Wednesday, August 28, 2013

சபாபதி சாகிறார் (சிறுகதை) -டான் அசோக்"எனக்கு இருக்குறது ஹார்ட் அட்டாக் இல்ல. ஹார்ட் ஃபெயிலியர். இப்போ வெறும் 20 சதவிகிதம்தான் என் ஹார்ட் வேலை செய்யிது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு குறைஞ்சு குறைஞ்சு ஒருநாள் மெதுவா நின்னுடும்", கைகளை தன் இதயத்திற்கு அருகில் குவித்து 'லப்..... டப்..' என இதயம் துடிப்பதைப் போன்ற செய்கையுடன் எனக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார் சபாபதி தாத்தா. ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  தாத்தா மரணத்தை விரும்புகிறாரா எனத் தெரியவில்லை, ஆனால் கடந்த சில வருடங்களில் தாத்தா மரணத்திற்கு மிகவும் பழக்கப்பட்டிருந்ததால் அவருக்கு மரணத்தைப் பற்றிய பயம் ஒன்றுமில்லை. பசிக்கின்ற போதெல்லாம் வீட்டில் இருப்பதைத் திருடித் தின்னும் பெருச்சாலியைப் போல, மரணம் அவர் வீட்டில் எங்கோ ஒரு ஓரமாய் ஒளிந்திருந்து பசித்தபோதெல்லாம் யாரையாவது தின்று தீர்த்தது. நாற்பது வயதான அவரது முதல் மகனில் துவங்கி, முப்பத்தி ஐந்து வயதான அவரது இரண்டாவது மகன், முப்பத்தி இரண்டு வயதான மூன்றாவது மகன் என கொஞ்சகால இடைவெளியில் அடுத்தடுத்து அனைவரும் விபத்து, கேன்சர் எனப் பலவகையான மரணங்களுக்குப் பலியானார்கள். இப்படி  அனைவரும் போய்விட, இடையில் பிறந்த என் அப்பா மட்டும்தான் தாத்தாவின் வாரிசுகளில் மிச்சம். மாதாமாதம் அவருக்கு நெஞ்சுவலி வருவதும் உடனே அவரை ஐசியுவில் சேர்ப்பதும் எங்களுக்கு வழமையான ஒன்றாகிவிட்டது என்றாலும் இந்த முறை மருத்துவர்களின் முகம் சரியில்லை. தாத்தா பிழைக்கமாட்டார் என்று கொண்டு வந்து சேர்ந்த சில மணி நேரங்களிலேயே சொல்லிவிட்டார்கள். நாங்கள் தொலைபேசியில் நெருங்கியவர்களுக்கெல்லாம் விசயத்தை தெரிவித்ததும் சபாபதி தாத்தாவின் நெருங்கிய நண்பர் மேத்யூ மட்டும் நண்பனின் இறுதி நிமிடங்களில் பங்கெடுக்க ஊரில் இருந்து  வந்துகொண்டிருந்தார்.

-------

1940 களில் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பந்தாவாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த பணக்கார மேல்தட்டு இளைஞர்களில் சபாபதி தாத்தாவும் ஒருவர். ஒன்பது குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்த அவரை, ஆண் வாரிசு இல்லாத அவரது தாத்தா முத்துவேல்பிள்ளைக்கு மிகவும் பிடித்திருந்ததால் மகளின் மகனை, தன் மகனாக சுவீகரித்துக் கொண்டார். கோடீசுவர செல்லத் தாத்தா. கண்டிக்க அம்மாச்சியும் கிடையாது. ஒரே பிள்ளை. அப்பா ராமநாதனோ ராவ் பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர். ஆட்டத்திற்கு ஏது அளவு? உருப்படியான விசயங்களைத் தவிர மற்ற எல்லா விசயங்களுக்காகவும் ஊரெங்கும் சுற்றிக்கொண்டிருந்தவருக்கு ஜாடிக்கேத்த மூடியாக பள்ளியில் வந்து சேர்ந்த நண்பர்கள்தான் அவரது உயிர்த் தோழர்களான மேத்யூவும், ஜேம்ஸ்சும். அந்தக் காலப் பள்ளிகளில் பெரும்பாலும் ஒரே ஒரு வாத்தியார்தான். ஶ்ரீமான் முத்துவேல்பிள்ளை கூப்பிட்டவுடன் ஓடி வந்து வீட்டில் நின்று, "ஷொல்லுங்கோண்ணா... பேஷா செஞ்சுட்லாமே!!" எனச் சொல்லும் சீனிவாசய்யர் தான் சபாபதி தாத்தா படித்த பள்ளியின் ஒரே வாத்தியார்! அவரின் தயவால் தான் பள்ளிக்குப் போகவேயில்லையென்றாலும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு எந்தத் தடையுமின்றி முன்னேறினார்கள் சபாபதி தாத்தாவும், அவர் புண்ணியத்தில் அவர் சிநேகிதர்களும்.

இப்படியாக ஒட்டி வளர்ந்த முப்பிறவிகளாகத் திரிந்த இந்த மூவரும் கல்லூரியில் என்ன படிப்பது என்று முடிவு செய்த கதை மிகவும் சுவாரசியமானது. வெள்ளைக்காரர்கள் போல ஸ்டைலாக புகை பைப் உறிஞ்சுவதிலும், கச்சிதமான பாண்ட்-சட்டை, பொவ் டை அணிந்து காரில் உலா வருவதிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவர் சபாபதி தாத்தா. உலகம் துண்டு பீடி அளவிற்கு சுருங்கிவிட்ட இந்தக் காலத்திலும் கூட நம் ஆட்கள் சிகப்புத் தோலுக்கு ஆளாய்ப் பறக்கிறார்கள் எனும் போது 1940களின் இறுதியில் கேட்கவா வேண்டும்? சுற்றியிருப்பவர்கள் எல்லாம் "துரை மாதிரி இருக்கேடா சபாபதி." என ஏற்றிவிட, இப்படி சகலவிதத்திலும் துரை போல இருக்கும் தான் ஆங்கிலமும் முறையாகக் கற்றுவிட்டால் துரையாகவே மாறிவிடலாம் என்று சபாபதி தாத்தா நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆக கல்லூரிக்கு அவர் தேர்ந்தெடுத்தது ஆங்கில இலக்கியம். ஜேம்ஸ் மற்றும் மேத்யூவின் கதையோ வேறு. இருவரும் முழுதாக இருபது நாட்கள் கல்லூரியில் அடுத்து என்ன படிக்கலாமென்று யோசித்தார்கள். வரலாற்றில் துவங்கி தமிழ், ஆங்கிலம், பாண்டிச்சேரியில் பிரஞ்சு இலக்கியம் என வட்டமடித்து இறுதியில் சபாபதி தாத்தாவிடம் வந்து,

"டேய் சபா. நீ என்னடா படிக்கப் போறே?"

"பி.ஏ இங்கிலிஷ்டா. தாத்தாகிட்ட சொன்னேன். ஓகே! கோ அஹெட்னு சொல்லிட்டார்."

"காலேஜ் வாத்தியாரும் உங்க தாத்தாவுக்குத் தெரிஞ்சவராடா சபா?"

"யெஸ்! அஃப் கோர்ஸ்."

"அப்போ நாங்களும் அதையே படிக்கிறோம்டா!"

இப்படித்தான் மூவரும் பி.ஏ ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தார்கள், ஒருவழியாகத் தேர்ந்தார்கள்.
கல்லூரி சென்றும் பள்ளி கதையேதான் தொடர்ந்தது. ஒருநாள் ஸ்பெஷல் ஃபீஸ் என்ற பெயரில் தத்தமது வீடுகளில் காசை வாங்கிக்கொண்டு மூவரும் நாட்டியமாடும் கலாவின் வீட்டுற்கு நடனம் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அங்கே எதேச்சையாக வந்திருந்த யாரோ, "நம்ம சபாபதியை கலா வீட்டுல பாத்தேங்கானும். நம்ம முதலியாரெல்லாம் அமைதியா உக்காந்திட்டிருக்கார். உம்ம பையன் என்னடான்னா பெரிய மைனராட்டம் கலா ஆடுறச்சே பத்து ரூபா தாளா அள்ளி விடுறான் ஓய்... இதெல்லாம் நல்லாவா இருக்கு.." எனப் போட்டுக் கொடுத்துவிட ராவ் பகதூர் தன் கையில் எப்போதுமே வைத்திருக்கும் நடைத்தடியால் மூவரையும் மதுரை தெருக்களில் விரட்டி விரட்டி அடித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையால் முத்துவேல்பிள்ளைக்கும், ராவ் பகதூர் ராமநாதனுக்கும் ஒரு சிறிய போரே துவங்கிவிட்டது. "எனக்கு சுவீகாரம் கொடுத்த பிள்ளையை நீ எப்படி அடிக்கப் போச்சு?", என அவர் கேட்க, "நீர் பிள்ளை வளத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்துதான் ஊரே சிரிக்கிறதே மாமா", என இவர் பேச, பின் வீட்டார் கூடி சபாபாதிக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுங்கள் என சமாதானப்படுத்திய பின்பு தான் பிரச்சினை தீர்ந்தது. சகலவிதமான பிரச்சினைகளுக்கும் நிவாரணி திருமணம்தான் என்ற கொள்கையின்படி ஏதோ குக்கிராமத்தில் பெண்ணெல்லாம் பார்த்து முடித்துவிட்டு திருமண தேதியை மட்டும் சபாபதி தாத்தாவிடம் ஒப்புக்குச் சொன்னார்கள்.  

தஞ்சாவூர் அருகே இருக்கும் வெட்டுவான்குளத்தில் பெண் பார்த்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் எல்லாம் போய் இறங்கிய அடுத்தநாள் பந்தாவாக தன் நண்பர்களுடன் வந்து இறங்கினார் சபாபதி தாத்தா. அவரது திருமணத்திற்கு முந்தைய நாளில் நடந்த ஒரு கூத்தை தாத்தா இதுவரை ஒரு 200 முறையேனும் எங்களிடம் சொல்லியிருக்கிறார். தாத்தா வரும்போதெல்லாம் "தாத்தா. உங்க கல்யாணக் கதை சொல்லுங்களேன்" என்போம். அவரும் சளைக்காமல் கீழுள்ளவாறு சொல்லத் துவங்குவார்,

"கல்யாணத்துக்குப் போயாச்சு. இவ (பாட்டியை) மூஞ்சியத்தான் இவனுங்க பாக்கவே விடலியே. சரி ஊரையாச்சும் பாப்போம்னுட்டு கிளம்பிட்டோம். ஊரெல்லாம் சுத்திட்டு வந்தவுடன ராத்திரி நல்லா மூக்குப் பிடிக்கச் சாப்பாடு. படுத்த கொஞ்ச நேரத்துலயே ஜேம்சுக்கு வயித்தக் கலக்க ஆரம்பிச்சிருச்சு. எங்களுக்கும் கடமுடா தான். வயசான வேலைக்காரன் ஒருத்தன் எங்க ரூம்லயே படுத்திருந்தான். அவனை எழுப்பி, "டாய்.. இங்க கக்கூஸ் எங்கடா இருக்கு?"னு கேட்டோம். அவனுக்கு ஒன்னுமே புரியல. இருங்கய்யா அய்யாகிட்ட கேட்டு வாரேனுட்டு எங்கயோ போனான். கொஞ்ச நேரத்துல அங்க ஒரு குட்டிக்கலவரம்.

"மாப்ள எதோ கேக்குறாரு. மாப்ளைக்கு எதோ வேணுமாம்"னு ஒருத்தன் மாத்தி ஒருத்தர் தகவல் பரப்ப ஆரம்பிச்சுட்டானுங்க. நாங்க இங்க வயித்தப் புடிச்சுகிட்டு நிக்கிறோம். கடைசியா ஒரு பெரியவரு வந்தாரு,

"தம்பி கோச்சுக்காதீங்க. வெள்ளச்சாமிகிட்ட எதோ கக்கூசு வேணுமினு கேட்டீங்களாம். ராப்பொழுதுல வாங்கியார முடியாது. காலேல எத்தனக் கக்கூஸ் வேணும்னு சொன்னீகன்னா டவுன்ல எங்க கிடைக்கும்னு விசாரிச்சு வாங்கியாரச் சொல்றேன்"னு சொன்னாரு. இதக் கேட்டவுடன எங்களுக்கு வந்த கக்கூஸ் நின்றுச்சு. தலைய ஆட்டிட்டு மூணு பேரும் போய் படுத்தோம். எனக்கு தூக்கமெ வரல. இந்த ஊர் ஆம்பிளைகளுக்கே கக்கூஸ்னா என்னானு தெரிலயே, பொம்பளைங்க எப்படி இருப்பாங்க, நமக்கு பாத்ருக்கு பொண்ணு எவ்வளவு பட்டிக்காடா இருப்பாளோனு ஒரே யோசனையும், கலக்கமுமா இருந்தது. கொஞ்ச நேரத்துல மறுபடியும் வயித்த கலக்க ஆரம்பிச்சவுடன எங்கயாவது போய் உக்காந்தா சரினுட்டு சொம்புத் தண்ணிய எடுத்துகிட்டு மூணு பேரும் கிளம்புனோம். ஜேம்ஸ்க்கு வயக்காட்டு ஓரம் உக்கார பயம். பூச்சி, பாம்பு எதாவது கடிச்சிருமோனு.

அதனால, "நீங்க இங்க உக்காருங்கடா, நான் எங்கயாவது மேடு இருக்கானு பாக்குறேன்"னு
சொல்லிட்டு அந்தப் பக்கமா போயிட்டான். ஒருவழியா மூணு பேரும் கொள்ளைக்குப் போயிட்டு வந்து படுத்தோம். அடுத்தநாள் காலேலே ஊரே கலவரமா இருக்கு. பெரிய பிரச்சினை. அங்க அங்க ஆட்கள் ஓடுறாங்க. என்னனு ஒருத்தன்கிட்ட விசாரிச்சோம், "எவனோ அரசமரத்தடி பிள்ளையாராண்ட கொள்ளைக்குப் போயி வச்சிருக்கான் மாப்ளே. கைல கிடைச்சான்னா குடல உருவிருவோம்"னு கத்திக்கிட்டே அவனும் வெறிகொண்டு ஓடுனான். எங்களுக்கு விசயம் புரிஞ்சுருச்சு. நானும் மேத்யூவும் ஜேம்சை முறைச்சோம். எதோ மேடுனு நினைச்சு பிள்ளையார் சிலை இருக்க அரசமரத்தடி மேடைல உக்காந்து கொள்ளைக்கு போயிருக்கு அந்த ஜேம்ஸ் மூதேவி. விசயத்த அப்படியே மறைச்சு, எங்களுக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி அமைதியா இருந்துட்டோம். அப்புறம் அங்கிருந்த நாலு நாளும் பயத்துல ஜேம்ஸ்க்கு கொள்ளைக்கே வரல..." என்று அவர் முடிக்கும் போது வீடே சிரிப்பலையில் அதிர்ந்துகொண்டிருக்கும்.

