Sunday, June 30, 2013

கட் ஆஃப் ரகசியங்கள். (சிறுகதை)அந்த அரசு பொறியியல் கல்லூரி துவங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டது. மூன்று பேர் தங்கக்கூடிய அந்த விடுதி அறைகள் அனைத்திலும் மூன்று பேர் தங்கியிருக்க, அறை எண் 214ல் மட்டும் இரண்டே பேர் தான் இருந்தார்கள். ஏனைய அறைவாசிகளால் அதிர்ஷ்டசாலிகளென பொறாமையுடன் விளிக்கப்பட்ட அந்த இருவர் ராகவனும், சுந்தரபாண்டியனும்.

காலை ஆறு மணிக்கே எழுந்து ஹிட்லரின் தாய்மொழியில் ஏதேதோ சொல்லி பெருமாளை சேவிக்கவில்லையென்றால் ஆறு மாத காலம் சேவிங் செய்யாத அளவிற்கு அசெளகரியம் அடைபவன் ராகவன். சுந்தரபாண்டியனுக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் கிடையாது. ஒன்பது மணிக்கு எழுந்து இடுப்புக்கு கீழே சோப் போடாமல் அவசரகதியில் குளித்துமுடித்து கல்லூரிக்குப் போகும் முன் முருகனைக் கும்பிட்டுவிட்டு நெற்றியிலே ஒரு காரச்சேவு அளவிற்கு விபூதியை இட்டுக்கொள்வதுதான் அவனது உச்சக்கட்ட ஆன்மீகம். சினிமாவிற்குப் போவது சுந்தரபாண்டியனுக்குப் பிடிக்குமெனினும் ராகவனுக்கு படிக்கிற வேலை இல்லாதபோது மட்டுமே சுந்தரபாண்டியனுக்கு சினிமாவிற்குப் போகும் வாய்ப்பு கிடைக்கும். இப்படி சில மிகச்சிறிய வேறுபாடுகள் இருந்தாலும் ராகவன் ஆறுமணிக்கு எழுந்திருப்பதாலும், கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்குவதாலும், சிவப்பாக இருப்பதாலும் தன்னைவிட அறிவில் அவன் ஒருபடி மேலிருப்பதாக சுந்தரபாண்டியன் தீர்க்கமாக நம்பியதால் இருவரும் இணைபிரியாத நண்பர்களாக விளங்கினார்கள். இப்படி தெளிவாக போய்க்கொண்டிருந்த இவர்களின் இந்த இரண்டுமாத அறை நட்பில் குழப்பமாக வந்து சேர்ந்தவன் தான் இரண்டுமாதம் கழித்து கல்லூரியில் தாமதமாக சேர்ந்த கருப்பசாமி!

"பாஸ்.. எனக்கு இந்த ரூம்தான் அலாட் பண்ணிருக்காங்க" என்ற கருப்பசாமியின் முதல்மொழி ராகவன் - சுந்தரபாண்டியனின் 'அதிர்ஷ்டக்காரர்கள்' எனும் பட்டத்தை சிதறடித்தது. வழக்கம்போல ராகவன் யாரைப் பார்த்தாலும் கேட்கும் கேள்வியான "உங்க கட் ஆஃப் என்ன?" என்ற கேள்வியை கருப்பசாமியைப் பார்த்தும் கேட்டான். அதற்கு வந்த பதில் அவன் இதுவரை எங்குமே கேட்டிராத ஒன்று. ராகவனை உற்றுப் பார்த்துவிட்டு கருப்பசாமி சொன்னான்,

"மார்க் மாதிரி தேவையில்லாத பேதமெல்லாம் இனிமே எதுக்கு பாஸ்? அதான் ஒருவழியா இங்க வந்து சேந்துட்டோமே!"

இரண்டு மாதங்களுக்கு முன்பு ராகவன் சுந்தரபாண்டியனிடம் இதே கேள்வியைக் கேட்டபோது,
"நான் 182ங்க. ஆனா இந்த க்ரூப்தான் கிடைச்சுச்சு. ஈசிஈ எடுக்கலாம்னு நினைச்சேன். கட் ஆஃப் பத்தல............."

ராகவனுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான்,

"நான் 192. எனக்கும் ஈசிஈ கிடைக்கல. 160, 150 எடுத்தவங்களுக்கெல்லாம் கூட கிடைச்சிருது. நமக்குதான் பிரச்சினை. கொடுமையப் பாருங்க." என ராகவன் முடிக்கவும் சுந்தரபாண்டியன் அதை ஆமோதித்து,
"அட அத ஏன் கேக்குறீங்க? எங்க தோட்டத்துல கூலி வேலை பாக்குற பயலெல்லாம் அண்ணா யுனிவர்சிட்டில ஈசிஈல சேந்துட்டான்..."
இந்த சோகத்தை பகிர்ந்துகொண்ட புள்ளியில்தான் அவர்கள் இருவரும் இணக்கமாகியிருந்தார்கள். அதிலிருந்து கட் ஆஃப் கேட்பதையும் அதன்மூலம் அவன் யார் என நிர்ணயித்து பழகுவதையும் பழக்கப்படுத்திக் கொண்டார்கள். இதற்கு விதிவிலக்கு கருப்பசாமிதான். அவன் உருவத்தைப் பார்த்தும் இவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

