Wednesday, March 20, 2013

பரதேசியாக உயிர்த்தெழுந்த பாலா- டான் அசோக்


நந்தா பார்த்தபோது "ஏன் இந்தாளு சூர்யாவைக் கொன்னான்?" எனத் தோன்றியது. பிதாமகன் பார்த்தபோது "ஆஹா" எனத் தோன்றியது. நான் கடவுள் திரைப்படம் வெளிவந்த போது "இந்த சைக்கோவின் படத்துக்கு விமர்சனம் எழுதுவதென்பது கடினமான செயல்" எனத் தோன்றியது. அவன் இவன் பார்த்தபோது பாலா படத்தைப் பார்ப்பதே சைக்கோத்தனமான கொடூரமான செயல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பரதேசியின் ரியாலிட்டி ட்ரெயிலர் என்ற பெயரில் வெளியான அபத்தத்தைப் பார்த்தபோது "கிறு*********" என்று தோன்றியது!! இப்போது பரதேசி!

பரதேசி யார் எனப் பார்க்கும் முன் பாலாவைப் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். பாலாவிற்கென்று ஒரு செட் கதாப்பாத்திர தன்மைகள் உண்டு. சேதுவில் இருந்து பரதேசிக வரை அவரது கதாப்பாத்திரங்களில் பலர் மாறி மாறி நடித்திருக்கிறார்களேயொழிய கதாப்பாத்திர தன்மைகள் ஒன்றுதான். உதாரணமாக பாலாவின் கதாநாயகர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். மகிழ்ச்சியுடன் அனைவரையும் கிண்டல் செய்துகொண்டு, லொடலொட என பேசிக்கொண்டே இருக்கும் ஜாலி கதாநாயகன். இரண்டாவது யாரிடமும் பேசாத 'உர்ர்ர்ரென்'று இருக்கும் சீரியஸ் கதாநாயகன். சேது முதல்பாதியில் விக்ரம், பிதாமகன் சூர்யா, அவன் இவன் ஆர்யா எல்லாம் ஜாலி ரகம். பரதேசி அதர்வா கூட இந்த ரகம் தான். அதேபோல் சேது இரண்டாம் பாதி விக்ரம், நந்தா சூர்யா, நான் கடவுள் ஆர்யா எல்லாம் சீரியஸ் ரகம். கதாநாயகிகளைப் பொறுத்தவரை லூசுத்தனம் நிறைந்த ஆடிக்கொண்டே அலையும் கதாநாயகிகளைப் பார்க்கலாம், இல்லையேல் வாயே பேசாத, எதற்கெடுத்தாலும் வெட்கப்படும் கதாநாயகிகளைப் பார்க்கலாம். நந்தா லைலா, பிதாமகன் லைலா, சேது அபிதா, அவன் இவன் ஜனனி, மதுமிதா, பரதேசி வேதிகா என எப்படிப் பார்த்தாலும் அந்த இரண்டு ரகங்களில் அந்தக் கதாப்பாத்திரங்கள் அடங்கிவிடும்.

பொதுவாக எல்லா பாலா படங்களிலும் காமடி செய்யும் ஒரு வயதான கிழவர் கதாப்பாத்திரமும் இருக்கும், சாமியாராகவோ, குடிகாரராகவோ! வில்லன் கதாப்பாத்திரம் மிகவும் கர்ண கொடுரமாக இருக்கும். படம் முடியும் தருவாயில் யாராவது சாவார்கள் பின் கதாநாயகன் வெறித்தனமாக வில்லனைக் கொல்வான்.

பிதாமகன் வரையில் மக்கள் ரசித்த இந்த பாலாத்தனங்கள் நான் கடவுளில் எரிச்சலையும், அவன் இவனில் வாந்தியையும் வரவழைத்துவிட்டன. காமடி என்றாலும் அதே ஸ்டீரியோடைப் காமடிகள் தான். எங்கெங்கோ அலையும் படம் கடைசியில் ஒரு கர்ணகொடூரமான கொலையில் முடியும். இதுதான் பாலா. இவ்வளவுதான் பாலா என அலுத்துப் போயிருந்தவேளையில், "நான் உயிர்த்தெழுந்திருக்கிறேன்" என பரதேசியைக் கொடுத்திருக்கிறார் பாலா! இப்போது பரதேசிக்கு வருவோம்.

முதல் பாதியில் பாலாவின் வழக்கமான ஸ்டீரியோடைப் ஹீரோ, ஸ்டீரியோடைப் ஹீரோயின், ஸ்டீரியோடைப் காமடி என மெதுவாக நகரும் படம் இரண்டாம் பாதியில் வேகமெடுக்கவில்லையென்றாலும் கவனிக்க வைக்கிறது. அதர்வா வழக்கமான பாலா ஹீரோ. லொடலொட என்கிறார். எல்லோரையும் கிண்டல் செய்கிறார். ஓடுகிறார், தாவுகிறார், மண்டி போட்டு தண்ணி குடிக்கிறார். வேதிகா 'லைலா'வாக நடித்திருக்கிறார். லூசுத்தனமாக பொது இடங்களில் ஆடுகிறார், குதிக்கிறார், ஆண்களை நக்கலடிக்கிறார். கதை நடப்பது 1930களில் என்பதை பாலா மறந்துவிட்டாலும் நமக்கு உறுத்துகிறது!! வேதிகாவின் வெள்ளைத் தோளில் பூசப்பட்டிருக்கும் கருப்பு பெயிண்ட் அவர் கரிக் குவியலில் உருண்டதைப் போன்ற தோற்றத்தைத் தான் தருகிறதேயொழிய திராவிட நிற தோற்றத்தை அல்ல. இதுபோன்ற செயற்கைத் தனங்களால் வேதிகா கதாப்பாத்திரத்தின் மேல் பெரிய ஈர்ப்பு ஒன்றும் ஏற்படவில்லை. வேதிகாவுடன் ஒப்பிடும்போது தன்ஷிகாவின் இயல்பான தோற்றமும், நடிப்பும் அருமை. கவனிக்கவைக்கிறவர்கள் அதர்வாவும், அதர்வாவின் அம்மத்தாவும்.

தேயிலைத் தோட்டத்துக்கு பல மாதங்களாக நடந்தே பயணிக்கும் போது வழியிலேயே குற்றுயிரும் குலையுயிருமாக ஒருவரை விட்டுவிட்டுச் செல்லும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. அதுவும் இடைவேளையில் அந்த நபரின் கை மட்டும் தூரத்தில் இழுத்துச் செல்லப்படும் தன் மனைவியை நோக்கி நீண்டு பின் அடங்கும் போது நமக்கு குலை நடங்குகிறது. இடைவேளைக் காட்சி முடிந்தபின் சில நிமிடங்கள் எழ முடியமால் இருக்கையிலேயே அமர்ந்திருந்தேன்.

பின் தேயிலைத் தோட்டத்தில் பணியாளர்களின் கோரமான வாழ்க்கையை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கும் அதேவேளையில் சில தேவையில்லா 'சேட்டைகளை'த் திணித்து நம்மை திரைக்கதையுடன் ஒன்ற விடாமல் செய்யும் வேலையையும் செவ்வனே செய்திருக்கிறார் பாலா.

ஏற்கனவே அவன் இவன் படத்தில் மாட்டுக்கறி விற்று 'தான் உண்டு தன் வேலையுண்டு' என பிழைப்பு நடத்துபவனை மகா வில்லனாகச் சித்தரித்து இந்து மதம் மீது தனக்கிருக்கும் ஈர்ப்பையும், பற்றையும், வெறியையும் சொல்லியிருந்த பாலா இதிலும் அதைச் செய்திருக்கிறார். கதை நன்றாக நகர்ந்து கொண்டிருக்கும் போதே பணியாளர்களுக்கு மருத்துவம் பார்க்க ஆங்கிலேயப் பெண்ணை மணந்த ஒரு தமிழ் டாக்டர் வருகிறார். மருத்துவத்தை விடுத்து மதமாற்றம் செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டலைகிறார். சதா சர்வ காலமும் அதையே செய்கிறார்கள் அவரும் அவர் மனைவியும். தீடீரென கிறித்துமஸ் நாளில் 'கங்ணம் ஸ்டைல்'லில் குத்தாட்டம் போடுகிறார்கள். அதுவும் இயேசப்பா இயேசப்பா எனப் பாடிக்கொண்டே!!! கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வலிய திணிக்கப்பட்டிருப்பதால் அது நகைச்சுவையாகவும் இல்லாமல். கதைக்கும் உதவாமல் குடிதண்ணீரில் கலக்கப்பட்ட சாணியைப் போல கதையின் தன்மையையும் நோக்கத்தையுமே சீரழிக்கிறது.

அடுத்து வெள்ளைக்காரர்கள் என்றால் மொடாக் குடிகாரர்கள், அவர்களின் மனைவியோடு இணைந்து மற்ற பெண்களைப் புணர்வார்கள் என்ற 'கருத்தெல்லாம்' சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளைக்காரர்களில் கண்டிப்பாக அப்படிப்பட்டவர்கள் இருக்கலாம்தான். அந்த தேயிலை தோட்டத்தை நடத்தும் வெள்ளைக்காரனை மட்டும் அப்படிக் காட்டியிருந்தால் பரவாயில்லை. ஒரு காட்சியில் ஒரு ஒட்டுமொத்த வெள்ளைக்கார சமூகத்தையே குடிகார சாடிஸ்ட்டுகள் போல காட்டுகிறார். அந்தக் காலத்தில் நம்மூர் ஜமீன்களையும், மேட்டுகுடி மக்களையும் விடவா அவர்கள் சாடிஸ்ட்டுகள், பாலியல் வக்கிரர்கள்!!!? வெள்ளைக்காரர்களை இப்படிக் காட்டும் அதே காட்சியில் மகாத்மா காந்தியையும் புகழ்கிறார். வசனம் நாஞ்சில் நாடன் என்றாலும் எனக்கென்னவோ ஜெயமோகனின் எழுத்துக்களை படத்தில் 'பார்ப்பதை'ப் போல் இருந்தது!!!

மற்றபடி பல காட்சிகளில் பாலா பின்னியிருக்கிறார். குறிப்பாக இடைவேளையிலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளிலும்! எல்லாவற்றையும் விட படத்தைத் தூக்கி நிறுத்துவது இயல்புகளை மீறாத க்ளைமாக்ஸ் தான். அதில் மட்டுமே பாலா படு உயரத்தை அடைந்திருக்கிறார். வழக்கான தன் ஹீரோக்களைப் போல அதர்வாவை, "அடடா அகங்கார அரக்கனை" என ஜேசுதாசை பின்ணணியில் பாடவிட்டு காடு, மலை எல்லாம் தாண்டி ஓடி வில்லனை கடித்து, அடித்து கொல்லாமல் இயல்பிலேயே கதையை முடித்தது அழகு. அதனாலேயே இந்தப் படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறதோ என்னவோ!!

வெள்ளை முரளி போல காட்சிதரும் அதர்வா நடிப்பின் மூலம் தன் தந்தைக்கு பெருமை சேர்க்கிறார். இறுதிக்காட்சியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு பின் நிலைமையை உணர்ந்து கதறி அழும் இடத்தில் பட்டையைக் கிளப்புகிறார். மிகப்பெரிய எதிர்காலம் அவருக்கு இருக்கிறது. 'சேது' விக்ரம் என சேதுவுக்குப் பின் விக்ரம் அழைக்கப்பட்டதைப் போல 'பரதேசி' அதர்வா என யாரும் அழைக்காமல் இருந்தால் சரி! :-)

சில இடங்களில் நெஞ்சைக் கவ்வும் படம் சில தேவையில்லாத காட்சிகளால் வீரியமிழக்கிறது. மொத்தத்தில் வலிய திணிக்கப்பட்ட காட்சிகளையும், இயல்புக்கு மீறிய கதாப்பாத்திரத் தன்மைகளையும், தன் ஸ்டீரியோடைப் தனங்களையும் தவிர்த்திருந்தால் தெள்ளத்தெளிவான நீரோட்டம் போல படம் அமைந்திருக்கும். மொத்ததில் அவன் இவனில் காணாமல் போன பாலா, மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறார். அடுத்த படத்தில் பட்டையைக் கிளப்புவார் என எதிர்பார்ப்போம்!

Tuesday, March 19, 2013

யார் துரோகிகள்?