பாட்டியின் வீடு ராவ்பகதூர் குடும்பத்திற்கு சற்றும் குறைவில்லாத ஜமீன் வீடு என்பதால் ஏகப்பட்ட தடபுடலுடன் திருமணம் முடிந்தது. பிறகு மதுரைக்கே வந்து மீண்டும் தாத்தா ஊர் சுற்றும் படலத்தை துவக்கியிருந்தார். சில காலம் கழித்து சபாபதி தாத்தாவின் அப்பாவும், அம்மாவும் உடல்நலக்குறைவால் இறந்துபோனார்கள். ஆனால் அதைப் பிந்தொடர்ந்து நடந்த அய்யா முத்துவேல்பிள்ளையின் மரணம் ஒரு பெரும் புயலை சபாபதி தாத்தாவின் வாழ்க்கையில் வீசச் செய்தது. சிறுவயதில் இருந்தே முத்துவேல்பிள்ளையின் கணக்குப்பிள்ளையிடம் எதாவது காரணம் சொல்லி கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி தன் அண்ணன், தங்கைகளுக்குக் கொடுப்பது சபாபதி தாத்தாவின் வழக்கம். பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் சபாபதி தாத்தாவிடம்தான் அவரது உடன்பிறந்தவர்கள் வந்து நிற்பார்கள். எத்தனையோ முறை இதற்காக முத்துவேல்பிள்ளையிடம் தாத்தா திட்டு வாங்கியிருக்கிறார். ஏனோ சபாபதி தாத்தாவைப் பிடித்த அளவிற்கு முத்துவேல்ப்பிள்ளைக்கு தனது மற்ற பேரக் குழந்தைகளைப் பிடிக்கவில்லை. "எல்லாருட்டயும் கவனமா இருடா சபா. இப்படி ஏமாந்தவனா இருக்கியே. எனக்கப்புறம் என்னடா செய்யப்போறே!" என சபாபதி தாத்தாவிடம் புலம்புவதை தன் அன்றாடக் கடமையாகவே வைத்திருந்தார். ஆனால் தன் அண்ணன் தங்கைகளைப் பற்றி சபாபதி தாத்தா புரிந்துகொண்டது முத்துவேல்பிள்ளை இறந்த இரண்டாவது நாளில்தான்.

அதுவரை "சபா எனக்கு இதுக்கு பணம் வேணும்டா. நீ சொன்னாதான் தாத்தா கொடுப்பாரு. வாங்கிக்கொடுடா" என தன்னை உபயோகப்படுத்திக் கொண்ட தன் அண்ணன், தங்கைகள் அனைவரும் முத்துவேல்பிள்ளை இறந்த இரண்டாவது நாளிலேயே சொத்துப் பிரச்சினையைத் துவக்கி விட்டார்கள். "தாத்தா சொத்துல எங்களுக்கும் பங்குண்டு. மொத்ததையும் நீயே சுருட்டிடலாம்னு பாக்குறியா?", என மனசாட்சியின்றிக் கேட்டார்கள் அவரது அண்ணன்கள். தங்கைகளோ தங்கள் கணவர்களின்மேல் பழியைப் போட்டு இப்போதே சொத்தோ, பணமோ வேண்டும் என நின்றார்கள். ஏற்கனவே தன்னை இத்தனை நாட்களாய்த் தாங்கிக்கொண்டிருந்த தூண் சாய்ந்துவிட்டதில் இடிந்து போய் உட்கார்ந்திருந்த தாத்தா, தனக்கு ஆதரவாய் இருப்பார்கள் என நினைத்தவர்கள் தன்னிடம் இப்படியானக் கேள்விகளைக் கேட்பார்கள் எனச் சற்றும் நினைத்திருக்கவில்லை. முத்துவேல்பிள்ளையை அடக்கம் செய்துவிட்டு வந்த அதே கையுடன் போட்டதை போட்டபடி விட்டுவிட்டு நடு இரவில் மனைவியையும், தன் நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார் தாத்தா. அந்த வீட்டில் இருந்து அவர்கள் எடுத்து வந்தது முத்துவேல்பிள்ளையின் படமும், பாட்டி வீட்டில் போட்ட நகைகளும் தான். பின் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆறுதல் சொன்னவர்கள் அவரது சிநேகிதர்களான ஜேம்ஸ் மற்றும் மேத்யூ. அதற்குப் பிறகு பாட்டி வீட்டின் ஆதரவோடு தாத்தா மேலும் படித்து பொறுப்புடன் சம்பாதித்ததெல்லாம் தனிக்கதை.

---

மதியம் வரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்த தாத்தாவிற்கு மூச்சு இழுக்கத் துவங்கிவிட்டது. பேச்சும் நின்றுவிட்டது. இரவு தாண்டுவதே மேல் என டாக்டர்கள் கூறிவிட்டார்கள். நாங்களும் உறவினர்கள் ஒவ்வொருவருக்காய் தகவல் சொல்லிக் கொண்டிருந்தோம். யாருமே தாத்தாவை உயிருடன் கடைசியாக ஒருமுறை பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இறக்கும் தருவாயில் இருப்போரை பிணமாகவே பாவிக்கும் பழக்கம் நம் ஊரில் மட்டுமே இருக்கிறதா இல்லை எல்லா நாட்டிலுமே இப்படித்தானா எனத் தெரியவில்லை. சிலர், "காலையில 'பாடி'ய எங்க கொண்டு போறீங்க?" எனக் கேட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு தாத்தாவின் உடன்பிறந்த இளைய சகோதரியும், அவர் பிள்ளைகளும் வந்தார்கள். தாத்தாவுக்குப் பேச முடியவில்லையேயொழிய நல்ல விழிப்புடன் தான் இருந்தார். காதில் விசயத்தைச் சொல்லியவுடன் அவர் முகம் கொஞ்சமா மலர்ந்தது. பல ஆண்டுகளாக அரவமே இல்லாதவர்கள் இறுதி நிமிடங்களிலாவது வந்திருக்கிறார்களே என்ற மகிழ்ச்சியாய் இருக்கலாம். சில நொடிகள் அவருக்கருகே நின்றுவிட்டு ஐ.சி.யூவிற்கு வெளியே சென்றனர். வழக்கமான விசாரிப்புகள் முடிந்தவுடன், வந்திருந்த பாட்டியின் மகன் மெல்ல ஆரம்பித்தார்,

"ஒரு சின்ன விசயம். நேரம் தப்புதான். ஆனா அப்புறமா நமக்குள்ள பிரச்சினை ஆயிர கூடாதுனுதான்.." என்று இழுத்தார்.

கொஞ்சம் யோசித்துவிட்டு, "பரவால்ல சொல்லுங்க", என்றார் அப்பா.

"இப்ப நாங்க இருக்க வீட்டுல எங்களுக்கு உரிமை இருக்குறதுனால மாமாகிட்ட லீகலா எதுவும் பத்திரமெல்லாம் வாங்கல. ஆனா உங்க கையெழுத்து இருந்தாதான் வருங்காலத்துல எங்களால வீட்ட விக்கவோ, கைமாத்தவோ முடியும். அதான் மாமா இருக்கப்பவே வாங்கிரலாம்னு.....".

ஐசியூவிற்குள் இழுத்துக்கொண்டிருந்த தன் அப்பா சபாபதியை சிலநொடிகள் திரும்பிப் பார்த்துவிட்டு, "எங்க போடனும்?" எனக் கேட்டார் அப்பா. பின் அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுக்கொடுத்தார். அனைத்தையும் ஐ.சி.யூ சுவர்களுக்கு உள்ளேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வடிந்துகொண்டிருந்தது.  

இரவு 12 மணிக்கு மேத்யூ தாத்தா வந்துவிட்டார்.
அப்பாவிடம்,

"அவன் எங்க?"

"ஐசியுல இருக்காரு மாமா"

"என்ன சொல்றாங்க? பிழைக்கமாட்டானாமா?"

"ஹ்ம்ம்ம்" என பதில் அளித்தபோது அப்பாவால் அதற்கு மேல் பேசமுடியவில்லை.
ஐசியுவிற்குள் சென்ற மாத்யூ, தன் நண்பன் சபாபதியையே பார்த்துக் கொண்டிருந்தார். பல நிமிட அமைதிக்குப்பின் சபாபதி தாத்தா, மிகவும் தட்டுத்தடுமாறி மேத்யூவிடம் மெதுவாகக் கேட்டார், "ஜேம்ஸ் எங்கடா?".

ஜேம்ஸ் இறந்து ஆறுமாதங்களுக்கும் மேல் ஆகிறது. மறந்துவிட்டார் போல! எனினும் நாள் முழுவதும் பேசாதவர் பேசத்துவங்கிவிட்டாரே என்ற மகிழ்ச்சி எங்களுக்கு.
ஒருசில நொடிகள் தாத்தாவையே பார்த்துவிட்டு, கண்களில் கண்ணீர் ஊற புன்னகைத்தவாரே,

"ஜேம்ஸ் கொள்ளைக்குப் போயிருக்கான்டா.." என்றார் மேத்யூ

அதைக்கேட்ட பாட்டி கதறி அழுதார். மரணம் முழுதாய் ஆக்கிரமித்துவிட்டிருந்த அந்த ஐசியூ அறையில் நட்பலை. மேத்யூ சொன்னதைக் கேட்டு மிகுந்த சிரமத்துடன், உடல் குலுங்கச் சிரித்தபடி மெதுவாகக் கண்களைக் மூடிக்கொண்டார் சபாபதி தாத்தா. மூன்று நாட்களாக தாத்தா உயிரோடிருக்கிறார் என மேடுபள்ளக் கோடுகளின் மூலம் காட்டிக்கொண்டிருந்த மானிட்டர் நேர்கோட்டுக்கு மாறியது. பாட்டி மட்டும் தொடர்ந்து கதறி அழுதுக் கொண்டிருந்தார். மேத்யூ, சபாபதி தாத்தா இறந்ததை கவனித்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.

------------------------------------------------------------------------------------------------

Monday, August 26, 2013

கேப்டன் வாழ்த்து- கோணாண்டிச் சித்தர்


மேடையிலே முழங்கினாலும்,
நடை'மேடை'யிலே சீறினாலும்,
பிரான்ஸ், சைபீரியா, கொட்டாம்பட்டி நாடுகளின்
புரட்சிச் சரித்திரம் பற்றி  பக்கம் பக்கமாய்
பலவாறு முழங்கினாலும்,
அம்மாவுக்குப் பிடிக்காததால்
வாழ்நாள் சாதனையாம்
சேது சமுத்திரமே வேண்டாம் எனக்கூறும்
புரட்சிப்புயல்களுக்கு மத்தியில்,
தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு
ராஜபக்சேவுக்கு சவால் விட்டாலும்,
கலைஞர் என்றால் கத்தியும்,
அம்மா என்றால் அமுக்கியும் வாசிக்கும்
செந்தமிழர்களுக்கு மத்தியில்,
பதுங்குக் குழியில் பதுங்கி எழுதும்
டைம்பாஸ் ஊடகங்களுக்கு மத்தியில்,
தைரியமாக சட்டசபையில்
நேருக்கு நேராய் எதிர்த்து நின்ற
உண்மையான புரட்சிக்கலைஞரே!
துணிச்சலின் தொழிற்சாலையே!
எங்கள் ஒப்பில்லா கேப்டரே!
"முடிஞ்சா அந்தம்மாகிட்ட கேளுங்கடா"என
பத்திரிக்கை பயந்தாங்கொள்ளிகளை
துகிலுரித்து விரட்டியவரே..  
எதிர்கட்சி ஹெலிகாப்டரே...
எங்கள் திராணியாரே...
வாழ்க நீ வாழ்க நீ...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  -தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாததால் தற்சமயம் ஆஃப்கனிஸ்தானில் வாழும் புலவர் கோணாண்டிச் சித்தர்.

Thursday, August 22, 2013

மெட்ராஸ் கஃபே

பதிவு உயிர்மையில் வெளிவர இருப்பதால் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறது. அடுத்தவாரம் மீள்பதிவு செய்யப்படும்.  சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி. 

Friday, August 16, 2013

மழை பெய்யும் தருணங்களில்.. -டான் அசோக்
மழை மனிதர்களுக்காகப் பெய்வதில்லை. மழை மண்ணுக்காகப் பெய்கிறது. யாருக்கோ யாரோ சுமந்து வரும் பூ மாலையை தனக்கானதாய் எண்ணி மகிழும் ஒருவனைப் போல மனிதர்கள் மழை வரும் போதெல்லாம் வானத்தைப் பார்த்து குதூகலிக்கிறார்கள். மழையோ இடையில் எது தடுத்தாலும் விழுந்து, வழுக்கி, சறுக்கி சேரவேண்டிய மண்ணில் எப்படியும் சேர்ந்து விடுகிறது. மண்ணிற்கும் மழைக்கும் பூமியின் முதல் நாளில் இருந்தே காதல் இருந்திருக்கிறது. சூரியனில் இருந்து பிய்ந்து வந்த நெருப்பு வட்டமாய் தகித்துக்கொண்டிருந்த பூமியை, தந்தையின் அரவணைப்பில் இருக்கும் காதலியை தீராத காதலால் திருடும் காதலனைப் போல, விடாமல் நீர் பொழிந்து திருடிக்கொண்டது மழை. மழை, பூமியை பருவமெய்த வைத்திருக்காவிடில் பூமி மனிதர்களைப் பெற்றிருக்காது.

பேச, எழுதப் பழகும் முன் மனிதன் முதன்முதலில் ஓவியம் வரையத் துவங்கியது அடைமழை பெய்த ஒரு அழகிய மாலைவேளையில் தான். கற்களைக் கூராக்கி, மிருகங்களின் கழுத்தைப் பதம் பார்த்துப் பச்சையாய் தின்ற மனிதனுக்குள் ஓவியனை உருவாக்கும் ஆற்றல் மழையைத் தவிர வேறெதற்கும் இருந்திருக்கும் என்பதை நம்புவதற்கில்லை. காதலிகளுக்கு இருந்திருக்கலாம். ஆனால் காதலியை மட்டுமல்ல காதலையே அடையாளம் காட்டும் பொருளாய் மழைதானே இதுவரைக்கும் இருக்கிறது. காதலுக்கும் மழைக்கும் ஒரு தொடர்புண்டு. மழையில் சொல்லப்பட்ட காதல்கள் நிராகரிக்கப்பட்டதாய் எந்த இலக்கியமும் இதுவரை சொன்னதில்லை, நாமும் கேள்விப்பட்டதில்லை.  மழையில் நனைந்த காதலர்கள் காதலுக்கும் காமத்திற்கும் மிக அருகிலும், முடியாதென்ற வார்த்தைக்கு மிக தொலைவிலும் நிற்கிறார்கள். முத்தமே கொடுக்காத காதலிகள் கூட மழை பெய்யும் சமயங்களில் முத்தத்தை மொத்தமாய் குத்தகை எடுத்துவிடுகிறார்கள்.  பிடிக்காத முகங்கள் கூட மழையில் நனையும்போது பிடிக்கிற முகங்களாய் மாறிவிடுகின்றன. முடியைக் கீழே இழுத்து, பாதி நெற்றி வரை பரவச் செய்து எந்த முகத்தையும் அழகாய் காட்டும் அழகுக்கலை மழைக்கு மட்டுமே கைவந்தது.  காதல் நிறைந்த முத்தங்களில் பரிமாறப்படும் எச்சிலைப் போல குடையின் விளிம்பில் பட்டு முகத்தில் தெறிக்கும் மழைத்துளிகளுக்கு தனி ருசியுண்டு. குடைக்குள் காதலியையும், வெளியே மழையையும் ஒருசேரக் கொண்டவன் சொர்கத்தின் சுகத்தை சுமார் என்பான். காதலிகள் தரும் முத்தங்களைப் போன்றது மழை. அதுவாய் நினைத்தால்தான் பெய்யும். சில மழைகள் பெய்தடித்து திணறடிப்பதுமுண்டு. சில இன்னும் பெய்யாதா என ஏங்க வைப்பதும் உண்டு. லேசாகப் பெய்து மண்வாசனை எங்கும் பரவிய பின் பூமிக்கு வராமலே ஏமாற்றும் மழைகள், உதடு வரை வந்து உரசிவிட்டு முத்தம் கொடுக்காமலே ஏய்க்கும் காதலிகளை நினைவுபடுத்துகின்றன. மழையில் நனைந்த காதலியைப் பார்ப்பது வரம். மழையில் நனைந்த ஈரமான கூந்தலில் இருந்து வரும் வாசமும், நெற்றியில் இருந்து நாசி வழியே உதடுகளில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியும், முகத்தில் அங்கங்கே ஒட்டியிருக்கும் நீர்த்துளிகளும் சில நொடிகளில் நெஞ்சங்களைக் கர்ப்பமாக்கி காமத்தை பிரசவித்து விடுகின்றன.  உலகின் அழகிய காமங்கள் எல்லாம் மழைப் பொழுதுகளில் உற்பத்தி ஆனவையே!        

