Thursday, August 15, 2013

இந்திய, தமிழ்தேசியத்தில் நரிகளும், கழுதைப்புலிகளும் -டான் அசோக்


இந்திய தேசிய உணர்வு என்பது மிகவும் விசித்திரமான ஒன்று. எனக்கு பள்ளிப்பருவத்தில் மிதமிஞ்சி இருந்த அந்த உணர்வை இப்போது நினைக்கும் போது ஜிலேபியுடன் சாம்பாரை தொட்டுச் சாப்பிடுவதைப் போல ஒரு வித்தியாசமான உணர்வே ஏற்படுகிறது. முதன்முதலில் எனக்குள் சுதந்திர தாகத்தை ஊட்டியவர் நடிகர் சிவாஜி கணேசன். கப்பலோட்டியத் தமிழன் படத்தில் அவர் இழுத்த செக்கையும், அவர் பேசிய வசனங்களையும் பார்த்து என் நரம்புகள் நான்காம் வகுப்பு படிக்கும்போதே சுதந்திர வேட்கையைக் கவ்வத் துவங்கி விட்டன. பிறகு பள்ளியில் ஜனகனமன பாடும்போது காலின் சுண்டு விரலில் இருந்து உச்சந்தலையின் உச்சாணிமுடி வரை ஜிவ்வென்ற ஒரு வெறி ஏறும். பலகாலம் சென்றுதான் புரிந்தது எந்தப் பள்ளியிலுமே தேசிய கீதம் பாடும் வாத்தியார்கள் உள்ளிட்ட யாருக்குமே அதன் அர்த்தம் தெரியாது என்பது.

தேசியம் குறித்த முதல் சந்தேகம் தோன்றியதும் கப்பலோட்டிய தமிழன் பார்த்தபோதுதான். அதில் வெள்ளைக்காரன் ஆணை பிறப்பிப்பான், ஆனால் இந்தியர்களை அடிப்பதெல்லாம் இந்திய ஆட்கள் தான். "போலீசா இருக்குறதெல்லாம் நம்மூர் ஆட்கள் தானப்பா? ஏன்பா அவங்களே நம்மளை அடிக்கிறாங்க?" என நான் கேட்ட கேள்விக்கு எதோ பதில் சொல்லி அப்பா சமாளித்தார். அது சமாளிப்புக்காக சொல்லப்பட்ட பதில் என்பதாலோ என்னவோ அது என்னவென்று எனக்கு நினைவில்லை. ஆனால் கேள்வி இன்னும் பச்சையாக நினைவில் இருக்கிறது. உத்தியோகத்திற்காக சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்தவர்களை நாம் மறந்துவிட்டோம். ஜெனரல் டயர் மட்டும் நம் நினைவில் இருக்கிறார். சிதம்பரனாரை அடித்த போலீசுகளின், ஜாலியன் வாலாபாக்கில் பலரை சுட்டுக்கொன்ற போலீசுகளின் வாரிசுகள் இப்போது எங்காவது சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருக்கலாம் என யோசிக்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது.

அந்த போலீசுகளை எல்லாம் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களுடன் பொறுத்திப் பார்த்தால் அவர்கள் எல்லாம் அப்படியே ஆட்சிக்கு வந்துவிட்டார்களோ எனத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. மக்களை இன்னமும் அடிக்கவும், மக்களின் உரிமை பற்றி கவலைப்படாமல் மந்தைகள் போல வைத்திருக்கவும், இறையாண்மையைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் வடகிழக்கு மாகாண மக்களையும், காஷ்மீர் மக்களையும் கொடூரமான நடத்துவதற்கும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஜெனரல் டயர்களின் ஆணைக்காக காத்திருக்க வேண்டிய தேவையும் சுதந்திரத்திற்குப் பின் அவர்களுக்கு ஏற்படவில்லை. அன்று டயரின் ஆணையை செவ்வனே நிறைவேற்றிய போலீசுகளைப் போல, இன்றைய ஆட்சியாளர்களின் ஆணையையும் கேள்வியின்றி நிறைவேற்ற ராணுவவீரர்கள் இருக்கிறார்கள். இந்தியா தன் கையில் இருந்து நழுவக்கூடாது என்ற வெறியில் ஆங்கிலேயர்கள் ஆடினார்கள் என்றால் இந்தியா உடைந்துவிடக் கூடாது என்ற வெறியில் இந்திய ஆட்சியாளர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்கள் தான் வேறு, காரணம் ஒன்றுதான்.