தமிழக மாணவர்கள் எல்லாம் ராஜபக்சேவுக்கு எதிராக அணி திரண்டிருக்க நாம் தமிழர், மதிமுக, த.தே.பொ.கட்சி, நெடுமாறன், மே17 எல்லாம் கலைஞருக்கு எதிராக வழக்கம் போல் களமாடிக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி 2009ல் என்ன செய்தார் என பட்டியல் போடுவதிலும், டெசோவை எதிர்ப்பதிலுமே முழுக்கவனத்தையும் செலவழிக்கிறார்கள். நம்முன் வைத்த குற்றச்சாட்டையே மீண்டும் மீண்டும் வைக்கிறார்கள். இந்தக் கட்டுரை அவர்களுக்கானது மட்டுமே! முதலிலேயே சில விசயங்களை நான் தெளிவுபடக் கூறிவிடுகிறேன். இந்தக் கட்டுரையின் நோக்கம் 2009ல் திமுகவின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவது அல்ல. இன்னும் சொல்லப்போனால் 'திமுக மத்திய அரசின் கைக்கூலி' என்ற வாக்கியத்தை உண்மை என எடுத்துக்கொண்டே தொடர்வோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞரை விட்டால் ஜெ, ஜெவை விட்டால் கருணாநிதி. மக்களின் முன்பிருக்கும் இரண்டு தேர்வுகள் இவர்கள்தான். முதலில் நாம் ஒன்றைத் தெளிவாய் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். 2009ல் ஈழத்தில் புலிகள் தோல்வியுற்றது திடீரென ஒரே இரவில் நிகழ்ந்ததல்ல. விடுதலைப் போராளிகளான புலிகள் உலகம் முழுவதும் இந்தியாவால் 'பயங்கரவாதிகள்' என அடையாளப்படுத்தப்பட்டு, செப்11ல் அமெரிக்கா தாக்கப்பட்டதற்குப் பின் உலகமெங்கும் எழுந்த பயங்கரவாதத்திற்கு எதிரான அலையில் ஆதரவின்றி அடித்துச் செல்லப்பட்டவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது, மறுக்கவும் முடியாது. அந்த அலையே அவர்களுக்கு எந்த உலக நாடுகளில் இருந்தும் எந்த ஆதரவும் கிடைக்கவிடாமல் தடுத்தது என்பதையும் நாம் மறுக்க முடியாது. 1980களின் பிற்பகுதியில் தமிழகத்தில் நடந்த ஈழப்போராளி இயக்கங்களுக்கிடையேயான சண்டையை சட்ட ஒழுங்கு சீர்குலைவாகத் திரித்து திமுக ஆட்சியைக் கலைத்ததில் இருந்தே புலிகளை இந்தியாவுக்கெதிரான பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் பணி துவங்கிவிட்டது. அதன் பின்புலத்தில் சுப்பிரமணியசுவாமி, ஜெ, சந்திரசேகர் என்ற கூட்டணி இருந்தது. அதன் புலிகளுக்கு எதிரான தொடர் அறிக்கைகள் மூலம் இந்தியா முழுவதும் ஒரு சீரான எதிர்ப்பை, வெறுப்பை தோற்றுவித்தவர் ஜெ. இந்தியாவில் புலிகள் எதிர்ப்பில் சுப்பிரமணியசுவாமிக்கு, சோவுக்கு, இந்து ராமுக்கு, தினமலருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே பங்கு ஜெவுக்கும் இருக்கிறது. சிலநேரங்களில் அதிகமாகவே இருந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் புலிகள் மீதான தடையில் ஜெவுக்கு மட்டுமே பிரதான பங்கு உண்டு, அதை அவரே பலமுறை பெருமையாகச் சொல்லியிருக்கிறார்.  இதையும் யாராலும் மறுக்க முடியாது.

இப்போது இன்னொரு விசயத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞருக்கு மாற்று லாலு பிரசாத் யாதவோ, எடியூரப்பாவோ, முலாயம் சிங்கோ அல்ல.. ஜெயலலிதா!! ஜெயலலிதா என்றால் சோ, சோ என்றால் சுப்பிரமணியன் ஸ்வாமி, சுப்பிரமணிய ஸ்வாமி என்றால் இந்து ராம், இந்து ராம் என்றால் சந்திரிகா, ரணில் இப்போது ராஜபக்சே. இதுதான் காலம்காலமாக நிலவி வரும் ஈழத்தமிழருக்கெதிரான அதிகார வரிசை (anti ealam tamils hierarchy!). "புலிகளை விட்டுவிடாதீர்கள் என ரணிலிடம் நான் சொன்னேன்", "நளினியைக் காப்பாற்றிய சோனியா பதிபக்தி இல்லாதவர்", "திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகமாகிறது", "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்", போன்ற ஜெவின் 2009 வரையிலான அறிக்கைகளைப் படித்தவர்களுக்கு அது தெரியும். (ஈழ அகதிகளுக்கு கருணாநிதி அரசு தமிழக கல்லூரிகளில் ஒதுக்கியிருந்த சீட்டுகளைக் கூட அரசாணை மூலம் நிறுத்தியவர் ஜெ! மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அரசாணை நீக்கப்பட்டு மீண்டு ஈழ மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது) இப்படியாக இவர்கள் எல்லோரும் அமைத்துக் கொடுத்த பூப்பாதையில் நடைபோட்டு தமிழர்களின் கதை முடித்தது சிங்கள ராணுவம். இலங்கைப் பிரச்சினையில் மட்டுமல்ல, இந்திய-தமிழர் பிரச்சினைகளான மீனவர் சுடப்படுவதில் கூட ஜெவுக்கு அறிவுரையளிப்பவர்களான 'சோ' போன்றோர் எப்படி செயல்பட்டிருக்கிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சம்.

மேலே நாம் சொன்னதைப் போல கருணாநிதி மத்திய அரசின் கைக்கூலியாகவே இருக்கட்டும்!! அவருக்கு மாற்றாக இங்கே, இன்று அவரை குறை சொல்பவர்கள் எல்லாம் மூன்றாவது அணியாகவா களம் இறங்கினார்கள்?  ஜெவுக்கு பின்னால் அல்லவா நின்றார்கள், நிற்கிறார்கள்!! மேலே நாம் பார்த்ததைப் போன்ற அறிக்கைகளின் மூலம் இந்தியாவில் புலிகளுக்கு எதிராக 'diplomatic'காக காய் நகர்த்தியவரை 'ஈழத்தாய்' என்று சொன்னது யார்? ஜெவை ஆதரிக்கலாமா எனப் பதறிக் கேட்டவர்களிடம், "இப்போது காங்கிரசை தோற்கடிப்பதுதான் நோக்கம் என்பதால் ஜெவை ஆதரிக்கிறோம்" என்று சொல்வது நிரந்தர மாற்றத்தை விரும்பாத, அல்லது அதை நோக்கி பயணிக்கத் தெம்பில்லாத கையாளாகாதவனின் பதில் இல்லையா? ஒருமுறை அடுத்தவனுக்கு ஓட்டுக் கேட்டவன் எவனாவது எந்த நாட்டிலாவது தனிப்பெரும் சக்தியாக உருவாகியிருக்கிறானா? 1960களில் காங்கிரசுக்கு மாற்றாக திமுக வேறு எதாவது கட்சியை தற்காலிகமாக முன்னிறுத்தியிருந்தால் கூட இன்று தனிப்பெரும் கட்சியாக வளர்ந்திருக்க முடியுமா?  வரலாற்று அறிவு வேண்டாமா? அல்லது அரசியல் தெளிவுதான் வேண்டாமா?

( இந்த இடத்தில் வைகோ என்ற நேர்மையான நடிகரைப் பற்றிய சிறு செய்தி! ஜெயலலிதா பம்பரமாக சுழன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக களமாடிக்கொண்டிருந்தபோதெல்லாம் நம் தானை தலைவர் வைகோ ஜெவின் கூட்டணிக் குடையில் தான் இளைப்பாறிக் கொண்டிருந்தார். "ஏன் இப்படி விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறீர்கள்?", என ஒரு கேள்வி கேட்க வேண்டுமே!!! ஹ்ம்ஹ்ம்... கேட்கவேயில்லையே! கடைசிவரை சகோதரி சகோதரி சகோதரி என்றல்லவா பாசத்தில் திளைத்துக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளுக்கெதிரான அரசியல் போரை இங்கே ஜெ நடத்திக் கொண்டிருந்தபோது சீட்டுக்காக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருந்த ஒருவர், வாயே திறக்காத ஒருவர், காங்கிரசுடன் அவ்வப்போதாவது உரசல்களை ஏற்படுத்திக்கொண்டு இன்று முற்றிலும் வெளியேறியிருக்கும் திமுகவைப் பார்த்து துரோகி எனச் சொல்லும் தைரியத்தைக் கண்டு நான் மலைக்காத நாளே இல்லை! திமுக துரோகி என்றால் விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பாதை அமைத்துத் தந்த வைகோவை துரோகி நம்பர் ஒன் என்றே சொல்லலாம் அல்லவா? கருணாநிதியாவது புலிகளுடன் நேரடித் தொடர்பில் இல்லை. ஆனால் "தம்பி தம்பி" என தான் உறவாடிய பிரபாகரனை தூக்கிலிடவேண்டும் என சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றிய ஒருவரு கூட்டணியில் இருந்தாரே, இருக்கப் போகிறாரே இவர் எவ்வளவு பெரிய பச்சைத் துரோகி? ஒன்னும் பெறாத எம்.எல்.ஏ சீட்டுக்கே இப்படி என்றால் திமுக போல மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்திருந்தால்????? நினைக்கவே தலை சுற்றுகிறது!! )

சரி தேர்தல் நேரத்தில் தான் ஜெவை ஆதரித்தார்கள். இப்போது கலைஞரையும், ஜெவையும் ஒருசேர புறக்கணிக்கும் புதிய மாற்றத்தை நோக்கி என்ன காய் நகர்த்துகிறார்கள்? ஏற்கனவே வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளின் மூலம் புகழ்பெற்ற ஜெ அரசு, மூவர் தூக்கு விசயம், லயோலா மாணவர் கைது என பலவிசயங்களில் தன் சுயரூபத்தை வெளிப்படுத்திவிட்டதே!! பல இடங்களில் மாணவர்களை காவல்துறை அடிக்கும் படங்கள் கூட வெளியாகிறதே!! இன்னும் நாம் தமிழரோ, வைகோவோ, மணியரசனோ, மே17ஓ தமிழக அரசை எதிர்த்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லையே ஏன்?  நாம் ஆதரித்தவர்களையே இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு எதிர்ப்பது என்ற அச்சமா? அல்லது  நமக்கிட்ட பணி திமுகவை திட்டுவது! அதை மட்டும் செய்வோம் என்ற கடமையுணர்ச்சியா?

சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நகைச்சுவையான அறிக்கை ஒன்றை விகடன் இணையதளத்தில் படித்தேன். தஞ்சையில் சிங்கள புத்தபிட்சு தாக்கப்பட்டதற்காக சிலரை தமிழக போலீஸ் அடித்துக் கைது செய்திருக்கிறது!! அதற்கான கண்டனம் தான் தமிழ்தேச பொதுவுடமைக் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.மணியரசனின் அந்த அறிக்கை. ஒரு இடத்தில் கூட தமிழக அரசு என்றோ ஜெயலலிதா என்றோ இல்லை. அறிக்கை முழுவதும் காவல்துறை காவல்துறை காவல்துறை! உலகத்திலேயே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் ஒரு நிறுவனத்தை சி.பி.ஐ போல உச்சநீதிமன்றம் போல சுதந்திரமான ஒரு நிறுவனமாக கற்பனை செய்துகொண்டு கண்டனம் தெரிவித்தது இவராகத் தான் இருப்பார்! ஏற்கனவே லயோலா கல்லூரி மாணவர்கள் கைதிற்கு எதிராக வைகோ காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து அந்த சாதனையைச் செய்திருக்கிறார் தான். ஆனால் அவராவது ஓட்டரசியல்வாதி! மணியரசனுக்கு ஏன் தயக்கம்? ஏன் நடுங்குகிறது? எது தடுக்கிறது? இதே வரிசையில் தான் மே17ம், நாம் தமிழரும்!! 24 மணி நேரத்தில் 23:50 மணி நேரம் டெசோவுக்கு எதிராகவும், 10 நிமிடத்தை ராஜபக்சேவுக்கு எதிராகவும் செலவிடுகிறார்கள் என்பதை யாராலேனும் மறுக்க முடியுமா? டெசோ நமக்கு ஒவ்வாத இயக்கம், அதன் தலைவர் நாடக நடிகர். எதிர்கட்சியாகக் கூட இல்லாத அவர்களை, "சரி போய்த்தொலை" எனப் புறக்கணித்துவிட்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதானே? எதிர்கட்சியாகக் கூட இல்லாத கலைஞரை தோலுரிப்பதுதான் 'இப்போது' இவர்கள் முன் இருக்கும் முக்கியமான பணியா? வேடிக்கையாக இல்லையா?

