Tuesday, May 28, 2013

இலக்கியம் எழுதினால் அறிவாளியா? -டான் அசோக்


மொழி தோன்றிய காலத்தில் இருந்தே 'எழுத்து' என்ற ஒரு மிகப் பயங்கரமான அணு சக்தியையும் அது தாங்கியே வந்திருக்கிறது. அந்த அணு சக்தியை பயன்படுத்தத் தெரிந்தவர்களை எழுத்தை நன்றாக ஆளுமை செய்கிறவர்கள் என்ற அர்த்தத்தில் எழுத்தாளர்கள் என காலகாலமாய் அழைத்தும், பெருமைப்படுத்தியும் வருகிறோம். தங்கள் எழுத்துக் கலையை சமூகத்திற்கும் பயன்படும் வண்ணம் மிகச் சரியான முறையில் பயன்படுத்துகிறவர்களை வரலாறு புரட்சியாளர்களாய், தத்துவஞானிகளாய் பதிவு செய்து கட்டிக்காத்துக் கொள்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு என்னதான் தெளிந்த அறிவும், கடல் போன்ற தேடலும் இருந்தாலும் மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணம் எப்போதுமே ஏற்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் மக்கள் எட்டி எட்டி உதைத்த போதும் வலிந்து போய் மக்களிடம், மக்களுக்காகப் பேசும்-எழுதும் பாங்கு உடைய சிந்தனா-எழுத்தாளர்கள் அவர்கள். அங்கீகாரத்தைப் பற்றியோ, விருதுகளைப் பற்றியோ அக்கறையில்லாதவர்கள். அண்ணா, வால்டேர், மார்க்ஸ், பெரியார், டாக்கின்ஸ் போன்றோர் அதற்கு உதாரணங்கள்.

இன்னொரு வகை எழுத்தாளர்கள் உண்டு. ஏகப்பட்ட புத்தகங்களைப் படித்துவிட்டு, அழகியலோடு மொழியைக் கையாலுகிறவர்கள். கற்பனா சக்தியின் உதவியோடு நாவல்களையும், சிறுகதைகளையும் படைத்துவிட்டாலே, அது கொஞ்சம் மொழி அழகியலோடு இருந்துவிட்டாலே தங்களைத் தாங்களே பொதுச்சமூகத்தில் இருந்து ஒரு அடுக்கு மேலான அறிவாளிகளாக எண்ணிக்கொள்ளும் எழுத்தாளர் வகையறாக்கள். சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமென்றால் 'எழுத்தாளர்' ஜெயமோகன் போன்றவர்கள்.

ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை மட்டுமல்லாது மறைவர்த்தங்களையும் ஆளுகிறவர்கள். தெளிந்த நீரோடையின் இடுக்கிலே அரளி விதையையும் கரைத்து ஓடவிடுவதில் வல்லவர்கள். தமிழ்ச்சமூகத்தின் அறிவின்மையைச் சாடும் அவரது சுயதம்பட்டக் கட்டுரையிலே கூட திராவிட இயக்கத்திற்கெதிரான, அண்ணாவிற்கு எதிரான விசயங்களை வலிந்து திணித்து ஓடவிட்டிருக்கிறார். ஆனால் "நான் யார் தெரியுமா? நான் மும்பைல என்ன பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?" என்ற தொனியில் அவர் எழுதியிருக்கும் 'பில்டப்' புலம்பலில் வழக்கத்துக்கு மாறாக அவரது மறைவர்த்தங்கள் விஷமாக வெளிப்படையாக தெரிந்துவிட்டதுதான் சோகம்!

முதலில் ஜெயமோகன் தன்னை ஏன் அறிவாளி என நினைத்துக் கொள்கிறார்? பல புத்தகங்களை படித்திருக்கிறாராம். நிறைய எழுதுகிறாராம். சரி! எழுதுகிறவன் எல்லாம் அறிவாளியாகிவிட முடியுமா?  முதலில் அறிவு என்பதற்கான அர்த்தத்தையே அறியாத ஒருவரை, தமிழ்ச்சமூகத்தை விடுங்கள், எத்தியோப்பியாவிலோ, சோமாலியாவிலோ, உகாண்டாவிலோ கூட எப்படி அறிவாளியாகக் கருதுவார்கள்? எழுத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக அழகாக அடுக்கினாலே எழுத்தாளனாகிவிடலாம். எழுத்தை அடுக்குவதென்பது கலை. அந்தக் கலையை கையாளத்தெரிந்தவனை எல்லாம் எப்படி அறிவாளியாக ஏற்றுக்கொள்வது? பொதுமக்கள் 'பீ' எனச் சொல்லும் விசயத்தை எழுத்தாளன் மலம் என்பான். பொதுமக்கள் 'பூ' என்றால் எழுத்தாளன் சுற்றி சுற்றி அழகிய மலர் என்பான். இதில் வார்த்தைகள் தான் வேறுபடுமேயொழிய பொருள் ஒன்றுதானே. ஒரு விசயத்தின் பொருளை அழகியலோடு எழுதமுடிந்துவிட்டாலே, சொல்லமுடிந்துவிட்டாலே அதெப்படி அறிவாளித்தனம் ஆகும்? இன்னும் சுருக்கமாய்ச் சொல்லப்போனால் மொழி அழகியல் தெரிந்தவனுக்கு சமூகத்தின் அறிவியலும், அரற்றலும் கூட தெரிந்திருக்கும் எனச் சொன்னால், முடிவு செய்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.    
உண்மையான அறிவாளிகளுக்கு எப்போதுமே சுயதம்பட்டக் கட்டுரைகளோ, பில்டப் வசனங்களோ தேவைப்படுவதேயில்லை. அதெல்லாம் கூட வேண்டாம். இந்த உலகத்தில் நீங்கள் அறிவாளி என நினைக்கும் எவனாவது ஒருவன் இதுவரை "நான் அறிவாளி!" எனச் சொல்லியிருக்கிறானா? போலித் தனமான அறிவாளித்தனத்தை தன் மேல் திணித்துக்கொள்ள விரும்பும் சினிமா ஹீரோக்களுக்கே 'நான்' என்ற அடைமொழி தேவைப்படுகிறது.

சரி. ஜெயமோகன் இலக்கியத்தைத் தவிர வேறு எதாவது உருப்படியாக சமூகத்திற்கு தேவையான விசயங்களைச் செய்திருக்கிறாரா என்றால் தமிழகத்தை எப்போதும் இந்திய ஆட்சியாளர்களிடம் அடகு வைக்கும் இந்துத்துவ-காந்திய வழிமுறைகளையே மீண்டும் மீண்டும்  சுற்றி சுற்றி மாற்றி மாற்றி எதோ மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தபோகும் வாழ்வியல் தத்துவங்கள் போல எழுதியிருக்கிறாரேயொழிய, விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி உண்மையான அக்கறையோடு எதாவது எழுதியிருக்கிறாரா? பிறகெப்படி தமிழர்கள் அவரை அடையாளம் காணுவார்கள்? ஒரு எழுத்தாளன் தன்னை தன் சமூகத்தினின்று உயர்த்தி வைத்துக்கொண்டு எழுதும்போது அவன் எழுத்துக்கள் வானத்தில் உயரத்தில் பறக்குமேயொழிய மக்களைப் போய்ச் சேராது.

