Wednesday, July 31, 2013

ராஜராஜசோழன் காலத்தில் புரட்சி செய்த சீர்மூக்கிச் சித்தர் சொன்ன கதை!பிரச்சினைகள் நிறைந்த ஊரில் சில எலிகள் இருந்தன. அந்த ஊரின் மக்கள் அந்த பிரச்சினைகளைத் தீர்க்க பல வழிகளில் மெனக்கெட்டார்கள். சிலர் வீதியில் போராட்டம் செய்தார்கள், சிலர் பல ஊடகங்களின் வழியே பரப்புரை செய்தார்கள். ஆனால் எலிகளுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. நாம் நமக்கென்று தனி ஊர் அமைத்துவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடுமே என அந்த எலிகள் எண்ணின. ஆனால் "தனி ஊர் அமைத்தாலும் இதே பிரச்சினைகள் தானே அதிலும் இருக்கும்? தீர்வு கண்டுவிட்டு அல்லவா தனி ஊர் அமைக்க வேண்டும்?" என அப்பாவித்தனமாக கேட்ட ஊர் மக்களை அந்த எலிகள் "போங்கடா இனத் துரோகிகளா" எனத் திட்டின.  அதுமட்டுமல்லாது அந்த ஊரில் யார் பிரச்சினைகளை உண்டாக்குகிறார்களோ அவர்களுக்கு ஒற்றர் வேலை பார்க்கவும் இந்த எலிகள் தயங்கவில்லை. ஒருகட்டத்தில் கடுப்பான ஊர்மக்களும் அந்த எலிகளை "லூசு எலிகள்" என ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனால் அந்த எலிகள் மனம் தளராமல் தினமும் டீக்கடையில் நின்றுகொண்டு தனி ஊர் கனவு பற்றி சத்தம் போட்டு பேசின. ஊர்மக்களை கண்டபடி திட்டின, எல்லாவற்றுக்கும் மேலாக அந்த எலிகள் அவைகளுக்குள்ளாகவே, "டேய் நம்ம தனி ஊர் அமைச்சவுடன நம்ம எதிரிகளுக்கெல்லாம் அதுல குடியுரிமை கொடுக்க கூடாதுடா" என்று பேசும் அளவிற்கு அவைகளுக்குப் பைத்தியம் முத்திவிட்டது. சரி இப்படியெல்லாம் இந்த எலிகள் பேசுகின்றனவே எதாவது ஆக்கபூர்வமாக செய்கின்றனவா என ஊர் மக்கள் எல்லாம் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் பெரும்பாலான எலிகளுக்கு உள்ளூர் பிரச்சினை எதுவுமே தெரியவில்லை. மூக்குமுட்ட தின்றுவிட்டு, தின்றது செமிக்கும் வரையில் தனி ஊர் கோஷத்தை டீக்கடையில் எழுப்பிவிட்டு பின்னர் தூங்குவதை பழக்கமாக வைத்திருந்தன.  பிரச்சினைகளை தீர்க்கவும் உதவாமல், எதிரிகளுக்கு வால்பிடித்து அலைவதோடு, ஊர்மக்களையும் ஏசும் இந்த கேடுகெட்ட எலிகளைப் பிடித்துச் சாவடிக்க ஒருநாள் ஒருவன் வந்தான்.  புரட்சிகரமான பாடல்களை இசைத்துக்கொண்டே  கடலை நோக்கி நடந்த அவனை நாராசமாக திட்டியபடி அந்த எலிகளும் அவனைப் பின் தொடர்ந்து சென்றன. அவனோ எதையுமே காது கொடுத்து கேட்கவில்லை. சிரித்தபடியே கடலை நோக்கி நடந்தான்.  அப்படியே அவன் கடலுக்குள் இறங்கவும், இவைகளும் கண்மூடித்தனமாக திட்டியபடியே கடலுக்குள் சென்று நீரில் மூழ்கி மடிந்தன. கடலுக்குள் இறங்கிய அவன், நீரில் மூழ்காத உடைகளுடன் கரையேறி வந்து ஊர் மக்களுக்கு எலிகள் எல்லாம் அழிந்துவிட்டன என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தந்தான். அத்தோடு எலிகளின் கதை முடிந்து அந்த ஊர் மக்கள் நிம்மதியாக தங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்.

- சோழர் காலத்தில் வாழ்ந்த செம்பனங்காட்டுச் சீர்மூக்கிச் சித்தரின் வழித்தோன்றல் சீர்காதுச் சித்தர் சொன்ன வரலாற்று ரீமேக் கதை இது. எலிகள் தோன்றும் போதெல்லாம் இசைக்கலைஞர்கள் தோன்றுவார்கள் என்பது நீதியாம்!! புரிவோர் புரிந்துகொள்க!  

Tuesday, July 30, 2013

தேவதாசி என்னும் புனித விபச்சாரம். தோற்றமும் சில குறிப்புகளும்.


