Tuesday, March 19, 2013

யார் துரோகிகள்?

தமிழக மாணவர்கள் எல்லாம் ராஜபக்சேவுக்கு எதிராக அணி திரண்டிருக்க நாம் தமிழர், மதிமுக, த.தே.பொ.கட்சி, நெடுமாறன், மே17 எல்லாம் கலைஞருக்கு எதிராக வழக்கம் போல் களமாடிக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி 2009ல் என்ன செய்தார் என பட்டியல் போடுவதிலும், டெசோவை எதிர்ப்பதிலுமே முழுக்கவனத்தையும் செலவழிக்கிறார்கள். நம்முன் வைத்த குற்றச்சாட்டையே மீண்டும் மீண்டும் வைக்கிறார்கள். இந்தக் கட்டுரை அவர்களுக்கானது மட்டுமே! முதலிலேயே சில விசயங்களை நான் தெளிவுபடக் கூறிவிடுகிறேன். இந்தக் கட்டுரையின் நோக்கம் 2009ல் திமுகவின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவது அல்ல. இன்னும் சொல்லப்போனால் 'திமுக மத்திய அரசின் கைக்கூலி' என்ற வாக்கியத்தை உண்மை என எடுத்துக்கொண்டே தொடர்வோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞரை விட்டால் ஜெ, ஜெவை விட்டால் கருணாநிதி. மக்களின் முன்பிருக்கும் இரண்டு தேர்வுகள் இவர்கள்தான். முதலில் நாம் ஒன்றைத் தெளிவாய் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். 2009ல் ஈழத்தில் புலிகள் தோல்வியுற்றது திடீரென ஒரே இரவில் நிகழ்ந்ததல்ல. விடுதலைப் போராளிகளான புலிகள் உலகம் முழுவதும் இந்தியாவால் 'பயங்கரவாதிகள்' என அடையாளப்படுத்தப்பட்டு, செப்11ல் அமெரிக்கா தாக்கப்பட்டதற்குப் பின் உலகமெங்கும் எழுந்த பயங்கரவாதத்திற்கு எதிரான அலையில் ஆதரவின்றி அடித்துச் செல்லப்பட்டவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது, மறுக்கவும் முடியாது. அந்த அலையே அவர்களுக்கு எந்த உலக நாடுகளில் இருந்தும் எந்த ஆதரவும் கிடைக்கவிடாமல் தடுத்தது என்பதையும் நாம் மறுக்க முடியாது. 1980களின் பிற்பகுதியில் தமிழகத்தில் நடந்த ஈழப்போராளி இயக்கங்களுக்கிடையேயான சண்டையை சட்ட ஒழுங்கு சீர்குலைவாகத் திரித்து திமுக ஆட்சியைக் கலைத்ததில் இருந்தே புலிகளை இந்தியாவுக்கெதிரான பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் பணி துவங்கிவிட்டது. அதன் பின்புலத்தில் சுப்பிரமணியசுவாமி, ஜெ, சந்திரசேகர் என்ற கூட்டணி இருந்தது. அதன் புலிகளுக்கு எதிரான தொடர் அறிக்கைகள் மூலம் இந்தியா முழுவதும் ஒரு சீரான எதிர்ப்பை, வெறுப்பை தோற்றுவித்தவர் ஜெ. இந்தியாவில் புலிகள் எதிர்ப்பில் சுப்பிரமணியசுவாமிக்கு, சோவுக்கு, இந்து ராமுக்கு, தினமலருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே பங்கு ஜெவுக்கும் இருக்கிறது. சிலநேரங்களில் அதிகமாகவே இருந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் புலிகள் மீதான தடையில் ஜெவுக்கு மட்டுமே பிரதான பங்கு உண்டு, அதை அவரே பலமுறை பெருமையாகச் சொல்லியிருக்கிறார்.  இதையும் யாராலும் மறுக்க முடியாது.

