Wednesday, August 28, 2013

சபாபதி சாகிறார் (சிறுகதை) -டான் அசோக்"எனக்கு இருக்குறது ஹார்ட் அட்டாக் இல்ல. ஹார்ட் ஃபெயிலியர். இப்போ வெறும் 20 சதவிகிதம்தான் என் ஹார்ட் வேலை செய்யிது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு குறைஞ்சு குறைஞ்சு ஒருநாள் மெதுவா நின்னுடும்", கைகளை தன் இதயத்திற்கு அருகில் குவித்து 'லப்..... டப்..' என இதயம் துடிப்பதைப் போன்ற செய்கையுடன் எனக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார் சபாபதி தாத்தா. ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  தாத்தா மரணத்தை விரும்புகிறாரா எனத் தெரியவில்லை, ஆனால் கடந்த சில வருடங்களில் தாத்தா மரணத்திற்கு மிகவும் பழக்கப்பட்டிருந்ததால் அவருக்கு மரணத்தைப் பற்றிய பயம் ஒன்றுமில்லை. பசிக்கின்ற போதெல்லாம் வீட்டில் இருப்பதைத் திருடித் தின்னும் பெருச்சாலியைப் போல, மரணம் அவர் வீட்டில் எங்கோ ஒரு ஓரமாய் ஒளிந்திருந்து பசித்தபோதெல்லாம் யாரையாவது தின்று தீர்த்தது. நாற்பது வயதான அவரது முதல் மகனில் துவங்கி, முப்பத்தி ஐந்து வயதான அவரது இரண்டாவது மகன், முப்பத்தி இரண்டு வயதான மூன்றாவது மகன் என கொஞ்சகால இடைவெளியில் அடுத்தடுத்து அனைவரும் விபத்து, கேன்சர் எனப் பலவகையான மரணங்களுக்குப் பலியானார்கள். இப்படி  அனைவரும் போய்விட, இடையில் பிறந்த என் அப்பா மட்டும்தான் தாத்தாவின் வாரிசுகளில் மிச்சம். மாதாமாதம் அவருக்கு நெஞ்சுவலி வருவதும் உடனே அவரை ஐசியுவில் சேர்ப்பதும் எங்களுக்கு வழமையான ஒன்றாகிவிட்டது என்றாலும் இந்த முறை மருத்துவர்களின் முகம் சரியில்லை. தாத்தா பிழைக்கமாட்டார் என்று கொண்டு வந்து சேர்ந்த சில மணி நேரங்களிலேயே சொல்லிவிட்டார்கள். நாங்கள் தொலைபேசியில் நெருங்கியவர்களுக்கெல்லாம் விசயத்தை தெரிவித்ததும் சபாபதி தாத்தாவின் நெருங்கிய நண்பர் மேத்யூ மட்டும் நண்பனின் இறுதி நிமிடங்களில் பங்கெடுக்க ஊரில் இருந்து  வந்துகொண்டிருந்தார்.

-------

1940 களில் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பந்தாவாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த பணக்கார மேல்தட்டு இளைஞர்களில் சபாபதி தாத்தாவும் ஒருவர். ஒன்பது குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்த அவரை, ஆண் வாரிசு இல்லாத அவரது தாத்தா முத்துவேல்பிள்ளைக்கு மிகவும் பிடித்திருந்ததால் மகளின் மகனை, தன் மகனாக சுவீகரித்துக் கொண்டார். கோடீசுவர செல்லத் தாத்தா. கண்டிக்க அம்மாச்சியும் கிடையாது. ஒரே பிள்ளை. அப்பா ராமநாதனோ ராவ் பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர். ஆட்டத்திற்கு ஏது அளவு? உருப்படியான விசயங்களைத் தவிர மற்ற எல்லா விசயங்களுக்காகவும் ஊரெங்கும் சுற்றிக்கொண்டிருந்தவருக்கு ஜாடிக்கேத்த மூடியாக பள்ளியில் வந்து சேர்ந்த நண்பர்கள்தான் அவரது உயிர்த் தோழர்களான மேத்யூவும், ஜேம்ஸ்சும். அந்தக் காலப் பள்ளிகளில் பெரும்பாலும் ஒரே ஒரு வாத்தியார்தான். ஶ்ரீமான் முத்துவேல்பிள்ளை கூப்பிட்டவுடன் ஓடி வந்து வீட்டில் நின்று, "ஷொல்லுங்கோண்ணா... பேஷா செஞ்சுட்லாமே!!" எனச் சொல்லும் சீனிவாசய்யர் தான் சபாபதி தாத்தா படித்த பள்ளியின் ஒரே வாத்தியார்! அவரின் தயவால் தான் பள்ளிக்குப் போகவேயில்லையென்றாலும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு எந்தத் தடையுமின்றி முன்னேறினார்கள் சபாபதி தாத்தாவும், அவர் புண்ணியத்தில் அவர் சிநேகிதர்களும்.

