Tuesday, May 28, 2013

இலக்கியம் எழுதினால் அறிவாளியா? -டான் அசோக்


மொழி தோன்றிய காலத்தில் இருந்தே 'எழுத்து' என்ற ஒரு மிகப் பயங்கரமான அணு சக்தியையும் அது தாங்கியே வந்திருக்கிறது. அந்த அணு சக்தியை பயன்படுத்தத் தெரிந்தவர்களை எழுத்தை நன்றாக ஆளுமை செய்கிறவர்கள் என்ற அர்த்தத்தில் எழுத்தாளர்கள் என காலகாலமாய் அழைத்தும், பெருமைப்படுத்தியும் வருகிறோம். தங்கள் எழுத்துக் கலையை சமூகத்திற்கும் பயன்படும் வண்ணம் மிகச் சரியான முறையில் பயன்படுத்துகிறவர்களை வரலாறு புரட்சியாளர்களாய், தத்துவஞானிகளாய் பதிவு செய்து கட்டிக்காத்துக் கொள்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு என்னதான் தெளிந்த அறிவும், கடல் போன்ற தேடலும் இருந்தாலும் மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணம் எப்போதுமே ஏற்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் மக்கள் எட்டி எட்டி உதைத்த போதும் வலிந்து போய் மக்களிடம், மக்களுக்காகப் பேசும்-எழுதும் பாங்கு உடைய சிந்தனா-எழுத்தாளர்கள் அவர்கள். அங்கீகாரத்தைப் பற்றியோ, விருதுகளைப் பற்றியோ அக்கறையில்லாதவர்கள். அண்ணா, வால்டேர், மார்க்ஸ், பெரியார், டாக்கின்ஸ் போன்றோர் அதற்கு உதாரணங்கள்.

இன்னொரு வகை எழுத்தாளர்கள் உண்டு. ஏகப்பட்ட புத்தகங்களைப் படித்துவிட்டு, அழகியலோடு மொழியைக் கையாலுகிறவர்கள். கற்பனா சக்தியின் உதவியோடு நாவல்களையும், சிறுகதைகளையும் படைத்துவிட்டாலே, அது கொஞ்சம் மொழி அழகியலோடு இருந்துவிட்டாலே தங்களைத் தாங்களே பொதுச்சமூகத்தில் இருந்து ஒரு அடுக்கு மேலான அறிவாளிகளாக எண்ணிக்கொள்ளும் எழுத்தாளர் வகையறாக்கள். சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமென்றால் 'எழுத்தாளர்' ஜெயமோகன் போன்றவர்கள்.

ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை மட்டுமல்லாது மறைவர்த்தங்களையும் ஆளுகிறவர்கள். தெளிந்த நீரோடையின் இடுக்கிலே அரளி விதையையும் கரைத்து ஓடவிடுவதில் வல்லவர்கள். தமிழ்ச்சமூகத்தின் அறிவின்மையைச் சாடும் அவரது சுயதம்பட்டக் கட்டுரையிலே கூட திராவிட இயக்கத்திற்கெதிரான, அண்ணாவிற்கு எதிரான விசயங்களை வலிந்து திணித்து ஓடவிட்டிருக்கிறார். ஆனால் "நான் யார் தெரியுமா? நான் மும்பைல என்ன பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?" என்ற தொனியில் அவர் எழுதியிருக்கும் 'பில்டப்' புலம்பலில் வழக்கத்துக்கு மாறாக அவரது மறைவர்த்தங்கள் விஷமாக வெளிப்படையாக தெரிந்துவிட்டதுதான் சோகம்!