இப்போது இன்னொரு விசயத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞருக்கு மாற்று லாலு பிரசாத் யாதவோ, எடியூரப்பாவோ, முலாயம் சிங்கோ அல்ல.. ஜெயலலிதா!! ஜெயலலிதா என்றால் சோ, சோ என்றால் சுப்பிரமணியன் ஸ்வாமி, சுப்பிரமணிய ஸ்வாமி என்றால் இந்து ராம், இந்து ராம் என்றால் சந்திரிகா, ரணில் இப்போது ராஜபக்சே. இதுதான் காலம்காலமாக நிலவி வரும் ஈழத்தமிழருக்கெதிரான அதிகார வரிசை (anti ealam tamils hierarchy!). "புலிகளை விட்டுவிடாதீர்கள் என ரணிலிடம் நான் சொன்னேன்", "நளினியைக் காப்பாற்றிய சோனியா பதிபக்தி இல்லாதவர்", "திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகமாகிறது", "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்", போன்ற ஜெவின் 2009 வரையிலான அறிக்கைகளைப் படித்தவர்களுக்கு அது தெரியும். (ஈழ அகதிகளுக்கு கருணாநிதி அரசு தமிழக கல்லூரிகளில் ஒதுக்கியிருந்த சீட்டுகளைக் கூட அரசாணை மூலம் நிறுத்தியவர் ஜெ! மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அரசாணை நீக்கப்பட்டு மீண்டு ஈழ மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது) இப்படியாக இவர்கள் எல்லோரும் அமைத்துக் கொடுத்த பூப்பாதையில் நடைபோட்டு தமிழர்களின் கதை முடித்தது சிங்கள ராணுவம். இலங்கைப் பிரச்சினையில் மட்டுமல்ல, இந்திய-தமிழர் பிரச்சினைகளான மீனவர் சுடப்படுவதில் கூட ஜெவுக்கு அறிவுரையளிப்பவர்களான 'சோ' போன்றோர் எப்படி செயல்பட்டிருக்கிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சம்.

மேலே நாம் சொன்னதைப் போல கருணாநிதி மத்திய அரசின் கைக்கூலியாகவே இருக்கட்டும்!! அவருக்கு மாற்றாக இங்கே, இன்று அவரை குறை சொல்பவர்கள் எல்லாம் மூன்றாவது அணியாகவா களம் இறங்கினார்கள்?  ஜெவுக்கு பின்னால் அல்லவா நின்றார்கள், நிற்கிறார்கள்!! மேலே நாம் பார்த்ததைப் போன்ற அறிக்கைகளின் மூலம் இந்தியாவில் புலிகளுக்கு எதிராக 'diplomatic'காக காய் நகர்த்தியவரை 'ஈழத்தாய்' என்று சொன்னது யார்? ஜெவை ஆதரிக்கலாமா எனப் பதறிக் கேட்டவர்களிடம், "இப்போது காங்கிரசை தோற்கடிப்பதுதான் நோக்கம் என்பதால் ஜெவை ஆதரிக்கிறோம்" என்று சொல்வது நிரந்தர மாற்றத்தை விரும்பாத, அல்லது அதை நோக்கி பயணிக்கத் தெம்பில்லாத கையாளாகாதவனின் பதில் இல்லையா? ஒருமுறை அடுத்தவனுக்கு ஓட்டுக் கேட்டவன் எவனாவது எந்த நாட்டிலாவது தனிப்பெரும் சக்தியாக உருவாகியிருக்கிறானா? 1960களில் காங்கிரசுக்கு மாற்றாக திமுக வேறு எதாவது கட்சியை தற்காலிகமாக முன்னிறுத்தியிருந்தால் கூட இன்று தனிப்பெரும் கட்சியாக வளர்ந்திருக்க முடியுமா?  வரலாற்று அறிவு வேண்டாமா? அல்லது அரசியல் தெளிவுதான் வேண்டாமா?

( இந்த இடத்தில் வைகோ என்ற நேர்மையான நடிகரைப் பற்றிய சிறு செய்தி! ஜெயலலிதா பம்பரமாக சுழன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக களமாடிக்கொண்டிருந்தபோதெல்லாம் நம் தானை தலைவர் வைகோ ஜெவின் கூட்டணிக் குடையில் தான் இளைப்பாறிக் கொண்டிருந்தார். "ஏன் இப்படி விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறீர்கள்?", என ஒரு கேள்வி கேட்க வேண்டுமே!!! ஹ்ம்ஹ்ம்... கேட்கவேயில்லையே! கடைசிவரை சகோதரி சகோதரி சகோதரி என்றல்லவா பாசத்தில் திளைத்துக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளுக்கெதிரான அரசியல் போரை இங்கே ஜெ நடத்திக் கொண்டிருந்தபோது சீட்டுக்காக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருந்த ஒருவர், வாயே திறக்காத ஒருவர், காங்கிரசுடன் அவ்வப்போதாவது உரசல்களை ஏற்படுத்திக்கொண்டு இன்று முற்றிலும் வெளியேறியிருக்கும் திமுகவைப் பார்த்து துரோகி எனச் சொல்லும் தைரியத்தைக் கண்டு நான் மலைக்காத நாளே இல்லை! திமுக துரோகி என்றால் விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பாதை அமைத்துத் தந்த வைகோவை துரோகி நம்பர் ஒன் என்றே சொல்லலாம் அல்லவா? கருணாநிதியாவது புலிகளுடன் நேரடித் தொடர்பில் இல்லை. ஆனால் "தம்பி தம்பி" என தான் உறவாடிய பிரபாகரனை தூக்கிலிடவேண்டும் என சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றிய ஒருவரு கூட்டணியில் இருந்தாரே, இருக்கப் போகிறாரே இவர் எவ்வளவு பெரிய பச்சைத் துரோகி? ஒன்னும் பெறாத எம்.எல்.ஏ சீட்டுக்கே இப்படி என்றால் திமுக போல மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்திருந்தால்????? நினைக்கவே தலை சுற்றுகிறது!! )

