Monday, August 5, 2013

சேரன்களும், பொதுச்சமூகமும், காதல்களும். மூன்றாவது கோணம்.

வீட்டில் எதாவது முக்கியமான நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் அல்லது எதாவது மிக முக்கியமான விஷயம் குறித்து விவாதித்துக் கொண்டிருப்போம். ஆனால் வெளியில் தீடீரென பலத்த சத்தம், யாரோ யாருடனோ சண்டை போடுவதைப் போல கேட்டுவிட்டால் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு பால்கனிக்கு ஓடிச் சென்று கூர்ந்து கவனிப்போம். குறிப்பாக நம் அம்மாக்களுக்கும், பாட்டிகளுக்கும் இந்தப் புத்தி நிறையவே இருக்கும். அந்த சண்டையை கூர்ந்து கேட்டு எந்தக் குரல் யாருடையது என ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு கண்டும் பிடிப்பார்கள். நாம் இடையே பேசினால் "கொஞ்ச நேரம் அமைதியா இரேன்" என நம்மை விரட்டுவார்கள். அப்பாக்களும், தாத்தாக்களும் பின்னர் உள்ளே வந்த அம்மாவிடமோ பாட்டியிடமோ விசயத்தைக் கேட்டு தெரிந்துகொண்டு 'கருத்து' சொல்வார்கள்.  இப்படி அடுத்தவீட்டுப் பிரச்சினைகளை ஒட்டுக்கேட்க, வேடிக்கைப் பார்க்க பிரம்மப்பிரயத்தனம் செய்துகொண்டிருந்த நமக்கு தொழில்நுட்பம் கொடுத்திருக்கும் அருட்கொடைதான் முகநூல் போன்ற சமூக வலைதளங்களும், அடுத்த வீட்டுப் பிரச்சினையை நம் வரவேற்பறைக்கே கொண்டு வந்து கொடுக்கும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளும். இப்படி ஒருபுறம் என்றால் சேரன் போன்ற ஆட்கள் பிரஸ் மீட் எல்லாம் வைத்து, "என் குடும்ப விவாகாரத்தில் உங்களுக்கு என்ன வேலை?" எனக் கேட்காமல், சொந்தக் கதையை எல்லாம் ஊருக்கு உரக்கச் சொல்கிறார்கள்.

இந்தப் பதிவு சேரனைப் பற்றியதல்ல. தமிழகத்தில் மகள்களின், மகன்களின் காதலை அழுகையுடன் எதிர்கொள்ளும் தகப்பன்களைப் பற்றியது. சாதி, மதம் பிரிவினைகளையெல்லாம் மீறி இதில் இன்னொரு `விஷயமும் இருக்கிறது. அது இன்னும் கொஞ்சம் சிக்கலானது!  அது "மகளின் காதலன் கெட்டவனாய் இருக்கிறானே!!" என்பது.
சரி. இருந்துவிட்டுப் போகிறான். ஒரு வயது வந்த பெண் ஒரு வயது வந்த ஆணைக் காதலிக்கிறாள். பிடித்தால் சேர்ந்து வாழுகிறார்கள். பிடிக்கவில்லையென்றால் பிரிந்து போகப் போகிறார்கள். இவ்வளவுதானே! இதற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை? இதற்கு ஏன் தகப்பன்கள் இப்படி அழுகிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? தவறான முடிவெடுப்பதென்பது மனித இயல்பு. இதற்கு திருமணம் மட்டுமென்ன விதிவிலக்கா? ஆனால் மற்ற எல்லாத் தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கு வழிவகுக்கும் சமூகம், திருத்திக்கொண்டால் பாராட்டும் சமூகம், திருமணம் தவறாக அமைந்துவிட்டால் கிட்டத்தட்ட அதை திருத்திக்கொள்ள முடியாத தவறாகவே பார்க்கிறது, ஏன் பெற்றோர் பார்த்து மணமுடிக்கும் மணமக்கள் எல்லாம் பிரச்சினையே இன்றி வாழ்கிறார்களா, அல்லது அத்திருமணங்களில் நல்லவன் மட்டும்தான் மணமகனாக அமைகிறானா?

