Monday, May 20, 2013

மாணவர் போராட்ட அரசியல்!. (ஈழமுரசு கட்டுரை)
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் முக்கியமான விசயங்களை தீர்மானிப்பது மக்களின் மனநிலை. மக்களுக்குப் பிடிக்காத சட்டங்களையோ, கொள்கைகளையோ அவர்களுக்குப் பிடிக்காத அரசு செயல்படுத்தும்போது மக்களால் அந்த அரசை திருப்பிப் பெறவோ, ஆட்சியைப் பிடிங்கவோ முடியாதெனினும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஜனநாயகம் வழிசெய்துதான் வைத்திருக்கிறது. எந்த அளவிற்கு வலுவாக காட்டுகிறார்களோ ஆட்சியாளர்களின் தலையில் அந்த அளவிற்கு பதற்றம் ஏறும்! அதைவிட முக்கியம் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு கட்சி சாராமல் இருக்கவேண்டும் என்பது! பெரும்பாலும் குடும்பம், குழந்தைகள் என சராசரி வாழ்வில் 'செட்டில்' ஆகிவிட்ட சாமானியர்களுக்கு இந்த போராட்ட குணம் என்பது கடைசி அடுக்கில் இருக்கும். இவர்களால் பெரிய எதிர்ப்பையெல்லாம் காட்டிவிட முடியாது. மிஞ்சிப்போனால் புலம்புவார்கள், முகநூலில் பொறுமித்தீர்ப்பார்கள். பின் வாழ்க்கையைப் பார்க்க போய்விடுவார்கள். ஆனால் மாணவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு உணர்ச்சியும், கோபமும் முதல் அடுக்கில் இருக்கும். 1960களின் நிலை இது! உதாரணத்திற்கு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்லலாம். ஒரே ஒரு மாநிலத்தின் மாணவ சமுதாயம் விடாமல் போராடியதற்காக ஒரு மத்திய அரசு தன் கொள்கையையே மாற்றிக் கொண்டது. இதுபோன்ற ஒரு வெற்றி, இதுபோன்ற ஒரு புரட்சி ஏன் அதற்குப் பிறகு ஏற்படவில்லை?

சகலமும் சந்தைமயம் ஆக்கப்பட்டு மாணவர்களின் வாழ்வென்பது குதிரைப் பந்தயம் ஆகிவிட்டதால் போராட்டம், புரட்சி என ஒருநிமிடம் தாமதித்து ஓடினாலும் பல மைல்கள் பின்னுக்குத் தள்ளப்படும் இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். ஒருபக்கம் வீடு, உறவினர்கள் என சுற்றத்தாரின் அழுத்தம். மறுபக்கம் சினிமா, கிரிக்கெட் என மாணவர்களை நாட்டின் உண்மையான பிரச்சினைகளின் பக்கம் திரும்ப விடாமல் விடா-போதையில் வைத்திருக்கும் போதை மருந்துகள். இதெல்லாம் கூட பரவாயில்லை என்று தோன்றுமளவிற்கு உண்மையான செய்திகளை வெளியிடாமல் வெறும் கருத்துக்களை மட்டுமே வெளியிட்டு மாணவர்களை ரோபோட்டுகள் போல சிந்திக்க விடாத இயந்திரங்களாய் ஆக்கும் இந்திய ஊடகங்கள் ஒருபக்கம். "எதையடா அரசியல் ஆக்கலாம்? எதாவது சந்தர்ப்பத்தில் நாமும் 'ரவுடி' ஆகிட மாட்டோமா?" என பிணங்களைக் கூட விட்டுவைக்காமல் அரசியல் ஆக்கும் அரசியல்வாதிகள் ஒருபக்கம். இப்படி நாலாபுறமும் சுற்றிச் சுற்றி அடித்தால் பின் எப்படிதான் மாணவர்களுக்கு போராட தைரியமும், துணிவும் வரும்? ஆனால் இதையெல்லாம் மீறியும் தமிழகத்தில் சமீபத்தில் மாணவர்களுக்குத் துணிவும், தைரியமும் வந்ததும் அது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியதும், பின் அந்த போராட்டத்தின் முடிவு என்ன ஆனது என்பதையும் பார்ப்போம்.