சரி தேர்தல் நேரத்தில் தான் ஜெவை ஆதரித்தார்கள். இப்போது கலைஞரையும், ஜெவையும் ஒருசேர புறக்கணிக்கும் புதிய மாற்றத்தை நோக்கி என்ன காய் நகர்த்துகிறார்கள்? ஏற்கனவே வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளின் மூலம் புகழ்பெற்ற ஜெ அரசு, மூவர் தூக்கு விசயம், லயோலா மாணவர் கைது என பலவிசயங்களில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்திவிட்டதே!! பல இடங்களில் மாணவர்களை காவல்துறை அடிக்கும் படங்கள் கூட வெளியாகிறதே!! இன்னும் நாம் தமிழரோ, வைகோவோ, மணியரசனோ, மே17ஓ தமிழக அரசை எதிர்த்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லையே ஏன்?  நாம் ஆதரித்தவர்களையே இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு எதிர்ப்பது என்ற அச்சமா? அல்லது  நமக்கிட்ட பணி திமுகவை திட்டுவது! அதை மட்டும் செய்வோம் என்ற கடமையுணர்ச்சியா?

சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நகைச்சுவையான அறிக்கை ஒன்றை விகடன் இணையதளத்தில் படித்தேன். தஞ்சையில் சிங்கள புத்தபிட்சு தாக்கப்பட்டதற்காக சிலரை தமிழக போலீஸ் அடித்துக் கைது செய்திருக்கிறது!! அதற்கான கண்டனம் தான் தமிழ்தேச பொதுவுடமைக் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.மணியரசனின் அந்த அறிக்கை. ஒரு இடத்தில் கூட தமிழக அரசு என்றோ ஜெயலலிதா என்றோ இல்லை. அறிக்கை முழுவதும் காவல்துறை காவல்துறை காவல்துறை! உலகத்திலேயே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் ஒரு நிறுவனத்தை சி.பி.ஐ போல உச்சநீதிமன்றம் போல சுதந்திரமான ஒரு நிறுவனமாக கற்பனை செய்துகொண்டு கண்டனம் தெரிவித்தது இவராகத் தான் இருப்பார்! ஏற்கனவே லயோலா கல்லூரி மாணவர்கள் கைதிற்கு எதிராக வைகோ காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து அந்த சாதனையைச் செய்திருக்கிறார் தான். ஆனால் அவராவது ஓட்டரசியல்வாதி! மணியரசனுக்கு ஏன் தயக்கம்? ஏன் நடுங்குகிறது? எது தடுக்கிறது? இதே வரிசையில் தான் மே17ம், நாம் தமிழரும்!! 24 மணி நேரத்தில் 23:50 மணி நேரம் டெசோவுக்கு எதிராகவும், 10 நிமிடத்தை ராஜபக்சேவுக்கு எதிராகவும் செலவிடுகிறார்கள் என்பதை யாராலேனும் மறுக்க முடியுமா? டெசோ நமக்கு ஒவ்வாத இயக்கம், அதன் தலைவர் நாடக நடிகர். எதிர்கட்சியாகக் கூட இல்லாத அவர்களை, "சரி போய்த்தொலை" எனப் புறக்கணித்துவிட்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதானே? எதிர்கட்சியாகக் கூட இல்லாத கலைஞரை தோலுரிப்பதுதான் 'இப்போது' இவர்கள் முன் இருக்கும் முக்கியமான பணியா? வேடிக்கையாக இல்லையா?

