Tuesday, March 12, 2013

சந்திரபாபுவும் எம்ஜிஆரும். சில உண்மைகள்
"செத்துட்டா? மன்னிச்சிரலாமா? அப்போ ஹிட்லரையும் மன்னிச்சிரலாமா?" என விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.  இறந்தவர்கள் கடவுள்களாக வணங்கப்படும் நம் சமூக வாழ்க்கையில் அவர்களின் பெருமை பேசி, புகழ் பரப்ப மட்டுமே செய்கிறோமேயொழிய அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் செய்துபோன பிழைகளையும், அப்பிழைகள் நம்மிடையே விட்டுச்சென்ற நிரந்தர வடுக்களையும் நாம் கவனத்தில் கொள்வதில்லை.

நமக்கு நம் சமகால அரசியல்வாதிகளின் குணங்களைப் பற்றி தெரிகிறது. ஆனால் நம் முந்தைய தலைமுறை அரசியல்வாதிகள் மீதான நம்மது எண்ணம் பெரும்பாலும் 'glorify' செய்யப்பட்டதாகவே இருக்கிறது. முத்துராமலிங்கம்(தேவர்), எம்.ஜி.ஆர், ராஜாஜி, பாலகங்காதர் திலகர் என இந்தப் பட்டியலின் நீளம் மிக மிக அதிகம். இந்த தலைவர்களின் ஒருசில முகங்கள் நல்லவைகளாக இருந்திருக்கலாம். ஆனால் இறந்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நல்ல முகங்களை மட்டுமே பிரதானப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்தக் குறிப்பிட்ட பதிவு எம்.ஜி.ஆரின் ஒரு உண்மை முகத்தைப் பற்றி.

சந்திரபாபு எனக்கு மிகவும் பிடித்த நடிகர், பாடகர், இசையமைப்பாளர் (அவர் பாடிய நிறைய பாடல்களுக்கு Ghost music directorஆக இருந்திருக்கிறார்), நடனக் கலைஞர். 46 வயதிலேயே இறந்துவிட்ட அவரைப் பற்றி பேசும்போதெல்லாம் பெரியவர்கள், "பாவம். அவன கொன்னதே எம்.ஜி,ஆர்தான்" எனக் கூறக் கேட்டிருப்போம்.


சந்திரபாபு திரையுலகத்தில் கொடிகட்டிப் பறந்த காலம் அது. மனதில் பட்டதை ஒளிவுமறைவில்லாமல், எந்த மேற்பூச்சும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கர்வமிகு கலைஞன் சந்திரபாபு. சிலர் அவரது இந்த குணத்தை திமிராகவும், சிலர் பைத்தியக்காரத்தனமாகவும் கூட வர்ணித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சந்திரபாபுவின் இயல்பே அப்படித்தான்! ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாத நேரத்தில், சிகரட் வாங்கித்தருகிறேன் என யாரேனும் நண்பர்கள் சொல்லும்போது, "என் ப்ராண்ட் கோல்டு ஃப்ளாக். ஒன்னு பதினைஞ்சு பைசா. முடிஞ்சா அத வாங்கிக்கொடு. இல்லேனா வேணாம்" என்பாராம்! அதனால் சந்திரபாபுவின் திமிர் இடையில் வந்ததல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

எம்.ஜி.ஆரை சின்னவர், வாத்தியார் என சினிமாத்துறை அழைத்துக் கொண்டிருக்க, 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்' என அழைத்த ஒரே ஆள் சந்திரபாபு. அப்போதைய சினிமா பத்திரிக்கைகளில் தான் அளித்த பேட்டிகளிலும், கட்டுரைகளிலும் அப்படியே குறிப்பிட்டிருக்கிறார். "எம்.ஜி.ஆர் அனைவரும் தன்னை மட்டுமே புகழ வேண்டும். எல்லாவற்றிலும் தான் மட்டுமே தெரிய வேண்டும் என நினைப்பவர் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சந்திரபாபு. சிவாஜி நல்ல நடிகர் ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டத்தை அவர் விளக்க வேண்டும், ஜெமினி கணேசனின் பணம் சம்பாதிக்கும் தந்திர குணம் தனக்கு எப்படி உதவியது என்பது குறித்து கூட வெளிப்படையாக எழுதி அவர்களின் கோபத்தை சம்பாதித்திருக்கிறார். ஆனால் வெளிப்படையாக கோபத்தை காட்டாத மனிதர் எம்.ஜி.ஆர். சந்திரபாபு மீது தனக்கு உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்த கோபத்தை, பழியை தீர்த்துக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் ஏற்பட்டது. கர்வம் நிறைந்த வெள்ளந்தியான சந்திரபாபுவே அதற்கும் வழி அமைத்துக் கொடுத்தார்!

