Sunday, June 30, 2013

கட் ஆஃப் ரகசியங்கள். (சிறுகதை)அந்த அரசு பொறியியல் கல்லூரி துவங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டது. மூன்று பேர் தங்கக்கூடிய அந்த விடுதி அறைகள் அனைத்திலும் மூன்று பேர் தங்கியிருக்க, அறை எண் 214ல் மட்டும் இரண்டே பேர் தான் இருந்தார்கள். ஏனைய அறைவாசிகளால் அதிர்ஷ்டசாலிகளென பொறாமையுடன் விளிக்கப்பட்ட அந்த இருவர் ராகவனும், சுந்தரபாண்டியனும்.

காலை ஆறு மணிக்கே எழுந்து ஹிட்லரின் தாய்மொழியில் ஏதேதோ சொல்லி பெருமாளை சேவிக்கவில்லையென்றால் ஆறு மாத காலம் சேவிங் செய்யாத அளவிற்கு அசெளகரியம் அடைபவன் ராகவன். சுந்தரபாண்டியனுக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் கிடையாது. ஒன்பது மணிக்கு எழுந்து இடுப்புக்கு கீழே சோப் போடாமல் அவசரகதியில் குளித்துமுடித்து கல்லூரிக்குப் போகும் முன் முருகனைக் கும்பிட்டுவிட்டு நெற்றியிலே ஒரு காரச்சேவு அளவிற்கு விபூதியை இட்டுக்கொள்வதுதான் அவனது உச்சக்கட்ட ஆன்மீகம். சினிமாவிற்குப் போவது சுந்தரபாண்டியனுக்குப் பிடிக்குமெனினும் ராகவனுக்கு படிக்கிற வேலை இல்லாதபோது மட்டுமே சுந்தரபாண்டியனுக்கு சினிமாவிற்குப் போகும் வாய்ப்பு கிடைக்கும். இப்படி சில மிகச்சிறிய வேறுபாடுகள் இருந்தாலும் ராகவன் ஆறுமணிக்கு எழுந்திருப்பதாலும், கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்குவதாலும், சிவப்பாக இருப்பதாலும் தன்னைவிட அறிவில் அவன் ஒருபடி மேலிருப்பதாக சுந்தரபாண்டியன் தீர்க்கமாக நம்பியதால் இருவரும் இணைபிரியாத நண்பர்களாக விளங்கினார்கள். இப்படி தெளிவாக போய்க்கொண்டிருந்த இவர்களின் இந்த இரண்டுமாத அறை நட்பில் குழப்பமாக வந்து சேர்ந்தவன் தான் இரண்டுமாதம் கழித்து கல்லூரியில் தாமதமாக சேர்ந்த கருப்பசாமி!

"பாஸ்.. எனக்கு இந்த ரூம்தான் அலாட் பண்ணிருக்காங்க" என்ற கருப்பசாமியின் முதல்மொழி ராகவன் - சுந்தரபாண்டியனின் 'அதிர்ஷ்டக்காரர்கள்' எனும் பட்டத்தை சிதறடித்தது. வழக்கம்போல ராகவன் யாரைப் பார்த்தாலும் கேட்கும் கேள்வியான "உங்க கட் ஆஃப் என்ன?" என்ற கேள்வியை கருப்பசாமியைப் பார்த்தும் கேட்டான். அதற்கு வந்த பதில் அவன் இதுவரை எங்குமே கேட்டிராத ஒன்று. ராகவனை உற்றுப் பார்த்துவிட்டு கருப்பசாமி சொன்னான்,

"மார்க் மாதிரி தேவையில்லாத பேதமெல்லாம் இனிமே எதுக்கு பாஸ்? அதான் ஒருவழியா இங்க வந்து சேந்துட்டோமே!"

இரண்டு மாதங்களுக்கு முன்பு ராகவன் சுந்தரபாண்டியனிடம் இதே கேள்வியைக் கேட்டபோது,
"நான் 182ங்க. ஆனா இந்த க்ரூப்தான் கிடைச்சுச்சு. ஈசிஈ எடுக்கலாம்னு நினைச்சேன். கட் ஆஃப் பத்தல............."

ராகவனுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான்,

"நான் 192. எனக்கும் ஈசிஈ கிடைக்கல. 160, 150 எடுத்தவங்களுக்கெல்லாம் கூட கிடைச்சிருது. நமக்குதான் பிரச்சினை. கொடுமையப் பாருங்க." என ராகவன் முடிக்கவும் சுந்தரபாண்டியன் அதை ஆமோதித்து,
"அட அத ஏன் கேக்குறீங்க? எங்க தோட்டத்துல கூலி வேலை பாக்குற பயலெல்லாம் அண்ணா யுனிவர்சிட்டில ஈசிஈல சேந்துட்டான்..."
இந்த சோகத்தை பகிர்ந்துகொண்ட புள்ளியில்தான் அவர்கள் இருவரும் இணக்கமாகியிருந்தார்கள். அதிலிருந்து கட் ஆஃப் கேட்பதையும் அதன்மூலம் அவன் யார் என நிர்ணயித்து பழகுவதையும் பழக்கப்படுத்திக் கொண்டார்கள். இதற்கு விதிவிலக்கு கருப்பசாமிதான். அவன் உருவத்தைப் பார்த்தும் இவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

கருப்பசாமியிடம் நேரடியாகக் கேட்டு கட் ஆஃப் என்னவென்று தெரிந்துகொள்ள முடியாது என்றாகிவிட்டது. கருப்பசாமி- ராகவனும், சுந்தரபாண்டியனும் தூங்கச்செல்லும் நேரத்திலும் விழித்து எதையாவது படித்துக்கொண்டிருப்பான். பெரும்பாலும் இரண்டு புத்தகங்கள் அவன் கையில் இருக்கும். ஒன்று பாடம். மற்றொன்று நாவலோ, தத்துவமோ, கவிதையோ! போர் அடிக்கும்போது இரண்டையும் மாற்றி மாற்றி படிப்பதை வழக்கமாக வைத்திருந்தான். ஒருநாள் பகவத்கீதை படித்தான். ஒருநாள் ஆரியமாயை அவன் கைகளில் தவழ்ந்தது. ஒருநாள் அத்தனைக்கும் ஆசைப்படு படித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் தீவிரமாக யாருடனோ மகாபாரத பாத்திரங்களை புகழ்ந்து ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான். இப்படி முரண்களை எல்லாம் முடித்து மூளையில் வைத்தவனாய் இருக்கும் அவனைக் காணக் காண வேறு யாருடைய கட் ஆஃபையும் விட கருப்பசாமியின் கட் ஆஃப் என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டு வார குழப்பத்திற்குப் பின்னர் அவனிடம் பேச்சு கொடுத்து எப்படியாவது அவனை யார் என கண்டுகொள்ளலாம் என முடிவெடுத்தார்கள் ராகவனும், சுந்தரபாண்டியனும்.
ராகவன் சொல்லிக்கொடுத்தபடியே சுந்தரபாண்டியன் ஆரம்பித்தான்,

"எல்லாரும் ஒரே புத்தகத்தை தான் படிக்கிறோம். சிலபஸ் கூட ஒன்னுதான். ஆனா இட ஒதுக்கீடு அது இதுனு சொல்லி பார்ஷியாலிடி பாக்குறானுங்க. நம்ம நாடுலாம் உருப்படவா போகுது? என்ன சொல்ற கருப்பு?"