பல ஆண்டுகளுக்குப் பின்பு சுயம்புவாய் தமிழகத்தில் மாணவர் போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. அரசியல் பின்னணியே இல்லாமல் நடைபெறும் அப்போராட்டத்தை ஜெ தான் பின்னால் நின்று வழி நடத்துகிறார் என விகடன் எழுதியிருக்கிறது! உண்மையான போராளிகளுக்கு சுர்ரென்று உரைக்க வேண்டாமா? மாணவர்களை கொச்சைப்படுத்தி திரித்து எழுதலாமா என விகடனுக்கு கண்டனம் சொல்லியிருக்க வேண்டாமா? மாட்டார்கள்! இவர்கள் தான் காவல்துறைக்கும், கான்ஸ்டபிள்களுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வீரர்களாயிற்றே!!! ஆக சகலவிதங்களிலும் நாம் தமிழர், மே17, மதிமுக, தமிழ்தேசிய பொது உடைமைக் கட்சி போன்ற இயக்கங்கள், கட்சிகள் யாவும் அதிமுகவின் தொங்கு சதைகளாகத்தான் செயல்படுகின்றனவேயொழிய ஒரு நிரந்தர மாற்றுத் திட்டமோ, அதை நோக்கிய காய்நகர்த்தலோ இல்லாத அரைகுறை இயக்கங்கள் என்பது தெள்ளத் தெளிவு. சரி இவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களிலாவது இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சீமான் வெளிப்படையாகவே சொல்கிறார், "வைகோ நான் எல்லாம் ஒன்னா நிற்க முடியாது. ஒன்னா நின்றால் யார் முன்னால் நிற்பது என்ற பிரச்சினை வரும்" என்று. ஆஹா இதுவல்லவோ ஒப்புதல் வாக்குமூலம்!! இவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை எந்த வகையிலும் தமிழக அரசின் மனம் புண்படாமல், தமிழக அரசு எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது போலவே நடிப்பதுதான்!

உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கும் இயக்கங்களோ, இயக்கத் தலைவர்களோ என்ன செய்யவேண்டும்! எனக்குத் தெரிந்து தமிழகத்தின் இருபெறு சக்திகளான கலைஞரையும், ஜெயலலிதாவையும் ஒருங்கே எதிர்ப்பார்கள்.  அவர்களிருவரைப் பற்றிய உண்மைகளை மக்களிடத்தே கொண்டுசேர்த்து ஒரு நிரந்தர மாற்றத்தை, உடனே இல்லையென்றாலும் காலப்போக்கிலாவது கொண்டு வரும் பணிகளை முடுக்கிவிடுவார்கள்.  ஆனால் கலைஞரின் கண்ணில் சுண்ணாம்பும், ஜெவின் கண்ணில் வெண்ணையும் தடவிக்கொண்டிருக்கும் இவர்களின் நடுநிலையை, மாற்று அரசியல் லட்சணத்தை தமிழக அரசியலே தெரியாத செவ்வாய்கிரகவாசி கூட நம்பமாட்டான்!! கருணாநிதி என்பவர் தனி ஒரு மனிதர் அல்ல. அவர் ஒருகோடித் தமிழர்களின் சின்னம். அந்த ஒருகோடி தமிழர்களுக்கும் 'பரம்பரை' எதிரி ஜெயலலிதா. அந்த ஒருகோடி தமிழர்களின் ஆதரவு இல்லாமல் ஒரு புதிய அரசியல் மாற்று என்பது தமிழகத்தில் உருவாகவே முடியாது. அந்த ஒருகோடி தமிழர்களையும் மாற்றத்தை நோக்கி நகர்த்தவேண்டுமென்றால் மாற்றத்தை விரும்புவோர் சுயமரியாதையோடு, சிறை அச்சத்தை தவிர்த்து ஜெவையும் எதிர்க்க வேண்டும்!! எதிர்த்தால் மட்டுமே மாற்றத்தை நோக்கி மெதுவாகவேனும் முன்னேறுவார்கள். கருணாநிதியையும் அழிக்க வேண்டும், ஜெவையும் அழிக்க வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசும் போராளிகளே உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இருவரையும் சமமாகவா எதிர்க்கிறீர்கள்?


இறுதியாக கலைஞரையும், திமுகவையும், திமுக தொண்டர்களையும், திமுகவை விமர்சனங்களோடு ஆதரிப்பவர்களையும் 'துரோகிகள்' எனத் தூற்றும் நாம்தமிழர், மே17, மதிமுக போன்ற இயக்கங்களையும் கட்சிகளையும் கேட்கிறேன், பழைய நண்பர்களை அழிக்க இன-எதிரிகளோடு கூட்டணி போட்டுக் கொக்கரிக்கும் உங்களை என்ன சொல்லி அழைப்பது? இப்போதைக்கு ஜெவை ஆதரியுங்கள் பின்னர் மாற்றம் தருகிறோம் என ஜெவுக்காக ஓட்டுப் பொறுக்கிவிட்டு மாற்றத்தை நோக்கி மட்டுமல்லாமல், போயஸ் வாசலை விட்டே நகராமல் உட்கார்ந்திருக்கிறீர்களே.... உங்களை வர்ணிக்க துரோகி என்ற வார்த்தையெல்லாம் கண்டிப்பாகப் பத்தாது! அதைவிட வீரியமிக்க வார்த்தையை உங்களுக்காகவே இனிமேல் உருவாக்கினால் தான் உண்டு!!!
14 comments:

நம்பள்கி said...