முதலில் ஜெயமோகன் தன்னை ஏன் அறிவாளி என நினைத்துக் கொள்கிறார்? பல புத்தகங்களை படித்திருக்கிறாராம். நிறைய எழுதுகிறாராம். சரி! எழுதுகிறவன் எல்லாம் அறிவாளியாகிவிட முடியுமா?  முதலில் அறிவு என்பதற்கான அர்த்தத்தையே அறியாத ஒருவரை, தமிழ்ச்சமூகத்தை விடுங்கள், எத்தியோப்பியாவிலோ, சோமாலியாவிலோ, உகாண்டாவிலோ கூட எப்படி அறிவாளியாகக் கருதுவார்கள்? எழுத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக அழகாக அடுக்கினாலே எழுத்தாளனாகிவிடலாம். எழுத்தை அடுக்குவதென்பது கலை. அந்தக் கலையை கையாளத்தெரிந்தவனை எல்லாம் எப்படி அறிவாளியாக ஏற்றுக்கொள்வது? பொதுமக்கள் 'பீ' எனச் சொல்லும் விசயத்தை எழுத்தாளன் மலம் என்பான். பொதுமக்கள் 'பூ' என்றால் எழுத்தாளன் சுற்றி சுற்றி அழகிய மலர் என்பான். இதில் வார்த்தைகள் தான் வேறுபடுமேயொழிய பொருள் ஒன்றுதானே. ஒரு விசயத்தின் பொருளை அழகியலோடு எழுதமுடிந்துவிட்டாலே, சொல்லமுடிந்துவிட்டாலே அதெப்படி அறிவாளித்தனம் ஆகும்? இன்னும் சுருக்கமாய்ச் சொல்லப்போனால் மொழி அழகியல் தெரிந்தவனுக்கு சமூகத்தின் அறிவியலும், அரற்றலும் கூட தெரிந்திருக்கும் எனச் சொன்னால், முடிவு செய்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.    
உண்மையான அறிவாளிகளுக்கு எப்போதுமே சுயதம்பட்டக் கட்டுரைகளோ, பில்டப் வசனங்களோ தேவைப்படுவதேயில்லை. அதெல்லாம் கூட வேண்டாம். இந்த உலகத்தில் நீங்கள் அறிவாளி என நினைக்கும் எவனாவது ஒருவன் இதுவரை "நான் அறிவாளி!" எனச் சொல்லியிருக்கிறானா? போலித் தனமான அறிவாளித்தனத்தை தன் மேல் திணித்துக்கொள்ள விரும்பும் சினிமா ஹீரோக்களுக்கே 'நான்' என்ற அடைமொழி தேவைப்படுகிறது.

சரி. ஜெயமோகன் இலக்கியத்தைத் தவிர வேறு எதாவது உருப்படியாக சமூகத்திற்கு தேவையான விசயங்களைச் செய்திருக்கிறாரா என்றால் தமிழகத்தை எப்போதும் இந்திய ஆட்சியாளர்களிடம் அடகு வைக்கும் இந்துத்துவ-காந்திய வழிமுறைகளையே மீண்டும் மீண்டும்  சுற்றி சுற்றி மாற்றி மாற்றி எதோ மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தபோகும் வாழ்வியல் தத்துவங்கள் போல எழுதியிருக்கிறாரேயொழிய, விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி உண்மையான அக்கறையோடு எதாவது எழுதியிருக்கிறாரா? பிறகெப்படி தமிழர்கள் அவரை அடையாளம் காணுவார்கள்? ஒரு எழுத்தாளன் தன்னை தன் சமூகத்தினின்று உயர்த்தி வைத்துக்கொண்டு எழுதும்போது அவன் எழுத்துக்கள் வானத்தில் உயரத்தில் பறக்குமேயொழிய மக்களைப் போய்ச் சேராது.

இறுதியாக, இலக்கியவாதிகளில் சிலர் அறிவாளிகளாக இருக்கலாம். அவர்களை சமூகம் என்றுமே தன்னிச்சையாக தத்தெடுத்து அரவணைத்துக் கொள்கிறது. தங்களில் ஒருவராக பாதுகாத்துக் கொள்கிறது. ஆனால் சிலர் மக்களில் இருந்து எட்டி இருக்கும் 'வெற்று' இலக்கியவாதிகளாக இருக்கிறார்கள். அன்றாடப் பிரச்சினைகளிலும், வாழ்வாதாரத்திற்கான தேடல்களிலும் உழன்று கொண்டிருக்கும் பெரும்பான்மை தமிழ்ச்சமூகம் மொழி அழகியலை மட்டுமே அறிவெனக் கொள்ளும் இலக்கியவாதிகளுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் தராது. அவர்களுக்கு அதிஅவசர முக்கியத்துவம் கொடுத்து அரவணைக்கவோ, போற்றவோ புகழவோ, தூக்கிக் கொஞ்சவோ வாழ்க்கைகாக ஓடிக்கொண்டேயிருக்கும் அச்சமூகத்திற்கு நேரமிருப்பதில்லை, தேவையும் இருப்பதில்லை. அச்சமூகம் தனக்காகப் பேசுகிறவனைத் தான் அறிவாளி என ஏற்குமேயொழிய, போற்றுமேயொழிய, தனக்குத் தானே பேசுகிறவனையும், மொழி அழகியலில் நிதர்சனத்தை மறப்பவனையும் அல்ல!


1 comment:

Sunantha said...

உங்க வேதனை புரிகிறது..அவர் உங்கள் போன்றவர்களைத்தான் கிழித்திருக்கிறார் என்பதாவது உங்களுக்கு புரிஞ்சிருக்கு ...கொஞ்சம் முயற்சி பண்ணினா நீங்க வெளிய வந்திரலாம் :):)

Related Posts Plugin for WordPress, Blogger...