பல ஆண்டுகளுக்குப் பின்பு சுயம்புவாய் தமிழகத்தில் மாணவர் போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. அரசியல் பின்னணியே இல்லாமல் நடைபெறும் அப்போராட்டத்தை ஜெ தான் பின்னால் நின்று வழி நடத்துகிறார் என விகடன் எழுதியிருக்கிறது! உண்மையான போராளிகளுக்கு சுர்ரென்று உரைக்க வேண்டாமா? மாணவர்களை கொச்சைப்படுத்தி திரித்து எழுதலாமா என விகடனுக்கு கண்டனம் சொல்லியிருக்க வேண்டாமா? மாட்டார்கள்! இவர்கள் தான் காவல்துறைக்கும், கான்ஸ்டபிள்களுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வீரர்களாயிற்றே!!! ஆக சகலவிதங்களிலும் நாம் தமிழர், மே17, மதிமுக, தமிழ்தேசிய பொது உடைமைக் கட்சி போன்ற இயக்கங்கள், கட்சிகள் யாவும் அதிமுகவின் தொங்கு சதைகளாகத்தான் செயல்படுகின்றனவேயொழிய ஒரு நிரந்தர மாற்றுத் திட்டமோ, அதை நோக்கிய காய்நகர்த்தலோ இல்லாத அரைகுறை இயக்கங்கள் என்பது தெள்ளத் தெளிவு. சரி இவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களிலாவது இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சீமான் வெளிப்படையாகவே சொல்கிறார், "வைகோ நான் எல்லாம் ஒன்னா நிற்க முடியாது. ஒன்னா நின்றால் யார் முன்னால் நிற்பது என்ற பிரச்சினை வரும்" என்று. ஆஹா இதுவல்லவோ ஒப்புதல் வாக்குமூலம்!! இவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை எந்த வகையிலும் தமிழக அரசின் மனம் புண்படாமல், தமிழக அரசு எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது போலவே நடிப்பதுதான்!

உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கும் இயக்கங்களோ, இயக்கத் தலைவர்களோ என்ன செய்யவேண்டும்! எனக்குத் தெரிந்து தமிழகத்தின் இருபெறு சக்திகளான கலைஞரையும், ஜெயலலிதாவையும் ஒருங்கே எதிர்ப்பார்கள்.  அவர்களிருவரைப் பற்றிய உண்மைகளை மக்களிடத்தே கொண்டுசேர்த்து ஒரு நிரந்தர மாற்றத்தை, உடனே இல்லையென்றாலும் காலப்போக்கிலாவது கொண்டு வரும் பணிகளை முடுக்கிவிடுவார்கள்.  ஆனால் கலைஞரின் கண்ணில் சுண்ணாம்பும், ஜெவின் கண்ணில் வெண்ணையும் தடவிக்கொண்டிருக்கும் இவர்களின் நடுநிலையை, மாற்று அரசியல் லட்சணத்தை தமிழக அரசியலே தெரியாத செவ்வாய்கிரகவாசி கூட நம்பமாட்டான்!! கருணாநிதி என்பவர் தனி ஒரு மனிதர் அல்ல. அவர் ஒருகோடித் தமிழர்களின் சின்னம். அந்த ஒருகோடி தமிழர்களுக்கும் 'பரம்பரை' எதிரி ஜெயலலிதா. அந்த ஒருகோடி தமிழர்களின் ஆதரவு இல்லாமல் ஒரு புதிய அரசியல் மாற்று என்பது தமிழகத்தில் உருவாகவே முடியாது. அந்த ஒருகோடி தமிழர்களையும் மாற்றத்தை நோக்கி நகர்த்தவேண்டுமென்றால் மாற்றத்தை விரும்புவோர் சுயமரியாதையோடு, சிறை அச்சத்தை தவிர்த்து ஜெவையும் எதிர்க்க வேண்டும்!! எதிர்த்தால் மட்டுமே மாற்றத்தை நோக்கி மெதுவாகவேனும் முன்னேறுவார்கள். கருணாநிதியையும் அழிக்க வேண்டும், ஜெவையும் அழிக்க வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசும் போராளிகளே உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இருவரையும் சமமாகவா எதிர்க்கிறீர்கள்?


இறுதியாக கலைஞரையும், திமுகவையும், திமுக தொண்டர்களையும், திமுகவை விமர்சனங்களோடு ஆதரிப்பவர்களையும் 'துரோகிகள்' எனத் தூற்றும் நாம்தமிழர், மே17, மதிமுக போன்ற இயக்கங்களையும் கட்சிகளையும் கேட்கிறேன், பழைய நண்பர்களை அழிக்க இன-எதிரிகளோடு கூட்டணி போட்டுக் கொக்கரிக்கும் உங்களை என்ன சொல்லி அழைப்பது? இப்போதைக்கு ஜெவை ஆதரியுங்கள் பின்னர் மாற்றம் தருகிறோம் என ஜெவுக்காக ஓட்டுப் பொறுக்கிவிட்டு மாற்றத்தை நோக்கி மட்டுமல்லாமல், போயஸ் வாசலை விட்டே நகராமல் உட்கார்ந்திருக்கிறீர்களே.... உங்களை வர்ணிக்க துரோகி என்ற வார்த்தையெல்லாம் கண்டிப்பாகப் பத்தாது! அதைவிட வீரியமிக்க வார்த்தையை உங்களுக்காகவே இனிமேல் உருவாக்கினால் தான் உண்டு!!!
Friday, March 15, 2013

தமிழர்களின் ஸ்பெஷல் குணம்! எ தினமலர் ஸ்டோரி!
தடை செய்யப்பட்டதை தேடிப் போவதென்பது பொதுவான மனித குணம். சர்க்கரை வியாதி இருப்போர்க்கு இனிப்புகள் பிடிப்பதைப் போல. தமிழர்களுக்கு இந்த குணம் மிக அதிகமாகவே இருக்கிறது. ஒருவேளை இந்த குறிப்பிட்ட 'குணத்தை' அளக்க ஏதேனும் அளவுகோல் கண்டுபிடித்தார்களாயின் தமிழர்கள் அதில் உலக அளவில் முதலிடம் பெறுவார்கள் என்பதை சந்தேகமின்றி இப்போதே கூறலாம்.

விசயத்திற்கு வருவோம். தினமலர் என்ற பத்திரிக்கை ஒன்று இருக்கிறது. இது மிகவும் தேசபக்தி கொண்ட இதழ். இந்தியாவுக்கு ஏதாவதொரு அவமானமென்றால் அதன் ரத்தநாளங்கள் எல்லாம் 100டிகிரி வெப்பத்தில் கொதிக்கும். யாரேனும் தவறான இடத்தில் பைக்கை பார்க் செய்துவிட்டால் "திருந்துவார்களா இந்த ஜென்மங்கள்?" என எழுதும். துணைவேந்தர்கள் ஏதேனும் மீட்டிங்கில் இடைவேளை நேரத்தில் தூங்கினால் கூட "தூங்குமூஞ்சி துணைவேந்தர்கள்" என முதல் பக்கத்தில் வெளியிட்டு விழிப்புணர்வு பரப்பும். வெயிலுக்கு அஞ்சி முகத்தில் துணி மூடியபடி இஸ்லாமியப் பெண்களைப் போல யாரேனும் சென்றால் "தீவிரவாதிகளாக மாறிய நம்மூர்ப் பெண்கள்" என எழுதும் பெருமையுடைத்து. அந்துமணி என்ற உலகமகா காவாளிப்பயல் தான் தினமலர் ஆசிரியர் என்றாலும் ஒழுக்கத்திலும், தேசபக்தியிலும், அளவுக்குமீறிய (வக்கிர) நகைச்சுவையுணர்விலும் தினமலரை யாராலும் மிஞ்ச முடியாது.

தினமலரைப் புறக்கணிப்போம் என பலமுறை நாம் சத்தமிட்டிருக்கிறோம், ஓலமிட்டிருக்கிறோம். புறக்கணித்திருக்கிறார்களா? இல்லை. தென்மாவட்டங்களில் தினத்தந்தியை விட இரண்டு மடங்கு அதிகமான சர்குலேஷனில் சக்கை போடு போடுகிறது. தினமலரின் டெக்னிக் மிகவும் புதியது. ஒரு போதை மருந்தை போல மனிதனின் வக்கிரத்திற்கு தீனி போட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு டவுட் தனபால் என்ற கேரக்டர்! 'பெரிய புடுங்கி' என்பார்களே அதற்கு சரியான உதாரணம் அதுதான். எல்லோரையும் திமிர்த்தனமாக கிண்டல் செய்வது, பெரிய உலகம் தெரிஞ்ச ஞானி போல நக்கல் செய்வது என ஒரு பக்கா சாடிச குணம் கொண்டது இந்த காரக்டர். ஒரே நாளில் வெளிவந்த 'டவுட் தனபால்' பகுதியை கீழே கவனியுங்கள். மோடி, "நன்றாக ஆட்சி செய்தால் மக்கள் மன்னித்துவிடுவார்கள்" என சொல்லியிருப்பதற்கு, தனபால், "அதான் உங்களை நிரபராதி என நீதிமன்றமும் சொல்லிருச்சு. மக்களும் சொல்லிட்டாங்க. பின்பு ஏன் இப்படிலாம் பேசுறீங்க?" என கேட்கிறான். அதே நேரம் "வெயில் காலம் வந்துவிட்டது. அதீத மின்தட்டுப்பாட்டால் மக்கள் அவதியுறுவார்கள். அரசு தண்ணீர்ப்பந்தல்களாவது அமைக்க வேண்டும்" என விஜயகாந்த் சொல்லியிருப்பதற்கு, தனபால், "ஏன் மூளை குழம்புன மாதிரி உளறீங்க? வெயிலுக்கும் மின்தட்டுப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்?" என சொல்கிறான். தன் தவறை சொல்லும் மோடியை அய்யயோ என பதறி காப்பாற்றுகிற அதே தனபாலுக்கு, வெயில் காலத்தில் மின்விசிறி இல்லாமல் மக்கள் அவதிப்படுவார்களே என விஜயகாந்த் சொல்வது புரியவில்லையாம்!! சரி. அதைக் கூட விடுங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எதிர்கட்சித் தலைவரை "மூளை குழம்பிருச்சு" என்றெல்லாம் எப்படி சொல்கிறான்? இது என்ன ரகமான ஊடக சுதந்திரம்? தினமலர் ரமேஷை 'ராபீஸ் தாக்கிய நாய்' என எவனாவது திட்டினால் சும்மா இருப்பானா இந்த 'தனபால்'??

இன்னொரு முக்கியமான விசயம். இலங்கை ராணுவம் தினசரி சராசரியாக இரண்டு தமிழக மீனவர்களையாவது சுட்டு கொல்கிறது. இதுவரை எப்போதாவது அதை தலைப்புச் செய்தி ஆக்கியிருப்பானா இந்த தினமலர்? ஆனால் கேரள மீனவர்களைச் சுட்ட இத்தாலியர்களை அந்நாடு காப்பாறுவதைப் பற்றி "இந்தியாவுக்கு குட்டிநாடான இத்தாலி சவால்" என முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி போடுகிறான்! மக்களே.. இதெல்லாம் எவ்ளோ பெரிய கொடுமை? வயிறு எரிகிறது.
இலங்கை மட்டும் என்ன சீனா போல பெரிய நாடா? தேசபக்தி என்பது இந்த தினமலர் ஜந்துவிற்க்கு தமிழகம் தவிர்த்த இந்தியா மீதுமட்டும் பொத்துக்கொண்டு வரும். ஆனால் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் தமிழன் மட்டும் கிள்ளுக்கீரை!

புறக்கணி புறக்கணி என கத்திக் கத்தி ஓய்ந்தாகிவிட்டது! எவனுமே புறக்கணிப்பதைப் போல தெரியவில்லை. மலத்தை புறக்கணி எனச் சொன்னால் தமிழ்நாட்டில் மலம் வியாபாரம் கூட கொடிகட்டு பறக்க வாய்ப்புள்ளது! தமிழர்களின் குணம் அத்தகையது! விளம்பரம் வருது என சிலர் படிக்கிறார்கள். இதில் விளம்பரம் கொடுப்பதால் படிக்கிறார்களா இல்லை படிப்பதால்தான் நிறைய விளம்பரம் வருகிறதா எனத் தெரியவில்லை. எவனிடம் போய் முதலில் புறக்கணிக்கச் சொல்வது என்றும் தெரியவில்லை.
 
ஆக இப்போதைக்கு எவனும் தமிழனுக்குச் சமாதிகட்ட நினைக்கும் எதையும் புறக்கணிக்க ஆயத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா-சீனா-இலங்கை கூட்டணி தமிழகத்தில் பாதி ஜனத்தொகையை அழிச்சாதான் அறிவு வரும் போல! ஆனால் அப்போதும் கூட நம்மை அழித்தது சரிதான் என துக்ளக்கும், தினமலரும் எழுதுவார்கள். அதை நம்பவும் நாலு பேரு இருப்பான். அட இப்படிப்பட்ட கேவலமான முண்டங்களான நாமெல்லாம் இருந்து என்ன பண்ணப் போறோம்? மீனவனா மாறி மீன்பிடிக்கப் போயி இலங்கையால் சுடப்பட்டு தற்கொலை பண்ணிக்கலாம் வாங்க!