நம் ஊரில் சேருவது கூட சுலபம். ஆனால் பிடிக்காத கணவனை பிரிந்து போவதுதற்குத் தான் இல்லாத பிரச்சினைகளை, வசவுகளை, அவதூறுகளை எல்லாம் சந்திக்க வேண்டும்.  தவறான காதலனுடன் போவதாய் நமக்கு தோன்றினால் என்ன? நாளை அவன் கெட்டவன் என அவளுக்குத் தெரிந்தால் அவளாகவே பிரிந்து போகிறாள் என்ற ஒரு சாதாரண விசயத்தை தமிழ்ச்சமூக தகப்பன்களும் சரி, சமூகமும் சரி அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. ஒருமுறை ஒரு பெண் ஒருவனை திருமணம் செய்துவிட்டால் அவ்வளவுதான். அவள் வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அதுதான் என்ற அளவில்தான் திருமணம் மீதான நம் நடுத்தட்டு சமூகத்தின் பார்வை இருக்கிறது. கற்பு, தாலி, திருமணம் போன்ற பல தேவையில்லாத சடங்கு ரீதியிலான விசயங்களின் மீதான நம்பிக்கையும், பயமும் திருமண முறிவை விரும்பத்தகாத, தீண்டத்தகாத ஒரு விசயமாய் நம் சமூகம் வைத்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு பெண் விவாகரத்து பெற்றுவிட்டால், கணவனிடமிருந்து பிரிந்துவிட்டால் நம் சமூகம் அவள் மீது கொண்ட பார்வை எப்படிப்பட்டதாக இருக்கிறது என எண்ணிப் பாருங்கள். ஏற்கனவே ஒருவனுடன் வாழ்ந்து பிரிந்தவள் தானே என பெரும்பாலான ஆண்கள் படுக்கயறைக்கு அழைப்பார்கள், பெண்களோ அவதூறு செய்வார்கள்., குத்திக் காட்டுவார்கள், குடைவார்கள். மீண்டும் காதலில் விழுவதோ, திருமணம் செய்துகொள்வதோ சராசரியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிட்டத்தட்ட முடியவே முடியாத காரியும். ஒருவேளை அப்படி காதலித்தாலும் சமூகத்திற்குப் பயந்து பெரும்பாலும் ஓடித்தான் போகிறார்கள்.

ஒருவரை பிடிக்காத பட்சத்தில் அவரிடமிருந்து பிரிந்துவரும் மிகச்சாதாரண விசயத்தை எதோ கொலைக்குற்றம் போலத்தான் நம் சமூகம் பார்க்கிறது. இப்படியான ஒரு மோசமான சூழலில் தவறானவனை தன் மகள் மணக்கிறாள் என்பதைவிட அவள் திரும்பி வரும்போது சமூகம் அவளை எப்படிப் பார்க்கும் என்ற அச்சமே தகப்பன்களுக்குப் பெரும்பாலும் மேலோங்கியிருப்பதால் அதை எப்படியேனும் தடுக்க நினைக்கிறார்கள். ஒருவனைப் பிடிக்காமல் பிரியும் பெண்ணை நோக்கி, "வாழ்க்கையை இப்படி கெடுத்துக்கிட்டியே" எனச் சொல்லிச் சொல்லியே அவள் வாழ்க்கையையே முடித்துவைக்கும் செயலைத் தான் சமூகம் செய்து கொண்டிருக்கிறது. அவள் மீள நினைத்து புதிய வாழ்க்கையை துவங்க நினைத்தால் கூட இதுபோன்ற முட்டாள்த்தனமான பேச்சுக்களின் மூலம் அதை தடை செய்கிறது நம் சமூகம். தெரியாமல்தான் கேட்கிறேன், கணவனை பிரிவதற்கும் வாழ்க்கை கெடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நம் வாழ்க்கை கெடுவதென்பது நாம் செத்தால் மட்டும்தானே நடக்கும்? திருமணம் என்ற 'சடங்கு' எப்படி ஒருவரின் வாழ்க்கையையே தீர்மானிக்கக் கூடியதாய் இருக்க முடியும்?