இப்படியாக ஒட்டி வளர்ந்த முப்பிறவிகளாகத் திரிந்த இந்த மூவரும் கல்லூரியில் என்ன படிப்பது என்று முடிவு செய்த கதை மிகவும் சுவாரசியமானது. வெள்ளைக்காரர்கள் போல ஸ்டைலாக புகை பைப் உறிஞ்சுவதிலும், கச்சிதமான பாண்ட்-சட்டை, பொவ் டை அணிந்து காரில் உலா வருவதிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவர் சபாபதி தாத்தா. உலகம் துண்டு பீடி அளவிற்கு சுருங்கிவிட்ட இந்தக் காலத்திலும் கூட நம் ஆட்கள் சிகப்புத் தோலுக்கு ஆளாய்ப் பறக்கிறார்கள் எனும் போது 1940களின் இறுதியில் கேட்கவா வேண்டும்? சுற்றியிருப்பவர்கள் எல்லாம் "துரை மாதிரி இருக்கேடா சபாபதி." என ஏற்றிவிட, இப்படி சகலவிதத்திலும் துரை போல இருக்கும் தான் ஆங்கிலமும் முறையாகக் கற்றுவிட்டால் துரையாகவே மாறிவிடலாம் என்று சபாபதி தாத்தா நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆக கல்லூரிக்கு அவர் தேர்ந்தெடுத்தது ஆங்கில இலக்கியம். ஜேம்ஸ் மற்றும் மேத்யூவின் கதையோ வேறு. இருவரும் முழுதாக இருபது நாட்கள் கல்லூரியில் அடுத்து என்ன படிக்கலாமென்று யோசித்தார்கள். வரலாற்றில் துவங்கி தமிழ், ஆங்கிலம், பாண்டிச்சேரியில் பிரஞ்சு இலக்கியம் என வட்டமடித்து இறுதியில் சபாபதி தாத்தாவிடம் வந்து,

"டேய் சபா. நீ என்னடா படிக்கப் போறே?"

"பி.ஏ இங்கிலிஷ்டா. தாத்தாகிட்ட சொன்னேன். ஓகே! கோ அஹெட்னு சொல்லிட்டார்."

"காலேஜ் வாத்தியாரும் உங்க தாத்தாவுக்குத் தெரிஞ்சவராடா சபா?"

"யெஸ்! அஃப் கோர்ஸ்."

"அப்போ நாங்களும் அதையே படிக்கிறோம்டா!"

இப்படித்தான் மூவரும் பி.ஏ ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தார்கள், ஒருவழியாகத் தேர்ந்தார்கள்.
கல்லூரி சென்றும் பள்ளி கதையேதான் தொடர்ந்தது. ஒருநாள் ஸ்பெஷல் ஃபீஸ் என்ற பெயரில் தத்தமது வீடுகளில் காசை வாங்கிக்கொண்டு மூவரும் நாட்டியமாடும் கலாவின் வீட்டுற்கு நடனம் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அங்கே எதேச்சையாக வந்திருந்த யாரோ, "நம்ம சபாபதியை கலா வீட்டுல பாத்தேங்கானும். நம்ம முதலியாரெல்லாம் அமைதியா உக்காந்திட்டிருக்கார். உம்ம பையன் என்னடான்னா பெரிய மைனராட்டம் கலா ஆடுறச்சே பத்து ரூபா தாளா அள்ளி விடுறான் ஓய்... இதெல்லாம் நல்லாவா இருக்கு.." எனப் போட்டுக் கொடுத்துவிட ராவ் பகதூர் தன் கையில் எப்போதுமே வைத்திருக்கும் நடைத்தடியால் மூவரையும் மதுரை தெருக்களில் விரட்டி விரட்டி அடித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையால் முத்துவேல்பிள்ளைக்கும், ராவ் பகதூர் ராமநாதனுக்கும் ஒரு சிறிய போரே துவங்கிவிட்டது. "எனக்கு சுவீகாரம் கொடுத்த பிள்ளையை நீ எப்படி அடிக்கப் போச்சு?", என அவர் கேட்க, "நீர் பிள்ளை வளத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்துதான் ஊரே சிரிக்கிறதே மாமா", என இவர் பேச, பின் வீட்டார் கூடி சபாபாதிக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுங்கள் என சமாதானப்படுத்திய பின்பு தான் பிரச்சினை தீர்ந்தது. சகலவிதமான பிரச்சினைகளுக்கும் நிவாரணி திருமணம்தான் என்ற கொள்கையின்படி ஏதோ குக்கிராமத்தில் பெண்ணெல்லாம் பார்த்து முடித்துவிட்டு திருமண தேதியை மட்டும் சபாபதி தாத்தாவிடம் ஒப்புக்குச் சொன்னார்கள்.  

