Friday, September 20, 2013

தங்கமீன்கள். ராமின் ஒருதுளி திறமை.ஷேசாத்ரிகள் நடத்தும் தனியார் பள்ளிகளின் சுரண்டல், ஆயுள் முடிந்த தொழில்கள், குடும்பப் பிரச்சினை, நுகர்வுக் கலாச்சாரத்தில் ஏழைகள் சந்திக்கும் பிரச்சினைகள், அப்பா-மகள், கணவன்-மனைவி, அப்பா-மகன், மாமியார்-மருமகள் உறவுப்பின்னல்கள் என பல அழுத்தமான விசயங்களை, மிக அழுத்தமான வசனங்களாலும் காட்சிகளாலும் பதிவு செய்திருக்கிறார் ராம். 

ஆனால் அப்பா-மகள் உறவு மட்டும் ஆரம்பம் முதலே பார்ப்பவர்களுக்கு குழப்பமாகவேஇருக்கிறது. எட்டு வயது மகளுக்கு மூன்று வயது மகளுக்கு சொல்லும் ஃபாண்டசி கதைகளையெல்லாம் சொல்லி அந்தக் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கே தடையாக இருக்கிறார் அப்பா. குழந்தை ஆசைப்படும் விலையுயர்ந்த நாயை, "அந்த நாய் 20000ரூபாய்டா அப்பாவால வாங்க இப்ப முடியாது. அப்புறமா வாங்கித்தர்றேன்." என்று சொல்லி சமாதானப்படுத்த முனையாமல் எப்படியாவது வாங்கவேண்டும் என வெறித்தனமாக அலைவது ஒட்டவில்லை. கல்யாணியின்(ராம்) தந்தை படத்தில் சொல்வதைப் போல கல்யாணி தன் மகளின் அறிவை மழுங்கடிப்பதாகவே நமக்கும் படுகிறது. இப்படிப்பட்ட ஒரு குழப்பமான உறவுடன் நம்மால் ஒன்ற முடியவில்லையென்பதால் இரண்டாம் பாதியில் நம்மால் கதையோடு பயணிக்க முடியவில்லை. மிக சீரியசான காட்சிகளில் கூட அப்பா-மகள் கதாப்பாத்திரங்களின் மேல் பற்றோ பரிதாபமோ நமக்கு ஏற்பட மறுக்கிறது. மற்றபடி பல இடங்களில் மிக அருமையான வசனங்களை ஓவியம் போல வரைந்திருக்கிறார் ராம். "அவன் ரொம்ப நல்லவன்டி. கொஞ்சம் கெட்டவனாகி வரட்டும் விடேன்" என கல்யாணியின் தந்தை, "நானும் செல்லம்மா மாதிரி தானே! எங்க போவேன்?" என கல்யாணியின் மனைவி, "நாயத்தான என்னால அடிக்க முடியும். வேற யாரை நான் அடிப்பேன்?" என கல்யாணியும் வசனங்களால் துளைக்கிறார்கள். சில காட்சிகள் தவிர்த்து பல காட்சிகள் அழுத்தமான சிறுகதைகளைப் போல மனதில் நிற்கின்றன. மொத்தத்தில் நல்ல முயற்சி என்றாலும், அப்பா-மகள் உறவை கொஞ்சம் மெனக்கெட்டு அறிவுசார்ந்து, பார்ப்பவர்களை ஒன்றவைப்பதைப்போல எழுதியிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

கற்றது தமிழ் திரைப்படம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு படம். மிகபயங்கரமாக பாதித்தது. அதில் தெரிந்த ராம் தங்கமீன்களில் ஒரு 50% கூட இல்லை. மீண்டும் கற்றது தமிழ் போன்ற ஒரு மிக அருமையான, அழுத்தமான, ராமிஸம் மின்னும் ஒரு திரைப்படத்துடன் அவர் திரைக்கு வருவார் என எதிர்பார்ப்போம். 