 "ஹ்ம்ம்.. இட ஒதுக்கீடு பார்ஷியாலிட்டி பாக்காம இருந்த பழைய காலத்துலயும் நம்ம நாட்டுல எல்லாரும் ஒரே தராசுல இருந்த மாதிரி தெரியல சுந்தர். அதுனால பார்ஷியாலிட்டிங்குறது நம்ம நாட்டோட குணம். அதையெல்லாம் மாத்த முடியாது. நீங்க டென்சன் ஆகாதீங்க." இதுக்குமேல் கருப்பசாமியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அடுத்தநாளே அவன் கையில் வி.பி.சிங் பற்றிய எதோ ஒரு புத்தகம் தவழ்ந்தது.

ஒருநாள் சாமி கும்பிடுவதைப் பற்றிய பேச்சு எழுந்தபோது,

 "சான்ஸ்க்ரிட் ரொம்ப பழமையான பாஷை. ஸ்வாமிகள்லாம் அதான் பேசுவாங்களாம். அதைக் கூடாதுன்னா எப்படி? மசூதில மட்டும் அரபில ஓதுறாங்களே அதை கேக்றதுதானே? இப்படி இந்துக்களை மட்டும் கடுப்பேத்திண்ட்ருந்தா ஏன் இந்து முஸ்லிம் கலவரம் வராது? ஃபிரண்ட்ஷிப் பாதிக்கப்படாதா? ஏன் கருப்புசாமி... இதுல உங்க ஐடியா என்ன?"

கருப்பு கையில் இருந்து புத்தகத்தை மேஜையில் கவுத்தி வைத்துவிட்டு பேசினான்,

 "அதொன்னும் பெரிய விசயமில்ல ராகவன். ஒருநாள் மசூதில போய் சமஸ்கிருதத்துலயும், கோவில்ல போய் அரபிலயும் மந்திரம் ஓதனும். அப்படி செஞ்சும் 24மணி நேரத்துக்குள்ள உலகம் அழியாம இருந்தா ரெண்டுசாமியும் நண்பர்கள்னு உலகத்துக்கு தெரிஞ்சிடும். அப்புறம் நமக்கென்ன? நம்மளும் அவங்கள மாதிரி நண்பர்களா ஜாலியா இருக்கறதுதானே!!" சொல்லிவிட்டு மீண்டும் புத்தகத்தை படிக்கத் துவங்கிவிட்டான்.

இப்படியே பல நாட்கள் ஓடின. கருப்பசாமிக்கு பிடித்த தலைவர்கள் யார் யார் என்றால் அவனது வரிசை நெல்சன் மண்டேலாவில் துவங்கி வி.பி.சிங்கில் நீண்டு கேஸ்ட்ரோ வரை சென்றது. உள்ளூர் தலைவர் யாரையாவது சொன்னானேயென்றால் அதை வைத்தாவது அவனது கட் ஆஃப் ரகசியத்தை அறியலாம். ஆனால் அதற்கும் வழியில்லை. ராகவனின் ஓவ்வொரு முயற்சிக்கும் எதாவது ஒரு வித்தியாசமான பதிலை கொடுத்தானேயொழிய எந்த நேரடியான பதிலையும் இறுதிவரை கொடுக்கவேயில்லை கருப்பசாமி.
இது ஆகும் காரியமில்லை என ராகவன் உணர்ந்து கொண்டாலும் சுந்தரபாண்டியனுக்கு கருப்பசாமியின் பதில்கள் எரிச்சலூட்டின. இறுதிவரை வேண்டாத விருந்தாளி போலவே கருப்பசாமியிடமிருந்து எட்டியே இருந்தார்கள் இருவரும். அவனும் இவர்கள் இருவரின் நட்பு வேண்டி நிற்பதாகவும் தெரியவில்லை. அவன் அவனது வேலையில் மட்டும் கவனமுடையவனாக இருந்தான். ராகவன் அவ்வப்போது தேவையென்றால் கருப்புவிடம் எதாவது கேட்பான், இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்வான். இப்படியே ஓடிய கல்லூரிவாழ்க்கை முடிந்து மூவருக்கும் எங்கெங்கோ வேலை கிடைத்துப் பறந்தார்கள்.

அதன்பின் ஐந்து வருடங்கள் கழித்து சுந்தரபாண்டியனுக்கு மின்னஞ்சலில் ஒரு திருமண அழைப்பு வந்திருந்தது. ராகவனின் தங்கை திருமணம் பற்றிய தகவல்களை தாங்கியிருந்த அந்த அழைப்பில் மணமகன் பெயர் இருக்குமிடத்தில் 'கருப்பசாமி' என இருந்தது. அதைப் பார்த்ததில் இருந்து சுந்தரபாண்டியனுக்கு குழப்பம் மூளையைக் குதறியது. "ராகவன் சொந்தக் காரங்களில் யாருமே கருப்பசாமினு பேரு வைக்க மாட்டாங்களே!! இது அவனா இருக்குமோ? ராகவன் எப்படி ஒத்துக்கிட்டான்?" என பல கேள்விகள் சுந்தரபாண்டியனைக் கொத்தின. ஒருவழியாக ராகவனிடமே கேட்டுவிடுவது என முடிவு செய்து அதுகுறித்த கேள்விகளை கொஞ்சம் வெளிப்படையாகவே கேட்டு ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பினான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு பதில் வந்தது. "ஆமாம்டா. நம்ம கூட இருந்த அதே கருப்பசாமிதான். அவரும், தங்கையும் ஒண்ணா வேலை பாத்ருக்காங்க, பழகிருக்காங்க. அப்படியே லவ் ஆகிருச்சு. வீட்லயும் எங்கிட்டயும் சொன்னா. நல்ல மாப்ள. நல்ல சம்பாரிக்கிறாரு. அடிக்கடி யு.எஸ்க்கு சைட் விசிட் போறாரு. தங்கச்சிக்கும் ரொம்ப புடிச்சிருக்கு. வேறென்ன வேணும்? அதான் உடனே ஓகே சொல்லிட்டோம். மாப்ளையும் உனக்கு இன்விடேஷன் அனுப்புவாருனு நினைக்கிறேன். சோ கண்டிப்பா வந்துருடா! டோண்ட் மிஸ்!" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொண்டை காய்ந்துபோயிருந்த சுந்தரபாண்டியன் அடுத்த பல நிமிடங்களுக்கு கண்ணசைக்காமல் அந்த மின்னஞ்சலையே பார்த்துக்கொண்டிருந்தான்.
  ----------------------------------------------------

கதையின் மஞ்சள் கரு -  வினையூக்கி
கதையின் வெள்ளைக் கரு- டான் அசோக்
கதையின் ஓடு -நீங்கள், நான், அவர், இவர். 

Thursday, June 20, 2013

பிரசிடண்ட் சிதம்பரம் (சிறுகதை) -டான் அசோக்
"ஹலோவ்வ்வ்வ்... (இரண்டு நொடி இடைவெளி) ஐயாம் பிரசிடண்ட் சிதம்பரம் செட்டியார் ஸ்பீக்கிங்....(இ.நொ.இ)..... ஃப்ரம் லாவண்யா ஹோம்ஸ்..."

