Wednesday, March 20, 2013

பரதேசியாக உயிர்த்தெழுந்த பாலா- டான் அசோக்


நந்தா பார்த்தபோது "ஏன் இந்தாளு சூர்யாவைக் கொன்னான்?" எனத் தோன்றியது. பிதாமகன் பார்த்தபோது "ஆஹா" எனத் தோன்றியது. நான் கடவுள் திரைப்படம் வெளிவந்த போது "இந்த சைக்கோவின் படத்துக்கு விமர்சனம் எழுதுவதென்பது கடினமான செயல்" எனத் தோன்றியது. அவன் இவன் பார்த்தபோது பாலா படத்தைப் பார்ப்பதே சைக்கோத்தனமான கொடூரமான செயல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பரதேசியின் ரியாலிட்டி ட்ரெயிலர் என்ற பெயரில் வெளியான அபத்தத்தைப் பார்த்தபோது "கிறு*********" என்று தோன்றியது!! இப்போது பரதேசி!

பரதேசி யார் எனப் பார்க்கும் முன் பாலாவைப் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். பாலாவிற்கென்று ஒரு செட் கதாப்பாத்திர தன்மைகள் உண்டு. சேதுவில் இருந்து பரதேசிக வரை அவரது கதாப்பாத்திரங்களில் பலர் மாறி மாறி நடித்திருக்கிறார்களேயொழிய கதாப்பாத்திர தன்மைகள் ஒன்றுதான். உதாரணமாக பாலாவின் கதாநாயகர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். மகிழ்ச்சியுடன் அனைவரையும் கிண்டல் செய்துகொண்டு, லொடலொட என பேசிக்கொண்டே இருக்கும் ஜாலி கதாநாயகன். இரண்டாவது யாரிடமும் பேசாத 'உர்ர்ர்ரென்'று இருக்கும் சீரியஸ் கதாநாயகன். சேது முதல்பாதியில் விக்ரம், பிதாமகன் சூர்யா, அவன் இவன் ஆர்யா எல்லாம் ஜாலி ரகம். பரதேசி அதர்வா கூட இந்த ரகம் தான். அதேபோல் சேது இரண்டாம் பாதி விக்ரம், நந்தா சூர்யா, நான் கடவுள் ஆர்யா எல்லாம் சீரியஸ் ரகம். கதாநாயகிகளைப் பொறுத்தவரை லூசுத்தனம் நிறைந்த ஆடிக்கொண்டே அலையும் கதாநாயகிகளைப் பார்க்கலாம், இல்லையேல் வாயே பேசாத, எதற்கெடுத்தாலும் வெட்கப்படும் கதாநாயகிகளைப் பார்க்கலாம். நந்தா லைலா, பிதாமகன் லைலா, சேது அபிதா, அவன் இவன் ஜனனி, மதுமிதா, பரதேசி வேதிகா என எப்படிப் பார்த்தாலும் அந்த இரண்டு ரகங்களில் அந்தக் கதாப்பாத்திரங்கள் அடங்கிவிடும்.

பொதுவாக எல்லா பாலா படங்களிலும் காமடி செய்யும் ஒரு வயதான கிழவர் கதாப்பாத்திரமும் இருக்கும், சாமியாராகவோ, குடிகாரராகவோ! வில்லன் கதாப்பாத்திரம் மிகவும் கர்ண கொடுரமாக இருக்கும். படம் முடியும் தருவாயில் யாராவது சாவார்கள் பின் கதாநாயகன் வெறித்தனமாக வில்லனைக் கொல்வான்.

பிதாமகன் வரையில் மக்கள் ரசித்த இந்த பாலாத்தனங்கள் நான் கடவுளில் எரிச்சலையும், அவன் இவனில் வாந்தியையும் வரவழைத்துவிட்டன. காமடி என்றாலும் அதே ஸ்டீரியோடைப் காமடிகள் தான். எங்கெங்கோ அலையும் படம் கடைசியில் ஒரு கர்ணகொடூரமான கொலையில் முடியும். இதுதான் பாலா. இவ்வளவுதான் பாலா என அலுத்துப் போயிருந்தவேளையில், "நான் உயிர்த்தெழுந்திருக்கிறேன்" என பரதேசியைக் கொடுத்திருக்கிறார் பாலா! இப்போது பரதேசிக்கு வருவோம்.

