Thursday, October 10, 2013

ஹெய்ல் ஹிட்லரய்யங்கார் -டான் அசோக்
அந்தச் சிறுவனுக்கு அகோரப் பசி. முதலாம் உலகப்போரில் அந்த நாடு வஞ்சிக்கப்பட்டதில் இருந்து பசி அவர்கள் நாட்டில் மூச்சுவிடுவதைப் போன்ற அன்றாட நிகழ்வாகிவிட்டது. இரண்டு வாய் சூப்புக்காக 3 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் கொடுமை அந்தச் சிறுவனை வாட்டியது. எவ்வளவோ சாதித்த இனம். எவ்வளவோ பெருமைகள் வாய்ந்த இனம். ஏன் இப்படி வரிசையில் நின்று பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறது என அவன் மூளை அவனது இதயத்திற்கு சதா தந்தி அனுப்பிக் கொண்டிருந்தது. வரிச்சையில் நின்று நின்றே நண்பனாகிக் கொண்ட அர்மீன்ஸிடம் அடிக்கடி இதுபற்றி அந்தச் சிறுவன் பேசுவதுண்டு. மாலையில் சூப் குடிப்பதை மட்டுமே அன்றாட வேலையாக வைத்திருந்த அந்த இரு சிறுவர்களும் ஒருவழியாய் அவர்கள் நாடு முதலாம் உலகப்போரில்  இவ்வளவு மோசமாக வஞ்சிக்கப்பட்டதற்கு தங்கள் நாட்டில் இருக்கும் மற்ற இனத்தவர்கள் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். சில காலத்திற்குப் பிறகு அர்மீன்ஸ் தன் தந்தையுடன் இங்கிலாந்து சென்றுவிட்டான். 
-----
அந்த இளைஞனுக்கு சிறை பெரிய கஷ்டமாகத் தெரியவில்லை. கருவறைக்குள்ளே மனிதர்கள் பிறக்கிறார்கள், சிறையறைக்குள்ளே தலைவர்கள் பிறக்கிறார்கள் என சூப் குடித்த நேரம்போக மற்ற நேரத்தில் அவன் படித்த வரலாற்றுப் புத்தகங்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தன. அதன்மேல் அவனுக்கு தீர்க்கமான நம்பிக்கை உண்டு. சிறை அவனுக்குப் போதிமரமாக இருந்தது. நிறையச் சிந்தித்தான்! சிறையின் விளையாட்டு நேரத்தில் அந்த இளைஞன் எதாவது எழுதிக்கொண்டே இருப்பான். ஒருநாள் அவன் தோள்களில் ஒரு கை விழுந்தது. அவன் சிறுவயது நண்பன் அர்மீன்ஸின் கை. வேறு வேறு காரணங்களுக்காக உள்ளே வந்திருந்தாலும் அவர்கள் நோக்கம் அவர்கள் நாட்டின் மீட்சிதான். மீண்டும் நெடுநேரம் பேசத் தொடங்கினார்கள். சிறுவயதில் பிரச்சினைகளை அலசியவர்கள் இப்போது தீர்வுகளைத் தேடினார்கள். மீதமிருக்கும் ஒருமாத சிறைவாழ்க்கை முடிவதற்குள் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்துகொண்டார்கள்.  