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் சிதம்பரம்.  அவர் மொழியில் சொல்ல வேண்டுமானால் பிரசிடண்ட் சிதம்பரம். எதிர்முனையில் என்ன பேசினார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் சிதம்பரத்தின் முகம் போன போக்கை வைத்து எவனோ ஒருவன் எதோ அசிங்கமாகத் திட்டியிருக்கிறான் என்பது மட்டும் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. லாவண்யா ஹோம்ஸ் அசோசியேசனில் இருப்பது மொத்தம் முன்னூறு வீடுகள். அந்த முன்னூறு வீடுகளில் 130வீடுகள் காலி வீடுகள். வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு ஓட்டு கிடையாது என்பதால் அந்த வகையில் ஒரு 80வீடுகளை கழித்தது போக மீதமிருக்கும் 90 வீடுகளில் வீட்டுக்கொரு வாக்காளர் என்ற வகையில் 90 வாக்காளர்களால் 'போய்த் தொலைகிறது' என ஏகபோகமாக 'லாவண்யா ஹோம்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்' பிரசிடண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பிரசிடண்ட் சிதம்பரம்.

ஒருநாளின் எந்தப்பொழுதில் பார்த்தாலும் பச்சை நிறத்தொப்பியும், நேர்த்தியான ஃபார்மல் உடையிலும் காட்சியளிப்பார் சிதம்பரம். எம்.ஜி.ஆரின்  ட்ரேட்மார்க்காக கண்ணாடியும், வெள்ளைத் தொப்பியும் அமைந்ததைப் போல தனக்கு ஒருநாள் இந்த பச்சைநிற மிலிட்டரி தொப்பி அமையும் என மிக தீர்க்கமாக நம்புகிறார். லாவண்யா குடியிருப்பில் ஓய்வு பெற்ற 'கேசு'கள் மிகவும் குறைவு என்பதால் நிர்வாகப் பணிகளை கவனிக்க ஆட்களும் குறைவு. எனவே மற்ற அசோசியேசன்கள் போல் அல்லாது போட்டியின்றி பிரசிடண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார் சிதம்பரம். ஓய்வு பெற்ற ஆனால் வயதில் குறைந்த எனக்கும் வேணுவுக்கும் முறையே பொருளாளர், செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன. அவர் வீட்டில் மனைவியும் அவரும் மட்டுந்தான் என்பதால் தூங்குவதற்கு மட்டுமே வீட்டிற்கு செல்வார். மற்ற நேரமெல்லாம் அசோசியேசன் அலுவலகம்தான் அவரது வீடு. அதுகுறித்து அவர் மனைவியும் அலட்டிக்கொண்டதாக நினைவில்லை. அவரது ஒரே மகன் கார்த்தி வெளியூரில் ஆடை வடிவமைப்புக் கல்லூரியில் படிப்பதாக ஒருமுறை சொன்னார்.

முதல்நாள் அசோசியேசன் அலுவலகத்தில் பிரசிடண்ட் சிதம்பரம், செயலாளர் வேணு மற்றும் பொருளாளரான நான் என மூவரும் அமர்ந்திருந்த போது வீடு ஏதேனும் காலி இருக்கிறதா என்பது பற்றி விசாரிக்க  படுசராசரியாக தோற்றமளித்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்திருந்தார். அவரது கேடு காலம், எங்களையெல்லாம் தாண்டிப்போய் பச்சை நிறத்தில் தொப்பி அணிந்து 'கம்பீரமாக' காட்சியளித்துக் கொண்டிருந்த சிதம்பரத்திடம்  சென்றார்.

"லாவண்யால வீடு விலைக்கு இருக்குனு சொன்னாங்க. ஓனர் நம்பர் கொடுத்தீங்கன்னா நான் பேசிக்குவேன்", வந்திருந்தவர் கேட்டார்.

".. ஹ்ம்ம்.. இங்க வாங்கப் போறீங்களாக்கும்... சார் என்ன பண்றீங்க?" அவருக்கே உரிய இடைவெளிவிட்டு பேசும் பாணியில் பந்தாவாக, அதே நேரத்தில் நக்கலாக எதிர்கேள்வி கேட்டார் சிதம்பரம்.

"கோரமேண்டல் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி கேள்விப்பட்டிருப்பீங்களே. அது என்னோடதுதான் சார். பொண்ணுக்கு இங்க ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி கொடுக்கலாம்னு.." எங்களுக்கோ தூக்கி வாரிப் போட்டது. கோடிகளில் புரளும் ஒருவர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று. ஆனால் சிதம்பரமோ கொஞ்சம் கூட முகத்தில் சலனமே இல்லாமல் அடுத்த கேள்விக்குத் தாவினார்.

"கோரமாண்டல்னா அரசு மேம்பாலம் எல்லாம் காண்ட்ராக்ட் எடுப்பாங்களே அந்த கம்பனியா?"

"ஆமா சார்"

"ஹ்ம்ம்.... ஒரு கேள்வி கேக்கவா?" அதுவரை தெளிவாக சிறிய புன்னகையுடன் தோற்றமளித்துக் கொண்டிருந்தவரின் முகத்தில் குழப்பம் தோன்றிவிட்டது. "கேளுங்க சார்.." என்றார்

"ஆசியாவுலயே நீளமான மேம்பாலம் எதுனு தெரியுமா?... சொல்லுங்க பார்ப்போம்" கொஞ்சம் யோசித்துவிட்டு "நீங்களே சொல்லுங்க சார்" என்றார் பரிதாபமாக.

"ஹைதரபாத் மேம்பாலம்!! 135 கிலோமீட்டர்ஸ்............ குசேலன் படம் அப்ப வந்திருந்துச்சு. ரஜினியும் நானும் அந்த பாலத்துலதான் போறோம். அவர் கார்ல... ஒன்லி 25 மினிட்ஸ்.. ரஜினி வாஸ் எஞ்சாயிங் தி ரைட்." என்று கூறியபடியே மெதுவாக தலையை நிமிர்த்தி அறையின் விட்டத்தைப் பார்த்தார். வந்திருப்பவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது என்றாலும் சிதம்பரம் செய்த காமடியை நினைத்து என்னாலும், வேணுவாலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஆனால் அந்த சம்பவத்தில் இருந்து சரியாக ஒருமாதம் கழித்து நான், என் மனைவி லட்சுமி மற்றும் சிதம்பரம், அவர் மனைவி என நால்வரும் காரில் எங்கோ பயணிக்கும் அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் சிதம்பரம் யார் என தெரிந்தது, புரிந்தது.

கார் ஈசிஆர் வழியாக போய்க் கொண்டிருந்த போது ஒரு பெரிய கேட் போட்ட வீட்டைத் தாண்டிச் சென்றது. சிதம்பரம், "தம்பி.. இதப் பாத்துக்கங்க... ரஜினியோட தோட்டம்.. கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சாலும் ஓய்வெடுக்க இங்க வந்திருவாரு... நானும் அவரும் இங்கதான் பேசிகிட்டே இருப்போம். கிளம்புறேன் சார்னு சொன்னாலும் விடவே மாட்டாரு.." என்றார். எனக்கு அதிர்ச்சி. ஆட்டக் கடிச்சு மாட்டக்கடிச்சு இந்த ஆள் நம்மையும் கிண்டல் செய்கிறாரே என்று. ஆனால் சிதம்பரமோ சீரியசாக பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சுக்கு நடுவே என் மனைவி என்னை விரலால் தொடையில் சீண்டி, "ஏங்க இது ஒரு ஸ்கூல்ங்க. இவரு ரஜினி தோட்டம்னு காட்டுனது அந்த ஸ்கூலோட ஹாஸ்டல்" என்றாள். எனக்கு அதிர்ச்சி இன்னும் ஒரு டிகிரி அதிகரித்தது. நான், "சார். இது ஸ்கூல் ஹாஸ்டலாம். தோட்டமில்லையாம்." என்றேன். சிதம்பரம் அதற்கும் சளைக்காமல் ஒரு இரண்டு நொடி நிதானித்துவிட்டு, "நினைச்சேன் தம்பி... என்னடா கேட் பச்சை கலர்ல இருக்கே.. ரஜினி தம்பி கேட் கருப்பு கலர்ல இருக்குமேனு.. இந்த ரோட்லதான் எங்கேயோ வரும்.. இப்ப காணல.. சரி விடு. வர்றப்ப காட்றேன்..' என்று கூறிவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கத் துவங்கி விட்டார். அப்போதுதான் புரிந்தது, ஒருமாதத்திற்கு முன்பு வந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனிக்காரரிடம் சிதம்பரம் காமடியாகப் பேசவில்லை சீரியசாகவே அவர் அப்படித்தான் பேசுவார் என்பது!

