Tuesday, August 13, 2013

ஜனநாயக சர்வாதிகாரத்தில் கமல்களும், விஜய்களும், மக்களும் -டான் அசோக்உணவின்றி தவித்த குடிகளை நோக்கி, "ரொட்டி இல்லையென்றால் என்ன? கேக் சாப்பிடுங்கள்." எனக் கேலிப்பேசும் அளவிற்கு மன்னர்களும், ராணிகளும் இருந்தார்கள். பிறகு மன்னர்களை புரட்சி மூலம் துரத்திய சர்வாதிகாரர்கள் பெரும்பாலும் பிடிவாதக்காரர்களாக, பைத்தியக்காரத்தனமான கொள்கைகளால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற பால் பாட், ஹிட்லர், இடி அமீன் போன்ற அரக்கர்களாக பெரும்பாலும் தான்தோன்றித்தனமாக இருந்தார்கள். பின் ஏகப்பட்ட தத்துவஞானிகளின் தொடர் பரப்புரை, தேடல்கள், புரட்சிகள் மூலம் ஜனநாயகம் என்ற ஆட்சிமுறை பிறந்தது. அதாவது ஆட்சியாளர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை. மனித சமூகத்தின் பல ஆயிரம் வருட அனுபவத்திற்குப் பின் சிறந்த ஆட்சிமுறையாக ஒப்பீட்டளவில் கருதப்படும் ஜனநாயகத்திலும் கூட சர்வாதிகாரம் கலந்தே இருப்பதுதான் அதன் சாபக்கேடு.

ஜனநாயகத்தில் சர்வாதிகாரர்கள் அல்லது சர்வாதிகாரிகள் முளைப்பதற்கான அச்சாரம் மக்களின் ஒற்றுமையின்மை. அவர்களுக்குத்தானே பிரச்சினை என இவர்களும், இவர்களுக்குத்தானே பிரச்சினை என அவர்களும் எப்போதும் அமைதியாய் இருந்துவிடுகிறார்கள். இன்னும் சிலநேரம் பிடிக்காதவர்களுக்கு அரசால், ஆட்சியில் இருப்பவர்களால் பிரச்சினை என்றால் கொண்டாடக் கூட செய்கிறார்கள். அவர்களுக்கு நடப்பது தானே நாளை நமக்கும் என்ற தொலைநோக்கு இல்லாமல் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் செயல்தான் இந்த மவுனம். ஜனநாயக சர்வாதிகாரர்களுக்கு ஊக்கமே இந்த மவுனம் தான்! உதாரணமாக இலங்கையில் தமிழர்கள் உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, கலாச்சார ரீதியாக தாக்கப்படும்போது அமைதியாய், நம்மை விரட்டியவர்கள் தானே அழிகிறார்கள் என வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இலங்கை இஸ்லாமிய சமூகத்தின் மேல் இப்போது கைவைக்கத் துவங்கியிருக்கிறது இலங்கை அரசு! தமிழ்நாட்டில் கூட இதற்கு ஒரு குட்டி உதாரணம் உண்டு. அது என்ன என்பது கடைசியில்.

இப்போது நம் ஊருக்கு வருவோம். நம் நாட்டில் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிலை நாட்டவும், அதன்பால் ஒரு பயத்தை ஏற்படுத்தவும், குரல்களை நசுக்கவும் ஆட்சியாளர்களும் சரி, செல்வாக்கானவர்களும் சரி, பெரும்பாலும் பயன்படுத்துவது காவல்துறையையும், நீதிமன்றத்தையும்.


