Monday, October 21, 2013

டாஸ்மாக்! அநியாயத்திலும் ஒரு நியாயம் வேண்டாமா?


ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இருக்கலாம்... ஜெர்மனியில் பல ஆண்டுகள் பணியில் இருந்துவிட்டு இந்தியா திரும்பி இருந்த ஒரு நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன் சொன்ன ஒரு விசயம் நீண்ட நாட்களுக்கு என்னை பாதித்தது. ஜெர்மனியில் ஏதோ ஒரு ஊரில் விபச்சார விடுதியோடு சேர்ந்து இயங்கும் ஒரு மது அருந்தகத்திற்கு சென்றிருக்கிறார்கள். வாசலில் ஏதோ தகராறு. விபச்சாரத்தை தொழிலாகச் செய்யும் பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் வம்பிலுத்திருக்கிறார்கள். அந்தப் பெண் அப்போது அங்கே இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளிடம் அதுகுறித்து புகார் செய்தவுடன் உடனே காவல் அதிகாரிகள் அந்த இளைஞர்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை மரியாதையாக ‘மேடம்’ என விளித்து நடத்தியிருக்கிறார்கள். இதுதான் நண்பன் பகிர்ந்துகொண்ட சம்பவம்.

இதே காட்சி நம்மூரில் (விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட மும்பையில் என வைத்துக் கொள்ளுங்கள்) நடக்கிறது என வையுங்கள்.  நம் போலீஸ் அதிகாரிகள் முதலில் அந்தப் பெண்ணை “தே*****வை எவன் தொட்டா என்ன? மூடிட்டுப் போடி” எனத் திட்டியிருப்பார்கள். படுகேவலமாக ஏசியும் இருப்பார்கள். இரண்டு மூன்று அடிகள் கூட விழுந்திருக்கும். ஆனால் ஜெர்மனியில் விபச்சாரியே என்றாலும் அவளது உரிமைகளை மதித்து, மரியாதையாக நடத்தியிருக்கிறார்கள். அதாவது கடமையை ஒரு இயந்திரத்தைப் போல சரியாக செய்திருக்கிறார்கள்.

இப்போது பிரச்சினைக்கு வருவோம். நம்மூரில் டாஸ்மாக், அதாவது சாராயம் விற்கும் தொழிலை அரசே சிறப்பாக செய்து வருகிறது. வருமானம் கொழிக்கிறது. இதையெல்லாம் அரசு செய்யலாமா வேணாமா, அறமா, நியாயமா என்பதையெல்லாம் இப்போதைக்கு புறம் தள்ளிவிட்டு, டாஸ்மாக் நுகர்வோரை அனைத்து உரிமைகளுடைய ஒரு வாடிக்கையாளராக நடத்தி அந்த நிறுவனம் நேர்மையாக நடந்து கொள்கிறதா எனப் பார்க்க வேண்டும்.   மேலே பார்த்த இந்தியப் போலீசுகளைப் போல “குடிகாரப் பயலுகளை எப்படி நடத்துனா என்ன?” என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். பலருக்கு (ஆகா.. நம்ம பிரச்சினையைப் பேசுறான்டா என்றும் தோன்றலாம்) ஆனால் மேல நீங்கள் மனதிற்குள் பாராட்டிய ஜெர்மனி அதிகாரிகளை எண்ணிப் பாருங்கள். விபச்சாரிக்கு என்ன ஆனால் என்ன என அவர்கள் நினைத்திருந்தால் அவர்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கும் நம் ஊரைப் போலத்தான் இருந்திருக்கும். மேலும் நம் நாட்டின் மோசமான பிரச்சினை சட்டம் சரியில்லாமல் இருப்பதல்ல. அது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியும், அது சரியாக நிறைவேற்றப்படாமல் இருப்பது தான். எனவே சாராயம் அருந்தி அரசின் பாரத்தை பகிர்ந்து கொள்கிறவர்களுக்காக யார் தான் பேசுவது? அந்தப் பேசாப்பொருளை நாம் தான் பேசித் தொலைவோமே என்று யோசித்ததன் விளைவுதான் இது.
பொதுவாக ஒரு அரசு பஸ் நடத்துனர் டிக்கெட்டின் விலைக்கு மேல் 2 ரூபாய் அதிகமாக வைத்து விற்றால் பொதுமக்களுக்கெல்லாம் அறச்சீற்றம் வந்துவிடும். எல்லோரும் கூடி சாலையில் அமர்ந்து மறியல் கூட செய்யத் துவங்கிவிடுவார்கள். ஆனால் MRP 100ரூபாய் உள்ள பியரை 110 ரூபாய் என டாஸ்மாக்கில் விற்கும் போது குடிமகன்கள் அமைதியாக வாங்கிச் சென்றுவிடுகிறார்கள். பிரச்சினை செய்யாமல் இருப்பதற்கு குற்ற உணர்வு ஒரு காரணம். மற்றொரு காரணம், எதிர்த்துக் கேள்வி கேட்டால் “குடிக்கிற பயலுக்கு என்ன விலைன்னா என்னடா?” என அவர்களை நோக்கித்தான் நம் கேள்வி இருக்குமேயொழிய டாஸ்மாக் ஊழியர்களின் சுரண்டலைப் பற்றி நாம் பேசவே மாட்டோம். ஏதோ டாஸ்மாக் ஊழியர்கள் எல்லாம் குடிகாரர்களைத் திருத்துவதற்காகவே விலையேற்றி விற்பதைப் போலத்தான் நம் பேச்சு இருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த மனப்பான்மையில் குற்றம் இல்லாதது போல் தெரியும். ஆனால் நம் சமூகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்குமே மூல காரணம் சட்டம் மீறப்படும் பல இடங்களில் “இவய்ங்களுக்கெல்லாம் இதான் கரக்ட்” என எண்ணிக் கொண்டு கேள்வி கேட்காதது தான்.