கருப்பசாமியிடம் நேரடியாகக் கேட்டு கட் ஆஃப் என்னவென்று தெரிந்துகொள்ள முடியாது என்றாகிவிட்டது. கருப்பசாமி- ராகவனும், சுந்தரபாண்டியனும் தூங்கச்செல்லும் நேரத்திலும் விழித்து எதையாவது படித்துக்கொண்டிருப்பான். பெரும்பாலும் இரண்டு புத்தகங்கள் அவன் கையில் இருக்கும். ஒன்று பாடம். மற்றொன்று நாவலோ, தத்துவமோ, கவிதையோ! போர் அடிக்கும்போது இரண்டையும் மாற்றி மாற்றி படிப்பதை வழக்கமாக வைத்திருந்தான். ஒருநாள் பகவத்கீதை படித்தான். ஒருநாள் ஆரியமாயை அவன் கைகளில் தவழ்ந்தது. ஒருநாள் அத்தனைக்கும் ஆசைப்படு படித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் தீவிரமாக யாருடனோ மகாபாரத பாத்திரங்களை புகழ்ந்து ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். இப்படி முரண்களை எல்லாம் முடித்து மூளையில் வைத்தவனாய் இருக்கும் அவனைக் காணக் காண வேறு யாருடைய கட் ஆஃபையும் விட கருப்பசாமியின் கட் ஆஃப் என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டு வார குழப்பத்திற்குப் பின்னர் அவனிடம் பேச்சு கொடுத்து எப்படியாவது அவனை யார் என கண்டுகொள்ளலாம் என முடிவெடுத்தார்கள் ராகவனும், சுந்தரபாண்டியனும்.
ராகவன் சொல்லிக்கொடுத்தபடியே சுந்தரபாண்டியன் ஆரம்பித்தான்,

"எல்லாரும் ஒரே புத்தகத்தை தான் படிக்கிறோம். சிலபஸ் கூட ஒன்னுதான். ஆனா இட ஒதுக்கீடு அது இதுனு சொல்லி பார்ஷியாலிடி பாக்குறானுங்க. நம்ம நாடுலாம் உருப்படவா போகுது? என்ன சொல்ற கருப்பு?"

 "ஹ்ம்ம்.. இட ஒதுக்கீடு பார்ஷியாலிட்டி பாக்காம இருந்த பழைய காலத்துலயும் நம்ம நாட்டுல எல்லாரும் ஒரே தராசுல இருந்த மாதிரி தெரியல சுந்தர். அதுனால பார்ஷியாலிட்டிங்குறது நம்ம நாட்டோட குணம். அதையெல்லாம் மாத்த முடியாது. நீங்க டென்சன் ஆகாதீங்க." இதுக்குமேல் கருப்பசாமியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அடுத்தநாளே அவன் கையில் வி.பி.சிங் பற்றிய எதோ ஒரு புத்தகம் தவழ்ந்தது.

ஒருநாள் சாமி கும்பிடுவதைப் பற்றிய பேச்சு எழுந்தபோது,

 "சான்ஸ்க்ரிட் ரொம்ப பழமையான பாஷை. ஸ்வாமிகள்லாம் அதான் பேசுவாங்களாம். அதைக் கூடாதுன்னா எப்படி? மசூதில மட்டும் அரபில ஓதுறாங்களே அதை கேக்றதுதானே? இப்படி இந்துக்களை மட்டும் கடுப்பேத்திண்ட்ருந்தா ஏன் இந்து முஸ்லிம் கலவரம் வராது? ஃபிரண்ட்ஷிப் பாதிக்கப்படாதா? ஏன் கருப்புசாமி... இதுல உங்க ஐடியா என்ன?"

கருப்பு கையில் இருந்து புத்தகத்தை மேஜையில் கவுத்தி வைத்துவிட்டு பேசினான்,

 "அதொன்னும் பெரிய விசயமில்ல ராகவன். ஒருநாள் மசூதில போய் சமஸ்கிருதத்துலயும், கோவில்ல போய் அரபிலயும் மந்திரம் ஓதனும். அப்படி செஞ்சும் 24மணி நேரத்துக்குள்ள உலகம் அழியாம இருந்தா ரெண்டுசாமியும் நண்பர்கள்னு உலகத்துக்கு தெரிஞ்சிடும். அப்புறம் நமக்கென்ன? நம்மளும் அவங்கள மாதிரி நண்பர்களா ஜாலியா இருக்கறதுதானே!!" சொல்லிவிட்டு மீண்டும் புத்தகத்தை படிக்கத் துவங்கிவிட்டான்.