இறுதியாக, இலக்கியவாதிகளில் சிலர் அறிவாளிகளாக இருக்கலாம். அவர்களை சமூகம் என்றுமே தன்னிச்சையாக தத்தெடுத்து அரவணைத்துக் கொள்கிறது. தங்களில் ஒருவராக பாதுகாத்துக் கொள்கிறது. ஆனால் சிலர் மக்களில் இருந்து எட்டி இருக்கும் 'வெற்று' இலக்கியவாதிகளாக இருக்கிறார்கள். அன்றாடப் பிரச்சினைகளிலும், வாழ்வாதாரத்திற்கான தேடல்களிலும் உழன்று கொண்டிருக்கும் பெரும்பான்மை தமிழ்ச்சமூகம் மொழி அழகியலை மட்டுமே அறிவெனக் கொள்ளும் இலக்கியவாதிகளுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் தராது. அவர்களுக்கு அதிஅவசர முக்கியத்துவம் கொடுத்து அரவணைக்கவோ, போற்றவோ புகழவோ, தூக்கிக் கொஞ்சவோ வாழ்க்கைகாக ஓடிக்கொண்டேயிருக்கும் அச்சமூகத்திற்கு நேரமிருப்பதில்லை, தேவையும் இருப்பதில்லை. அச்சமூகம் தனக்காகப் பேசுகிறவனைத் தான் அறிவாளி என ஏற்குமேயொழிய, போற்றுமேயொழிய, தனக்குத் தானே பேசுகிறவனையும், மொழி அழகியலில் நிதர்சனத்தை மறப்பவனையும் அல்ல!


Friday, May 24, 2013

ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்!வரலாற்றின் வழிநெடுகே, எப்போதோ நடந்த ஒரு சம்பவம் எப்போதோ நடக்கப் போகும் மற்றொரு சம்பவத்தை பாதித்தோ, வடிவமைத்தோ வரலாற்றின் போக்கையே மாற்றிவிடுவதை நாம் பார்க்கிறோம். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள், இந்திய விடுதலைப் போர், ஜெர்மனியில் ஹிட்லரால் கையாளப்பட்ட யூத அழிப்பு என இவை அனைத்துமே வேறு எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்களின் எதிரிவினைகள் தான். சமகாலத்தில் சொல்லவேண்டுமானால் அமெரிக்காவில் நிகழ்ந்த ரெட்டை கோபுர இடிப்பு சம்பவத்தைச் சொல்லலாம். சி.ஐ.ஏ தன் சுயநலத்திற்காக பின்லாடனையும் அவர் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வளர்த்தெடுக்கும் போது, ஒருநாள் அமெரிக்காவிற்கும் அவரால் ஆபத்து வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் வந்தது! இந்த வரலாறுகளையெல்லாம் தெரிந்தவர்கள் இன்று தனக்கு ஆபத்து என்றவுடன் அமெரிக்கா தானே வளர்த்த பின்லாடனை பயங்கரவாதி என அறிவித்துக் கொன்றபோது ஆச்சரியத்தில் கொஞ்சமாய் சிரிக்கவும் செய்கிறார்கள்! வரலாறு தெரிந்தவர்களுக்கு நிகழ்கால சம்பவங்களின் 'ட்விஸ்ட்'கள் எப்போதுமே ஒரு ஆச்சரியம் தான். இதுபோல் நமக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட சம்பவம் ஒன்றும் உண்டு. ஆனால் அதை வரலாற்று ரீதியாக, அறிவு ரீதியாக அணுகாமல் உணர்வு ரீதியாக மட்டுமே அணுகி உண்மைகளை தொலைத்துக்கொண்டெ இருக்கிறோம்.

2009 மே மாதம் ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்பிற்கான வேர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அதாவது 1987 வரை பின்னோக்கி நீண்டிருந்தாலும், அவை பிரம்மாண்டமாக வளரத் துவங்கியது மே21, 1991ல் இருந்துதான். சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமானால்  ஈழப்போராட்டத்தின் இறுதித் தோல்வி 2009ல் இலங்கையில் ஏற்படவில்லை, 1991ல் ஶ்ரீபெரும்புதூரிலேயே தொடங்கிவிட்டது!

ராஜீவ் கொலைக்கு வெளிப்படையான காரணமாகச் சொல்லப்படும் 'அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கான விடுதலைப்புலிகளின் பழிவாங்கும் நடவடிக்கை' என்பதை அவ்வளவு சுலபமாக நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்திய துணைக் கண்டத்தில் 'ஈழம்' என்ற தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் இருக்கும் ஒரு இயக்கம், அத்துணைக்கண்டத்தின் 'நாட்டாமை'யான இந்தியாவின் பிரதமரை வெறும் பழி உணர்ச்சியில் கொன்றிருக்குமா? ஒருவேளை கொன்றால் அது வருங்காலத்தில் அந்த இயக்கத்திற்கு அரசியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காதா? அது கூட தெரியாத அப்பாவிகளாக அவர்கள் இருந்திருந்தால் ஒரு நாட்டின் (இலங்கை) ராணுவத்தை எதிர்த்து இவ்வளவு பெரிய தனி இயக்க ராணுவத்தை கட்டமைத்திருக்க முடியுமா அல்லது தனி ராஜாங்கமே நடத்தியிருக்கத்தான் முடியுமா?

ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்பிரமணியஸ்வாமி, சந்திராசாமி ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தபோதும் அவர்களை சி.பி.ஐ விசாரிக்காமல் விட்டதும், ஊடகங்கள் அதைப்பற்றி இன்றளவும் பேசாமல் இருப்பதும், சோனியாவே அதைப்பற்றி மவுனம் காப்பதும் கண்டிப்பாக ராஜீவ் கொலையில் அவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்பதை மட்டுமல்லாமல் இது ஒரு சர்வதேச 'high profile' கொலை என்பதையும் தெளிவாகக்  காட்டுகிறது. (இது பற்றி திருச்சி வேலுசாமி தன் தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற ராஜீவ் கொலை பற்றிய நூலில் தெளிவாக ஆதாரங்களுடன் விளக்குகிறார்.) ஆனால், அதனால் மட்டும் சிலர் சொல்வதைப் போல் விடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் கொலையில் முற்றிலும் தொடர்பு இல்லை, அது முழுக்க முழுக்க சுப்பிரமணியசுவாமி போன்றோரின் செயல்தான் என்பதையும் நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் ராஜீவ் கொலையைப் பற்றி நேரடியாக பிரபாகரனிடம் கேள்வி எழுப்பட்டபோது, அது ஒரு துன்பியல் சம்பவம் என்றும் அதைப் பற்றி தாம் பேச விரும்பவில்லையென்றும் சுருக்கமாக முடித்துக்கொண்டாரேயொழிய குற்றச்சாட்டை மறுக்கவில்லை. ஆக இப்படி குழப்பங்களால் முடியப்பட்டிருக்கும் ராஜீவ் கொலையின் மர்மங்களையொட்டிய செய்திகளையும், உண்மைகளையும் வைத்து அலசினால் சில சதிக்கோட்பாடுகளை (conspiracy theory) நம்மால் யூகத்தின் அடிப்படையில் வரையறுக்க முடிகிறது

இந்திராகாந்தி அரசு புலிகளுக்கு ஆயுதமளித்ததும் பயிற்சி அளித்ததும் நம் அனைவருக்குமே தெரியும். இந்திராகாந்தி இயல்பாகவே இந்தியாவை இந்தியத் துணைக்கண்டத்தின் 'பெரியண்ணனாக' ஆக்குவதில் ஈடுபாடு கொண்டவர். அதுமட்டுமல்லாது சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு 'ரவுடி' என்ற முகம் வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஆக தனக்கு அடங்காத இலங்கையை அச்சுறுத்தவும், சீனாவை மிரட்டவும் அமெரிக்கா பின்லாடனை வளர்த்ததைப் போல விடுதலைப் புலிகளை வளர்க்கிறார். அவர் எதோ ஈழத்தின் மேல் உள்ள பாசத்தில் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என நினைப்பது அபத்தமாகவே படுகிறது. ஏனெனில் எந்த பெரிய நாடும் கொள்கை கோட்பாடுகளில் சம்பந்தமேயில்லாத ஒரு போராளி இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கிறதென்றால் ஒருநாள் தன் நோக்கம் முடிந்தபின் அவ்வியக்கத்தை 'பலியிடப்' போகிறது என்றே அர்த்தம். அப்படி இந்திராவால் வளர்க்கப்பட்ட பிரபாகரனுக்கு, பின் எம்.ஜி.ஆரின் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கிறது. இங்கே ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தீவிர ஈழ ஆதரவாளர் எனச் சொல்வதும் கூட மிகைப்படுத்தப்பட்ட விசயமாகவே தெரிகிறது. ஏனெனில் மத்திய அரசு புலிகள் ஆதரவு நிலையில் இருந்தவரை எம்.ஜி.ஆர் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததையும், இந்திராவின் மரணத்திற்குப் பின் ராஜீவின் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு அவர் தாவிவிட்டதையும் நாம் அவரது ஒரு பேட்டியின் மூலம் அறியலாம். 1987ல் எம்.ஜி.ஆரை அமெரிக்காவின் பால்டிமோர் மருத்துவமனைவில் பேட்டி கண்ட திரு.பார்த்தசாரதி இந்தியன் எக்ஸ்பிரஸ்சில், புலிகள் இந்தியாவின் பொறுமையை சோதித்துவிட்டதாகவும், தமிழகத்தில் எஞ்சியுள்ள புலிகளை விரட்ட தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், சிறி சபாரத்தினம் கொல்லப்பட்டபோது புலிகளை வன்மையாகக் கண்டித்த கருணாநிதி இப்போது புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் எம்.ஜி.ஆர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள புலி அலுவலகங்கள் சோதனையிடப்பட்டதும் அவர் ஆட்சியில் தான் என்றும் எழுதியிருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக அமைதிப்படையின் அட்டூழியங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தபோது ராஜீவ் காந்தியோடு இணைந்து ஒரு பொதுக்கூட்டத்திலும் பங்கு கொண்டார். இதன்மூலம் அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு புலிகள் பதிலடி கொடுத்தபின் ராஜீவின் புலி எதிர்ப்போடு எம்.ஜி.ஆர் ஒத்துப்போகிறார் என்பதும் தேசியவாதியாகவே நடந்துகொள்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்த நிலைப்பாட்டில் நின்று தொடர்ந்து செயல்படும் அளவிற்கு அவர் நீண்டநாட்கள் உயிர்வாழவில்லை என்பது ஒருவகையில் அவரது புகழுக்கு சாதகம்தான்!!

சுப்பிரமணியசுவாமி மற்றும் சந்திராசாமி ஆகியோர் சி.ஐ.ஏவின் இந்திய ஏஜண்ட்கள் என்ற குற்றச்சாட்டு பலகாலமாக உண்டு. எப்போதோ ஒருகாலத்தில் கூட்டணி தயவில் சட்ட அமைச்சராக இருந்த, மக்கள் செல்வாக்கு என்பதே முற்றிலும் இல்லாத ஒருவர் இன்றளவும் இந்திய அரசியல் உலகில் பதவி எதும் இல்லாவிடினும் செல்வாக்காக வலம் வருவதையும், எந்த நாட்டுப் பிரதமரையும், ஜனாதிபதியையும் (ஒபாமா உட்பட) நினைத்த நேரத்தில் சந்திக்க முடிவதையும், சர்வதேச அரசியல் ப்ரோக்கராக செயல்படுவதையும் பார்க்கும்போது குற்றச்சாட்டு உண்மைதான் என்ற முடிவுக்கே வரமுடிகிறது.

மேலுள்ள செய்திகளையெல்லாம் வைத்து கணக்குப்போட்டால் சில விசயங்களை அடுக்கி சில தியரிகளை முன்வைக்கலாம். முதலில் இந்தியா புலிகளை (போராளிக்குழுக்களை) ஆதரிக்கிறது, ஆயுதங்கள் கொடுக்கிறது. இந்தியாவுடன் இலங்கை அரசு இணக்கமான பின் அல்லது ராஜீவ் இலங்கையுடன் இணக்கமான பின் போராளிகளுக்கு கொடுத்த ஆதரவில் இருந்து பின் வாங்குகிறது. போராளிகளை ஒடுக்குவதற்கான வேலைகளில் இறங்குகிறது.  புலிகளை எவ்வகையில் எல்லாம் provoke செய்து கெட்டவர்களாகக் காட்டமுடியுமோ அதையெல்லாம் செய்கிறது இந்திய அரசு. உதாரணத்திற்கு அசோகா ஓட்டலில் பிரபாகரனை தங்க வைத்து மிரட்டியது போன்ற பல விசயங்களைச் சொல்லலாம். (அதே நேரம் இந்திய அரசு புலி ஆதரவாக இருந்தபோது, புலிகளின் சக போராளியான டெலோ தலைவர் சிறி சபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டபோது அதற்கு இந்திய அரசிடமிருந்து பெரிய எதிர்ப்பு இல்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்)

