Thursday, September 12, 2013

மெட்ராஸ் கஃபேயும் சாத்தான் படைகளும்-டான் அசோக்


இந்தியா ஒரு கருத்துரிமை உள்ள ஜனநாயக நாடு என்ற புத்தகக் கருத்தில் இருந்து இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். ஜனநாயகக் கருத்துரிமை என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? சொல்ல முடியாது! சட்டத்திற்குப் புறம்பான, இந்திய அரசின் கொள்கைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், இந்திய அரசால் பயங்கரவாத இயக்கங்கள் என முத்திரை குத்தப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக நேரடியான கருத்துக்களை தெரிவிக்க முடியாது. இது இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள், மாவோயிஸ்ட்டுகள், விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்களுக்குப் பொருந்தும்.   அமெரிக்கா போன்ற முழு ஜனநாயக நாடுகளில் கூட கருத்துரிமை என்ற பெயரில் கம்யூனிச, நாஜி கருத்துக்களைப் பேசினால் தடையெல்லாம் விழுகாது என்றாலும் அரசின் பார்வை நம் மேல் அழுந்தப் பதிந்துவிடும். நாம் எதிலாவது மாட்டுகிறோமா எனக் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி அன்றிலிருந்து நம்மைக் கண்காணிக்கத் துவங்கிவிடுவார்கள்.  உதாரணத்திற்கு ஹிட்லர் படையின் உறுதிமொழி போல கையை நெஞ்சுக்கு நேரே வைத்துக்கொண்டு நம் ஊரில் நாம் தமிழர் கட்சியினர் உறுதிமொழி எடுக்கிறார்கள் அல்லவா, அதே பாடி லாங்குவேஜுடன் அமெரிக்காவில் போய் எடுத்தால் உளவுத்துறை அதன் கண்களை எடுத்து அவர்கள் முதுகில் நிரந்தரமாக ஒட்டவைத்துவிடும். பின் பாத்ரூம் கூட ரகசியமாக போக முடியாது. உலகெங்கிலும் இதுதான் ஜனநாயகக் கருத்துச் சுதந்திரத்தின் நடைமுறை. 

இப்போது மெட்ராஸ் கஃபேக்கு வருவோம். ஜான் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபேயில் LTTE, LTE என சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தம்பி பிரபாகரன், அண்ணா பாஸ்கரனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். படம் இன்னும் வெளிவராத நிலையில், புலிகள் இயக்கமும் சரி, இயக்கத் தலைவரும் சரி கண்டிப்பாக தவறாகத் தான் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் மாற்றுக் கருத்தின்றி உரக்கச் சொல்லலாம். ஏனெனில் ஒருவேளை ஜான் ஆபிரகாம் ஒரு பரிசுத்த ஆத்மாவாக இருந்தாலும் கூட, இந்திய ஜனநாயக விதிகளின் படி அவரது கருத்துரிமையைப் பயன்படுத்தி புலிகளை மோசமாகத்தான் சித்தரிக்க முடியுமேயொழிய, நல்லவர்களாகக் காட்ட முடியாது. ஏனெனில் இந்தியாவிற்குப் புலிகள் நல்லவர்கள் கிடையாது. இந்திய சென்சார் போர்டு அதை அனுமதிக்காது, படத்தையும் வெளியிட முடியாது. ஆக இந்திய அரசுக்குப் பிடித்தமான படமாக, அதாவது புலிகளை வில்லன்களாகச் சித்தரிக்கும் படமாகத்தான் மெட்ராஸ் கஃபே இருக்கும். அதனால் தான் அதற்கு தமிழ்தேசியவாதிகள் தடை கோருகிறார்கள். அது வரையில் சரி!

