Saturday, April 27, 2013

ஆண்டசாதி மக்களும் ஒபாமாக்களும்! சில கேள்விகள்.

அண்ணன் காடுவெட்டி குரு சமீபத்தில் நடந்த பாமக மாநாட்டில் தன்  அசத்தலான சொற்பொழிவின் மூலம் நம்மையெல்லாம் கற்காலத்திற்கே கூட்டிச் சென்றதற்காக நாமெல்லாம் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். சாதிகள் பற்றி, காதலைப் பற்றியெல்லாம் அண்ணன் அருமையாக பாடம் எடுத்தார். ஆனால் சாதி உணர்வெல்லாம் இல்லாத முட்டாளான எனக்கு அதில் சில கேள்விகள் எழுந்தது. இதை அண்ணன் சொற்பொழிவாளர் காடுவெட்டி குருவுக்கு மட்டுமான கேள்விகளாக எண்ணாமல் சாதி என்னும் கருத்தியலை ஏற்றிருக்கும் யாருக்குமான கேள்விகளாக கருதிக்கொள்ளவும்.

அண்ணன் தான் விவசாயம் செய்யும் சாதி என்றார். மண்வெட்டி கடப்பாரை எல்லாம் வைத்திருக்கிறாராம். அதை வைத்து உழவும் செய்வாராம், கொலையும் செய்வாராம். விவசாய சாதியைச் சேர்ந்த அண்ணன் எத்தனை ஏக்கரில் தற்சமயம் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் என்ற ஐயம் எனக்கு எழுந்து தொலைத்தது. சரி அதை விடுங்கள். அண்ணனின் தலைவர்களான பெரிய அய்யாவும், சின்ன ஐயாவும் கூட தங்கள் குலத் தொழிலான விவசாயத்தை விட்டுவிட்டு டாக்டருக்குப் படித்தது தவறில்லையா? குலத்தொழிலைச் செய்யாதவர்கள் எப்படி குலத்துக்கு தலைவர்களாக இருக்க முடியும்??  விவசாயம் செய்பவன் எந்த காலத்தில் நாட்டை ஆண்டதாக வரலாறு இருக்கிறது? சத்ரியன் என்றால் போர்வீரன், மன்னன் சரி. எந்த காலத்தில் சத்ரியன் விவசாயம் செய்தான்? பின் எதற்கு விவசாயியான அண்ணன் தன்னை வன்னிய குல சத்ரியன் எனக் கூறிக்கொள்கிறார்? அண்ணனுக்கு எந்த அறிவாளி இந்த முத்தான கருத்துக்களை எல்லாம் எடுத்துக்கொடுத்தது?

அடுத்து "எனக்கு வரலாறு இருக்கு. நான் வந்த வழி எனக்குத் தெரியும். உனக்கு தெரியுமா?" என்றெல்லாம் மற்ற சாதிக்காரர்களைப் பார்த்து அண்ணன் உரக்கக் கேட்டார். ஒரே நாட்டில் வெள்ளையாக சிலரும் கறுப்பாக சிலரும் இருக்கும்போதே தெரியவில்லையா நம் ஊர் மக்கள் எல்லோருமே கலப்பினங்கள் என்பது! நம் குடும்பத்தில் யாரோ ஒருவர் கொஞ்சம் வெள்ளையாய் இருந்தால் கூட நாம் சுத்தமான தமிழர் கிடையாது எனும்போது, 100% racial purity என்பதே மாயை எனும்போது சுத்தமான வன்னியன், சுத்தமான பறையன் சுத்தமான தேவன் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய மாயை. ஒரு குறிப்பிட்ட சாதிக்காரனை 'ஸ்கான்' செய்தால் 'vanniyan found, devan found' என்று ரிசல்ட் வருவது போல அண்ணன் பேசுவது எவ்வளவு பெரிய காமடி??? ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கலவி செய்து கிடக்கும் இந்த சமூகத்தில் 'சுத்தமான ரத்தம்' என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

"நாலாந்தர ஜாதிக்கெல்லாம் பொண்ணக் கொடுக்க முடியுமா? கையக் கொடுத்தோம் பொண்ண கொடுக்க முடியுமா?" போன்ற அருமையான கேள்விகளையெல்லாம் அண்ணன் முன்வைத்தார். பெண் என்றால் எதோ டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருள் என்ற எண்ணத்திலேயே அண்ணன் பேசியதும் அதை அவர் 'குல' பெண்கள் சுயமரியாதையின்றி கேட்டுக்கொண்டிருந்ததும் பார்க்க வருத்தமாக இருந்தது. ஒருத்தன் வீட்டிற்குள் நுழைந்து டிவியை தூக்கிக் கொண்டு போனால் அவனை குறை சொல்லலாம். ஒரு பொண்ணை காதலித்து திருமணம் செய்யக் கூட்டிச் சென்றால் அது இருவர் சேர்ந்து செய்யும் செயல்தானே?? இயற்கையிலே ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் சேராது, இணையக் கூடாது, ஒருசாதி உயர்ந்தது இன்னொன்று தாழ்ந்தது என்றால் காதலே வரக்கூடாதல்லவா?