ராஜபுத்திர வீரர்களைப் பற்றி நமக்குத் தெரியும். எந்தக் காலத்திலுமே ஒற்றுமையாக இருந்ததாய் வரலாறு கிடையாது. மகளின் காதலைக் கெடுப்பதற்காக, எங்கிருந்தோ வந்த முகமது கோரியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு மருமகன் பிரித்விராஜை மாமனார் ஜெய்சந்த் கொன்ற வரலாறுகள் எல்லாம் கூட உண்டு. காலம் காலமாக இதுதான் இந்தியா. ஈழம், காஷ்மீர், அசாம், தமிழக மீனவர்கள் என இப்போதும் இதுதான் இந்தியா.

இந்திய தேசிய உணர்வு ஏன் கேலிக்குரியது என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழ் மொழி இனத்தவருக்கும் ஆங்கிலேயருக்கும் எவ்வளவு மொழியியல், இனவியல் வித்தியாசம் இருக்கிறதோ அதைவிட அதிகமாகவே வட இந்தியர்களுக்கும் தமிழ் மொழி இனத்தவருக்கும் உண்டு. இது கிழக்கு மாகாண மக்களுக்கும், பழங்குடிகளுக்கும் கூடப் பொருந்தும். வட இந்தியர்கள் இனரீதியாக சிங்களர்களின் சகோதரர்கள். நமக்கோ இருவருமே அந்நியர்கள். ஆங்கிலேயனிடமிருந்து இன்னொரு அந்நியனிடம் நமது ஆட்சியதிகாரம் போயிருக்கிறதேயொழிய கிடைத்த விடுதலை என்பது நமக்கானது அல்ல. தேசியம் என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லியெல்லாம் இந்த பேதத்தை நீக்க முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தோடு நின்றுவிடுகிறது.

இந்தி பேசும் மாநிலங்களுக்குள் எதோ கொஞ்சம் ஒற்றுமை நிலவுகிறது. இங்கே வேறு எந்த மாநிலத்திற்குள்ளாவது ஒற்றுமை இருக்கிறதா? உள்நாட்டுக்குள்ளேயே எவ்வளவு இனவியல் சார்ந்த கேலிகள், கிண்டல்கள். ரேசிசம் ஆறு போல ஓடுகிறதா இல்லையா? இதுவரையில் உங்கள் பள்ளி, சமூகம், கல்லூரி உங்கள் மூளையில் புகுத்தியதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு தனியாக யோசித்துப் பாருங்கள். உங்கள் அலுவலகத்தில் எல்லா இந்திய இனத்தவர்களும் ஒரே ரீதியில் நடத்தப்படுகிறார்களா? உங்கள் மலையாளி மேலதிகாரி உங்களிடமும் உங்கள் சக மலையாளி ஊழியரிடமும் ஒரே மாதிரி நடந்துகொள்கிறாரா?