உதாரணத்திற்கு தற்போதைய ஆட்சியாளர்களை எடுத்துக் கொள்வோம். மேடைகளிலே கர்ஜிக்கும் அரசியல்வாதிகளில் இருந்து, ஊடகங்களில் நியாயம் பேசும் எழுத்தாளர்களில் இருந்து, திரையில் நீட்டி முழக்கும் நடிகர்களில் இருந்து, முகநூலில் பதிவிடும் ஒரு சராசரி குடிமகன் வரை ஜெயலலிதா அரசு போடும் அவதூறு வழக்குகளுக்கு பயப்படுகிறார்கள். ஜெயலலிதா அரசு ஆட்சிக்கு வந்தவுடன் யார் மீதாவது போடும் முதல் அவதூறு வழக்கில் துவங்கும் இந்த பயம் ஒரு கிருமி போல மெல்லப் பரவி பெரும் வியாதியாக வியாபிக்கிறது. ஐந்தாண்டுக்கொருமுறை வரும் இந்த வியாதி நிமிர்ந்திருக்க வேண்டிய ஊடக சுதந்திரத்தின் முதுகெலும்பில் புற்றுநோயை தோற்றுவித்துவிடுகிறது. நாட்டில் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதைப்பற்றி பேசாமல் சம்பந்தமேயில்லாத விசயங்களை தலைப்புச் செய்தி ஆக்கிவிடுகிறார்கள். பற்றாக்குறைக்கு கோடிகளில் கிடைக்கும் அரசு விளம்பரத்தின் மேல் உள்ள ஆசையும் வாயைக் கட்டிப் போட்டு விடுகிறது. இப்படி எல்லோருமே எதோ ஒரு வகையில் வாய்க்கட்டுக்கு, சர்வாதிகாரத்திற்கு உள்ளாகிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சிகளில் எப்போதும் உச்சகட்டத்தில் இருக்கும் இந்த சர்வாதிகாரம் அவர் தொடங்கி வைத்த விசயமல்ல. ராஜாஜி, பக்தவத்சலம் காலத்திலேயே புழக்கத்தில் இருந்த பழக்கம் தான் இது. ஜெயலலிதா இதை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் பாஷையில் சொல்வதானால் தமிழகத்தை அவதூறு வழக்குகளிலும், ஜனநாயகப் படுகொலைகளிலும் 'நியூமெரோ யூனோ' ஆக்கியிருக்கிறார். வடக்கே மாயாவதியும், மம்தாவும் இதில் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள். இப்போது அகிலேஷ் யாதவும் இந்த வரிசையில்.

கலைஞர் ஆட்சியில் முதல்வரை விமர்சித்தும், மோசமாக சித்தரித்தும் பல படங்கள் வந்திருக்கின்றன. இதைப் பெரும்பாலும் கண்டுகொள்பவர் அல்ல அவர். கண்டுகொண்டாலும் கூட ஜெ போல கடுமையானவர் இல்லாததால் அவரை சுலபமாக "பாசத்தலைவரே அவரே இவரே" என ஐஸ் வைக்கும் வேலையையும் திரைத்துறையினர் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். முதல்வன் போன்ற விதிவிலக்குச் சம்பவங்களும் உண்டு. முதல்வனில் வரும் வில்லன் கதாப்பாத்திரம் கலைஞரைச் சுட்டுகிறது என ஊடகங்கள் கிளப்பிவிட, அதனால் திமுகவினரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது முதல்வன். மாய்ந்து மாய்ந்து கேபிளில் ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். பதறியடித்த சங்கரும், தயாரிப்பாளரும் மாதேஷும் கலைஞரைப் பார்த்தபின் திமுகவினர் கண்டிக்கப்பட்டு ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டது. திரைத்துறையினர் மீதான திமுகவின் அதிகபட்ச எதிர்ப்பு என்பது இதுதான். கலைஞரின், எம்ஜிஆரின் நட்பையும், கலைஞரின் காதலையும் கூட சித்தரித்த இருவர் படம் கலைஞர் ஆட்சிகாலத்தில் தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவைப் பற்றி யாரேனும் அப்படி ஒரு படம் எடுத்து இப்போது வெளியிட முடியுமா? வெளியிட வேண்டாம், எடுக்கிறார் எனத் தெரிந்தாலே அதோ கதிதான்!