Thursday, March 14, 2013

ஆட்சியாளர்கள் (யாராய் இருந்தாலும்) காலை நக்கிப் பிழைப்போம். -தமிழக ஊடகங்கள்
வளவள என பேசாலம் சுருக்கமாக விசயத்திற்கு வருகிறேன். 2011க்குப் பின் ஆவி, ஜூவி, குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகள் கலைஞரின் கடந்த ஆட்சியைப் பற்றியும், அவர் குடும்பத்தினர் பற்றியும் மட்டுமே பெரும்பாலும் எழுதி வருகின்றன. இதெல்லாம் இவைகளுக்கு இப்போதுதான் தெரிகிறதா? கலைஞர் ஆட்சியில் இருந்தபோது அவரை வானளாவப் புகழுவதையே இவைகள் முழுநேரத் தொழிலாக செய்யவில்லையா? இப்போது ஏன் பல்ட்டி? அதுதான் ஊடகங்களின் புதிய ட்ரெண்ட். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது கலைஞரைப் புகழ்வார்கள், புகழ்வார்கள், புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்(ஆனால் ஜெவின் முந்தைய ஆட்சியைப் பற்றி திட்டி எழுத மாட்டார்கள். அமைதி மட்டுமே காப்பார்கள். அது வேற டாபிக் என்பதால் அது இப்போது வேண்டாம்.)
தினமலர் ராமசுப்பையரின் ஸ்டாம்ப் வெளியீட்டிற்கு கலைஞரைக் கூப்பிடுவார்கள். அவரும் போவார், வெளியிடுவார். பின் தினமலரில் கலைஞர் புகழாரங்கள் களைகட்டும். விகடன் குழுமம் அதன் என்ஸைக்ளோபீடியாவை வெளியிட கலைஞரைக் கூப்பிடுவார்கள். இவரும் போனார். வெளியிட்டார். வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அங்கேயே அப்போதே அரசு நூலகங்கள் அனைத்திலும் விகடன் என்ஸைக்ளோபீடியாவை வாங்கவேண்டும் என உத்தரவு போட்டார். விகடனில் கலைஞர் புகழாரம் கொடிகட்டியது! குமுதம் ஆசிரியர் தன் குடும்ப குழப்பங்களாலேயே அடித்து விரட்டப்பட்டபோது கலைஞரின் காலில் தஞ்சமடைந்தார். கலைஞரும் அந்த விசப்பாம்பை காப்பாற்றினார். பின் குமுதத்திலும் கலைஞர் புகழாரம்!

2011ல் ஆட்சி மாறியது!! மாறியவுடன் ஜெவைப் புகழ்கிறார்கள், புகழ்கிறார்கள் புகழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்... ஜெ ஆட்சியில் எதாவது அவலம் மக்களுக்குத் தெரியவரும்போதெல்லாம் கலைஞரைத் திட்டுவார்கள். கடந்த பத்து மாதங்களில் 99% அட்டைப் படங்கள் கலைஞரையும், கலைஞர் குடும்பத்தினரையும் தாங்கித்தான் வெளிவந்தது!!  கலைஞர் வாழ்க்கையில் அவர் செய்த தப்புக்கள் எல்லாம் இவர்களுக்கு ஜெ ஆட்சியில் இருக்கும்போதுதான் கண்ணுக்குத் தெரியும். கலைஞரின் கக்கூசில் ஒளிந்திருந்து பார்த்ததைப் போல அவர் மூத்திரத்தின் நிறத்தைக் கூட எழுதுவார்கள். ஆட்சியாளர்களை திருப்திப் படுத்துவதில் அவ்வளவு கடமையுணர்ச்சி. ஜெயலலிதா அரசைப் பற்றி கேட்க வேண்டாம். ஒரு லட்ச ரூபாய் திட்டத்தை விளம்பரப்படுத்த ஒரு கோடி ரூபாய் செலவழிக்கும் புரட்சிகர அரசு! சும்மாவே ஆடும் இவர்களுக்கு வாயில் வாழைப்பழத்தை வைத்தால் சும்மாவே இருப்பார்கள்? சும்மா இருந்த நாயை சொரிந்துவிட்டதைப் போல திமுகவின் மேல் கொலைவெறி கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.  உதாரணத்திற்கு லயோலா போராட்டத்தை ஜெ அரசு 'மொக்கை'யாக்கிதைப் பற்றி யாரும் பேசிவிடக் கூடாதாம். அதனால் அவசர அவசரமாக ஆ.வியில் கலைஞரையும் ஈழத்தையும் பற்றி ஒரு வயிற்றெரிச்சல் கட்டுரை. 2009ல் தானே அதெல்லாம் நடந்தது? அப்போது என்ன '*******'க் கொண்டிருந்தார்களா? இல்லை 2009ல் வெளியிடவேண்டிய இதழ்களை 2013ல் வெளியிடுகிறார்களா? கலைஞர் இப்போது முதல்வர் என்றாலும் இப்படி எழுதுவார்களா? கொஞ்சம் நிதானமாக கட்சி பேதமின்றி இந்த ஊடகங்களின் பொறுக்கித்தனத்தை யோசித்துப் பாருங்கள்.

ஜெயலலிதாவையும், கலைஞரையும் நாம் திட்டுகிறோம். அவர்களால்தான் எல்லாம் எனப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் யார் குற்றவாளிகள் எனத் தெரிகிறதா? இப்போது இப்படி எழுதுகிறார்களே, அடுத்தமுறை ஆட்சி மாறியவுடன் அப்படியே பல்டி அடித்து திமுகவின் காலை நக்கத் தொடங்கிவிடுவார்கள். இதுதான் காலம்காலமாக தமிழக ஊடகங்களின் ட்ரெண்ட்!

நாம் என்ன செய்வோம்? "உன்னைத் திட்டுனா நான் படிப்பேன் என்னைத் திட்டுனா நீ படிப்ப" என மாற்றி மாற்றி இந்த பிச்சைக்காரர்களுக்கு உணவிட்டுக்கொண்டிருக்கிறோம். இவர்களும் உடல்மாறி உடல்மாறி ஒட்டு உண்ணிகளைப் போல நம் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.

ஒரு சின்ன உதாரணம். வைகோ ஈழப்போராட்டத்தைப் பற்றி உணர்ச்சிகரமாக பேசிய ஒரு பேட்டியை "வைகோ தமாஷ் பேட்டி" என வெளியிட்டிருந்தது தினமலர். அதை வைகோவை பிடிக்காதவர்கள் எல்லாம் பகிர்ந்தார்கள். பின் கலைஞரை கிண்டல் செய்து தினமலர் வெளியிட்டால் அதை மதிமுககாரர்கள் உள்ளிட்ட கலைஞரைப் பிடிக்காதவர்கல் பகிர்கிறார்கள். இப்படித்தான் இந்த கொசுக்கள் இதுவரை உயிர்வாழ்ந்து வருகின்றன.

அன்பு மக்களே. நீங்கள் எந்தக் கட்சி எந்த இயக்கம் என்ன கொள்கை என்றாலும் பரவாயில்லை. ஒன்றே ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். நாட்டை சீரழிப்பது அரசியல்வாதிகளோ, சினிமாக்களோ அல்ல. ஊடகங்கள். ஆனந்தவிகடன், குமுதம், தினமலர் போன்ற ஊடகங்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை காலை நக்கி தண்ணீர் குடிக்கிறவர்கள். உங்கள் கருத்தையே அவர்கள் எழுதினாலும் அதனால் அவர்களுக்கு லாபம் இருந்தாலேயொழிய எழுத மாட்டார்கள். உங்கள் எதிரியை இன்று திட்டுவதால் அதை ஆதரிக்காதீர்கள். நாளையே ஆட்சியும், காட்சியும் மாறினால் உங்களைத் திட்டுவார்கள். முதலில் இந்த ஒட்டுண்ணி ஊடகங்களை தமிழ்நாட்டில் இருந்து அகற்றினாலேயொழிய, முடக்கினாலேயொழிய உருப்படியாய் எதுவுமே மக்களால் செய்யமுடியாது. செய்யவும் விடமாட்டார்கள்!!!

Tuesday, March 12, 2013

சந்திரபாபுவும் எம்ஜிஆரும். சில உண்மைகள்
"செத்துட்டா? மன்னிச்சிரலாமா? அப்போ ஹிட்லரையும் மன்னிச்சிரலாமா?" என விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.  இறந்தவர்கள் கடவுள்களாக வணங்கப்படும் நம் சமூக வாழ்க்கையில் அவர்களின் பெருமை பேசி, புகழ் பரப்ப மட்டுமே செய்கிறோமேயொழிய அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் செய்துபோன பிழைகளையும், அப்பிழைகள் நம்மிடையே விட்டுச்சென்ற நிரந்தர வடுக்களையும் நாம் கவனத்தில் கொள்வதில்லை.

நமக்கு நம் சமகால அரசியல்வாதிகளின் குணங்களைப் பற்றி தெரிகிறது. ஆனால் நம் முந்தைய தலைமுறை அரசியல்வாதிகள் மீதான நம்மது எண்ணம் பெரும்பாலும் 'glorify' செய்யப்பட்டதாகவே இருக்கிறது. முத்துராமலிங்கம்(தேவர்), எம்.ஜி.ஆர், ராஜாஜி, பாலகங்காதர் திலகர் என இந்தப் பட்டியலின் நீளம் மிக மிக அதிகம். இந்த தலைவர்களின் ஒருசில முகங்கள் நல்லவைகளாக இருந்திருக்கலாம். ஆனால் இறந்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நல்ல முகங்களை மட்டுமே பிரதானப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்தக் குறிப்பிட்ட பதிவு எம்.ஜி.ஆரின் ஒரு உண்மை முகத்தைப் பற்றி.

சந்திரபாபு எனக்கு மிகவும் பிடித்த நடிகர், பாடகர், இசையமைப்பாளர் (அவர் பாடிய நிறைய பாடல்களுக்கு Ghost music directorஆக இருந்திருக்கிறார்), நடனக் கலைஞர். 46 வயதிலேயே இறந்துவிட்ட அவரைப் பற்றி பேசும்போதெல்லாம் பெரியவர்கள், "பாவம். அவன கொன்னதே எம்.ஜி,ஆர்தான்" எனக் கூறக் கேட்டிருப்போம்.


சந்திரபாபு திரையுலகத்தில் கொடிகட்டிப் பறந்த காலம் அது. மனதில் பட்டதை ஒளிவுமறைவில்லாமல், எந்த மேற்பூச்சும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கர்வமிகு கலைஞன் சந்திரபாபு. சிலர் அவரது இந்த குணத்தை திமிராகவும், சிலர் பைத்தியக்காரத்தனமாகவும் கூட வர்ணித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சந்திரபாபுவின் இயல்பே அப்படித்தான்! ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாத நேரத்தில், சிகரட் வாங்கித்தருகிறேன் என யாரேனும் நண்பர்கள் சொல்லும்போது, "என் ப்ராண்ட் கோல்டு ஃப்ளாக். ஒன்னு பதினைஞ்சு பைசா. முடிஞ்சா அத வாங்கிக்கொடு. இல்லேனா வேணாம்" என்பாராம்! அதனால் சந்திரபாபுவின் திமிர் இடையில் வந்ததல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

எம்.ஜி.ஆரை சின்னவர், வாத்தியார் என சினிமாத்துறை அழைத்துக் கொண்டிருக்க, 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்' என அழைத்த ஒரே ஆள் சந்திரபாபு. அப்போதைய சினிமா பத்திரிக்கைகளில் தான் அளித்த பேட்டிகளிலும், கட்டுரைகளிலும் அப்படியே குறிப்பிட்டிருக்கிறார். "எம்.ஜி.ஆர் அனைவரும் தன்னை மட்டுமே புகழ வேண்டும். எல்லாவற்றிலும் தான் மட்டுமே தெரிய வேண்டும் என நினைப்பவர் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சந்திரபாபு. சிவாஜி நல்ல நடிகர் ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டத்தை அவர் விளக்க வேண்டும், ஜெமினி கணேசனின் பணம் சம்பாதிக்கும் தந்திர குணம் தனக்கு எப்படி உதவியது என்பது குறித்து கூட வெளிப்படையாக எழுதி அவர்களின் கோபத்தை சம்பாதித்திருக்கிறார். ஆனால் வெளிப்படையாக கோபத்தை காட்டாத மனிதர் எம்.ஜி.ஆர். சந்திரபாபு மீது தனக்கு உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்த கோபத்தை, பழியை தீர்த்துக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் ஏற்பட்டது. கர்வம் நிறைந்த வெள்ளந்தியான சந்திரபாபுவே அதற்கும் வழி அமைத்துக் கொடுத்தார்!