லயோலா மாணவர்கள் சிலர் ஆரம்பித்து வைத்த சிறிய பொறி தமிழகம் எங்கும் மாணவர் போராட்டமாக பரவியது. 2009ல் இருந்தே ஈழம் தொடர்பான ஏராளமான போராட்டங்களை மக்கள் பார்த்துவிட்டாலும் மாணவர்களின் இந்த போராட்டம் இவ்வளவு பெரிய அலையை ஏற்படுத்தியதற்கு காரணம், அப்போராட்டத்தில் கலக்காத அரசியல் தன்மை! முழுக்க முழுக்க கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு, ஈழத்தை மட்டுமே முதன்மைப் பிரச்சினையாக தமிழகத்தில் பேசும் அரசியல்வாதிகளைக் கூட மாணவர்கள் புறக்கணித்ததுதான் அவர்களின் போராட்டத்தின் மீது வெகுஜன மக்களை நம்பிக்கைக் கொள்ள வைத்தது என்றால் மிகையாகாது. உண்ணாநோன்பை ஆரம்பித்த லயோலா கல்லூரி மாணவர்கள் அரசியல் வாதிகளின் சுயநலத்திற்கு தங்களை பயன்படுத்திவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தது ஒரு சூழ்நிலையில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராக மாணவர் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து அவர்களை சந்திக்கொண்டிருந்த போது சுப.வீ, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் திருமாவளவன் ஆகியோரும் அங்கே சென்றார்கள். அப்போது அங்கிருந்த சில நாம் தமிழர் கட்சிக்காரர்கள் அம்மூவருக்கும் எதிராக "திமுகவினர் வெளியேற வேண்டும்" என கோசங்கள் எழுப்ப, லயோலா மாணவர்களோ குழப்பம் விளைவித்த நாம் தமிழர் கட்சிக்காரர்களை "இதை அரசியல் ஆக்காதீர்கள்" எனக் கூறி வெளியேற்றியதும் நடந்தது. இப்படி எந்த சூழ்நிலையிலும் யாரையும் பகைக்காமல், சுமூகமாக ஒரு போராட்டத்தை நடத்தியதை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். மாணவர்கள் போராட்டத்தில் கவனமாக இருக்க, வெளியே "நீ பெருசா நான் பெருசா" என்ற போட்டி புதிய இயக்கங்களுக்கும் எழத் துவங்கியிருந்தன. இந்த போட்டியில் பிரதான பங்கு வகித்த இரண்டு இயக்கங்கள் நாம் தமிழர் கட்சியும், மே17 இயக்கமும்!

"நாங்கள் தான் மைக் கொடுத்தோம், நாங்கள் தான் ஸ்பீக்கர் கொடுத்தோம்" என்ற தொனியில் இவர்கள் இணையத்தில் போட்ட சண்டை மாணவர் போராட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் வகையில் இணையத்தை நாறடித்துக் கொண்டிருந்தது. வைகோ போன்றோர் தங்களால் தான் மாணவர் போராட்டமே துளிர்த்தது என்ற ரீதியில் பேட்டிமேல் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் மாணவர்களின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள், கட்சி பேதமின்றி அவர்களின் போராட்டம் குறித்த தகவல்களை பகிர்வதும், வெளியிடுவதுமாக உலகின் மூலைமுடுக்கிற்கெல்லாம் தகவல்கள் செல்லும் வண்ணம் பார்த்துக் கொண்டார்கள். சென்னையில் ஆரம்பித்தப் போராட்டம் வெகு விரையில் தமிழம் முழுவதற்கும் பரவியதில் இணையத்திற்கும், அதை வெகுசரியாக பயன்படுத்திக் கொண்ட வெகுஜன மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

மேலும் மிக முக்கியமான ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். கடைசியாக ஈழத்துக்கு ஆதரவான ஒரு அலை தமிழகத்தில் வீசி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது. 1983ஜூலை கலவரத்தின் போது துடித்தெழுந்த தமிழக வெகுஜன மக்கள் பின் ராஜீவ் கொலையின் போது அப்படியே தலைகீழாய் மாறி ராஜீ கொலைக்கு புலிகளுடன் திமுகவும் காரணம் என்ற பிரச்சாரத்தை நம்பி திமுகவை வரலாறு காணாத படுதோல்வி அடையச் செய்தது நினைவிருக்கலாம். அத்தோடு ஈழ ஆதரவு என்பது வெகுஜன மக்களின் மனங்களில் குழி தோண்டி புதைக்கப்பட்டது அதன் பின் ஈழம் என்பது தமிழக மக்களுக்கு ஒரு செய்தி மட்டுமே.

இதை ஏன் இவ்வளவு ஆணித்தரமாக சொல்லமுடிகிறதென்றால் ஜெவின் புலி எதிர்ப்பும், இலங்கை அரசுக்கு ஆதரவான அவரது பகிரங்கமான நிலைப்பாடுகளும் உலகப் புகழ் பெற்றது. தன் ஆட்சிக்காலங்களில் எல்லாம் புலிகள் எதிர்ப்பிற்கான அரசியலை நகர்வுகளை செய்தபடியே இருந்தார். புலிகளுக்கு இந்தியாவில் தடை வாங்கிக்கொடுத்ததில் இருந்து பிரபாகரனின் உறவினர்களின் விசாக்களை 'ப்ளாக் லிஸ்ட்' செய்தது வரை பகிரங்கமாகவே செய்தார். ஆனால் இதனாலெல்லாம் அவரின் வாக்கு சதவிகிதம் கொஞ்சம் கூட குறையவில்லை. தன் அரசியல்வாழ்க்கையில் பெரும்பான்மைப்பகுதியை ஈழத்துக்கு ஆதரவாக பேசியே கழிக்கும் வைகோ கூட புலிகளுக்கு எதிரான நகர்வுகளை ஜெ முழுவேகத்தில் செய்துகொண்டிருந்த போதெல்லாம் ஜெ கூட்டணியில் இருந்தார்!! இருந்தார் என்பதை விட அமைதியாக இருந்தார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விசயம். தங்களின் ஈழ ஆதரவால் தமிழக மக்கள் தங்களை பயங்கரமாக தண்டித்ததும் கனவில் துரத்தியது, திமுக தன் தீவிர ஈழ அரசியலை மாற்றிக்கொண்டதற்கு மிகமுக்கிய காரணம். ஆக இப்படி நீர்த்துப்போயிருந்த தமிழக வெகுஜன மக்களின் ஈழ உணர்வை மீண்டும் எழுப்பியதில் மாணவர் போராட்டத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