ஒருகட்டத்தில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தால் ஈழம் சாத்தியமே இல்லை என்ற உண்மை புரியத்துவங்கும் போது ராஜீவ் கொலை செய்யப்படுகிறார். இந்த இடத்தில் இது ஒரு தனி இயக்கச் சதியாக இல்லாமல் பின்னணியில் சர்வதேச சதிகள் இருப்பதற்காக வாய்ப்புகள் கண்டிப்பாக தெரிகிறது. உதாரணத்திற்கு "பிரதமர் என்றெல்லாம் யோசிக்காதீர்கள். நீங்கள் செய்துவிடுங்கள், பின் நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் கொள்கைகளுக்கும் வருங்காலங்களில் உறுதுணையாக இருக்கிறோம்" என 'யாரோ' உறுதியான வாக்குறுதி கொடுக்காமல் புலிகள் அந்த கொலையைச் செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த வாக்குறுதி அநேகமாக இந்தியாவைவிட பெரிய, சக்திவாய்ந்த நாடு எதோ ஒன்றில் இருந்துதான் வந்திருக்கவேண்டும். சு.சாமி, சந்திராசாமி ஆகியோரின் தலையீட்டைப் பார்க்கும் போது சி.ஐ.ஏவின் சார்பாக புலிகளை அணுகிய ப்ரோக்கர்களாக அவர்கள் இருந்திருக்கலாம். சுப்பிரமணியசாமியின் தலையீடு, சி.பி.ஐயின் மவுனம், பிரபாகரன் ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டை மறுக்காதது போன்ற விசயங்களையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது ராஜீவ் மீதான புலிகளின் கோபத்தையும், சந்தர்ப்பத்தையும் மிகச் சரியாக உபயோகித்து ராஜீவை கொலை செய்ய புலிகளை 'சிலர்' பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற முடிவிற்கே நம்மால் வரமுடிகிறது.

ஒருவேளை இந்த யூகங்கள் எல்லாம் உண்மையென்றாலும், இதை ஏன் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட புலிகள் வெளியிடவில்லை என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஆனால் ராஜீவ் கொலைக்குப் பின்பு ஏற்பட்ட படுபயங்கர அவப்பெயரால் யாரையுமே பகைத்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழலிலேயே அவர்கள்  இருந்தார்கள்! அதுமட்டுமல்லாமல் தாங்கள் ஒரு கொலையாளியாக பயன்படுத்தப்பட்டதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளமுடியாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

எது எப்படியோ! இறுதியாக புலிகள் மட்டுமே ராஜீவ் கொலையைச் செய்யவில்லை என்பதும், பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்கின்ற உண்மையையும் நம்மால் ஓரளவிற்கு அனுமானிக்க முடிகிறது! ஆனால் யாரால், எதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்ற விஷயம் மட்டுமே முற்றிலும் விளங்காத மர்மமாக இருக்கிறது. இந்தியாவிலேயே இருக்கும் சுப்பிரமணிசாமியை விசாரித்தால் உண்மை தெரியலாம். ஆனால் இந்திய சி.பி.ஐ அந்த அளவிற்கு எல்லாம் நல்ல, சுயமான அமைப்பு கிடையாது என்பதும் நமக்குத் தெரியும்! ஆக என்ன நடந்தது என்ற உண்மையை சுப்பிரமணியசாமியும், சந்திராசாமியும் அவர்களாக சொல்ல மாட்டார்கள். மேலும் சொல்லக்கூடிய ஆண்டன் பாலசிங்கமும், பிரபாகரனுன் உயிரோடு இல்லை! இந்நிலையில் ராஜீவ் கொலைப் பின்னணி கடைசிவரையில் இப்படி மர்மமாகவே இருக்கப்போகிறதா இல்லை விதை போல எப்போதாவது வெளியில் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எல்லா கொலைகளிலும் கொலையுண்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ராஜீவ் விசயத்தில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட புலி இயக்கமும் அவர்களின் நியாயமான போராட்டமும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்டதும், 'மிகப்பெரிய வழக்குகளில் உண்மையான குற்றவாளி கிடைக்கவில்லையா?? கவலையில்லை! கையில் கிடைத்தவனை தூக்கில் போட்டு கொதிப்படைந்திருக்கும் பொதுமக்களை சாந்தப்படுத்து' என்ற இந்திய நீதிமன்றங்களின் வழக்கப்படி தூக்கு தண்டனை பெற்று கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது சொல்லொனாத் துயரமும் உலகத் தமிழர்களை மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்குவதாய் இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் யூகத்திற்கு இடமின்றி உறுதியாகச் சொல்லலாம். ராஜீவ் கொலையால் சோனியாவை விட, ப்ரியங்காவை விட, ராகுலை விட, ஒட்டுமொத்த துன்பத்தை அனுபவித்தவர்கள், அனுபவித்துக் கொண்டிருப்பவர்ர்கள் தமிழர்களே!! தமிழினத்திற்கு துன்பத்தையும், துயரத்தையும் அள்ளி வழங்கிய பெரும் 'துன்பியல்' சம்பவமாகவே அக்கொலையை வரலாறு பதிவு செய்யும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது!!! அச்செயலை செய்துமுடித்தபின் பிரபாகரனுக்கும் கூட அது தெரிந்தே இருக்கலாம்!!!

Tuesday, May 21, 2013

யாசின் மாலிக்கும் அரசும்! சீமான் இனி என்ன செய்யப் போகிறார்?


எவ்வளவு போராட்டம் செய்துவிட்டோம்! எவ்வளவு வாதங்கள் செய்துவிட்டோம்! அட.. அதிமுகவும் திமுகவும் கூட ஒன்றுசேர்ந்து நாடாளுமன்றத்தில் எத்தனை முறை குரல் கொடுத்துவிட்டார்கள்! ஆனாலும் ஈழப்பிரச்சினையில் இந்தியா ஏன் சிங்களர்களுக்கு இவ்வளவு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் இருக்கிறார்கள் என்பதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உண்டு.