காதலையும், காமத்தையும் மட்டுமல்ல எந்த மகிழ்ச்சியான உணர்வையும் வினையூக்கும் ஆற்றல் மழைக்குண்டு. வெயிலுக்கு எதிரியாய் சொல்லப்பட்டாலும், மழையை எதிரியாய்ப் பெறும் தகுதி வெயிலுக்கு இருப்பதாகச் சொல்லமுடியாது. மழை, ஞானத்தின் மொத்தவிலைக்கடை. மழை சோகமாய் இருக்கும் தருணங்களில் உள்ளுக்குள் இருக்கும் ஞானியை எழுப்பி விடுகிறது. மரத்தில் விழுந்து, இலையில் வடிந்து, கீழேத் துளித்துளியாய் ஒழுகும் மழையைப் பார்க்கும் ஒவ்வொருவனும் ஒருநொடியேனும் புத்தனாகிறான். புத்தர் போதிமரத்தடியில் இருந்தபோது மழை பெய்திருக்க வேண்டும். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தக் கதையாக புத்தரின் ஞானத்திற்கு போதி மரம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

மணலை மட்டுமல்ல, மனதையும் கழுவும் ஆற்றல் மழைக்கு உண்டு. மழை பெய்யும் போது எல்லா மனங்களிலும் பெரும்பாலும் சமாதானமே நிலவுகிறது. ஏதோ நல்ல செயலை செய்யலாமா வேண்டாமா எனக் குழப்பத்தில் நிற்பவற்களை "உடனே செய்" என மழை தலையில் தடவிச் சொல்கிறது. மழையின் சத்தம் எதிர்மறை எண்ணங்களுக்கு ஒவ்வாததாக இருக்கிறது. எதாவதொரு மழையின் போது எப்போதாவது ஒருமுறையேனும் கோபம் வந்திருக்கிறதா என எண்ணிப்பார்த்தால் அப்படி எதுவும் எப்போதும் வந்ததாகத் தெரியவில்லை. மழையின் காரணமாக கெட்டுப்போன வேலைகளால் ஏற்படும் எரிச்சல் கூட மழையை சபிக்கக்கூடிய அளவிற்குக் கடினமானதாய் ஏற்படுவதில்லை. சாக எண்ணி கடைசி மாடிக்குப் போன எத்தனையோ பேர் மழையைப் பார்த்து மனம் மாறியிருக்கலாம். கொலைகாரர்களில் எத்தனையோ பேரின் மனங்களைக் கூட கடைசி நேரத்தில் மழை கழுவியிருக்கக்கூடும்.

வரிகளுக்கிடையே படிக்க வைக்கும் அறிவைப் போல, காட்சிகளுக்கிடையே பார்க்க வைக்கிறது மழை. சாவு வீடுகள் கூட மழை பெய்யும் தருணங்களில் வெறும் சோக வீடுகளாய்த் தெரியாமல் சாவிற்கும், மனிதர்களுக்குமான உறவை உணர்த்தும் கண்காட்சி அரங்கங்களாகத் தெரிகின்றன. மழையில் நனைந்த சாவுவீட்டில் உதிர்ந்த ரோஜாப்பூக்கள் விட்டுச் செல்லும் வாசம் நாசி வழியாக குடலுக்குள் ஊடுருவும் போது சாவு நமக்கு மிக நெருக்கத்தில் வந்து போகிறது. நமது சாவுக்கான ரோஜா இன்னமும் மலரவில்லை என்றாலும் அதுவும் இப்படித்தான் இருக்கும் என மழை உணர்த்திப் போய்விடுகிறது. சாதாரணமாக மறந்து போகக்கூடிய சராசரியான நாட்களில் மழை பெய்துவிட்டால், அந்நாட்கள் நினைவில் நீங்கா இடம் பெற்றுவிடுகின்றன. வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவங்களில் பெரும்பாலானவை மழை பெய்யும் நாளிலேயே நடப்பது எதேச்சையான ஒன்றல்ல.

கவிஞர் இனத்தின் அதிகாரபூர்வ கடவுளாய் மழை இருக்கிறது. மண்ணிற்கு அடுத்து கவிதைகளுக்கே அவை மிக நெருக்கமாய் இருக்கின்றன. மழை பெய்யும் சத்தம் போதை. அது தரும் குளிர் காமத்தின் உச்சநிலை. இரண்டிலும் ஒருசேர நனைய முடிந்த கவிஞர்கள் காலத்தால் அழியாத கவிதைகளை தாளில் தடவிவைத்து விடுகிறார்கள்.

மழை ஆயிரமாயிரம் காலமாய் மண்ணைக் காதலித்தாலும் வழியில் நிற்கின்ற ஒரே காரணத்திற்காக மனிதர்களுக்கும் எவ்வளவோ வழங்கிக் கொண்டிருக்கிறது. மின்கம்பியில் அமர்ந்தபடி நனைந்த தலையை சிலுப்பிக் காயவைக்கும் குருவிகள், உடலைச் சிலுப்பியபடியே ஓரமாய் நடக்கும் தெருநாய்கள், மழையால் உயிர் பெற கடைசியாக ஒருமுறை முயற்சித்து தோற்றுக் கிடக்கும் நனைந்த சருகுகள், திடீரென எட்டிப் பார்க்கும் காளான்கள், தலைக்குப் பிடிப்பதா புத்தகப் பைக்குப் பிடிப்பதா எனத் தெரியாமல் குடையை முன்னும் பின்னுமாய் மாற்றிமாற்றி ஆட்டி இரண்டையுமே நனைத்து நடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள், தாமரை இலையில் மழை பெய்தததைப் போல நீர்த்துளிகள் நிற்கும் அழகிய முகங்களுடன் செல்லும் குமரிகள் என மழையை விட அழகாய் மழை விட்டுச் செல்லும் தடங்கள் ஏராளம். நடப்பை விட தடயங்கள் அழகானவை என்பதையும் மழையே கற்றுத்தருகிறது. மனிதர்கள் விரும்புவதைப் போல மழை தனி அடையாளங்களை விரும்புவதில்லை.  சாகக்கிடந்த எதோ ஒரு விதை எதேச்சையாகப் பெய்த எதோ ஒரு மழையில் உயிர்பிழைத்து பெரும் விருட்சமாய் வளர்ந்திருக்கலாம். எந்த விதை எந்தத் துளியில் முளைத்தது என்பது தெரியாதெனினும் ஒவ்வொரு பிரம்மாண்ட விருட்சத்தின் பின்னும் அடையாளம் தெரியாத ஒரு மழையின் துளி இருக்கிறது.

எத்தனையோ மழைகள் லட்சம் வருடங்களாய் பெய்திருக்கின்றன. மாமோத்கள் காலத்தில் பெய்தது, டினோசர்களுக்கும் பெய்தது, இன்று மனிதர்களுக்கும் பெய்கிறது. நாளை எதுவுமே இல்லையென்றாலும் மழை பெய்துகொண்டுதான் இருக்கும்.  மழையைப் பொறுத்தவரை நாம் மண்ணுடனான அதன் காதலால் ஏற்பட்ட விபத்து. நமது உலகம் அழிந்தாலும் புதிய உலகம் உருவாகும் வரை மழை பெய்யும். ஆனால் நம்மைப் போல வேறு யாராலும் மழையை மனதிற்குள் உணர முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் மழை அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது. அதன் தேவையெல்லாம் மண்ணைச் சேரவேண்டும் மண் இருக்கும் வரை மழை பெய்யும். மழை மனிதர்களுக்காகப் பெய்யவில்லை. மண்ணுக்காகப் பெய்கிறது.

Thursday, August 15, 2013

இந்திய, தமிழ்தேசியத்தில் நரிகளும், கழுதைப்புலிகளும் -டான் அசோக்


இந்திய தேசிய உணர்வு என்பது மிகவும் விசித்திரமான ஒன்று. எனக்கு பள்ளிப்பருவத்தில் மிதமிஞ்சி இருந்த அந்த உணர்வை இப்போது நினைக்கும் போது ஜிலேபியுடன் சாம்பாரை தொட்டுச் சாப்பிடுவதைப் போல ஒரு வித்தியாசமான உணர்வே ஏற்படுகிறது. முதன்முதலில் எனக்குள் சுதந்திர தாகத்தை ஊட்டியவர் நடிகர் சிவாஜி கணேசன். கப்பலோட்டியத் தமிழன் படத்தில் அவர் இழுத்த செக்கையும், அவர் பேசிய வசனங்களையும் பார்த்து என் நரம்புகள் நான்காம் வகுப்பு படிக்கும்போதே சுதந்திர வேட்கையைக் கவ்வத் துவங்கி விட்டன. பிறகு பள்ளியில் ஜனகனமன பாடும்போது காலின் சுண்டு விரலில் இருந்து உச்சந்தலையின் உச்சாணிமுடி வரை ஜிவ்வென்ற ஒரு வெறி ஏறும். பலகாலம் சென்றுதான் புரிந்தது எந்தப் பள்ளியிலுமே தேசிய கீதம் பாடும் வாத்தியார்கள் உள்ளிட்ட யாருக்குமே அதன் அர்த்தம் தெரியாது என்பது.

தேசியம் குறித்த முதல் சந்தேகம் தோன்றியதும் கப்பலோட்டிய தமிழன் பார்த்தபோதுதான். அதில் வெள்ளைக்காரன் ஆணை பிறப்பிப்பான், ஆனால் இந்தியர்களை அடிப்பதெல்லாம் இந்திய ஆட்கள் தான். "போலீசா இருக்குறதெல்லாம் நம்மூர் ஆட்கள் தானப்பா? ஏன்பா அவங்களே நம்மளை அடிக்கிறாங்க?" என நான் கேட்ட கேள்விக்கு எதோ பதில் சொல்லி அப்பா சமாளித்தார். அது சமாளிப்புக்காக சொல்லப்பட்ட பதில் என்பதாலோ என்னவோ அது என்னவென்று எனக்கு நினைவில்லை. ஆனால் கேள்வி இன்னும் பச்சையாக நினைவில் இருக்கிறது. உத்தியோகத்திற்காக சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்தவர்களை நாம் மறந்துவிட்டோம். ஜெனரல் டயர் மட்டும் நம் நினைவில் இருக்கிறார். சிதம்பரனாரை அடித்த போலீசுகளின், ஜாலியன் வாலாபாக்கில் பலரை சுட்டுக்கொன்ற போலீசுகளின் வாரிசுகள் இப்போது எங்காவது சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருக்கலாம் என யோசிக்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது.

அந்த போலீசுகளை எல்லாம் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களுடன் பொறுத்திப் பார்த்தால் அவர்கள் எல்லாம் அப்படியே ஆட்சிக்கு வந்துவிட்டார்களோ எனத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. மக்களை இன்னமும் அடிக்கவும், மக்களின் உரிமை பற்றி கவலைப்படாமல் மந்தைகள் போல வைத்திருக்கவும், இறையாண்மையைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் வடகிழக்கு மாகாண மக்களையும், காஷ்மீர் மக்களையும் கொடூரமான நடத்துவதற்கும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஜெனரல் டயர்களின் ஆணைக்காக காத்திருக்க வேண்டிய தேவையும் சுதந்திரத்திற்குப் பின் அவர்களுக்கு ஏற்படவில்லை. அன்று டயரின் ஆணையை செவ்வனே நிறைவேற்றிய போலீசுகளைப் போல, இன்றைய ஆட்சியாளர்களின் ஆணையையும் கேள்வியின்றி நிறைவேற்ற ராணுவவீரர்கள் இருக்கிறார்கள். இந்தியா தன் கையில் இருந்து நழுவக்கூடாது என்ற வெறியில் ஆங்கிலேயர்கள் ஆடினார்கள் என்றால் இந்தியா உடைந்துவிடக் கூடாது என்ற வெறியில் இந்திய ஆட்சியாளர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்கள் தான் வேறு, காரணம் ஒன்றுதான்.

ராஜபுத்திர வீரர்களைப் பற்றி நமக்குத் தெரியும். எந்தக் காலத்திலுமே ஒற்றுமையாக இருந்ததாய் வரலாறு கிடையாது. மகளின் காதலைக் கெடுப்பதற்காக, எங்கிருந்தோ வந்த முகமது கோரியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு மருமகன் பிரித்விராஜை மாமனார் ஜெய்சந்த் கொன்ற வரலாறுகள் எல்லாம் கூட உண்டு. காலம் காலமாக இதுதான் இந்தியா. ஈழம், காஷ்மீர், அசாம், தமிழக மீனவர்கள் என இப்போதும் இதுதான் இந்தியா.

இந்திய தேசிய உணர்வு ஏன் கேலிக்குரியது என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழ் மொழி இனத்தவருக்கும் ஆங்கிலேயருக்கும் எவ்வளவு மொழியியல், இனவியல் வித்தியாசம் இருக்கிறதோ அதைவிட அதிகமாகவே வட இந்தியர்களுக்கும் தமிழ் மொழி இனத்தவருக்கும் உண்டு. இது கிழக்கு மாகாண மக்களுக்கும், பழங்குடிகளுக்கும் கூடப் பொருந்தும். வட இந்தியர்கள் இனரீதியாக சிங்களர்களின் சகோதரர்கள். நமக்கோ இருவருமே அந்நியர்கள். ஆங்கிலேயனிடமிருந்து இன்னொரு அந்நியனிடம் நமது ஆட்சியதிகாரம் போயிருக்கிறதேயொழிய கிடைத்த விடுதலை என்பது நமக்கானது அல்ல. தேசியம் என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லியெல்லாம் இந்த பேதத்தை நீக்க முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தோடு நின்றுவிடுகிறது.