லாவண்யா குடியிருப்பின் முன்னேற்றத்திற்காக சிதம்பரம் கொண்டுவந்த சீர்திருத்தங்களும், திட்டங்களும் ஏராளம். அதில் பொதுமக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற திட்டம், நீச்சல் குளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'பிரசிடண்ட் டைம்'! அதாவது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனியாக நீந்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் சிறிய திருத்தம் கொண்டு வந்து மாலை ஐந்தில் இருந்து ஆறுமணிவரை பிரசிடண்ட், அதாவது சிதம்பரம் மட்டுமே நீந்துவதற்கான பிரத்யேக நேரம் என ஒரு சட்டம் போட்டார். தான் அறிமுகப்படுத்திய பிரசிடண்ட் டைமை முழுதாக உபயோகப்படுத்தவேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து தினமும் நீச்சல் குளத்தில் ஊறிக்கிடந்ததால் முதுகுப்பிடித்து ஒரு மாதம் படுக்கையில் கிடந்தது தனிக்கதை. ஏற்கனவே இத்திட்டத்தால் கடுப்பில் இருந்த மக்களுக்கு  சிதம்பரத்தின் இரவு ஆறு மணிக்கு மேல் பொது விளக்குகள் எதுவும் எரியக் கூடாது என்ற மற்றொரு புதிய சட்டம் இன்னும் எரிச்சலூட்டியது. ஆறுமணிக்கு மேல் விளையாட முடியாத ஆற்றாமையில் ஏழு வயது சிறுவன் ஒருவன், "யோவ் தொப்பித்தலையா.. ஈவினிங் லைட் போடாம காலேலயா போடுவாங்க? போயா லூசு பிரசிடண்ட்.." என வெளிப்படையாகவே  அசோசியேசன் மீட்டிங்கில் கேட்டுவிட்டதால் அந்த திட்டம் காலப்போக்கில் கைவிடப்பட்டது.

இப்படியே  போய்க்கொண்டிருந்த சிதம்பரத்தின் ஆட்சியில் அவருக்கு எதிரிகள் அதிகரித்துக்கொண்டே போனார்கள். குறிப்பாக சிறுவர்கள்! அவர் நடைப்பயிற்சி செய்யும் நேரத்தில் மாடியில் இருந்து தண்ணீர் ஊற்றுவது (தண்ணீரா, சிறுநீரா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தாலும் அது தண்ணீர்தான் என சிதம்பரம் தீர்க்கமாக நம்புகிறார்), எதாவது கெட்டவார்த்தையில் கத்திவிட்டு ஒளிந்துகொள்வது போன்ற ஃபாசிச, சாடிச நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். தனக்கு எதிர்ப்பு பெருகுவதை கவனித்த சிதம்பரம் தன் மதிப்பை உயர்த்தவும், தன்மீது இரக்கம் ஏற்படவும் ஒரு அருமையான தந்திரோபயத்தை தீட்டினார். அடுத்த தேர்தலில் அது தனக்கு உதவும் என்றும் நம்பினார்.

"அன்புள்ள  லாவண்யா குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வணக்கம். உங்களுக்காக கடந்த 11 மாதங்களாக ஓய்வின்றி உழைக்கும் நான், கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். என் மதிப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு இங்கே சில 'எனிமி'கள் உருவாகிவிட்டார்கள். அதனால் என் ப்ரசிடண்ட் பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என்றிருக்கிறேன். மாற்றுக்கருத்து இருப்பவர்கள் உடனே பதில் மெயில் செய்யவும். அதிகப்படியானவர்கள் என் ராஜினாமாவை விரும்பாவிட்டால் உங்களின் நலனை மனதில் கொண்டு என் முடிவை மறுபரீசிலனை செய்வேன்." என ஒரு மின்னஞ்சலை எல்லோர்க்கும் தட்டிவிட்டார்.

ஒருநாள், இரண்டுநாள் என இரண்டுவாரங்கள் கழிந்து ஒரே ஒரு மெயில் மட்டும் வந்திருந்தது, "எப்ப சார் ராஜினாமா செய்யப் போகிறீர்கள்? நீங்கள் மெயில் அனுப்பி இரண்டு வாரம் ஆகிவிட்டதே?" என்று!! நானும், வேணுவும் இதைத்தான் எதிர்பார்த்தோம் என்றாலும் சிதம்பரம் இதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு ஏமாற்றம்தான். அன்று அந்த மெயிலை படித்துவிட்டு சோகமாக வீடு சென்றவர் அடுத்தநாள் அலுவலகம் வரவில்லை. அதற்கடுத்தநாள் வந்து ஒரு பெரும் குண்டை தூக்கிப் போட்டார்.

வழக்கமான பச்சை தொப்பி, வெள்ளை ஷூ. ஆனால் வெள்ளை சட்டையும் ஒரு பிரபலமான கட்சியின் கரை போட்ட வேட்டியிலும் காட்சியளித்தார். வந்து அமர்ந்து சிறிது யோசனைக்குப் பின் நிதானமாக ஆரம்பித்தார், "தம்பி. நான் முடிவு பண்ணிட்டேன். காலம் நமக்கு மிகப்பெரிய பதவியை தர காத்திருக்கு. நம்ம ஏன் தம்பி சில்லறைத்தனமா இந்த பிரசிடண்ட் பதவிக்கு போட்டி போடனும்? நேத்து ஒரு ஜோசியக்காரன பாத்தேன். அய்யா உங்களுக்கு சின்னத்தடை ஒன்னு இப்ப இருக்கு.. ஆனா அதையெல்லாம் கண்டுக்கிடாதீக.. ஏன்னா பெரும்பதவியெல்லாம் உமக்கு அடுத்தடுத்து காத்துக் கிடக்கு.. மக்கள் ஆசியோட டெல்லி போகப்போறீகன்னான். டெல்லினா என்ன? எம்.பி! பெரிய பதவின்னா என்ன? மத்திய அமைச்சர்!  அடுத்த தேர்தல்ல மத்திய அமைச்சர் ஆகப்போறேன். அதான் இப்ப இருந்தே வேட்டி கட்டி பழக ஆரம்பிச்சுட்டேன்." என்றார். நானும் வேணுவும் வழக்கமான அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

வேணு, "சார் எந்த தொகுதில நிக்கப் போறீங்க?"

"செங்கல்பட்டுல நிக்கலாம்னு இருக்கேன் தம்பி"

"செங்கல்பட்டு எம்.எல்.ஏ தொகுதி சார்."