இப்படியே பல நாட்கள் ஓடின. கருப்பசாமிக்கு பிடித்த தலைவர்கள் யார் யார் என்றால் அவனது வரிசை நெல்சன் மண்டேலாவில் துவங்கி வி.பி.சிங்கில் நீண்டு கேஸ்ட்ரோ வரை சென்றது. உள்ளூர் தலைவர் யாரையாவது சொன்னானேயென்றால் அதை வைத்தாவது அவனது கட் ஆஃப் ரகசியத்தை அறியலாம். ஆனால் அதற்கும் வழியில்லை. ராகவனின் ஓவ்வொரு முயற்சிக்கும் எதாவது ஒரு வித்தியாசமான பதிலை கொடுத்தானேயொழிய எந்த நேரடியான பதிலையும் இறுதிவரை கொடுக்கவேயில்லை கருப்பசாமி.
இது ஆகும் காரியமில்லை என ராகவன் உணர்ந்து கொண்டாலும் சுந்தரபாண்டியனுக்கு கருப்பசாமியின் பதில்கள் எரிச்சலூட்டின. இறுதிவரை வேண்டாத விருந்தாளி போலவே கருப்பசாமியிடமிருந்து எட்டியே இருந்தார்கள் இருவரும். அவனும் இவர்கள் இருவரின் நட்பு வேண்டி நிற்பதாகவும் தெரியவில்லை. அவன் அவனது வேலையில் மட்டும் கவனமுடையவனாக இருந்தான். ராகவன் அவ்வப்போது தேவையென்றால் கருப்புவிடம் எதாவது கேட்பான், இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்வான். இப்படியே ஓடிய கல்லூரிவாழ்க்கை முடிந்து மூவருக்கும் எங்கெங்கோ வேலை கிடைத்துப் பறந்தார்கள்.

அதன்பின் ஐந்து வருடங்கள் கழித்து சுந்தரபாண்டியனுக்கு மின்னஞ்சலில் ஒரு திருமண அழைப்பு வந்திருந்தது. ராகவனின் தங்கை திருமணம் பற்றிய தகவல்களை தாங்கியிருந்த அந்த அழைப்பில் மணமகன் பெயர் இருக்குமிடத்தில் 'கருப்பசாமி' என இருந்தது. அதைப் பார்த்ததில் இருந்து சுந்தரபாண்டியனுக்கு குழப்பம் மூளையைக் குதறியது. "ராகவன் சொந்தக் காரங்களில் யாருமே கருப்பசாமினு பேரு வைக்க மாட்டாங்களே!! இது அவனா இருக்குமோ? ராகவன் எப்படி ஒத்துக்கிட்டான்?" என பல கேள்விகள் சுந்தரபாண்டியனைக் கொத்தின. ஒருவழியாக ராகவனிடமே கேட்டுவிடுவது என முடிவு செய்து அதுகுறித்த கேள்விகளை கொஞ்சம் வெளிப்படையாகவே கேட்டு ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பினான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு பதில் வந்தது. "ஆமாம்டா. நம்ம கூட இருந்த அதே கருப்பசாமிதான். அவரும், தங்கையும் ஒண்ணா வேலை பாத்ருக்காங்க, பழகிருக்காங்க. அப்படியே லவ் ஆகிருச்சு. வீட்லயும் எங்கிட்டயும் சொன்னா. நல்ல மாப்ள. நல்ல சம்பாரிக்கிறாரு. அடிக்கடி யு.எஸ்க்கு சைட் விசிட் போறாரு. தங்கச்சிக்கும் ரொம்ப புடிச்சிருக்கு. வேறென்ன வேணும்? அதான் உடனே ஓகே சொல்லிட்டோம். மாப்ளையும் உனக்கு இன்விடேஷன் அனுப்புவாருனு நினைக்கிறேன். சோ கண்டிப்பா வந்துருடா! டோண்ட் மிஸ்!" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொண்டை காய்ந்துபோயிருந்த சுந்தரபாண்டியன் அடுத்த பல நிமிடங்களுக்கு கண்ணசைக்காமல் அந்த மின்னஞ்சலையே பார்த்துக்கொண்டிருந்தான்.
  ----------------------------------------------------

கதையின் மஞ்சள் கரு -  வினையூக்கி
கதையின் வெள்ளைக் கரு- டான் அசோக்
கதையின் ஓடு -நீங்கள், நான், அவர், இவர். 

3 comments:

இரா.அசோக் said...

மச்சி நான் படித்த உன் கதைகளில் இதுதான் டாப்பு. சாதி மத ஏற்றத்தாழ்வுகள் காதலால் ஒழிகிறதோ இல்லையோ நிச்சயம் பணத்தாலும் அந்தஸ்தாலும் ஒழியும். ஆனால் அந்த அந்தஸ்தாலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.. எனிவே சிருகதை அருமை. வாழ்த்துகள்.

N said...

Please continue the story of tragic love story of Sundarapandian's sister Dhanalakshi and Tiger tiruma.

Thambi Prabu said...

அவன் கட் ஆப் எதுவா இருந்த நமக்கென்ன? அவன் கட்டுடலுடன் கல்யாண மாப்பிளையா இருக்கிறானா??? அதுதன் முக்கியம்.

Related Posts Plugin for WordPress, Blogger...