இப்போது சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். புலிகள் உயிர்க்கொல்லி பயங்கரவாதிகளாகக் கட்டமைக்கப்பட்ட நிகழ்வு ஒரே இரவில் தமிழ்தேசியவாதிகளும், தமிழர்களும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் போது நடந்ததல்ல. ராஜீவ் கொலைக்கு முன்பே அவர்களை அவ்வாறு சித்தரிக்கும் போக்கு துவங்கிவிட்டது. (இதைப் பற்றி கடைசி பத்தியில் ஒரு செய்தி உண்டு). பின்னர் ராஜீவ் கொலையின் போது பகிரங்கமாக பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டப் புலிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதற்கு முன்னின்று பெரிதும் உதவியவர் முதல்வர் ஜெயலலிதா. அதை தனிப்பட்ட முறையில் நான் குறையும் சொல்லப் போவதில்லை. ஒரு நாட்டின் பிரதமரை வெளிநாட்டு இயக்கம் ஒன்று கொலை செய்யும்போது எந்த நாடுமே அதைத் தடை செய்வதென்பது உலகளாவிய நடைமுறைதான்.  ஆனால் இங்கே பிரச்சினை, அந்தத் தடையையும், தடைக்கு உதவிய முதல்வரையும் தமிழர்கள் ஏகபோகமாக ஆதரித்ததுதான். பின்னர் அண்ணா பாஸ்கரனை, அதாவது தம்பி பிரபாகரனை தூக்கிலிட வேண்டுமெனெ சட்டசபையில் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதா. (ஜான் ஆபிரகாமாவது சென்டிமென்ட்டுக்கு மதிப்பளித்து பெயரையேனும் மாற்றியிருக்கிறார்) அதன் பின் இரண்டு முறை முதல்வரும் ஆகிவிட்டார். இப்படிப் படிப்படியாக விடுதலைப் புலிகளின் மேல் பயங்கரவாத முத்திரை எழுப்பப்பட்ட போதெல்லாம் தூங்கிவிட்டு, திடீரென மெட்ராஸ் கஃபே திரைப்படம், புலிகள் பயங்கரவாதிகள் என்ற இந்தியாவின் கருத்தை வழிமொழியும்போது பொங்கி எழுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் மெட்ராஸ் கஃபே போன்ற படங்கள் வெளிப்புறத் தோலில் ஏற்படும் கட்டிகள் போன்றவை. அந்தக் கட்டிகளின் ஆணிவேர் இந்திய அரசின் கொள்கைகளில் 'புலி எதிர்ப்பு' என்ற நோயாகப் பரவியிருக்கிறது. அதை ஊடகங்களும், ஜெயலலிதா போன்ற தமிழகப் பிரதிநிதிகளும் இந்திய அளவில் வளர்க்கும் போதெல்லாம் அமைதியாய் வேடிக்கைப் பார்த்துவிட்டு, இன்று கட்டி மீது கோபப்பட்டால் நியாயமா? கட்டி ஏற்படும் இடங்களில் மட்டும் கையை அழுந்தப் பிடித்து அமுக்கிக்கொண்டால் மட்டும், தடை செய்துவிட்டால் மட்டும் நோய் தீர்ந்து விடுமா? 

ஒரே ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். ஜான் ஆபிரகாம், "உங்கள் சட்டசபையில் தானே புலிகளுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினீர்கள்? இப்போது ஏன் என் படத்தைக் கண்டிக்கிறீர்கள்?" எனக் கேட்டால் இப்போது போராடும் போராளிகள் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்? ஆக மெட்ராஸ் கஃபே படத்திற்குத் தடை கோருவது சரியா, தவறா என்பதை விட, 'தமிழர் நலன்' என்ற கோஷத்தோடு தடை கோருவதற்கான தார்மீக உரிமையே தமிழர்கள் நமக்குக் கிடையாது என்பதுதான் நகைமுரண்.

இது ஒரு கோணம். இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது இதுபோன்ற போராட்டங்கள் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதுதான் உண்மை. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைத் தூற்றி எடுத்தப் படத்தை நாம் தடை செய்யக்கோரினால், நாளை ஒருவேளை நாம் புலிகளை புகழ்ந்து ஒரு படம் எடுக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள், அதற்கு தடை போடுவது இந்திய அரசிற்கு மிகவும் சுலபம் ஆகிவிடுமே!! ஏற்கனவே காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களுக்கே நாம் எவ்வளவு தடைகளை, எவ்வளவு வெட்டுக்களைச் சந்தித்து வெளியிட வேண்டியிருக்கிறது?