ராமதாசுக்கு எல்லா அறிவுரையுமே பிராமண சங்கத் தலைவர் தான் கொடுக்கிறார் என்றும் அதன்படியேதான் ராமதாஸ் நடக்கிறார் என்றும் பெருமை பொங்க ஜி.கே.மணி தெரிவித்தார். உயர்சாதிக்காரர்களின் அறிவுரைப்படி தங்களை விட தாழ்த்தப்பட்ட சாதிகளை 'ஏறி' மிதிப்பதும், இழிவாகப் பேசுவதும் ராமதாசுக்கு பெருமையாக இருக்கிறது போலும். ஆனால் என்ன சோகம் என்றால் ஆண்ட சாதியான வந்நியர்கள் தொட்டாலும், நாலாம் தர சாதிகள் தொட்டாலும் இந்துக் கடவுள்களுக்கு தீட்டு ஆகிவிடும் என்றும் பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளுக்கு அர்ச்சனை செய்ய தகுதியானவர்கள் என்றும் பார்ப்பனர்கள் வழக்கு தொடுத்து, வன்னியன், தேவன், பிள்ளை, பறையன் என எல்லா சாதியினரையுமே பார்ப்பனர்கள் 'இரண்டாம் தரமாக' ஆக்கியிருக்கிறார்களே அதைப் பற்றி எதாவது ராமதாசுக்கு அறிவுரை வழங்கியுள்ளாரா பிராமண சங்கத் தலைவர்?? வன்னிய, கவுண்ட, தேவர் சாதிகளை "கடவுளுக்கு தீட்டு ஏற்படுத்தும் சாதி" என்று நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கும் பிராமண சங்கத் தலைவரை எதிர்த்துப் பேசும் சுயமரியாதை ராமதாசுக்கோ, கா.வெ.குருவுக்கோ, பி.டி.குமாருக்கோ, பொங்கலூர் மணிகண்டனுக்கோ இருக்கிறதா??

அவ்வளவு ஏன், "நாங்கள் சிவபெருமானின் சந்ததிகள்" என சூளுரைத்த காடு வெட்டி குருவுக்கு இந்து தர்மத்தின்படி, ஆகமத்தின் படி இந்தியாவில் எந்த சிவபெருமான் சிலையையும் தொடும் தகுதியே இல்லை என்பதும், சிவபெருமானை அவர் தொட்டால் தீட்டு என பிராமணர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதுதான் தெரியுமா??

தங்களுக்கெல்லாம் கீழே ஒரு தலித் என்ற வர்க்கம் இருக்கிறது, நாம் அடிமைப்படுத்த ஒருத்தன் இருந்தால் போதும், நம்மை அடிமையாக்கிவனைப் பற்றி, நம்மை நீதிமன்றத்திலேயே கேவலப்படுத்தியவனைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்று இருப்பதுதான் வீரமா? இப்படி ஒரு கேவலமான சாதிப்பெருமை தேவைதானா??  உனக்கு கீழே 'தலித்'தை அலாட் செய்துவிட்டேன், உன்னை நான் அடிமைப்படுத்துவதை கண்டுகொள்ளாதே என்பதுதானே பார்ப்பனர்கள் உருவாக்கிய வர்ணாசிரம தர்மம்! தங்களுக்குத் தெரியாமலேயே பார்ப்பனர்களின் கையாட்களாக, சாதி அடுக்கை தக்க வைக்க உதவும் அடியாட்களாக ஆதிக்கசாதிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர வேண்டாமா??