தஞ்சாவூர் அருகே இருக்கும் வெட்டுவான்குளத்தில் பெண் பார்த்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் எல்லாம் போய் இறங்கிய அடுத்தநாள் பந்தாவாக தன் நண்பர்களுடன் வந்து இறங்கினார் சபாபதி தாத்தா. அவரது திருமணத்திற்கு முந்தைய நாளில் நடந்த ஒரு கூத்தை தாத்தா இதுவரை ஒரு 200 முறையேனும் எங்களிடம் சொல்லியிருக்கிறார். தாத்தா வரும்போதெல்லாம் "தாத்தா. உங்க கல்யாணக் கதை சொல்லுங்களேன்" என்போம். அவரும் சளைக்காமல் கீழுள்ளவாறு சொல்லத் துவங்குவார்,

"கல்யாணத்துக்குப் போயாச்சு. இவ (பாட்டியை) மூஞ்சியத்தான் இவனுங்க பாக்கவே விடலியே. சரி ஊரையாச்சும் பாப்போம்னுட்டு கிளம்பிட்டோம். ஊரெல்லாம் சுத்திட்டு வந்தவுடன ராத்திரி நல்லா மூக்குப் பிடிக்கச் சாப்பாடு. படுத்த கொஞ்ச நேரத்துலயே ஜேம்சுக்கு வயித்தக் கலக்க ஆரம்பிச்சிருச்சு. எங்களுக்கும் கடமுடா தான். வயசான வேலைக்காரன் ஒருத்தன் எங்க ரூம்லயே படுத்திருந்தான். அவனை எழுப்பி, "டாய்.. இங்க கக்கூஸ் எங்கடா இருக்கு?"னு கேட்டோம். அவனுக்கு ஒன்னுமே புரியல. இருங்கய்யா அய்யாகிட்ட கேட்டு வாரேனுட்டு எங்கயோ போனான். கொஞ்ச நேரத்துல அங்க ஒரு குட்டிக்கலவரம்.

"மாப்ள எதோ கேக்குறாரு. மாப்ளைக்கு எதோ வேணுமாம்"னு ஒருத்தன் மாத்தி ஒருத்தர் தகவல் பரப்ப ஆரம்பிச்சுட்டானுங்க. நாங்க இங்க வயித்தப் புடிச்சுகிட்டு நிக்கிறோம். கடைசியா ஒரு பெரியவரு வந்தாரு,

"தம்பி கோச்சுக்காதீங்க. வெள்ளச்சாமிகிட்ட எதோ கக்கூசு வேணுமினு கேட்டீங்களாம். ராப்பொழுதுல வாங்கியார முடியாது. காலேல எத்தனக் கக்கூஸ் வேணும்னு சொன்னீகன்னா டவுன்ல எங்க கிடைக்கும்னு விசாரிச்சு வாங்கியாரச் சொல்றேன்"னு சொன்னாரு. இதக் கேட்டவுடன எங்களுக்கு வந்த கக்கூஸ் நின்றுச்சு. தலைய ஆட்டிட்டு மூணு பேரும் போய் படுத்தோம். எனக்கு தூக்கமெ வரல. இந்த ஊர் ஆம்பிளைகளுக்கே கக்கூஸ்னா என்னானு தெரிலயே, பொம்பளைங்க எப்படி இருப்பாங்க, நமக்கு பாத்ருக்கு பொண்ணு எவ்வளவு பட்டிக்காடா இருப்பாளோனு ஒரே யோசனையும், கலக்கமுமா இருந்தது. கொஞ்ச நேரத்துல மறுபடியும் வயித்த கலக்க ஆரம்பிச்சவுடன எங்கயாவது போய் உக்காந்தா சரினுட்டு சொம்புத் தண்ணிய எடுத்துகிட்டு மூணு பேரும் கிளம்புனோம். ஜேம்ஸ்க்கு வயக்காட்டு ஓரம் உக்கார பயம். பூச்சி, பாம்பு எதாவது கடிச்சிருமோனு.