இந்திய ராணுவ வீரன் ஏன் சொந்த நாட்டு மக்களைக் கொல்கிறான்? வன்புணர்வு செய்கிறான்? எங்கோ பிறந்து, எதோ மொழி பேசி, எதோ கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு ராணுவ வீரனை இந்தியாவின் மற்றொரு பகுதியான  வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்பினால் அதை அவனால் உணர்வு ரீதியாக தன் நாடு என ஒப்புக்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணப்பெண்களை வன்புணர்வு செய்யும்போதும், கொல்லும்போதும் சொந்த நாட்டுப் பெண் என்ற உணர்வு ஏற்படுவதுமில்லை. வேற்று நாட்டு ராணுவ வீரர்களை, மக்களை எப்படி எந்த உறுத்தலுமின்று கொல்ல முடிகிறதோ அதேபோல சொந்த நாட்டு மக்களிடமும் அவனால் நடந்ட்துகொள்ள முடிகிறது. உலகின் எந்த ராணுவவீரனாவது சொந்த நாட்டுப் பெண்களை வன்புணர்வு செய்திருக்கிறானா? மிகவும் மோசமாக சொல்லப்படும் சிங்கள ராணுவம் கூட சிங்களப் பெண்களிடம் தப்பாக நடந்த வரலாறு உள்ளதா? இந்தியாவில் மட்டுமே இந்தக் கேவலம் உண்டு. இப்படி இருக்கும் வேறுபாட்டை இறையாண்மை என்ற பெயரில் கட்டிவைத்து கட்டிவைத்து என்ன செய்யப்போகிறோம்?

ஆங்கிலேயன் என்ற பொது எதிரி வந்திருக்காவிட்டால் நாமெல்லாம் நமக்குள் எப்போதும் போல அடித்துக்கொண்டும், காட்டிக் கொடுத்துக் கொண்டும்தான் இருந்திருப்போம். அவன் போனபின்பு பாகிஸ்தான் என்ற எதிரியும், அதன் மேல் நாம் கொண்ட வெறுப்பும் தான் நம்மையெல்லாம் இணைத்து வைக்கும் ஒரே மையப்புள்ளியாக இருக்கிறது. மற்றொன்று அவர்களுடன் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சுகள்! ஆங்கிலேயர்கள் வந்த போது வேகவேகமாக ஆங்கிலம் பயின்றுவிட்டு, யார் அவர்களிடம் முதலில் ஓடிச்சென்று கையைக் கட்டி சேவகம் செய்தார்களோ அவர்கள் தான் இன்று இந்தியாவின் அரசியலையும், கொள்கைகளையும் தீர்மானிக்கும் இடங்களில் இருக்கிறார்கள் என்பதுதான் நகைமுரண்.

தமிழகம் இருக்குமிடத்தில் உத்திரப்பிரதேசம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இலங்கை ராணுவ வீரர்கள் உத்திரபிரதேச மீனவர்களை சுட்டுக்கொன்று கொண்டே இருந்தால் இந்நேரம் பாகிஸ்தானையெல்லாம் கடாசிவிட்டு இந்திய அரசும், இந்திய வெகுஜன ஊடகங்களும் பிரதான எதிரியாக இலங்கையை தத்தெடுத்திருப்பார்கள். ஒட்டுமொத்த இந்திய மக்களும் கூட பாகிஸ்தான் மீது காட்டும் வெறியை எல்லாம் இலங்கை மீது காட்டியிருப்பார்கள். இந்திய தேசியத்தில் சாவிற்கான மதிப்பு கூட அந்தப் பிணம் உயிரோடு இருக்கும்போது என்ன மொழி பேசியது என்பதை வைத்துதான். தமிழ் பேசிக்கொண்டிருந்த பிணம் என்றால் மதிப்பு கிடையாது. ஆனால் ஒரு கொடுமை என்னவென்றால் நம் தமிழர்களிலே பலர் கூட பாகிஸ்தானை மட்டுமே தங்கள் ஜென்மவிரோதியாக எண்ணிக் கொண்டிருப்பதுதான்.