ஆக இந்தப் போராட்டங்களையெல்லாம் காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களுக்கு அனுமதி வாங்கவேண்டி செய்தோமானால் நமக்குப் பயனுண்டு. இந்திய அரசு அனுமதி அளிக்கும் விசயங்களுக்குத் தடை போடப் போராடுவதைக் காட்டிலும், இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் விசயங்களுக்கு அனுமதி வேண்டிப் போராடுவதே நியாயமான, ஆக்கபூர்வமான போராட்டமாக இருக்கும். மெட்ராஸ் கஃபே போன்ற படைப்புகளுக்கு படைப்புகளின் மூலமாகவே பதில் சொல்ல முடியாததுதான் நமது பிரச்சினையேயொழிய மெட்ராஸ் கஃபே போன்ற படங்கள் அல்ல.

இன்னும் சொல்லப் போனால் மெட்ராஸ் கஃபே போன்ற படங்கள் எண்ணிக்கையில் நிறைய வந்தால் புலிகள் குறித்த விவாதங்கள் இந்திய அளவில் பெருகும், புலிகள் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லவும், விளக்கவும் வாய்ப்புகள் பெருகும். ஆனால் தமிழ்தேசியவாதிகளின் எண்ணமெல்லாம் குறுகிய, தற்காலிக வெற்றியான 'தடை செய்வதில்' மட்டுந்தான் இருக்கிறதேயொழிய நிரந்தரமாக இந்தியாவிற்குப் புலிகள் மேல், தனி ஈழத்தின் மேல் இருக்கும் கருத்தை மாற்றக் கூடியதாய் இல்லை. அதைப் பற்றி எந்த தமிழ்தேசியவாதியும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. தடை கோரி போராட்டங்கள் செய்து படத்திற்கு 'விளம்பரம்' தேடுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். இதில் மற்றொரு நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் மெட்ராஸ் கஃபே, டாம் 999 ஆகிய படங்கள் தமிழருக்கு எதிரான படங்களென்றால் அதை தமிழகத்தில் மட்டும் தடை செய்து என்ன பயன்? தமிழர்கள் அதைப் பார்த்து தமிழர்களுக்கு எதிரான கண்ணோட்டத்திற்கு மாறப் போகிறார்களா என்ன? ஒன்று இந்திய அளவில் தடை செய்யக் கோரவேண்டும். அது என்றுமே சாத்தியமில்லாத பட்சத்தில், அதுபோன்ற படங்களுக்கு நம் இயக்குனர்களை வைத்து பதில் சொல்லும் வகையில் தரமான படங்களை எடுக்க வேண்டும். ஆனால் அதில் எல்லாம் போராளி வேடம் போடும் நம் இயக்குனர்களுக்கு ஆர்வம் ஏற்படாது. அவர்களின் எண்ணமெல்லாம் இங்கே இருக்கும் ஒரு நாலு பேரிடம் தமிழ்ப்போராளி என்ற பட்டத்தைப் பெற்று குண்டுச் சட்டிக்குள்ளேயே சொகுசாக வலம் வரவேண்டும் என்பதாக மட்டுமே இருக்கிறது! இவர்கள் தடை கோரி விளம்பரப்படுத்திவிடும் படங்களை தமிழ் ஆட்சியாளர்களான கலைஞரும், ஜெயலலிதாவும் "போய்த் தொலைகிறார்கள்" என தமிழகத்தில் தடை செய்துவிடுகிறார்கள். ஆனால் இவர்கள் கொடுக்கும் விளம்பரத்தில் அந்தப் படங்கள் இந்தியாவெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடுவதுதான் வரலாறு.


