Friday, March 1, 2013

வைகோவின் குடைக்குள் மழை. -ஒரு அழுகாச்சி காவியம்!

இந்திய வரலாறு பல அரசியல்வாதிகளின் வரலாறுகளால் பின்னப்பட்ட ஒன்று. அந்த வரலாறுகளுக்கெல்லாம் வரலாறாக திகழ்பவர் தான் தமிழக மக்களின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரம் புரட்சிப் புயல் வைகோ. மழை பெய்யவில்லையே என வருத்தத்தில் இருக்கும் விவசாயி மூன்றாவது தெரு முனியப்பனிடம் நெப்போலியனின் போர் முறைகளை விளக்குவதாகட்டும், நெசவு தொழில் படுத்துவிட்டதே என கவலையில் இருக்கும் ஆறாவது வீடு ஆறுமுகத்திடம் வால்டைரின் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுப்பதாகட்டும் அவருக்கு நிகர் அவரே. இதுப்போன்ற எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய அவரைப் பற்றிய ஒரு சிறு வரலாற்றுப் பதிவே இக்கட்டுரை.

அது 2004ன் தேர்தல் காலம். அதற்கு சரியாக இரண்டு ஆண்டுளுக்கு முன்பு உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் நடந்தது. ஆம்! தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில், ஏதோ ஒரு சந்துக்குள் நின்றுகொண்டு வழக்கம்போல் யாருக்கும் பாதிப்பில்லாமல் விடுதலைப்புலிகள் வரலாற்றை வைகோ பேசப்போக, அதையே காரணமாக வைத்து, அப்பேச்சு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாகவும் கூறி அவர் மேல் 'பொடா' வழக்கு போட்டது அப்போதைய ஜெ அரசு. அமெரிக்கா சென்று திரும்பிய வைகோ விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்! அப்போது அவர் ஜெ அரசை எதிர்த்து கர்ஜித்த, "ஃபாசிச அரசு ஃபாசிச அரசு" என்ற முழக்கம் எட்டுத்திக்கிலும் எதிரொலித்தது. ஒரிசாவில் மழை பெய்தாலும், எத்தியோப்பியாவில் வெயில் அடித்தாலும் உடனே நடைபயணம் கிளம்பும் அந்த வீறுநடை சிங்கம், கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏறத்தாழ ஒன்றரை வருடம் கடும் பொடாவில் அடைபட்டிருந்தாலும் சிறைக்குள்ளேயே வாக்கிங் சென்றது! என்ன செய்தும் வெளிவர முடியாத அண்ணன், தேர்தலுக்கு சில காலம் முன்பு திமுக, மத்திய பாஜகவின் கடும் முயற்சியால் ஒருவழியாய் வெளிவந்தார். வந்தவேகத்தில் நன்றிப் பெருக்குடன் அழுதபடியே திமுக கூட்டணியில் இணைந்தவர் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கும் வருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் காட்சி மாறியது!

வரலாற்று புருஷர்கள் கூட நிகழ்த்தாத சாதனையை அண்ணன் வைகோ நிகழ்த்தினார். ஆம்! திடீரென ஒரே நாளில் பொடா கிடாவெல்லாம் காற்றில் பறந்தது! தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும், அவமானங்களையும் மறந்த அந்த மக்களுக்காக உழைக்கும் சிங்கம், கட்டக் கடைசி நேரத்தில் ஜெ கூட்டணிக்கு மாறியது! "எவ்வளவு கெஞ்சுனாலும் கதறுனாலும் வெளில மட்டும் விடாதீங்கடா" என வைகோ உள்ளிருந்த போது ஆணையிட்டவரை "அன்புச் சகோதரி அன்புச் சகோதரி" என பாசமழை பொழிந்தது எங்கள் தன்மானச் சிங்கம்! ஒரே நாளில் ஃபாசிச அரசு பாச அரசாக மாறியது! தமிழினமே அண்ணனின் தன்மானத்தைக் கண்டு வியந்தது! 'மூக்கிற்குள்' விரலை வைத்தது! தமிழக மக்களின் இதய சிம்மாசனத்தில் எங்கள் அண்ணன் ஏறி அமர்ந்தது அன்றுதான்! ஆனாலும் 234 தொகுதிகளிலும் சூறாவளியாய்ச் சுழன்றும் தோற்கடிக்கப்பட்டது எங்கள் சிங்கம்.