அதனால, "நீங்க இங்க உக்காருங்கடா, நான் எங்கயாவது மேடு இருக்கானு பாக்குறேன்"னு
சொல்லிட்டு அந்தப் பக்கமா போயிட்டான். ஒருவழியா மூணு பேரும் கொள்ளைக்குப் போயிட்டு வந்து படுத்தோம். அடுத்தநாள் காலேலே ஊரே கலவரமா இருக்கு. பெரிய பிரச்சினை. அங்க அங்க ஆட்கள் ஓடுறாங்க. என்னனு ஒருத்தன்கிட்ட விசாரிச்சோம், "எவனோ அரசமரத்தடி பிள்ளையாராண்ட கொள்ளைக்குப் போயி வச்சிருக்கான் மாப்ளே. கைல கிடைச்சான்னா குடல உருவிருவோம்"னு கத்திக்கிட்டே அவனும் வெறிகொண்டு ஓடுனான். எங்களுக்கு விசயம் புரிஞ்சுருச்சு. நானும் மேத்யூவும் ஜேம்சை முறைச்சோம். எதோ மேடுனு நினைச்சு பிள்ளையார் சிலை இருக்க அரசமரத்தடி மேடைல உக்காந்து கொள்ளைக்கு போயிருக்கு அந்த ஜேம்ஸ் மூதேவி. விசயத்த அப்படியே மறைச்சு, எங்களுக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி அமைதியா இருந்துட்டோம். அப்புறம் அங்கிருந்த நாலு நாளும் பயத்துல ஜேம்ஸ்க்கு கொள்ளைக்கே வரல..." என்று அவர் முடிக்கும் போது வீடே சிரிப்பலையில் அதிர்ந்துகொண்டிருக்கும்.

பாட்டியின் வீடு ராவ்பகதூர் குடும்பத்திற்கு சற்றும் குறைவில்லாத ஜமீன் வீடு என்பதால் ஏகப்பட்ட தடபுடலுடன் திருமணம் முடிந்தது. பிறகு மதுரைக்கே வந்து மீண்டும் தாத்தா ஊர் சுற்றும் படலத்தை துவக்கியிருந்தார். சில காலம் கழித்து சபாபதி தாத்தாவின் அப்பாவும், அம்மாவும் உடல்நலக்குறைவால் இறந்துபோனார்கள். ஆனால் அதைப் பிந்தொடர்ந்து நடந்த அய்யா முத்துவேல்பிள்ளையின் மரணம் ஒரு பெரும் புயலை சபாபதி தாத்தாவின் வாழ்க்கையில் வீசச் செய்தது. சிறுவயதில் இருந்தே முத்துவேல்பிள்ளையின் கணக்குப்பிள்ளையிடம் எதாவது காரணம் சொல்லி கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி தன் அண்ணன், தங்கைகளுக்குக் கொடுப்பது சபாபதி தாத்தாவின் வழக்கம். பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் சபாபதி தாத்தாவிடம்தான் அவரது உடன்பிறந்தவர்கள் வந்து நிற்பார்கள். எத்தனையோ முறை இதற்காக முத்துவேல்பிள்ளையிடம் தாத்தா திட்டு வாங்கியிருக்கிறார். ஏனோ சபாபதி தாத்தாவைப் பிடித்த அளவிற்கு முத்துவேல்ப்பிள்ளைக்கு தனது மற்ற பேரக் குழந்தைகளைப் பிடிக்கவில்லை. "எல்லாருட்டயும் கவனமா இருடா சபா. இப்படி ஏமாந்தவனா இருக்கியே. எனக்கப்புறம் என்னடா செய்யப்போறே!" என சபாபதி தாத்தாவிடம் புலம்புவதை தன் அன்றாடக் கடமையாகவே வைத்திருந்தார். ஆனால் தன் அண்ணன் தங்கைகளைப் பற்றி சபாபதி தாத்தா புரிந்துகொண்டது முத்துவேல்பிள்ளை இறந்த இரண்டாவது நாளில்தான்.