ஒரு சிறிய உதாரணம் உண்டு. இயேசுவுக்கு வம்சாவழி இருப்பதாக கிறித்தவ மதத்திற்கே எதிரான ஒரு கருத்தைச் சொன்ன படம் டாவின்சி கோட். அந்தப் படத்திற்கு கத்தோலிக்கர்கள் மிக அதிகமாக இருக்கும் அமெரிக்காவிலே கூட தடை போடப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் வாடிகன் சிட்டி கூட உலகக் கத்தோலிக்கர்கள் எல்லாம் அப்படத்தைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டதேயொழிய படத்தைத் தடை செய்யக் கோரவில்லை. ஆனால் தமிழக கிறித்தவ அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று கலைஞர் அப்படத்தைத் தடை செய்தார். இப்போது இங்கே டாவின்சி கோட் பார்க்காதவர்கள் யார்? தடையால் என்ன பலன் கிடைத்தது? தடை செய்யப்பட்டதால் மாய்ந்து மாய்ந்து எல்லோரும் பார்த்தார்கள். என்ன ஒன்று, தயாரிப்பாளருக்குப் போக வேண்டிய பணம், திருட்டு டிவிடிக்காரர்களுக்குப் போனது!! இதுபோல ஒரு குறிப்பிட்ட குழுவினர் தடை கோருவதும் அவர்களின் தற்காலிக ஈகோவை அடக்கும் பொருட்டு தடை செய்வதும் தவறான முன்னுதாரணங்கள். பயனும் கிடையாது, எதிர்விளைவு இன்னும் மோசமாகவும் இருக்கும்.

ஜான் ஆபிரகாம்கள் இப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கும்போது நிஜ வாழ்க்கையிலும் ஊடகத்தின் புண்ணியத்தில் ஹீரோக்கள் ஆகிவிடுகிறார்கள். ஆக தவறான படைப்புகளையும் விளம்பரப்படுத்தி, தவறான படைப்பாளிகளையும் விளம்பரப்படுத்தும் same side goal வேலையைத் தான் நம் ஊர் தமிழ்ப்போராளிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எந்தக் கருத்தையுமே யாருமே சொல்ல முழு உரிமை இருக்கிறது. நமக்கெதிராக ஒரு கருத்தை ஒருவன் வைக்கிறான், அல்லது விஷமப் பிரச்சாரம் செய்கிறானென்றால் அதைக் கருத்தால் தான் முறியடிக்க முடியும். இதே போக்கில் தடை மட்டுமே தீர்வு எனப் போய்க் கொண்டிருந்தால் இன்னும் ஒரு 20, 30 ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான கருத்தியலைப் பேசும் படங்களும், புத்தகங்களும் ஏராளமான அளவில் பெருகியிருக்கும். நம் கருத்தைப் பதிந்த படங்களோ, புத்தகங்களோ எதுவுமே இருக்காது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம், அது மனுதர்மத்தின் விசமப் பிரச்சாரத்திற்கு எதிராக எடுத்துக்கொண்ட ஆக்கபூர்வமான போராட்ட முறைகள். திராவிடக் கருத்தியல் பேசும் படங்கள்தான் எத்தனை, படைப்புக்கள் தான் எத்தனை! அண்ணாவின் ஆரிய மாயை புத்தகத்தை ஆரியர்கள் தடை செய்தார்கள். பின் தடை நீக்கப்பட்டு இன்று எங்கும் வியாபித்திருக்கிறது. ஆக தடை என்பது தற்காலிகமாக நம் ஈகோவை சமாதானப்படுத்துவதாக இருக்குமேயொழிய நிரந்தரத் தீர்வு கிடையாது. 