பிறருக்கு மிகவும் கொடுமையாகத் திகழும் சில விஷயங்களைப் பற்றி பேசும்போதும், கருத்து தெரிவிக்கும்போதும் நமக்கு மிகச் சுலபமாக இருக்கிறது. நாம் அந்தக் கொடுமைகளை அனுபவிப்பதில்லை. மிஞ்சிப்போனால் எவரோ எழுதியதைப் படிக்கிறோம், அல்லது எவரோ யாரிடமோ சொல்லும்போது கேட்டுக்கொள்கிறோம். பெரும்பாலும் கருத்துத் தெரிவித்தலுக்கு முன்பு நடக்கும் இந்த 'தெரிந்துகொள்தல்' படலம் மிகுந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நம்மை உட்படுத்துவதில்லை, குளிர்சாதன அறையிலேயே நடந்து முடிகிறது. தேவதாசி முறையைப் பற்றிய சில கலை ஆர்வலர்களின் கருத்துக்கள் இதுப்பொன்றவைதான்.

16 வயதே நிரம்பிய ரூபா தேவதாசி முறையில் கர்நாடகாவின் எல்லம்மா கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர். அவர் சொல்கிறார், "11வயதில் நான் பருவத்திற்கு வரும் முன்பே என் கன்னித்தன்மையை அர்ப்பணித்துவிட்டேன். முதல் முறை மிகவும் வலிதருவதாக இருந்தது. என்னுடன் இரவைக் கழித்தவர் ரேசர் ப்ளேடுகளால் என் பிறப்புறுப்பில் கீறலகளைப் போட்டார். இப்போது எனக்கு பழகிவிட்டது". இது 'ஒரு' தேவதாசியின் கதை. இந்தியக் கோவில்களின் வரலாறு நெடுகே கோடிக்கணக்கான ரூபாக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புறுப்புகளும், உடல்களும் உயர்சாதி ஆண்களால் பொழுதுபோக்கு மைதானங்களைப் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொஞ்சம் ஆழமாய்த் தேடினால், தேவதாசிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நெஞ்சை உறைய வைப்பதாக, கண்ணில் நீர் தழும்ப வைக்கும் கொடூரத்துடனேயே இருக்கின்றன.

இந்தியாவெங்கும் தேவதாசிகள் உருவானது புத்தமதம் அழிந்தபின்புதான் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காமத்தை தன் மூலப்பொருளாகக் கொண்டு எழுதிய வாத்சாயனரோ, ஜடாகா கதைகளிலோ தேவதாசிகளைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் அவற்றுக்குப் பின், அதாவது புத்தமதம் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டு சைவ-வைணவம் தழைத்தோங்கத் துவங்கிய காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும்,  குறிப்புகளிலும் தேவதாசிகளைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்தி, புத்த துறவிகளாக இருந்தப் பெண்களை தேவதாசி முறையில் விபச்சாரப் பெண்களாக அக்காலத்திய சைவ-வைணவ புரோகிதர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கினார்கள் என்ற தகவலும் உள்ளது. ஜைன மதத்துறவிகளையும், புத்தமதத் துறவிகளையும் (ஆண் துறவிகளை) கழுவிலேற்றும், கொதிக்கும் சுண்ணாம்பில் எறியும் காட்சிகள் புடைப்போவியங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் உள்ளதை இன்றும் காணலாம். இப்போது பெண் துறவிகள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியையும், மேலே சொல்லப்பட்டுள்ள புத்தமத வீழ்ச்சியின் காலத்தையும், தேவதாசி முறையின் துவக்கத்தையும் ஒன்றிணைத்தோமானால் நமக்கு பதில் எளிதில் கிடைத்துவிடுகிறது.இப்படித் தோன்றிய இந்த முறை பின் வழிவழியாக தொடர தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை பயன்படுத்திக்கொண்டனர்.

தேவதாசி எனப்படும் தேவரடியார் முறையை நிறுவனமயமாக்கிய பெறுமை நம் ஊர் மன்னன் ராஜராஜசோழனையே சேரும். தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட போது அதற்காக நாடெங்கிலும் இருந்து 400 சின்னப்பெண்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர். பெரும்பாலும் ஏழைக் கூலிகள், விவசாயிகளின் குழந்தைகளான இவர்கள் வறுமையின் காரணமாக விற்கப்பட்டிருக்கிறார்கள். ராஜராஜசோழனின் காலம் பார்ப்பனர்களுக்கும், அரசகுடும்பங்களுக்கும் பொற்காலமாக விளங்கியதேயொழிய ஏழைகளுக்கும், சாதிய படிமத்தில் கீழே இருந்தவர்களுக்கும் அல்ல. பார்ப்பனர்களுக்கு கிராமம் கிராமமாக அள்ளிவழங்கிய சோழர்கள்தான் வண்ணார்களின் சலவைக்கல்லுக்கு வரி விதித்த கேலிக்கூத்தையும் செய்தார்கள். பெண்களை உடன்கட்டை ஏறச்செய்வது, வர்ணாசிரம தர்மத்தை முறைப்படி கடைபிடிப்பது, தாழ்த்தப்பட்டோர் பள்ளங்களிலும், உயர்சாதியினர் மேடான இடங்களிலும் வாழவேண்டும் என உத்தரவிட்டது,  பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்று ஏழைகளைப் பிரித்து தனிச்சேரிகளில் வைத்தது என ராஜராஜசோழன் நிறுவனமயமாக்கிய அசிங்கங்கள் ஏராளம், ஏராளம். அவன் ஆரம்பித்து வைத்த அவளங்கள் தான் இன்னும் நம் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.  இதைப் பற்றிப் பேசினால் தனிப்புத்தகமே வேண்டுமென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