இந்தியா போன்ற பல இனங்களை உள்ளடக்கிய நாடுகளில் பெரும்பான்மை மொழியினர் ஆதிக்கம் செலுத்துவதை எக்காலத்திலுமே தடுக்க முடியாது. எல்லோருக்கும் உரிமையை பிரித்துக்கொடுக்க, எல்லோரையும் சமமாக நடத்த காட்டிக்கொடுத்தும், கெடுக்கவும் மட்டுமே பழக்கப்பட்டுவிட்ட இந்திய மனமும், இந்திய புத்தியும் என்ன அவ்வளவு நல்ல எண்ணம் படைத்ததா என்ன?  நேருவில் இருந்து ராஜேந்திர பிரசாத் வரை ஆங்கிலேயனின் திணிப்புகளுக்கு எதிராக போராடி அவனை அனுப்பிவிட்டு, அதே திணிப்பை தானே சிறுபான்மை மொழி மக்களிடையே செய்ய முயன்றார்கள்.

இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வெளியேறிய போது தனித்தனி குடியரசுகளாகப் பிரிந்திருக்கவேண்டும். இப்போது பிரிவது என்பது கடினம் என்றாலும் எந்த இன மக்களுமே ஆதிக்கத்திற்கு எதிராக அடங்கிப் போனதாக எந்த நாட்டு வரலாற்றிலுமே இல்லை எனும்போது அசாம், தமிழகம், காஷ்மீர் மட்டும் என்ன விதிவிலக்கா?

இந்தி பேசும் மக்கள் தொட்டிலில் இருந்தே இந்தி கேட்டு வளர்கிறார்கள். சிந்திப்பதும் இந்தியிலேயே சிந்திப்பார்கள். நமக்கோ ஆங்கிலமும் சரி, இந்தியும் சரி அந்நிய மொழிகள். நிலைமை இப்படியிருக்க, ஒன்று அவர்கள் இந்தியிலும் நாம் நம் மொழியிலும் தேர்வுகள் எழுதுவது சரியான நேர்மையான போட்டியாக இருக்கும். அல்லது இருதரப்புமே ஆங்கிலம் என்ற வேற்றுமொழியில் தேர்வு எழுதுவது நேர்மையாக இருக்கும். ஆனால் அதைவிடுத்து இந்திக்காரர்கள் இந்தியிலும், மற்றவர்கள் ஆங்கிலத்திலும் தேர்வு எழுத வேண்டுமென்பது எந்த வகையில் நியாயம்? இதுபோன்ற ஏராளமான விசயங்களில் இந்திக்காரர்களால் நடத்தப்படும் மத்திய அரசு சிறுபான்மை மொழியினரை ஏமாற்ற முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறது. ரஷ்யா முதற்கொண்டு இறுக்கிக் கட்டப்பட்ட பல நாடுகள் உடைந்ததற்கு முக்கியக் காரணம் மொழிப்பிரச்சினையும், மொழி ஆதிக்கமும் தான். காலப்போக்கில் இந்தியா உடைவதென்பதை தவிர்க்க முடியாது. அது நிகழும் வரை பெரும்பான்மையினரான இந்தி பேசும் இந்தியர்களின் ஆதிக்கத்தில் இருந்து ஒவ்வொரு உரிமையையும் நாம் போராடித்தான் வாங்க வேண்டியதிருக்கும். வாங்கித்தான் ஆகவேண்டும்.