தேர்தல் முடிந்தாலும் கூட்டணி முடியவில்லை என உறுதியாக நம்பினார் எங்கள் தன்மானத் தலைவர். ஜெ திரும்பிக்கூட பார்க்கவில்லையென்றாலும் பாசம் என்றேனும் கைகூடும் என்ற நம்பிக்கையில் பாசமலர் சிவாஜியைப் போல் ஏங்கித்தவித்தது எங்கள் தங்கம். எப்படி அவமானப்படுத்தினால் என்ன? எவ்வளவு அடித்தால் என்ன? நான் அதிமுக கூட்டணி தான் என்று கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்த அண்ணன் தமிழகத்தின் கொடநாட்டு ஸ்பீக்கராக செயல்பட்டார்.

தன் வாழ்நாளில் தமிழக அரசியலைப் பற்றி சரியாக 34 நொடிகள் மட்டுமே இதுவரை பேசியிருக்கிறார் வைகோ. எஞ்சிய நேரத்தில் எல்லாம் ஈழம் ஈழம் ஈழம் தான்! ஆனால் ஜெ கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஒரே காரணத்திற்காக ஈழப்போர் குறித்து விவாதிக்க திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் வைகோ!! வைகோ என்று ஒருவர் இருக்கிறாரா? அவர் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்? அவர் புறக்கணித்தாரா இல்லையா? என்பதைப் பற்றியெல்லாம் ஜெவுக்கு தெரியாது என்றாலும் கூட்டணி தர்மத்தை அரணாகக் காத்து நின்றார் வைகோ!  "போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்! பிரியாணி என்றால் பீஸ் இருக்கத்தான் செய்யும்" என்ற தொனியில் பேசிய ஜெவுடன் தான் கொண்டிருந்த பாசப்பிணைப்பை எக்காலத்திலும் இழக்கத் தயாராக இல்லை எங்கள் ஈழச்சிங்கம். மாறாக தன் பிறவி லட்சியமான, திமுகவை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். கலைஞர் மூக்குச் சிந்தினால் குற்றம், ஜெ மூக்கையே சிந்தினாலும் குற்றமில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். இப்போதுதான் கதையில் ஒரு 'கேவலமான' டிவிஸ்ட் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாக வைகோ என்ற பிறவி ஈழப்போராளி தன் கூட்டணியில் இருந்தாலும், ரவிசங்கர் என்ற சாமியார் ஈழப்பிரச்சினையைப் பற்றி தன்னிடம் கூறியதாலேயே தனக்கு ஈழம் பற்றி தெரிந்தது என ஓரே இரவில் ஈழ ஆதரவாளராக மாறிய ஜெ அறிவித்தார். தமிழக மக்கள் வைகோ மேல் பரிதாபப்பட, ஆனால் அந்த அவமானத்தைக் கூட 'அவார்டாகவே' எடுத்துக்கொண்டது எங்கள் தங்கம். சிவாஜியைப் போல கண்ணீரும் கம்பலையுமாக, தலையை ஆட்டி ஆட்டி அழுதபடியே ஜெவின் அந்த அறிக்கைக்கு கைதட்டியது!  அவ்வளவு பாசம்!