அதுவரை "சபா எனக்கு இதுக்கு பணம் வேணும்டா. நீ சொன்னாதான் தாத்தா கொடுப்பாரு. வாங்கிக்கொடுடா" என தன்னை உபயோகப்படுத்திக் கொண்ட தன் அண்ணன், தங்கைகள் அனைவரும் முத்துவேல்பிள்ளை இறந்த இரண்டாவது நாளிலேயே சொத்துப் பிரச்சினையைத் துவக்கி விட்டார்கள். "தாத்தா சொத்துல எங்களுக்கும் பங்குண்டு. மொத்ததையும் நீயே சுருட்டிடலாம்னு பாக்குறியா?", என மனசாட்சியின்றிக் கேட்டார்கள் அவரது அண்ணன்கள். தங்கைகளோ தங்கள் கணவர்களின்மேல் பழியைப் போட்டு இப்போதே சொத்தோ, பணமோ வேண்டும் என நின்றார்கள். ஏற்கனவே தன்னை இத்தனை நாட்களாய்த் தாங்கிக்கொண்டிருந்த தூண் சாய்ந்துவிட்டதில் இடிந்து போய் உட்கார்ந்திருந்த தாத்தா, தனக்கு ஆதரவாய் இருப்பார்கள் என நினைத்தவர்கள் தன்னிடம் இப்படியானக் கேள்விகளைக் கேட்பார்கள் எனச் சற்றும் நினைத்திருக்கவில்லை. முத்துவேல்பிள்ளையை அடக்கம் செய்துவிட்டு வந்த அதே கையுடன் போட்டதை போட்டபடி விட்டுவிட்டு நடு இரவில் மனைவியையும், தன் நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார் தாத்தா. அந்த வீட்டில் இருந்து அவர்கள் எடுத்து வந்தது முத்துவேல்பிள்ளையின் படமும், பாட்டி வீட்டில் போட்ட நகைகளும் தான். பின் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆறுதல் சொன்னவர்கள் அவரது சிநேகிதர்களான ஜேம்ஸ் மற்றும் மேத்யூ. அதற்குப் பிறகு பாட்டி வீட்டின் ஆதரவோடு தாத்தா மேலும் படித்து பொறுப்புடன் சம்பாதித்ததெல்லாம் தனிக்கதை.

---

மதியம் வரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்த தாத்தாவிற்கு மூச்சு இழுக்கத் துவங்கிவிட்டது. பேச்சும் நின்றுவிட்டது. இரவு தாண்டுவதே மேல் என டாக்டர்கள் கூறிவிட்டார்கள். நாங்களும் உறவினர்கள் ஒவ்வொருவருக்காய் தகவல் சொல்லிக் கொண்டிருந்தோம். யாருமே தாத்தாவை உயிருடன் கடைசியாக ஒருமுறை பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இறக்கும் தருவாயில் இருப்போரை பிணமாகவே பாவிக்கும் பழக்கம் நம் ஊரில் மட்டுமே இருக்கிறதா இல்லை எல்லா நாட்டிலுமே இப்படித்தானா எனத் தெரியவில்லை. சிலர், "காலையில 'பாடி'ய எங்க கொண்டு போறீங்க?" எனக் கேட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு தாத்தாவின் உடன்பிறந்த இளைய சகோதரியும், அவர் பிள்ளைகளும் வந்தார்கள். தாத்தாவுக்குப் பேச முடியவில்லையேயொழிய நல்ல விழிப்புடன் தான் இருந்தார். காதில் விசயத்தைச் சொல்லியவுடன் அவர் முகம் கொஞ்சமா மலர்ந்தது. பல ஆண்டுகளாக அரவமே இல்லாதவர்கள் இறுதி நிமிடங்களிலாவது வந்திருக்கிறார்களே என்ற மகிழ்ச்சியாய் இருக்கலாம். சில நொடிகள் அவருக்கருகே நின்றுவிட்டு ஐ.சி.யூவிற்கு வெளியே சென்றனர். வழக்கமான விசாரிப்புகள் முடிந்தவுடன், வந்திருந்த பாட்டியின் மகன் மெல்ல ஆரம்பித்தார்,

"ஒரு சின்ன விசயம். நேரம் தப்புதான். ஆனா அப்புறமா நமக்குள்ள பிரச்சினை ஆயிர கூடாதுனுதான்.." என்று இழுத்தார்.

கொஞ்சம் யோசித்துவிட்டு, "பரவால்ல சொல்லுங்க", என்றார் அப்பா.