ஆங்கிலேயர்கள் வெளியேறிய போது ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து உயர்சாதிக்காரர்களிடம் கைமாறுகிறதேயொழிய அது உண்மையான சுதந்திரம் இல்லை, உண்மையான சுதந்திரம் என்பது சாதி வேறுபாடுகளற்ற சமத்துவ பூமியில் தான் கிடைக்கும் என்பது பெரியாரின் ஆணித்தரமான நம்பிக்கை. அது எவ்வளவு உண்மை என்று இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதே போன்ற சிக்கல் தமிழ்தேசியத்திலும் இருக்கிறது. சாதி வேறுபாடுகளைக் களையாமல், சாதிப்பிரச்சினைகளையும், சாதி உணர்வுகளையும் நீக்காமல் நாளை இந்தியா உடைந்து நமக்கு தனித்தமிழ்நாடு கிடைத்தால் ஆட்சி அதிகாரம் இந்தி உயர்சாதிக்காரர்களிடமிருந்து, தமிழ் உயர்சாதி மற்றும் ஆதிக்கசாதிக்காரர்களிடம் மாறுமேயொழிய உண்மையான விடுதலையாய் இருக்காது. அப்படி அமையும் ஒரு தேசியம் மீண்டும் வேறுபாடுகளின் இருப்பிடமாக, போலியாகத்தான் இருக்குமேயொழிய உணர்வு ரீதியானதாக இருக்காது. இந்திக்காரர்கள் என்ற பொது எதிரியும் இல்லாவிட்டால் நசுக்கப்படும் விளிம்புநிலை, நடுத்தரவர்க்க மற்றும் தலித் தமிழர்களின் கதி அதோ கதிதான். இப்படி ஒரு தேசியத்தைதான் தற்போதைய தமிழ்தேசியவாதிகள் சுயநலத்தோடு முன்வைக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் போனவுடன் இந்தி ஆதிக்கத்தைக் கையிலெடுத்த ராஜேந்திரபிரசாத்களைப் போலவே! "தமிழ்தேசியம் அமைந்தவுடன் எல்லாவற்றையும் சரி செய்வோம் வாங்கடா", என்றழைக்கும் ஆட்களை நம்பவே முடியாது என்பதுதான் நேருவும், ராஜேந்திரப் பிரசாத்துகளும் நமக்கு கற்றுக்கொடுத்த உண்மை.

இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துச் சொல்வதா இல்லை திட்டித் தீர்ப்பதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் எதுவுமே இல்லாமல் வெறுமனே திட்டித் தீர்ப்பதில் சுகம் கண்டுகொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் குணத்திலும் எனக்கு உடன்பாடில்லை. நமக்கு இந்திய சுதந்திரம் பல விசயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஆதிக்க மொழி, ஆதிக்க இனத்தவர்கள் சுதந்திரமான பூமியில் எப்படி ஆதிக்கம் செலுத்துவார்கள் என கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்தேசியவாதிகள் தமிழகத்தை சாதிவேறுபாடுகள் உள்ள ஒரு குட்டி இந்தியாவாக மாற்றாமல் உண்மையான விடுதலை பெற்ற சமதர்ம தமிழகமாகவே வடிவமைப்பதற்கான முன்னெடுப்புகளில் இறங்க வேண்டும். இறங்கினால் மட்டுமே இந்திய தேசியத்தை குறை சொல்லும் தகுதி அவர்களுக்கு உண்டு.
அதுவரை இந்திய தேசியத்துக்கு எதிரான அவர்களது அரைகூவல்கள் நரியிடமிருந்து இரையைப் பிடுங்க எத்தனிக்கும் கழுதைப்புலிகளின் கூச்சலாகவே கருதப்படும்.

3 comments:

vara said...

Our tamil police raped tribal women during veerappan search.Police, raped women both are tamils.Then why this incident happened?As per ur thought (Indian army, assam women both are different, so the rape occured)vachathi incident shouldnt be happened in our tamil land.

மாசிலா said...

நல்ல அலசல் அசோக்.
தமிழ் தேசிய கனாக்காரர்கள் பெரியாரின் சிந்தனைகளையே எள்ளி நகையாடுபவர்கள். இவர்களிடம் எப்படி சாதி ஒழிப்பு சிந்தனையை எதிர்பார்க்க முடியும்?
கடைசி வரி அருமை.
பகிர்வுக்கு நன்றி.

Mano Ekambaram said...

// தமிழகம் இருக்குமிடத்தில் உத்திரப்பிரதேசம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். //

சரி தமிழகம் மேலே இருக்கிறது. உபி கீழே , தமிழர்கள் மத்தியில் ஆளுகிரார்கள் என்றால்,,, நாம் ஹிந்தி பேசும் மக்களை பற்றி கவலைப்பட்டிருப்போமா என்பது கேள்விக்குறி

Related Posts Plugin for WordPress, Blogger...