2011 தேர்தல் வந்தது! ஒருபுறம் வைகோ என்ற சிங்கம். மறுபுறம் தா.பாண்டியன் என்ற சிங்கம். இரண்டு சிங்கங்களும் மாறி மாறி போயஸ் தோட்டத்திற்கு படை எடுத்தன. ஐந்து வருடங்களாய் அறிக்கையும், பேட்டியும் கொடுத்து மாய்ந்தது இந்த நாளுக்காகத்தானே! விடுவார்களா? விக்ரமாதித்தியன் போல விடாமல் முயற்சித்தார்கள். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போயஸ் கதவு திறக்காதா என காத்திருந்தார்கள். ஆனால் கடைசி வரை திறக்கவில்லை என்றாலும் வைகோவுக்கு தெரியாத ஒரு தந்திரம் தா.பாவுக்கு தெரிந்திருந்தது! கூட்டணி பேச்சுவார்த்தை என்றால் ஜெவுடன் தான் பேசவேண்டுமா? நாமே நாலு பேரை கூட்டிக்கொண்டு போய் போயஸ் தோட்ட வாசலில் அமர்ந்து நமக்குள்ளேயே பேசிவிடலாமே என திட்டம் தீட்டியது தா.பா என்ற குள்ளநரி மூளை கொண்ட பொதுஉடைமைச் சிங்கம். இறுதியில் அதேபோல் இரண்டு பேரை தினமும் போயஸுக்கு கூட்டிச் சென்று தங்களுக்குள்ளேயே கூட்டணி பற்றி பேசி இறுதிவரை ஜெவை சந்திக்காமலேயே ஒருவழியாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து வெற்றிவாகை சூடினார். மறுபுறம் வைகோவோ மன உளைச்சலில் உழன்றுகொண்டிருந்தார். 40சீட்டில் ஆரம்பித்து 35 ஆகி, 20ஆச்சும் கொடுங்க அன்பு சகோதரி என கெஞ்சிக் கதறிக்கொண்டிருந்த அந்த தன்மானத் தமிழனுக்கு பேரிடியாய் இறங்கியது அதிமுக தேர்தல் குழு கொண்டுவந்த செய்து! "இரண்டேமுக்கால் சீட்டு கொடுக்க பெருந்தன்மையோடு அம்மா ஒப்புக்கொண்டிருக்காங்க. உடனே ஒப்புக்கொள்ளுங்கள். போனா வராது பொழுதுபோனா கிடைக்காது" எனக் கூறிவிட்டு பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்றும் விட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியாது தவித்த வைகோவை கடைசியாக தேர்தல் புறக்கணித்தது! மன்னிக்கவும். வைகோ தேர்தலை புறக்கணித்தார்!

இதெல்லாம் ஃப்ளாஷ்பேக்! நாஞ்சில் சம்பத் நாஞ்சில் சம்பத் என்று ஒரு மானஸ்தன் மதிமுகவில் இருந்தார். கண்களை சுருக்கி, ஏற்றி-சுருக்கி ஏற்றி பழைய நடிகர் அசோகன் போலவே 'ஆலம்ம்ம்ம்பனா' என பேசும் திறமை வாய்ந்தவர் அவர். நம் அண்ணனுக்குத் துரோகம் இழைத்த அவர், அதிமுகவில் தஞ்சம் புகுந்தார். நம் அண்ணனின் அன்புச் சகோதரியோ அவருக்கு இன்னோவா கார் வாங்கி கொடுத்து ஊர் ஊராக சென்று வைகோவைத் திட்டு என உசுப்பியும் விட்டார்! இப்போது அந்த துரோகி அந்த பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கும் போதுதான் அந்த திடிக்கிடும் சம்பவம் நடந்தது!