காதல், திருமணம் எல்லாம் தனிப்பட்ட நபர்களின் விசயம். அதில் குடும்பங்கள் மூன்றாம் தரப்பு என்றால் சமூகம் முப்பதாம் தரப்பு. ஆனால் நம் ஊர் திருமணங்களில் குடும்பத்தின், சமூகத்தின் மூக்கு நுழைப்பு என்பது மிகப்பெரும் அளவில் இருக்கிறது. தனிப்பட்ட பிரச்சினைகளை சமூகப் பிரச்சினை ஆக்கும் அவலமும் இங்கு அதிகம். இதில் பார்ப்பன சமூக மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. தன் மகளோ, மகனோ காதலித்தால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். மிஞ்சிப்போனால் அறிவுரை சொல்வார்களேயொழிய மற்ற சமூகத்தவர்களைப் போல ஊரைக் கூட்டி ஓலமிடமாட்டார்கள். மணமுறிவு என்றாலும் அப்படித்தான். அது அந்த தனிநபர்களின் விசயம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

ஆக திருமணமும் சரி, திருமண முறிவும் சரி அது இருதனிநபர்களின் பிரச்சினை. அதில் அறிவுரை கொடுக்கும் அளவிற்கு மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறதேயொழிய, அதை தடுக்கவோ, அவதூறு செய்யவோ உரிமை இல்லை என்பதை குடும்பங்களும் சரி, சமூகமும் சரி புரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் காதலை, திருமணத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை எவ்வளவு உள்ளதோ அதே அளவிற்கு நாளை அதை முறித்துக்கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு இருக்கிறதென்பதை நாம் உணர வேண்டும். இதெல்லாம் நடந்தால் தாமினிகளின், சேரன்களின், சந்துருக்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் சமூகப் பிரச்சினையாகாது. திருமணம் போன்ற சடங்குகளுக்கு நம் ஊர் கொடுக்கும் நேரமும், விலையும், முக்கியத்துவமும் மிக அதிகம். காதல் போன்ற இயற்கையான விசயங்களை அதன் போக்கிலேயே விட்டால் அதனுடைய வழியை அதுவே தேடிக்கொள்ளும். சமூகம் மூக்கை நுழைக்கும் போதுதான் பிரச்சினையே!  இன்னும் சொல்லப்போனால் ஒரு தனிமனிதனின் சிந்தனையை சமூகம் பெருமளவில்  கட்டுப்படுத்துகிறது. இதைச் செய்தால் என்ன சொல்வார்கள், இதைச் செய்தால் நமக்கு கவுரவக் குறைவோ, இந்த சாதியில் பெண்ணெடுத்தால் சமூகத்தில் சேர்ப்பார்களா போன்ற ஏராளமான தேவையில்லாக விசயங்கள் ஒரு மனிதனின் மூளையில் ஒரு விசயத்தை செய்வதற்கு முன் ஓடுகிறது.  முதலில் வாயை மூடிக்கொண்டு சமூகம் தன் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அடுத்தவன் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே ஒவ்வொரு தனி மனிதனுடைய முடிவும் பலமடங்கு சரியானதாக மாறிவிடும்.   அதுதான் சேரனுக்கும் சரி, சமூகத்திற்கு சரி, நல்லது! 

10 comments:

ரமேஷ் வெங்கடபதி said...

நல்லதொரு அலசல் !

இன்னும் சில பத்தாண்டுகள் தேவை...சமூகக் தளைகளில் இருந்து மெல்ல விடுபட...!

அதுவரை இத்தகைய உரசல்கள் தொடரும்!

Christ Mousa said...