நம் தமிழர்களிடையே கூட ஈழம் குறித்த பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. ஈழத்தமிழர்கள் அனைவருமே தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்ற மிகத்தவறான நம்பிக்கையில் தான் பலர் ஈழ எதிர்ப்பு அரசியலையே முன்வைக்கிறார்கள். அவ்வளவு ஏன்? அமைதிப்படை அட்டூழியத்தையெல்லாம் மறந்து, ராஜீவ் கொலைக்கு வருந்தியவர்கள் தானே நம் தமிழர்கள். 22 ஆண்டுகள் கழித்து எல்லாம் முடிந்துபோய் புல் முளைத்தப் பின், அதாவது இப்போதுதானே நம் ஆட்களில் பலருக்கு உணர்வே வந்திருக்கிறது. ஆக நாம் 22 ஆண்டுகளாக தூங்கிய தூக்கத்தில் நிகழ்ந்த தவறுகளைத் திருத்தி, இந்தியாவின், இந்தியர்களின் ஈழம் குறித்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டுமானால் வேரில் இருந்தே மாற்ற வேண்டும். மாற்றினாலேயொழிய காற்றுக்கென்ன வேலி போன்ற ஈழம் சார்ந்த படங்களுக்கு தடைகளும், வெட்டுக்களும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்கான பரப்புரைகளும், படைப்புகளும் தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எத்தனை எத்தனை தேவை? தொடர்ந்து ஈழசார்பு திரைப்படங்களை எடுத்துக்கொண்டே இருந்தால் எத்தனை படங்களை தடை செய்வார்கள், எத்தனைப் படங்களை வெட்டுவார்கள்? தடை செய்தால் கூட, "மெட்ராஸ் கஃபே போன்ற ஈழ விரோதப் படங்களை வெளியிட்டீர்களே, ஈழ ஆதரவு நிலைப்பாடு எடுக்க எங்களுக்கும் உரிமை இருக்கிறது", என நாம் ஒரு தீர்க்கமான வாதத்தையும் முன்வைக்கலாம். ஆனால் இதுபோன்ற செயல்களில் ஆர்வமே காட்டாமல் ஜான் ஆபிரகாம்களிடம் கோபம் கொள்வது சினிமாவில் 'சிலருக்கு' வேண்டுமானால் பயன் தருமேயொழிய ஈழத்துக்கோ, இந்திய-ஈழ உறவிற்கோ எந்தப் பயனும் தராது. மாறாகத் தமிழர்கள் என்றாலே ஆக்கப்பூர்வமாய் எதுவுமே செய்யாமல் வெறுமனே தடை கோரும் கூட்டம் என்ற எதிர்மறை விளைவையே தரும்.

சாத்தான் படைகள்: 

The Satanic Forces என்ற இந்திய அரசால் தடை செய்யப்பட்ட புத்தகம் (தொகுப்பு) இந்திய அமைதிப்படையை சாத்தானின் படையாக வர்ணிக்கிறது. அது செய்த அட்டூழியங்களை மிகவும் நடுநிலையாக துகிலுரிக்கிறது. அமைதிப்படை, இந்திய அரசு, ராஜீவ், புலிகள், திமுகவின் அமைதிப்படைக்கெதிரான செயல்பாடுகள் என ஈழத்தை பல கோணத்தில் அலசும் இந்தத் தொகுப்பு சர்ச்சைக்குரிய விசயங்களையெல்லாம் சரியான கோணத்தில் காண உதவும் என்பதில் மாற்றுக்கருத்தே யாருக்கும் இருக்க முடியாது. இந்திய அரசின் ஒட்டுமொத்த கோபத்திற்கும், எதிர்ப்புக்கும் ஆளான இந்த ஆதாரக் தொகுப்பை மிகவும் தைரியமாக 23 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் வெளியிட்டவர் தமிழினி பதிப்பகத்தின் தமிழினி வசந்தகுமார் என்பவர். அமெரிக்காவிலோ வேறு எங்கோ ஒருவர் இப்படியானச் செயலைச் செய்திருந்தால் புலிட்சர் பரிசே கிடைத்திருக்கும். ஆனால் தமிழுணர்வு, ஈழ உணர்வு என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் நம் ஊரில் இவரை யாரென்றே இப்போதைய தமிழ்தேசியவாதிகள் உட்பட பலருக்கும் தெரியாது என்பதுதான் நகைமுரண்.


ஆயிரக்கணக்கான மெட்ராஸ் கஃபேக்களை கருத்தால் எதிர்க்கும் அளவிற்கு சரக்கு உள்ள, ஆதாரங்கள் உள்ள 'சாத்தான் படை' புத்தகம் சிலர் கைகளில் மட்டுமே தவழும் மின்புத்தகமாக வலம் வந்து கொண்டிருப்பதுதான் சாபக்கேடு!  சமீபத்தில் ஒரு ஈழத்தமிழருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் பல தமிழ்நாட்டுத் தமிழ்தேசியக் குழுக்களுடனும், கட்சிகளுடனும் பேசியும்கூட இங்கு யாருமே அதைப் பிரசுரிக்கும் தைரியமின்றி ஒதுங்கிவிட்டார்கள் என வேதனையுடன் கூறினார். தெரிந்ததுதானே! அவர்கள் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள், அவர்கள் ஜான் ஆபிரகாம்களுடன் வெற்றுச் சண்டையில் பிசியாக இருக்கிறார்கள்!நன்றி உயிர்மை

5 comments:

cna thaana said...