"இப்ப நாங்க இருக்க வீட்டுல எங்களுக்கு உரிமை இருக்குறதுனால மாமாகிட்ட லீகலா எதுவும் பத்திரமெல்லாம் வாங்கல. ஆனா உங்க கையெழுத்து இருந்தாதான் வருங்காலத்துல எங்களால வீட்ட விக்கவோ, கைமாத்தவோ முடியும். அதான் மாமா இருக்கப்பவே வாங்கிரலாம்னு.....".

ஐசியூவிற்குள் இழுத்துக்கொண்டிருந்த தன் அப்பா சபாபதியை சிலநொடிகள் திரும்பிப் பார்த்துவிட்டு, "எங்க போடனும்?" எனக் கேட்டார் அப்பா. பின் அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுக்கொடுத்தார். அனைத்தையும் ஐ.சி.யூ சுவர்களுக்கு உள்ளேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வடிந்துகொண்டிருந்தது.  

இரவு 12 மணிக்கு மேத்யூ தாத்தா வந்துவிட்டார்.
அப்பாவிடம்,

"அவன் எங்க?"

"ஐசியுல இருக்காரு மாமா"

"என்ன சொல்றாங்க? பிழைக்கமாட்டானாமா?"

"ஹ்ம்ம்ம்" என பதில் அளித்தபோது அப்பாவால் அதற்கு மேல் பேசமுடியவில்லை.
ஐசியுவிற்குள் சென்ற மாத்யூ, தன் நண்பன் சபாபதியையே பார்த்துக் கொண்டிருந்தார். பல நிமிட அமைதிக்குப்பின் சபாபதி தாத்தா, மிகவும் தட்டுத்தடுமாறி மேத்யூவிடம் மெதுவாகக் கேட்டார், "ஜேம்ஸ் எங்கடா?".

ஜேம்ஸ் இறந்து ஆறுமாதங்களுக்கும் மேல் ஆகிறது. மறந்துவிட்டார் போல! எனினும் நாள் முழுவதும் பேசாதவர் பேசத்துவங்கிவிட்டாரே என்ற மகிழ்ச்சி எங்களுக்கு.
ஒருசில நொடிகள் தாத்தாவையே பார்த்துவிட்டு, கண்களில் கண்ணீர் ஊற புன்னகைத்தவாரே,

"ஜேம்ஸ் கொள்ளைக்குப் போயிருக்கான்டா.." என்றார் மேத்யூ

அதைக்கேட்ட பாட்டி கதறி அழுதார். மரணம் முழுதாய் ஆக்கிரமித்துவிட்டிருந்த அந்த ஐசியூ அறையில் நட்பலை. மேத்யூ சொன்னதைக் கேட்டு மிகுந்த சிரமத்துடன், உடல் குலுங்கச் சிரித்தபடி மெதுவாகக் கண்களைக் மூடிக்கொண்டார் சபாபதி தாத்தா. மூன்று நாட்களாக தாத்தா உயிரோடிருக்கிறார் என மேடுபள்ளக் கோடுகளின் மூலம் காட்டிக்கொண்டிருந்த மானிட்டர் நேர்கோட்டுக்கு மாறியது. பாட்டி மட்டும் தொடர்ந்து கதறி அழுதுக் கொண்டிருந்தார். மேத்யூ, சபாபதி தாத்தா இறந்ததை கவனித்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.

------------------------------------------------------------------------------------------------

6 comments:

ponnien selvan said...

ரொம்ப அருமையான கதைங்க...நான் ரொம்ப சிலாகித்து படித்தேன். அது என்னவோ தெரியவில்லை தாத்தாக்கள் என்றாலே ஒரு ஈர்ப்பு தானாய் வருகிறது.

saravanakumar said...

Very very nice story... dont whether its true or imagination story...

sahajarul said...

அருமை

Friends said...

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்த போது இருந்த ஒரு இனம் புரியா உணர்வு இந்த கதையை படிக்கும் போது ஏற்பட்டது. அருமை

டான் அசோக் said...

@saravanakumar

கற்பனைக் கதைதான் தோழர்.

@ponnien selvan
@sahajaarul
@frends

அனைவருக்கும் நன்றிகள் பல.

Ganesh Kumar said...

கதை படிப்பது போல இல்லை நீங்கள் அருகே உட்கார்ந்து சொல்லுவது போல உள்ளது..

Related Posts Plugin for WordPress, Blogger...