விஜி எனப்படும் வி.கோவிந்தராஜூலுவும், தயாரிப்பாளர் சுப்பையாவும் படம் தயாரிப்பதைப் பற்றி சந்திரபாபுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தன் மனதில் இருந்த மாடிவீட்டு ஏழை கதையைச் சொன்னார் சந்திரபாபு. மிகவும் புரட்சிகரமான கருத்துக்களை நகைச்சுவையாய் சொல்லும் கதையாக இருந்ததால் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் அப்போது பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று கண்டிஷன் போட, சந்திரபாபுவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து எம்.ஜி,ஆரைச் சந்திக்கப்போனபோது இருவரும் ஏதேதோ பேசிவிட்டு, இறுதியில் விசயத்திற்கு வந்தார்கள். உடனே ஒப்புக்கொண்ட எம்.ஜி.ஆர் தன் சம்பளமாக ஒரு பெரிய ஆறிலக்கத் தொகையைக் கேட்டார். அதில் பாதியை வெள்ளையாகவும், மீதியை கறுப்பாகவும் கொடுக்கவேண்டும் என்ற கண்டிஷனுடன். (இதை எல்லாம் பிலிமாலயா பத்திரிக்கையில் தன் 'மாடி வீட்டு ஏழை' தொடரில் எழுதியிருக்கிறார் சந்திரபாபு) கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்ட சந்திரபாபு பூஜை தேதியை அறிவிக்கும்போது முன்பணம் 25000ரூபாயைக் கொடுக்கிறேன் என கூறிவிட்டு வந்தார்.

பின் விஜியும், சுப்பையாவும் சந்திரபாபுவையும் ஒரு பங்குதாரராக வற்புறுத்த கதை மேல் கொண்ட நம்பிக்கையில் சம்மதித்து அனைத்து பத்திரங்களிலும் கையெழுத்தும் போட்டார் சந்திரபாபு. தேதி குறிக்கப்பட்டு சந்திரபாபுவின் தோழி சாவித்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கண்ணதாசன் இரண்டு பாடல்களை எழுதி 10000ரூபாய் வாங்கிக் கொண்டார். அடுத்து எம்.ஜி.ஆருக்கு முன்பணம் கொடுக்கவேண்டிய கட்டம்.

இந்த காலகட்டத்தில் சுப்பையாவிடம் நிறைய பணம் புழங்கியதால் ஒரே நேரத்தில் எட்டு படங்களை அறிவித்து யாருமே எதிர்பாரா வண்ணம் மொத்தமாக திவாலானார் சுப்பையா. வி.ஜியோ தலைமறைவே ஆகிவிட்டார்! அதிர்ச்சியடைந்த சந்திரபாபு சாவித்ரியிடம் 25000 ரூபாய் கடன் வாங்கி அதை எம்.ஜி.ஆரின் தோட்டத்தில் அவரைச் சந்தித்துக் கொடுத்தார். இந்த சம்பவத்தை சந்திரபாபு, "25000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, "பாபு சார். அருமையாகச் செய்துவிடுவோம். போய் வேலையைப் பாருங்கள்" எனக்கூறிவிட்டு ஒரு மரத்தடிக்குச் சென்று ரூபாய் நோட்டுக்களை இடுப்பில் செருகிக் கொண்டார். அவ்வளவுதான். அவர் வயிற்றில் என் பணம் சங்கமம் ஆகிவிட்டது" என எழுதியிருப்பதைப் படிக்கும்போது நமக்கே வயிற்றைக் கலக்குகிறது.

