Sunday, July 21, 2013

கலைஞர், நான், ஆஸ்த்ரியா தபால் தலை, 15நிமிடங்கள் -டான் அசோக்


கலைஞர், கோபாலபுரம், அவருடனான எனது 15நிமிட உரையாடல் என எல்லாவற்றையும் பற்றி எழுதும் முன், மிக முக்கியமாக ஆஸ்த்ரிய தபால் தலை பற்றிய சில விசயங்களை எழுதிவிடுதல் நலம். ஆஸ்திரியா, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் தபால் தலைகளை வடிவமைத்து பணம் கட்டினால் அதை வெளியிடும் வழக்கம் ஒன்று இருக்கிறது. அந்த முறையில் சென்ற ஆண்டு ஃபிரான்ஸில் பிரபாகரனின் தபால்தலை வெளியிடப்பட்டது. அதை இங்குள்ள தமிழ்தேசியவாதிகளும் சரி, பிற ஆட்களும் சரி 'சத்தமின்றி' பகிர்ந்து அகமகிழ்ந்தார்கள். நாமும் தமிழர் என்ற வகையில் மகிழ்ந்தோம். அதே போல் ஆஸ்திரிய தபால்துறையில் உங்கள் குழந்தையின் படத்தையும், கட்டணத்தையும் கொடுத்தால் கூட உடனே தபால்தலையாக வெளியிட்டு விடும் வண்ணம் ஒரு வசதி உள்ளது. ஆனால் கலைஞர், பிரபாகரன், பெரியார், ஜார்ஜ் பெர்னாட்ஷா, ஜெயலலிதா என எதாவதொரு பெரிய public figureயின் முகம் பதித்த தபால் தலையை வெளியிடவேண்டுமென நாம் அனுமதி கோரினால் அதற்கு காபிரைட், ரிவ்யூ என சில சம்பிரதாயங்களும், விதிகளும் உண்டு. எடுத்தேன் கவிழ்த்தேன் என ஒப்புக்கொண்டு "இந்தாப்பா வச்சுக்க" என தபால்தலையை எடுத்துக் கொடுக்க மாட்டார்கள். ஒரிரு நாள் அந்நபரைப் பற்றி விசாரித்துவிட்டே ஒப்புதல் அளிப்பார்கள். அவ்வகையில் கலைஞர் பற்றிய குறிப்புகள் நிறைந்த ஒரு அறிக்கை ஆஸ்திரிய அரசுக்கு அனுப்பப்பட்டு, ஒருநாள் சென்று அவர்களின் முறையான அனுமதி வந்தவுடன் அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு இந்த தபால்தலை ஆஸ்திரிய அரசால் வெளியிடப்பட்டு, பட்டு, பட்டு, பட்டு, ஒருவழியாக எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதான் விதிமுறையும், வழிமுறையும்.  ஜூன்4ல் அனுமதி கிடைத்தவுடன் எங்களுக்கு தபால் தலையின் ஸ்கேன் காபி வந்தது. அதை முகநூலில் பதிந்த போதும் "எங்கள் சொந்த முயற்சியில் ஆஸ்திரிய தபால் துறை இந்த தபால்தலையை வெளியிட்டுள்ளது" என்றே பதிந்திருந்தேன்.

இன்று கலைஞரை சந்தித்தபின் கலைஞர் டிவிக்கு அளித்த பேட்டியிலும் "எனது மற்றும் எனது ஆஸ்திரிய நண்பரின் முயற்சியினால் இத்தபால்தலையை ஆஸ்திரிய அரசு வெளியிட்டிருக்கிறது" என்றுதான் கூறியிருந்தேன். அதை ஒளிபரப்பியபோது என்னை தவறுதலாக 'ஆஸ்திரிய தமிழர்' எனக் குறிப்பிட்டு விட்டார்கள். இரண்டு முறை அழைபேசியில் கலைஞர் தொலைக்காட்சியை அழைத்து திருத்தச் சொன்னபோதும் ஒளிபரப்பில் திருத்தம் செய்யவில்லை. இந்த விசயத்தில் எனது சுய அடையாளத்தை இழந்ததில் எனக்கு மிகுந்த வருத்தமே! அதனால் முரசொலியிலாவது சரியாக வெளியிடுங்கள் என அவர்களை அழைத்து ஒருமுறை வேண்டிக்கொண்டேன். இன்றைய மாலைமுரசில்,  "ஆஸ்த்ரியா நாட்டில் வாழும் தமிழர் வினையூக்கி செல்வகுமார் முயற்சியில் அந்நாட்டு தபால்துறை திமுக தலைவர் கலைஞரின் படம்கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டிருக்கிறது. கலைஞரின் படம், வயது மற்றும்  திமுக கொடியுடன் உள்ள அந்த கொடியை அபு ரயான் என்பவர் வடிவமைத்திருக்கிறார். இதை ஆஸ்திரியாவின் உள்ளூர், வெளிநாட்டு அஞ்சல்களில் பயன்படுத்த முடியும்.  இம்முயற்சியை முன்னெடுத்தவர்களில் ஒருவரான டான் அசோக் இன்று கருணாநிதியைச் சந்தித்து தபால் தலையை வழங்கினார்." என சரியான செய்தியை கொடுத்திருக்கிறார்கள். ஆக தபால் தலை மற்றும் கலைஞர் தொலைக்காட்சியைக் குறித்த விளக்கம் இவ்வளவுதான்.