ஓபாமாவைத் தெரியும், க்ளிண்டனைத் தெரியும், நான் ஃபோன் பண்ணால் 'பான் கீ முன்' கூட ஃபோனை எடுப்பார் என அளந்துவிடும் நபர்களுக்கு இன்னொன்றும் தெரியவேண்டும். பான் கீ மூன் ஆகட்டும், க்ளிண்டன் ஆகட்டும், ஒபாமா ஆகட்டும் இவர்களில் யாருக்கு ஃபோன் செய்தும், "நான் இந்த சாதி. எங்கள் ஊரில் நாங்கள் எங்கள் சாதிக்குள்தான் பெண் கொடுப்போம், பெண் எடுப்போம். மற்ற சாதிக்காரன் காதலித்தால் பெண் கொடுக்கமாட்டோம்." எனச் சொன்னால் காறித்துப்புவார்கள்.ஆண்ட சாதிதான் ஆளவேண்டும் என பெருமை பேசும் அன்புமணிகளுக்கும்  உலகிலேயே மிகப்பெரிய அதிகாரத்தில் வீற்றிருக்கும் ஒபாமா யார் என்பதும் அவர் எந்த இனத்தவர் என்பதும் தெரியாதா என்ன?  அடிமையாய் அமெரிக்காவுக்குப் போன கறுப்பு ஆப்ரிக்க மக்களும், வெள்ளை அமெரிக்க மக்களும் கூட ஒன்று கூடிவிட்டார்கள்! ஒரே இனமான நமக்கெல்லாம் என்ன கேடு? இன்னமும் சாதித் தொழில், ஆண்ட சாதி, நாலாந்தர சாதி என்றெல்லாம் பேசிக் கொண்டிப்பவர்களிடம் எல்லாம் ஒரே ஒரு கேள்விதான் , மனித இனம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்னும் நீங்கள் மனிதனாக வாழப்பழகவில்லை என்றால் எப்படி??

7 comments:

sivram said...

//உலகிலேயே மிகப்பெரிய அதிகாரத்தில் வீற்றிருக்கும் ஒபாமா யார் என்பதும் அவர் எந்த இனத்தவர் என்பதும் தெரியாதா என்ன? அடிமையாய் அமெரிக்காவுக்குப் போன கறுப்பு ஆப்ரிக்க மக்களும், வெள்ளை அமெரிக்க மக்களும் கூட ஒன்று கூடிவிட்டார்கள்! ஒரே இனமான நமக்கெல்லாம் என்ன கேடு?//
miga arumaiyana varigal.

baran said...

அருமை அண்ணா....
உண்மையிலே இந்த கேள்விகளுக்கெல்லாம் "மருத்துவ விவசாயி ராமதாஸ்" அவர்களிடம் பதில் இருக்காது...
பார்பனன் பார்வையில் அனைவரும் கீழ் சாதி தான் என தெளிவாக குறிப்பிட்ட விதம் அருமை.

Live LK said...

தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

Doha Talkies said...

காடுவெட்டி குருவுக்கு செருப்படி..
அருமையான தேவையான பதிவு தோழர்..

rajah said...

உங்கள் ப்ளாக்கை பார்த்தேன் மிகவும் அறிவுபூர்வமாக ஒரு ஆராய்ச்சி வாழ்த்துக்கள்..தங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன்..

கேள்வி 1.அண்ணனின் தலைவர்களான பெரிய அய்யாவும், சின்ன ஐயாவும் கூட தங்கள் குலத் தொழிலான விவசாயத்தை விட்டுவிட்டு டாக்டருக்குப் படித்தது தவறில்லையா? குலத்தொழிலைச் செய்யாதவர்கள் எப்படி குலத்துக்கு தலைவர்களாக இருக்க முடியும்??

என்ன ஒரு அறிபூர்வமான கேள்வி ,இந்த கேள்வியிலேயே உங்கள் சாதி வெறி தலைவிரித்து ஆடுகிறது நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன் .நீங்கள் இதே கேள்வியை ஒரு வெட்டியானையோ ,இல்லை சக்கிளியனையோ,மற்றும் இதர தாழ்த்தப்பட்ட சாதியினரையோ அல்லது அவர்களுது தலைவர்களை அல்லது பார்த்து கேட்க முடிந்தால் உங்களை நடுநிலைவாதி என்பேன் சாதியின் அடிப்படை தொழிலில் செய்த காலம் போய் அவரவர் அவரவர் விருப்பம் போல தொழில் செய்ய வேண்டும் அப்போது தான் சாதியம் ஒளியும் என்பதை அறிவீர்களா ..?

கேள்வி 2. விவசாயம் செய்பவன் எந்த காலத்தில் நாட்டை ஆண்டதாக வரலாறு இருக்கிறது? சத்ரியன் என்றால் போர்வீரன், மன்னன் சரி. எந்த காலத்தில் சத்ரியன் விவசாயம் செய்தான்?