நேரு காலத்தில் இருந்தே இந்திய அரசுக்கு தமிழகம் என்றால் வேண்டாத பிள்ளைதான். "டேய் இத நீ படிச்சே ஆகனும்" என வாத்தியார் கொடுத்த தேவையில்லாத புத்தகத்தை "நான் ஏன் சார் இதப் படிக்கனும்? எனக்கு தேவைனா நான் படிச்சுக்குறேன். நீங்க சொல்றதுக்காக என்னால கட்டாயமா படிக்க முடியாது!" என முகத்தைத் திருப்பிக்கொண்ட ஒரே ஒரு சுயமரியாதையுள்ள மாணவன் தமிழகம் தான்! அதுமட்டுமல்லாமல் விடாப்பிடியாக போராடி அந்தப் புத்தகத்தை வாத்தியாரின் கையாலேயே கிடப்பில் போடவைத்ததும் தமிழகம் தான்! இன்றுவரை வடநாட்டினர் புலம்பித்தள்ளுவது இதைத்தான். (ஆனால் இதன்மூலம், ஆங்கிலத்தை இந்தியாவில் தக்கவைத்து, பன்னாட்டு கம்பனிகளை உள்ளே வரவழைத்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய நன்மையை நாம் செய்திருக்கிறோம் என்பது அந்த 'ஈரவெங்காயங்களுக்கு' புரியவே புரியாது.) ஆக இயல்பாகவே தமிழகம் என்பது இந்தியாவுக்கு எப்போதுமே மாற்றாந்தாய் பிள்ளைதான்.

இரண்டாவதாக வட இந்தியர்களுக்கு சிங்களர்களுடன் இருக்கும் இனத் தொடர்பு! சு.சாமி சொன்னதைப் போல சிங்களர்கள் ஆரிய வம்சத்தினர். வட இந்தியர்களுடன் 'DNA' தொடர்பு கொண்ட நெருக்கமானவர்கள். நம் எஸ்.எம்.கிருஷ்ணா 'வரலாற்று தொடர்பு, வரலாற்று தொடர்பு' என அடிக்கடி நாடாளுமன்றத்தில் சொல்வது இதைத்தான். ஆக அவர்களின் சகோதரர்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எப்போதுமே எடுக்க மாட்டார்கள். காங்கிரஸ் கூட வருங்காலத்தில் எடுத்தாலும் எடுக்கும் ஆனால் தீவிர இந்துத்துவ கட்சியான பி.ஜே.பி எடுக்கவே எடுக்காது என தெளிவாய் நம்பலாம்! எதிர்க்கட்சியாய் இருக்கும்போதும் ஒரு பேச்சுக்காக கூட தனி ஈழத்தை பிஜேபி ஆதரிக்காததே இதற்கு சாட்சி!

அடுத்து இந்திய இறையாண்மை! சிங்கள இறையாண்மையின் மேல் இந்தியாவிற்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்கு காரணம் இந்திய இறையாண்மையின் மீதான அக்கறைதான்! ஈழத்தமிழர்கள் தமிழகத் தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமான கலாச்சார, பாரம்பரிய தொடர்புடையவர்கள். அது மட்டுமல்லாமல் ஒரே இனம்! வடஇந்தியர்களுடன் மொழி, இன ரீதியாக எந்த தொடர்புமே இல்லாத இந்தியத் தமிழனுக்கு ஈழத்தமிழனுடன் இன, மொழி, கலாச்சார ரீதியாக மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  இப்படியான சூழ்நிலையில் தமிழர்களுக்கென்று தனி நாடு, அதுவும் தமிழகத்திற்கு அருகிலேயே அமையுமாயின், அது வருங்காலத்திலும் இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும். அதனால் தான் பங்களாதேஷை பாகிஸ்தானில் இருந்து 'பன்'னைப் பிடிங்கிக் கொடுப்பதைப் போல் கொடுத்த இந்தியா சிங்கள இறையாண்மையின் மீது மட்டும் இவ்வளவு அக்கறையாய் இருக்கிறது!  இது மிக முக்கியமான காரணம் என்பதோடு, இந்தக் காரணம் எந்தக் காலத்திலுமே காலாவதியாகாத காரணமும் கூட என்பதால் இந்தியா தனி ஈழத்துக்கு ஆதரவளிக்கும் என்பதற்கு எக்காலத்திலும் இடமே இல்லை.

இந்தியாவில் பிரிவினை சத்தமே இல்லாத இடமென்றால் அது தென்னிந்தியாதான்! குறிப்பாக தமிழகத் தமிழர்கள் தனித் தமிழ் நாடென்றால் 'கக்கே பெக்கே' எனச் சிரிப்பார்கள். அந்த அளவிலேயே அவர்களுக்கு அதன்மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் காஷ்மீரிலும், கிழக்கு இந்திய மாகாணங்களிலும் வாழும் மக்கள், இந்திய அரசின், இந்திய ராணுவத்தின் கோரப்பிடியில் இருந்து எப்போதடா தப்பிப்போம் என விடுதலை நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சிறப்பு தகுதி, பாதுகாப்பு சட்டம் என்ற பெயர்களில் சொந்த குடிமக்களையே விலங்குகள் போல் நடத்த ஏராளமான வாய்ப்புகளை இந்திய அரசு ராணுவத்துக்கு வழங்கியுள்ளது. அடக்குமுறைகளுக்கு என்றுமே 'unlimited validity' கிடையாது என்ற இயற்கை நியதியின் படி இந்த மக்கள் விடுதலை பெறப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த விடுதலையை நோக்கமாகக் கொண்ட ஒருவர் தான் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் பங்கெடுக்க அழைக்கப்பட்ட காஷ்மீரின் யாசின் மாலிக்!

காஷ்மீர் பிரிவினை தேவையா தேவையில்லையா, யாசின் மாலிக் நல்லவரா கெட்டவரா, யாசின் மாலிக்கிற்கும் ஈழத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதெல்லாம் தனி விவாதத்திற்குரிய தனி விஷயங்கள். அதுமட்டுமல்லாது காஷ்மீர் பிரிவினைவாதிகளிடையே இரண்டு கோஷ்டிகள் உள்ளன. அதில் ஒன்று யாசின் மாலிக்குடையது. மற்றொரு கோஷ்டி இவர்மேல் சில குற்றச்சாட்டுகளை வைத்தாலும் அது நமக்கு இப்போதைக்கு தேவையில்லாத விசயம். இவரைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். 2007ல் இவர் ஆரம்பித்த 'சஃபார்-ஈ-அசாதி', அதாவது 'விடுதலையை நோக்கிய பயணம்' காஷ்மீர் மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. காஷ்மீரின் 4000க்கும் மேற்பட்ட ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் இவர் பயணப்பட்டு மக்களைச் சந்தித்த்துப் பேசிய பின் காஷ்மீர் மக்களின் ராணுவத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. ஆக மேலே சொன்னதைப் போல நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விசயம் யாசின் மாலிக் ஒரு பிரிவினைவாதி என்பதை மட்டுமே! இப்படியொரு பிரிவினைவாதியைத் தான் தமிழக எல்லைக்குள் வரவழைத்து கூட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது!

ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பிரபாகரன் படத்த வச்சிக்க, தனி ஈழம்னு பேசிக்க, ராஜபக்சேவை திட்டிக்க, என சகல உரிமைகளையும் தமிழக ஈழ அரசியல்வாதிகளுக்கு அள்ளி வழங்கிய ஜெ இன்று அலறியடித்து கூட்டத்திற்கு தடை போடக் காரணம் பிரபாகரன் மீதான வெறுப்பு என்பதை விட யாசின் மாலிக் மீதான பயம்!!!!  பிரபாகரன் இருக்கும்வரை பிரபாகரனின் அழிவிற்கும், பிரபாகரனின் கொள்கைக்கும் என்னவெல்லாம் அரசியல் நகர்வுகள் தேவையோ அதையெல்லாம் செவ்வனே செய்தார் ஜெயலலிதா. புலிகளுக்கு தடை வாங்கிக்கொடுத்ததில் இருந்து இந்தியாவெங்கும் பரவியிருக்கும் 'புலிகள் என்றால் தீவிரவாதிகள்' என்ற முத்திரையை அடி ஆழம் வரை பதித்ததில் ஜெவுக்கு முக்கியப் பங்கு உண்டு. பிரபாகரனின் இறப்பிற்கு பின்பு, ஈழத்துக்காக போராட யாருமே இல்லாத நிலை வந்தபின்பு, தன் நோக்கங்கள் எல்லாம் நிறைவேறிய பின்பு இப்போது ஈழ ஆதரவு நிலை எடுத்திருக்கிறார்! அதாவது 'முடிந்துபோன விசயத்திற்கு' ஆதரவளிப்பதால் பேருக்கு பேரும் கிடைக்கிறது, அதே நேரத்தில் தன் ஈழ-எதிர்ப்புக்கொள்கைக்கும் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை என்பதால்! ஆனால் யாசின் மாலிக் அப்படியல்ல! அவர் உயிரோடு இருக்கும் 'லைவ்' பிரச்சினை! டெல்லி அரசியல்வாதிகளுக்கு பிரிவினை என்றாலே வயிற்றைக் கலக்கும்!  அந்த வயிற்றுப் பிரச்சினையை உண்டு செய்யும் யாசின் மாலிக் போன்றவர்கள் தமிழக எல்லைக்குள் வந்தார்கள் என்றால் ஜெவுக்கும் பிரச்சினை! அதனால் இப்போது பூனைக்குட்டி வெளிப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் யாசின் மாலிக்கால் ஈழத்துக்கு நன்மை உண்டா எனக் கேட்டால் கண்டிப்பாக நேரடியான நன்மை கிடையாது! ஆனாலும் தொடர்ந்து தமிழர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருந்தால், அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தினால் 'எதையும் தாங்கும் மிகவும் நல்லவர்களான' அவர்களும் பிரிவினை பேசத்தொடங்குவார்கள் என்ற அச்சத்தை மத்திய அரசுக்கு யாசின் மாலிக்கின் திடீர் தமிழகத் தொடர்பு ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! ஏற்கனவே தலையிலும், இடது பக்கத்திலும் பிரிவினை பக்கவாதத்தால் அவதிப்படும் இந்தியா, அந்த வாதம் தமிழகத்திற்கும் பரவ அனுமதிக்காது! தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக செவிசாய்க்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்றாலும் அதை உறுதியாகவும் சொல்லமுடியாது. தமிழகம் இந்திய அரசின் வெறுப்பு லிஸ்டில் இன்னும் கெட்டியாகச் சேர்க்கப்படவும் கொஞ்சமே கொஞ்சமாய் வாய்ப்புள்ளது! 80:20 ரிஸ்க் தான் என்றாலும் யாசின் மாலிக் ஈழத்துக்கு ஆதரவு அளித்திருப்பது இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த வகையில் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்திற்கு யாசின் மாலிக்கை அழைத்தது சீமானின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காய்நகர்த்தல் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு அவரை கண்டிப்பாக பாராட்டித்தான் ஆகவேண்டும்.

அதே நேரத்தில் சீமான் தனது இந்த அரசியலுக்கு ஜெவின் அதிரடி எதிர்வினைகைகளை எதிர்பார்க்கவில்லை. கூட்டத் தடை, படங்கள் அகற்றம், அடுத்தடுத்த வழக்குகள் என சரவெடியாய் பிரச்சினைகளைக் கொடுத்திருக்கும் ஜெவை இதுவரை அவர் கடுமையாக எதிர்த்ததாகவும் தெரியவில்லை. போலீஸ் கைதுக்கு பயந்து பாதியிலேயே பேச்சை முடித்து மண்டபத்தின் பின்வழியாக தப்பியிருக்கிறார். தெரிந்தோ தெரியாமலோ செஸ் விளையாட்டில் சீமான் முதல்முறையாக ஒரு முக்கியமான காயை நகர்த்தியிருக்கிறார். அந்த நகர்த்தலால் நன்மை விளையுமா, தீமை விளையுமா என்பதை எல்லாம் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் அது இந்திய இறையாண்மைக்கு எதிரான முக்கியமான காய்நகர்த்தல். அதில் இருந்து பிரளாமல், சமரசம் ஆகாமல், பயப்படாமல் தனது ஆட்டத்தில் முன்னேறப் போகிறாரா அல்லது 'பேக்' அடித்து சரணடையப் போகிறாரா என்பதற்கான விடை அடுத்தடுத்த நாட்களில் வரப்போகும் சீமானின் அறிக்கைகளும், பேட்டிகளும், நடவடிக்கைகளும் நமக்கு தெரிவித்துவிடும்! காத்திருப்போம்!            

Monday, May 20, 2013

மாணவர் போராட்ட அரசியல்!. (ஈழமுரசு கட்டுரை)
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் முக்கியமான விசயங்களை தீர்மானிப்பது மக்களின் மனநிலை. மக்களுக்குப் பிடிக்காத சட்டங்களையோ, கொள்கைகளையோ அவர்களுக்குப் பிடிக்காத அரசு செயல்படுத்தும்போது மக்களால் அந்த அரசை திருப்பிப் பெறவோ, ஆட்சியைப் பிடிங்கவோ முடியாதெனினும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஜனநாயகம் வழிசெய்துதான் வைத்திருக்கிறது. எந்த அளவிற்கு வலுவாக காட்டுகிறார்களோ ஆட்சியாளர்களின் தலையில் அந்த அளவிற்கு பதற்றம் ஏறும்! அதைவிட முக்கியம் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு கட்சி சாராமல் இருக்கவேண்டும் என்பது! பெரும்பாலும் குடும்பம், குழந்தைகள் என சராசரி வாழ்வில் 'செட்டில்' ஆகிவிட்ட சாமானியர்களுக்கு இந்த போராட்ட குணம் என்பது கடைசி அடுக்கில் இருக்கும். இவர்களால் பெரிய எதிர்ப்பையெல்லாம் காட்டிவிட முடியாது. மிஞ்சிப்போனால் புலம்புவார்கள், முகநூலில் பொறுமித்தீர்ப்பார்கள். பின் வாழ்க்கையைப் பார்க்க போய்விடுவார்கள். ஆனால் மாணவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு உணர்ச்சியும், கோபமும் முதல் அடுக்கில் இருக்கும். 1960களின் நிலை இது! உதாரணத்திற்கு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்லலாம். ஒரே ஒரு மாநிலத்தின் மாணவ சமுதாயம் விடாமல் போராடியதற்காக ஒரு மத்திய அரசு தன் கொள்கையையே மாற்றிக் கொண்டது. இதுபோன்ற ஒரு வெற்றி, இதுபோன்ற ஒரு புரட்சி ஏன் அதற்குப் பிறகு ஏற்படவில்லை?