அடுத்ததாக கலைஞரை சந்தித்து 15நிமிடங்கள் அவருடன் உரையாடிய நிகழ்வு! தபால்தலையை அவரிடம் சேர்ப்பது என்பதை விட அவரை சந்திப்பதென்பது என் நெடுநாளைய கனவு. மறைந்த திமுக மாநில அமைப்பாளர் சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு அவர்கள் எனது தந்தையின் தாய்மாமா என்ற அறிமுகம் இருந்தாலும், இப்போது எங்கள் குடும்பத்தில் யாருமே அரசியலில் இல்லாததால் கலைஞரை சந்திப்பற்கான வாய்ப்பு ஏற்படவே இல்லை. சிலரை நாம் இறப்பதற்குள் நேரில் சந்தித்துவிட வேண்டும் என்று நமக்கு தோன்றுவது இயல்பே. எனக்கு அப்படி தோன்றும் வெகுசிலரில் முதலானவரும், முக்கியமானவரும் கலைஞர். தபால் தலைகள் என்னிடம் வந்து சேர்ந்ததும் அவரைச் சந்திக்க நேரம் கேட்டு கோபாலபுரத்தை அழைத்தேன். எனது மற்றும் தோழர் வினையூக்கி செல்வாவின் முழுத் தகவலையும் பொறுமையாக வாங்கினார்கள். பின் அது குறித்து விசாரித்துவிட்டு அடுத்தநாள் இரவு 9.45க்கு அழைத்து "காலை 11 மணிக்கு வந்துவிடுங்கள்" எனச் சொல்லியிருந்தார்கள்.

கோபாலபுரம்! நான் என் வாழ்நாளெல்லாம் ரசித்த, ரசிக்கும் ஒரு மிகப்பெரும் எழுத்தாளரின், மாபெரும் தலைவரின் இல்லம் அது. ஏறத்தாழ 60 ஆண்டுகாலமாக இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானித்த இல்லத்தின் வரவேற்பறையில் அமரவைக்கப்பட்டேன். வரவேற்பறையைச் சுற்றி பல புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதில் கோபாலபுரத்தில் கலைஞர் வளர்த்த இரண்டு நாய்களின் படங்களும் இருந்தது. எனக்கு கோபாலபுரம் அளித்த முதல் ஆச்சரியம் அது!

அடுத்து ஒவ்வொருவராக வந்து தபால் தலை பற்றியும் அதை வெளியிட்ட முறை பற்றியும் கேட்டறிந்தார்கள். பலர் ஆவலுடன் வாங்கிப் பார்த்தார்கள். பின்பு சரியாக 11.15யிற்கு கலைஞரை சந்திக்க மேலே அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே கலைஞர் தன் இருக்கையில் முகம் முழுவதும் உற்சாகத்துடன் அமர்ந்திருந்தார். நாங்கள் வணக்கம் சொன்னவுடன் இருகைகளையும் கூப்பி தன் முகம் அளவிற்கு உயர்த்தி பதில் வணக்கம் சொன்னார். ஐந்து முறை முதல்வராய் இருந்த, 60ஆண்டுகாலம் சட்டசபை உறுப்பினராய் இருக்கும், தமிழக வரலாற்றின் அரைநூற்றாண்டுகாலத்தை செதுக்கிய, செதுக்கும் அந்த மாபெரும் தலைவர் இருகைகளையும் கூப்பி தன் முகம் அளவிற்கு உயர்த்தி வணக்கம் சொன்னார்!! இது கோபாலபுரம் எனக்களித்த இரண்டாவது பேராச்சரியம்.