Tuesday, September 17, 2013

"நான் பார்ப்பனர்களுக்காகப் போராடியிருப்பேன்"- பெரியார்


பெரியாரின் எந்தப் பேச்சை எடுத்துக் கொண்டாலும் அதிலே அடிவேராய் இருப்பது மனிதநேயம். மனு என்பவனின் கோட்பாட்டால் தங்களைத் தாங்களே 'உயர்ந்த சாதி' என்று நமக்கு நாமே திட்டத்தின்படி உயர்த்திக்கொண்ட சாதியினரான பார்ப்பனர்களின் கருத்தியலை அவர் மிகக்கடுமையாக எதிர்த்திருக்கிறாரேயொழிய என்றுமே அவர் பார்ப்பனர்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் இறங்கியதில்லை. பெண்ணுரிமையைப் பற்றிய அவரது சிந்தனைகள் எல்லாமுமே அடிமைபோல நடத்தப்பட்டு வந்த பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த்துதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1900களின் இந்திய சமூகம் மிக மோசமானதாக இருந்தது. மிகக்கொடுமையான சாதி பாகுபாடுகளும், அநீதிகளும், சாதி அடுக்கின் பெயரால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அரங்கேறிக்கொண்டிருந்த காலம் அது. அவற்றையெல்லாம் பொறுக்கமாட்டாமல் கோபம் கொண்ட பெரியார் வன்முறையில் இறங்க எல்லாக் காரணங்களும், நியாயங்களும் இருந்தது. வன்முறையில் இறங்கி பார்ப்பனர்களை ஒடுக்குவதற்கான பணமும் சரி, பலமும் சரி பெரியாருக்கு வாய்த்திருந்தது. இருந்தபோதும் அவர் எந்தக் காலத்திலும் வன்முறையை தன் போராட்டமுறையாகக் கையாளவில்லை. பேச்சில் கூட பார்ப்பனர்களின் மேல் வன்மத்தைக் கொணரும் கருத்துக்களை உதிர்க்காமல், பார்ப்பனியம் பிற சாதியினரை அடிமைப்படுத்துவதற்காக உருவாக்கி வைத்திருந்த கொடும்-ஆயுதமான அறிவுசார் வன்முறையை அறிவால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதில் மிகத் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். அதை செய்தும் காட்டினார்.

அவர் நினைத்திருந்தால் வடநாட்டில் இருந்து தமிழர்களை விரட்டிய (தமிழ்தேசியவாதிகளின் ஆதர்ச நாயகர்) பால்தாக்கரேவைப் போல, கர்நாடகாவில் இருந்து தமிழர்களை விரட்டிய வாட்டாள் நாகராஜைப் போல, முஸ்லிம்களைப் பலியிட்டு இன்று அவர்களை பயத்தால் கட்டிப்போட்டிருக்கும் மோடியைப் போல செல்வாக்குள்ள ஒரு வன்முறையாளராக உருவாகியிருக்க முடியும். ஆனால் அவர் மனிதநேயச் சிந்தனையாளர்!  மொழி, இனம், சாதி, மதத்திற்கு அப்பாற்ப்பட்ட மனித நேயம்தான் அவரது சிந்தனைகளின் ஒரே குறிக்கோள்.

"பார்ப்பனர்களை ஒருவேளை நம் ஆட்கள் அடக்கி ஒடுக்கியிருப்பார்களேயானால் நான் பார்ப்பனர்களுக்காகப் போராடியிருப்பேன்" எனச் சொல்லிய இனம், மொழி பாகுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்ட மனிதப் பண்பாளர். கருத்தடை, துரித உணவுகள், சோதனைக் குழாய் குழந்தைகள் போன்ற விசயங்களை சிந்தித்து எழுதிய பன்முகத் தொலைநோக்காளர்.

வன்முறையற்ற விடுதலை வேட்கையும், மனிதாபிமானத்தின் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் தான் 19ஆம் நூற்றாண்டில் பிறந்த தலைவரென்றாலும் இன்னமும் அவரையும், அவரது கொள்கைகளையும் சார்ந்தே நம் அரசியல் இயங்குகிறது.

பெரியார் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல. 20ஆம் நூற்றாண்டு மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களை அவர்களுக்கெல்லாம் முன்னரே பெரியார் பேசியிருப்பதைக் கண்டு பலமுறை நான் வியந்திருக்கிறேன். பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாளராக மட்டுமே கருதுவதென்பது பூமியை காற்று மட்டும் இருக்கும் ஒரு காற்று அறையாகக் கருதுவதைப் போன்றதொரு குறுகலான முடிவுதான். எத்தனை பெரிய சிந்தனையாளரை நாம் கடவுள் மறுப்பாளர் என்ற மிகக்குறுகிய கருத்தில் அடைத்திருக்கிறோம் என நினைக்கும்போது வேதனைதான் மிச்சம். பெரியாரின் இந்தப் பிறந்தநாளில் அவரது அனைத்து சிந்தனைகளையும் உலகெங்கும் சேர்ப்போம் என்பதோடு, அவரது மூலக்கொள்கையான மனித நேயத்தை எப்போதும் எந்நேரமும் கடைபிடிப்போம் என்றும் உறுதியேற்போம்.
வாழ்க பெரியார். வாழ்க அவர் பறைசாற்றிய மனிதநேயம்.