அதே நேரத்தில் திமுகவின் தலைமைக்கு மாறாக சன்பிக்சர்ஸ் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. மிரட்டல்களும், கெடுபிடிகளும் உச்சக்கட்டத்தில் இருக்க, மீடியா மாஃபியாகவே நடந்துகொண்டார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டு, சன் பிக்சர்ஸ் என்ற தண்ணீர் தொட்டிக்கு பயந்து அதிமுக ஆட்சி என்ற வெள்ளத்தில் குதித்தவர்கள் தான் விஜய் போன்றவர்கள்.

தன் மேல் உள்ள குறைகளை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க, அவர்களின் வாயை அடைக்க அவதூறு வழக்குகளை பயன்படுத்தி வந்த ஜெ அரசு இப்போது யாருக்குமே அரசியல் ஆசையே வரக்கூடாது, யாரும் யாரையும் அடுத்த பிரதமராக முன்மொழியக் கூடாது என்ற அளவில் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதுதான் கொடுஞ்சோகம். "வேட்டி கட்டிய தமிழர் பிரதமர் ஆகவேண்டும்", எனச் சாதாரணமாகச் சொன்ன கமலே அந்தப் பாடு பட்டபோது, "அடுத்த முதல்வர் நாந்தான். Time to lead" எனச் சொன்ன விஜய் தப்பிக்கவா போகிறார்? போகிற போக்கைப் பார்த்தால் திரைபடங்களில் யாருமே முதல்வர் வேடத்தில், பிரதமர் வேடத்தில் நடிக்கவே கூடாது என்ற நிலைமை வந்துவிடும் போல. விஜய்க்கு ஆதரவு கொடுத்த தனுஷ் போன்ற நடிகர்கள் கூட "நான் அப்படிச் சொல்லவே இல்லையே" என பல்டி அடிக்கும் அவல நிலைதான் இங்கே நிலவுகிறது.

சேரன் மகள் காதல் விவகாரத்தை, ஒருவரின் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையை பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிய பத்திரிக்கைகள், ஒரு முதல்வரின் தனிப்பட்ட கோபத்திற்காக ஒரு திரைப்படத்தை வெளியிடவே முடியாமல் இருக்கும் நிலைமையைப் பற்றி எழுதியிருக்கின்றனவா எனப் பார்த்தால் 'மூடுமந்திரம்' போல எந்தத் தகவலையுமே காணோம்! அவ்வளவு விசுவாசம், அவ்வளவு பயம்!  விஸ்வரூபத்திற்கான தடையின் காரணத்தை இஸ்லாமிய இயக்கங்கள் மேல் சுலபமாக போட முடிந்தது, ஜெவும் அழகாக அவர்களைப் பயன்படுத்திக்கொண்டார்.  தலைவா விசயத்தில் பழிபோட 'பலி ஆடுகள்' யாருமில்லாததாலும், இதில் ஜெவை மட்டுமே குற்றம் சொல்ல முடியுமென்பதாலும் இந்த விசயம் மீடியாவிலும், சமூக வலைதளங்களிலும் எவ்வளவு அடக்கி வாசிக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள். கருத்து சுதந்திரத்திற்காக அப்போது குரல் கொடுத்த பெரும்பாலானோர் இப்போது எங்கே போனார்கள் என்ற விலாசமே தெரியவில்லை.