ஏழைக் குடும்பப் பெண்களை கடவுளின் பேரால் விபச்சாரிகளாக மாற்றியாகிவிட்டது. இப்போது இழப்பீடு வழங்கவேண்டுமல்லவா? அப்போதுதானே தொடர்ந்து தேவதாசியாக பெண்கள் வருவார்கள்! அதற்காக சோழர் காலத்தில் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தரிசு நிலங்களை தேவதாசிகளுக்கும், விளைநிலங்களை பூசாரிகளுக்கும் ஒதுக்கிய பாரபட்சமும் நிகழ்ந்தேறியுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் போது கோவில் நகைகளை அணிந்து இவர்கள் ஆடியிருக்கின்றனர். திருமணம் போன்ற சடங்குகளில் இவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. பின் கால ஓட்டத்தில் உடலுக்கு காசு என்ற அளவில் இந்த மரியாதை சுருங்கியது தனிக்கதை. இப்படி வழிவழியாக கோவிலில் தேவரடியார்களாக இருக்கும் இப்பெண்களின் ஆண் குழந்தைகள் நாதஸ்வரம், மிருதங்கம், தவில் போன்ற இசைக்கருவிகளைக் கற்று கோவிலிலேயே பணி செய்திருக்கிறார்கள். விபச்சாரம் ஒழிந்துவிட்டாலும் இன்னமும் கோவில்களில் இசைப்பணி புரியும் சமூகத்தவர்கள் இவர்கள் வழி வந்தவர்களே.

தேவதாசி முறை குறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை ஒன்று, ஆளும் வர்க்கம் மற்றும் கடவுளை முழுதாய் கையில் வைத்திருந்த (வைத்திருக்கும்) பார்ப்பன வர்க்கத்திற்கும் நிலவிய காமத்தேவைக்கு வடிகாலாக தேவதாசி முறை பயன்பட்டதாகவும், அதன்காரணமாக தங்களிடமிருந்த கடவுள் மற்றும் மதத்தை பயன்படுத்தி தேவதாசி முறையை தோற்றுவித்தனர் என்றும் தெளிவாகத் தெரிவிக்கிறது. இதில் ஈடுபடுத்தப்பட்ட அத்துணை பெண் குழந்தைகளும் தாழ்த்தப்பட்ட சாதியை, சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். சூத்திர ஆண்கள் மனுதர்மப்படி தீண்டப்படக்கூடாதவர்கள், ஆனால் காமத்தில் ஏது தீண்டாமை? எல்லாவற்றுக்கும் தான் மனுதர்மத்தில் பரிகாரமும் இருக்கிறதே!!!

இப்படி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார்கள் அங்கேயே பகல் நேரத்தில் ஆடல், பாடல்களைக் கற்று இரவு நேரங்களில் விபச்சாரம் செய்வதுமாக இருந்திருக்கிறார்கள். பணம் மிகுந்த சில செல்வந்தர்கள் ஒரே பெண்ணை வைத்திருந்த கதைகளும் உண்டு. இந்தத் தொழிலில் வரும் வரும்படியில் ஏழ்மையில் உழலும் தங்கள் குடும்பத்தைக் காக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள எல்லம்மா தெய்வத்திற்கு இன்னமும் பெண் குழந்தைகள் தேவதாசிகளாக நேர்ந்துவிடப்படுகிறார்கள். ஏழ்மையான சூழ்நிலையில் இப்படி ஆக்கப்படும் குழந்தைகள் தங்கள் உடலை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஏழு, எட்டு வயதிலேயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் இவர்கள் ஓரவிற்கு உடல் ஒத்துழைக்கும் வரை இத்தொழிலைச் செய்துவிட்டு 45வயதிற்கு மேல் கோவில் வாசலில் பிச்சை எடுக்கத் துவங்கிவிடுகிறார்கள். அரசால் சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்ட பழக்கமாக இருந்தாலும், கோவில் பூசாரிகள் இன்னமும் இச்சடங்குகளைச் செய்து பெண்களை தேவதாசிகளாக அனுமதிக்கிறார்கள்.