Thursday, September 12, 2013

மெட்ராஸ் கஃபேயும் சாத்தான் படைகளும்-டான் அசோக்


இந்தியா ஒரு கருத்துரிமை உள்ள ஜனநாயக நாடு என்ற புத்தகக் கருத்தில் இருந்து இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். ஜனநாயகக் கருத்துரிமை என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? சொல்ல முடியாது! சட்டத்திற்குப் புறம்பான, இந்திய அரசின் கொள்கைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், இந்திய அரசால் பயங்கரவாத இயக்கங்கள் என முத்திரை குத்தப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக நேரடியான கருத்துக்களை தெரிவிக்க முடியாது. இது இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள், மாவோயிஸ்ட்டுகள், விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்களுக்குப் பொருந்தும்.   அமெரிக்கா போன்ற முழு ஜனநாயக நாடுகளில் கூட கருத்துரிமை என்ற பெயரில் கம்யூனிச, நாஜி கருத்துக்களைப் பேசினால் தடையெல்லாம் விழுகாது என்றாலும் அரசின் பார்வை நம் மேல் அழுந்தப் பதிந்துவிடும். நாம் எதிலாவது மாட்டுகிறோமா எனக் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி அன்றிலிருந்து நம்மைக் கண்காணிக்கத் துவங்கிவிடுவார்கள்.  உதாரணத்திற்கு ஹிட்லர் படையின் உறுதிமொழி போல கையை நெஞ்சுக்கு நேரே வைத்துக்கொண்டு நம் ஊரில் நாம் தமிழர் கட்சியினர் உறுதிமொழி எடுக்கிறார்கள் அல்லவா, அதே பாடி லாங்குவேஜுடன் அமெரிக்காவில் போய் எடுத்தால் உளவுத்துறை அதன் கண்களை எடுத்து அவர்கள் முதுகில் நிரந்தரமாக ஒட்டவைத்துவிடும். பின் பாத்ரூம் கூட ரகசியமாக போக முடியாது. உலகெங்கிலும் இதுதான் ஜனநாயகக் கருத்துச் சுதந்திரத்தின் நடைமுறை. 

இப்போது மெட்ராஸ் கஃபேக்கு வருவோம். ஜான் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபேயில் LTTE, LTE என சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தம்பி பிரபாகரன், அண்ணா பாஸ்கரனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். படம் இன்னும் வெளிவராத நிலையில், புலிகள் இயக்கமும் சரி, இயக்கத் தலைவரும் சரி கண்டிப்பாக தவறாகத் தான் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் மாற்றுக் கருத்தின்றி உரக்கச் சொல்லலாம். ஏனெனில் ஒருவேளை ஜான் ஆபிரகாம் ஒரு பரிசுத்த ஆத்மாவாக இருந்தாலும் கூட, இந்திய ஜனநாயக விதிகளின் படி அவரது கருத்துரிமையைப் பயன்படுத்தி புலிகளை மோசமாகத்தான் சித்தரிக்க முடியுமேயொழிய, நல்லவர்களாகக் காட்ட முடியாது. ஏனெனில் இந்தியாவிற்குப் புலிகள் நல்லவர்கள் கிடையாது. இந்திய சென்சார் போர்டு அதை அனுமதிக்காது, படத்தையும் வெளியிட முடியாது. ஆக இந்திய அரசுக்குப் பிடித்தமான படமாக, அதாவது புலிகளை வில்லன்களாகச் சித்தரிக்கும் படமாகத்தான் மெட்ராஸ் கஃபே இருக்கும். அதனால் தான் அதற்கு தமிழ்தேசியவாதிகள் தடை கோருகிறார்கள். அது வரையில் சரி!