வெகு நாட்களாகவே நடைபயணம் செல்லாமல் இருந்த நம் அண்ணனுக்கு திடீரென நடைபயணம் போக ஆசை ஏற்பட, அதற்கு 'மது விலக்கு கோரி நடைபயணம்' என்று பெயரிட்டார்! அதாவது தமிழக நிறுவனமான டாஸ்மாக்கை மூடச் சொல்லி மூட்டுவலிக்க ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடக்கிறார். இந்த சூழ்நிலையில் தமிழக டாஸ்மாக் நிறுவனத்தை திறந்த, அதை செவ்வனே நடத்திவரும் நம் அன்புசகோதரி நடுரோட்டில் 'எதேச்சையாக' சந்தித்து "ஆமா எதுக்கு நடக்குறீங்க?" என கேட்டாராம்!! ஒருமாத காலமாக யாரை எதிர்த்து நடக்கிறாரோ அவருக்கே எதேச்சையாகதான் இவர் நடப்பதே தெரிந்திருக்கிறது! வேறு யாராகவேணும் இருந்திருந்தால் அவமானத்தில் மூர்ச்சையாகியிருப்பார்கள்! அசிங்கத்தில் துடித்திருப்பார்கள்! ஆனால் நம் அண்ணன் தலையில் முண்டாசைக் கட்டிக்கொண்டு சிரித்தபடியே தன் அன்புச்சகோதரியிடம் "டாஸ்மாக்கை மூடச் சொல்லி நடக்குறேன். நீங்களும் வேணா அதே கொள்கைக்காக எங்கூட வாங்களேன். நான் கார் பின்னாடியே ஓடி வர்றேன்" என பேசிவிட்டு வந்தார்! எந்த வேதனையையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை! அதுதான் நம் அண்ணன்!

பல்லக்குத் தூக்குபவனுக்கு மகாராணியின் கால் தரையில் பட்டால் ஆச்சரியமாக இருக்குமாம்! ஆகா! மகாராணிக்கு கூட கால் இருக்கிறதே என்று! அதுபோல இப்போது ஆனந்தவிகடன் பேட்டியில் "ஜெயலலிதா குடை கூட பிடிக்காமல் என்னிடம் தெருவில் நின்று பேசினார்" என புலங்காகிதம் அடைந்திருக்கிறார் நம் அண்ணன்! அந்த தன்மானச் சிங்கம், ''ஜெயலலிதா தமிழர்களுக்காக போராடுகிறார்.' என்றும் உருமியிருக்கிறது!

ஜெ சரத்குமாருக்கு இரண்டு சீட் கொடுத்தார்! எங்கள் அண்ணனுக்கு அல்வா கொடுத்தார்! நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா கார் கொடுத்தார். எங்கள் அண்ணனுக்கோ ட்ரைசைக்கிள் கூட கொடுக்கவில்லை. ஆனால் பார்த்தீர்களா? ஜெ ஒருநிமிடம் நின்று பேசியதற்கே எங்கள் அண்ணன் எப்படி வூடு கட்டி அடிக்கிறார் என்று!! மெயின்டனன்ஸ் செலவே இல்லாத இந்த 'கொ.ப.செ'வைதான் ஜெ இத்தனை நாள் கேவலப்படுத்தியிருக்கிறார்! ஜெ தெருவில் சும்மா நின்றால் போராடுவதாகச் சொல்வார். குடை பிடிக்காமல் நின்றால் உயிரைக் கொடுத்துப் போராடுவதாகச் சொல்வார்! அதுதான் எங்கள் அண்ணன்!   இனியாவது அவரை ஜெ புரிந்துகொண்டு மூன்று சீட்டுகளாவது கொடுப்பார் என நம்புவோம்.