நம் நாட்டில் மன்னராட்சி முறை அழிந்து எத்துனை நூற்றாண்டு ஆகிறது என்பதை அறிவீர்களா ? ஆங்கிலேயர்களிடம் அடிமையானோம் பின்னர் இந்தியர்களிடம் அடிமையானோம் சரி அத விட்ருங்க நாம மேட்டருக்கு வருவோம.வன்னியர்கள் அரசர்களாகவும் .போர் வீரர்களாகவும் வரலாற்றில் இருந்துள்ளனர்.மன்னர்கள் அடிமையானபோது அவர்களின் படை வீரர்களுக்கு என்ன வேலை வேறு தொழிலை நாடினார்கள் விவசாயம் செய்து பிழைத்தார்கள் அப்படி இன்றைக்கும் விவசாயம் செய்து பிளைகின்றார்கள்.

கேள்வி 3 .அடுத்து "எனக்கு வரலாறு இருக்கு. நான் வந்த வழி எனக்குத் தெரியும். உனக்கு தெரியுமா?" என்றெல்லாம் மற்ற சாதிக்காரர்களைப் பார்த்து அண்ணன் உரக்கக் கேட்டார்.
வரலாறு என்ன அவரா எழுதினார் ? ராமாயணம்,மகாபாரதம் போன்று வன்னியர்களுக்கும் வன்னியர் புராணம் உள்ளது ஒரு பழமை வாய்ந்த கோவிலில் கல்வெட்டு இருக்கிறது..அதையே பேசினார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது காமெடிக தெரியலாம்..இப்போது இது உண்மையா பொய்யா என்ற விவாதத்துக்கு செல்ல வேண்டாம்..
கேள்வி 4.
நாலாந்தர ஜாதிக்கெல்லாம் பொண்ணக் கொடுக்க முடியுமா? கையக் கொடுத்தோம் பொண்ண கொடுக்க முடியுமா?" போன்ற அருமையான கேள்விகளையெல்லாம் அண்ணன் முன்வைத்தார்
தப்பு தான்.என்னமோ வன்னியர்கள் மட்டும் தான் தாழ்ந்த சாதிக்கு பொண்ணு குடுக்க மாடங்கிரார்கள் என்று நீங்கள் நினைகிறீங்களா ? ஒரு பறையன் சக்கிலிக்கு பெண் கொடுபதில்லை ,ஒரு சக்கிலி அருந்ததியர்களுக்கு பெண் கொடுபதில்லை இது எல்லோர்களிடமும் உள்ள குறை இதை நீங்கள் உணர்வீர்களா ?

இதர கேள்விகளுக்கு..
வருணாசிர தர்மம் என்பது சாதியின் அடிபடையில் தொழில் செய்வது தான் அதை நாங்கள் எதிர்க்கிறோம் .தாழ்த்த பட்டவர்கள் அனைவரும் அவர்கள் குலதொழிலையே செய்ய வேண்டும் என்று ராமதாசு சொன்னாரா? இல்லை

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது (தலித்கள் உட்பட)எனது கனவும் தான்

சாதிய கட்டமைப்பில் வளர்ந்த சமூகம் இது..தலித்கள் என்றாலே தீண்டத்தகாதவர்கள் என்ற நிலை மாறி தற்போது தான்..நண்பர்களாக பார்க்கும் மண நிலை உருவாகி உள்ளது காலத்தின் பயணத்தில் இந்த நிலை மாறி நாம் அனைவரும் எதிர்பாக்கும் நிலை வரும்.. குருவும் பல முறை நான் கலப்பு திருமணங்களுக்கு எதிரானவன் இல்லை.காசுக்காவும்,பழிவாங்கும் நோக்கில் பெண்ணின் வாழ்க்கையை சீரளிப்பவர்கலுக்கு எதிராக தான் பேசுகிறேன் என்று சொல்லி விட்டார்

இவர்களுக்கு எந்த மாதிரி பதிலை தர வேண்டுமோ அதை தான் அவர் மாநாட்டில் பேசினார்
http://www.youtube.com/watch?v=p6moEWc53eY

http://www.youtube.com/watch?v=oEoCRVBQz34

காதலுக்கோ ,கலப்பு திருமணத்திற்கோ பாமக என்றும் எதிரானது இல்லை என்று பல
முறை அய்யா கூறி விட்டார் நீங்கள் ஏன் புரியாத மாதிரியே நடிக்கறீங்க ?

rajah said...

உங்களுக்கான பதில் இதோ
http://www.twitlonger.com/show/n_1rk0ph8

SenthilPrasath said...

அருமையான பதிவு.....

Related Posts Plugin for WordPress, Blogger...