"அப்படியா? செங்கல்பட்டு எம்.எல்.ஏ தொகுதியா? (ஒருநொடி இடைவெளி விட்டு) அப்ப காஞ்சீபுரத்துல நிப்போம்” என பதில் வந்தது. வேணு எழுந்து சென்றுவிட்டார்.

அடுத்தடுத்த நாட்களில் சிதம்பரத்தின் மத்திய அமைச்சர் கனவிற்கு அவரது பிரசிடண்ட் அலப்பறையே பரவாயில்லை என்று தோன்றுமளவிற்கு சிதம்பரம் ஒரு காரியம் செய்தார். வீடு வீடாகச் சென்று, “தேர்தலின் போது சொல்கிறேன். வீட்டுக்கு ஒரு லட்சம் தேர்தல் நிதியை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குடியிருப்பின் பிரசிடண்ட் மத்திய அமைச்சரானால் உங்களுக்குத்தானே நன்மை” என பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டார். அவரைப் பற்றி ஒருமார்க்கமாக மறைமுகமாக பேசிக்கொண்டிருந்த குடியிருப்பு மக்கள் இப்போது வெளிப்படையாகவே பேசத் துவங்கிவிட்டார்கள். ஆனால் சிதம்பரமோ எதைப்பற்றியும் கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல் வருவோர் போவோரிடம் ரஜினி, தனுஷ், மத்திய அமைச்சர் என அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்.

சிதம்பரத்திடம் நெருங்கிப் பழகும் குடும்பங்களாக எனது மற்றும் வேணுவின் குடும்பங்கள் மட்டுமே இருந்ததால் மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது எங்களுக்கு மட்டும் சங்கடமாக இருந்தது. எத்தனை நாள்தான் இதை வளரவிடுவது? “ஏங்க. சாரோட மனைவி கொஞ்சம் தெளிவானவங்களா தெரியிறாங்க. அவங்ககிட்ட நான் பேசிப்பார்க்கவா?” என்றாள் லட்சுமி. எனக்கும் வேணுவிற்கும் இது சரியென்றே பட்டது. சிதம்பரத்தின் மனைவி அதிகமாகப் பேசமாட்டார். நாங்கள் காரில் பயணித்தபோது கூட அமைதியாக வேடிக்கை பார்த்த வண்ணமே வந்தாரேயொழிய சிதம்பரத்திடம் கூட அவர் பேசியதாக நினைவில்லை. நாங்கள் எப்போதாவது கேட்ட கேள்விகளுக்கும் அவர் ‘தெளிவாக’ பதில் சொல்லியதால் அவரிடம் சொல்வதே சரியாக இருக்கும் என முடிவு செய்துவிட்டோம். மேலும் கணவனின் மீதான பிராதுகளை அளிக்க மனைவியை விட சிறந்த இடமும் இருக்கிறதா என்ன? ஆனால் எதற்கு லட்சுமி மட்டும் அவரிடம் தனியாக பேசவேண்டும் மூவரும் சேர்ந்தே பேசிவிடுவோமே என முடிவு செய்து அதற்கென ஒருநாளும் குறித்தோம். சிதம்பரத்திடன் மனைவியிடம் அவரது நடவடிக்கைகள் குறித்து விளக்கவேண்டிய நாளும் வந்தது.

மிஸஸ் பிரசிடண்ட் (தன் மனைவியை இப்படித்தான் அழைக்கவேண்டுமென எங்கள் அலுவலக பியூனுக்கு கட்டளையிட்டிருந்தார் சிதம்பரம். அதுமட்டுமல்லாது எங்களிடம் குறிப்பிடும்போதும் அவர் மனைவியை மிசஸ் பிரசிடண்ட் என்றே குறிப்பிடுவார்) நடைபயிற்சிக்கு வரும் நேரத்தில் நான், வேணு மற்றும் லட்சுமி அங்கிருக்கும் ஒரு பெஞ்சில் அவருக்காக காத்திருந்தோம். அவர் எங்களைப் பார்த்து புன்னகைத்தவுடன், லட்சுமி, “உங்களிடம் ஒரு விசயம் பேசவேண்டும்” என அழைத்தாள். சிதம்பரத்தின் மனைவி நாங்கள் அமர்ந்திருந்த பெஞ்சிலேயே அமர்ந்தார். சாதாரண விசாரிப்புகளுக்குப் பின் நான், “சாரைப் பற்றி ஒரு விசயம்…… அவரு மத்திய அமைச்சர் அது இதுனு சொல்றத பத்தி…..” என இழுக்கவும் மிசஸ் பிரசிடண்ட்டின் முகம் கொஞ்சம் சலிப்படைந்தது. பின் அவர், “ஆமா தம்பி… நான் சொன்னா அந்த மனுசன் எங்க கேக்குறாரு? எப்ப பாத்தாலும் மத்திய அமைச்சர், எம்பி, தேர்தல் நிதினு உயிர எடுக்குறாரு..” என்றார், ஆஹா நம் வேலை சுலபமாக முடிந்துவிடும் போலிருக்கிறதே என எங்களுக்கு உள்ளூர மகிழ்ச்சி. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெற்றிக்களிப்புடன் சிரித்துக்கொண்டோம். பின் நாங்கள் பேச இடம் விடாமல் மிசஸ் பிரசிடண்டே தொடர்ந்தார், “ஏன் லட்சுமி.. டெல்லில பால்காரங்கள்ல இருந்து ஆபிசருங்க வரைக்கும் இந்தில தான் பேசுவாங்களாமே? நான் போனா சமாளிச்சுரலமா? எனக்கு என்னமோ அங்க போக விருப்பமே இல்ல. இவருதான் கிடந்து அடிச்சிக்கிறாரு..” என்றார். அதிர்ச்சியின் அதளபாதாளத்திற்கே சென்ற லட்சிமி கிட்டத்தட்ட மயங்கியே விட்டாள். எனக்கும் வேணுவிற்கும் இதுபோன்ற சூழ்நிலைகள் சிதம்பரத்தின் புண்ணியத்தில் பழக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு மயக்கம் வரவில்லை.

அன்றுதான் கடைசி! அதன்பின் இதுபோன்ற விபரீத முடிவுகளை நாங்கள் எடுக்கவில்லை. போகிறது போகட்டும் ஆகிறது ஆகட்டும் என விட்டுவிட்டோம். சிதம்பரமோ தன் மத்திய அமைச்சர் கனவில் உறுதியாக இருந்தார். 12வது மாதத்தில் தன் பதவிக்காலம் முடியப்போகும் தருணத்தில் ராஜினாமா செய்துவிட்டு அதே நேரத்தில் அடுத்த அசோசியேசன் தேர்தலில் பிரசிடண்ட் பதவிக்கு மனுதாக்கலும் செய்தார். எனக்கும் வேணுவுக்கும் போட்டியாக யாரும் மனு செய்யவில்லை என்றாலும் சிதம்பரத்தை இந்தமுறை பதவியில் விட்டுவைப்பதில்லை என்பதில் உரிமையாளர்கள் உறுதியாய் இருந்ததால் அவர்கள் ஆதரவுடன் சிதம்பரத்திற்கு போட்டியாக ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அசோசியேசன் தேர்தலும் முடிந்தது.