இப்போது சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். புலிகள் உயிர்க்கொல்லி பயங்கரவாதிகளாகக் கட்டமைக்கப்பட்ட நிகழ்வு ஒரே இரவில் தமிழ்தேசியவாதிகளும், தமிழர்களும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் போது நடந்ததல்ல. ராஜீவ் கொலைக்கு முன்பே அவர்களை அவ்வாறு சித்தரிக்கும் போக்கு துவங்கிவிட்டது. (இதைப் பற்றி கடைசி பத்தியில் ஒரு செய்தி உண்டு). பின்னர் ராஜீவ் கொலையின் போது பகிரங்கமாக பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டப் புலிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதற்கு முன்னின்று பெரிதும் உதவியவர் முதல்வர் ஜெயலலிதா. அதை தனிப்பட்ட முறையில் நான் குறையும் சொல்லப் போவதில்லை. ஒரு நாட்டின் பிரதமரை வெளிநாட்டு இயக்கம் ஒன்று கொலை செய்யும்போது எந்த நாடுமே அதைத் தடை செய்வதென்பது உலகளாவிய நடைமுறைதான்.  ஆனால் இங்கே பிரச்சினை, அந்தத் தடையையும், தடைக்கு உதவிய முதல்வரையும் தமிழர்கள் ஏகபோகமாக ஆதரித்ததுதான். பின்னர் அண்ணா பாஸ்கரனை, அதாவது தம்பி பிரபாகரனை தூக்கிலிட வேண்டுமெனெ சட்டசபையில் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதா. (ஜான் ஆபிரகாமாவது சென்டிமென்ட்டுக்கு மதிப்பளித்து பெயரையேனும் மாற்றியிருக்கிறார்) அதன் பின் இரண்டு முறை முதல்வரும் ஆகிவிட்டார். இப்படிப் படிப்படியாக விடுதலைப் புலிகளின் மேல் பயங்கரவாத முத்திரை எழுப்பப்பட்ட போதெல்லாம் தூங்கிவிட்டு, திடீரென மெட்ராஸ் கஃபே திரைப்படம், புலிகள் பயங்கரவாதிகள் என்ற இந்தியாவின் கருத்தை வழிமொழியும்போது பொங்கி எழுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் மெட்ராஸ் கஃபே போன்ற படங்கள் வெளிப்புறத் தோலில் ஏற்படும் கட்டிகள் போன்றவை. அந்தக் கட்டிகளின் ஆணிவேர் இந்திய அரசின் கொள்கைகளில் 'புலி எதிர்ப்பு' என்ற நோயாகப் பரவியிருக்கிறது. அதை ஊடகங்களும், ஜெயலலிதா போன்ற தமிழகப் பிரதிநிதிகளும் இந்திய அளவில் வளர்க்கும் போதெல்லாம் அமைதியாய் வேடிக்கைப் பார்த்துவிட்டு, இன்று கட்டி மீது கோபப்பட்டால் நியாயமா? கட்டி ஏற்படும் இடங்களில் மட்டும் கையை அழுந்தப் பிடித்து அமுக்கிக்கொண்டால் மட்டும், தடை செய்துவிட்டால் மட்டும் நோய் தீர்ந்து விடுமா? 

ஒரே ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். ஜான் ஆபிரகாம், "உங்கள் சட்டசபையில் தானே புலிகளுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினீர்கள்? இப்போது ஏன் என் படத்தைக் கண்டிக்கிறீர்கள்?" எனக் கேட்டால் இப்போது போராடும் போராளிகள் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்? ஆக மெட்ராஸ் கஃபே படத்திற்குத் தடை கோருவது சரியா, தவறா என்பதை விட, 'தமிழர் நலன்' என்ற கோஷத்தோடு தடை கோருவதற்கான தார்மீக உரிமையே தமிழர்கள் நமக்குக் கிடையாது என்பதுதான் நகைமுரண்.

இது ஒரு கோணம். இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது இதுபோன்ற போராட்டங்கள் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதுதான் உண்மை. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைத் தூற்றி எடுத்தப் படத்தை நாம் தடை செய்யக்கோரினால், நாளை ஒருவேளை நாம் புலிகளை புகழ்ந்து ஒரு படம் எடுக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள், அதற்கு தடை போடுவது இந்திய அரசிற்கு மிகவும் சுலபம் ஆகிவிடுமே!! ஏற்கனவே காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களுக்கே நாம் எவ்வளவு தடைகளை, எவ்வளவு வெட்டுக்களைச் சந்தித்து வெளியிட வேண்டியிருக்கிறது?

ஆக இந்தப் போராட்டங்களையெல்லாம் காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களுக்கு அனுமதி வாங்கவேண்டி செய்தோமானால் நமக்குப் பயனுண்டு. இந்திய அரசு அனுமதி அளிக்கும் விசயங்களுக்குத் தடை போடப் போராடுவதைக் காட்டிலும், இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் விசயங்களுக்கு அனுமதி வேண்டிப் போராடுவதே நியாயமான, ஆக்கபூர்வமான போராட்டமாக இருக்கும். மெட்ராஸ் கஃபே போன்ற படைப்புகளுக்கு படைப்புகளின் மூலமாகவே பதில் சொல்ல முடியாததுதான் நமது பிரச்சினையேயொழிய மெட்ராஸ் கஃபே போன்ற படங்கள் அல்ல.