Hi Mr. Ashok,

Could you please send me the e-book of " Saathaan padaigal" to my email account.
cnathaana@gmail.com

cna thaana said...

Hi Mr. Ashok,

Could you please send me the e-book of "Saathaan Padaigal" to my email "cnathaana@gmail.com" . Thanks

Anonymous said...

உங்களின் முழுக் கருத்துடன் உடன்படுகின்றேன். புலிகள் இந்தியா இடையிலான பிணக்கம் அரசியல் சார்ந்ததே. புலிகள் உட்பட அனைத்து தமிழ் குழுக்களுக்கும் பயிற்சி வழங்கிய போது இந்தியா தெளிவாக இருந்தது, அத் தெளிவில் இருந்து அது இன்று வரை மாறவில்லை. சீன சார்புடைய இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வர இந்திய சார்புள்ள தமிழ் மாநிலத்தை இலங்கையில் அமைத்து மொத்த இலங்கையையும் கட்டுப்படுத்துவதே, ஏனைய அமைப்புகள் இந்தியாவின் திட்டத்துக்கு உடன்பட்ட போதும், புலிகள் மேற்குலகின் பேச்சைக் கேட்டு தனி ஈழத்துக்கு போராடத் தொடங்கியதும், அதைத் தொடர்ந்து புலிகளை அடக்க இந்திய ராணுவம் சென்றதும், இந்திய ராணுவத்தை விரட்ட இலங்கை அரசும் -புலிகளும் ஒன்றிணைந்து போரிட்டதும் வரலாறு. மட்ராஸ் கபேவில் இதனைத் தொட்டுச் சென்றுள்ளது. மற்றபடி படத்தில் இந்திய ராணுவம் செய்த மனித உரிமை மீறல், புலிகளின் சிறார் போராளி, ஆட் கொலைகள், இலங்கை அரசின் பயங்கரவாதம் என எதையும் காட்டவில்லை. ராஜிவ் படுகொலை இந்திய உளவுத் துறையின் தோல்வி என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இதனை தமிழ் தேசியவாதிகள் எதிர்ப்பதற்கு எதுவும் இல்லை. அனைவரும் சேர்ந்து அரசியல் பண்ணுயது மட்டும் தெரியுது. மற்றபடி சாத்தானிய படைகள் நூலை அனைத்து தமிழரும் வாசிக்க வேண்டும், அவற்றை அச்சில் ஏற்ற தமிழ் தேசியம் பேசும் தமிழக தலைவர்கள் எவரும் விரும்ப மாட்டார்கள், அப்புறம் எங்கே அரசியல் பண்ணுவது சொல்லுங்கோ.

chandru said...

உங்களமாதிரி ஆட்கள் நாளைக்கு இதையே ஒரு கருத்தாகக் கொண்டு, படம் எல்லாம் எடுத்து ஓட்டினார்கள் அதையும் காசு கொடுத்து வெட்கமில்லாமல் பார்த்துவிட்டு இப்ப என்ன புலம்பல் என்பீர்கள். அன்றைக்கு என்ன தூங்கிக்கொண்டு இருந்தீர்களா என்பீர்கள்.ஆப்ரஹாம் ஆப்ரஹாம் என்கிறிர்கள் அவரே ஒரு பினாமி தமிழனுக்கு பிடிகாதவர்களை (ஏற்கனவே டேம்999 படம் எடுத்ததால் மலையாளிதான் சரியான ஆள் )வைத்து படமெடுத்து தனது காரியத்தையும் சாதித்துக் கொண்டு அடுத்தவனை மோதவிடுவதுதான் காங்கிரஸ்காரனின் வேலை.

M.Kumaran said...

டாவின்சி கோட் படம் தமிழகத்தில் தடைசெய்யப்படவில்லை. அந்த படத்தை நான் எங்கள் ஊர் தியேட்டரில்தான் பார்த்தேன். படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் "இப்படம் கற்பனையானது" என்ற எழுத்துக்களுடன் அனுமதிக்கப்பட்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...