உதாரணத்திற்கு ஒரு போலீஸ்காரர் சத்தமாக ஹாரன் அடித்தபடியே வேகமாக வந்த ஒரு வாலிபனை நிறுத்தி கைநீட்டும்போது நம்மில் பெரும்பான்மை மக்களின் நினைப்பு “சூப்பர். அடிச்சாதான் இவய்ங்களாம் திருந்துவாய்ங்க.” என்றுதான் இருக்கிறது. ”முதலில் ஒரு போலீஸ் ஒரு ’சிட்டிசனை’ அடிப்பதே தவறு. அதுவும் பொது இடத்தில் அடிப்பது மிகப்பெரிய தவறு. வேகமாக வந்தால் வழக்கு பதியட்டும், அபராதம் போடட்டும்! அதென்ன கைநீட்டுவது?” என்ற நியாயமான கோபம் என்றாவது நமக்கு வந்திருக்கிறதா? எவ்வளவு பெரிய தவறு இது? எவ்வளவு மோசமான மனப்பான்மை! நாளை ஆர்வக்கோளாறில் வண்டியை வேகமாக ஓட்டிய உங்களின் பதின்வயது மகனை ஒரு போலீஸ் கைநீட்டினாலும் இப்படித்தான் நினைப்பீர்களா?

டாஸ்மாக்கில் அனைத்து மதுவகைகளையும் விலை அதிகமாகத்தான் விற்கிறார்கள்.  10மணிக்கு மூடப்பட வேண்டிய கடையை 9.15 மணிக்கே மூடி அதன்பிறகு 10 மணி வரையில் இரட்டை விலை வைத்து விற்கிறார்கள். குடிமகன்களுக்கோ கை நடுக்கம். அந்தக் கருமத்தை என்ன விலையானாலும் வாங்கிக் குடித்துதான் ஆகவேண்டும் என்ற கொடுமையான நிலைமையில் இதையெல்லாம் அவர்கள் யோசிப்பதோ, கேட்பதோ இல்லை. பிச்சை பெறும் ஆட்களைப் போல, “ சாமி கொடுத்தால் போதும்” என எவ்வளவு காசு என்றாலும் கொடுத்து வாங்கிச் சென்று விடுகிறார்கள்.  ஏற்கனவே நம்மூர் கூலித் தொழிலாளிகள் தாங்கள் சம்பாரிப்பதில் பாதியை இதற்குதான் செலவழிக்கிறார்கள். இதில் அவர்களிடமிருந்து இப்படி வேறு கொள்ளையடிக்கலாமா?

மற்ற அரசு துறை ஊழியர்களுக்கு இல்லாத ஒரு இரும்புத் திரை டாஸ்மாக் ஊழியர்களுக்கு உண்டு.  எந்த குடிகாரனும் வெட்கப்பட்டுக் கொண்டு தனது நுகர்வோர் உரிமையைப் பற்றியும், தான் டாஸ்மாக்கில் சுரண்டப் படுவது பற்றியும் பொதுவில் பேச மாட்டான். ’அவன்’ உழைப்பில் ’அவன்’ குடித்து ’அவன்’ உடலைக் கெடுத்துக் கொண்டாலும் கூட, அவனுக்கென்று ஒரு நியாயமே இருக்கக் கூடாது என நினைக்கும் ஒரு கேடுகெட்ட, மோசமான சமூகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் போன்ற பகல் திருடர்களுக்கு அதிர்ஷ்டம் தான்.