இன்னும் சொல்லப் போனால் மெட்ராஸ் கஃபே போன்ற படங்கள் எண்ணிக்கையில் நிறைய வந்தால் புலிகள் குறித்த விவாதங்கள் இந்திய அளவில் பெருகும், புலிகள் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லவும், விளக்கவும் வாய்ப்புகள் பெருகும். ஆனால் தமிழ்தேசியவாதிகளின் எண்ணமெல்லாம் குறுகிய, தற்காலிக வெற்றியான 'தடை செய்வதில்' மட்டுந்தான் இருக்கிறதேயொழிய நிரந்தரமாக இந்தியாவிற்குப் புலிகள் மேல், தனி ஈழத்தின் மேல் இருக்கும் கருத்தை மாற்றக் கூடியதாய் இல்லை. அதைப் பற்றி எந்த தமிழ்தேசியவாதியும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. தடை கோரி போராட்டங்கள் செய்து படத்திற்கு 'விளம்பரம்' தேடுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். இதில் மற்றொரு நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் மெட்ராஸ் கஃபே, டாம் 999 ஆகிய படங்கள் தமிழருக்கு எதிரான படங்களென்றால் அதை தமிழகத்தில் மட்டும் தடை செய்து என்ன பயன்? தமிழர்கள் அதைப் பார்த்து தமிழர்களுக்கு எதிரான கண்ணோட்டத்திற்கு மாறப் போகிறார்களா என்ன? ஒன்று இந்திய அளவில் தடை செய்யக் கோரவேண்டும். அது என்றுமே சாத்தியமில்லாத பட்சத்தில், அதுபோன்ற படங்களுக்கு நம் இயக்குனர்களை வைத்து பதில் சொல்லும் வகையில் தரமான படங்களை எடுக்க வேண்டும். ஆனால் அதில் எல்லாம் போராளி வேடம் போடும் நம் இயக்குனர்களுக்கு ஆர்வம் ஏற்படாது. அவர்களின் எண்ணமெல்லாம் இங்கே இருக்கும் ஒரு நாலு பேரிடம் தமிழ்ப்போராளி என்ற பட்டத்தைப் பெற்று குண்டுச் சட்டிக்குள்ளேயே சொகுசாக வலம் வரவேண்டும் என்பதாக மட்டுமே இருக்கிறது! இவர்கள் தடை கோரி விளம்பரப்படுத்திவிடும் படங்களை தமிழ் ஆட்சியாளர்களான கலைஞரும், ஜெயலலிதாவும் "போய்த் தொலைகிறார்கள்" என தமிழகத்தில் தடை செய்துவிடுகிறார்கள். ஆனால் இவர்கள் கொடுக்கும் விளம்பரத்தில் அந்தப் படங்கள் இந்தியாவெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடுவதுதான் வரலாறு.


ஒரு சிறிய உதாரணம் உண்டு. இயேசுவுக்கு வம்சாவழி இருப்பதாக கிறித்தவ மதத்திற்கே எதிரான ஒரு கருத்தைச் சொன்ன படம் டாவின்சி கோட். அந்தப் படத்திற்கு கத்தோலிக்கர்கள் மிக அதிகமாக இருக்கும் அமெரிக்காவிலே கூட தடை போடப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் வாடிகன் சிட்டி கூட உலகக் கத்தோலிக்கர்கள் எல்லாம் அப்படத்தைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டதேயொழிய படத்தைத் தடை செய்யக் கோரவில்லை. ஆனால் தமிழக கிறித்தவ அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று கலைஞர் அப்படத்தைத் தடை செய்தார். இப்போது இங்கே டாவின்சி கோட் பார்க்காதவர்கள் யார்? தடையால் என்ன பலன் கிடைத்தது? தடை செய்யப்பட்டதால் மாய்ந்து மாய்ந்து எல்லோரும் பார்த்தார்கள். என்ன ஒன்று, தயாரிப்பாளருக்குப் போக வேண்டிய பணம், திருட்டு டிவிடிக்காரர்களுக்குப் போனது!! இதுபோல ஒரு குறிப்பிட்ட குழுவினர் தடை கோருவதும் அவர்களின் தற்காலிக ஈகோவை அடக்கும் பொருட்டு தடை செய்வதும் தவறான முன்னுதாரணங்கள். பயனும் கிடையாது, எதிர்விளைவு இன்னும் மோசமாகவும் இருக்கும்.

ஜான் ஆபிரகாம்கள் இப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கும்போது நிஜ வாழ்க்கையிலும் ஊடகத்தின் புண்ணியத்தில் ஹீரோக்கள் ஆகிவிடுகிறார்கள். ஆக தவறான படைப்புகளையும் விளம்பரப்படுத்தி, தவறான படைப்பாளிகளையும் விளம்பரப்படுத்தும் same side goal வேலையைத் தான் நம் ஊர் தமிழ்ப்போராளிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எந்தக் கருத்தையுமே யாருமே சொல்ல முழு உரிமை இருக்கிறது. நமக்கெதிராக ஒரு கருத்தை ஒருவன் வைக்கிறான், அல்லது விஷமப் பிரச்சாரம் செய்கிறானென்றால் அதைக் கருத்தால் தான் முறியடிக்க முடியும். இதே போக்கில் தடை மட்டுமே தீர்வு எனப் போய்க் கொண்டிருந்தால் இன்னும் ஒரு 20, 30 ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான கருத்தியலைப் பேசும் படங்களும், புத்தகங்களும் ஏராளமான அளவில் பெருகியிருக்கும். நம் கருத்தைப் பதிந்த படங்களோ, புத்தகங்களோ எதுவுமே இருக்காது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம், அது மனுதர்மத்தின் விசமப் பிரச்சாரத்திற்கு எதிராக எடுத்துக்கொண்ட ஆக்கபூர்வமான போராட்ட முறைகள். திராவிடக் கருத்தியல் பேசும் படங்கள்தான் எத்தனை, படைப்புக்கள் தான் எத்தனை! அண்ணாவின் ஆரிய மாயை புத்தகத்தை ஆரியர்கள் தடை செய்தார்கள். பின் தடை நீக்கப்பட்டு இன்று எங்கும் வியாபித்திருக்கிறது. ஆக தடை என்பது தற்காலிகமாக நம் ஈகோவை சமாதானப்படுத்துவதாக இருக்குமேயொழிய நிரந்தரத் தீர்வு கிடையாது. 