ஆபத்தில்லாத எதிரி, ஆபத்தில்லாத துரோகி என்பவன் தலைவேறு முண்டம் வேறாகக் கிடப்பவன் தான் என அந்த இளைஞன் முடிவு செய்திருந்தான். அதையே தீர்வாகவும் நினைத்திருந்தான். அர்மீன்ஸ் மனதிலோ வேறு ஒரு திட்டம் இருந்தது. அர்மீன்ஸ் அந்த இளைஞனைப் போன்றவன் அல்ல. அவன் ஒரு பயந்தாங்கொள்ளி. ஆனால் புத்திசாலி. ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்திற்கும், பிறகு அங்கிருந்து இந்தியாவிற்கும் போய் பல வருடங்கள் தங்கியிருந்த அர்மினீஸ் இப்போது இன்னும் புத்திசாலியாகி வந்திருந்தான். அதனால் அவனுக்கு வேறு ஒரு தீர்வு தெரிந்திருந்தது. அந்தத் தீர்வை உள்ளடக்கி ஜெர்மனில் எழுதப்பட்டிருந்த ஒரு கையெழுத்துப் பிரதி புத்தகத்தையும் அவன் வைத்திருந்தான். இருவரும் தங்கள் தீர்வுகளை விடிய விடிய பரிமாறி விவாதித்தார்கள். மாற்று இனத்தவர்கள் அனைவரையும் கூண்டோடு கொலை செய்வதுதான் ஒரே தீர்வு என எண்ணியிருந்த அந்த இளைஞனின் எண்ணம் ஒரேடியாக மாறியது. கொலையை விட பெரிய, கொலையை விட கொடூர வன்முறைகள் எல்லாம் இருப்பதை அன்றுதான் அந்த இளைஞன் அறிந்து கொண்டான். அர்மீன்ஸை உச்சிமுகர்ந்தான். நான் ஆட்சிக்கு வரும்போது நீதான் என் பிரதமமந்திரி. என் மகன் ஆளும்போது உன் மகன் பிரதம மந்திரியாக இருப்பான் என அன்றே அறிவித்தான். அர்மீன்ஸ் கொடுத்தப் புத்தகத்தை வாஞ்சையுடன் வாங்கி மார்பில் தழுவிக் கொண்டான். ஆம் இனி இந்த நாட்டை ஆளப்போவது இந்தப் புத்தகம்தான், இனி தன் இனத்தை காலாகாலத்திற்கும் அதிகாரத்தில் அமர்த்தப்போவதும் இதுதான் என முடிவு செய்தான்!  
---- 
ஆட்சிக்கட்டிலுக்கு வந்ததில் இருந்து ஒருநாளைக்கு 2 மணி நேரம்தான் தூங்கினார் அவர். ஆனால் அதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அதற்குத்தானே சிறுவயதில் சூப்புக்காக ஏங்கிய காலத்தில் இருந்தே ஆசைப்பட்டார். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே முழுவீச்சில்  பக்தியின், மதத்தின் முக்கியத்துவம் மக்களிடையே சதாசர்வ காலமும் பரப்பப்பட்டது.  உணவுக்குத் தவித்த மக்கள் விடிவுக்காக எதையும் ஏற்கவும் செய்யவும் காத்திருந்தார்கள். அங்கங்கே ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. நாட்டின் பண்டையகால இதிகாச, இலக்கிய கதாநாயகர்கள் எல்லாம் கடவுள்களாக மாற்றப்பட்டார்கள். கோவில்களில் அவர்களுக்குச் சிலைகள் நிறுவப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேல் அந்த நாட்டில் இருந்த மக்கள் நான்கு பிரிவினர்களாகப் பிரிக்கப்பட்டார்கள். அதன்படியே அவர்கள் குடியுரிமையும் பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு தண்டனை என அரசியலமைப்புச் சட்டம் மாற்றியெழுதப்பட்டது. முதல் மற்றும் முக்கியப் பிரிவாக தனது பிரிவை அறிவித்துக்கொண்டார் அந்த சர்வாதிகாரி. மற்ற இனத்தவர்கள் அடுத்தடுத்தப் பிரிவுகளாக ஒன்றன்கீழ் ஒன்றாக இருந்தார்கள். சிறைச்சாலையில் அர்மீன்ஸ் தனக்குக் கொடுத்தப் புத்தகத்தை வேதமாக, கண்மூடித்தனமாகப் பின்பற்றத் தொடங்கினார் சர்வாதிகாரி.  ஆரம்பத்தில் இந்த மாற்றத்தினால் பெரும்குழப்பம் நிலவியது. ஆனால் வறுமையும், படிப்பறிவின்மையும், பசியும் மக்களைச் சிந்திக்கவிடவில்லை. கீழே உள்ள பிரிவினர்களுக்கு கல்வி என்பது ஆடம்பரம் என புரியவைக்கப்பட்டு, உழைப்பின் உன்னதம் உணர்த்தப்பட்டது.  மிக விருப்பமாக அரசின் ஆணைகளிலும், மாற்றங்களிலும் தங்களைத் தாங்களே புகுத்திக்கொண்டார்கள் அந்த மக்கள். தங்களின் குழந்தைகளை அரசு தங்களிடம் சொன்னதை அப்படியேச் சொல்லி வளர்த்தார்கள். முதல் தலைமுறையில் இருந்த குழப்பம் கொஞ்சம் கூட இரண்டாம் தலைமுறையில் இல்லை. நாடு மிக அமைதியாக இயங்கியது. நிலையான ஆட்சியும் நடந்தது. முதல் பிரிவினர் என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். அவர்கள் வாக்கு வேத வாக்கு என மக்கள் தீர்க்கமாக நம்பினார்கள். உரிமைக்காக சண்டை போட்டாலும் கீழே உள்ள மூன்று பிரிவினரும்  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்களேயொழிய முதல் பிரிவினரிடம் யாரும் பிரச்சினை செய்வதில்லை. அகங்காரமும், ஆணவமும், அதிகாரமும் கூட முதல் பிரிவினரின் நற்குணங்களாக, உரிமைகளாக மக்களால் பார்க்கப்பட்டது. 
