Tuesday, November 26, 2013

வ.ஐ.ச.ஜெயபாலன்/ஈழத்தமிழர்கள்-சில பகிர்வுகள் -டான் அசோக்

படித்துமுடித்துவிட்டு ஊர்ப்பக்கம் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வரவே நமக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. எத்தனை நாள் ஆனாலும் ஊர் நியாபகம் ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. என்னதான் சென்னைக்கு வந்து சம்பாதித்தாலும் ‘மதுரை மாதிரி வருமா?’ ‘திருச்சி மாதிரி வருமா?எனப் புலம்பிக் கொண்டு தான் இருக்கிறோம். இப்போது தங்கள் தாய்நாட்டில் (ஈழத்தில்) வேர்விட்டு வளர்ந்து, பிறகு போரினால் நாட்டுக்கு நாடு அகதிகளாகப் பந்தாடப்பட்ட ஈழத்தமிழர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

நீங்கள் பிறந்து வளர்ந்து நாட்டிற்கே நீங்கள் டூரிஸ்ட் விசாவில் செல்ல வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டால், உங்கள் தாய்மண்ணில் நீங்கள் சுற்றுலாப் பயணியாக நடத்தப்பட்டால், ஒரு சுற்றாலாப்பயணிக்கு உண்டான உரிமைகள் மட்டுமே உங்களுக்கு இருப்பதாக அரசாங்கம் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எவ்வளவு கோபமும், ஆற்றாமையும் பொங்கும்! மனம் எப்படிப்பட்ட அழுத்தத்திற்கு உள்ளாகும்! அப்படி ஒரு கொடுமையான நிலையில் தான் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.

தான் ஓடியாடிய மண்ணில், தன் இனம் வேர்விட்ட ஊரில், தன் தாயும் அப்பனும் காதல் செய்த நாட்டில், தான் ஆளவேண்டிய தன் மண்ணிற்கு வெறும் சுற்றுலாப் பயணியாகச் செல்வது என்பது எப்பேர்ப்பட்ட கொடுமை. போர் ஓய்ந்தபின் இலங்கை செல்லும் ஈழத்தமிழர்களுக்கு விமான நிலையத்தில் ஒரு சுற்றுலாப் பயணியாக இறங்கும் போது எப்படி வலிக்கும்?

அப்படியான தாங்க முடியாத வலியோடு தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் இறங்கியிருப்பார். சாதாரணமாக வாழ்க்கையைப் பார்க்கும் ஆட்களுக்கே அந்த அனுபவம் சொல்லொனாத் துயரைத் தரும் போது உணர்ச்சிகளால் வார்த்தையைக் கோர்த்து சகல உணர்வுகளையும் கவிதையில் வார்க்க முடிந்த ஒரு கவிஞனுக்கு அந்த நொடி எப்படி இருந்திருக்கும் என்று  நினைத்துப் பார்த்தாலே நடுங்குகிறது.

தன் தாய்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணியாகச் செல்வதோடு மட்டுமல்லாமல் இன்னொரு கொடுந்துயரமும் அந்தக் கவிஞனை பல ஆண்டுகளாகத் துரத்திக் கொண்டிருக்கிறது. போர் உக்கிரமாய் இருந்த சமயம் அது. “எனக்கு என்ன ஆனாலும் நீ மட்டும் இங்கே வந்து விடாதேஎன்ற தன் தாயின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு இலங்கை போகாமல் இருந்திருக்கிறார் கவிஞர். தாய் இறந்தபின் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கூட தாயை நெஞ்சில் சுமந்து வாழும் அந்த மகனுக்குக் கிடைக்கவில்லை. அம்மாவின் இறுதி நிகழ்வுக்கு போக முடியாத சூழல் எவ்வளவு கொடுமையானது? ஜெயபாலன் மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களின் நிலையும் இதுதான். அப்பாவைப் பார்த்தே இராத குழந்தைகள், அம்மா யார் என்றே தெரியாத குழந்தைகள், கணவர் இருக்கிறாரா செத்துப் போய்விட்டாரா என்றே தெரியாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் தாய்மார்கள் என ஏனையோர் இருக்கிறார்கள். நாம், அவர்களுக்கென்ன? அவர்கள் வெளிநாட்டில் சொகுசாகத் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும் ஒவ்வொரு புலம்பெயர் ஈழத்தமிழரின் பின்கதையும் ஒரு அணுகுண்டைப் போல நெஞ்சை வெடிக்கச் செய்யும் சோகத்தை தன்னுள்ளே கொண்டது. அதே சோகத்தோடு தான் இலங்கை செல்லும் தன் ஆசையைப் பகிர்ந்தார் கவிஞர். “அம்மாவின் நினைவு நாள். இலங்கை போய் அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. என்ன விதியோ தெரியவில்லைஎன்று சொல்லிவிட்டுத் தான் சமாதியில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் தாய்க்கு அஞ்சலி செலுத்தக் கிளம்பினார்.