பின்தான் எம்.ஜி.ஆரின் பழிவாங்கும் படலம் ஆரம்பித்தது. சந்திரபாபுவோ கடனுக்கு மேல் கடன் வாங்கி படத்தை வளர்க்க, எம்.ஜி.ஆரோ நான்கு நாட்கள் மட்டும் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டு பின் வருவதையே நிறுத்திக்கொண்டார். சந்திரபாபு அலையாய் அலைந்து ஒரு ஸ்டூடியோவின் வாசலில் எம்.ஜி.ஆரைக் கண்டுபிடித்து அவரிடம் பேசப் போயிருக்கிறார். பாபுவைக் கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர் அங்கிருந்த அசோகனை அழைத்து அரைமணி நேரம் ஏதேதோ பேசி பாபுவை கவனிக்காதவர் போலவே அரை மணி நேரத்திற்கும் மேலாக கால்கடுக்க நிற்க வைத்திருக்கிறார். பின் ஒருவழியாக 'கால்ஷீட்டை எல்லாம் அண்ணன் தான் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்" எனக் கூறி சென்றுவிட்டாராம் புரட்சித்தலைவர்மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

பாபு தன் சொத்துக்கள் அனைத்தின் மீதும், புதிதாக 19 கிரவுண்டில் தான் கட்டிவந்த வீட்டின் மீதும் கடன் வாங்கி 3000 அடிவரை படத்தை எடுத்தபின் படம் எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டின்மையால் நின்றிருக்கிறது. ஆசை ஆசையாகக் கட்டிய இந்த வீட்டைப் பற்றி மனோரமாவிடம் அடிக்கடி, "மனோரமா..  கீழேயிருந்து கார் நேரா ரெண்டாவது மாடிக்கு போய் நிக்கிற மாதிரி 19 கிரவுண்டுல ஒரு வீடு கட்டிட்டு இருக்கேன். அப்படி ஒரு வீட்டை எங்கயாவது பாத்தா சொல்லு.. குண்டு வச்சிடுவோம்.." என்று வேடிக்கையாகச் சொல்வாராம். "படப்பிடிப்பு நாள் தள்ளிப்போக தள்ளிப்போக விநியோகஸ்தர்களும், கடன் கொடுத்தவர்களும் என் கழுத்தை நெறிப்பார்கள். தயவுசெய்து எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கொடுங்கள்" என சக்கரபாணியைப் பார்த்துக் கெஞ்சிய சந்திரபாபுவிற்கு அவமரியாதையும், கெட்டவார்த்தைகளில் அர்ச்சனையும் மட்டுமே கிடைத்திருக்கிறது. கோவமடைந்த சந்திரபாபு ஒருகட்டத்தில் பொறுமையிழந்து அங்கிருந்த 'சேர்'ஐ எடுத்து சக்கரபாணியை அடிக்கப் பாய்ந்திருக்கிறார். அன்றோடு அவ்வளவுதான்!! புகழின் உச்சியில், பணத்தின் உச்சியில் இருந்த சந்திரபாபு ஒட்டுமொத்தமாய் சரிந்து விழுந்து செத்ததற்கு முத்தாய்ப்பு இந்நிகழ்வுதான்.

சந்திரபாபு குடி விரும்பி. அதுவும் மேல்நாட்டு ஸ்டைலில் குடிப்பதை மிகவும் விரும்புகிறவர். ஆனால் அவரிடம் இருந்த ஒரு நல்லபழக்கம், படப்பிடிப்பு நாளில் என்ன ஆனாலும் குடிக்க மாட்டார். அப்படிப்பட்ட சந்திரபாபு முழுநேரக் குடிகாரனாக, போதை மருந்துக்கு அடிமையாக மாறியதை இப்படிச் சொல்கிறார், "தினமும் அளவோடு குடிப்பவன் நான். என்றைக்கு 'மாடி வீட்டு ஏழை' படம் எடுக்கத் துணிந்தேனோ அன்றிலிருந்து மொடாக்குடியனாக மாறிவிட்டேன். பின் அதுவும் பத்தாமல் 'பெத்தடின்' எனும் போதைமருந்துக்கும் அடிமையாகிவிட்டேன்".

எம்.ஜி.ஆரின் ஒரு முகம் இப்படியென்றால் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு குட்டிச் சம்பவம் எம்.ஜி.ஆரின் இன்னொரு கோர முகத்தையும் காட்டுவதாய் இருக்கிறது.