பெரும்பாலும் தேவதாசிகளாக தங்கள் குழந்தைகளை ஆக்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் விபச்சாரம்தான் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தும், கடவுள்-மதம் எனக் காரணங்களைச் சொல்லி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். பல நேரங்களில் பச்சிளங்குழந்தைகள் கூட நேர்ந்துவிடப்படுகின்றன. இந்த குழந்தைகளை அங்கு ஏற்கனவே இருக்கும் ஜோகினிக்கள் (தாசிகள்) வளர்த்து, ஏழெட்டு வயதிலேயே படுக்கையறைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இந்திய தேவதாசி முறை குறித்து எழுதியிருக்கும் ஜோகன் ஷங்கர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இம்முறைக்கான மூலகாரணம் அக்காலத்திய புரோகித சமூகம் (பார்ப்பன சாதி) ஏனைய சமூகங்களை தனக்குக் கீழாக எப்போதும் வைத்திருக்க வேண்டுமென்பதால் அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும் வண்ணம் உருவாக்கியதே தேவதாசி முறை ஆகும் என்று குறிப்பிடுகிறார்கள். சாதி அடுக்கை காப்பாற்றும் அதே நேரம், காமவேட்கையையும் தீர்த்துக்கொள்ளும் முறையாகவே இது இருந்திருக்கிறது. கடவுளின் மனைவிகள் என நேர்ந்துவிடப்பட்டப் பெண்களை உயர்சாதி மனிதர்கள் மாறி மாறி புணர்ந்ததை கலாச்சார வளம் பொருந்தியதாய் பீற்றிக்கொள்ளும் ஒரு சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நகைமுரண்.

தேவதாசி முறைக்கு எதிராக பல சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் இந்தியாவில் 2.5லட்சம் மேலான தேவதாசிகள் இருக்கிறார்கள் என இந்திய பெண்கள் ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ஆந்திராவில் 16,625 தேவதாசிகளும், கர்நாடகவாவில் 22,941 தேவதாசிகளும், மஹராஷ்ட்ராவில் 2479 தேவதாசிகளும் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை
தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ராஜராஜசோழனால் முழுவீச்சில் நிறுவனமயமாக்கப்பட்ட தேவதாசி முறை இன்று தமிழ்நாட்டில் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. இதில் பெரியார், முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரது பணி மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

இப்படி சாதியின் பேரால், கடவுளின் பேரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பெண்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த ஒரு அசிங்கமான வழக்கத்தை பரதத்தில் பட்டம் பெற்ற சிலர் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அந்த முறை எல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருந்திருந்தால் நாம் காஞ்சிகாமகோடி போன்றோரின் பிடியில் சிக்கியிருக்க வேண்டியதில்லையே என அவர்கள் உள்ளுக்குள் நினைத்தார்களோ என்னவோ!!

எல்லாவற்றுக்கும் மேலாக நம் ஊரில் மிகப்பெரிய கெட்டவார்த்தையாக கருதப்படுவனவற்றில் முக்கியமான ஒன்று "தேவடியா மகனே" என்பது. ஒருவேளை தேவரடியார்கள் நம் சமூகத்தில் மிகுந்த மரியாதையுடன், வளத்துடன் நடத்தப்பட்டிருந்தார்களேயானால் அவர்களின் பெயரில் எப்படி ஒரு கெட்டவார்த்தை உருவாகியிருக்க முடியும்? இன்று தேவதாசி முறையை போற்றிப்புகழக் கிளம்பியிருக்கும் மேட்டுக்குடி கூட்டத்தை நாம் "மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேவடியா மகன்களே.. தேவடியா மகள்களே" எனக் குறிப்பிட்டால் பொறுத்துக் கொள்வார்களா?

விபச்சாரம் புனித விபச்சாரமாக சித்தரிக்கப்பட்டாலும் விபச்சாரம், விபச்சாரம் தானே! இல்லை அது புனிதம் தான் என்றால் அந்தத் தொழிலுக்கு வக்காலத்து வாங்கும் மேட்டுக்குடி கலை ஆர்வலர்கள் உடனடியாக அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தங்களை தேவதாசிகளாக பதிவுசெய்துகொண்டு எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்.Sunday, July 21, 2013