கவிஞர் ஜெயபாலன் போன்றவர்களின் முடிவுகளை நண்பர்களோ, காவல் துறையோ, சிங்கள அரசோ மாற்றிவிட முடியாது. அவர் கவிதைகள் சொல்வதைப் போல அவர் எதற்கும் கட்டுப்படாத, எதற்குள்ளும் அடைக்கப்பட முடியாத ஒரு நாடோடிப் பறவை. அதனால்தான் அவர் விஷயத்தை என்னிடம் சொன்னபோதுஇப்போ அங்கே போகாதீங்கஎனச் சொல்லத் தோன்றினாலும், அதை அப்படியே விழுங்கிவிட்டுஅய்யோ! எப்ப போறீங்க?” என்பதோடு முடித்துக் கொண்டேன். இலங்கை போனால் கைதாகலாம் என்று தெரிந்தே தான் இலங்கை சென்றார் ஜெயபாலன். ஆனால் சமாதிக்கு செல்லக் கூட அனுமதிக்க மாட்டார்கள் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.

உலகமறிந்த கவிஞர் உள்ளூர் வரும்போது தன்னிடம் பேட்டி காண வந்த ஊடகங்களிடம் பேசியிருக்கிறார். அப்போதெல்லாம் விட்டுவிட்டு... தாயின் இறுதி நேரத்தில் உடன் இருக்க முடியவில்லையே என்ற ஆறாத காயத்தையும், தன் தாய் உறங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் அஞ்சலி செலுத்திக் கதறி அழும் ஆசையையும் மனம் நிறைய சுமந்தபடி போய்க் கொண்டிருந்த ஒரு மகனை வழியிலேயே தடுத்து நிறுத்தி, சாடிச மனப்பான்மையோடு கைது செய்திருக்கிறது சிங்கள அரசு. இறையாண்மைக்கு (????!!!) எதிராகப் பேசியதாக குற்றமும் சாட்டியுள்ளது.

அவர் அங்கே பேசிய எதுவும் இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாய் இல்லை என இலங்கை நீதி அமைச்சர் ஹக்கிம் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்து மூன்று நாட்கள் ஆகிறது!!!! மேலும் கவிஞர் நார்வே குடியுரிமை பெற்றவர் என்பதால் நார்வே அரசும் பிரச்சினையில் தலையிட்டிருக்கிறது. தொலைபேசியில் பேசிய போது “ஹக்கிம், பஷீர் ஆகிய அமைச்சர்கள் என்னிடம் தொலைபேசி தொடர்பில் இருக்கிறார்கள். எனக்காக இங்கு தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சில சிங்களர்களும் கூட குரல் கொடுக்கிறார்கள்.என்றார் ஜெயபாலன்.

சிங்கள அரசைப் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். நாஜிக்களின் நவீன வடிவம் தான் ராஜபக்சே அரசு. அந்த அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்க்கவிஞர் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியே நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. அவர்கள் கட்டுப்பாட்டில் கவிஞர்  கழிக்கும் ஒவ்வொரு நாளும் கவிஞரின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ?என்ற பயத்தையே தருகிறது. அவரிடமிருந்து தொலபேசி அழைப்பு வந்து சிங்கள அரசின் தொடர் அலைக்கழிப்பால் கொடுஞ்சோர்வுற்ற அவரது குரலைக் கேட்டால்தான் நிம்மதி என்ற நிலையில் தான் ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டியிருக்கிறது.

நார்வேயின் பிரஜை என்பதால் இலங்கை அரசைப் பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான் செய்ய முடியும். நாடு கடத்தலாம். ஆனால் “இனி இலங்கைக்கு வரவே கூடாதுஎன்ற உத்தரவுடன் நாடு கடத்துவார்களோ என்றும் பயப்பட வேண்டியிருக்கிறது. தாய்நாட்டிற்கு ஒரு சுற்றுலாப் பயணியாகச் செல்லும் வாய்ப்பு கூட உணர்ச்சி மிகுந்த ஒரு கவிஞனிடத்தில் இருந்து பறிக்கப்படுவதை விட கொடுமை என்ன இருக்க முடியும்? அதுமட்டுமல்லாமல் போரின் போது தாயின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை. இப்போதும் நினைவிடத்திற்கு மிக அருகில் சென்றும் கலந்து கொள்ளமுடியவில்லை. அதோடு இனி சாகும்வரை தாய் உறங்கும் இடத்தை பார்க்கவே முடியாத நிலை ஏற்பட வாய்ப்புண்டு என்றால் அந்த வேதனையை விளிக்க வார்த்தைகள் இருக்கிறதா? 