அசோக் மிக நுணுக்கமாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.மேலும் பதிவர் அருள் மாதிரி மற்றும் அவர்களது கூட்டமும் மனுஷனா மாறினாலே போதும் .பாதி பிரச்சினை முடிந்து விடும்.

தருமபுரி இளவரசன் மாமனார் பாவம் அருளையும் அவரது கூட்டதுயும் சும்மா விடாது.

Christ Mousa said...

அசோக் மிக நுணுக்கமாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.மேலும் பதிவர் அருள் மாதிரி மற்றும் அவர்களது கூட்டமும் மனுஷனா மாறினாலே போதும் .பாதி பிரச்சினை முடிந்து விடும்.

தருமபுரி இளவரசன் மாமனார் பாவம் அருளையும் அவரது கூட்டதுயும் சும்மா விடாது.

karthikeyan said...

காதல், திருமணம் எல்லாம் தனிப்பட்ட நபர்களின் விசயம். அதில் குடும்பங்கள் மூன்றாம் தரப்பு என்றால் சமூகம் முப்பதாம் தரப்பு. well said sir!

karthikeyan said...

காதல், திருமணம் எல்லாம் தனிப்பட்ட நபர்களின் விசயம். அதில் குடும்பங்கள் மூன்றாம் தரப்பு என்றால் சமூகம் முப்பதாம் தரப்பு

தமிழானவன் said...

சமூகம் என்னும் மூதேவிக்காகத்தான் கௌரவம், மானம் என்று தனிமனித துணை தேர்ந்தெடுப்புகள் கூட பாதிக்கப்படுகிறது, மாற்றப்படுகிறது.

நல்லா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க. இது மாதிரியான கட்டுரைகளை எழுதும் நீங்கள் "ஃபிகரை கரெக்ட் செய்வது எப்படி?" என்று பெண்களைக் கீழ்த்தரமாகக் கருதும் பொறுக்கிகளுக்கு சொறிந்து விடும் அபத்தமான கட்டுரைகளை எழுதாமலிருப்பது நல்லது.

Kanda Swamy said...

சரியான வாதம.ஆனால் பெற்றோர் நிலையிலிருந்து பாருங்கள். இந்த காதல் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என பெற்றோர் சொல்வதை மீறி ஒரு பெண் திருமணம் செய்து,பின் உண்மை உணர்ந்து அவனை விட்டுவிட்டு பிரிந்து வருகிறாள் என் வைத்து கொள்வோம். சமுகம் இழிவாக பார்க்கும். சமுக பார்வைகளை கூட பெற்றோர் அலட்சியி படுத்தலாம். ஆனால் பெற்றோரால் அவளுக்கு மீண்டும்நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க முடியாது.அவளால் இன்னொரு காதலும் பண்ண முடியாது. 18 வயதில் காதலிக்க ஆரமிபித்து, 20 வயதில் எதிர்ப்போடு மனம் செய்து, 25 வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில் வாழாவெட்டியாக இருக்கிறாளே என்ற கவலை பெற்றோருக்கு மட்டுமே இருக்கும்.சமுகத்திக்கு இருக்காது

குலசேகரன் said...

//சமுகம் இழிவாக பார்க்கும். சமுக பார்வைகளை கூட பெற்றோர் அலட்சியி படுத்தலாம். ஆனால் பெற்றோரால் அவளுக்கு மீண்டும்நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க முடியாது.அவளால் இன்னொரு காதலும் பண்ண முடியாது. 18 வயதில் காதலிக்க ஆரமிபித்து, 20 வயதில் எதிர்ப்போடு மனம் செய்து, 25 வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில் வாழாவெட்டியாக இருக்கிறாளே என்ற கவலை பெற்றோருக்கு மட்டுமே இருக்கும்.சமுகத்திக்கு இருக்காது//

மிஸ்டர் கந்தசாமி!

உங்களுக்கு ஒருவகையில் நன்றி சொல்ல வேண்டும். சமூகத்தில் எதைச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென எடுத்துச்சொல்லி விட்டீர்கள்.