இந்தி பேசும் மாநிலங்களுக்குள் எதோ கொஞ்சம் ஒற்றுமை நிலவுகிறது. இங்கே வேறு எந்த மாநிலத்திற்குள்ளாவது ஒற்றுமை இருக்கிறதா? உள்நாட்டுக்குள்ளேயே எவ்வளவு இனவியல் சார்ந்த கேலிகள், கிண்டல்கள். ரேசிசம் ஆறு போல ஓடுகிறதா இல்லையா? இதுவரையில் உங்கள் பள்ளி, சமூகம், கல்லூரி உங்கள் மூளையில் புகுத்தியதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு தனியாக யோசித்துப் பாருங்கள். உங்கள் அலுவலகத்தில் எல்லா இந்திய இனத்தவர்களும் ஒரே ரீதியில் நடத்தப்படுகிறார்களா? உங்கள் மலையாளி மேலதிகாரி உங்களிடமும் உங்கள் சக மலையாளி ஊழியரிடமும் ஒரே மாதிரி நடந்துகொள்கிறாரா?

இந்திய ராணுவ வீரன் ஏன் சொந்த நாட்டு மக்களைக் கொல்கிறான்? வன்புணர்வு செய்கிறான்? எங்கோ பிறந்து, எதோ மொழி பேசி, எதோ கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு ராணுவ வீரனை இந்தியாவின் மற்றொரு பகுதியான  வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்பினால் அதை அவனால் உணர்வு ரீதியாக தன் நாடு என ஒப்புக்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணப்பெண்களை வன்புணர்வு செய்யும்போதும், கொல்லும்போதும் சொந்த நாட்டுப் பெண் என்ற உணர்வு ஏற்படுவதுமில்லை. வேற்று நாட்டு ராணுவ வீரர்களை, மக்களை எப்படி எந்த உறுத்தலுமின்று கொல்ல முடிகிறதோ அதேபோல சொந்த நாட்டு மக்களிடமும் அவனால் நடந்ட்துகொள்ள முடிகிறது. உலகின் எந்த ராணுவவீரனாவது சொந்த நாட்டுப் பெண்களை வன்புணர்வு செய்திருக்கிறானா? மிகவும் மோசமாக சொல்லப்படும் சிங்கள ராணுவம் கூட சிங்களப் பெண்களிடம் தப்பாக நடந்த வரலாறு உள்ளதா? இந்தியாவில் மட்டுமே இந்தக் கேவலம் உண்டு. இப்படி இருக்கும் வேறுபாட்டை இறையாண்மை என்ற பெயரில் கட்டிவைத்து கட்டிவைத்து என்ன செய்யப்போகிறோம்?

ஆங்கிலேயன் என்ற பொது எதிரி வந்திருக்காவிட்டால் நாமெல்லாம் நமக்குள் எப்போதும் போல அடித்துக்கொண்டும், காட்டிக் கொடுத்துக் கொண்டும்தான் இருந்திருப்போம். அவன் போனபின்பு பாகிஸ்தான் என்ற எதிரியும், அதன் மேல் நாம் கொண்ட வெறுப்பும் தான் நம்மையெல்லாம் இணைத்து வைக்கும் ஒரே மையப்புள்ளியாக இருக்கிறது. மற்றொன்று அவர்களுடன் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சுகள்! ஆங்கிலேயர்கள் வந்த போது வேகவேகமாக ஆங்கிலம் பயின்றுவிட்டு, யார் அவர்களிடம் முதலில் ஓடிச்சென்று கையைக் கட்டி சேவகம் செய்தார்களோ அவர்கள் தான் இன்று இந்தியாவின் அரசியலையும், கொள்கைகளையும் தீர்மானிக்கும் இடங்களில் இருக்கிறார்கள் என்பதுதான் நகைமுரண்.

தமிழகம் இருக்குமிடத்தில் உத்திரப்பிரதேசம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இலங்கை ராணுவ வீரர்கள் உத்திரபிரதேச மீனவர்களை சுட்டுக்கொன்று கொண்டே இருந்தால் இந்நேரம் பாகிஸ்தானையெல்லாம் கடாசிவிட்டு இந்திய அரசும், இந்திய வெகுஜன ஊடகங்களும் பிரதான எதிரியாக இலங்கையை தத்தெடுத்திருப்பார்கள். ஒட்டுமொத்த இந்திய மக்களும் கூட பாகிஸ்தான் மீது காட்டும் வெறியை எல்லாம் இலங்கை மீது காட்டியிருப்பார்கள். இந்திய தேசியத்தில் சாவிற்கான மதிப்பு கூட அந்தப் பிணம் உயிரோடு இருக்கும்போது என்ன மொழி பேசியது என்பதை வைத்துதான். தமிழ் பேசிக்கொண்டிருந்த பிணம் என்றால் மதிப்பு கிடையாது. ஆனால் ஒரு கொடுமை என்னவென்றால் நம் தமிழர்களிலே பலர் கூட பாகிஸ்தானை மட்டுமே தங்கள் ஜென்மவிரோதியாக எண்ணிக் கொண்டிருப்பதுதான்.

இந்தியா போன்ற பல இனங்களை உள்ளடக்கிய நாடுகளில் பெரும்பான்மை மொழியினர் ஆதிக்கம் செலுத்துவதை எக்காலத்திலுமே தடுக்க முடியாது. எல்லோருக்கும் உரிமையை பிரித்துக்கொடுக்க, எல்லோரையும் சமமாக நடத்த காட்டிக்கொடுத்தும், கெடுக்கவும் மட்டுமே பழக்கப்பட்டுவிட்ட இந்திய மனமும், இந்திய புத்தியும் என்ன அவ்வளவு நல்ல எண்ணம் படைத்ததா என்ன?  நேருவில் இருந்து ராஜேந்திர பிரசாத் வரை ஆங்கிலேயனின் திணிப்புகளுக்கு எதிராக போராடி அவனை அனுப்பிவிட்டு, அதே திணிப்பை தானே சிறுபான்மை மொழி மக்களிடையே செய்ய முயன்றார்கள்.

இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வெளியேறிய போது தனித்தனி குடியரசுகளாகப் பிரிந்திருக்கவேண்டும். இப்போது பிரிவது என்பது கடினம் என்றாலும் எந்த இன மக்களுமே ஆதிக்கத்திற்கு எதிராக அடங்கிப் போனதாக எந்த நாட்டு வரலாற்றிலுமே இல்லை எனும்போது அசாம், தமிழகம், காஷ்மீர் மட்டும் என்ன விதிவிலக்கா?

இந்தி பேசும் மக்கள் தொட்டிலில் இருந்தே இந்தி கேட்டு வளர்கிறார்கள். சிந்திப்பதும் இந்தியிலேயே சிந்திப்பார்கள். நமக்கோ ஆங்கிலமும் சரி, இந்தியும் சரி அந்நிய மொழிகள். நிலைமை இப்படியிருக்க, ஒன்று அவர்கள் இந்தியிலும் நாம் நம் மொழியிலும் தேர்வுகள் எழுதுவது சரியான நேர்மையான போட்டியாக இருக்கும். அல்லது இருதரப்புமே ஆங்கிலம் என்ற வேற்றுமொழியில் தேர்வு எழுதுவது நேர்மையாக இருக்கும். ஆனால் அதைவிடுத்து இந்திக்காரர்கள் இந்தியிலும், மற்றவர்கள் ஆங்கிலத்திலும் தேர்வு எழுத வேண்டுமென்பது எந்த வகையில் நியாயம்? இதுபோன்ற ஏராளமான விசயங்களில் இந்திக்காரர்களால் நடத்தப்படும் மத்திய அரசு சிறுபான்மை மொழியினரை ஏமாற்ற முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறது. ரஷ்யா முதற்கொண்டு இறுக்கிக் கட்டப்பட்ட பல நாடுகள் உடைந்ததற்கு முக்கியக் காரணம் மொழிப்பிரச்சினையும், மொழி ஆதிக்கமும் தான். காலப்போக்கில் இந்தியா உடைவதென்பதை தவிர்க்க முடியாது. அது நிகழும் வரை பெரும்பான்மையினரான இந்தி பேசும் இந்தியர்களின் ஆதிக்கத்தில் இருந்து ஒவ்வொரு உரிமையையும் நாம் போராடித்தான் வாங்க வேண்டியதிருக்கும். வாங்கித்தான் ஆகவேண்டும்.

ஆங்கிலேயர்கள் வெளியேறிய போது ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து உயர்சாதிக்காரர்களிடம் கைமாறுகிறதேயொழிய அது உண்மையான சுதந்திரம் இல்லை, உண்மையான சுதந்திரம் என்பது சாதி வேறுபாடுகளற்ற சமத்துவ பூமியில் தான் கிடைக்கும் என்பது பெரியாரின் ஆணித்தரமான நம்பிக்கை. அது எவ்வளவு உண்மை என்று இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதே போன்ற சிக்கல் தமிழ்தேசியத்திலும் இருக்கிறது. சாதி வேறுபாடுகளைக் களையாமல், சாதிப்பிரச்சினைகளையும், சாதி உணர்வுகளையும் நீக்காமல் நாளை இந்தியா உடைந்து நமக்கு தனித்தமிழ்நாடு கிடைத்தால் ஆட்சி அதிகாரம் இந்தி உயர்சாதிக்காரர்களிடமிருந்து, தமிழ் உயர்சாதி மற்றும் ஆதிக்கசாதிக்காரர்களிடம் மாறுமேயொழிய உண்மையான விடுதலையாய் இருக்காது. அப்படி அமையும் ஒரு தேசியம் மீண்டும் வேறுபாடுகளின் இருப்பிடமாக, போலியாகத்தான் இருக்குமேயொழிய உணர்வு ரீதியானதாக இருக்காது. இந்திக்காரர்கள் என்ற பொது எதிரியும் இல்லாவிட்டால் நசுக்கப்படும் விளிம்புநிலை, நடுத்தரவர்க்க மற்றும் தலித் தமிழர்களின் கதி அதோ கதிதான். இப்படி ஒரு தேசியத்தைதான் தற்போதைய தமிழ்தேசியவாதிகள் சுயநலத்தோடு முன்வைக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் போனவுடன் இந்தி ஆதிக்கத்தைக் கையிலெடுத்த ராஜேந்திரபிரசாத்களைப் போலவே! "தமிழ்தேசியம் அமைந்தவுடன் எல்லாவற்றையும் சரி செய்வோம் வாங்கடா", என்றழைக்கும் ஆட்களை நம்பவே முடியாது என்பதுதான் நேருவும், ராஜேந்திரப் பிரசாத்துகளும் நமக்கு கற்றுக்கொடுத்த உண்மை.

இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துச் சொல்வதா இல்லை திட்டித் தீர்ப்பதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் எதுவுமே இல்லாமல் வெறுமனே திட்டித் தீர்ப்பதில் சுகம் கண்டுகொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் குணத்திலும் எனக்கு உடன்பாடில்லை. நமக்கு இந்திய சுதந்திரம் பல விசயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஆதிக்க மொழி, ஆதிக்க இனத்தவர்கள் சுதந்திரமான பூமியில் எப்படி ஆதிக்கம் செலுத்துவார்கள் என கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்தேசியவாதிகள் தமிழகத்தை சாதிவேறுபாடுகள் உள்ள ஒரு குட்டி இந்தியாவாக மாற்றாமல் உண்மையான விடுதலை பெற்ற சமதர்ம தமிழகமாகவே வடிவமைப்பதற்கான முன்னெடுப்புகளில் இறங்க வேண்டும். இறங்கினால் மட்டுமே இந்திய தேசியத்தை குறை சொல்லும் தகுதி அவர்களுக்கு உண்டு.
அதுவரை இந்திய தேசியத்துக்கு எதிரான அவர்களது அரைகூவல்கள் நரியிடமிருந்து இரையைப் பிடுங்க எத்தனிக்கும் கழுதைப்புலிகளின் கூச்சலாகவே கருதப்படும்.

Tuesday, August 13, 2013

ஜனநாயக சர்வாதிகாரத்தில் கமல்களும், விஜய்களும், மக்களும் -டான் அசோக்உணவின்றி தவித்த குடிகளை நோக்கி, "ரொட்டி இல்லையென்றால் என்ன? கேக் சாப்பிடுங்கள்." எனக் கேலிப்பேசும் அளவிற்கு மன்னர்களும், ராணிகளும் இருந்தார்கள். பிறகு மன்னர்களை புரட்சி மூலம் துரத்திய சர்வாதிகாரர்கள் பெரும்பாலும் பிடிவாதக்காரர்களாக, பைத்தியக்காரத்தனமான கொள்கைகளால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற பால் பாட், ஹிட்லர், இடி அமீன் போன்ற அரக்கர்களாக பெரும்பாலும் தான்தோன்றித்தனமாக இருந்தார்கள். பின் ஏகப்பட்ட தத்துவஞானிகளின் தொடர் பரப்புரை, தேடல்கள், புரட்சிகள் மூலம் ஜனநாயகம் என்ற ஆட்சிமுறை பிறந்தது. அதாவது ஆட்சியாளர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை. மனித சமூகத்தின் பல ஆயிரம் வருட அனுபவத்திற்குப் பின் சிறந்த ஆட்சிமுறையாக ஒப்பீட்டளவில் கருதப்படும் ஜனநாயகத்திலும் கூட சர்வாதிகாரம் கலந்தே இருப்பதுதான் அதன் சாபக்கேடு.

ஜனநாயகத்தில் சர்வாதிகாரர்கள் அல்லது சர்வாதிகாரிகள் முளைப்பதற்கான அச்சாரம் மக்களின் ஒற்றுமையின்மை. அவர்களுக்குத்தானே பிரச்சினை என இவர்களும், இவர்களுக்குத்தானே பிரச்சினை என அவர்களும் எப்போதும் அமைதியாய் இருந்துவிடுகிறார்கள். இன்னும் சிலநேரம் பிடிக்காதவர்களுக்கு அரசால், ஆட்சியில் இருப்பவர்களால் பிரச்சினை என்றால் கொண்டாடக் கூட செய்கிறார்கள். அவர்களுக்கு நடப்பது தானே நாளை நமக்கும் என்ற தொலைநோக்கு இல்லாமல் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் செயல்தான் இந்த மவுனம். ஜனநாயக சர்வாதிகாரர்களுக்கு ஊக்கமே இந்த மவுனம் தான்! உதாரணமாக இலங்கையில் தமிழர்கள் உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, கலாச்சார ரீதியாக தாக்கப்படும்போது அமைதியாய், நம்மை விரட்டியவர்கள் தானே அழிகிறார்கள் என வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இலங்கை இஸ்லாமிய சமூகத்தின் மேல் இப்போது கைவைக்கத் துவங்கியிருக்கிறது இலங்கை அரசு! தமிழ்நாட்டில் கூட இதற்கு ஒரு குட்டி உதாரணம் உண்டு. அது என்ன என்பது கடைசியில்.

இப்போது நம் ஊருக்கு வருவோம். நம் நாட்டில் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிலை நாட்டவும், அதன்பால் ஒரு பயத்தை ஏற்படுத்தவும், குரல்களை நசுக்கவும் ஆட்சியாளர்களும் சரி, செல்வாக்கானவர்களும் சரி, பெரும்பாலும் பயன்படுத்துவது காவல்துறையையும், நீதிமன்றத்தையும்.