விஜி எனப்படும் வி.கோவிந்தராஜூலுவும், தயாரிப்பாளர் சுப்பையாவும் படம் தயாரிப்பதைப் பற்றி சந்திரபாபுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தன் மனதில் இருந்த மாடிவீட்டு ஏழை கதையைச் சொன்னார் சந்திரபாபு. மிகவும் புரட்சிகரமான கருத்துக்களை நகைச்சுவையாய் சொல்லும் கதையாக இருந்ததால் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் அப்போது பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று கண்டிஷன் போட, சந்திரபாபுவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து எம்.ஜி,ஆரைச் சந்திக்கப்போனபோது இருவரும் ஏதேதோ பேசிவிட்டு, இறுதியில் விசயத்திற்கு வந்தார்கள். உடனே ஒப்புக்கொண்ட எம்.ஜி.ஆர் தன் சம்பளமாக ஒரு பெரிய ஆறிலக்கத் தொகையைக் கேட்டார். அதில் பாதியை வெள்ளையாகவும், மீதியை கறுப்பாகவும் கொடுக்கவேண்டும் என்ற கண்டிஷனுடன். (இதை எல்லாம் பிலிமாலயா பத்திரிக்கையில் தன் 'மாடி வீட்டு ஏழை' தொடரில் எழுதியிருக்கிறார் சந்திரபாபு) கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்ட சந்திரபாபு பூஜை தேதியை அறிவிக்கும்போது முன்பணம் 25000ரூபாயைக் கொடுக்கிறேன் என கூறிவிட்டு வந்தார்.

பின் விஜியும், சுப்பையாவும் சந்திரபாபுவையும் ஒரு பங்குதாரராக வற்புறுத்த கதை மேல் கொண்ட நம்பிக்கையில் சம்மதித்து அனைத்து பத்திரங்களிலும் கையெழுத்தும் போட்டார் சந்திரபாபு. தேதி குறிக்கப்பட்டு சந்திரபாபுவின் தோழி சாவித்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கண்ணதாசன் இரண்டு பாடல்களை எழுதி 10000ரூபாய் வாங்கிக் கொண்டார். அடுத்து எம்.ஜி.ஆருக்கு முன்பணம் கொடுக்கவேண்டிய கட்டம்.

இந்த காலகட்டத்தில் சுப்பையாவிடம் நிறைய பணம் புழங்கியதால் ஒரே நேரத்தில் எட்டு படங்களை அறிவித்து யாருமே எதிர்பாரா வண்ணம் மொத்தமாக திவாலானார் சுப்பையா. வி.ஜியோ தலைமறைவே ஆகிவிட்டார்! அதிர்ச்சியடைந்த சந்திரபாபு சாவித்ரியிடம் 25000 ரூபாய் கடன் வாங்கி அதை எம்.ஜி.ஆரின் தோட்டத்தில் அவரைச் சந்தித்துக் கொடுத்தார். இந்த சம்பவத்தை சந்திரபாபு, "25000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, "பாபு சார். அருமையாகச் செய்துவிடுவோம். போய் வேலையைப் பாருங்கள்" எனக்கூறிவிட்டு ஒரு மரத்தடிக்குச் சென்று ரூபாய் நோட்டுக்களை இடுப்பில் செருகிக் கொண்டார். அவ்வளவுதான். அவர் வயிற்றில் என் பணம் சங்கமம் ஆகிவிட்டது" என எழுதியிருப்பதைப் படிக்கும்போது நமக்கே வயிற்றைக் கலக்குகிறது.

பின்தான் எம்.ஜி.ஆரின் பழிவாங்கும் படலம் ஆரம்பித்தது. சந்திரபாபுவோ கடனுக்கு மேல் கடன் வாங்கி படத்தை வளர்க்க, எம்.ஜி.ஆரோ நான்கு நாட்கள் மட்டும் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டு பின் வருவதையே நிறுத்திக்கொண்டார். சந்திரபாபு அலையாய் அலைந்து ஒரு ஸ்டூடியோவின் வாசலில் எம்.ஜி.ஆரைக் கண்டுபிடித்து அவரிடம் பேசப் போயிருக்கிறார். பாபுவைக் கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர் அங்கிருந்த அசோகனை அழைத்து அரைமணி நேரம் ஏதேதோ பேசி பாபுவை கவனிக்காதவர் போலவே அரை மணி நேரத்திற்கும் மேலாக கால்கடுக்க நிற்க வைத்திருக்கிறார். பின் ஒருவழியாக 'கால்ஷீட்டை எல்லாம் அண்ணன் தான் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்" எனக் கூறி சென்றுவிட்டாராம் புரட்சித்தலைவர்மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

பாபு தன் சொத்துக்கள் அனைத்தின் மீதும், புதிதாக 19 கிரவுண்டில் தான் கட்டிவந்த வீட்டின் மீதும் கடன் வாங்கி 3000 அடிவரை படத்தை எடுத்தபின் படம் எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டின்மையால் நின்றிருக்கிறது. ஆசை ஆசையாகக் கட்டிய இந்த வீட்டைப் பற்றி மனோரமாவிடம் அடிக்கடி, "மனோரமா..  கீழேயிருந்து கார் நேரா ரெண்டாவது மாடிக்கு போய் நிக்கிற மாதிரி 19 கிரவுண்டுல ஒரு வீடு கட்டிட்டு இருக்கேன். அப்படி ஒரு வீட்டை எங்கயாவது பாத்தா சொல்லு.. குண்டு வச்சிடுவோம்.." என்று வேடிக்கையாகச் சொல்வாராம். "படப்பிடிப்பு நாள் தள்ளிப்போக தள்ளிப்போக விநியோகஸ்தர்களும், கடன் கொடுத்தவர்களும் என் கழுத்தை நெறிப்பார்கள். தயவுசெய்து எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கொடுங்கள்" என சக்கரபாணியைப் பார்த்துக் கெஞ்சிய சந்திரபாபுவிற்கு அவமரியாதையும், கெட்டவார்த்தைகளில் அர்ச்சனையும் மட்டுமே கிடைத்திருக்கிறது. கோவமடைந்த சந்திரபாபு ஒருகட்டத்தில் பொறுமையிழந்து அங்கிருந்த 'சேர்'ஐ எடுத்து சக்கரபாணியை அடிக்கப் பாய்ந்திருக்கிறார். அன்றோடு அவ்வளவுதான்!! புகழின் உச்சியில், பணத்தின் உச்சியில் இருந்த சந்திரபாபு ஒட்டுமொத்தமாய் சரிந்து விழுந்து செத்ததற்கு முத்தாய்ப்பு இந்நிகழ்வுதான்.

சந்திரபாபு குடி விரும்பி. அதுவும் மேல்நாட்டு ஸ்டைலில் குடிப்பதை மிகவும் விரும்புகிறவர். ஆனால் அவரிடம் இருந்த ஒரு நல்லபழக்கம், படப்பிடிப்பு நாளில் என்ன ஆனாலும் குடிக்க மாட்டார். அப்படிப்பட்ட சந்திரபாபு முழுநேரக் குடிகாரனாக, போதை மருந்துக்கு அடிமையாக மாறியதை இப்படிச் சொல்கிறார், "தினமும் அளவோடு குடிப்பவன் நான். என்றைக்கு 'மாடி வீட்டு ஏழை' படம் எடுக்கத் துணிந்தேனோ அன்றிலிருந்து மொடாக்குடியனாக மாறிவிட்டேன். பின் அதுவும் பத்தாமல் 'பெத்தடின்' எனும் போதைமருந்துக்கும் அடிமையாகிவிட்டேன்".

எம்.ஜி.ஆரின் ஒரு முகம் இப்படியென்றால் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு குட்டிச் சம்பவம் எம்.ஜி.ஆரின் இன்னொரு கோர முகத்தையும் காட்டுவதாய் இருக்கிறது.

மாடி வீட்டு ஏழை நட்டத்திற்குப் பின் சீரழியத்துவங்கிய சந்திரபாபுவின் வாழ்க்கை நாளடைவில் மொத்தமாகக் கெட்டது. போதைப் பழக்கத்தால் உடல்நிலை கெட, பட வாய்ப்புகளும் இல்லை. எப்போதாவது ஏதாவது ஒரு படம் என வாய்ப்பு வந்தது. இரண்டு வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆருடன் 'அடிமைப் பெண்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புக்கொண்டார் சந்திரபாபு.  ஒரு காட்சியில் சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் மேல் ஏறி தப்பிப்பதைப் போல் காட்சி. சந்திரபாபு தவறிவிழப் போக அவரை தாங்கிப் பிடித்து காப்பாற்றியிருக்கிறார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பிற்கு ப்ரேக் விடப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திர்ருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கோ வரவில்லை! "என்ன சாப்பிடலையா?" என கேட்ட எம்.ஜி.ஆர், "இன்னைக்கு என் சாப்பாட்டை சாப்பிடுங்கள்" என 'ஒருமாதிரி'யாகக் கூறிவிட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோவமாக இருக்கிறார் என குழம்பியிருந்த சந்திரபாபுவிடம் "நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவருக்குப் பிடிக்கவில்லை" என ஜெயலலிதா சொல்லி தெளிவித்திருக்கிறார்!!!!!

இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடும்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை "அங்கிள்" என்றுதான் அன்பொழுக கூப்பிடுவாராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆருக்கு அப்படி கோபம்!!
இதைப் படித்த போது இன்று தமிழக முதல்வராக, அமைச்சரவையையே தன் காலடியில் கிடத்தியிருக்கும் ஜெயலலிதாவின் அந்த காலத்தைய வாழ்க்கையை நினைத்தபோது வேதனையும், பரிதாபமுமே ஏற்படுகிறது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு சந்திரபாபு வாழ்ந்தது மிக சொற்பகாலம்தான். சகலகலாவல்லவனாக விளங்கிய சந்திரபாபு நாற்பத்தியாறு வயதிலேயே தன் உடல்வலுவை எல்லாம் இழந்து, ஒரு சொத்தும் இல்லாமல் பிச்சைக்காரராக செத்தார். அவரது கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக்கொண்ட மூன்று நண்பர்கள் தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி. அவரது இறுதிச் சடங்கையும் இவர்களே செய்தனர்.

எம்.ஜி.ஆரைப் பற்றிய சந்திரபாபுவின் அனுபவங்களை அவர் எழுத்திலேயே உணர்ச்சி பொங்க படிக்கும் போது, "what you see is the tip of an iceberg" என மனிதர்களின் குணத்தைப் பற்றி சிக்மண்ட் ஃப்ராய்டு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது! மனிதர்கள் முழுமையான புரிதலுக்கு அப்பாற்ப்பட்டவர்கள். அவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என அவ்வளவு சுலபமாக அட்டவணைப்படுத்திவிட முடியாது! மனிதனின் குணம் ஆழமானது, புதிரானது. அதை முற்றிலும் புரிந்துகொள்ள நிச்சயமாக வேறொரு மனிதனால் முடியாது! ஏன்? சில நேரங்களில் அந்தந்த மனிதனுக்கே கூட அது முடியாத காரியம் தான்!!


(மேலும் தகவல்களுக்கு, 'சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்'-முகில்.  சிக்த் சென்ஸ் பதிப்பகம்')