நம் தமிழர்களிடையே கூட ஈழம் குறித்த பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. ஈழத்தமிழர்கள் அனைவருமே தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்ற மிகத்தவறான நம்பிக்கையில் தான் பலர் ஈழ எதிர்ப்பு அரசியலையே முன்வைக்கிறார்கள். அவ்வளவு ஏன்? அமைதிப்படை அட்டூழியத்தையெல்லாம் மறந்து, ராஜீவ் கொலைக்கு வருந்தியவர்கள் தானே நம் தமிழர்கள். 22 ஆண்டுகள் கழித்து எல்லாம் முடிந்துபோய் புல் முளைத்தப் பின், அதாவது இப்போதுதானே நம் ஆட்களில் பலருக்கு உணர்வே வந்திருக்கிறது. ஆக நாம் 22 ஆண்டுகளாக தூங்கிய தூக்கத்தில் நிகழ்ந்த தவறுகளைத் திருத்தி, இந்தியாவின், இந்தியர்களின் ஈழம் குறித்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டுமானால் வேரில் இருந்தே மாற்ற வேண்டும். மாற்றினாலேயொழிய காற்றுக்கென்ன வேலி போன்ற ஈழம் சார்ந்த படங்களுக்கு தடைகளும், வெட்டுக்களும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்கான பரப்புரைகளும், படைப்புகளும் தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எத்தனை எத்தனை தேவை? தொடர்ந்து ஈழசார்பு திரைப்படங்களை எடுத்துக்கொண்டே இருந்தால் எத்தனை படங்களை தடை செய்வார்கள், எத்தனைப் படங்களை வெட்டுவார்கள்? தடை செய்தால் கூட, "மெட்ராஸ் கஃபே போன்ற ஈழ விரோதப் படங்களை வெளியிட்டீர்களே, ஈழ ஆதரவு நிலைப்பாடு எடுக்க எங்களுக்கும் உரிமை இருக்கிறது", என நாம் ஒரு தீர்க்கமான வாதத்தையும் முன்வைக்கலாம். ஆனால் இதுபோன்ற செயல்களில் ஆர்வமே காட்டாமல் ஜான் ஆபிரகாம்களிடம் கோபம் கொள்வது சினிமாவில் 'சிலருக்கு' வேண்டுமானால் பயன் தருமேயொழிய ஈழத்துக்கோ, இந்திய-ஈழ உறவிற்கோ எந்தப் பயனும் தராது. மாறாகத் தமிழர்கள் என்றாலே ஆக்கப்பூர்வமாய் எதுவுமே செய்யாமல் வெறுமனே தடை கோரும் கூட்டம் என்ற எதிர்மறை விளைவையே தரும்.

சாத்தான் படைகள்: 

The Satanic Forces என்ற இந்திய அரசால் தடை செய்யப்பட்ட புத்தகம் (தொகுப்பு) இந்திய அமைதிப்படையை சாத்தானின் படையாக வர்ணிக்கிறது. அது செய்த அட்டூழியங்களை மிகவும் நடுநிலையாக துகிலுரிக்கிறது. அமைதிப்படை, இந்திய அரசு, ராஜீவ், புலிகள், திமுகவின் அமைதிப்படைக்கெதிரான செயல்பாடுகள் என ஈழத்தை பல கோணத்தில் அலசும் இந்தத் தொகுப்பு சர்ச்சைக்குரிய விசயங்களையெல்லாம் சரியான கோணத்தில் காண உதவும் என்பதில் மாற்றுக்கருத்தே யாருக்கும் இருக்க முடியாது. இந்திய அரசின் ஒட்டுமொத்த கோபத்திற்கும், எதிர்ப்புக்கும் ஆளான இந்த ஆதாரக் தொகுப்பை மிகவும் தைரியமாக 23 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் வெளியிட்டவர் தமிழினி பதிப்பகத்தின் தமிழினி வசந்தகுமார் என்பவர். அமெரிக்காவிலோ வேறு எங்கோ ஒருவர் இப்படியானச் செயலைச் செய்திருந்தால் புலிட்சர் பரிசே கிடைத்திருக்கும். ஆனால் தமிழுணர்வு, ஈழ உணர்வு என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் நம் ஊரில் இவரை யாரென்றே இப்போதைய தமிழ்தேசியவாதிகள் உட்பட பலருக்கும் தெரியாது என்பதுதான் நகைமுரண்.