கலைஞர், நான், ஆஸ்த்ரியா தபால் தலை, 15நிமிடங்கள் -டான் அசோக்


கலைஞர், கோபாலபுரம், அவருடனான எனது 15நிமிட உரையாடல் என எல்லாவற்றையும் பற்றி எழுதும் முன், மிக முக்கியமாக ஆஸ்த்ரிய தபால் தலை பற்றிய சில விசயங்களை எழுதிவிடுதல் நலம். ஆஸ்திரியா, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் தபால் தலைகளை வடிவமைத்து பணம் கட்டினால் அதை வெளியிடும் வழக்கம் ஒன்று இருக்கிறது. அந்த முறையில் சென்ற ஆண்டு ஃபிரான்ஸில் பிரபாகரனின் தபால்தலை வெளியிடப்பட்டது. அதை இங்குள்ள தமிழ்தேசியவாதிகளும் சரி, பிற ஆட்களும் சரி 'சத்தமின்றி' பகிர்ந்து அகமகிழ்ந்தார்கள். நாமும் தமிழர் என்ற வகையில் மகிழ்ந்தோம். அதே போல் ஆஸ்திரிய தபால்துறையில் உங்கள் குழந்தையின் படத்தையும், கட்டணத்தையும் கொடுத்தால் கூட உடனே தபால்தலையாக வெளியிட்டு விடும் வண்ணம் ஒரு வசதி உள்ளது. ஆனால் கலைஞர், பிரபாகரன், பெரியார், ஜார்ஜ் பெர்னாட்ஷா, ஜெயலலிதா என எதாவதொரு பெரிய public figureயின் முகம் பதித்த தபால் தலையை வெளியிடவேண்டுமென நாம் அனுமதி கோரினால் அதற்கு காபிரைட், ரிவ்யூ என சில சம்பிரதாயங்களும், விதிகளும் உண்டு. எடுத்தேன் கவிழ்த்தேன் என ஒப்புக்கொண்டு "இந்தாப்பா வச்சுக்க" என தபால்தலையை எடுத்துக் கொடுக்க மாட்டார்கள். ஒரிரு நாள் அந்நபரைப் பற்றி விசாரித்துவிட்டே ஒப்புதல் அளிப்பார்கள். அவ்வகையில் கலைஞர் பற்றிய குறிப்புகள் நிறைந்த ஒரு அறிக்கை ஆஸ்திரிய அரசுக்கு அனுப்பப்பட்டு, ஒருநாள் சென்று அவர்களின் முறையான அனுமதி வந்தவுடன் அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு இந்த தபால்தலை ஆஸ்திரிய அரசால் வெளியிடப்பட்டு, பட்டு, பட்டு, பட்டு, ஒருவழியாக எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதான் விதிமுறையும், வழிமுறையும்.  ஜூன்4ல் அனுமதி கிடைத்தவுடன் எங்களுக்கு தபால் தலையின் ஸ்கேன் காபி வந்தது. அதை முகநூலில் பதிந்த போதும் "எங்கள் சொந்த முயற்சியில் ஆஸ்திரிய தபால் துறை இந்த தபால்தலையை வெளியிட்டுள்ளது" என்றே பதிந்திருந்தேன்.

இன்று கலைஞரை சந்தித்தபின் கலைஞர் டிவிக்கு அளித்த பேட்டியிலும் "எனது மற்றும் எனது ஆஸ்திரிய நண்பரின் முயற்சியினால் இத்தபால்தலையை ஆஸ்திரிய அரசு வெளியிட்டிருக்கிறது" என்றுதான் கூறியிருந்தேன். அதை ஒளிபரப்பியபோது என்னை தவறுதலாக 'ஆஸ்திரிய தமிழர்' எனக் குறிப்பிட்டு விட்டார்கள். இரண்டு முறை அழைபேசியில் கலைஞர் தொலைக்காட்சியை அழைத்து திருத்தச் சொன்னபோதும் ஒளிபரப்பில் திருத்தம் செய்யவில்லை. இந்த விசயத்தில் எனது சுய அடையாளத்தை இழந்ததில் எனக்கு மிகுந்த வருத்தமே! அதனால் முரசொலியிலாவது சரியாக வெளியிடுங்கள் என அவர்களை அழைத்து ஒருமுறை வேண்டிக்கொண்டேன். இன்றைய மாலைமுரசில்,  "ஆஸ்த்ரியா நாட்டில் வாழும் தமிழர் வினையூக்கி செல்வகுமார் முயற்சியில் அந்நாட்டு தபால்துறை திமுக தலைவர் கலைஞரின் படம்கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டிருக்கிறது. கலைஞரின் படம், வயது மற்றும்  திமுக கொடியுடன் உள்ள அந்த கொடியை அபு ரயான் என்பவர் வடிவமைத்திருக்கிறார். இதை ஆஸ்திரியாவின் உள்ளூர், வெளிநாட்டு அஞ்சல்களில் பயன்படுத்த முடியும்.  இம்முயற்சியை முன்னெடுத்தவர்களில் ஒருவரான டான் அசோக் இன்று கருணாநிதியைச் சந்தித்து தபால் தலையை வழங்கினார்." என சரியான செய்தியை கொடுத்திருக்கிறார்கள். ஆக தபால் தலை மற்றும் கலைஞர் தொலைக்காட்சியைக் குறித்த விளக்கம் இவ்வளவுதான்.

அடுத்ததாக கலைஞரை சந்தித்து 15நிமிடங்கள் அவருடன் உரையாடிய நிகழ்வு! தபால்தலையை அவரிடம் சேர்ப்பது என்பதை விட அவரை சந்திப்பதென்பது என் நெடுநாளைய கனவு. மறைந்த திமுக மாநில அமைப்பாளர் சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு அவர்கள் எனது தந்தையின் தாய்மாமா என்ற அறிமுகம் இருந்தாலும், இப்போது எங்கள் குடும்பத்தில் யாருமே அரசியலில் இல்லாததால் கலைஞரை சந்திப்பற்கான வாய்ப்பு ஏற்படவே இல்லை. சிலரை நாம் இறப்பதற்குள் நேரில் சந்தித்துவிட வேண்டும் என்று நமக்கு தோன்றுவது இயல்பே. எனக்கு அப்படி தோன்றும் வெகுசிலரில் முதலானவரும், முக்கியமானவரும் கலைஞர். தபால் தலைகள் என்னிடம் வந்து சேர்ந்ததும் அவரைச் சந்திக்க நேரம் கேட்டு கோபாலபுரத்தை அழைத்தேன். எனது மற்றும் தோழர் வினையூக்கி செல்வாவின் முழுத் தகவலையும் பொறுமையாக வாங்கினார்கள். பின் அது குறித்து விசாரித்துவிட்டு அடுத்தநாள் இரவு 9.45க்கு அழைத்து "காலை 11 மணிக்கு வந்துவிடுங்கள்" எனச் சொல்லியிருந்தார்கள்.