வழக்கமாய் நானும் வேணுவும், பெரும் அதிர்ச்சிகளையே சந்தித்துப் பழகியிருந்ததால் எந்த அதிர்ச்சியுமே ஏற்படுத்தாத வண்ணம் எதிர்பார்த்தது போலவே வந்த தேர்தல் முடிவு எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி அளித்தது. சிதம்பரம் இரண்டு ஓட்டுக்கள் பெற்றிருந்தார். தனக்குத் தானே ஓட்டு போடுவதற்கு விருப்பமில்லாத சிதம்பரம் தனது ஓட்டை தன்னை எதிர்த்து நின்ற ஆளுக்கே போட்டதாக தேர்தல் அன்றே என்னிடம் சொல்லியிருந்தார். ஆக அவர் பெற்றிருக்கும் இரண்டு ஓட்டுகள் எனது மற்றும் வேணுவின் ஓட்டுகள். அவர் இப்படி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக தோற்ற விசயத்தை அவரிடம் நேரில் தெரிவித்துவிடும் பணி எனக்கு இடப்பட்டது. சிதம்பரம் எதோ வேலையாக அன்று வெளியூர் சென்றிருந்ததால் அடுத்தநாள் காலை நேரில் தெரிவித்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

அடுத்தநாள் காலை எட்டு மணி. சிதம்பரத்தின் வீடு.  இரண்டுமுறை கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. என் அடுத்தடுத்த மெல்லிய தட்டுக்களுக்குப் பணிந்து தாழிடாத கதவு தானாக திறந்தது.  கடந்த ஒருவருடமாக அவர் இங்கிருந்தாலும் அவரது வீட்டிற்கு நான் செல்வது இதுதான் முதல்முறை. வீடு மிக அழகான ஃபர்னிச்சர்களால் நிரப்பட்டு சுத்தமாக  தோற்றமளித்தது.   “சார்ர்ர்ர்ர்….” என்றேன். உள்ளே தொலைதூரத்தில் யாரோ பேசும் ஒலி மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. மிசஸ் பிரசிடண்ட்டும் வீட்டில் இருப்பதற்கான கூறுகள் எதுவும் தென்படவில்லை. ஆக நானாகவே கொஞ்சம் முன்னேறி வீட்டினுள் சென்றேன்.

முதல் படுக்கை அறையில் சிதம்பரம் இல்லை. சுவரெங்கும் ரஜினி படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. பேஸ்கட் பால் உபகரணங்களும், கிரிக்கெட் பேட்டுகள் நிரம்பிக்கிடந்தன.  மூலையில் இருந்த ஒரு அலமாரியில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க சிறுவனின் புகைப்படம் மாலையிட்டு சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்த்தேன். சிதம்பரத்தின் மகன் கார்த்தி மார்பளவு எடுக்கப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான்.  அவன் இறந்து ஐந்து வருடங்கள் என தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. அதே அலமாரியின் கடைசி வரிசையில் ஓரிரு சட்டம் செய்யப்பட்ட புகைப்படங்கள் கிடத்தப்பட்டிருந்தன. அவற்றில் பழங்கால அரசியல்வாதிகளுடன் சிதம்பரம் சிரித்துக் கொண்டிருந்தார். அதிர்ச்சிக்குப் பழக்கப்பட்டிருந்த எனக்கு அந்த அறையில் இருந்து ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் தலை சுற்றியது. அடுத்த அறையில் சிதம்பரம் தொலைபேசியில் யாருடனோ சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார், “பிரசிடண்ட் பதவியை தூக்கி எறிஞ்சுட்டேன் தம்பி. அடுத்து மத்திய அமைச்சர் தான்”....

Monday, June 3, 2013

யார் கருணாநிதி? குட்டிக் கட்டுரை -டான் அசோக்

தனது 'பாயும்புலி பண்டாரக வன்னியன்' நாவலில் இரவை இப்படி வர்ணிக்கிறார் கலைஞர், "வாழையிலையின் மேல் யாரோ சோற்றுப் பருக்கையை அங்கங்கு சிதறப் போட்டதைப் போல வானத்தில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன. இன்று மழையோ புயலோ இல்லை என நம்பிப் புறப்பட்டோம். ....................................................... சில மணி நேரங்களிலேயே அந்தப் பருக்கைகளை யாரோ தின்றுவிட்டதைப் போல வானம் வெறிச்சோடிப் போனது. எங்கள் நம்பிக்கையும் பொய்யாய்ப் போனது" என்று.  எவ்வளவு நேர்த்தியான உவமை, ஒப்பீடு? 1950களில் மந்திரிகுமாரி திரைப்படத்தில், "கொள்ளையடிப்பது என்பது கலை. பணத்துக்காக அதைச் செய்யவில்லை. ஆனந்தத்திற்காகச் செய்கிறேன்" என்று வில்லனுக்காக எழுதியிருக்கிகிறார். Christopher Nolanனின் படமான 'டார்க் நைட்'யில், "ஒருவன் வைரங்களை கொள்ளையடித்துக் கொண்டே இருந்தான். பின்புதான் தெரிந்தது அவன் வைரங்களுக்காக கொள்ளை அடிப்பதில்லை, கொள்ளையடிப்பது அவனுக்கு பிடித்திருப்பதால் கொள்ளையடிக்கிறான்" என்று ஒரு வசனம் வருகிறது! அதாவது கலைஞர் 60 ஆண்டுகளுக்கு முன்பு சர்வசாதாரணமாக எழுதிய ஒரு வசனம், உருவாக்கிய ஒரு 'one line' இப்போது உலகெங்கும் தூக்கிக் கொண்டாடப்படுகிறது! கலைஞர் 1950களில் ஹாலிவுட் வசனகர்த்தாக்களில் ஒருவராக இருந்திருந்தால் உலக சினிமாவின் ஒப்பற்ற சிற்பியாக போற்றப்பட்டிருப்பார். அவர் நாவல்கள் ஆங்கிலத்திலே வந்திருக்குமானால் உலக Best selling Authorகளில் ஒருவராக ஆகியிருப்பார். அவர் புத்தகங்கள் உலக இலக்கியங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும்.

எதைச் செய்தாலும் அதில் சிறந்து விளங்க முடிந்த திறமை வாய்க்கப்பெறுவதென்பது என்பது அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்காரனைத் தேடுவதைப் போல மிகக் கடுமையான, சவாலான ஒரு விஷயம். அத்தகைய அரிய திறமைதான் கலைஞரை ரசிக்க வைக்கிறது. அவரைப் பார்த்து வியக்க வைக்கிறது. இன்னமும் ஒருநாளைக்கு 5மணி நேரத்திற்கும் குறைவாய்த் தூங்கி நிறைவாய் உழைக்கும் அவர் உழைப்பை உந்து சக்தியாகக் கொண்டு உழைக்கத் தோன்றுகிறது. 90 வயதில் அவர் ஆற்றியிருக்கும் உரைகளில், எழுதியிருக்கும் எழுத்துக்களில், செய்திருக்கும் பணிகளில், கண்டிருக்கும் களங்களில், கடந்து வந்திருக்கும் சோதனைகளில், வென்று வந்திருக்கும் போராட்டங்களில் ஒரு பங்கு.. ஒரே ஒரு பங்கு நம்மால் 900 வருடங்கள் வாழ்ந்தாலும் செய்துவிட முடியுமா? இல்லை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? கலைஞர் இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அது மந்திரத்தில் காய்த்த மாங்காய் அல்ல. உழைப்பு! அறிவு! இதயத்துடிப்பை மூளைத் துடிப்பாய் மாற்றியதால் வந்த உயரம் அது. அந்த உயரம், தோட்ட மண்ணிலே உழன்று, தோட்டத்திற்காகவே மண்ணைக் கிளறி, தோட்டத்திற்காகவே கத்திச் சாகும் 'தோட்டப்' புழுக்களுக்குப் தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை!  தெரியவும் தேவையில்லை!