ஒருகட்டத்தில் மக்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு பழகி விடுகிறார்களோ, ஒரு ஓரத்தில் மன்னராட்சியில் இன்னும் விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்களோ, தங்களை விட 'உயர்ந்தவர்களாக' யாரேனும் இருக்க வேண்டும் என்ற அடிமை எண்ணம் அவர்கள் உள்ளத்தில் ஒரு அமைதியான ஓடையாக ஓடிக்கொண்டே இருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படாமல் இல்லை. இல்லையென்றால் இப்படி ஒரு அப்பட்டமான சர்வாதிகாரத்தை எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? பலர், அடக்கி வைக்கப்படும் இந்த குமுறலுக்கு வடிகாலாக ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களை எதேனும் பழைய விசயத்திற்காக திட்டுவதன் மூலம் தங்கள் மனக்குமுறலை தீர்த்துக்கொள்கிறார்கள். ஒருவேளை திமுகவும், கலைஞரும் ஜெ போன்றே தங்களுக்குப் பிடிக்காத அனைத்து அறிக்கைகளின் மேலும், படங்களின் மீதும் அவதூறு வழக்குகளும், தடைகளும் போட ஆரம்பித்தார்களானால் தமிழகத்தில் நிலைமை என்னவாக இருக்கும் என நினைக்கும்போதே தலைசுற்றுகிறது.

ஜெயலலிதா அரசியலில், அதிகாரத்தில் ஃபாசிசத்தை கடைபிடிக்கிறார் என்றால் இந்த பிரபல நடிகர்கள் திரைத்துறை ஃபாசிஸ்ட்டுகள் என்பதை நாம் மறக்கக் கூடாது. அதனால் அவர்கள் மேல் நாம் இரக்கமோ, பரிதாபமோ கொள்ளவோ, அவர்களை நீதியை நிலைநாட்ட போராடுகிறவர்களாகவோ நாம் எண்ணிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் மேலே பார்த்ததைப் போல அவனுக்குத்தானே பிரச்சினை என அமைதி காத்தோமானால் நாளை நம் கழுத்துக்கும் இதே அடக்குமுறை கயிறுதான்.

நம் அரசியல் சட்டமே அவதூறு வழக்குகள், தடைகள் சார்ந்த இந்த அடக்குமுறைகளுக்கு ஒருவகையில் துணை செய்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு இணையத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒரு நண்பரை எடுத்துக்கொள்வோம். இங்கே இருப்பவர்கள் யாவருக்கும் அவர் மேல் எந்தக் குற்றமும் இல்லை, எதிர்தரப்பு பல விசயங்களை மனதில் வைத்து, பழிவாங்க உறுதிபூண்டு அந்தப் புகாரை அளித்தது எனத் தெரியும். அவர் மேலான வழக்கில் அவருக்கு எந்த தண்டனையும் கிடைக்காது, இறுதியில் விடுதலைதான் ஆவார் என எல்லோருக்கும் உறுதியாகத் தெரியும். ஆனால் என்ன செய்ய முடியும்? வழக்கபோல வளவளவென இழுக்கும் வழக்கு முடியும் வரை அவருக்குப் பிரச்சினைதான். இப்படி பலவகைகளில் பழிவாங்க முடியும். ஒவ்வொரு ஊர் நீதிமன்றத்திலும் தனித்தனி வழக்குகள் தொடுத்து அலையவிடுவது, கைது செய்து அவமானப்படுத்துவது, அவரைப் பற்றி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் செய்து தலைகுனிவை ஏற்படுத்துவது என ஒருவர் குற்றம் சாட்டப்பட்டாலே அவரைப் பல வகைகளில் கொடுமை படுத்த நம் ஊர் நீதித்துறை வழிசெய்து வைத்திருக்கிறது. ஒருவரை பழிவாங்க வேண்டுமானால் அவர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டாம், வழக்கு போட்டாலே போதும். அவருக்கு ஏற்படும் மன உளைச்சலே வேலையை முடித்துவிடும்! இதைத்தான் ஜனநாயக சர்வாதிகாரம் செவ்வனே பயன்படுத்திக்கொள்கிறது. இதை எதிர்த்து மக்கள் ஒன்று சேர்ந்து போராடாதவரை ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நீக்குவதென்பது ஆகாத ஒன்று.