கோபாலபுரம்! நான் என் வாழ்நாளெல்லாம் ரசித்த, ரசிக்கும் ஒரு மிகப்பெரும் எழுத்தாளரின், மாபெரும் தலைவரின் இல்லம் அது. ஏறத்தாழ 60 ஆண்டுகாலமாக இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானித்த இல்லத்தின் வரவேற்பறையில் அமரவைக்கப்பட்டேன். வரவேற்பறையைச் சுற்றி பல புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதில் கோபாலபுரத்தில் கலைஞர் வளர்த்த இரண்டு நாய்களின் படங்களும் இருந்தது. எனக்கு கோபாலபுரம் அளித்த முதல் ஆச்சரியம் அது!

அடுத்து ஒவ்வொருவராக வந்து தபால் தலை பற்றியும் அதை வெளியிட்ட முறை பற்றியும் கேட்டறிந்தார்கள். பலர் ஆவலுடன் வாங்கிப் பார்த்தார்கள். பின்பு சரியாக 11.15யிற்கு கலைஞரை சந்திக்க மேலே அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே கலைஞர் தன் இருக்கையில் முகம் முழுவதும் உற்சாகத்துடன் அமர்ந்திருந்தார். நாங்கள் வணக்கம் சொன்னவுடன் இருகைகளையும் கூப்பி தன் முகம் அளவிற்கு உயர்த்தி பதில் வணக்கம் சொன்னார். ஐந்து முறை முதல்வராய் இருந்த, 60ஆண்டுகாலம் சட்டசபை உறுப்பினராய் இருக்கும், தமிழக வரலாற்றின் அரைநூற்றாண்டுகாலத்தை செதுக்கிய, செதுக்கும் அந்த மாபெரும் தலைவர் இருகைகளையும் கூப்பி தன் முகம் அளவிற்கு உயர்த்தி வணக்கம் சொன்னார்!! இது கோபாலபுரம் எனக்களித்த இரண்டாவது பேராச்சரியம்.

அருகில் பூங்கொத்துக்களுடன் சென்றவுடன் புகைப்படங்கள் எடுத்துவிட்டு, "எங்கிருந்து வர்றீங்க?" என்றார். "மதுரேல இருந்து வந்திருக்கோம் அய்யா" என்றேன். பின் தபால்தலையை அவரிடம் காண்பித்தவுடன் அதைப்பற்றிய விவரங்களைக் கேட்டார். பின் மேலே நான் முதல் பத்தியில் கூறியுள்ளவற்றையெல்லாம் அவரிடம் சொன்னேன். தெளிவாகக் கேட்டுக்கொண்டு சந்தேகங்களைக் கேட்டார். சந்தேகங்களுக்கெல்லாம் பதில் சொன்னவுடன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பின் அவரிடம் கொடுப்பதற்காக கொண்டு போயிருந்த தபால் வில்லைகளை அவரிடம் அளித்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதில் என் பெயர் (Don Ashok (a) Ilavarasan)என்றிருந்தது. அதை ஒருநிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, "இளவரசன் மதுரையில் என்ன பண்றீங்க?" என்றார். (டான் அசோக் அவருக்கு பிடிக்கவில்லை போலும் :-) ) "மதுரையில் வியாபாரம் செய்கிறேன் மற்றும் விளம்பரப்படங்கள், குறும்படங்களுக்கு கதை, வசனம் எழுதுகிறேன்" என்றவுடன் மகிழ்ச்சியை தெரிவித்தார். அடிக்கடி, "ரொம்ப மகிழ்ச்சி தம்பி" என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார். பின் என் தந்தையின் தாய்மாமாவான எஸ்.எஸ்.தென்னரசு பற்றி தெரிவித்துவிட்டு, இந்திராகாந்திக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் கலைஞருக்காக ஆஜரான என் அம்மா வழி தாத்தா வழக்கறிஞர் எஸ்.கண்ணனின் பெயரையும் கூறினேன். (வைகோ திமுகவில் இருந்தபோது அவருக்காகவும் நிறைய வழக்குகளை நடத்தியிருக்கிறார். 2003ல் தாத்தாவின் மறைவிற்கு வைகோ வந்திருந்தார்.)  உடனே அடையாளம் கண்டு, உற்சாகத்தோடு அவர்களைப் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

  90 வயது அரசியல்வாதி! பழுத்த பழம்! பிரச்சினைகளுடனே தூங்குகிறார். பிரச்சினைகளுடனே எழுந்திருக்கிறார்! காலையில் ஊடகங்கள் எல்லாம் அவர் மீது வாரி இறைக்கும் வன்மத்தின் முகத்தில் கண்விழிக்கிறார். அவரது அரசியல் நகர்வுகளை இந்தியாவே கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் யாருக்குமே யார் என்றே தெரியாத என்னுடன், ஒரு சாமானியனுடன் ஒரு அறையில் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் உள்ளே நுழைந்தபோது, திருப்பதியில் 100ரூபாயையும் நம்மிடம் வாங்கிக்கொண்டு "போதும் பாத்தது.. போ போ" என விரட்டுவார்களே அப்படி விரட்டுவார்கள் என்ற எண்ணத்துடன்தான் உள்ளே சென்றேன். ஆனால் நினைத்தது அப்படியே தலைகீழாக நடந்தது எனக்கு கோபாலபுரம் அளித்த மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது ஆச்சரியங்கள்!!