உதாரணத்திற்கு தற்போதைய ஆட்சியாளர்களை எடுத்துக் கொள்வோம். மேடைகளிலே கர்ஜிக்கும் அரசியல்வாதிகளில் இருந்து, ஊடகங்களில் நியாயம் பேசும் எழுத்தாளர்களில் இருந்து, திரையில் நீட்டி முழக்கும் நடிகர்களில் இருந்து, முகநூலில் பதிவிடும் ஒரு சராசரி குடிமகன் வரை ஜெயலலிதா அரசு போடும் அவதூறு வழக்குகளுக்கு பயப்படுகிறார்கள். ஜெயலலிதா அரசு ஆட்சிக்கு வந்தவுடன் யார் மீதாவது போடும் முதல் அவதூறு வழக்கில் துவங்கும் இந்த பயம் ஒரு கிருமி போல மெல்லப் பரவி பெரும் வியாதியாக வியாபிக்கிறது. ஐந்தாண்டுக்கொருமுறை வரும் இந்த வியாதி நிமிர்ந்திருக்க வேண்டிய ஊடக சுதந்திரத்தின் முதுகெலும்பில் புற்றுநோயை தோற்றுவித்துவிடுகிறது. நாட்டில் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதைப்பற்றி பேசாமல் சம்பந்தமேயில்லாத விசயங்களை தலைப்புச் செய்தி ஆக்கிவிடுகிறார்கள். பற்றாக்குறைக்கு கோடிகளில் கிடைக்கும் அரசு விளம்பரத்தின் மேல் உள்ள ஆசையும் வாயைக் கட்டிப் போட்டு விடுகிறது. இப்படி எல்லோருமே எதோ ஒரு வகையில் வாய்க்கட்டுக்கு, சர்வாதிகாரத்திற்கு உள்ளாகிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சிகளில் எப்போதும் உச்சகட்டத்தில் இருக்கும் இந்த சர்வாதிகாரம் அவர் தொடங்கி வைத்த விசயமல்ல. ராஜாஜி, பக்தவத்சலம் காலத்திலேயே புழக்கத்தில் இருந்த பழக்கம் தான் இது. ஜெயலலிதா இதை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் பாஷையில் சொல்வதானால் தமிழகத்தை அவதூறு வழக்குகளிலும், ஜனநாயகப் படுகொலைகளிலும் 'நியூமெரோ யூனோ' ஆக்கியிருக்கிறார். வடக்கே மாயாவதியும், மம்தாவும் இதில் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள். இப்போது அகிலேஷ் யாதவும் இந்த வரிசையில்.

கலைஞர் ஆட்சியில் முதல்வரை விமர்சித்தும், மோசமாக சித்தரித்தும் பல படங்கள் வந்திருக்கின்றன. இதைப் பெரும்பாலும் கண்டுகொள்பவர் அல்ல அவர். கண்டுகொண்டாலும் கூட ஜெ போல கடுமையானவர் இல்லாததால் அவரை சுலபமாக "பாசத்தலைவரே அவரே இவரே" என ஐஸ் வைக்கும் வேலையையும் திரைத்துறையினர் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். முதல்வன் போன்ற விதிவிலக்குச் சம்பவங்களும் உண்டு. முதல்வனில் வரும் வில்லன் கதாப்பாத்திரம் கலைஞரைச் சுட்டுகிறது என ஊடகங்கள் கிளப்பிவிட, அதனால் திமுகவினரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது முதல்வன். மாய்ந்து மாய்ந்து கேபிளில் ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். பதறியடித்த சங்கரும், தயாரிப்பாளரும் மாதேஷும் கலைஞரைப் பார்த்தபின் திமுகவினர் கண்டிக்கப்பட்டு ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டது. திரைத்துறையினர் மீதான திமுகவின் அதிகபட்ச எதிர்ப்பு என்பது இதுதான். கலைஞரின், எம்ஜிஆரின் நட்பையும், கலைஞரின் காதலையும் கூட சித்தரித்த இருவர் படம் கலைஞர் ஆட்சிகாலத்தில் தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவைப் பற்றி யாரேனும் அப்படி ஒரு படம் எடுத்து இப்போது வெளியிட முடியுமா? வெளியிட வேண்டாம், எடுக்கிறார் எனத் தெரிந்தாலே அதோ கதிதான்!

அதே நேரத்தில் திமுகவின் தலைமைக்கு மாறாக சன்பிக்சர்ஸ் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. மிரட்டல்களும், கெடுபிடிகளும் உச்சக்கட்டத்தில் இருக்க, மீடியா மாஃபியாகவே நடந்துகொண்டார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டு, சன் பிக்சர்ஸ் என்ற தண்ணீர் தொட்டிக்கு பயந்து அதிமுக ஆட்சி என்ற வெள்ளத்தில் குதித்தவர்கள் தான் விஜய் போன்றவர்கள்.

தன் மேல் உள்ள குறைகளை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க, அவர்களின் வாயை அடைக்க அவதூறு வழக்குகளை பயன்படுத்தி வந்த ஜெ அரசு இப்போது யாருக்குமே அரசியல் ஆசையே வரக்கூடாது, யாரும் யாரையும் அடுத்த பிரதமராக முன்மொழியக் கூடாது என்ற அளவில் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதுதான் கொடுஞ்சோகம். "வேட்டி கட்டிய தமிழர் பிரதமர் ஆகவேண்டும்", எனச் சாதாரணமாகச் சொன்ன கமலே அந்தப் பாடு பட்டபோது, "அடுத்த முதல்வர் நாந்தான். Time to lead" எனச் சொன்ன விஜய் தப்பிக்கவா போகிறார்? போகிற போக்கைப் பார்த்தால் திரைபடங்களில் யாருமே முதல்வர் வேடத்தில், பிரதமர் வேடத்தில் நடிக்கவே கூடாது என்ற நிலைமை வந்துவிடும் போல. விஜய்க்கு ஆதரவு கொடுத்த தனுஷ் போன்ற நடிகர்கள் கூட "நான் அப்படிச் சொல்லவே இல்லையே" என பல்டி அடிக்கும் அவல நிலைதான் இங்கே நிலவுகிறது.

சேரன் மகள் காதல் விவகாரத்தை, ஒருவரின் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையை பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிய பத்திரிக்கைகள், ஒரு முதல்வரின் தனிப்பட்ட கோபத்திற்காக ஒரு திரைப்படத்தை வெளியிடவே முடியாமல் இருக்கும் நிலைமையைப் பற்றி எழுதியிருக்கின்றனவா எனப் பார்த்தால் 'மூடுமந்திரம்' போல எந்தத் தகவலையுமே காணோம்! அவ்வளவு விசுவாசம், அவ்வளவு பயம்!  விஸ்வரூபத்திற்கான தடையின் காரணத்தை இஸ்லாமிய இயக்கங்கள் மேல் சுலபமாக போட முடிந்தது, ஜெவும் அழகாக அவர்களைப் பயன்படுத்திக்கொண்டார்.  தலைவா விசயத்தில் பழிபோட 'பலி ஆடுகள்' யாருமில்லாததாலும், இதில் ஜெவை மட்டுமே குற்றம் சொல்ல முடியுமென்பதாலும் இந்த விசயம் மீடியாவிலும், சமூக வலைதளங்களிலும் எவ்வளவு அடக்கி வாசிக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள். கருத்து சுதந்திரத்திற்காக அப்போது குரல் கொடுத்த பெரும்பாலானோர் இப்போது எங்கே போனார்கள் என்ற விலாசமே தெரியவில்லை.

ஒருகட்டத்தில் மக்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு பழகி விடுகிறார்களோ, ஒரு ஓரத்தில் மன்னராட்சியில் இன்னும் விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்களோ, தங்களை விட 'உயர்ந்தவர்களாக' யாரேனும் இருக்க வேண்டும் என்ற அடிமை எண்ணம் அவர்கள் உள்ளத்தில் ஒரு அமைதியான ஓடையாக ஓடிக்கொண்டே இருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படாமல் இல்லை. இல்லையென்றால் இப்படி ஒரு அப்பட்டமான சர்வாதிகாரத்தை எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? பலர், அடக்கி வைக்கப்படும் இந்த குமுறலுக்கு வடிகாலாக ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களை எதேனும் பழைய விசயத்திற்காக திட்டுவதன் மூலம் தங்கள் மனக்குமுறலை தீர்த்துக்கொள்கிறார்கள். ஒருவேளை திமுகவும், கலைஞரும் ஜெ போன்றே தங்களுக்குப் பிடிக்காத அனைத்து அறிக்கைகளின் மேலும், படங்களின் மீதும் அவதூறு வழக்குகளும், தடைகளும் போட ஆரம்பித்தார்களானால் தமிழகத்தில் நிலைமை என்னவாக இருக்கும் என நினைக்கும்போதே தலைசுற்றுகிறது.

ஜெயலலிதா அரசியலில், அதிகாரத்தில் ஃபாசிசத்தை கடைபிடிக்கிறார் என்றால் இந்த பிரபல நடிகர்கள் திரைத்துறை ஃபாசிஸ்ட்டுகள் என்பதை நாம் மறக்கக் கூடாது. அதனால் அவர்கள் மேல் நாம் இரக்கமோ, பரிதாபமோ கொள்ளவோ, அவர்களை நீதியை நிலைநாட்ட போராடுகிறவர்களாகவோ நாம் எண்ணிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் மேலே பார்த்ததைப் போல அவனுக்குத்தானே பிரச்சினை என அமைதி காத்தோமானால் நாளை நம் கழுத்துக்கும் இதே அடக்குமுறை கயிறுதான்.

நம் அரசியல் சட்டமே அவதூறு வழக்குகள், தடைகள் சார்ந்த இந்த அடக்குமுறைகளுக்கு ஒருவகையில் துணை செய்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு இணையத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒரு நண்பரை எடுத்துக்கொள்வோம். இங்கே இருப்பவர்கள் யாவருக்கும் அவர் மேல் எந்தக் குற்றமும் இல்லை, எதிர்தரப்பு பல விசயங்களை மனதில் வைத்து, பழிவாங்க உறுதிபூண்டு அந்தப் புகாரை அளித்தது எனத் தெரியும். அவர் மேலான வழக்கில் அவருக்கு எந்த தண்டனையும் கிடைக்காது, இறுதியில் விடுதலைதான் ஆவார் என எல்லோருக்கும் உறுதியாகத் தெரியும். ஆனால் என்ன செய்ய முடியும்? வழக்கபோல வளவளவென இழுக்கும் வழக்கு முடியும் வரை அவருக்குப் பிரச்சினைதான். இப்படி பலவகைகளில் பழிவாங்க முடியும். ஒவ்வொரு ஊர் நீதிமன்றத்திலும் தனித்தனி வழக்குகள் தொடுத்து அலையவிடுவது, கைது செய்து அவமானப்படுத்துவது, அவரைப் பற்றி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் செய்து தலைகுனிவை ஏற்படுத்துவது என ஒருவர் குற்றம் சாட்டப்பட்டாலே அவரைப் பல வகைகளில் கொடுமை படுத்த நம் ஊர் நீதித்துறை வழிசெய்து வைத்திருக்கிறது. ஒருவரை பழிவாங்க வேண்டுமானால் அவர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டாம், வழக்கு போட்டாலே போதும். அவருக்கு ஏற்படும் மன உளைச்சலே வேலையை முடித்துவிடும்! இதைத்தான் ஜனநாயக சர்வாதிகாரம் செவ்வனே பயன்படுத்திக்கொள்கிறது. இதை எதிர்த்து மக்கள் ஒன்று சேர்ந்து போராடாதவரை ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நீக்குவதென்பது ஆகாத ஒன்று.

இன்னொரு முக்கியமான விசயமும் இதில் உண்டு. கமல் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவருக்குப் பிரச்சினை என்றவுடன் எழுந்த ஏகப்பட்ட ஆதரவுக் குரல்கள் விஜய் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார் என்பதால், அவர் ஜெயலலிதாவிற்கு ஆதரவளித்தவர் என்பதால், "அவருக்கு நல்லா வேணும்" என்ற ரீதியிலேயே அணுகப்படுகிறது. இது மிகத் தவறான முன்னுதாரணம். வடிவேலுவிற்கும் இதுதான் நடந்தது. ஏன் ஒரு நடிகனுக்கு அரசியல் ஆசை இருந்தால் அவனை விதிகளுக்கு அப்பாற்பட்டு பழிவாங்குவது நியாயமாகிவிடுமா? அதை வேடிக்கைப் பார்ப்பது எவ்வகையில் நியாயம்? கமலுக்காக குரல் கொடுத்த யாவரும் விஜய்க்காக குரல் கொடுக்கவேண்டியது அவசியமல்லவா? எத்தனை பேர் மேல் அவதூறு வழக்கு போடுவார்கள்? எத்தனை பேரை மிரட்டுவார்கள்? நூறு, இருநூறு, ஆயிரம்? கோடி பேரும் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் போது அவதூறு வழக்குகளால் என்ன செய்து விட முடியும்? உதாரணத்திற்கு திரைத்துறையே ஒன்றுகூடி இனி ஜெ ஆட்சியில் இருக்கும் வரை படம் எடுக்க மாட்டோம் என்றோ, ஜெவை எதிர்த்து ஒரு போராட்டமோ அறிவித்தால் ஜெவால் என்ன செய்ய முடியும்? ஆனால் நமக்கென்னப்பா, நம்ம தொழில் கெட்டுவிடக் கூடாது என்ற ரீதியில் தான் இருக்கிறார்கள். மேலே சொன்னதைப் போல ஜனநாயகத்தில் மக்களின் ஒற்றுமையின்மையும், சுயநலமும் தான் பிரச்சினை

கமல்களுக்கும், விஜய்களுக்கும் மட்டுமல்ல, குற்றவாளிகளுக்கும் கூட உரிமை என்பது உள்ளது என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே, அதற்காக நாம் போராடத் துவங்கினால் மட்டுமே அப்பாவிகளின் உரிமைகளை ஒருகாலத்திலும் யாராலும் பறிக்கவே முடியாத நிலை ஏற்படும்.

கடைசியில் சொல்வதாகச் சொன்ன உதாரணம் இதுதான். கமலுக்கு ஜெ அரசால் நெருக்கடி ஏற்பட்ட போது அமைதி காத்த வெகுசில நடிகர்களில் விஜய் ஒருவர். இன்று?


Wednesday, August 7, 2013

தலைவா நிறுத்தப்பட்ட காரணமும் ஒரே வருடத்தில் எதிர்க்கட்சியான விஜய்யும்எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிர திமுக விசுவாசி. அதாவது ஒரு காலத்தில்! அப்படி இருந்த ஒருவரை அப்படியே மாற்றிக்காட்டிய பெருமை சன் பிக்சர்ஸ் சகோதரர்களைச் சேரும். பின் சன் குழுமம் மீதான கடுப்பில் ஜெயலலிதாவிற்கு ஆதரவளித்து தாங்களே ஆளுங்கட்சியாகிவிட்ட மாயையில் குதித்ததையும் நாம் பார்த்தோம். இப்போது விஜய் நடிக்கும் தலைவா படம் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அப்படத்திற்கு துவங்கிய முன்பதிவுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

கூட்டிக்கழித்துப் பார்த்ததில் இதுதான் பிரச்சினை. விஜய் ஆதரவளித்தபோது நேரில் ஜெயலலிதாவை சந்திக்காமல் தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை அனுப்பி வைத்தது முதல் குற்றமாக கருதப்படுகிறது. சமீபகாலமாக சன் டிவியுடன் விஜய் காட்டிவரும் நெருக்கம் இரண்டாம் குற்றமாக கருதப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தினமமும் "என் மகன் எம்.ஜி.ஆர். என் மகன் தலைவன். என் மகனால்தான் மக்களுக்கு அமைதி" அது இதுவென அடித்துவிடும் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேட்டிகள் மூன்றாவது முக்கிய குற்றமாக கருதப்படுகிறது. நான்காவதும் மிக முக்கியமான குற்றமும் யாதெனில் தன் படத்திற்கு 'தலைவா' என பெயரிட்டது.
அதுவரை இலைமறைகாயாக இருந்த பகையை விஜய் பிறந்தநாள் விழாவிற்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்ட பின் "இடம் தர முடியாது" என காவல்துறை பின்வாங்கியபோது அப்பட்டமாக வெளிப்பட்டது. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் (மளிகை சாமான் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள்) எல்லாம் வீணாய்ப் போய்விட்டதே என எஸ்.ஏ.சந்திரசேகர் புலம்பித் தீர்த்ததும் நமக்குத் தெரிந்ததுதான்.   மேலும் தலைவா படத்திற்கு வரிவிலக்கும் தமிழக அரசு தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது.