இன்னொரு முக்கியமான விசயமும் இதில் உண்டு. கமல் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவருக்குப் பிரச்சினை என்றவுடன் எழுந்த ஏகப்பட்ட ஆதரவுக் குரல்கள் விஜய் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார் என்பதால், அவர் ஜெயலலிதாவிற்கு ஆதரவளித்தவர் என்பதால், "அவருக்கு நல்லா வேணும்" என்ற ரீதியிலேயே அணுகப்படுகிறது. இது மிகத் தவறான முன்னுதாரணம். வடிவேலுவிற்கும் இதுதான் நடந்தது. ஏன் ஒரு நடிகனுக்கு அரசியல் ஆசை இருந்தால் அவனை விதிகளுக்கு அப்பாற்பட்டு பழிவாங்குவது நியாயமாகிவிடுமா? அதை வேடிக்கைப் பார்ப்பது எவ்வகையில் நியாயம்? கமலுக்காக குரல் கொடுத்த யாவரும் விஜய்க்காக குரல் கொடுக்கவேண்டியது அவசியமல்லவா? எத்தனை பேர் மேல் அவதூறு வழக்கு போடுவார்கள்? எத்தனை பேரை மிரட்டுவார்கள்? நூறு, இருநூறு, ஆயிரம்? கோடி பேரும் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் போது அவதூறு வழக்குகளால் என்ன செய்து விட முடியும்? உதாரணத்திற்கு திரைத்துறையே ஒன்றுகூடி இனி ஜெ ஆட்சியில் இருக்கும் வரை படம் எடுக்க மாட்டோம் என்றோ, ஜெவை எதிர்த்து ஒரு போராட்டமோ அறிவித்தால் ஜெவால் என்ன செய்ய முடியும்? ஆனால் நமக்கென்னப்பா, நம்ம தொழில் கெட்டுவிடக் கூடாது என்ற ரீதியில் தான் இருக்கிறார்கள். மேலே சொன்னதைப் போல ஜனநாயகத்தில் மக்களின் ஒற்றுமையின்மையும், சுயநலமும் தான் பிரச்சினை

கமல்களுக்கும், விஜய்களுக்கும் மட்டுமல்ல, குற்றவாளிகளுக்கும் கூட உரிமை என்பது உள்ளது என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே, அதற்காக நாம் போராடத் துவங்கினால் மட்டுமே அப்பாவிகளின் உரிமைகளை ஒருகாலத்திலும் யாராலும் பறிக்கவே முடியாத நிலை ஏற்படும்.

கடைசியில் சொல்வதாகச் சொன்ன உதாரணம் இதுதான். கமலுக்கு ஜெ அரசால் நெருக்கடி ஏற்பட்ட போது அமைதி காத்த வெகுசில நடிகர்களில் விஜய் ஒருவர். இன்று?


3 comments:

Marx P Selvaraj said...

Extensive analysis of contemporary chaos of Madras tinsel town. Good to read.

Ethicalist E said...

"அதே நேரத்தில் திமுகவின் தலைமைக்கு மாறாக சன்பிக்சர்ஸ் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. மிரட்டல்களும், கெடுபிடிகளும் உச்சக்கட்டத்தில் இருக்க, மீடியா மாஃபியாகவே நடந்துகொண்டார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். "

இது உங்களுக்கே நியாயமாக இருக்கா ?? ஒரு நிமிடம் மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள். சண் பிக்சர் இன் ஆட்டத்துக்கு திமுக தலைமையின் ஆதரவு இல்லையா ??

Ethicalist E said...

"கலைஞர் ஆட்சியில் முதல்வரை விமர்சித்தும், மோசமாக சித்தரித்தும் பல படங்கள் வந்திருக்கின்றன. இதைப் பெரும்பாலும் கண்டுகொள்பவர் அல்ல அவர். "

உண்மைதான்

Related Posts Plugin for WordPress, Blogger...