அவை:

வாழாவெட்டியாக - அதாவது கணவனால் விரட்டப்பட்டோர்
கணவனை இழந்த இளங்கைம்பெண்கள்.
இன்னொரு மணம் செய்யமுடியாமல் இருத்தல
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில் முடியாமல் போதல்

இவைகள்தான் உங்கள் சொற்கள். இவைகள்தான் நம் சமூகத்தில் உள்ள குறைகள்.

இவற்றைச் சரிசெய்ய நாம் பெண் சுதந்திரத்தைப் பேண வேண்டும். ஆணுக்கு நிகராக அவர்கள் வாழ்க்கையை அவர்களே முடிவு செய்யும்படியும் அவர்கள் விரும்பினால் மட்டுமே பிறர் உதவியை நாடும்படியும் அவர்கள் வாழ் இச்சமூகம் இருக்கவேண்டும். அப்படியில்லாத்தாலே சேரனின் மகன் தன் விருப்பத்தின்படி மணம் செய்ய முடியவில்லை. நீங்களும் அய்யயோ சமூகம் அப்படிப்பார்க்குமே இப்படிப்பார்க்குமே என்றரற்றத் தேவையிருக்காது.

So dear Mr Kandasamy!

Give full liberty to women to think and act for themselves. If you do, they can protect themselves.

When you enjoy that liberty, why do you denty it to them? The answer is: You consider yourself superior to them!

Anonymous said...

சமூகம் போலிக் கட்டமைப்புகளான சாதி, சமய, வசதி, வாய்ப்பு, சொத்து, சுகம் என்பவற்றால் பிணைக்கப்பட்டு இருக்கு. சமூகத்தில் பெரிய பிண்ணாக்கு போல பேசித் திரிவோரின் சுயங்கள் தனக்கு என வந்தவுடன் உடைந்துவிடுகின்றன.. !!! அவ்வளவே ..

நம்பள்கி said...

கந்தசாமி! நான் பெற்றோர் என்ற முறையில் பார்க்கிறேன்; கேட்கிறேன்:

நான் மாப்பிள்ளை பார்த்து பெண்ணுக்கு திருமணம் செய்து,பின் நான் பார்த்த மாப்பிள்ளை சரியில்லை என்ற உண்மை உணர்ந்து என் பெண் அவனை விட்டுவிட்டு பிரிந்து வருகிறாள் என் வைத்து கொள்வோம். அப்பவும் சமுகம் இழிவாக பார்க்கும்.பார்க்காது என்றாலும் என்ன காரணம்? ஏனென்றால் அந்த தப்பை செய்தது நான்-பெற்றோர்!

இப்பவும் பெற்றோரால் அவளுக்கு மீண்டும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க முடியாது.அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண முடியாது. 18 வயதில் நான் திருமணம் செய்து வைத்து, அவளை நன்றாக அனுபவித்து 20 வயதில் அவன் உண்மை சொரூபம் தெரிந்து, 25 வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில் வாழாவெட்டியாக இருந்தால்...அப்ப அந்த கவலை பெற்றோருக்கு மட்டுமே இருக்கும். அப்பாவும் சமுகத்திக்கு இருக்காது.

ஒற்றுமை: இரண்டு வழியிலும் பெண் வாழ்க்கை அவுட்.

ஒரே அல்ப சந்தோசம். பொண்ணு என் சொல்படி ஒரு பேயை கல்யாணம் பண்ணிக்கொண்டாள்; அதே பேயை அவள் பார்த்து கல்யாணம் செய்தால் எனக்கு கோபம்.

I as a parent see the end only. எப்படி பெண் வாழ்க்கை கெட்டாலும் கை தூக்கி விடுவது தகப்பனுக்கு அழகு; யார் அப்படி கெடக் காரணம் என்று பார்ப்பவன் அப்பன் இல்லை!

Related Posts Plugin for WordPress, Blogger...