Tuesday, September 17, 2013

"நான் பார்ப்பனர்களுக்காகப் போராடியிருப்பேன்"- பெரியார்


பெரியாரின் எந்தப் பேச்சை எடுத்துக் கொண்டாலும் அதிலே அடிவேராய் இருப்பது மனிதநேயம். மனு என்பவனின் கோட்பாட்டால் தங்களைத் தாங்களே 'உயர்ந்த சாதி' என்று நமக்கு நாமே திட்டத்தின்படி உயர்த்திக்கொண்ட சாதியினரான பார்ப்பனர்களின் கருத்தியலை அவர் மிகக்கடுமையாக எதிர்த்திருக்கிறாரேயொழிய என்றுமே அவர் பார்ப்பனர்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் இறங்கியதில்லை. பெண்ணுரிமையைப் பற்றிய அவரது சிந்தனைகள் எல்லாமுமே அடிமைபோல நடத்தப்பட்டு வந்த பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த்துதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1900களின் இந்திய சமூகம் மிக மோசமானதாக இருந்தது. மிகக்கொடுமையான சாதி பாகுபாடுகளும், அநீதிகளும், சாதி அடுக்கின் பெயரால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அரங்கேறிக்கொண்டிருந்த காலம் அது. அவற்றையெல்லாம் பொறுக்கமாட்டாமல் கோபம் கொண்ட பெரியார் வன்முறையில் இறங்க எல்லாக் காரணங்களும், நியாயங்களும் இருந்தது. வன்முறையில் இறங்கி பார்ப்பனர்களை ஒடுக்குவதற்கான பணமும் சரி, பலமும் சரி பெரியாருக்கு வாய்த்திருந்தது. இருந்தபோதும் அவர் எந்தக் காலத்திலும் வன்முறையை தன் போராட்டமுறையாகக் கையாளவில்லை. பேச்சில் கூட பார்ப்பனர்களின் மேல் வன்மத்தைக் கொணரும் கருத்துக்களை உதிர்க்காமல், பார்ப்பனியம் பிற சாதியினரை அடிமைப்படுத்துவதற்காக உருவாக்கி வைத்திருந்த கொடும்-ஆயுதமான அறிவுசார் வன்முறையை அறிவால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதில் மிகத் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். அதை செய்தும் காட்டினார்.

அவர் நினைத்திருந்தால் வடநாட்டில் இருந்து தமிழர்களை விரட்டிய (தமிழ்தேசியவாதிகளின் ஆதர்ச நாயகர்) பால்தாக்கரேவைப் போல, கர்நாடகாவில் இருந்து தமிழர்களை விரட்டிய வாட்டாள் நாகராஜைப் போல, முஸ்லிம்களைப் பலியிட்டு இன்று அவர்களை பயத்தால் கட்டிப்போட்டிருக்கும் மோடியைப் போல செல்வாக்குள்ள ஒரு வன்முறையாளராக உருவாகியிருக்க முடியும். ஆனால் அவர் மனிதநேயச் சிந்தனையாளர்!  மொழி, இனம், சாதி, மதத்திற்கு அப்பாற்ப்பட்ட மனித நேயம்தான் அவரது சிந்தனைகளின் ஒரே குறிக்கோள்.

"பார்ப்பனர்களை ஒருவேளை நம் ஆட்கள் அடக்கி ஒடுக்கியிருப்பார்களேயானால் நான் பார்ப்பனர்களுக்காகப் போராடியிருப்பேன்" எனச் சொல்லிய இனம், மொழி பாகுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்ட மனிதப் பண்பாளர். கருத்தடை, துரித உணவுகள், சோதனைக் குழாய் குழந்தைகள் போன்ற விசயங்களை சிந்தித்து எழுதிய பன்முகத் தொலைநோக்காளர்.

வன்முறையற்ற விடுதலை வேட்கையும், மனிதாபிமானத்தின் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் தான் 19ஆம் நூற்றாண்டில் பிறந்த தலைவரென்றாலும் இன்னமும் அவரையும், அவரது கொள்கைகளையும் சார்ந்தே நம் அரசியல் இயங்குகிறது.

பெரியார் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல. 20ஆம் நூற்றாண்டு மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களை அவர்களுக்கெல்லாம் முன்னரே பெரியார் பேசியிருப்பதைக் கண்டு பலமுறை நான் வியந்திருக்கிறேன். பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாளராக மட்டுமே கருதுவதென்பது பூமியை காற்று மட்டும் இருக்கும் ஒரு காற்று அறையாகக் கருதுவதைப் போன்றதொரு குறுகலான முடிவுதான். எத்தனை பெரிய சிந்தனையாளரை நாம் கடவுள் மறுப்பாளர் என்ற மிகக்குறுகிய கருத்தில் அடைத்திருக்கிறோம் என நினைக்கும்போது வேதனைதான் மிச்சம். பெரியாரின் இந்தப் பிறந்தநாளில் அவரது அனைத்து சிந்தனைகளையும் உலகெங்கும் சேர்ப்போம் என்பதோடு, அவரது மூலக்கொள்கையான மனித நேயத்தை எப்போதும் எந்நேரமும் கடைபிடிப்போம் என்றும் உறுதியேற்போம்.
வாழ்க பெரியார். வாழ்க அவர் பறைசாற்றிய மனிதநேயம்.

3 comments:

sankar_raka said...

//அவர் நினைத்திருந்தால் வடநாட்டில் இருந்து தமிழர்களை விரட்டிய (தமிழ்தேசியவாதிகளின் ஆதர்ச நாயகர்) பால்தாக்கரேவைப் போல, கர்நாடகாவில் இருந்து தமிழர்களை விரட்டிய வாட்டாள் நாகராஜைப் போல, முஸ்லிம்களைப் பலியிட்டு இன்று அவர்களை பயத்தால் கட்டிப்போட்டிருக்கும் மோடியைப் போல செல்வாக்குள்ள ஒரு வன்முறையாளராக உருவாகியிருக்க முடியும். ஆனால் அவர் மனிதநேயச் சிந்தனையாளர்! மொழி, இனம், சாதி, மதத்திற்கு அப்பாற்ப்பட்ட மனித நேயம்தான் அவரது சிந்தனைகளின் ஒரே குறிக்கோள்.///

மிக அருமையான வரிகள்.... சத்தியமான உண்மை. வாழ்த்துக்கள் தோழர் !!!

Pugazh said...

I salute Periyar! He is such a greatest man in the history of Tamils. All Tamils should study Periyar for positive changes in their lives.

Pugazh said...

I salute Periyar! He is such a greatest man in the history of Tamils. All Tamils should study Periyar for positive changes in their lives.

Related Posts Plugin for WordPress, Blogger...