Monday, June 3, 2013

யார் கருணாநிதி? குட்டிக் கட்டுரை -டான் அசோக்

தனது 'பாயும்புலி பண்டாரக வன்னியன்' நாவலில் இரவை இப்படி வர்ணிக்கிறார் கலைஞர், "வாழையிலையின் மேல் யாரோ சோற்றுப் பருக்கையை அங்கங்கு சிதறப் போட்டதைப் போல வானத்தில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன. இன்று மழையோ புயலோ இல்லை என நம்பிப் புறப்பட்டோம். ....................................................... சில மணி நேரங்களிலேயே அந்தப் பருக்கைகளை யாரோ தின்றுவிட்டதைப் போல வானம் வெறிச்சோடிப் போனது. எங்கள் நம்பிக்கையும் பொய்யாய்ப் போனது" என்று.  எவ்வளவு நேர்த்தியான உவமை, ஒப்பீடு? 1950களில் மந்திரிகுமாரி திரைப்படத்தில், "கொள்ளையடிப்பது என்பது கலை. பணத்துக்காக அதைச் செய்யவில்லை. ஆனந்தத்திற்காகச் செய்கிறேன்" என்று வில்லனுக்காக எழுதியிருக்கிகிறார். Christopher Nolanனின் படமான 'டார்க் நைட்'யில், "ஒருவன் வைரங்களை கொள்ளையடித்துக் கொண்டே இருந்தான். பின்புதான் தெரிந்தது அவன் வைரங்களுக்காக கொள்ளை அடிப்பதில்லை, கொள்ளையடிப்பது அவனுக்கு பிடித்திருப்பதால் கொள்ளையடிக்கிறான்" என்று ஒரு வசனம் வருகிறது! அதாவது கலைஞர் 60 ஆண்டுகளுக்கு முன்பு சர்வசாதாரணமாக எழுதிய ஒரு வசனம், உருவாக்கிய ஒரு 'one line' இப்போது உலகெங்கும் தூக்கிக் கொண்டாடப்படுகிறது! கலைஞர் 1950களில் ஹாலிவுட் வசனகர்த்தாக்களில் ஒருவராக இருந்திருந்தால் உலக சினிமாவின் ஒப்பற்ற சிற்பியாக போற்றப்பட்டிருப்பார். அவர் நாவல்கள் ஆங்கிலத்திலே வந்திருக்குமானால் உலக Best selling Authorகளில் ஒருவராக ஆகியிருப்பார். அவர் புத்தகங்கள் உலக இலக்கியங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும்.

எதைச் செய்தாலும் அதில் சிறந்து விளங்க முடிந்த திறமை வாய்க்கப்பெறுவதென்பது என்பது அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்காரனைத் தேடுவதைப் போல மிகக் கடுமையான, சவாலான ஒரு விஷயம். அத்தகைய அரிய திறமைதான் கலைஞரை ரசிக்க வைக்கிறது. அவரைப் பார்த்து வியக்க வைக்கிறது. இன்னமும் ஒருநாளைக்கு 5மணி நேரத்திற்கும் குறைவாய்த் தூங்கி நிறைவாய் உழைக்கும் அவர் உழைப்பை உந்து சக்தியாகக் கொண்டு உழைக்கத் தோன்றுகிறது. 90 வயதில் அவர் ஆற்றியிருக்கும் உரைகளில், எழுதியிருக்கும் எழுத்துக்களில், செய்திருக்கும் பணிகளில், கண்டிருக்கும் களங்களில், கடந்து வந்திருக்கும் சோதனைகளில், வென்று வந்திருக்கும் போராட்டங்களில் ஒரு பங்கு.. ஒரே ஒரு பங்கு நம்மால் 900 வருடங்கள் வாழ்ந்தாலும் செய்துவிட முடியுமா? இல்லை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? கலைஞர் இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அது மந்திரத்தில் காய்த்த மாங்காய் அல்ல. உழைப்பு! அறிவு! இதயத்துடிப்பை மூளைத் துடிப்பாய் மாற்றியதால் வந்த உயரம் அது. அந்த உயரம், தோட்ட மண்ணிலே உழன்று, தோட்டத்திற்காகவே மண்ணைக் கிளறி, தோட்டத்திற்காகவே கத்திச் சாகும் 'தோட்டப்' புழுக்களுக்குப் தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை!  தெரியவும் தேவையில்லை!