பின் அவரது பிறந்தநாளிற்காக நான் எழுதிய 'கலைஞர் வாழ்த்து' என்ற கவிதையை காண்பித்தேன். இரண்டு முறை ரசித்துப் படித்தார். பின் நக்கீரனில், அவரது முகநூல் பக்கத்தில் சிலர் வரம்பு மீறி பின்னூட்டமிடுவது குறித்து நான் அளித்திருந்த சிறிய பேட்டியைக் காண்பித்தேன். சில கட்டுரைகளைக் காண்பித்த பின், இணையத்தில் திமுகவின் செயல்பாடு பற்றி சிலவிஷயங்களைச் சொன்னேன். நெஞ்சுக்கு நீதியில் அவரது கையொப்பம் கேட்டேன். "கொடுங்க தம்பி", என்றவுடன் அவரிடம் புத்தகத்தையும், பேனாவையும் என் தம்பி இளஞ்செழியன் கொடுத்தவுடன் வாங்கி 'வாழ்த்துக்களுடன் மு.கருணாநிதி' என மிக மெதுவாக கையொப்பமிட்டார். மிசா காலத்தில் பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டிருந்தபோது ஒரு முதல்வர் தெரு ஓரங்களில் நின்று தன் கையெழுத்துப் பிரதி பத்திரிக்கைகளை மக்களிடம் விநியோகித்தார். 70ஆண்டுகாலமாக 'உடன்பிறப்பே' என ஓயாமல் உழைக்கும் அந்த முதல்வரின் கைகள் இட்ட கையொப்பம் எனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் முதல் பக்கத்தில் பதிந்தது எதிர்பாராத இமாலய வியப்பு!! இதெல்லாம் நடக்குமென்று நினைத்து நான் உள்ளே செல்லவில்லை. ஆனால் ஆறாவது, ஏழாவது ஆச்சரியங்களும் நடந்தன! எல்லாவற்றும் மேலாக "வாயா போயா" என அழைப்பார் என நினைத்துப்போன எனக்கு அவரது "வாங்க தம்பி போங்க தம்பி" பேச்சு பெரும் பேராச்சிரியத்தை வழங்கியது. ஒருவேளை, "எந்த ஊருய்யா நீ?" எனக் கேட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேனோ என்னவோ! :-)

ஒருவழியாக அந்த அறையில் இருந்து விடுபடவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் வெளியேற மனதின்றி, என்ன செய்வது எனத் தெரியாமல் "வணக்கங்கய்யா" என இரண்டு மூன்று முறை நான் சொல்ல அவரும் கூப்பி வணங்கிய தன் கைகளை கீழே இறக்காமல் வணக்கம் சொன்னார். ஒருநிமிடம் என் உடல் கூசிவிட்டது! இப்படியும் தலைவர்கள் இருப்பார்களா என்று!

சம்பளம் கொஞ்சம் அதிகமானாலே நமக்கெல்லாம் திமிர் வந்துவிடுகிறது. எது எதற்கோ யார் யார் மீதோ நாம் திமிர் கொள்கிறோம். ஆனால் ஒரு தமிழகத்தின் வரலாற்றை எழுதுபவர் தன்னை விட 70 வயது குறைந்த ஒரு சிறுவனுக்கு கூட ஈகோ இன்றி மரியாதை கொடுக்கிறார்! இன்னமும் பணிவையும், திராவிடப் பண்பையும் விடாமல் வைத்திருக்கிறார். உழைப்புக்கு மட்டுமே கலைஞரை புகழ்வார்கள். ஆனால் அவரிடம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு பண்பு  மிகச்சிறியாரையும் மதித்தல் எனும் பெரும்பண்பு! புத்தனுக்கு போதிமரத்தடியில் தியானம் செய்யத்தான் வாய்ப்பு கிடைத்தது. நான் போதிமரத்துடன் ஒரு 15நிமிடங்கள் உரையாடிவிட்டு வந்தேன்!

