரளவு உடைந்து நம் முன் கற்களாகக் கிடக்கிறது. சிறிய கற்களை ஓங்கி அடிக்க முடியாது. அவற்றை நிதானமாக அரவணைத்து, குறிபார்த்துதான் அடிக்க முடியும். திராவிட இயக்கத்தின் இத்தனை வருட வழிமுறைகள், அடிக்கடி உபயோகிக்கும் சொற்கள், சுயமரியாதைத் திருமணச் 'சடங்கு'கள், வெகுஜன மக்களின் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை 'அதிரடி'யாக வெளியிடும் தன்மை என இன்னும் பலவற்றை புதுப்பித்து தேவையான மாற்றங்களை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிக்கிறது என்பதை உணர்வதும், உணர்த்துவதும் பெரியாரியத்திற்குப் பலவழிகளிலே சோதனை ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டான காலத்தில் அவசியமாகிறது.  எல்லாவற்றுக்கும் மேல் திராவிட இயக்கம் லேசாக தொய்வடைந்திருக்கும் இச்சூழ்நிலையில் இந்துத்துவத்தின் படையெடுப்பு மெல்ல தலைதூக்கத் துவங்கி இருக்கிறது. இது பெரியார் வாழ்ந்த மண். இங்கே இந்துத்துவம் நுழைய முடியாது.” , “இது பெரியார் பூமி. இங்கு மத நல்லிணக்கதை உடைக்க முடியாதுஎன வறட்டு வாதங்களை முன்வைக்காமல் நடைமுறையைச் சீர்தூக்கி பார்த்து ஆராய்ந்து திட்டங்களை வகுத்து செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் பல தீமைகளைத் தவிர்க்க முடியும்.   தந்தை பெரியாரின் 135வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இச்சூழலில் பெரியாரின் கருத்துக்களையும், கொள்கைகளையும் இயக்கம், கட்சி பேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழ்வெகுசன மக்களின் வாழ்வியல் நெறியாகவே மாற்றுவோம் என உறுதியேற்போம்.

-டான் அசோக்

writerdonashok@yahoo.com

(நன்றி உயிர்மை)

7 comments:

நம்பள்கி said...

Tamilmanam +1

திண்டுக்கல் தனபாலன் said...

// பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர்! // நீங்கள் சொல்வது போல் பலரின் (பெரியார் தான் இவர்களுக்கு கடவுள்...!) பார்வை இது தான்... நல்லதொரு ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்... தொடர்க... நன்றி...

நம்பள்கி said...

+1 continue..

Anonymous said...

நான் அண்மையில் வாசித்த ஆக மிகச் சிறந்த படைப்பு. மக்களை பகுத்தறிவுள்ளவர்களாக சிந்திக்க வைத்து மாவீரர், புத்தர் முதல் பெரியார், அம்பேத்கார் வரை அவர்களின் மையக்கரு மனித்ததுவம். சக மனிதன் மீது பாரபட்சமின்றி காட்டப் பட வேண்டிய மனிதாபிமானம். சமத்துவம், சகோதரத்துவம், போன்றவைகளை ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களும், அவர் தம் உருவாக்கும் சமூகமும் மறுக்கின்றன. இயன்றவன் இயலாதவனை அடக்கி ஆள நினைக்கின்றான். இன்றைய காலக் கட்டத்தில் பெரியாரியத்தை முன்னெடுப்போர்கள் சில முக்கியமான சமூக பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆரிய மயமாக்கப்படும் இந்து மதம், கத்தோலிக்கம், கிறித்தவம், இஸ்லாம், நாட்டுபுற இந்து மதம் என்பதையும் தாண்டி நாம் முகங்கொடுக்க வேண்டியது ஊழல்வாதம். ஊழலுக்கு எதிரான பெரியாரியமே, அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும். தமிழகத்திலும் இந்தியா முழுவதும் பார்ப்பனியம், சமூகவாதங்கள், சாதியவாதங்கள், தீவிரவாதங்கள் என அனைத்தும் ஊழல் வெளியில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. ஊழலுக்கு அடுத்த நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராய் நிகழும் வன்முறைகள். இவ் இரண்டிலும் அரசியல்வாதி, மதவாதி, அதிகாரிகள் போன்றோர் நிகழ்த்தும் கொடூரங்களை ஒழிக்க மத நம்பிக்கைகள் கடந்து போராட முனைவதோடு, நாட்டுபுற வழிபாடுகளை விழுங்கும் பார்ப்பனியத்தை ஒழிக்க நமது நாட்டார் வழிபாடுகள் குறித்த முழு விவரங்கள் ஆராயப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படல் வேண்டும். இதற்கு வரலாற்று - சமூக ஆய்வுகள் பலமாக நாம் கொள்ளப்படல் வேண்டும். அதுவே பகுத்தறிவு ஊட்டிய பெரியாரை மக்களிடத்து இருந்து அந்நியப்படுத்தாமல் இருக்கும். பசுமரத்தாணி போல பதிய வைக்கவும் இயலும், நாட்டுப்புற வழிபாடுகளின் நன்மை தீமைகளை அறிவியல் துணை கொண்டு மக்களுக்கு விளக்கம்ளிக்கவும் வேண்டும். நாட்டுப்புற வழிபாடுகளோடு சமணம், பவுத்தம், வள்ளுவம், போன்ற பண்டைய தத்துவங்களையும். அம்பேத்கார், வினோபா பாவே, பெரியாரின் வழிகாட்டல்களையும். ஆபிரகாம் கோவூர், நரேந்திர தபோல்கார் போன்றோரின் பகுத்தறிவு விளக்கங்களையும் ஒன்றிணைத்து மக்களுக்கு எடுத்துச் செல்வதோடு, மேற்கில் உருவாகி வரும் டாவ்கின்ஸ் போன்றோரின் அறிவியல் பகுத்தறிவுக் கொள்கைகளையும் இங்கு கற்பிக்க வேண்டும். இதுவே ஒருங்கிணைந்த முற்போக்கு சமூகத்துக்கு வழிகோலும்.

Anonymous said...

அருமையான கட்டுரை.. பெரியாரை ஒரு பரந்துபட்ட பார்வையோடு புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது!!

Dr. D. Saravanan said...

கட்டுரை மிக அருமை ... உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் .... முனைவர் சரவணன்

vs.samuel said...

An idealistic REJUVENATING exercise. A broad spectrum ideologies of the greats like Ambedkar and Periyar are to be rejuvenated time and again to reach the non-Brahmin populous and ignite them to Introspect the hinduvta inhuman Manu smhruthi. The rocky mini smhtithi can be demolished by small righteous spirit of "chisel" of Ambedkarism and Periyarism. Hats-off to the writerfor his reasonable and logistic presentation. We expect many more such rejuvenation endeavors, we are here to extend our all sorts of helps. Thanks once again .

Related Posts Plugin for WordPress, Blogger...