Wednesday, March 6, 2013

இந்திய கலாச்சாரத்தின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் -டான் அசோக்இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்தியா எப்படிப்பட்ட நாடு என்று இந்தியர்கள் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்? இந்தியா என்பது மகா-கலாச்சாரம் பொருந்திய நாடு என்பதே பெரும்பான்மைக் கருத்தாக, வெளிப்பாடாக இருக்கிறது!! பற்றாக்குறைக்கு இந்தியாவை மேலோட்டமாக சுற்றிப் பார்த்த சில மேற்கத்திய 'அறிவுஜீவுகள்' இந்தியாவை அப்படியான, இப்படியான நாடு என்றெல்லாம் புகழ்ந்து எழுதியதும் உண்டு! ஆனால் உண்மையில் இந்தியக் கலாச்சாரம் என்பது காலம்காலமாக இந்திய நாட்டில் நிலவும், இந்திய ஆண்கள் இந்தியப் பெண்களை அடக்கி ஆள்வதற்காகவே வடிவமைத்த ஒரு 'ட்ரெயினிங்' முறை!
இந்த ட்ரெயினிங் முறை என்ன சொல்கிறது? பெண் ஒழுக்கமாய் இருக்கவேண்டும், பெண் உடலை மறைக்க வேண்டும், பெண் கற்போடு இருக்க வேண்டும், பெண் இழுத்துப் போர்த்த வேண்டும், பெண் குடிக்கக் கூடாது, பெண் ஊர் சுற்றக் கூடாது, பெண்ணுக்கு ஒரு கணவன் தான் இருக்க வேண்டும்! ஆக பெண்களுக்கு மட்டுமே சட்டதிட்டங்களை ஒதுக்கித் தந்திருக்கும் ஒரு 'கலாச்சாரத்தை' எப்படி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான கலாச்சாரமாக எடுத்துக் கொள்வது? இந்தியப் 'பெண்' கலாச்சாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்! சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மது அருந்துவது தவறு எனச் சொல்வது சமூக நலன். உலக அளவில் பல நாடுகளும் இதைச் சொல்கின்றன, ஆனால் பெண்கள் மது அருந்துவது தவறு எனச் சொல்லும் 'தன்மை' வாய்ந்த விஷமத்தனமானது தான் இந்தியக் கலாச்சாரம்.
இந்தியா கலாச்சாரமிக்க நாடாக சினிமாக்களிலும், கதைகளிலும், நாடகங்களிலும், நாவல்களிலும் தன்னை தொடர்ந்து பறைசாற்றி வரும் சூழலில் இந்தியாவில் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் குறையாமல் வன்புணர்வுகள் நடக்கின்றன‌. வன்புணர்வு சம்பவங்கள் ஒருபுறமிருக்க, இந்திய ஆண்களில் கொத்தனார்-சித்தாளில் இருந்து மேலாளர்-டைப்பிஸ்டிடம், டீம் லீடர் - டீம் மெம்பரிடம் என்பது வரை எதோ ஒரு வகையில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவும், தொல்லையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவும் போக வயது வந்த ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான ஒரு சம்பவத்தை மனதில் புதைத்து வைத்திருக்கிறார்கள். உச்சக்கட்ட கொடுமை இந்திய கலாச்சாரத்தின்படி பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணை இந்திய சமூகம் ஒரு குற்றவாளியைப் போல நடத்தும் என்பதுதான்!!
பாலியல் என்ற சொல்லின் அர்த்தம் என்ன? பால்+இயல். அதாவது பாலினம் சார்ந்த அறிவு அல்லது படிப்பு. இந்த சொல்லை இந்திய சமூகத்தில் சாதாரணமாக ஒரு குடும்பம் உபயோகப்படுத்துகிறதா? முடியுமா? கிடையாது! பாலியல் என்றாலே ஏதோ கெட்டவார்த்தை போன்ற ஒரு தோற்றமே இருக்கிறது. சராசரி இந்தியக் குடும்பங்களிலும், ரஜினி, சிரஞ்சீவி போன்ற இந்தியக் கலாச்சார ட்ரெயினர்களாலும் எப்போதும் உபதேசிக்கப்படும் சில வரிகளைப் பார்ப்போம்,
"நீ மட்டும் உண்மையான ஆம்பிளைன்னா.."
"நீ நிஜமாவே மீசை வச்ச ஆம்பிளைன்னா.."
"உங்க ஆத்தா ஒன்ன ஒருத்தனுக்கு பெத்திருந்தான்னா..."
"ஒரு பொம்பளைப் புள்ள ஒன்பது மணிக்கு மேல தூங்கலாமா?.."
"பொம்பளைப் புள்ளையா லட்சணமா நடந்துக்க.."
"பொம்பளை உனக்கே இவ்ளோ திமிரு இருந்தா ஆம்பிளை எனக்கு எவ்ளோ இருக்கும்?"
"பொண்ணுன்னா அடக்கம் வேணும், இப்படி ஆடக் கூடாது."
"பொம்பளப் புள்ள வெளிய போனா கெட்டுப் போயிடும். ஆம்பளப் புள்ள வீட்ல இருந்தா கெட்டுப் போயிடும்", இதர, இதர இன்னும் பல! இப்படி கலாச்சாரம் என்ற பெயரில் ஆணாதிக்கத் தனத்தை சிறுவயது முதலே ஆண்பிள்ளைகள் மனதில் விதைத்தால் இந்த சமூகத்தில் ஆண்-பெண் சமநிலை எப்படி ஏற்படும்? பெண் என்றால் தனக்கு கீழ்தான் என்ற மனநிலை வராதா?
இந்தியாவில் பேருக்கு இருபாலர் பள்ளி என நடத்துகிறார்களேயொழிய 99% பள்ளிகளில் ஆண்குழந்தைகளும் பெண்குழந்தைகளும் நண்பர்களாக பழக முடியாத நிலையில் தான் இருக்கிறது. சில பள்ளி, கல்லூரிகளில் இதை பெருமையாகக் கூட கூறுகிறார்கள். ஆண்-பெண் மாணவர்கள் பேசினால் பழகினால் தண்டனை தரும் இருபாலர் பள்ளி, கல்லூரிகள் கூட உண்டு. இப்படி சிறுவயது முதலே பெண்களை 'ஏலியன்கள்' போல தள்ளி தள்ளி வைத்து வளர்க்கும்போது, அச்சமூகத்தில் வளரும் ஆண்கள், பெண்களை சமமாக கருதி வளரும் வாய்ப்பை இழக்கிறார்கள். ஒரு வயதிற்குப் பின் பெண்களை காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் மனநிலை மட்டுமே ஏற்பட்டுவிடுகிறது. கலாச்சாரம், பண்பாடு என நீட்டி முழக்கும் இந்திய ஆண்களில் 90% பேர் பெண்களின் கண்களைப் பார்த்து பேச முடியாத ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் பலருக்கு பெண்கள் என்றாலே கண் மார்பு நோக்கிதான் செல்கிறது!
இப்போது நீங்கள் அன்றாடம் கடந்துபோகும் ஒரு விசயத்தை உங்கள் முன் வைக்கிறேன். அமெரிக்க சினிமாக்களில் ஒரு காதல் ஜோடியோ, திருமண ஜோடியோ இணைகிறதென்றால், இணைவதற்கு அறிகுறியாக உதட்டு முத்தக் காட்சியையோ, உடலுறவுக் காட்சியையோ காட்டுவார்கள். இயல்பு வாழ்க்கையிலும் திருமணமான தம்பதிகள் இதைத் தான் செய்வார்கள். (உடலுறவுக் காட்சிகள் வயது வந்தோர்க்கான ‘A’ படங்களில் மட்டுமே இருக்கும். அமெரிக்கக் குழந்தைகள் இக்காட்சிகளைப் பார்க்க முடியாது.) நம்மூர் சினிமாவில் என்ன நடக்கிறது? நாயகன், நாயகியின் தொப்புளில் பம்பரம் விடுவான், பாடல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி ஆடுவார்கள், கதாநாயகி மார்பை மட்டும் ஆட்டும்போது காமிரா அங்கே ஜூம் போகும், பின்புறத்தைக் காட்டுவார்கள், இப்படி எவ்வளவோ! படத்தைப் பார்க்கும் ஆணின் மனதில் ‘காம உணர்வு’ வரவேண்டும்; ஆனால் அதே நேரத்தில் 'A' படமாகவும் ஆகிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இக்காட்சிகள் வைக்கப்படுகின்றன. இதில் என்ன பெரிய கொடுமை என்றால் மனித இயல்பான உடலுறவுக் காட்சிக்கு ‘A’ சான்றிதழ் கொடுக்கும் சென்சார் போர்டு இதுபோன்ற வக்கிரக் காட்சிகளுக்கு ‘A’ கொடுப்பதில்லை.
ஆக வெகுஜனப் படங்களாக இக்காட்சிகளை தாங்கி வெளிவரும் திரைப்படங்களையும், பாடல் காட்சிகளையும் நம் மக்கள் தங்கள் குழந்தைகள் சகிதமாக குடும்பத்துடன் கண்டுகளிக்கிறார்கள். இந்திய சமூகத்தில் உடலுறவு என்பது ஆபாசமாகவும், பெண் உடலைச் சார்ந்த வக்கிரக் காட்சிகள் சாதாரணமாகவும் மக்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நம் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே ஆபாசங்களும், வக்கிரங்களும் வெகுஜனப் பொழுதுபோக்குகளில் இரண்டறக் கலந்திருப்பதுதான்.
இதற்கு மிகச்சரியான உதாரணம் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் டைம்பாஸ் பத்திரிக்கை. பொழுதுபோக்கு என்ற பெயரில் வெளிவரும் அவ்விதழ் ஆதி முதல் அந்தம் வரை வக்கிரமான படங்களையும், ஆபாசக் கதைகளையும் தாங்கி வருகிறது. வெகுஜனப் பத்திரிக்கை என்ற முகமூடியுடன் வெளிவரும் இத்தகைய புத்தகங்களைப் படிக்கும், அல்லது தொப்புளில் ஆப்பாயில் போடும் திரை காட்சிகளைப் பார்க்கும் ஒரு குழந்தையின் மனநிலை என்ன ஆகும்? மனதில் என்ன பதியும்? மேற்கத்தியக் கலாச்சாரம் வக்கிரமானது எனச் சொல்ல இந்தியர்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும்!!
இது ஒரு பக்கம் என்றால் ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, வி.எச்.பி, மற்றும் சில இஸ்லாமிய மதவாதிகள் ஒருபுறம் 'பெண்கள் குடித்தால் அடிப்போம், பெண்கள் ஆடினால் அடிப்போம், ஜீன்ஸ் போட்டால் ஆசிட் ஊற்றுவோம்' என மதம் சார்ந்த கலாச்சாரத்தைக் காக்கக் கிளம்பியிருக்கிறார்கள். அண்மையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஓர் 'அருமையான' கருத்தை உதிர்த்திருக்கிறார். அதாவது பெண்கள் அடுப்படியில் இருந்தவரை எந்த வன்புணர்வு சம்பவங்களும் நடக்கவில்லையாம். மேற்கத்திய கலாச்சாரம் வந்தபின் தான் இச்சம்பவங்கள் நடக்கிறதாம்! ஒருவன் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் உயிரோடிருப்பதுதான் எனச் சொல்வதைப் போன்ற முட்டாள்தனமான கருத்து தானே இதுவும்?? ஆனால் இதையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் காட்டுமிராண்டிகள் ஏராளமாக இந்தியாவில் உண்டு. கண்டிப்பாக தடை செய்யப்படவேண்டிய இந்த பயங்கரவாத இயக்கங்கள் இளைஞர்களுக்கு கற்று கொடுப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். பெண் என்பவள் அடிமை என்ற கருத்தை மட்டுமே!
சரி. இத்தோடு விட்டார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு வன்புணர்வு நிகழ்வின் போதும் பெண்களின் உடைப் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். அண்மையில் பாண்டிச்சேரியில் ஒரு 12ஆம் வகுப்புப் பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து புதுவை அரசு ஒரு உலகப் புகழ் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, இனி பள்ளி மாணவிகள் சீருடையுடன் சேர்த்து 'ஓவர்கோட்' அணியவேண்டும் என்கிறது உத்தரவு! இத்தகைய அணுகுமுறையை சமூகத்தில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் பொருத்திப் பார்த்தால் என்ன ஆகும்? கொள்ளையடிக்கப்படும் வாய்ப்பிருப்பதால் யாருமே பணம் வைத்திருக்கக் கூடாது, கொலை செய்யப்பட வாய்ப்புள்ளதால் யாரும் உயிரோடிருக்கவே கூடாது போன்ற கேலிக்குரிய சட்டங்களில் தான் போய் முடியும்! ஒரு மாநிலத்தின் அரசே இவ்வளவு பிற்போக்குத்தனமாக செயல்பட்டால் குடிமக்களைப் பற்றி என்ன சொல்வது!!!
தண்டனைகளைக் கடுமையாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் நியாயமானதாக இருந்தாலும், உண்மையில் நடப்பதென்னவோ துப்பறிவதில் உள்ள குறைபாடு தான். விஞ்ஞான ரீதியில் சாட்சிகளைச் சேகரிக்காமல் இன்னமும் நம் நீதித்துறை மனித சாட்சிகளையே பெரிதும் நம்பியிருக்கிறது. பெரும்பாலும் பாதிக்கப்படும் பெண்ணும் குற்றவாளியும் மட்டுமே இருக்கும் ஒரு பாலியல் குற்றச் சூழ்நிலையில் நடந்ததைப் பற்றி வேறு யார் சாட்சி சொல்வார்கள்? சாட்சிகள் இல்லாததால் ஏராளமான வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அவலம் தொடர்கிறது. பெரும்பாலும் அக்குற்றவாளிகள் தங்களது அடுத்து குற்றத்தை அரங்கேற்றி விடுகிறார்கள். டி.என்.ஏ போன்ற விஞ்ஞான ரீதியிலான சாட்சிகளை இவ்வழக்குகளில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதை மேலோட்டமாகப் பார்த்தால் அது சமூகத் தோலில் ஏற்பட்டிருக்கும் ஒரு 'கட்டி'. ஆனால் அக்கட்டியின் வேர் சமூகத்தின் அடி ஆழம் வரை நீள்கிறது, ஒரு இந்தியக் குழந்தை பிறந்த அடுத்த நொடியில் இருந்தே அது வேர்விடத் துவங்குகிறது. மேலோட்டமாக இக்கட்டியை நீக்கினாலும், நீக்க முற்பட்டாலும் அது தற்காலிகமான தீர்வாக இருக்குமேயொழிய கட்டிகள் தோன்றுவதை தடுக்க முடியாது. இந்தியாவில் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நிலவும் புற்றுநோய் வேரோடு தோண்டியெடுக்கப் பட்டாலேயொழிய நிரம்பி வழியும் பாலியல் குற்றங்களை குறைக்க முடியாது. இப்புற்றுக்கு பால் வார்க்கும் கலாச்சாரக் காவலர்களான மதவாதிகள் கடும் தண்டனைக்குரியவர்கள். இப்புற்றும், இப்புற்றுக்குள் இருந்து உண்டு கொழுக்கும் பாம்புகளும் முற்றிலும் நீக்கப்படும்வரை தாமினிகளும், வினோதினிகளும் உருவாகி உருவாகி மரித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.
ஒரு நிமிடம்! பெண்களை இரவில் வெளியே வீதிக்கோ, சினிமாவுக்கோ, நைட் கிளப்புக்கோ அனுப்பலாமா? ஆபத்தா? ஜீன்ஸ் போடலாமா வேண்டாமா? அதெல்லாம் விட்டுத் தள்ளுங்கள் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நம் வீட்டுப் பெண்களை இரவில் தனியாக காவல் நிலையம் அனுப்ப முடியுமா? அனுப்புவோமா?!! காவல் நிலையங்களே பெண்களுக்கு எதிரான, பயம் தரும் இடங்களாக இருக்கும் ஒரு நாட்டில் என்ன கடுமையான சட்டம் இயற்றி என்ன பயன் இருக்கப் போகிறது?