2009ல் முத்துக்குமார் மரணத்தையொட்டி எழுந்த ஒரு சிறிய அலையை கருணாநிதி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு அடக்கினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இப்போது ஆட்சியில் இருக்கும் ஜெவும் அதையேதான் செய்தார். ஆனால் போராட்டம் தொடர்ந்தது! ஏன் கருணாநிதி ஆட்சியின் போது மட்டும் படுக்கையை சுருட்டிக்கொண்டு கிளம்பினார்கள் என்றால் இப்போது இருக்கும் அளவிற்கு அப்போது மாணவர்களிடையே உணர்வும், துணிவும் இல்லை என்பதே உண்மை.

இப்படியாக அரசுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்த மாணவர் போராட்டம் முடியாமல் நீண்டுகொண்டே இருந்தது. தமிழகத்தில் வளர்ந்து வரும் ஈழ ஆதரவுக்குப் பணிந்து வேறு வழியே இன்றி திமுகவும் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறிவிட, இக்கட்டான சூழ்நிலையில் தவித்தது ஜெ அரசு. மாணவர் போராட்டத்தையும் ஓயச் செய்யவேண்டும், அதே சமயத்தில் ஈழ ஆதரவாளராகவும் காட்டிக் கொள்ள வேன்டும் என்ற சூழ்நிலையில் அதிரடியாய் ஒரு தந்திரத்தைக் கையாண்டு தன் வேலையை கச்சிதமாக முடித்தது ஜெ அரசு! அதுதான் இலங்கை அரசுக்கு எதிராக ஜெ நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம்!

இதை ஏன் தந்திரம் எனச் சொல்லவேண்டிருக்கிறது என்றால், காங்கிரஸில் இருந்து திமுக வெளியேறும் முன் காங்கிரஸ் அரசிற்கு "பாராளுமன்றத்தில் இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவித்து தீர்மானம் இயற்றவேண்டும்" என்று ஒரு விதிமுறை விதித்தது. அதன் சார்பாக ஜெ விடுத்திருந்த அறிக்கையில், "பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் எந்த நன்மையும் ஏற்படாது. திமுக நாடகம் ஆடுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார். பின் திமுகவின் கட்டுப்பாடுகளை காங்கிரஸ் ஏற்காததால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இந்த தொடர் சம்பவங்கள் நடந்த ஏழே நாட்களில் தான் சட்டசபையில் ஜெவின் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் இயற்றப்பட்டு, "மாணவர்கள் படிக்க வேண்டும். ஈழப்பிரச்சினையை தமிழக அரசு பார்த்துக்கொள்ளும்" என்ற தொனியில் அறிக்கையும் வெளியிட்டார்! பாராளுமன்ற தீர்மானத்தை விட சட்டசபை தீர்மானம் பெரிதா என்பது ஜெயலலிதாவுக்கு வெளிச்சம்!

எப்படியோ ஜெவின் சட்டசபை தீர்மானத்திற்கு பல தலைவர்களும் பாராட்டு மழை பொழிய, மாணவர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்று படிக்கச் சென்று விட்டார்கள். இப்படியாக ஒரு பொறியாய் எழுந்து நாட்டுத் தீயாய் பரவிய ஒரு போராட்டத்திற்கு மிக நேர்த்தியான ஒரு முடிவுரையை எழுதி அணைத்தது தமிழக அரசு!

அதற்காக மாணவர் போராட்டத்தை தோல்வி என ஒதுக்கித்தள்ளவும் முடியாது! ஈழத்தை பிழைப்பாக வைத்திருக்கும் சிலரைப் பற்றி மாணவர்கள் தெளிவாகத் தெரிந்து கொன்டது இந்த போராட்டத்தினூடேதான்! அதுமட்டுமல்லாது மேலே சொன்னதைப் போல் தமிழகத்தில் துவண்டு கிடந்த ஈழ உணர்வை வெகுஜன மக்களிடையே மீண்டும் எழுப்பி, இனி எந்த அரசியல் கட்சியும் தமிழகத்தில் ஈழத்துக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்க முடியாது என்ற நிலையை மாணவர் போராட்டம் தமிழகத்தில் உருவாக்கியிருப்பதை மிகப்பெரிய வெற்றியாகவே வரலாறு பதிவு செய்யும்.No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...