தம்பி! EXCELLENT!

முல்லை மயூரன் said...

Everything is correct , y so many sombu to karuna

Anonymous said...

ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி! நிச்சய , நிதர்சனமான உண்மைகள்!

Gopi said...

Arumaiyaana padhivu Nambarey! En manathil irunthathai neengal sollivitteergal.

Warran Blessing said...

Arumaiyana padivu nanbare

Prakash said...

சொரனை வரவேண்டிய கேள்விகள். எப்படி வரும் அவர்களுக்கு? இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசிவிட்டு சொரனை கெட்டு போயசில் தண்டம் கிடப்பவர்களுக்கு எப்படி வரும்? அவர்களை முச்சந்தியில் வைத்து செருப்பால் அடித்து கேட்கவேண்டும் இலை மலர்ந்தது எங்கடா ஈழம் என்று

Robin said...

நல்ல பதிவு.

கோவை சிபி said...

One of the best article written in web recent time.go ahead.

Barari said...

நமக்கிட்ட பணி திமுகவை திட்டுவது! அதை மட்டும் செய்வோம் என்ற கடமையுணர்ச்சியா//
இது தான் உண்மை.இந்த இணையத்தில் நிறைய (காகித ) புலிகள் கலைஞரை விழுந்து பிராண்டுகிறது.ஆனால் அம்மையாரை பற்றி மூச்சு விட மாட்டார்கள் காரணம் சிறை பயம்.முதுகெலும்பு இல்லாத கோழைகள்.

kkk said...

Good.
DMK wanted India to support US resolution as at this time it is the only country which talks about human rights in ealam war.

Vaiko etc wanted people to vote for Jaya as she was the only popular CM contestant in TN at that time to declare that she will send army to srilanka to create Ealam.

Now with the students agitation in TN , DMK realised the factual situation and understood that it can not cheat people for the time being.So it came out of congress.

But Vaiko, Nedumaran, Seeman etc all of them have not understood the pulse of the situation, and hence they continue to cheat people by claiming Jaya as EALA THAAI.

Arasiyalil ithellam sahajamappa

அன்பு said...

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க..

Mugundan said...

மிகவும் அருமை.

mei said...

அனைவரும் கலைஞரின் கண்ணில் சுண்ணாம்பும் ஜெயலலிதாவின் கண்களிலி வெண்ணெயும் தடவுவதாகச் சொல்கிறீர்கள். நல்லது. ஆனால் நீங்கள் கலைஞரின் கண்ணில் வெண்ணெய் தடவுவதற்கு இந்தப் பாடு பட்டிருக்க வேண்டாம். நீங்கள் எல்லாம் என்ன வேடமிட்டாலும் உங்களின் பழைய கலைஞர் பாசம் விடாது ஆட்டி படைக்கிறது. சீமான், வைகோ மீதெல்லாம் நீங்கள் வைக்கும் விமர்சனம் என்னவோ சரிதான். ஆனால் நீங்கள் மணியரசனையும் இந்தப் பட்டியலில் சேர்க்கும் போதுதான் உங்கள் குட்டு உடைபடுகிறது. அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து படித்தால் ஜெ, கலைஞர் இருவரையும் அவர் சமத் தொலைவில் வைத்து விமர்சிப்பது தெளிவாகத் தெரியும். உங்களின் அதீதக் கலைஞர் பற்று மணியரசனின் ஒரே கட்டுரையைச் சாக்காகக் காட்டி அவரையும் ஜெயலலிதா அபிமானியாக்கும் துணிவை உங்களுக்குத் தருகிறது. நாசுக்காகக் கலைஞருக்கு ஜால்ரா தட்டுவதற்கு உங்களுக்குத் தேர்ச்சி பத்தவில்லை. மன்னிக்கவும். அன்புடன் நலங்கிள்ளி - 9840418421

Vivek Rajagopal said...

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க..நல்ல பதிவு.

Related Posts Plugin for WordPress, Blogger...