மாடி வீட்டு ஏழை நட்டத்திற்குப் பின் சீரழியத்துவங்கிய சந்திரபாபுவின் வாழ்க்கை நாளடைவில் மொத்தமாகக் கெட்டது. போதைப் பழக்கத்தால் உடல்நிலை கெட, பட வாய்ப்புகளும் இல்லை. எப்போதாவது ஏதாவது ஒரு படம் என வாய்ப்பு வந்தது. இரண்டு வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆருடன் 'அடிமைப் பெண்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புக்கொண்டார் சந்திரபாபு.  ஒரு காட்சியில் சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் மேல் ஏறி தப்பிப்பதைப் போல் காட்சி. சந்திரபாபு தவறிவிழப் போக அவரை தாங்கிப் பிடித்து காப்பாற்றியிருக்கிறார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பிற்கு ப்ரேக் விடப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திர்ருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கோ வரவில்லை! "என்ன சாப்பிடலையா?" என கேட்ட எம்.ஜி.ஆர், "இன்னைக்கு என் சாப்பாட்டை சாப்பிடுங்கள்" என 'ஒருமாதிரி'யாகக் கூறிவிட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோவமாக இருக்கிறார் என குழம்பியிருந்த சந்திரபாபுவிடம் "நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவருக்குப் பிடிக்கவில்லை" என ஜெயலலிதா சொல்லி தெளிவித்திருக்கிறார்!!!!!

இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடும்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை "அங்கிள்" என்றுதான் அன்பொழுக கூப்பிடுவாராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆருக்கு அப்படி கோபம்!!
இதைப் படித்த போது இன்று தமிழக முதல்வராக, அமைச்சரவையையே தன் காலடியில் கிடத்தியிருக்கும் ஜெயலலிதாவின் அந்த காலத்தைய வாழ்க்கையை நினைத்தபோது வேதனையும், பரிதாபமுமே ஏற்படுகிறது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு சந்திரபாபு வாழ்ந்தது மிக சொற்பகாலம்தான். சகலகலாவல்லவனாக விளங்கிய சந்திரபாபு நாற்பத்தியாறு வயதிலேயே தன் உடல்வலுவை எல்லாம் இழந்து, ஒரு சொத்தும் இல்லாமல் பிச்சைக்காரராக செத்தார். அவரது கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக்கொண்ட மூன்று நண்பர்கள் தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி. அவரது இறுதிச் சடங்கையும் இவர்களே செய்தனர்.

எம்.ஜி.ஆரைப் பற்றிய சந்திரபாபுவின் அனுபவங்களை அவர் எழுத்திலேயே உணர்ச்சி பொங்க படிக்கும் போது, "what you see is the tip of an iceberg" என மனிதர்களின் குணத்தைப் பற்றி சிக்மண்ட் ஃப்ராய்டு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது! மனிதர்கள் முழுமையான புரிதலுக்கு அப்பாற்ப்பட்டவர்கள். அவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என அவ்வளவு சுலபமாக அட்டவணைப்படுத்திவிட முடியாது! மனிதனின் குணம் ஆழமானது, புதிரானது. அதை முற்றிலும் புரிந்துகொள்ள நிச்சயமாக வேறொரு மனிதனால் முடியாது! ஏன்? சில நேரங்களில் அந்தந்த மனிதனுக்கே கூட அது முடியாத காரியம் தான்!!


(மேலும் தகவல்களுக்கு, 'சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்'-முகில்.  சிக்த் சென்ஸ் பதிப்பகம்')

12 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நிஜம் கசக்கும்.

வருண் said...

எம் ஜி ஆர் கொடுத்துக் கொடுத்து சிவந்தவர் என்பதுபோல் பொய்ப் பிரச்சாரம் செய்துகொண்டு திரியும் "உண்மைத்தமிழன்" போல பொய்யர்களும், இன்றைய கிழ விசிலடிஞ்சான்குஞ்சிகளும் (எ மு சியாரு ரசிகாமணிகளும்) தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்..

எம் ஜி ஆர் நெறையப்பேரு குடியை கெடுத்த இரக்கமே இல்லாத ஒரு ஆளு என்பது.

புரியுமா இந்த மரமண்டைகளுக்கு??

SathyaPriyan said...

பறக்கும் பாவை படத்தில் சரோஜா தேவி மற்றும் காஞ்சனா இருவரும் தான் நாயகிகள். ஜெயலலிதா கிடையாது.

ஒரு வேளை நீங்கள் சொல்லிய சம்பவம் அடிமை பெண் படப்பிடிப்பில் நடந்திருக்கலாம்.

Ashok said...

@சத்ய ப்ரியன்

திருத்தியமைக்கு நன்றி. படத்தின் பெயர் பறக்கும் பாவை அல்ல, அடிமைப் பெண். திருத்திவிட்டேன். மிக்க நன்றி.

shiva said...

MGR married to Janaki .But Janaki was married to someone and had a baby.Still no information about Janakis husband and her child

ஸ்ரீராம். said...