அருகில் பூங்கொத்துக்களுடன் சென்றவுடன் புகைப்படங்கள் எடுத்துவிட்டு, "எங்கிருந்து வர்றீங்க?" என்றார். "மதுரேல இருந்து வந்திருக்கோம் அய்யா" என்றேன். பின் தபால்தலையை அவரிடம் காண்பித்தவுடன் அதைப்பற்றிய விவரங்களைக் கேட்டார். பின் மேலே நான் முதல் பத்தியில் கூறியுள்ளவற்றையெல்லாம் அவரிடம் சொன்னேன். தெளிவாகக் கேட்டுக்கொண்டு சந்தேகங்களைக் கேட்டார். சந்தேகங்களுக்கெல்லாம் பதில் சொன்னவுடன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பின் அவரிடம் கொடுப்பதற்காக கொண்டு போயிருந்த தபால் வில்லைகளை அவரிடம் அளித்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதில் என் பெயர் (Don Ashok (a) Ilavarasan)என்றிருந்தது. அதை ஒருநிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, "இளவரசன் மதுரையில் என்ன பண்றீங்க?" என்றார். (டான் அசோக் அவருக்கு பிடிக்கவில்லை போலும் :-) ) "மதுரையில் வியாபாரம் செய்கிறேன் மற்றும் விளம்பரப்படங்கள், குறும்படங்களுக்கு கதை, வசனம் எழுதுகிறேன்" என்றவுடன் மகிழ்ச்சியை தெரிவித்தார். அடிக்கடி, "ரொம்ப மகிழ்ச்சி தம்பி" என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார். பின் என் தந்தையின் தாய்மாமாவான எஸ்.எஸ்.தென்னரசு பற்றி தெரிவித்துவிட்டு, இந்திராகாந்திக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் கலைஞருக்காக ஆஜரான என் அம்மா வழி தாத்தா வழக்கறிஞர் எஸ்.கண்ணனின் பெயரையும் கூறினேன். (வைகோ திமுகவில் இருந்தபோது அவருக்காகவும் நிறைய வழக்குகளை நடத்தியிருக்கிறார். 2003ல் தாத்தாவின் மறைவிற்கு வைகோ வந்திருந்தார்.)  உடனே அடையாளம் கண்டு, உற்சாகத்தோடு அவர்களைப் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

  90 வயது அரசியல்வாதி! பழுத்த பழம்! பிரச்சினைகளுடனே தூங்குகிறார். பிரச்சினைகளுடனே எழுந்திருக்கிறார்! காலையில் ஊடகங்கள் எல்லாம் அவர் மீது வாரி இறைக்கும் வன்மத்தின் முகத்தில் கண்விழிக்கிறார். அவரது அரசியல் நகர்வுகளை இந்தியாவே கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் யாருக்குமே யார் என்றே தெரியாத என்னுடன், ஒரு சாமானியனுடன் ஒரு அறையில் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் உள்ளே நுழைந்தபோது, திருப்பதியில் 100ரூபாயையும் நம்மிடம் வாங்கிக்கொண்டு "போதும் பாத்தது.. போ போ" என விரட்டுவார்களே அப்படி விரட்டுவார்கள் என்ற எண்ணத்துடன்தான் உள்ளே சென்றேன். ஆனால் நினைத்தது அப்படியே தலைகீழாக நடந்தது எனக்கு கோபாலபுரம் அளித்த மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது ஆச்சரியங்கள்!!