சகலமும் சந்தைமயம் ஆக்கப்பட்டு மாணவர்களின் வாழ்வென்பது குதிரைப் பந்தயம் ஆகிவிட்டதால் போராட்டம், புரட்சி என ஒருநிமிடம் தாமதித்து ஓடினாலும் பல மைல்கள் பின்னுக்குத் தள்ளப்படும் இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். ஒருபக்கம் வீடு, உறவினர்கள் என சுற்றத்தாரின் அழுத்தம். மறுபக்கம் சினிமா, கிரிக்கெட் என மாணவர்களை நாட்டின் உண்மையான பிரச்சினைகளின் பக்கம் திரும்ப விடாமல் விடா-போதையில் வைத்திருக்கும் போதை மருந்துகள். இதெல்லாம் கூட பரவாயில்லை என்று தோன்றுமளவிற்கு உண்மையான செய்திகளை வெளியிடாமல் வெறும் கருத்துக்களை மட்டுமே வெளியிட்டு மாணவர்களை ரோபோட்டுகள் போல சிந்திக்க விடாத இயந்திரங்களாய் ஆக்கும் இந்திய ஊடகங்கள் ஒருபக்கம். "எதையடா அரசியல் ஆக்கலாம்? எதாவது சந்தர்ப்பத்தில் நாமும் 'ரவுடி' ஆகிட மாட்டோமா?" என பிணங்களைக் கூட விட்டுவைக்காமல் அரசியல் ஆக்கும் அரசியல்வாதிகள் ஒருபக்கம். இப்படி நாலாபுறமும் சுற்றிச் சுற்றி அடித்தால் பின் எப்படிதான் மாணவர்களுக்கு போராட தைரியமும், துணிவும் வரும்? ஆனால் இதையெல்லாம் மீறியும் தமிழகத்தில் சமீபத்தில் மாணவர்களுக்குத் துணிவும், தைரியமும் வந்ததும் அது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியதும், பின் அந்த போராட்டத்தின் முடிவு என்ன ஆனது என்பதையும் பார்ப்போம்.

லயோலா மாணவர்கள் சிலர் ஆரம்பித்து வைத்த சிறிய பொறி தமிழகம் எங்கும் மாணவர் போராட்டமாக பரவியது. 2009ல் இருந்தே ஈழம் தொடர்பான ஏராளமான போராட்டங்களை மக்கள் பார்த்துவிட்டாலும் மாணவர்களின் இந்த போராட்டம் இவ்வளவு பெரிய அலையை ஏற்படுத்தியதற்கு காரணம், அப்போராட்டத்தில் கலக்காத அரசியல் தன்மை! முழுக்க முழுக்க கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு, ஈழத்தை மட்டுமே முதன்மைப் பிரச்சினையாக தமிழகத்தில் பேசும் அரசியல்வாதிகளைக் கூட மாணவர்கள் புறக்கணித்ததுதான் அவர்களின் போராட்டத்தின் மீது வெகுஜன மக்களை நம்பிக்கைக் கொள்ள வைத்தது என்றால் மிகையாகாது. உண்ணாநோன்பை ஆரம்பித்த லயோலா கல்லூரி மாணவர்கள் அரசியல் வாதிகளின் சுயநலத்திற்கு தங்களை பயன்படுத்திவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தது ஒரு சூழ்நிலையில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராக மாணவர் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து அவர்களை சந்திக்கொண்டிருந்த போது சுப.வீ, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் திருமாவளவன் ஆகியோரும் அங்கே சென்றார்கள். அப்போது அங்கிருந்த சில நாம் தமிழர் கட்சிக்காரர்கள் அம்மூவருக்கும் எதிராக "திமுகவினர் வெளியேற வேண்டும்" என கோசங்கள் எழுப்ப, லயோலா மாணவர்களோ குழப்பம் விளைவித்த நாம் தமிழர் கட்சிக்காரர்களை "இதை அரசியல் ஆக்காதீர்கள்" எனக் கூறி வெளியேற்றியதும் நடந்தது. இப்படி எந்த சூழ்நிலையிலும் யாரையும் பகைக்காமல், சுமூகமாக ஒரு போராட்டத்தை நடத்தியதை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். மாணவர்கள் போராட்டத்தில் கவனமாக இருக்க, வெளியே "நீ பெருசா நான் பெருசா" என்ற போட்டி புதிய இயக்கங்களுக்கும் எழத் துவங்கியிருந்தன. இந்த போட்டியில் பிரதான பங்கு வகித்த இரண்டு இயக்கங்கள் நாம் தமிழர் கட்சியும், மே17 இயக்கமும்!

"நாங்கள் தான் மைக் கொடுத்தோம், நாங்கள் தான் ஸ்பீக்கர் கொடுத்தோம்" என்ற தொனியில் இவர்கள் இணையத்தில் போட்ட சண்டை மாணவர் போராட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் வகையில் இணையத்தை நாறடித்துக் கொண்டிருந்தது. வைகோ போன்றோர் தங்களால் தான் மாணவர் போராட்டமே துளிர்த்தது என்ற ரீதியில் பேட்டிமேல் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் மாணவர்களின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள், கட்சி பேதமின்றி அவர்களின் போராட்டம் குறித்த தகவல்களை பகிர்வதும், வெளியிடுவதுமாக உலகின் மூலைமுடுக்கிற்கெல்லாம் தகவல்கள் செல்லும் வண்ணம் பார்த்துக் கொண்டார்கள். சென்னையில் ஆரம்பித்தப் போராட்டம் வெகு விரையில் தமிழம் முழுவதற்கும் பரவியதில் இணையத்திற்கும், அதை வெகுசரியாக பயன்படுத்திக் கொண்ட வெகுஜன மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

மேலும் மிக முக்கியமான ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். கடைசியாக ஈழத்துக்கு ஆதரவான ஒரு அலை தமிழகத்தில் வீசி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது. 1983ஜூலை கலவரத்தின் போது துடித்தெழுந்த தமிழக வெகுஜன மக்கள் பின் ராஜீவ் கொலையின் போது அப்படியே தலைகீழாய் மாறி ராஜீ கொலைக்கு புலிகளுடன் திமுகவும் காரணம் என்ற பிரச்சாரத்தை நம்பி திமுகவை வரலாறு காணாத படுதோல்வி அடையச் செய்தது நினைவிருக்கலாம். அத்தோடு ஈழ ஆதரவு என்பது வெகுஜன மக்களின் மனங்களில் குழி தோண்டி புதைக்கப்பட்டது அதன் பின் ஈழம் என்பது தமிழக மக்களுக்கு ஒரு செய்தி மட்டுமே.