நல்லதொரு பகிர்வு. இந்தப் புத்தகம் சந்திரபாபு எழுதிய அந்த 'மாடி வீட்டு ஏழை' கட்டுரைகளின் தொகுப்பா? சந்திரபாபு எழுதிய அனுபவங்கள் குறித்த வேறு புத்தகங்கள் உண்டா? இந்தப் புத்தகம் என்ன விலை?

Swami said...

அடிவருடிகளுக்கு ஒரு வள்ளல். சுயமரியாதையோடு ஒருவன் இருந்து விட்டால் அவனை அழித்து விட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார். செட்டில் நுழைந்தவுடன் எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செய்யணும், இல்லையென்றால் அடுத்த நாளே கல்தா தான்.திரை குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் அவரை பத்தி நல்லாவே தெரியும்.

Unknown said...

MGR பற்றிய இந்த பதிவை வரவேற்கிறேன். சந்திரபாபு ஒரு சார்பாகவே எழுதி உள்ளார். அவ்வளவு துரோகம் செய்த ஒருவர் படத்தில் மீண்டும் ஏன் ?அவர் நடிக்க வேண்டும். தனக்கு ஆகாத சந்திரபாபுவை MGR ஏன் ?தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும். மேலும், தேங்காய் சீனிவாசன் சாகும் வரை MGR விசுவாசி. அவரிடம் சந்திரபாபு இது போல் MGR பற்றி கூறி இருந்தால், அவர் சந்திரபாபுவுக்கு நெருங்கிய நண்பராக இருந்திருப்பாரா ?

எனது கருத்து -
இவற்றை எல்லாம் விட நிறைய பேர் அதுவும் MGR ரசிகர்கள் மற்றும் கருணாநிதியை வெறுப்பவர்கள், பொதுவாக கூறுவது -"MGR இன்று வரை உயிருடன் இருந்தால், இன்றும் அவர்தான் முதல்வராக தொடர்ந்து இருப்பார்" என்பது,.எனக்கு நகைச்சுவையாகப்படும்.
ஏனென்றால், ஆந்திராவில் NTR முதல்வராக இருக்கும்போது இறந்தாலும் இதையேதான் சொல்லி இருப்பார்கள். ஆனால ,அவர் இறக்காமல், தனது பெயரை புகழை கலங்கபடுத்திக்கொண்டார் . அப்புறம் MGR உலகிலேயே சிவந்த நிறம் கொண்டவர் என்பது. அழகு என்றால் அவர் மட்டும்தான் என்பது இன்னும் பல..........இந்த வார்த்தைகள் அவர் மீது கொஞ்சம் மரியாதை இருந்தாலும், அதை கெடுக்க பயன்படுகிறது. அவர் ரசிகர்கள் இனிமேலாவது புரிந்து நடந்து கொள்ளட்டும்.

Jayadev Das said...

Many will hesitate to touch this kind of topics, truth is bitter, what to do?

Unknown said...

குடிபழக்கத்துக்கு அடிமையான சந்திரபாபு...எல்லா குடிகாரனும் சொல்கிற கதைதான்... காரணம் தேடி சும்மா இருந்த எம் ஜி ஆர் மீது பழி போட நல்ல கற்பனை கதை...சந்திரபாபுவுக்கு சாப்பாடு வராமல் இருந்ததால் தன் சாப்பாட்டை கொடுத்தார் எம்ஜிஆர்....கொடுக்காமல் இருந்தாலும் பழி போடுவீங்க,சாப்பாடு கொடுத்தாலும் பழி போடுறீங்க....உங்க கற்பனை கதையில் நிறைய ஓட்டைகள்,,,பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

pkumar said...

MGR is great

Remington said...

Marcis Remington: இதே சந்திரபாபு கவியரசர் கண்ணதாசனின் சொந்தப் படத்திற்கு கால்ஷீட் கடுக்காய் கொடுத்து சந்திரபாபுவைத் தேடி கண்ணதாசன் வீட்ட்ற்கு வரும்போதெல்லாம், முன் ஹாலில் உட்கார வைத்துவிட்டு பின் வாசல் வழியாய் வெளியே போய் விடுவாராம். கண்ணதாசனும் ஜே.பி.யால் சீரழிந்ததாகச் சொல்வார்கள். உலகத்துல எவனுமே யோக்கியமில்ல, அதனால எம்.ஜியாரப் பிடிக்கலன்னா அதுக்கு ஏதாவது சொல்லாதீங்க

Related Posts Plugin for WordPress, Blogger...