மது விற்பனையை முற்றிலும் தடை செய்வதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. மனிதன் கண்டுபிடித்த முதல் பானம் மதுவாகக் கூட இருக்கலாம். மதுவிற்கும் மனிதனுக்கும் அப்படி ஒரு பிடிப்பு உண்டு.  அதை முற்றிலும் தடை செய்த போதெல்லாம் மனிதர்கள் போதை தரும் கண்ட கண்ட திரவங்களைக் குடித்து செத்திருக்கிறார்களேயொழிய யாரும் குடிப்பழக்கத்தை நிறுத்தியதாக வரலாறு இல்லை.   பல ஆண்டுகளுக்கு முன்பு பணக்காரர்கள் மட்டும் குடிக்க உரிமம் வாங்கிக் கொண்டு குடிக்கலாம் என ஆணை இருந்த போது கண்ணதாசன் போன்ற பணக்கார குடிகாரர்கள் எல்லாம் மதுவில் குளிக்க, அன்றாடங்காய்ச்சி குடிகாரர்களோ வார்னிஷ், கள்ளச்சாரயம் எனக் கண்டதைக் குடித்து செத்துப் போனார்கள்.   குஜராத்தில் கள்ளச்சாரயமும், இறக்குமதி திருட்டு சாராயமும் ஆறுபோல் ஓடுகிறது. அங்கே மதுவிலக்கு இருப்பதால் அங்கு குடியே இல்லை என நினைத்தால் நம்மைப் போல் மடையர்கள் யாருமில்லை!

குடி வீட்டுக்கு, நாட்டுக்கு கேடு என்ற வாசகங்களுடன் விற்கப்படும் மதுவை ’மக்கள் நல அரசு’ எனச் சொல்லப்படும் மாநில அரசே விற்பதென்பதை எக்காலத்திலும் ஏற்கவே முடியாது. தனியார் விற்கும் போது இந்த அளவு குடிகாரர்கள் நம் ஊரில் கிடையாது. இப்போது 15வயது சிறுவர்கள் கூட டாஸ்மாக்கில் குடிக்கிறார்கள். மதுவை வீதிக்கு மூன்று கடைகள் திறந்து பரலாக்கிய பெருமை அதிமுக-திமுக என இருகட்சிகளுக்குமே உண்டு.  மது விற்பனையை monopoly ஆக்கி கோடி கோடியாக மக்களைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல், டாஸ்மாக் ஊழியர்களின் திருட்டுத்தனங்களை எல்லாம் கண்டும் காணாமல் அரசு இருப்பது மகாகேவலமான செயல்.

சாராயம் தான் குடிக்கிறார்கள். அவர்கள் குடிகாரர்கள் தான். ஆனால் அவர்களிடம் திருடும் டாஸ்மாக் அரசு ஊழியர்களையும், அதை கண்டும் காணாமல் இருக்கும் அரசையும் என்ன செய்வது? குடிகாரர்கள் மயக்கத்தில் இருக்கும் போது அவர்களின் பாக்கெட்டில் திருடும் ஈனச் செயலை விடவா குடிப்பது கெட்ட விசயம்? அட... அநியாயத்திலும் ஒரு நியாயம் வேண்டாமா?  


9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதில் நியாயம் வேறு வேண்டுமா...?

அண்ணாவின் தம்பி said...

Hello Ashok,

I believe you had not read the recent article about this issue, do you know this money goes to the ruling party District Secretaries.

அண்ணாவின் தம்பி said...

Don Ashok,

I believe, you had not read the recent article about this issue, in vikatadan or someother magazine, it says close to 3 crores per month is collected thro this source and diverted to the District Secretaries of ruling party

Avargal Unmaigal said...

மிக சிறப்பாகவும் விஷயத்தை நியாமகவும் தெளிவாகவும் எடுத்து சொன்ன பதிவு இது. பாராட்டுக்கள்

sunaa said...

தி.தனபால்,

இந்த கட்டுரை டாஸ்மாக் பத்தி மட்டும் இல்ல...ஒங்கள மாதிரி மிடில் கிளாஸ் புத்தி அதிகாரத்துக்கு வந்தா எப்டி கேவலமா நடந்துப்பீங்க அப்டின்னு தான்...அந்த போலீஸ் உதாரணம் உங்களுக்குத்தான்...

சிந்திக்கத் தெரியாத ஒரு கூட்டம் ஓவரா குடிச்சு செத்து போகுது...சிந்திக்கத் தெரியாத இன்னொரு கூட்டம் எதுக்கு வாழுரோம்னே தெரியாம செக்குமாடு மாதிரி வாழ்ந்திட்டு செத்து போகுது...ரெண்டு கூட்டமும் ஒண்ணுதான்...

drogba said...

தெளிவான சிந்தனையுடன் கூடிய உயிரோட்டமான கட்டுரை

MUTHU said...

முதலில் பாராட்டுக்கள் நண்பரே. உங்கள் கட்டுரை மிகவும் அருமை. இதற்கு நான் 100 சதவீதம் உடன்படுகின்றேன். நான் பெரும்பாலான நேரங்களில் இது விசயமாக ஆத்திரப்படுவேன். ஆனால் என்ன செய்ய முடியும் என்று பேசாமல் இருந்து விடுவேன். மிகவும் ஆக்கப்பூர்வமான கட்டுரை. இது விசயமாக ஏதேனும் ஒரு டிவி சேனல் விவாத மேடை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்

சேக்காளி said...
This comment has been removed by the author.
சேக்காளி said...

//கண்டும் காணாமல் இருக்கும் அரசையும் என்ன செய்வது?//
அடுத்த முறை காங்கிரசை ஆட்டிக்கட்டிலில் அமர்த்தி திராவிட கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...