முதல் பாதியில் பாலாவின் வழக்கமான ஸ்டீரியோடைப் ஹீரோ, ஸ்டீரியோடைப் ஹீரோயின், ஸ்டீரியோடைப் காமடி என மெதுவாக நகரும் படம் இரண்டாம் பாதியில் வேகமெடுக்கவில்லையென்றாலும் கவனிக்க வைக்கிறது. அதர்வா வழக்கமான பாலா ஹீரோ. லொடலொட என்கிறார். எல்லோரையும் கிண்டல் செய்கிறார். ஓடுகிறார், தாவுகிறார், மண்டி போட்டு தண்ணி குடிக்கிறார். வேதிகா 'லைலா'வாக நடித்திருக்கிறார். லூசுத்தனமாக பொது இடங்களில் ஆடுகிறார், குதிக்கிறார், ஆண்களை நக்கலடிக்கிறார். கதை நடப்பது 1930களில் என்பதை பாலா மறந்துவிட்டாலும் நமக்கு உறுத்துகிறது!! வேதிகாவின் வெள்ளைத் தோளில் பூசப்பட்டிருக்கும் கருப்பு பெயிண்ட் அவர் கரிக் குவியலில் உருண்டதைப் போன்ற தோற்றத்தைத் தான் தருகிறதேயொழிய திராவிட நிற தோற்றத்தை அல்ல. இதுபோன்ற செயற்கைத் தனங்களால் வேதிகா கதாப்பாத்திரத்தின் மேல் பெரிய ஈர்ப்பு ஒன்றும் ஏற்படவில்லை. வேதிகாவுடன் ஒப்பிடும்போது தன்ஷிகாவின் இயல்பான தோற்றமும், நடிப்பும் அருமை. கவனிக்கவைக்கிறவர்கள் அதர்வாவும், அதர்வாவின் அம்மத்தாவும்.

தேயிலைத் தோட்டத்துக்கு பல மாதங்களாக நடந்தே பயணிக்கும் போது வழியிலேயே குற்றுயிரும் குலையுயிருமாக ஒருவரை விட்டுவிட்டுச் செல்லும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. அதுவும் இடைவேளையில் அந்த நபரின் கை மட்டும் தூரத்தில் இழுத்துச் செல்லப்படும் தன் மனைவியை நோக்கி நீண்டு பின் அடங்கும் போது நமக்கு குலை நடங்குகிறது. இடைவேளைக் காட்சி முடிந்தபின் சில நிமிடங்கள் எழ முடியமால் இருக்கையிலேயே அமர்ந்திருந்தேன்.

பின் தேயிலைத் தோட்டத்தில் பணியாளர்களின் கோரமான வாழ்க்கையை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கும் அதேவேளையில் சில தேவையில்லா 'சேட்டைகளை'த் திணித்து நம்மை திரைக்கதையுடன் ஒன்ற விடாமல் செய்யும் வேலையையும் செவ்வனே செய்திருக்கிறார் பாலா.

ஏற்கனவே அவன் இவன் படத்தில் மாட்டுக்கறி விற்று 'தான் உண்டு தன் வேலையுண்டு' என பிழைப்பு நடத்துபவனை மகா வில்லனாகச் சித்தரித்து இந்து மதம் மீது தனக்கிருக்கும் ஈர்ப்பையும், பற்றையும், வெறியையும் சொல்லியிருந்த பாலா இதிலும் அதைச் செய்திருக்கிறார். கதை நன்றாக நகர்ந்து கொண்டிருக்கும் போதே பணியாளர்களுக்கு மருத்துவம் பார்க்க ஆங்கிலேயப் பெண்ணை மணந்த ஒரு தமிழ் டாக்டர் வருகிறார். மருத்துவத்தை விடுத்து மதமாற்றம் செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டலைகிறார். சதா சர்வ காலமும் அதையே செய்கிறார்கள் அவரும் அவர் மனைவியும். தீடீரென கிறித்துமஸ் நாளில் 'கங்ணம் ஸ்டைல்'லில் குத்தாட்டம் போடுகிறார்கள். அதுவும் இயேசப்பா இயேசப்பா எனப் பாடிக்கொண்டே!!! கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வலிய திணிக்கப்பட்டிருப்பதால் அது நகைச்சுவையாகவும் இல்லாமல். கதைக்கும் உதவாமல் குடிதண்ணீரில் கலக்கப்பட்ட சாணியைப் போல கதையின் தன்மையையும் நோக்கத்தையுமே சீரழிக்கிறது.