யார் மேல்தான் விமர்சனம் இல்லை? அமெரிக்கர்களுக்கு ஆபிரகாம் லிங்கன் மேல், வாஷிங்டன் மேல் விமர்சனம் இல்லையா? ஆப்ரிக்கர்களுக்கு மண்டேலா மேல் விமர்சனம் இல்லையா? அட ஈழத்தமிழர்களிலேயே எத்தனையோ பேருக்கு பிரபாகரன் மேல்தான் விமர்சனம் இல்லையா? தந்தை செல்வா மேல் விமர்சனம் இல்லையா? மகாத்மா காந்தி மேல் விமர்சனங்கள் இல்லையா? விமர்சனங்களே இல்லாமல் வாழ்ந்த தலைவர் என்று உலகத்தில் ஒரு தலைவரையாவது காட்டத்தான் முடியுமா? விமர்சனத்தை ஒரு தலைவர் புறந்தள்ளி வளர்வதென்பது எளிது. ஆனால் கடந்து வந்த பாதைகளில் எல்லாம் வன்மத்தையும், பொறாமையையும் கடந்து ஒருவர் வளர்ந்திருப்பாரேயானால் உலக வரலாற்றிலேயே அது கலைஞர் மட்டுந்தான். கலைஞர் தன் வாழ்நாளில் சந்தித்ததெல்லாம் ஒரு பங்கு விமர்சனமும், ஓராயிரம் பங்கு வன்மத்தையும் தான். ஈ.வீ.கே.சம்பத், கண்ணதாசன் துவங்கி நெடுமாறன், வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ராமதாஸ் வரை கலைஞர் மேல் துப்பியதும் துப்புவதும் வன்மத்தை தான்! வன்மத்துக்கெல்லாம் பதிலாய் புன்னகையையும், அரசியல் நகர்வுகளையும் தான் பதிலாய் தந்திருக்கிறாரேயொழிய பதில்-வன்மத்தையோ, சிறைச்சாலைகளையோ அல்ல. அவர் நினைத்திருந்தால் அரசியல் எதிரிகளை சிறைக்குச் சிறை மாற்றி, கொடும்வெயில் சிறையில் தள்ளி, நள்ளிரவில் கைதுகளைச் செய்து, பொடாவில் ஒன்றரை வருடம் புரட்டி எடுத்து கொடுமை செய்து தன் கால் வசம் நாய்கள் போல கிடத்தியிருக்க முடியாதா? இன்றைய ஆட்சியாளர்களிடமிருக்கும் அதே ஆட்சியும் அதிகாரமும் தானே கலைஞரிடமும் இருந்தது!

அவர் ஏற்கனவே 90வருடங்கள் வாழ்ந்துவிட்டார். 60க்கு மேல் வாழப்போகும் ஒவ்வொரு நாளும் உதிரி தான் என்பார்கள். அவர் எப்போது போவார் அவர் இடம் எப்போது காலியாகும், நம் ஆட்டத்தை எப்போது தொடங்கலாம் என எண்ணி எண்ணி காத்திருக்கும் நூல் கோஷ்டியும் சரி, நடை கோஷ்டியும் சரி, பிணந்தின்னி கோஷ்டியும் சரி ஒன்றே ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். கலைஞர் கருணாநிதி என்பவர் தனி மனிதரல்லர்! அவர் ஒரு கோட்பாடு! உழைப்பு! சின்னம்! பல லட்சம் கருணாநிதிகளை உற்பத்தி செய்து உலவிட்டிருக்கிற அறிவுத் தொழிற்சாலை! தமிழை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற மொழித் தொழில்நுட்ப வல்லுனர். இன்னும் சில ஆண்டுகளில் அல்ல, இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கருணாநிதியின் இடம் காலி ஆகாது! கனவு காணாதீர்கள்!

6 comments:

Jayadev Das said...

\\
எதைச் செய்தாலும் அதில் சிறந்து விளங்க முடிந்த திறமை வாய்க்கப்பெறுவதென்பது என்பது அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்காரனைத் தேடுவதைப் போல மிகக் கடுமையான, சவாலான ஒரு விஷயம்.\\ கும்மாங் குத்து!! சூப்பர்..........


monica said...

திராவிட எழுதுகோலால் அடித்து
ஆரிய மந்திரக்கோல்களை
உடைத்தவன் நீ! excellent lines.Awesome.

shiva said...

What ever talents you have you made a mistake in your life that you trusted a malayalee and had friendship with him.Otherwise noone can let you down.

Doha Talkies said...

மிகவும் அருமை தோழர்

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

MUTHU said...

கலைஞர் பற்றிய உங்கள் மாறுபட்ட சிந்தனை அருமை. தொடருங்கள் நண்பரே.

Related Posts Plugin for WordPress, Blogger...