------ 
இரண்டாம் உலகப்போர் மூண்டது. யாரையெல்லாம் கொலை செய்யலாம் என அந்தச் இளைஞன் நினைத்தானோ, அவர்களையெல்லாம் ராணுவ வீரர்களாக ஆக்கினான். பீரங்கிகளின் முன் நாட்டுப்பற்றுடன் சென்று "சர்வாதிகாரியின் புகழ் ஓங்குக" எனக் கத்தியபடியே விழுந்தார்கள். மிகப்பெரிய வெற்றி இல்லையெனினும் யாராலும் சர்வாதிகாரியை நெருங்க முடியவில்லை என்பதே பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. எந்த இனப்படுகொலையும் நடக்கவில்லை என்பதால் சர்வாதிகாரிக்கு போருக்குப் பின்னும் நல்ல பேரே நிலைத்தது. ஒருவழியாக சூப்புகாக ஏங்கிய காலங்களில் கனவுகண்டபடி  தான் அழிக்க நினைத்த பிற இனத்தவர்களை எல்லாம் அடிமைகளாக்கிக் கொண்டார் சிறுவனாய் இருந்து இளைஞனாய் வளர்ந்து சர்வாதிகாரியாய் உயர்ந்த அவர். கொலையை விட மோசமான ஆனால் குற்றம் எனக் கருதப்படாத அறிவுசார் வன்முறைகளில் கைதேர்ந்தவர் ஆனார். 
-------
இரண்டாம் உலகப்போர் முடிந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் ஆனாலும் கூட   வழிவழியாக இதே அமைப்புதான் அந்த நாட்டில் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது. மக்கள் எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. அடிமைத்தனம் கூட தங்கள் உரிமை என்ற அளவிலே அங்கே வாழ்கிறார்கள். முதல் பிரிவினர் வீட்டில் தங்களுக்கு காபி கொடுக்கப்பட்டால் மற்ற மூன்று பிரிவினரும், குறிப்பாக நாலாவது பிரிவினர் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறார்கள். முதல் பிரிவு மக்களை நான்காவது பிரிவினர்கள் பெரும்பாலும் 'கோட்சே கோட்சே' என சாமி என்ற பொருள்படும்படி அழைக்கிறார்கள். இந்த சட்டதிட்டங்களையும், வேதங்களையும் நிறுவிய முதல் சர்வாதிகாரியின் பேரன் 'அலோய் ஹிட்லர்' இப்போது ஆட்சியில் இருக்கிறார். அவருக்கு உற்ற நண்பராக விளங்குகிறவர் அர்மீன்ஸின் கொள்ளுப் பேரன் அர்னூல்ஃப் அர்மீன்ஸ். ஜெர்மனி தேசிய அருங்காட்சியகத்தில் ஆக்சல் அர்மீன்ஸ் தன் நண்பன் 'அடால்ஃப் ஹிட்லர்' என்ற இளைஞனுக்கு சிறையில் அளித்தப் புத்தகம் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர்... ஹ்ம்ம்... எதோ எழுதியிருக்கிறது.... பொறுங்கள்...ஆங்.....மனு தர்மம்!!      

 -டான் அசோக் 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...