இப்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே எண்ணம் கவிஞர் பத்திரமாக நார்வே சென்று அங்கிருந்து இந்தியா திரும்ப வேண்டும் என்பதுதான். அதற்கான முன்னெடுப்புகளை எல்லாம் நம்மால் முடிந்தவரை செய்வது அவசியம்.
தற்போது வந்து கொண்டிருக்கும் செய்திகளின்படி அவர் இன்றோ, நாளையோ நாடு கடத்தப்படலாம் எனத் தெரிகிறது. காத்திருப்போம்.

 -டான் அசோக்

3 comments:

para balakumar said...

என்னது ஜெயபாலன் உலகறிந்த கவிஞரா ???

அவரை வச்சு காமடி கீமடி பண்ணலையே ?

வேகநரி said...

உங்க எழுத்துக்க மேலே ஒரு தனி மரியாதை இருந்திச்சு.
//நீங்கள் பிறந்து வளர்ந்து நாட்டிற்கே நீங்கள் ’டூரிஸ்ட் விசா’வில் செல்ல வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டால் உங்கள் தாய்மண்ணில் நீங்கள் சுற்றுலாப் பயணியாக நடத்தப்பட்டால் ஒரு சுற்றாலாப்பயணிக்கு உண்டான உரிமைகள் மட்டுமே உங்களுக்கு இருப்பதாக அரசாங்கம் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?//

நீங்க எந்த கனவு உலகத்திலே இருங்கீங்க?
டூரிஸ்ட் விசா’வில் இந்தியாவிற்க்கு வந்ததையும் அதை ஒரு மிக பெரிய தகுதியாக சொல்லி இந்தியாவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டம் தட்டி திரும்பி வெளிநாடு சென்ற பின்பும் இந்தியாவை மட்டம் தட்டி தமிழில் பதிவு எழுதுவது அவங்க குறிகோளாக கொண்டு பலர் செயல்படுவது உங்களுக்கு தெரியாதா?
//நீங்கள் பிறந்து வளர்ந்து நாட்டிற்கே நீங்கள் ’டூரிஸ்ட் விசா’வில் செல்ல வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டால் உங்கள் தாய்மண்ணில் நீங்கள் சுற்றுலாப் பயணியாக நடத்தப்பட்டால் ஒரு சுற்றாலாப்பயணிக்கு உண்டான உரிமைகள் மட்டுமே உங்களுக்கு இருப்பதாக அரசாங்கம் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?//
இது கூட உங்களுக்கு பிடித்தவர் ஒருவருக்கு நடந்ததால்உங்க நியாமற்ற எதிர்பார்ப்பு.ஒருவர் தனது வசதிக்காக அமெரிக்க குடியுரிமை பெறுவது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் உரிமை.ஆனால் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற பின்பு இந்தியர்கள் எல்லாம் பல்லக்கில் வைத்து தன்னை தூக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. உங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் இலங்கையரானபடியா அவருக்கு அப்படி விசேட சலுகை எதிர்பார்க்க முடியாது.உலகமுழுவதுமான டூரிஸ்ட் விசாவுக்கான பொது விதி இது.உங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியும்வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமமில்ல.

Anonymous said...

சுற்றுலா விசாவில் போவதை எல்லாம் குறை கூற முடியாது. ஒருவர் தம் நாட்டுக் குடியுரிமையை அறிந்தே தான் விட்டுக்கொடுத்து மற்ற நாட்டுக் குடியுரிமையை பெறுகின்றனர். புலம் பெயர் ஈழத் தமிழர்கள் தமது குடியுரிமைகளை அவ் வண்ணமே தொலைத்தனர். அது நிற்க! இலங்கை அரசின் சிறுபான்மையினர் மற்றும் மாற்றுக் கருத்தாளர் அடக்குமுறைகள் உலகம் அறிந்ததே. அதுவும் விசா காலாவதியான பின் அங்கு நின்றது மேலும் சிக்கலையே கொடுக்கும். நல்ல வேளையாக அக்கீம், பசீர் போன்றோர் முன் வந்து உதவினார்கள். ஒரு காலத்தில் வன்னிக்குள் நுழையவும், வெளியேறவும் கூட புலிகளிடம் விசா வாங்கும் முறையும், வடக்குக்கு போக அரசிடம் விசா வாங்கும் முறையுமாய் சொந்த நாட்டுக்குள்ளே பலரும் அல்லல்பட்டனர், அப்போது எல்லாம் ஊடகங்கள், உணர்வாளர்கள் கரிசனம் வற்றிக் கிடந்தனவோ. ஜெயபாலன் சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தால், இப்போதும் கூட தமிழ்நாட்டு ஊடகங்கள், உணர்வாளர்கள் கண்டும் காணாதே இருந்திருப்பர் என்பது தனிக்கதை. எல்லாம் அவன் செயல்.. :/

Related Posts Plugin for WordPress, Blogger...