அடுத்து வெள்ளைக்காரர்கள் என்றால் மொடாக் குடிகாரர்கள், அவர்களின் மனைவியோடு இணைந்து மற்ற பெண்களைப் புணர்வார்கள் என்ற 'கருத்தெல்லாம்' சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளைக்காரர்களில் கண்டிப்பாக அப்படிப்பட்டவர்கள் இருக்கலாம்தான். அந்த தேயிலை தோட்டத்தை நடத்தும் வெள்ளைக்காரனை மட்டும் அப்படிக் காட்டியிருந்தால் பரவாயில்லை. ஒரு காட்சியில் ஒரு ஒட்டுமொத்த வெள்ளைக்கார சமூகத்தையே குடிகார சாடிஸ்ட்டுகள் போல காட்டுகிறார். அந்தக் காலத்தில் நம்மூர் ஜமீன்களையும், மேட்டுகுடி மக்களையும் விடவா அவர்கள் சாடிஸ்ட்டுகள், பாலியல் வக்கிரர்கள்!!!? வெள்ளைக்காரர்களை இப்படிக் காட்டும் அதே காட்சியில் மகாத்மா காந்தியையும் புகழ்கிறார். வசனம் நாஞ்சில் நாடன் என்றாலும் எனக்கென்னவோ ஜெயமோகனின் எழுத்துக்களை படத்தில் 'பார்ப்பதை'ப் போல் இருந்தது!!!

மற்றபடி பல காட்சிகளில் பாலா பின்னியிருக்கிறார். குறிப்பாக இடைவேளையிலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளிலும்! எல்லாவற்றையும் விட படத்தைத் தூக்கி நிறுத்துவது இயல்புகளை மீறாத க்ளைமாக்ஸ் தான். அதில் மட்டுமே பாலா படு உயரத்தை அடைந்திருக்கிறார். வழக்கான தன் ஹீரோக்களைப் போல அதர்வாவை, "அடடா அகங்கார அரக்கனை" என ஜேசுதாசை பின்ணணியில் பாடவிட்டு காடு, மலை எல்லாம் தாண்டி ஓடி வில்லனை கடித்து, அடித்து கொல்லாமல் இயல்பிலேயே கதையை முடித்தது அழகு. அதனாலேயே இந்தப் படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறதோ என்னவோ!!

வெள்ளை முரளி போல காட்சிதரும் அதர்வா நடிப்பின் மூலம் தன் தந்தைக்கு பெருமை சேர்க்கிறார். இறுதிக்காட்சியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு பின் நிலைமையை உணர்ந்து கதறி அழும் இடத்தில் பட்டையைக் கிளப்புகிறார். மிகப்பெரிய எதிர்காலம் அவருக்கு இருக்கிறது. 'சேது' விக்ரம் என சேதுவுக்குப் பின் விக்ரம் அழைக்கப்பட்டதைப் போல 'பரதேசி' அதர்வா என யாரும் அழைக்காமல் இருந்தால் சரி! :-)

சில இடங்களில் நெஞ்சைக் கவ்வும் படம் சில தேவையில்லாத காட்சிகளால் வீரியமிழக்கிறது. மொத்தத்தில் வலிய திணிக்கப்பட்ட காட்சிகளையும், இயல்புக்கு மீறிய கதாப்பாத்திரத் தன்மைகளையும், தன் ஸ்டீரியோடைப் தனங்களையும் தவிர்த்திருந்தால் தெள்ளத்தெளிவான நீரோட்டம் போல படம் அமைந்திருக்கும். மொத்ததில் அவன் இவனில் காணாமல் போன பாலா, மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறார். அடுத்த படத்தில் பட்டையைக் கிளப்புவார் என எதிர்பார்ப்போம்!

1 comment:

காரிகன் said...

பாலாவிடமிருந்து இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். பாலாவா நிறுத்தப்போகிறார்? ஆனால் கண்டிப்பாக அவரின் அடுத்த படத்திற்கு நீங்கள் படு காட்டமாக விமர்சனம் செய்வீர்கள் என்பது மட்டும் எனக்கு தெரிகிறது. சாக்கடைகள் ஓய்வதில்லை...

Related Posts Plugin for WordPress, Blogger...