பின் அவரது பிறந்தநாளிற்காக நான் எழுதிய 'கலைஞர் வாழ்த்து' என்ற கவிதையை காண்பித்தேன். இரண்டு முறை ரசித்துப் படித்தார். பின் நக்கீரனில், அவரது முகநூல் பக்கத்தில் சிலர் வரம்பு மீறி பின்னூட்டமிடுவது குறித்து நான் அளித்திருந்த சிறிய பேட்டியைக் காண்பித்தேன். சில கட்டுரைகளைக் காண்பித்த பின், இணையத்தில் திமுகவின் செயல்பாடு பற்றி சிலவிஷயங்களைச் சொன்னேன். நெஞ்சுக்கு நீதியில் அவரது கையொப்பம் கேட்டேன். "கொடுங்க தம்பி", என்றவுடன் அவரிடம் புத்தகத்தையும், பேனாவையும் என் தம்பி இளஞ்செழியன் கொடுத்தவுடன் வாங்கி 'வாழ்த்துக்களுடன் மு.கருணாநிதி' என மிக மெதுவாக கையொப்பமிட்டார். மிசா காலத்தில் பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டிருந்தபோது ஒரு முதல்வர் தெரு ஓரங்களில் நின்று தன் கையெழுத்துப் பிரதி பத்திரிக்கைகளை மக்களிடம் விநியோகித்தார். 70ஆண்டுகாலமாக 'உடன்பிறப்பே' என ஓயாமல் உழைக்கும் அந்த முதல்வரின் கைகள் இட்ட கையொப்பம் எனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் முதல் பக்கத்தில் பதிந்தது எதிர்பாராத இமாலய வியப்பு!! இதெல்லாம் நடக்குமென்று நினைத்து நான் உள்ளே செல்லவில்லை. ஆனால் ஆறாவது, ஏழாவது ஆச்சரியங்களும் நடந்தன! எல்லாவற்றும் மேலாக "வாயா போயா" என அழைப்பார் என நினைத்துப்போன எனக்கு அவரது "வாங்க தம்பி போங்க தம்பி" பேச்சு பெரும் பேராச்சிரியத்தை வழங்கியது. ஒருவேளை, "எந்த ஊருய்யா நீ?" எனக் கேட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேனோ என்னவோ! :-)

ஒருவழியாக அந்த அறையில் இருந்து விடுபடவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் வெளியேற மனதின்றி, என்ன செய்வது எனத் தெரியாமல் "வணக்கங்கய்யா" என இரண்டு மூன்று முறை நான் சொல்ல அவரும் கூப்பி வணங்கிய தன் கைகளை கீழே இறக்காமல் வணக்கம் சொன்னார். ஒருநிமிடம் என் உடல் கூசிவிட்டது! இப்படியும் தலைவர்கள் இருப்பார்களா என்று!

சம்பளம் கொஞ்சம் அதிகமானாலே நமக்கெல்லாம் திமிர் வந்துவிடுகிறது. எது எதற்கோ யார் யார் மீதோ நாம் திமிர் கொள்கிறோம். ஆனால் ஒரு தமிழகத்தின் வரலாற்றை எழுதுபவர் தன்னை விட 70 வயது குறைந்த ஒரு சிறுவனுக்கு கூட ஈகோ இன்றி மரியாதை கொடுக்கிறார்! இன்னமும் பணிவையும், திராவிடப் பண்பையும் விடாமல் வைத்திருக்கிறார். உழைப்புக்கு மட்டுமே கலைஞரை புகழ்வார்கள். ஆனால் அவரிடம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு பண்பு  மிகச்சிறியாரையும் மதித்தல் எனும் பெரும்பண்பு! புத்தனுக்கு போதிமரத்தடியில் தியானம் செய்யத்தான் வாய்ப்பு கிடைத்தது. நான் போதிமரத்துடன் ஒரு 15நிமிடங்கள் உரையாடிவிட்டு வந்தேன்!

இங்கே வந்து பார்த்தால் என் நண்பர்களிலே கூட பலர் என்னென்னமோ என்னைப் பற்றி அவதூறாக எழுதியிருக்கிறார்கள். அவதூறுகளை எல்லாம் உரமாக்கி செழித்து வளர்ந்திருக்கும் ஒரு போதி மரத்துடன் உரையாடிவனை முகநூல் அவதூறுகள் என்ன செய்துவிடும்? போதி மரத்திற்கு நான் ஒரு குவளை நீர் ஊற்றினேன். என் ஒரு குவளையால் போதி மரத்திற்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால் போதி மரத்தின் மீதான என் நன்றிக்கடன் அது!!  உங்களுக்குப் பிடித்த பார்த்தீனியச் செடியோ, கருவேலமரமோ, கருமமோ இருந்தால் தாராளமாக ஒரு அண்டா நீரூற்றுங்கள்! ஆனால், "அதையும் செய்யமாட்டேன் எனக்கு வேலை நொள்ளை சொல்வதுதான்" என்றால், ஒரு டப்பா சைபால் வாங்கி உடம்பெல்லாம் தடவிக்கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த அரிப்புக்கு வேறு மருத்துவமே இல்லை:-)

15 comments:

Anonymous said...

மிகப் பெரிய சாதனையே, கருணாநிதி மீது ஆயிரம் விமர்சனங்களை முன் வைத்தாலும், தமிழக வரலாற்றில் மிக மிக முக்கியமான புள்ளி, சினிமா, இலக்கியம், அரசியல் என அவரை நேரில் காண்பதே அரிது, சந்தித்து உரையாடியது மிக அற்புதமான வாய்ப்பு. ஒரு தமிழகத்தின் முக்கிய தலைவரை அந்நிய நாட்டில் அடையாளமாக்கிய உங்கள் இருவரின் பணியும் பாராட்டத் தக்கது.. வாழ்த்துக்கள்.