ஆயிரக்கணக்கான மெட்ராஸ் கஃபேக்களை கருத்தால் எதிர்க்கும் அளவிற்கு சரக்கு உள்ள, ஆதாரங்கள் உள்ள 'சாத்தான் படை' புத்தகம் சிலர் கைகளில் மட்டுமே தவழும் மின்புத்தகமாக வலம் வந்து கொண்டிருப்பதுதான் சாபக்கேடு!  சமீபத்தில் ஒரு ஈழத்தமிழருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் பல தமிழ்நாட்டுத் தமிழ்தேசியக் குழுக்களுடனும், கட்சிகளுடனும் பேசியும்கூட இங்கு யாருமே அதைப் பிரசுரிக்கும் தைரியமின்றி ஒதுங்கிவிட்டார்கள் என வேதனையுடன் கூறினார். தெரிந்ததுதானே! அவர்கள் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள், அவர்கள் ஜான் ஆபிரகாம்களுடன் வெற்றுச் சண்டையில் பிசியாக இருக்கிறார்கள்!நன்றி உயிர்மை

Tuesday, September 3, 2013

குஜராத்திகள்,காந்தியார், இடி அமீன் மற்றும் கிரிக்கெட் - டான் அசோக்


.
 2006 அல்லது 2007ஆம் ஆண்டு என நினைக்கிறேன். தமிழர்களுக்கு முகநூல் கிரேக்க, லத்தீன் மொழிகளைப் போல புரியாதிருந்த காலம் அது. அடியேன் உட்பட அனைவருமே தங்கள் போராட்டங்களை ஆர்குட்டில் வெறிகொண்டு மேற்கொண்டிருந்த கற்காலம். அப்போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பற்றி சில விசயங்களை எழுதியிருந்தேன். அதில் வழக்கம்போல அன்பழகன், எழிலரசன் போன்ற அழகுத்தமிழ் பெயர்கொண்ட தமிழர்கள் பலர் என்னிடம் சண்டைக்கு வந்தார்கள். ஏன் பெயர்களைக் குறிப்பிடுகிறேன் என்றால் தமிழ்ப்பெயர்களையும், தமிழ்ப்பற்றுள்ள பெற்றோரைப் பெற்றிருந்தாலும் பல தமிழர்கள், பார்த்தசாரதிகளின், சுப்பிரமணிய ஸ்வாமிகளின், ராம்களின் கையாட்களாகவே வாழ்க்கைப்பாதையில் மாற்றப்பட்டு விடுகிறார்கள். இப்படித் தமிழுக்கு எதிராக பதப்படுத்தப்பட்டுவிட்ட இந்த தமிழ் மூளைகளை நம்மிடம் மோதவிட்டுவிட்டு எட்டநின்று  வேடிக்கைப் பார்ப்பதுதானே 'எதிரிகளின்' வழமை!   அதுபோல எழிலரசன் என்ற ஒரு நண்பர் அந்த இழையிலே என்னிடம் இந்தி திணிப்பிற்கு ஆதரவாக, என் பதிவிற்கு எதிராக ஆக்கிரோசமாக மோதினார். வழமையான நமது கருத்துக்களையெல்லாம் அவரிடம் நிதானமாகவும், சில நேரங்களிலே விரக்தி நிறைந்த கோபத்துடன் எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது, அவரால் பதிலே சொல்ல முடியாத ஒரு கட்டம் வந்துவிட்டது. திணறிய அந்த நண்பர், திடீரென ஒரு கேள்வியைத் தூக்கி என் தலையில் போட்டார். "ஏன்டா. உங்களுக்கெல்லாம் இந்திக்காரன் வாங்கி கொடுத்த சுதந்திரம் வேணும், ஆனா இந்தி வேணாமா?" என்ற மிகப்பயங்கரமான அணுஆயுதக் கேள்விதான் அது! காந்தி என்ற குஜராத்தியைத்தான் இந்திக்காரன் எனக் குறிப்பிடுகிறார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற மொழிக்காரர்களையும், அவர்களின் பங்கையும் பலர் அவருக்கு வகுப்பெடுத்தபின் காணாது போய்விட்டார்! இப்போது விசயத்திற்கு வருகிறேன்.