இதை ஏன் இவ்வளவு ஆணித்தரமாக சொல்லமுடிகிறதென்றால் ஜெவின் புலி எதிர்ப்பும், இலங்கை அரசுக்கு ஆதரவான அவரது பகிரங்கமான நிலைப்பாடுகளும் உலகப் புகழ் பெற்றது. தன் ஆட்சிக்காலங்களில் எல்லாம் புலிகள் எதிர்ப்பிற்கான அரசியலை நகர்வுகளை செய்தபடியே இருந்தார். புலிகளுக்கு இந்தியாவில் தடை வாங்கிக்கொடுத்ததில் இருந்து பிரபாகரனின் உறவினர்களின் விசாக்களை 'ப்ளாக் லிஸ்ட்' செய்தது வரை பகிரங்கமாகவே செய்தார். ஆனால் இதனாலெல்லாம் அவரின் வாக்கு சதவிகிதம் கொஞ்சம் கூட குறையவில்லை. தன் அரசியல்வாழ்க்கையில் பெரும்பான்மைப்பகுதியை ஈழத்துக்கு ஆதரவாக பேசியே கழிக்கும் வைகோ கூட புலிகளுக்கு எதிரான நகர்வுகளை ஜெ முழுவேகத்தில் செய்துகொண்டிருந்த போதெல்லாம் ஜெ கூட்டணியில் இருந்தார்!! இருந்தார் என்பதை விட அமைதியாக இருந்தார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விசயம். தங்களின் ஈழ ஆதரவால் தமிழக மக்கள் தங்களை பயங்கரமாக தண்டித்ததும் கனவில் துரத்தியது, திமுக தன் தீவிர ஈழ அரசியலை மாற்றிக்கொண்டதற்கு மிகமுக்கிய காரணம். ஆக இப்படி நீர்த்துப்போயிருந்த தமிழக வெகுஜன மக்களின் ஈழ உணர்வை மீண்டும் எழுப்பியதில் மாணவர் போராட்டத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

2009ல் முத்துக்குமார் மரணத்தையொட்டி எழுந்த ஒரு சிறிய அலையை கருணாநிதி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு அடக்கினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இப்போது ஆட்சியில் இருக்கும் ஜெவும் அதையேதான் செய்தார். ஆனால் போராட்டம் தொடர்ந்தது! ஏன் கருணாநிதி ஆட்சியின் போது மட்டும் படுக்கையை சுருட்டிக்கொண்டு கிளம்பினார்கள் என்றால் இப்போது இருக்கும் அளவிற்கு அப்போது மாணவர்களிடையே உணர்வும், துணிவும் இல்லை என்பதே உண்மை.

இப்படியாக அரசுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்த மாணவர் போராட்டம் முடியாமல் நீண்டுகொண்டே இருந்தது. தமிழகத்தில் வளர்ந்து வரும் ஈழ ஆதரவுக்குப் பணிந்து வேறு வழியே இன்றி திமுகவும் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறிவிட, இக்கட்டான சூழ்நிலையில் தவித்தது ஜெ அரசு. மாணவர் போராட்டத்தையும் ஓயச் செய்யவேண்டும், அதே சமயத்தில் ஈழ ஆதரவாளராகவும் காட்டிக் கொள்ள வேன்டும் என்ற சூழ்நிலையில் அதிரடியாய் ஒரு தந்திரத்தைக் கையாண்டு தன் வேலையை கச்சிதமாக முடித்தது ஜெ அரசு! அதுதான் இலங்கை அரசுக்கு எதிராக ஜெ நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம்!

இதை ஏன் தந்திரம் எனச் சொல்லவேண்டிருக்கிறது என்றால், காங்கிரஸில் இருந்து திமுக வெளியேறும் முன் காங்கிரஸ் அரசிற்கு "பாராளுமன்றத்தில் இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவித்து தீர்மானம் இயற்றவேண்டும்" என்று ஒரு விதிமுறை விதித்தது. அதன் சார்பாக ஜெ விடுத்திருந்த அறிக்கையில், "பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் எந்த நன்மையும் ஏற்படாது. திமுக நாடகம் ஆடுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார். பின் திமுகவின் கட்டுப்பாடுகளை காங்கிரஸ் ஏற்காததால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இந்த தொடர் சம்பவங்கள் நடந்த ஏழே நாட்களில் தான் சட்டசபையில் ஜெவின் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் இயற்றப்பட்டு, "மாணவர்கள் படிக்க வேண்டும். ஈழப்பிரச்சினையை தமிழக அரசு பார்த்துக்கொள்ளும்" என்ற தொனியில் அறிக்கையும் வெளியிட்டார்! பாராளுமன்ற தீர்மானத்தை விட சட்டசபை தீர்மானம் பெரிதா என்பது ஜெயலலிதாவுக்கு வெளிச்சம்!

எப்படியோ ஜெவின் சட்டசபை தீர்மானத்திற்கு பல தலைவர்களும் பாராட்டு மழை பொழிய, மாணவர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்று படிக்கச் சென்று விட்டார்கள். இப்படியாக ஒரு பொறியாய் எழுந்து நாட்டுத் தீயாய் பரவிய ஒரு போராட்டத்திற்கு மிக நேர்த்தியான ஒரு முடிவுரையை எழுதி அணைத்தது தமிழக அரசு!

அதற்காக மாணவர் போராட்டத்தை தோல்வி என ஒதுக்கித்தள்ளவும் முடியாது! ஈழத்தை பிழைப்பாக வைத்திருக்கும் சிலரைப் பற்றி மாணவர்கள் தெளிவாகத் தெரிந்து கொன்டது இந்த போராட்டத்தினூடேதான்! அதுமட்டுமல்லாது மேலே சொன்னதைப் போல் தமிழகத்தில் துவண்டு கிடந்த ஈழ உணர்வை வெகுஜன மக்களிடையே மீண்டும் எழுப்பி, இனி எந்த அரசியல் கட்சியும் தமிழகத்தில் ஈழத்துக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்க முடியாது என்ற நிலையை மாணவர் போராட்டம் தமிழகத்தில் உருவாக்கியிருப்பதை மிகப்பெரிய வெற்றியாகவே வரலாறு பதிவு செய்யும்.Related Posts Plugin for WordPress, Blogger...