இப்போது தலைவா வெளியிடப்போகும் திரையரங்குகளுக்கு இதுவரை யாரும் கேள்வியே படாத மாணவர் புரட்சி படை என்ற இயக்கம் குண்டு வைக்கப்போவதாக மிரட்டினார்கள் என்ற செய்தி கசிகிறது. முதலில் தலைவா சர்ச்சைக்குரிய எந்தப் பிரச்சினையையும் பேசும் படம் அல்ல. வழக்கமான அப்பா செத்தவுடன் மகன் நாற்காலியில் உட்காரும் காட்ஃபாதர் காலத்து கதைதான் என போஸ்டர் பார்த்தாலே தெரிகிறது. இயக்குனர் விஜய்யின் பேட்டிகள் சொல்வதும் அதைதான்! இந்த லட்சணத்தில் குண்டு வைக்கும் அளவிற்கு இதில் என்ன இருக்கிறது??   மேலும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற லட்சணத்தில் அந்தந்த ஏரியா போலீசாரும் "திரையரங்குகளுக்கு எங்களால் பாதுகாப்பளிக்க முடியாது" என அறிவித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது அபிராமி ராமநாதனை அழைத்து முன்னாள் அமைச்சாரன ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் "'இந்தப் படத்தை திரையிடுவது நல்லதாகப் படவில்லை. பாத்து இருந்துக்கங்க'
எனக் கூறியதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

உடனே சென்னை, செங்கல்பட்டு நாமக்கல் ,ஈரோடு திரையரங்கு முதலாளிகள் எல்லாம் கூடி, "அரசுக்கு எதிரான படமாக கருதப்படும் தலைவா படத்தை வெளியிட அரசின் ஒத்துழைப்பு அவசியம். அது உறுதியாகாத பட்சத்தில் படத்தை வெளியிட மாட்டோம்" என அறிவித்திருக்கிறார்கள். என்ன கொடுமை பாருங்கள், ஒரு படத்துக்கு தலைவா என பெயர் வைத்தால் அது தமிழக அரசுக்கே எதிரானதாம்! தமிழகத்தில் ஜனநாயகத்தின் நிலையை நினைத்து சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை.

"வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும்: எனச் சொன்னதற்கே கமல் அந்தப் பாடு பட்டார் எனும்போது 'தலைவா' எனப் பெயர் வைக்க விஜய்க்கும், என் மகன்தான் அடுத்த முதல்வர் எனப் பேச எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் என்ன திமிர்? வைக்கலாமா அப்படி? அதுவும் தமிழ்நாட்டில்?

வேலாயுதம் படத்தில் விஜய்யை யாரோ துரத்துவார்கள். அப்போது ஓடிக்கொண்டிருக்கும் விஜய், "நம்மதான் இப்ப ஆளுங்கட்சி ஆச்சே. நம்மளை யாரும் ஒன்னும் பண்ண முடியாது." என சிரித்தபடியே கூறுவார். மேலுள்ள செய்திகளை எல்லாம் படித்தபோது எனக்கு வேலாயுதத்தில் வரும் இந்தக் காட்சியை நினைத்து சிரிப்பும், பரிதாபமும் சேர்ந்து வந்தது!

ஆனால் இந்த சர்ச்சையால் தலைவாவை விழுந்து விழுந்து பார்த்து அதை வெற்றிப்படமாக்கப் போகிற தமிழக மக்களை நினைத்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது.


செய்திச் சுட்டிகள்:
நாடாளுமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி? முடிவுகள்? -டான் அசோக்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே மிகக்குழப்பமான சூழ்நிலை நிலவுவது அடுத்து வரவிருக்கும் தேர்தலில் தான். யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது எப்படி ரஜினிக்கே தெரியாதோ அது போல கட்சிகளுக்கும் தெரியாமலேயே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணியில் சேர்ந்து ஒட்டுண்ணியாய் பிழைப்பதையே அரசியல் நோக்கமாய் வைத்திருக்கும் சில்லறைக் கட்சிகளை நீக்கிவிட்டால் பிரதானக் கட்சிகளாகக் கையில் இருப்பது அதிமுக, திமுக மற்றும் தேமுதிக தான். தேமுதிக கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால் கணிசமான வாக்குகளைப் பெறும் என்றாலும் ஒன்றில் கூட ஜெயிக்க முடியாது. அதான் அதையும் விட்டுவிட்டு ஜெயிக்கும் வாய்ப்புள்ள திமுகவை, அதிமுகவை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு சிறிய கணக்கைப் பார்ப்போம். இவை இரண்டிற்குமே கூட்டணி குறித்த மூன்று தெரிவுகள் (option) உண்டு. காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, தனித்து நின்றுவிட்டு பிறகு யாருக்கேனும் ஆதரவளிப்பது. இப்போது எதை யார் செய்தால் எந்த மாதிரியான முடிவுகள் வரும் என்பதையும், ஊடகங்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதையும் கீழே யூகத்தின் அடிப்படையிலும், வரலாற்றின் அடிப்படையிலும் பார்க்கலாம்.

   காங்கிரஸ்:  

அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் இருக்கும் காங்கிரஸின் மகுடத்தில் பல தவறான பொருளாதாரக் கொள்கைகள், மிகவும் தவறான வெளிநாட்டுக் கொள்கைகள், உள்நாட்டு சிறுபான்மை இனத்தவர்கள், மொழியினர் மீதான அத்துமீறல்கள், வரலாறு காணாத விலையேற்றம் என பல அசிங்கங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதால் அதன் பரப்புரையின் மையநோக்கு 'மோடியைத் தாக்கு' என்பதாகவே இருக்கும். அது மட்டுமல்லாமல் தேசிய அளவில் மிகப்பெரிய வாக்குவங்கி வைத்திருக்கும் பெரிய கட்சி காங்கிரஸ் மட்டுமே என்பதும் வாக்கு வங்கியைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் பாஜக மிகவும் பின் தங்கி இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது. அதனால் பலமான காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசினாலேயொழிய அதை வேரோடு சாய்ப்பதென்பது முடியாத காரியம். அதனால் பாஜக கையிலெடுக்கும் 'மோடி கணக்கு' தப்பாக முடிந்தால் அது காங்கிரசுக்கு வரப்பிரசாதமாகவே அமையும்.

பாஜக:
பாஜகவின் ஒவ்வொரு தேர்தலின் போதும் யார் பிரதமர் என்பதில் ஒரு குடுமிப்புடி சண்டை நடப்பது வழக்கம். இந்த தேர்தலில் மோடிக்கும் அத்வானிக்கும் நடந்துகொண்டிருக்கும் அந்த சண்டை முன்பு வாஜ்பாய்க்கும் அத்வானிக்கும் நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. வாஜ்பாய் கொஞ்சம் மிதவாதியாக கருதப்படுகிறவர். அத்வானி போல நேரடியாக கடப்பாறையைத் தூக்கிக்கொண்டு இடிந்துவிழும் பாபர் மசூதியின் முன்பு வெற்றிக்களிப்புடன் 'போஸ்' கொடுக்கும் வெறிகொண்டவர் அல்ல அவர். அதனால் வாஜ்பாயா அத்வானியா என்ற கேள்வி எழுந்த போது, மதவெறிக் கட்சி என பெயர்பெற்றிருந்த பாஜகவிற்கு ஒரு மிதவாதியின் முகம் தேவைப்பட்டது. வாஜ்பாய் வேறுவழியே இன்றி பிரதமர் வேட்பாளர் ஆக்கப்பட்டார். அத்வானியும் நம் காலம் வரும் என காத்திருந்தார். இப்போது மோடியுடன் ஒப்பிடும் போது அத்வானி மிதவாதியாகத் தெரிவதுதான் காலத்தின் நகைமுரண்.  பாபர் மசூதியை இடித்தவரா, பாபர் மசூதிக்குள் செல்கிறவர்களின் வாழ்க்கையை இடித்தவரா என கணக்குப்போட்டால் மசூதியை இடித்தவர் மிதவாதிதானே!!

அந்த வகையில் இப்போது மிதவாதிகளுக்கு அத்வானியைப் பிடிக்கிறது. ஆனால் மோடி அதைச் செய்தார் இதைச் செய்தார், குஜராத் இப்போது நியுயார்க் நகரம் போல ஜொலிக்கிறது, எங்கு பார்த்தாலும் பாலாறும் தேனாறும் ஓடுகிறது போன்ற விளம்பரங்களாலும், இணையத்தில் ஒரு கார்ப்பரேட் போல சம்பளத்திற்கு ஆள் அமர்த்தி பரப்புரை செய்வதாலும் 'மோடி' என்ற மந்திரம் வைரஸாக மேல்தட்டு இளைஞர்களிடையே பரவியிருப்பது உண்மை. ஆனால் இந்த வைரஸ் பிரதான வாக்குகளை முடிவு செய்யப்போகும் கீழ்தட்டு மக்கள் வரை பரவுமா அல்லது மேலாகவே நின்றுவிடுமா என்பது தேர்தல் முடிந்தால்தான் தெரியும்.  அதனால் மோடி என்ற மந்திரம் வேலை செய்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும், வேலை செய்யவில்லையென்றால் மிகப்பெரிய தோல்வி கிடைக்கும், மோடி பாஜகவை பொறுத்தவரை ஒரு 'உண்டா இல்லையா' சூதாட்டம். ஆனால் அத்வானி 'safer side' முகம். காங்கிரசின் மோடிக்கெதிரான பரப்புரைகள் அத்வானி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் முடங்கிவிட வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலுமே கூட பாஜக நல்ல எண்ணிக்கையில் பிரதான எதிர்கட்சியாக வலம்வர முடியும். ஆனால் மோடியை பிரதான முகமாக வைத்து தோற்றால் இதெல்லாம் நடக்காது. ஆக இந்த தேர்தலில் பாஜக மோடி என்ற குதிரையின் மீதுதான் பணம் கட்டும் என்ற நிலையில், அது ஒரு சூதாட்டம்தான். இறுதிவரை முடிவை கணிக்க முடியாது.

மூன்றாவது அணி:  

தேர்தல் முடிவுகள் அந்தரத்தில் நின்றால் முலாயம், மாயாவதி, ஆகியோருக்கு பிரதமராகும் வாய்ப்பிருந்தாலும் மூன்றாவது அணியால் நிலையான ஆட்சி தர வாய்ப்பு கிடையாது. வரலாறும் அதைத்தான் சொல்கிறது.

இப்போது தமிழக நிலவரம்:

திமுக-காங்கிரஸ் கூட்டணி: 

தேர்தலுக்கு முன்பாகவே திமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால், "ஈழப்படுகொலை நிகழ்த்திய காங்கிரசுடன் சேரலாமா? இது தமிழினத் துரோகமில்லையா?? காங்கிரசுக்கு பாஜகவே பரவாயில்லை!!" என்பதே எதிர்கட்சிகளின், ஊடகங்கலீன் பிரதான கோசமாக இருக்கும். மேலும் சமீபத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளிவந்துவிட்டு மீண்டும் அதனுடனே கூட்டணி வைப்பதென்பது பொதுக்கருத்தின்படியும் ஏற்புடையதாக இருக்காது. இதனால் வாக்கு வங்கி பாதிக்கப்படாதெனினும் சில்லறைக் கட்சிகளின் வாய்க்கு அவல் கிடைக்கும்.  ஒருவேளை தேர்தலுக்குப் பின் காங்கிரசுக்கு திமுக ஆதரவு கொடுத்தால் தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டதாலும், வேறு வழியே இல்லை என்ற நிலையினாலும் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் வாய் ஓரளவிற்கு அடைபடும்.


திமுக-பாஜக கூட்டணி 

தேர்தலுக்கு முன்பாகவே திமுக பாஜக கூட்டணி அமைந்தால், " சிறுபான்மைக் காவலர்கள் என பெருமை பீற்றுபவர்கள் குஜராத்தில் அத்தனை இஸ்லாமியர்களை கொன்று குவித்தவருடன் சேரலாமா? சிறுபான்மை மக்கள் பொறுக்க மாட்டார்கள். இது அவர்களுக்கு இழைக்கும் துரோகம். பாஜகவிற்கு காங்கிரசே பரவாயில்லை!!" என்ற கோசத்தை அதிமுக, சில்லறைக் கட்சிகள், தமிழக ஊடகங்கள் கையில் எடுப்பார்கள். ஆனால் பாஜக கணிசமான இடங்களை தேசிய அளவில் பெற்றுவிட்ட பின் திமுக ஆதரவு கொடுப்பதே சிறந்தது.

திமுக-மூன்றாவது அணி 

மூன்றாவது அணி அமைக்கப்போகிறோம் எனக் கோரி வாக்கு கேட்டால், "இதெல்லாம் நடக்கிற காரியமா? ஒரு நிலையான ஆட்சியை மூன்றாவது அணியால் கொடுக்க முடியாது. காங்கிரஸ் அல்லது பாஜகவால்தான் நிலையான ஆட்சி கொடுக்க முடியும். திமுக பெரிய தவறிழைக்கிறது!!" என்பார்கள் தமிழக ஊடகவியலாளர்கள்.

ஆக மொத்தத்தில் திமுக ஒத்துவரும் தமிழகக் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்துவிட்டு, அதன்பிறகு மத்திய கூட்டணி பற்றி முடிவெடுப்பதே சிறந்ததாக இருக்கும். ஆனால் கலைஞர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது எப்போதுமே கடைசி நேர டிவிஸ்ட்டாக இருப்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுக காங்கிரஸ் கூட்டணி: 

(இதைச் சொல்வதற்கு முன் ஒரு சிறிய விசயத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பின் அவசரஅவசரமாக அவர்களை மாற்றிய ஜெயலலிதா, ராஜ்யசபா தேர்தலிலும் இதையே செய்தது தெரிந்த கதை. ஆனால் நம் ஊடகங்கள் இந்த அடித்தல் திருத்தலுக்கு கொடுத்த விளக்கம் 'ஜெ வேட்பாளர்களை கடைசி நேரத்தில் மாற்றுவதை தன் ஸ்டைலாக வைத்திருக்கிறார்" என்பது! என்ன கொடுமை இது! அடித்தல் திருத்தல் இருந்தால் அது நிலையின்றி அலைவதைக் காட்டுவதாகச் சொல்லி பள்ளியில் வாத்தியார்கள் கூட மார்க் போட மாட்டார்கள். ஆனால் ஊடகங்களுக்கு ஜெயலலிதாவின் குழப்பங்கள் ஸ்டைலாக தெரிகிறதாம்!!!  சீட் எதுவும் கேட்கவில்லையே தவிர ஜெயலலிதாவுடன் தமிழக ஊடகங்கள் அசைக்கமுடியாத கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்)
 
 சரி! விசயத்திற்கு வருவோம். ஒருவேளை தேர்தலுக்கு முன்பே காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் நிலை ஏற்பட்டால், "இது தெரிந்ததுதானே. அதிமுக என்றுமே ஈழ ஆதரவுக் கட்சி இல்லையே. மேலும் சிறுபான்மைக்கு எதிரான கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதைத் தடுகக் வேறு வழியின்று காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார் ஜெ" என ஊடகங்களும் சரி, சில்லறைக் கட்சிகளும் சரி, சொல்வார்கள். ஒருவேளை காங்கிரஸ் அப்படி ஜெயித்தாலும் கூட்டணியில் இருந்து ஜெ சில நாட்களில் பிய்த்துக்கொள்வார் என்பதை இப்போதே அடித்துச் சொல்ல முடியும்.