யார் மேல்தான் விமர்சனம் இல்லை? அமெரிக்கர்களுக்கு ஆபிரகாம் லிங்கன் மேல், வாஷிங்டன் மேல் விமர்சனம் இல்லையா? ஆப்ரிக்கர்களுக்கு மண்டேலா மேல் விமர்சனம் இல்லையா? அட ஈழத்தமிழர்களிலேயே எத்தனையோ பேருக்கு பிரபாகரன் மேல்தான் விமர்சனம் இல்லையா? தந்தை செல்வா மேல் விமர்சனம் இல்லையா? மகாத்மா காந்தி மேல் விமர்சனங்கள் இல்லையா? விமர்சனங்களே இல்லாமல் வாழ்ந்த தலைவர் என்று உலகத்தில் ஒரு தலைவரையாவது காட்டத்தான் முடியுமா? விமர்சனத்தை ஒரு தலைவர் புறந்தள்ளி வளர்வதென்பது எளிது. ஆனால் கடந்து வந்த பாதைகளில் எல்லாம் வன்மத்தையும், பொறாமையையும் கடந்து ஒருவர் வளர்ந்திருப்பாரேயானால் உலக வரலாற்றிலேயே அது கலைஞர் மட்டுந்தான். கலைஞர் தன் வாழ்நாளில் சந்தித்ததெல்லாம் ஒரு பங்கு விமர்சனமும், ஓராயிரம் பங்கு வன்மத்தையும் தான். ஈ.வீ.கே.சம்பத், கண்ணதாசன் துவங்கி நெடுமாறன், வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ராமதாஸ் வரை கலைஞர் மேல் துப்பியதும் துப்புவதும் வன்மத்தை தான்! வன்மத்துக்கெல்லாம் பதிலாய் புன்னகையையும், அரசியல் நகர்வுகளையும் தான் பதிலாய் தந்திருக்கிறாரேயொழிய பதில்-வன்மத்தையோ, சிறைச்சாலைகளையோ அல்ல. அவர் நினைத்திருந்தால் அரசியல் எதிரிகளை சிறைக்குச் சிறை மாற்றி, கொடும்வெயில் சிறையில் தள்ளி, நள்ளிரவில் கைதுகளைச் செய்து, பொடாவில் ஒன்றரை வருடம் புரட்டி எடுத்து கொடுமை செய்து தன் கால் வசம் நாய்கள் போல கிடத்தியிருக்க முடியாதா? இன்றைய ஆட்சியாளர்களிடமிருக்கும் அதே ஆட்சியும் அதிகாரமும் தானே கலைஞரிடமும் இருந்தது!

அவர் ஏற்கனவே 90வருடங்கள் வாழ்ந்துவிட்டார். 60க்கு மேல் வாழப்போகும் ஒவ்வொரு நாளும் உதிரி தான் என்பார்கள். அவர் எப்போது போவார் அவர் இடம் எப்போது காலியாகும், நம் ஆட்டத்தை எப்போது தொடங்கலாம் என எண்ணி எண்ணி காத்திருக்கும் நூல் கோஷ்டியும் சரி, நடை கோஷ்டியும் சரி, பிணந்தின்னி கோஷ்டியும் சரி ஒன்றே ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். கலைஞர் கருணாநிதி என்பவர் தனி மனிதரல்லர்! அவர் ஒரு கோட்பாடு! உழைப்பு! சின்னம்! பல லட்சம் கருணாநிதிகளை உற்பத்தி செய்து உலவிட்டிருக்கிற அறிவுத் தொழிற்சாலை! தமிழை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற மொழித் தொழில்நுட்ப வல்லுனர். இன்னும் சில ஆண்டுகளில் அல்ல, இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கருணாநிதியின் இடம் காலி ஆகாது! கனவு காணாதீர்கள்!

கலைஞர் வாழ்த்து-டான் அசோக்


தலைவன் நீ
தமிழின் தலைவாய்!
உன் வாயை
தன் வாயாய்க் கொண்டு
தன்னைத் தானே
பேசி மகிழ்கிறாள் தமிழ்த்தாய்!
தமிழுக்கே வாயாய்
வாய்த்த வாய்
உன் திருவாய்!
வையம் இருக்கும் வரை
உன் தீந்தமிழ் அருள்வாய்!

தன் புகழுக்குத் தன்பெயர்
போதாதென்று
தமிழ் தனக்குத்தானே சேர்த்துக்கொண்ட
பெயரடை நீ!

திராவிட எழுதுகோலால் அடித்து
ஆரிய மந்திரக்கோல்களை
உடைத்தவன் நீ!

மனிதர்க்கு
தோன்றின் புகழோடு தோன்றுவதே
பெரும் பாடு;
உனக்கோ
தோன்றியதிலெல்லாம் புகழோடு தோன்றுவதும்
தண்ணீர் பட்ட பாடு!

தொண்ணூறு தொட்டாலும்
நிலவை தூங்க வைக்கிறாய்
சூரியனை எழுப்பி விடுகிறாய்
இரண்டிற்கும் இடைப்பட்ட
நேரத்தில் கொஞ்சமாய்
தூங்கிக் கொள்கிறாய்;
இதை பேராசை என்பார்
சோம்பலுக்குச் சொந்தக்காரச் சிறியார்!
அவர் உழைப்பின் வயது 90
என அறியார்!

பதிமூன்று வயதில்
உன் நண்பர்குழாம் பம்பரம் சுற்றியது;
நீயோ கையெழுத்துப் பிரதிகளுடன்
பம்பரமாய்ச் சுற்றினாய்;
ஒரு சுற்றுக்கு
ஓரடி வளர்ந்தாய்;
எழுபத்தேழு ஆண்டுகளாய்
சுற்றிக் கொண்டிருக்கிறாய்;

பத்தாண்டுக்கு ஒருமுறை
ஒருவயதேறும் பாலகன் நீ!
அரசியலில்
அம்பெறிவோர்க்கும் அன்பெறியும்
பால் அகன் நீ!

சால்வைக்குப் பிடித்தவன் நீ!
அட
சாவுக்கும் பிடித்தவன் நீ!
அதனால்தான்
உன் சாவைப் பிடித்தவர்கள் எல்லாம்
சாவுக்குப் பிடித்தவர்கள் ஆகிறார்கள்!
நீ கட்டவேண்டிய மணிமண்டபங்கள்
இன்னும் சில மீதமுண்டு!

வாழ்வோருக்கு ஒன்பதே போதும்;
வாழவைப்போர்க்கு
தொண்ணூறும் போதாது;
உன்னைவிட்டால் தமிழகம் பாழ்;
இன்னும் தொள்ளாயிரம் வாழ்!

-டான் அசோக்

(பெயரடை - உரிச்சொல்- adjective)

Sunday, June 2, 2013

சாரு! ஜெமோ! இனிமே உசாராத்தான் இருக்கனும்!

ஒரு காலத்தில் அஜீத்தும், விஜய்யும் இப்படி மாற்றி மாற்றி பேட்டி கொடுத்து ஃபார்ம் ஆனார்கள். "நான் யார் தெரியுமா? நான் ஏன் சூப்பர் ஸ்டார் ஆக கூடாது? அவனுக்கு இருக்குறது எனக்கு என்ன இல்ல?" என்றெல்லாம். இப்போது எழுத்தாளர்கள் எனப்படும் நிறைய எழுதுபவர்களின் காலம் போலும்.