இந்தியை கொஞ்சம் ஒத்திருக்கும் மொழியான குஜராத்தியைப் பேசும் குஜராத்திகளை நம் ஆட்கள் பெரும்பாலும் இந்திக்காரர்கள் என்றே வகைப்படுத்துவார்கள். வடநாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் பேசுகிறவர்களையெல்லாம் கூடத் தமிழர்கள் எனப் பலர் வகைப்படுத்துவதைப் போல. வல்லபாய் பட்டேல் போன்ற குஜராத்திகள் கூட இந்தி வெறியர்களாய் இருப்பதை வரலாறு கண்டிருக்கிறது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள குஜராத்திகளின் எண்ணமோ வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் இடி அமீன்! ஏன் என பின்னர் சொல்கிறேன்.

கிரிக்கெட் விதிகளை வகுப்பது இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் (http://www.lords.org) நிர்வாகம். அந்த தளத்தில் கிரிக்கெட் குறித்த சட்டங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயத்தில் பிறமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. அம்மொழிபெயர்ப்புகளில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு இந்திய துணைக்கண்ட மொழி 'குஜராத்தி'! இந்தி கிடையாது குஜராத்தி! இங்கிலாந்தில் வாழும் குஜராத்திய மக்களின் மொழிப்பற்றின் வெளிப்பாடு இது! சரி! வல்லபாய் பட்டேலிடம் இருந்த இந்தி தேசிய வெறி ஏன் இங்கிலாந்து குஜராத்திகளிடம் இல்லை?
ஏன் அவர்கள் இந்தியில் மொழிபெயர்க்காமல், சொற்ப அளவிலேயே பேசப்படும் குஜராத்தியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்?

இங்குதான் இடிஅமீன் வருகிறார். 1972ல் உகாண்டாவில் இருந்த ஆசியர்களை 90 நாட்களில் வெளியேறச் சொல்லி உத்தரவு போட்டார் இடி அமீன். இதில் பெரும்பான்மை ஆசியர்கள் குஜராத்திகள். இந்த உத்தரவை பிறப்பித்தபின் இடி அமீனுக்கு இந்தியாவிடம் இருந்து ஒரு கண்டனம் வந்தது. உடனே உத்தரவை திரும்பப் பெறாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று! ஆனால் இடி அமீன் வழக்கம்போல் அந்தக் கண்டனத்தை மென்று தின்று ஜீரணித்து விட்டார். அதன்பின் இந்தியாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. (இப்போது தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கைக்கு வெற்றுக் கண்டனங்கள் கொடுத்துவிட்டு அமைதியாய் இருப்பதைப் போல) இந்தியா அவர்களை மறைமுகமாக disown செய்தது அங்கிருந்த குஜராத்திகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வெறுப்பையும், மனக்கசப்பையும் அளித்தது. ஆபத்பாந்தவனாக அப்போது அவர்களுக்கு உதவ வந்தது இங்கிலாந்து. இப்போது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய வம்சாவளியினரின் ஏனையோர் உகாண்டாவில் இருந்து போன குஜராத்திகள் தான். ஆக, இப்போது புரிந்திருக்கும் ஏன் இந்தியில் மொழிபெயர்க்காமல், குஜராத்தியில் மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்று!

இந்தியாவில் இருக்கும் குஜராத்திகளுக்கும் இதில் எக்கச்சக்க வருத்தமுண்டு. அவர்கள் விழுந்து விழுந்து மோடியை விளம்பரப்படுத்துவதில் இந்துத்துவ சிந்தனையை விட "நம் ஆள்" என்ற சிந்தனையே அதிகமிருப்பதாகப் படுகிறது. மோடியும் குஜராத்தி வியாபாரிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளையெல்லாம் அள்ளி வழங்குவதையும் காணலாம். நம் ஆட்கள் தொண்டை புடைக்க உணர்வு பேசுவார்கள். ஆனால் ஆக்கபூர்வ செயல்பாடு எனப் பார்த்தால் எதுவுமே இருக்காது! குஜராத்திகளோ, மலையாளிகளோ மேடை மேடையாக முழங்க மாட்டார்கள். ஆனால் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும்.  அவர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் இது ஒன்று.

ஏன் நம் ஆட்களுக்கு இந்த உணர்வெல்லாம் வருவதே இல்லை? குஜராத்திகளை disown செய்தபோதாவது அவர்கள் உகாண்டாவில் இருந்தார்கள். ஆனால் நம் தமிழ் மீனவர்களை இந்தியாவில் இருக்கும் போதே இந்தியா disown செய்து கொண்டிருப்பதை ஏன் நம்மில் பலர் கண்டுகொள்வதேயில்லை? கிரிக்கெட் என்ற பலகோடி உலக மக்களின் விருப்ப விளையாட்டின் விதிகளை தமிழில் மொழிபெயர்க்க அங்கிருக்கும் தமிழர்கள் யாருமே முயலாதது தான் வேதனையான விசயம்!

Related Posts Plugin for WordPress, Blogger...