அதிமுக பாஜக கூட்டணி: 

"ஈழ எதிரியான காங்கிரஸின் ஆட்சி அமைப்பதைத் தடுக்க வேறுவழியின்று பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார் ஜெ" என ஊடகங்களும், சில்லறைக் கட்சிகளும் கருத்துதிர்ப்பார்கள். ஆனால் பாஜகவிற்கு தமிழகத்தில் வாக்கு வங்கி என்பது பூஜ்ஜியம் என்பதால் ஜெ இந்தத் தவறை செய்யமாட்டார் என உறுதியாக நம்பலாம்.


அதிமுக மூன்றாவது அணி: 

ஜெயலலிதாவிற்கு பிரதராகும் ஆசை மிதமிஞ்சி விட்டதால், கொடநாடு போரடித்து சிம்லா மீதான ஆசையும் துளிர்விட்டுவிட்டதால் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்க பிரம்மப்பிரயத்தனம் செய்வார் என்பது உறுதி. ஆனால் கூட்டணியை அனுசரித்துப் போவதென்பது மூன்றாவது அணியில் மிகவும் தேவையான விசயம். ஆனால் ஜெயலலிதாவிற்கு அந்த தன்மை சுட்டுப்போட்டாலும் வராது என்பதால் மூன்றாவது அணிக்கு ஜெ தலைமை வகிக்கும் அசம்பாவிதம் நடந்தாலுமே கூட ஒரு மாதம் கூட நீடிக்கமாட்டார். அதனால் இந்திய மக்கள் இப்போதே பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

ஆக கணக்குகளை கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் சரி, திமுகவும் சரி, தேசியக் கட்சிகளுடன் சேராமல் தனித்து நிற்கக்கூடிய வாய்ப்புகளே பிரகாசமாகத் தெரிகிறது.  ஆனால் தமிழகம் இருட்டில் தவித்தாலும், தொழில் நசிந்தாலும், ஊர் குப்பைக்காடாகக் கிடந்தாலும், மின்சார விலையைக் கேட்டாலே மின்சாரம் தாக்கியதைப் போல உணர்ந்தாலும், பால் விலையைக் கேட்டால் பால்டாய்ல் குடிப்பதைப் போல் இருந்தாலும், பஸ் கட்டண ஏற்றம் பஸ்சே மேலே எறியதைப் போல் இருந்தாலும் ஜெ அரசுக்கு எதிராக வாய்திறக்க மாட்டோம் என ஊடகங்கள் பிடிவாதமாய் இருப்பது ஜெவுக்கு சாதகம் தான். ஆனால் at the end of the day ஜெ அரசால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்தே வாக்கிடுவார்கள் என்பதால் திமுக தனித்து நிற்கும் பட்சத்தில் கணிசமான இடங்களை அது பெறுவது உறுதி என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகக் கூறலாம். மத்தியிலோ மோடி சூதாட்டம் தோற்கும் பட்சத்தில் ராகுல் பிரதமராகும் வாய்ப்பே பிரகாசமாகத் தெரிகிறது.

இருப்பினும்.... பொறுத்திருந்து பார்ப்போம்!

Monday, August 5, 2013

சேரன்களும், பொதுச்சமூகமும், காதல்களும். மூன்றாவது கோணம்.

வீட்டில் எதாவது முக்கியமான நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் அல்லது எதாவது மிக முக்கியமான விஷயம் குறித்து விவாதித்துக் கொண்டிருப்போம். ஆனால் வெளியில் தீடீரென பலத்த சத்தம், யாரோ யாருடனோ சண்டை போடுவதைப் போல கேட்டுவிட்டால் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு பால்கனிக்கு ஓடிச் சென்று கூர்ந்து கவனிப்போம். குறிப்பாக நம் அம்மாக்களுக்கும், பாட்டிகளுக்கும் இந்தப் புத்தி நிறையவே இருக்கும். அந்த சண்டையை கூர்ந்து கேட்டு எந்தக் குரல் யாருடையது என ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு கண்டும் பிடிப்பார்கள். நாம் இடையே பேசினால் "கொஞ்ச நேரம் அமைதியா இரேன்" என நம்மை விரட்டுவார்கள். அப்பாக்களும், தாத்தாக்களும் பின்னர் உள்ளே வந்த அம்மாவிடமோ பாட்டியிடமோ விசயத்தைக் கேட்டு தெரிந்துகொண்டு 'கருத்து' சொல்வார்கள்.  இப்படி அடுத்தவீட்டுப் பிரச்சினைகளை ஒட்டுக்கேட்க, வேடிக்கைப் பார்க்க பிரம்மப்பிரயத்தனம் செய்துகொண்டிருந்த நமக்கு தொழில்நுட்பம் கொடுத்திருக்கும் அருட்கொடைதான் முகநூல் போன்ற சமூக வலைதளங்களும், அடுத்த வீட்டுப் பிரச்சினையை நம் வரவேற்பறைக்கே கொண்டு வந்து கொடுக்கும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளும். இப்படி ஒருபுறம் என்றால் சேரன் போன்ற ஆட்கள் பிரஸ் மீட் எல்லாம் வைத்து, "என் குடும்ப விவாகாரத்தில் உங்களுக்கு என்ன வேலை?" எனக் கேட்காமல், சொந்தக் கதையை எல்லாம் ஊருக்கு உரக்கச் சொல்கிறார்கள்.

இந்தப் பதிவு சேரனைப் பற்றியதல்ல. தமிழகத்தில் மகள்களின், மகன்களின் காதலை அழுகையுடன் எதிர்கொள்ளும் தகப்பன்களைப் பற்றியது. சாதி, மதம் பிரிவினைகளையெல்லாம் மீறி இதில் இன்னொரு `விஷயமும் இருக்கிறது. அது இன்னும் கொஞ்சம் சிக்கலானது!  அது "மகளின் காதலன் கெட்டவனாய் இருக்கிறானே!!" என்பது.
சரி. இருந்துவிட்டுப் போகிறான். ஒரு வயது வந்த பெண் ஒரு வயது வந்த ஆணைக் காதலிக்கிறாள். பிடித்தால் சேர்ந்து வாழுகிறார்கள். பிடிக்கவில்லையென்றால் பிரிந்து போகப் போகிறார்கள். இவ்வளவுதானே! இதற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை? இதற்கு ஏன் தகப்பன்கள் இப்படி அழுகிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? தவறான முடிவெடுப்பதென்பது மனித இயல்பு. இதற்கு திருமணம் மட்டுமென்ன விதிவிலக்கா? ஆனால் மற்ற எல்லாத் தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கு வழிவகுக்கும் சமூகம், திருத்திக்கொண்டால் பாராட்டும் சமூகம், திருமணம் தவறாக அமைந்துவிட்டால் கிட்டத்தட்ட அதை திருத்திக்கொள்ள முடியாத தவறாகவே பார்க்கிறது, ஏன் பெற்றோர் பார்த்து மணமுடிக்கும் மணமக்கள் எல்லாம் பிரச்சினையே இன்றி வாழ்கிறார்களா, அல்லது அத்திருமணங்களில் நல்லவன் மட்டும்தான் மணமகனாக அமைகிறானா?

நம் ஊரில் சேருவது கூட சுலபம். ஆனால் பிடிக்காத கணவனை பிரிந்து போவதுதற்குத் தான் இல்லாத பிரச்சினைகளை, வசவுகளை, அவதூறுகளை எல்லாம் சந்திக்க வேண்டும்.  தவறான காதலனுடன் போவதாய் நமக்கு தோன்றினால் என்ன? நாளை அவன் கெட்டவன் என அவளுக்குத் தெரிந்தால் அவளாகவே பிரிந்து போகிறாள் என்ற ஒரு சாதாரண விசயத்தை தமிழ்ச்சமூக தகப்பன்களும் சரி, சமூகமும் சரி அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. ஒருமுறை ஒரு பெண் ஒருவனை திருமணம் செய்துவிட்டால் அவ்வளவுதான். அவள் வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அதுதான் என்ற அளவில்தான் திருமணம் மீதான நம் நடுத்தட்டு சமூகத்தின் பார்வை இருக்கிறது. கற்பு, தாலி, திருமணம் போன்ற பல தேவையில்லாத சடங்கு ரீதியிலான விசயங்களின் மீதான நம்பிக்கையும், பயமும் திருமண முறிவை விரும்பத்தகாத, தீண்டத்தகாத ஒரு விசயமாய் நம் சமூகம் வைத்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு பெண் விவாகரத்து பெற்றுவிட்டால், கணவனிடமிருந்து பிரிந்துவிட்டால் நம் சமூகம் அவள் மீது கொண்ட பார்வை எப்படிப்பட்டதாக இருக்கிறது என எண்ணிப் பாருங்கள். ஏற்கனவே ஒருவனுடன் வாழ்ந்து பிரிந்தவள் தானே என பெரும்பாலான ஆண்கள் படுக்கயறைக்கு அழைப்பார்கள், பெண்களோ அவதூறு செய்வார்கள்., குத்திக் காட்டுவார்கள், குடைவார்கள். மீண்டும் காதலில் விழுவதோ, திருமணம் செய்துகொள்வதோ சராசரியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிட்டத்தட்ட முடியவே முடியாத காரியும். ஒருவேளை அப்படி காதலித்தாலும் சமூகத்திற்குப் பயந்து பெரும்பாலும் ஓடித்தான் போகிறார்கள்.

ஒருவரை பிடிக்காத பட்சத்தில் அவரிடமிருந்து பிரிந்துவரும் மிகச்சாதாரண விசயத்தை எதோ கொலைக்குற்றம் போலத்தான் நம் சமூகம் பார்க்கிறது. இப்படியான ஒரு மோசமான சூழலில் தவறானவனை தன் மகள் மணக்கிறாள் என்பதைவிட அவள் திரும்பி வரும்போது சமூகம் அவளை எப்படிப் பார்க்கும் என்ற அச்சமே தகப்பன்களுக்குப் பெரும்பாலும் மேலோங்கியிருப்பதால் அதை எப்படியேனும் தடுக்க நினைக்கிறார்கள். ஒருவனைப் பிடிக்காமல் பிரியும் பெண்ணை நோக்கி, "வாழ்க்கையை இப்படி கெடுத்துக்கிட்டியே" எனச் சொல்லிச் சொல்லியே அவள் வாழ்க்கையையே முடித்துவைக்கும் செயலைத் தான் சமூகம் செய்து கொண்டிருக்கிறது. அவள் மீள நினைத்து புதிய வாழ்க்கையை துவங்க நினைத்தால் கூட இதுபோன்ற முட்டாள்த்தனமான பேச்சுக்களின் மூலம் அதை தடை செய்கிறது நம் சமூகம். தெரியாமல்தான் கேட்கிறேன், கணவனை பிரிவதற்கும் வாழ்க்கை கெடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நம் வாழ்க்கை கெடுவதென்பது நாம் செத்தால் மட்டும்தானே நடக்கும்? திருமணம் என்ற 'சடங்கு' எப்படி ஒருவரின் வாழ்க்கையையே தீர்மானிக்கக் கூடியதாய் இருக்க முடியும்?

காதல், திருமணம் எல்லாம் தனிப்பட்ட நபர்களின் விசயம். அதில் குடும்பங்கள் மூன்றாம் தரப்பு என்றால் சமூகம் முப்பதாம் தரப்பு. ஆனால் நம் ஊர் திருமணங்களில் குடும்பத்தின், சமூகத்தின் மூக்கு நுழைப்பு என்பது மிகப்பெரும் அளவில் இருக்கிறது. தனிப்பட்ட பிரச்சினைகளை சமூகப் பிரச்சினை ஆக்கும் அவலமும் இங்கு அதிகம். இதில் பார்ப்பன சமூக மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. தன் மகளோ, மகனோ காதலித்தால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். மிஞ்சிப்போனால் அறிவுரை சொல்வார்களேயொழிய மற்ற சமூகத்தவர்களைப் போல ஊரைக் கூட்டி ஓலமிடமாட்டார்கள். மணமுறிவு என்றாலும் அப்படித்தான். அது அந்த தனிநபர்களின் விசயம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

ஆக திருமணமும் சரி, திருமண முறிவும் சரி அது இருதனிநபர்களின் பிரச்சினை. அதில் அறிவுரை கொடுக்கும் அளவிற்கு மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறதேயொழிய, அதை தடுக்கவோ, அவதூறு செய்யவோ உரிமை இல்லை என்பதை குடும்பங்களும் சரி, சமூகமும் சரி புரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் காதலை, திருமணத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை எவ்வளவு உள்ளதோ அதே அளவிற்கு நாளை அதை முறித்துக்கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு இருக்கிறதென்பதை நாம் உணர வேண்டும். இதெல்லாம் நடந்தால் தாமினிகளின், சேரன்களின், சந்துருக்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் சமூகப் பிரச்சினையாகாது. திருமணம் போன்ற சடங்குகளுக்கு நம் ஊர் கொடுக்கும் நேரமும், விலையும், முக்கியத்துவமும் மிக அதிகம். காதல் போன்ற இயற்கையான விசயங்களை அதன் போக்கிலேயே விட்டால் அதனுடைய வழியை அதுவே தேடிக்கொள்ளும். சமூகம் மூக்கை நுழைக்கும் போதுதான் பிரச்சினையே!  இன்னும் சொல்லப்போனால் ஒரு தனிமனிதனின் சிந்தனையை சமூகம் பெருமளவில்  கட்டுப்படுத்துகிறது. இதைச் செய்தால் என்ன சொல்வார்கள், இதைச் செய்தால் நமக்கு கவுரவக் குறைவோ, இந்த சாதியில் பெண்ணெடுத்தால் சமூகத்தில் சேர்ப்பார்களா போன்ற ஏராளமான தேவையில்லாக விசயங்கள் ஒரு மனிதனின் மூளையில் ஒரு விசயத்தை செய்வதற்கு முன் ஓடுகிறது.  முதலில் வாயை மூடிக்கொண்டு சமூகம் தன் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அடுத்தவன் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே ஒவ்வொரு தனி மனிதனுடைய முடிவும் பலமடங்கு சரியானதாக மாறிவிடும்.   அதுதான் சேரனுக்கும் சரி, சமூகத்திற்கு சரி, நல்லது! 