நன்றி www.keetru.com

Monday, March 4, 2013

ஒழுங்காக காதலிப்பது எப்படி? -டான் அசோக்

நமது தமிழக ஆண் சமூகத்தின் 'லட்சணம்' முகநூலைப் பார்த்தாலே தெரியும். ஃபிகர் (அது போலி ஃபுரபைலாதான் 90% இருக்கும்) ஃபோட்டோக்கு கீழ போய் "ஹாய் யூ லுக் லைக் ஏஞ்சல்'னு போடுறது, 'ப்ளீஸ் ஆட் மீ ஏஸ் யுவர் ஃபிரண்ட்'னு போடுறது, 'ஹேய். வீ வில் பி பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ். வாட் யூ சே'னு எழுதறது. "எங்க பப்பி இன்னைக்கு பாத்ரூம் போகல"னு போட்டா கூட பதறி துடிச்சு லைக்கும் கமண்ட்டும் போடுறது! இப்படிலாம் பசங்களை பசங்களே அசிங்கப்படுத்துனா அப்புறம் ஃபிகருங்க எப்படி பசங்கள மதிக்கும்? சோ.. ஒரு ஃபிகரை கரக்ட் பண்ண என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது? அந்த காதல காப்பாத்த என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது போன்ற சில முக்கியமான பாயிண்ட்ஸ் மட்டும் சொல்றேன்... உனக்கேன் இந்த அக்கறை? யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். ஆனால் இதை படித்துமுடித்தவுடன் "நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்" என்பது உங்களுக்குப் புரியும்! சோ.. தொடர்ந்து படிங்க!

1) "நம்ம முகரைக்கெல்லாம் சுமாரான ஃபிகரு தான் கிடைக்கும்"னு நமக்கு நம்மளே முடிவு பண்ணிட்டு டைரக்டா சுமாரான ஃபிகருக்கு ட்ரை பண்ணக் கூடாது. ஆக்சுவலா எல்லா பசங்களும் இப்படி நினைக்கிறதுனால செம ஃபிகரைவிட தமிழ்நாட்டுல சுமாரான ஃபிகர்களுக்குதான் போட்டி அதிகம். இது நாட்டுக்கே ரொம்ப கேடான விசயம். போட்டி அதிகம்ன்றதால ஒரு சுமாரான ஃபிகர் தன்னத்தானே செம ஃபிகர்னு நினைச்சுக்கக் கூடிய கொடூரமான உயிர்க்கொல்லி அபாயங்கள் இதுல இருக்கு! அப்புறம் அந்த கொடுமையையும் நீங்கதான் அனுபவிக்கனும். எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு எடுத்தவுடனேயே செம ஃபிகரையே ட்ரை பண்ணுங்க. இது அழகை வைத்து காதலிப்போர்க்கு மட்டும் தான்! குணம்-மனம் எல்லாம் பார்ப்பவர்களுக்கு சுமாரான ஃபிகரும் 'ஹேலி பெர்ரி' தான்!

2) ஆரம்பத்துலேயே ரொம்ப அலைஞ்சு அலைஞ்சு உங்க ஃபிகருக்கு திமிரு ஏத்திவுட்றக் கூடாது. ஒருநாள் பாக்கனும், ஒருநாள் பாக்கக் கூடாது. முக்கியமா முதல்தடவ பேசுறப்ப அந்த பொண்ணுக்கு நீங்க செம திமிரு புடிச்சவன், ஈகோ புடிச்சவன்னு தோணனும். அப்பதான் நீங்க அடுத்தடுத்த தடவ பேசுறப்ப 'இவ்ளோ ஈகோ புடிச்சவனா இருந்தும் நம்மகிட்ட பேசுறானே'னு அதை நினைச்சு அதுவே பெருமை பட்டுக்கும்! போகப் போக ஈகோவ குறைச்சு லவ்வை ஏத்தனும்! முதல் தடவயே வான்டட்டா போய் போய் வழிஞ்சீங்கன்னா "சனியன் இப்படி வழியுதே"னு மனசுக்குள்ள முடிவுபண்ணி மொக்க லிஸ்ட்ல சேத்துருவாய்ங்க! அப்புறம் லவ் ஊத்திக்கும்!

3) "மச்சி இந்த ஃபிகர் எனக்கு செட் ஆகுமாடா?"னு வர்றவன் போறவன்கிட்டெல்லாம் அட்வைஸ் கேக்க கூடாது. செட் ஆகும்ன்ற நம்பிக்கையும், மன உறுதியும் இல்லேனா கடைசி வரைக்கும் முரளி மாதிரியே அலைய வேண்டியதான். இன்ஸ்பிரேஷன் வேணும்னா ஒரு பத்து நிமிசம் எக்ஸ்பிரஸ் அவென்யூல போய் நில்லுங்க. அட்டு பிகர்களுக்கு நல்ல பசங்களும், நல்ல பொண்ணுங்களுக்கு அட்டு பசங்களும் கிடைப்பதுதான் நம் ஊர் நியதிம்குறது புரிஞ்சிரும்! அதுனாலதான் சொல்றேன், முகரை சரி இல்லேனாலும் முயற்சி முக்கியம்!

4) பெண்களுக்கு என்ன வேணும்ன்ற கேள்விக்கு அந்தக்கால 'ஆதாம்'மில் இருந்து இந்தக்கால ஆதம்பாக்கம் நாராயணன் வரை பதில் தேடி அலையிறாய்ங்க. ஆனா இதோட பதில் ரொம்ப ஈசி! பெண்களுக்கு எல்லாமே வேணும். ஆனா அப்பப்போ அது அது வேணும். இந்த ஃபார்முலாவை மெயிண்டைன் பண்றதுல தான் ஆண்களுக்குப் பிரச்சினை. காதல் தேவைப்படுறப்ப காமத்தையும், காமம் தேவைப்படும்போது காதலையும், அன்பு தேவைப்படும்போது கோபத்தையும், டெட்டி பியர் தேவைப்படும்போது ஸ்பைடர் மேனையும் மாத்தி மாத்தி கொடுத்தா லவ் புட்டுக்கும்!

5) லவ் செட்டாகுற வரைக்கும் நம்ம ஐ.சி.யூலயே அட்மிட் ஆயிருந்தாலும் அவ கால் பண்ணா ஃபோனை எடுத்து உருக உருக பேசுவோம். செட் ஆயிருச்சுன்னா நிலைமை மாறிரும். நம்ம எதாவது உயிர் போற வேலைல பிசியா இருப்போம். அப்ப ஃபோன் பண்ணி ரொமான்ட்டிக்கா பேசுனு உயிரை எடுப்பாங்க. நமக்கு எரிச்சலும் கடுப்பும் மிக்ஸ் ஆகி வரும். ஆனா உள்ள எவ்ளோ எரிஞ்சாலும் வெளிய காட்டிக்காம ஒரு அஞ்சு நிமிசம் பொறுமையா கொஞ்சிட்டு ஃபோனை வச்சிரனும். இதை செய்யாம, "உனக்கு அறிவில்லையா? அது இது"னு கத்துனீங்கன்னா லவ்வுல விரிசல் விழுந்துரும்! காதல் பிஞ்சுட்டிருக்க கேப்ல பெண்கள் ரொம்ப வீக்! அப்புறம் இதுக்குன்னே உங்க ஃபிகரோட ஃபிரண்ட் எவனாவது காத்துக்கிட்டிருப்பான். கிடைச்ச கேப்புல 'ஆறுதல்' சொல்றேன் பேர்வழினு சொற்பொழிவு ஆத்தி ஆத்தியே உசார் பண்ணிருவாய்ங்க!  பல காதல்கள் இப்படிதான் காலி ஆகுது!

6) உங்க ஃபிகரோட ஃப்ரண்டுங்ககிட்ட (பெண் நண்பர்கள்) ரொம்ப கவனமா இருக்கனும். இந்த பசங்க என்னதான் உள்ளுக்குள்ள பொறுமுனாலும் அடுத்தவன் காதலுக்கு ஹெல்ப் பண்ணுவாய்ங்க! ஆனா இந்த பொண்ணுங்க செத்தாலும் அவங்க ஃபிரண்டு லவ்வுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்க. குறிப்பா பையன் அழகா, காமடியா பேசுறவனா இருந்தா அவ்வளவுதான். எப்படா பிரிச்சு விடுறதுனு இருப்பாங்க. அதுனால அதுங்ககிட்ட வாயை அளவோட விடனும்! நீங்க பேசுற எதுவும் உங்களுக்கு எதிராவே நாளை திருப்பப்படலாம்! ஏன்னா வழக்கை அழகாக 'ட்விஸ்ட்' பண்றதுல ஒவ்வொரு ஃபிகரும் ஒரு ராம்ஜெத்மலானி தான்!

7) உங்க ஆளு அவங்க ஃபிரண்ட் (பசங்க)கிட்ட எவ்ளோ பேசுனாலும் கண்டுக்காதீங்க. ஏன்னா லவ் பண்ணிட்டிருக்கப்ப பொதுவா பொண்ணுங்க தப்பு பண்ண மாட்டாங்க. அவங்க லிமிட்ல கரக்டா இருப்பாங்க. அதுனால சும்மா, "அவன்ட்ட பேசாத இவன்ட்ட பேசாத"னு மொக்க போட்டீங்கன்னா அப்புறம் அவங்க ஃபிரண்ட் கூட பேசுறப்ப, "சே... இவன் எவ்ளோ அப்பாவியா இருக்கான். இவன்கூட நம்மளை சேத்து சந்தேகப்பட்டுட்டானே"னு உங்க மேல கோபமும், ஃபிரண்டு மேல சிம்பதியும் வந்து தொலைச்சுரும்! அப்புறம் காலப்போக்குல அது முத்திப் போயி காதலா கூட மாற வாய்ப்பிருக்கு! அதுபோக அந்த காதலுக்கு விதை நீங்க போட்ட மாதிரியும் ஆயிரும்! இந்த அவமானம் நமக்கு தேவையா? அதுனால சந்தேகப்படுறவன் காதலிக்க கூடாது. காதலிக்கிறவன் சந்தேகப்படக் கூடாதுங்குறதை கரக்டா ஃபாலோ பண்ணனும்.

7.2) அதுக்காக, "நீ எவன்கூட வேணாலும் எவ்ளோ நேரம் வேணாலும் பேசுடா செல்லம்... நான் எழவு காத்துட்டு உக்காந்திருக்கேன்"னு இருந்தீங்கன்னா, "என்ன இவன்? நம்மமேல பொசசிவ்நெஸ்சே இல்லாம இருக்கான். நம்மளை இவன் உண்மையா லவ் பண்ணலையோ"னு தோண ஆரம்பிச்சிரும். அப்புறம் அதுவும் பிரச்சினை. அதுனால உண்மைலயே உங்களுக்கு சூடு, சொரணை எதுவுமே வரலேனா கூட கொஞ்சமா கோபப்பட்டுக்கனும். லிமிட் ரொம்ப முக்கியம்!!

8) உங்களை லவ் பண்ற பாவத்துக்காக உங்க ஆளுக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இருக்க கூடாது, எங்க போனாலும் உங்க கூடதான் போகனும், எப்ப பாத்தாலும் உங்க கூடதான் இருக்கனும்னு 'அடம்' புடிக்கக் கூடாது. அவங்க ஃபிரண்ட்சோட, கூட வேலை பாக்குறவங்களோட வெளிய போறது, சினிமாக்கு போறதையெல்லாம் புடிக்கலேனாலும் புரிஞ்சுதான் ஆகனும். அதைவிட முக்கியம் வெளிய அவங்க ஊர் சுத்திட்டு வந்தோன அந்த கதையெல்லாம் சொல்றேன் பேர்வழினு ஒரு கொடூர மொக்கை போடுவாங்க. அதை காது கொடுத்து கேக்குற பெருந்தன்மையும் இருக்கனும். நல்லா தெரிஞ்சுக்கங்க... பெண்களுக்கு பேசுறவனைவிட, கேக்குறவனை ரொம்ப புடிக்கும்! ஏன்னா பெண்களுக்கு பேச ரொம்ப புடிக்கும்!