இப்படிப்பட்ட வரலாற்று பெருமையும், தன்மானச் சரித்திரமும் வாய்ந்த நம் அண்ணன் அடுத்த பாராளுமன்றத்தில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய நாற்பது தொகுதிகளிலும் சுழலப் போகிறார்! சானல் 4இன் ஆவணப்படத்தை வைத்து திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அதிமுக தீட்டியிருக்கும் ஐடியாவைச் செயல்படுத்ததான் அந்த திட்டமிட்ட திடீர் சந்திப்பு! ஜெ வருகிறார் என்றால் தெருவில் காக்கை குருவி கூட நிற்க முடியாது எனும்போது இவர் வந்தாராம், அவரும் வந்தாராம் திடீரென சந்தித்தார்களாம்! ஆனால் அண்ணனின் தொண்டனாக இருந்துகொண்டு இப்படியெல்லாம் சிந்திக்கக்கூடாது! அன்புச்சகோதரி நம் அண்ணனை சந்தித்தது நாம் செய்த பாக்கியம். அதிலும் குடை இன்றி அவர் பேசியது நம்மை சகல பாவங்களில் இருந்து விடுவிக்கும் பாவ விமோசனம்!
அதனால் அண்ணனின் வழிப்படி என்ன நடந்தாலும், என்ன ஆனாலும் அன்புச்சகோதரிக்கு சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்வோம்! பீடுநடை போடுவோம்! அதேநேரம் அங்கே ஏழாவது தெரு முனையில் நின்றுகொண்டு "வைகோ முதல்வர் ஆக வேண்டும்" எனக் கத்திக்கொண்டிருக்கும் தமிழருவிமணியனை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் நம் பாதையில் பயணிப்போம்! குடையைப் பிடிப்போம்!

8 comments:

Prakash said...

Super

guru nathan said...

தன் வாழ்நாளில் தமிழக அரசியலைப் பற்றி சரியாக 34 நொடிகள் மட்டுமே
//ஆமாம். மீத நிமிடங்களில் கருணாநிதியும், செயலலிதாவும் தமிழக மக்களுக்காக மாறி மாறி பேசினார்கள்.

வைகோவின் மதுவிலக்கு போராட்டத்தை விமர்சிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
மக்கள் கடைசிவரையிலும் முட்டாள்களாகவே இருக்க வேண்டும் என்பதுதானே தாங்கள் மறைமுகமாக வைக்கும் கருத்து

Renga said...

அருமை... அருமை... இந்த மாதிரி சிரித்து வெகு காலம் இருக்கும்... கட்டுரை மிக கச்சிதம்..

வெகு சிலர் யதார்த்தத்தை விரும்பவேமாடார்கள், அதில் வைகோ ஒருவர்..

Unknown said...

Your article is excellent, and the flow of words is rocking, I was reading like a running commentary..True thoughts at the right time, I feel pity for Vaiko..always as usual..Ha ha ha

valentini alexander said...

Nothing new,each one has the right to support thier own cause,you way of supporting DMK is by writing such articles.34 second,is really great news

முபாரக் said...

அருமையான கட்டுரை..
"ஆலம்ம்ம்பனா ..!!! " என்ற வரியில்
நெடுநேரம் சிரித்தேன்..!!!!

முபாரக் said...

அருமையான கட்டுரை..!!

"ஆலம்ம்ம்ம்பனா..!!! என்ற வரியில்
நெடுநேரம் சிரித்தேன்..!!!!

Hari Haran said...

இவர் மீது லஞ்சக் குற்றச் சாட்டுகள் உண்டா?வாரிசு அரசியலுக்கு வழிகாட்டினாரா?நம்பியவரைக் குடி கெடுத்தாரா?காவிரி,முல்லைப் பெரியார் போன்ற தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில்
துரோகம் செய்தாரா?உங்கள் சுன்டு விரலை நிமிர்த்த முடியுமா தோழரே!
நல்ல படைப்புகள் நியாயத்தைப் பேச வேண்டும் .குறைந்த பட்சம்
பொய்மையை,பொறாமையை விதைக்காமல் இருக்க வேண்டும்.
இது எனது ஆதங்கமும்,வேண்டுகோளும்!

நிறைவாக ஒன்றே ஒன்று! நான் ம.தி.மு.க.வைச் சார்ந்தவன் அல்ல

Related Posts Plugin for WordPress, Blogger...