Thursday, August 1, 2013

போப் ஆண்டவர் முதல் 'கேப்' ஆண்டவர் கணபதி ஐயர் வரை- டான் அசோக்


உலகில் பல அரசர்கள் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் மேற்குலகில் ஆதிக்கம் மாறாது ஆட்சி செலுத்திவருவது போப் எனப்படும் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர். வாடிகன் தான் உலக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைநகரம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போப் என்றால் தந்தை என்று பொருள். சரி இப்போது விசயத்திற்கு வருவோம். இந்த பதிவு போப் ஃபிரான்ஸிசின் சமீபத்திய ஒரு பேட்டியைக் குறித்தது என்பதால் கடந்த காலத்தில் வாடிகனில் நிகழ்ந்த, பதிவுக்கு கொஞ்சமாய் சம்பந்தமுள்ள ஒரு சம்பவத்துடன் ஆரம்பிப்போம்.

17ஆம் நூற்றாண்டு அது. கிரகங்கள் மற்றும் சூரியனில் எதை எது சுற்றுகிறது என்றோ, அவை  சுற்றுகிறதா, நிற்கிறதா என்றோ கூடத் தெரியாத ஆண்டு. பைபிளில், "உலகம் நிலையாக இருக்கிறது. அதை ஆண்டவர் இறுக்கமான அடிவாரத்துடன் அமைத்து அசையாதிருக்கச் செய்திருக்கிறார்" என்றும், "சூரியன் உதித்து, மறைந்து பின் தன் இடத்திற்குச் சென்று விடுகிறது" என்றும் கூறப்பட்டிருந்தது.  பைபிளில் கூறியிருப்பதைதான் அந்தக் கால விஞ்ஞானிகளில் பலரும் கூட தீர்க்கமாக நம்பினார்கள். ஆனால் கோபர்நிகஸ் என்பவர் சூரியனை மையமாக வைத்து கிரகங்கள் சுற்றுகின்றன என்ற மாற்றுக்கருத்தொன்றை 16ஆம் நூற்றாண்டிலேயே வைக்க, அதை இத்தாலிய விஞ்ஞானி கலிலியோவும் தன் தொடர் ஆராய்ச்சிகளால், தான் கண்டுபிடித்த தொலைநோக்கிகளின் மூலம் உண்மை எனச் சொல்ல வாடிகன் சிட்டிக்கும் கலிலியோவிற்கும் பிரச்சினை ஆரம்பமானது.

அப்போதைய புகபெற்ற விஞ்ஞானிகளான காசிமோ பொஸ்காலியா ஆகியோர் கூட கலிலியோவை அழைத்து இப்படி அட்வைஸ் செய்தார்கள், "நீ சொல்றதெல்லாம் சரிதான்பா. தொலைநோக்கிய வச்சு சரியாதான் கண்டுபுடிச்சிருக்க. ஆனா பைபிள்ள அப்படி சொல்லலையே".

1616ல் கோபர்நிகஸ் மீதான (அவரது தியரியைதான் தாக்க முடிந்தது. கோபர்நிகஸ் 16ஆம் நூற்றாண்டிலேயே செத்துவிட்டிருந்தார்) தேவாலயத்தின் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்ட கலிலியோவை அழைத்து போப் அலுவலகம் கண்டித்தது. "சரி இனிமே நான் அதை ஆதரிச்சுப் பேசமாட்டேன். சத்தியமா பேசவே மாட்டேன்" எனச் சொல்லிவிட்டு சென்றும் விட்டார். இங்கே ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அப்போது கார்டினலாக இருந்த பார்பெரினி கலிலீயோவிற்கு இந்த விசாரணையின் போது பல உதவிகளைச் செய்தார். இதே பார்னினிதான் போப் ஆனபிறகு பொதுச்சமூகத்தின் கோபத்திற்கும், தன் உயிருக்கும் பயந்து கலிலியோவிற்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்தது!  இதற்குப் பின் ஒரு மிகவும் சுவையான காரணமும் இருந்தது.

பின் 1633ல் போப் அலுவலகம் மற்றும் தேவாலயத்தின் அனுமதியுடன் தனது "உலகின் முதன்மையான இரு முறைமைகள்" என்ற தன் புத்தகத்தை வெளியிட்டார். இரு பெரும் அறிஞர்களுக்குள் நடக்கும் விவாதமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது. அதாவது சூரியன் தான் மையம் என்பதை ஒருவரும், பூமிதான் மையம் என்பதை ஒருவரும் விவாதிக்கும் வகையில் இருந்த புத்தகத்தில், பைபிள் கருத்திற்கு ஆதரவாகப் பேசிய கதாப்பாத்திரத்தின் பெயர் 'சிம்ப்ளிசியோ'. முன்னதாக கலிலியோவை அழைத்த போப் பார்னினி, தன் கருத்துக்களையும் புத்தகத்தில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி சிம்ப்ளிசியோவின் கருத்துக்களாக அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தவையில் பெரும்பாலானவை போப்பின் கருத்துக்கள். புத்தகம் வெளியானபின் அதைப் படித்த மக்களுக்கு சிம்ப்ளிசியோவின் கருத்துக்கள் மிகப்பெரிய முட்டாள்த்தனமாகத் தெரிந்தன. மற்றொரு கதாப்பாத்திரம் வைக்கும் தீர்க்கமான வாதங்களின் (அதாவது கோபர்நிக்கஸ் தத்துவத்தை ஆதரிக்கும் கலிலியோவின் வாதங்கள்) முன்னால் சிம்ப்ளிசியோவின் கருத்துக்கள் நகைச்சுவையாக இருந்தன. போப் பார்னினியால் இந்த அவமானத்தை தாங்க முடியாமல் கலிலியோவை விசாரணைக்கு அழைத்து வாழ்நாள் சிறைத் தண்டனையும் அளித்தார். இது சில நாட்கள் கழித்து வாழ்நாள் வீட்டுக்காவலாக மாற்றப்பட்டது. பின் நடந்ததெல்லாம் எல்லோர்க்கும் தெரிந்த வரலாறு. இதுபோல் ஏராளமான நகைச்சுவைகள் வாடிகன் தேவாலயத்தால் வரலாறு நெடுகே நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பல ரத்தச்சகதி நிறைந்தவை. சில நகைச்சுவை நிறைந்தவை.

இந்த மிகப்பெரும் வரலாற்றுத்தவறை 1992ல், அதாவது ஏறத்தாழ 350ஆண்டுகளுக்குப் பின் போப் ஜான்பால் காலத்தில் வாடிகன் தேவாலயம் திருத்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டது தனிக்கதை.

இப்போது நம்மூரில் "அனைத்து சாதியினரும் அர்ச்சகம் ஆகலாம்" என திமுக அரசு இயற்றியவுடன் அலறிப் பதறி அந்த சட்டத்திற்கு எதிராக பார்ப்பனர்கள் வழக்கு போட்டிருக்கிறார்கள் அல்லவா? அதைப் போல கத்தோலிக்க திருச்சபையிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. பெண்கள் தேவாலயத்தில் உழைக்கலாம். கன்னியாஸ்த்ரிகள் ஆகலாம். கூட்டலாம். பெறுக்கலாம். ஆனால் பாதிரியார் ஆக முடியாது!! (இந்து மதத்தில் மட்டும் பெண்கள் பூசாரிகள் ஆகலாமா எனக் கேட்காதீர்கள. பிற சாதி ஆண்களே ஆக முடியாதெனும் போது, பெண்கள் எங்கு போய் ஆவது?) இதுகுறித்து போப் ஃபிரான்சிஸ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், "பெண்கள் கண்டிப்பாக மதகுருமார்கள் ஆக முடியாது. அதைப் பற்றி ஏற்கனவே போப் ஜான்பால் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதனால் அந்தக் கதவு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது." என்று தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறார்.

ஏன் பார்ப்பனர்களைத் தவிற பிற சாதியினர் அர்ச்சகர்கள் ஆக முடியாது? ஏன் பெண்கள் மதகுருக்கள் ஆக முடியாது? இந்தக் கேள்வியை பாதிரியார்களிடமும், நம் ஊர் தீட்சிதர்களிடமும் கேட்டால் சாதி, தீட்டு என மொக்கைத்தனமான காரணம் எதையாவது சொல்வார்கள். ஆனால் கொஞ்சம் இந்த விஷயத்தை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் உண்மையான காரணம் எது என்று விளங்கும்.

இந்து மதம் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எந்த மதமுமே ஆண்களால் கட்டமைக்கப்பட்டதுதானே. மதம் சார்ந்த கதைகளை எழுதியதும், புராணங்களை எழுதியதும் ஆண்களே. உதாரணத்திற்கு தமிழனாகிய நாம் ஒரு கதையை எழுதுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஆங்கிலேயனையா முதன்மைக் கதாப்பாத்திரமாக உருவாக்குவோம்? நம் சினிமாக்களையே எடுத்துக்கொண்டாலும் ஆணாதிக்கம் நிறைந்த அந்த ஊடகத்தில் எத்தனை பெண் சார்ந்த கதைகள் வருகின்றன? விஷ்ணுவே ஆணாக இருந்ததும், தசாவதாரத்தில் அவரின்  எல்லா அவதாரமும் ஆணாகவே இருந்ததும், தேவதூதர் இயேசுவே ஆணாக இருந்ததும், அவர் தேர்ந்தெடுத்த சீடர்கள் 12 (13) பேரும் ஆணாகவே இருந்ததும், சிவன்-பார்வதி சரிநிகர் என்றாலும் கோபம் வந்தால் பார்வதியை எரிக்க சிவனால் முடியும் எனப் புராணம் சொல்வதும், நபிகளும் ஆணாக இருந்ததும் எதேச்சையானதென்றா நினைக்கிறீர்கள்?  (இயேசு ஏன் வெள்ளைக்காரராக இருக்கிறார்? இது தனி ட்ராக்!)

எந்த மதத்திலுமே பெண்களால் பாதிரியார்களாக, பூசாரிகளாக ஆக முடியாது (நம் ஊரில் வர்ண பேதம் என்னும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இருப்பதால் ஆண்களால் கூட ஆக முடியாது). மதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், கடவுளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். கடவுளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், அந்த சமூகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்! அந்தக் காலத்தில் குடவோலை போன்ற ஜனநாயக திட்டத்திலெல்லாம் நம்பிக்கை வைத்திருந்த நம் ராஜராஜசோழன் போன்ற தமிழ் மன்னர்கள் கூட கடவுளின் ப்ரோக்கர்களான பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து அள்ளி வழங்கிய பின்னணி இதுதான்.  இன்று அபுல் கலாமில் இருந்து பிரணாப் முகர்ஜி வரை காஞ்சி காமகோடியைக் காண ஆளாய்ப் பறப்பதும் இதனால் தான். அதனால்தான் செல்வாக்கு நிறைந்த அந்தப் 'பிடி'யை எந்நாளும் அவர்கள் தளர்த்த விரும்புவதேயில்லை.

நம் ஊரில் இன்னும் ஒரு படி மேலே போய், ஆண்கள் மட்டும்தான் கடவுளுக்குப் பூசை செய்வோம், அதிலும் குறிப்பிட்ட சாதி ஆண்கள் மட்டுமே பூசை செய்வோம் எனக் கூறுகிறார்கள். எல்லோரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என சட்டமியற்றினால் பதறித் துடிக்கிறார்கள், வழக்கும் போடுகிறார்கள். அனைவரும் சமம் எனச் சொல்லும் நம் சட்டமும், அதை நிறைவேற்றுவதற்காக இயங்கும் நீதிமன்றமும் பிறப்பை மையமாக வைத்து "கடவுளை அவர்கள் தொட்டால் தீட்டு" என்றால் வாதிடும் மடத்தனமான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதே நகைமுரண். அதைவிட பெரிய நகைமுரண் ஒன்று இருக்கிறது. இட ஒதுக்கீடுக்கு எதிராக இல்லாத பொல்லாத கதைகளைக் கட்டும் ஊடகங்களும் சரி, அதை அப்படியே நம்பி செம்மறி ஆடுகளாய் தலையாட்டும் நம் ஆட்களும் சரி, ஒரு குறிப்பிட்ட சமூகம் மத விசயங்களிள் 100% இடஒதுக்கீட்டை அனுபவித்து வருவதைக் குறித்து எண்ணிப்பார்ப்பதேயில்லை!

அனைத்து சாதியினர் மட்டுமல்லாது அனைத்து பாலினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. மந்திரங்களை மனப்பாடம் செய்து கடவுள் முன் ஒப்புவித்து பக்தர்களிடம் காசு வாங்கும் 'மிக மிகக் கடினமான' வேலையை எல்லாரும்தான் செய்யட்டுமே!! என் வீட்டருகே இருக்கும் ஒரு எல்.கே.ஜி குழந்தை இந்தி ரைம்ஸ் மனப்பாடம் செய்து ஒப்பிக்க எவ்வளவு சிரமப்படுகிறது என்பதைப் பார்க்கும் போதுதான் நமக்காக இந்த அர்ச்சகர்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

இதிலே ஒரு நகைச்சுவையை குறிப்பிட வேண்டும். கருவறையில் கடவுளின் முன் 'அரங்கேற்றம்' செய்யும் தேவநாதன்கள் பார்ப்பனர்களாய் பிறந்த காரணத்தினாலேயே அர்ச்சகர் ஆகிவிட முடியும். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்டவனோ, தலித்தோ ஆண்டாண்டு காலம் வெங்கடாஜலபதியை ஜபித்தாலும் அர்ச்சகர் ஆக முடியாது. வெங்கடாஜலபதிக்கு தீட்டுப் பட்டுவிடும்!

இப்படி உலகெங்கிலும் மதக்குருமார்கள் தங்கள் ஆளுமை போய்விடுமோ என்ற அச்சத்தில் பாகுபாடுகளை உருவாக்குவதிலும், அதை செவ்வனே காத்து வருவதிலும் குறியாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். பெரும்பான்மை சமூகம் கடவுள், மத நம்பிக்கைகளில் திளைப்பதால் இவர்களின் பாகுபாடு வளர்க்கும் அபத்தங்கள் கண்டுகொள்ளப்படாமலே இருக்கின்றன. பெண்கள் அலுவலகத்தில் வேலை செய்யலாம் ஆனால் CEO போன்ற பெரிய உத்தியோகங்களில் அமரக்கூடாது என ஒரு நிறுவனத்தின் தலைவர் சொல்லியிருந்தால் இந்நேரம் உலகமே கொதித்திருக்கும் அல்லவா? ஆனால் ஒரு போப் அப்படிச் சொன்னால் அது வெறும் செய்தியாக மட்டுமே அமுங்கிவிடுகிறது. ரோமின் போப் முதல் நம்மூரில் தட்சிணைத் தட்டேந்தும் கணபதி ஐயர் வரை தங்கள் 'பிடி'யை தக்கவைத்துக்கொள்ள படாதபாடு படுகிறார்கள். என்ன செய்ய? மக்கள் கடவுள்களை நம்புவதை விட புரோக்கர்கள் மீதல்லவா மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்!!!!! நிலைமை இப்படி இருக்கும் வரை மக்கள் பாடும், கடவுள் பாடும் திண்டாட்டம்தான். மதத்தை தொழிலாகக் கொண்டவர்களுக்கு மட்டும் கொண்டாட்டம் தான்!
Related Posts Plugin for WordPress, Blogger...