அண்ணாவின் மாணாக்கர் ஒருவர் பற்றி ஜெமோ எழுதிய அனுபவப் புனைவுக்கு பதிலடடியாக, அவரே வெட்கி தலைகுனியும் அளவிற்கு ஒரு பதில் கட்டுரையை போட்டு தாக்கியிருக்கிறது சாரு என்ற பெரிய தலை.

அதையெல்லாம் விட ஜெமோவுக்கு சாரு தான் இலக்கியம், உலகம் சினிமா எல்லாவற்றுக்கும்  குருவாம். ஜெமோ அதைப் படித்துவிட்டு தூக்குக் கயிறுக்காக அலைந்திருப்பார். இந்த மாதிரியெல்லாம் எழுத சாதாரண ஆட்களால் முடியாது. அவரைப் போல் நாடி நரம்பு சதை ரத்தம் இதிலெல்லாம் சிரிப்பே இல்லாத சீரியஸ்னெஸ் ஊறிப்போன ஒரு காமடியனால் தான் முடியும். எந்திரனுக்கு டிக்கெட் கிடைக்கல என ஊரைக் கூட்டி அழுவது, மிஸ்கின் கேவலப்படுத்திட்டானே என ஒரு மாதம் அழுது தீர்ப்பது என அண்ணனின் உலக சினிமா அனுபவம் உலக பிரசித்தம்தானே! இலக்கியம் கேட்கவே வேண்டாம்.

சரி அதெல்லாம் நமக்கு எதுக்கு? நாம் எதோ இலக்கியம், ஒலகசினிமா, பின்நவீனத்துவமுன்னியம், முன்நவீனத்துவபின்னியம் என்னால் தெரியாத முட்டாப்பசங்க தானே. ஆனால் நம்மைப் போன்ற இலக்கியம் தெரியாத முட்டாப்பசங்களுக்கு எல்லாம் கூட 'அண்ணா' என்ற ஒரு ஆளைப் பற்றி தெரியும். ஏனென்றால் நம்மைப் பார்த்து "நம்மல்லாம் முட்டாப்பசங்கடா" என அடித்துச் சொன்னவர்களின் முதல் தலைமுறையில் அண்ணாவும் ஒருவரல்லவா. அட.. இந்தக் காலத்தை விடுங்கள், இப்போதுதான் உலக முட்டாள்கலெல்லாம் உள்ளூர் முட்டாள்களைப் பார்த்து "போடா மொன்னை" எனத் திட்டுகிறார்களே!

ஜெமோவின் 'இலக்கிய குரு'வான சாரு ஜெமோவைப் பார்த்து இப்படி கேட்கிறார். அண்ணாவின் மாணாக்கன் மொன்னையாக இல்லாமல் பின் எப்படி இருப்பான் என்று. இதில் சிரிக்கக் கூடிய விசயங்கள் ரெண்டு உண்டு. ஜெமோவின் புனைவில் ஒரு கதாப்பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு சீரியசாக தன் அறிவுஜீவித்தனத்தை சாரு காட்டுவது. மற்றொன்று அண்ணாவைப் பற்றி சாரு பேசுவது!

அட இதற்கெல்லாம் நாம் "டாய்.. அண்ணா யாருனு தெரியுமா? டாய்" எனக் கிளம்பினால் சாருவை விட பெரிய காமடியன்களாய் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட வாய்ப்பிருப்பதால் ஒரே வரியில் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், "ரேப் ட்ரக் (rape drug) போல எழுத்தை உபயோகித்து பெண் பிடிக்க அலைபவனுக்கெல்லாம் ஊர் இன்பத்தை கருத்தில் கொண்டு எழுதி, பேசி செத்தவர்களைப் பற்றி என்ன தெரியும்!! அட சாமி! தெரியவே வேண்டாம்."

மற்றொரு கொடூர காமடி ஒன்றை இங்கு பதிவு செய்தே ஆகவேண்டும்.  எழுத்தாளர்களை மதிங்கடா. கெஞ்சிக் கேக்குறேன்டா என்றார் ஜெமோ!! ஆனால் நம்ம பெரிய தலையோ ஒருபடி மேலே போய் "நாங்க சிறுவர்கள் கூட செக்ஸ் வச்சுக்குவோம்டா. நாங்க கொலை கூட பண்ணுவோம்டா. எங்களை அரசு காப்பத்தனும்டா. ஏன்னா நாங்க எழுத்தாளர்கள்டா" என கூவியிருக்கிறது..

எதோ ஒரு ததிஸ்கோ பெகிஸ்கோ புகிஸோ போன்ற பெயரில் ஒரு அமெரிக்க எழுத்தாளன் ஓரின சேர்க்கையாளராம். அந்த காலத்தில் அமெரிக்காவின் சிறுவர்களைப் புணர்வது தடை செய்யப்பட்டிருந்ததால் (இந்தக் காலத்தில் மட்டும் என்ன "வா வந்து பண்ணு" என சிறுவர்களைக் காட்டிக்கொண்டா திரிகிறது அமெரிக்கா? கைய வச்சா ஒட்ட நறுக்கிறுவான்.") அவர் 'அதுக்காக' அடிக்கடி மொரக்கோ செல்வாராம். அப்படி போய் சிறுவர்களுடன் குஜாலாகா இருக்கும் அந்த எழுத்தாளர் தன் மனைவியைக் கொன்றுவிடுகிறாராம். கைது செய்த மொராக்கோ போலீசிடம் வாதாடி அமெரிக்கா அவரை மீட்டதாம். ஏன்னா அவர் எழுத்தாளராம்! அடிங்....

எழுத்தாளர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், அடித்துக்கொள்ளலாம். எட்டிப் பார்த்துவிட்டு "என்னமா பேசுறாங்கப்பா.. ஒன்னும் புரியலையேப்பா.. அட எழுத்தாளர்கள்னா அப்படித்தானே.. உனக்குத் தெரியாதாடாப்பா" என்று மக்கள் மூடிக்கொண்டு வரும் எழுத்தாளர்களுக்கான பொற்காலம் இல்லை அல்லவா இது. என்ன எழுதினாலும் மக்கள் 'கமண்ட்' போட்டு விடுகிறார்கள். அதனால்தான் முகநூல் என்பது பைத்தியக்காரர்களின் கூடாரம் என ஜெமோவும், "மொராக்கோலேலாம் நாங்க கற்பழிச்சா கூட அரசு காண்டம் வாங்கி கொடுப்பாங்க தெரியுமா?" என சாருவும் ஒப்பாரி வைக்கிறார்கள். அட என்னப்பா செய்யிறது!! இன்னும் நாள் ஆக ஆக ஒப்பாரிச் சத்தம் அதிகமாதான் கேக்கும். அறிவுஜீவித்தனம்ன்ற பேருல லூசுத்தனமா உளறும் போது வருகிறவன் போகிறவனெல்லாம் டைப்பித்து காறித்துப்பத்தான் செய்வான். கஸ்ட காலம்தான்! என்ன செய்வது!! அடுத்தவனை முட்டாளாகக் கருதாத முட்டாப்பய எல்லாம் இப்ப எழுதித் தொலைக்கிறானே!! அறிவாளி மொன்னைகள் கவனமாத்தான் இருக்கனும்.
Related Posts Plugin for WordPress, Blogger...