மதுரன் said...

ஜில் ஜங் ஜில் ஜங் ஜில் ஜங் ஜில் ஜங்

mohamed salim abdullahhussaini said...

very good post congrats

M.Seetharaman M.Seetharaman said...

படித்த எனக்கே இவ்வளவு பூரிப்பாக இருக்குதே..
அந்நேரம் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என நினைக்கும் போது இன்னும் பூரிக்கிறது..

PRINCENRSAMA said...

Vazvin marakka mudiyatha 15niidangalai vaznthuvittu vanthirukkireerkal. Vazthukal.

ssk said...

கலைஞர் ஒரு நிறை. அவர் தம் திறமைக்கும் , தெள்ளிய அறிவிற்கும் ஈடு இல்லை.
எனக்கும் அவரை பார்த்து விட வேண்டும் , அதி காலையில் பார்த்து ஒரு வார்த்தை பேசி விட வேண்டும் என்ற ஆவல் உண்டு. அரசியலில் யாரையும் தெரியாததால் எப்படி என்று தெரியவில்லை. நேரம் வரும் என்று உள்ளேன்.

Karthik KN said...

அருமையான பதிவு :)வாழ்த்துக்கள்.

al said...

நாங்களும் கலைஞரை கண்டு வந்த கழிப்பு வந்தது.பிராண்டுவதற்கே பிறவி எடுத்தவர்கள், அவர்களை விட்டு தள்ளி அடுத்த அடி எடுத்து வைப்போம்.
அல்-காதர்

Manikandan G said...

போதிமரத்துடன்(தலைவர்) அலவளாவிய தோழர் டான் அசோக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!! பொறாமையுடன்!!!!!!!!!!!

Manikandan G said...

போதிமரத்துடன்(தலைவர்) அலவளாவிய தோழர் டான் அசோக் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

மற்றற்ற பொறாமையுடன்!!!!!!!!!!!!

Thambi Prabu said...

எல்லாருக்குமான பதில்... நல்ல பதிவு.
காழ்ப்பும், அரிப்பும், அழுக்காறும் நிறைந்த உலகமிது. அவர்களுக்கு சைபாலை காட்டிலும் அவ்வரிப்பை அறுத்தெடுக்கும் கத்திகள்தான் இப்போது தேவை. அரிப்புக்கு மருந்திட்டாலும் அழுக்காறுக்கு மருந்தேது.. நமது பயணம் தொலைனோக்கானது.. யாரோ ஒரு ராப்பிச்சைக்காரனுக்கு நாம் 1 ரூபாய் தருமம் செய்யாவிடில் சில நொடிகள் சலசலப்பான், பொறுமுவான். அவனுக்கு அதுதான் முடியும். நாம்

Thambi Prabu said...

எல்லாருக்குமான பதில்... நல்ல பதிவு.
காழ்ப்பும், அரிப்பும், அழுக்காறும் நிறைந்த உலகமிது. அவர்களுக்கு சைபாலை காட்டிலும் அவ்வரிப்பை அறுத்தெடுக்கும் கத்திகள்தான் இப்போது தேவை. அரிப்புக்கு மருந்திட்டாலும் அழுக்காறுக்கு மருந்தேது.. நமது பயணம் தொலைனோக்கானது.. யாரோ ஒரு ராப்பிச்சைக்காரனுக்கு நாம் 1 ரூபாய் தருமம் செய்யாவிடில் சில நொடிகள் சலசலப்பான், பொறுமுவான். அவனுக்கு அதுதான் முடியும். நாம்

Siva said...

Yes he need to recognized for inventing scientific corruption and for his family involvement in India top most corruption.

abul bazar said...

தலைவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்திருக்கிரீர்கள்.. தங்களுக்கு கிடைக்கப் பெற்ற அறிய வாய்ப்பு...நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்...

மற்றட்ட மகிழ்ச்சி அசோக்....

வாழ்த்துக்கள்....

Pugazh said...

This article invoked my memory to recollect the day Kalaignar was in Singapore (about 10 years ago) at one of the stadium completely house full, and we were eagerly waiting for his arrival and enjoyed his speech. I always cherish that memory.

I enjoyed reading your above article and I read it many times. A very good post. Thank you!

Related Posts Plugin for WordPress, Blogger...