இங்கே வந்து பார்த்தால் என் நண்பர்களிலே கூட பலர் என்னென்னமோ என்னைப் பற்றி அவதூறாக எழுதியிருக்கிறார்கள். அவதூறுகளை எல்லாம் உரமாக்கி செழித்து வளர்ந்திருக்கும் ஒரு போதி மரத்துடன் உரையாடிவனை முகநூல் அவதூறுகள் என்ன செய்துவிடும்? போதி மரத்திற்கு நான் ஒரு குவளை நீர் ஊற்றினேன். என் ஒரு குவளையால் போதி மரத்திற்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால் போதி மரத்தின் மீதான என் நன்றிக்கடன் அது!!  உங்களுக்குப் பிடித்த பார்த்தீனியச் செடியோ, கருவேலமரமோ, கருமமோ இருந்தால் தாராளமாக ஒரு அண்டா நீரூற்றுங்கள்! ஆனால், "அதையும் செய்யமாட்டேன் எனக்கு வேலை நொள்ளை சொல்வதுதான்" என்றால், ஒரு டப்பா சைபால் வாங்கி உடம்பெல்லாம் தடவிக்கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த அரிப்புக்கு வேறு மருத்துவமே இல்லை:-)

Friday, July 5, 2013

யுடோபியா கிரகத்தில் சாதி (குட்டிக்கதை)யுடோபியா கிரகத்தில் மக்கள் முப்பது வெவ்வேறு வண்ணங்களில் தோல் நிறங்கள் கொண்ட முப்பது  சாதிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் தலைவரை தேர்ந்தெடுப்பது ஜனநாயக முறையில் நடந்தது. சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் எட்டு கைகள் ஏழு கால்களுடன் ஆரியக் கடவுளைப் போல ஒரு அவலட்சணமான குழந்தை பிறக்குமென அவர்களின் மூதாதையர்கள் எழுதிவைத்திருந்ததால் அந்த பயத்தில் இயல்பாகவே வேறு சாதியைச் சேர்ந்த மனிதரின் மேல் இன்னொரு சாதி மனிதருக்கு காதல் வந்தாலும் மனதிற்குள்ளேயே வைத்து அடக்கிக்கொண்டார்கள்! அங்கே வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. அழகான குழந்தைகள் பிறந்துகொண்டேயிருந்தன. இப்படியான அந்த கிரகத்தில் வெவ்வேறு சாதியில் ஆண், பெண் என இரண்டு சேட்டைக்காரர்கள் பிறந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு கேள்விகள் மேல் தீராக்காதல். பதில்களின் மேல் கொள்ளைக் காமம். இரண்டையும் சேர்த்து ஆனந்தத்தில் திளைப்பதென்பது அவர்களின் இயற்கை புத்தி. பின் என்ன? இருவேறு சாதிகளைச் சேர்ந்த அவர்களுக்குள் காதல் வந்தது. அந்த கிரகத்தின் எட்டு லட்ச ஆண்டுகள் வரலாற்றில் மனதிற்குள்ளேயே அழுத்தாமல் வெளிப்படுத்தப்பட்ட சாதி மறுப்பு காதல் அது! கிரகம் அல்லோலகல்லோலப்பட்டது! தலைவர்கள் திமிறினார்கள், கொதித்தார்கள், கொந்தளித்தார்கள். சாதியை மறுத்து உறவு கொள்வதென்பது கிரகத்தையே அழிக்கும் என தீர்க்கமாக வாதிட்டார்கள். காட்டுக்குள் ஓடிய அவர்கள் சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு மீண்டும் நாட்டுக்குள் வந்தார்கள். அவர்கள் கையில் மெல்லிய துணியால் போர்த்தப்பட்ட ஒரு பச்சிளங்குழந்தை இருந்தது. இரண்டு கைகள் இரண்டு கால்களுடன் தோற்றமளித்த அந்தக் குழந்தை தன் தந்தை தாயின் லட்சணங்களைத் தாங்கி அழகாக இருந்தது. கிரகத்தாருக்கு அதிர்ச்சி! இத்தனை லட்சம் ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்துவிட்டோமே இயற்கையாய் ஊறிய காதலை மரபால் அடக்கி வாழ்ந்தோமே என்ற வெட்கத்திலும், இப்போதாவது நம் இனத்தில் இரு அறிவுடையவர்கள் பிறந்தார்களே என்ற மகிழ்ச்சியிலும் ஒரே நேரத்தில் அந்த கிரகம் இருவிதமான உணர்வுகளுடன் விழாக்காலம் பூண்டது. எங்கும் வானவேடிக்கைகளும், விருந்துகளும் நடந்தன. அன்றோடு அந்த பைத்தியக்காரத்தனமான மரபு பிய்த்தெறியப்பட்டது. வழமையில் இருந்து மாறி புரட்சி செய்த அந்தக் காதலர்கள் உடோபியா கிரகத்தின் புரட்சியாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள்.

அந்த கிரகத்தில் இருந்து சரியாக ஒன்பது லட்சம் மைல் தொலைவில் பூமி என்ற கிரகம் இருந்தது. சாதிமாறி மணம் செய்தாலும் அழகிய குழந்தைதான் பிறக்கும் எனத் தெரிந்தும், சாதி மாறி காதலித்ததற்காக ஒரு இளைஞனை சிலர் காட்டுக்குள் கூட்டிச் சென்று கற்றாழையை அவன் கழுத்தில் வைத்து அழுத்தினார்கள். முள் நிறைந்த அந்த கற்றாழை அவன் கழுத்தை அறுத்து நரம்புகளைக் கடந்து ரத்தத்தை ஆறுபோல் வெளியேற்றிக் கொண்டிருந்தது.

-டான் அசோக்
Related Posts Plugin for WordPress, Blogger...