9) உங்க ஆளோட அண்ணன் ஒரு 'டொக்கு டோங்கிரி'யா இருப்பான். அப்பன் ஒரு காமடி பீஸா இருப்பாரு. ரெண்டு பேருமே, உங்க ஆளு எந்த காலேஜ்ல படிக்குதுனு கூட தெரியாத, என்ன ஆனாலும் கண்டுக்கவே கண்டுக்காத மன்மோகன்சிங்கா இருப்பாய்ங்க. ஆனா, "எங்கப்பா அபியும் நானும் பிரகாஷ்ராஜ் மாதிரி" , "எங்கண்ணன் தங்கைக்கோர் கீதம் டி.ஆர் மாதிரி"னு அப்பப்ப உங்க ஆளு அடிச்சு விடும். உண்மை உங்களுக்கு தெரிஞ்சாலும் மனசுக்குள்ளயே புதைச்சிக்கிட்டு, "எனக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கலையே. எனக்கு இப்படி ஒரு அப்பத்தா கிடைக்கலையே"னு ஃபீல் பண்ற மாதிரி அடிச்சு விடனும். ஏன்னா முக்கால்வாசி ஃபிகருங்க வீட்டை ஏமாத்துறோமேனு ஒரு குற்ற உணர்ச்சியோடயேதான் லவ் பண்ணும்ங்க. அதை சரிகட்டதான் அப்பப்ப அப்பாவையும், அண்ணனையும் புகழ்றது! இது தெரியாம நீங்க "உங்கப்பன் கிடக்கான் தண்டம். உங்கண்ணன் கிடக்கான் முண்டம்'னு உண்மைய பேசுனீங்கன்னா காதல் காலி ஆயிரும்!

10) சாம தான பேத தண்டம் முறைகளை எல்லாம் கடைபுடிச்சும் அந்தக் காதல் புட்டுக்குச்சுனு வைங்க. "செத்துருவேன், கைய வெட்டிக்குவேன், நாக்க புடுங்கிக்குவேன்"னு அடம்புடிக்கப்படாது. காதலை 'break up' செய்ய அவங்களுக்கு எல்லா உரிமையும் (தவறான காரணமாக இருந்தால் கூட) இருக்குன்றதை புரிஞ்சு நாகரீகமா சமாதானப் படுத்த ட்ரை பண்ணா திருப்பி அதே காதல் கிடைக்க வாய்ப்பு இருக்கு. நம்மளே நாளைக்கு நம்ம காதல் தோல்விய நினைச்சுப் பாக்குறப்ப 'காதலி'யை குற்றம் சொல்ற மாதிரி இருக்கனுமேயொழிய நம்மளை நினைச்சு நம்மளே கேவலப்படுற மாதிரி இருக்கக் கூடாது. ஏன்னா நல்ல காதலனா இருக்கோமான்றதை விட நல்ல மனுசனா இருக்கோமான்றதுதான் முக்கியம்!

என்ன செஞ்சும் உடைஞ்ச லவ்வை ஒட்ட வைக்க முடியலைனா காதலை நியாபகப்படுத்தும் எல்லா விசயங்களில் இருந்து ஒதுங்கி இருக்கனும், தூக்கி எறிஞ்சிரனும். ஒரு விலை உயர்ந்த காரை நம்மளால வாங்க முடியலேனா தினமும் அந்த கார் கடைக்கு போய் அது அங்க நிக்குதா? எவன் வாங்குனான்? நல்லா வச்சிருக்கானா?னு பாக்குறது நமக்குதான் மேலும் மேலும் பிரச்சினை. கார் அதுபாட்டுக்கு கிளம்பி போயிரும். நமக்குதான் வலியும் வேதனையும். அதுனால கிடைக்கலேனா அந்தப் பக்கமே போகக் கூடாது!! "காதல்னா பூ மாதிரி. உதிர்ந்தா ஒட்ட வைக்க முடியாது"னு மொக்க டயலாக் பேசாம நமக்கான காதல், காதலி இது இல்லப்பானு அடுத்த காதலுக்காக காத்திருக்க ஆரம்பிச்சிரனும். வாழ்க்கையின் எதார்த்தம் அதான். அப்படி வாழ்க்கையை எதார்த்தமா வாழ்றவன் காதல்ல மட்டுமில்ல எல்லாத்துலயுமே ஜெயிப்பான்! ஆல் தி பெஸ்ட்! :-)Friday, March 1, 2013

வைகோவின் குடைக்குள் மழை. -ஒரு அழுகாச்சி காவியம்!

இந்திய வரலாறு பல அரசியல்வாதிகளின் வரலாறுகளால் பின்னப்பட்ட ஒன்று. அந்த வரலாறுகளுக்கெல்லாம் வரலாறாக திகழ்பவர் தான் தமிழக மக்களின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரம் புரட்சிப் புயல் வைகோ. மழை பெய்யவில்லையே என வருத்தத்தில் இருக்கும் விவசாயி மூன்றாவது தெரு முனியப்பனிடம் நெப்போலியனின் போர் முறைகளை விளக்குவதாகட்டும், நெசவு தொழில் படுத்துவிட்டதே என கவலையில் இருக்கும் ஆறாவது வீடு ஆறுமுகத்திடம் வால்டைரின் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுப்பதாகட்டும் அவருக்கு நிகர் அவரே. இதுப்போன்ற எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய அவரைப் பற்றிய ஒரு சிறு வரலாற்றுப் பதிவே இக்கட்டுரை.

அது 2004ன் தேர்தல் காலம். அதற்கு சரியாக இரண்டு ஆண்டுளுக்கு முன்பு உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் நடந்தது. ஆம்! தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில், ஏதோ ஒரு சந்துக்குள் நின்றுகொண்டு வழக்கம்போல் யாருக்கும் பாதிப்பில்லாமல் விடுதலைப்புலிகள் வரலாற்றை வைகோ பேசப்போக, அதையே காரணமாக வைத்து, அப்பேச்சு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாகவும் கூறி அவர் மேல் 'பொடா' வழக்கு போட்டது அப்போதைய ஜெ அரசு. அமெரிக்கா சென்று திரும்பிய வைகோ விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்! அப்போது அவர் ஜெ அரசை எதிர்த்து கர்ஜித்த, "ஃபாசிச அரசு ஃபாசிச அரசு" என்ற முழக்கம் எட்டுத்திக்கிலும் எதிரொலித்தது. ஒரிசாவில் மழை பெய்தாலும், எத்தியோப்பியாவில் வெயில் அடித்தாலும் உடனே நடைபயணம் கிளம்பும் அந்த வீறுநடை சிங்கம், கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏறத்தாழ ஒன்றரை வருடம் கடும் பொடாவில் அடைபட்டிருந்தாலும் சிறைக்குள்ளேயே வாக்கிங் சென்றது! என்ன செய்தும் வெளிவர முடியாத அண்ணன், தேர்தலுக்கு சில காலம் முன்பு திமுக, மத்திய பாஜகவின் கடும் முயற்சியால் ஒருவழியாய் வெளிவந்தார். வந்தவேகத்தில் நன்றிப் பெருக்குடன் அழுதபடியே திமுக கூட்டணியில் இணைந்தவர் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கும் வருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் காட்சி மாறியது!

வரலாற்று புருஷர்கள் கூட நிகழ்த்தாத சாதனையை அண்ணன் வைகோ நிகழ்த்தினார். ஆம்! திடீரென ஒரே நாளில் பொடா கிடாவெல்லாம் காற்றில் பறந்தது! தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும், அவமானங்களையும் மறந்த அந்த மக்களுக்காக உழைக்கும் சிங்கம், கட்டக் கடைசி நேரத்தில் ஜெ கூட்டணிக்கு மாறியது! "எவ்வளவு கெஞ்சுனாலும் கதறுனாலும் வெளில மட்டும் விடாதீங்கடா" என வைகோ உள்ளிருந்த போது ஆணையிட்டவரை "அன்புச் சகோதரி அன்புச் சகோதரி" என பாசமழை பொழிந்தது எங்கள் தன்மானச் சிங்கம்! ஒரே நாளில் ஃபாசிச அரசு பாச அரசாக மாறியது! தமிழினமே அண்ணனின் தன்மானத்தைக் கண்டு வியந்தது! 'மூக்கிற்குள்' விரலை வைத்தது! தமிழக மக்களின் இதய சிம்மாசனத்தில் எங்கள் அண்ணன் ஏறி அமர்ந்தது அன்றுதான்! ஆனாலும் 234 தொகுதிகளிலும் சூறாவளியாய்ச் சுழன்றும் தோற்கடிக்கப்பட்டது எங்கள் சிங்கம்.

தேர்தல் முடிந்தாலும் கூட்டணி முடியவில்லை என உறுதியாக நம்பினார் எங்கள் தன்மானத் தலைவர். ஜெ திரும்பிக்கூட பார்க்கவில்லையென்றாலும் பாசம் என்றேனும் கைகூடும் என்ற நம்பிக்கையில் பாசமலர் சிவாஜியைப் போல் ஏங்கித்தவித்தது எங்கள் தங்கம். எப்படி அவமானப்படுத்தினால் என்ன? எவ்வளவு அடித்தால் என்ன? நான் அதிமுக கூட்டணி தான் என்று கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்த அண்ணன் தமிழகத்தின் கொடநாட்டு ஸ்பீக்கராக செயல்பட்டார்.

தன் வாழ்நாளில் தமிழக அரசியலைப் பற்றி சரியாக 34 நொடிகள் மட்டுமே இதுவரை பேசியிருக்கிறார் வைகோ. எஞ்சிய நேரத்தில் எல்லாம் ஈழம் ஈழம் ஈழம் தான்! ஆனால் ஜெ கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஒரே காரணத்திற்காக ஈழப்போர் குறித்து விவாதிக்க திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் வைகோ!! வைகோ என்று ஒருவர் இருக்கிறாரா? அவர் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்? அவர் புறக்கணித்தாரா இல்லையா? என்பதைப் பற்றியெல்லாம் ஜெவுக்கு தெரியாது என்றாலும் கூட்டணி தர்மத்தை அரணாகக் காத்து நின்றார் வைகோ!  "போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்! பிரியாணி என்றால் பீஸ் இருக்கத்தான் செய்யும்" என்ற தொனியில் பேசிய ஜெவுடன் தான் கொண்டிருந்த பாசப்பிணைப்பை எக்காலத்திலும் இழக்கத் தயாராக இல்லை எங்கள் ஈழச்சிங்கம். மாறாக தன் பிறவி லட்சியமான, திமுகவை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். கலைஞர் மூக்குச் சிந்தினால் குற்றம், ஜெ மூக்கையே சிந்தினாலும் குற்றமில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். இப்போதுதான் கதையில் ஒரு 'கேவலமான' டிவிஸ்ட் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாக வைகோ என்ற பிறவி ஈழப்போராளி தன் கூட்டணியில் இருந்தாலும், ரவிசங்கர் என்ற சாமியார் ஈழப்பிரச்சினையைப் பற்றி தன்னிடம் கூறியதாலேயே தனக்கு ஈழம் பற்றி தெரிந்தது என ஓரே இரவில் ஈழ ஆதரவாளராக மாறிய ஜெ அறிவித்தார். தமிழக மக்கள் வைகோ மேல் பரிதாபப்பட, ஆனால் அந்த அவமானத்தைக் கூட 'அவார்டாகவே' எடுத்துக்கொண்டது எங்கள் தங்கம். சிவாஜியைப் போல கண்ணீரும் கம்பலையுமாக, தலையை ஆட்டி ஆட்டி அழுதபடியே ஜெவின் அந்த அறிக்கைக்கு கைதட்டியது!  அவ்வளவு பாசம்!

2011 தேர்தல் வந்தது! ஒருபுறம் வைகோ என்ற சிங்கம். மறுபுறம் தா.பாண்டியன் என்ற சிங்கம். இரண்டு சிங்கங்களும் மாறி மாறி போயஸ் தோட்டத்திற்கு படை எடுத்தன. ஐந்து வருடங்களாய் அறிக்கையும், பேட்டியும் கொடுத்து மாய்ந்தது இந்த நாளுக்காகத்தானே! விடுவார்களா? விக்ரமாதித்தியன் போல விடாமல் முயற்சித்தார்கள். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போயஸ் கதவு திறக்காதா என காத்திருந்தார்கள். ஆனால் கடைசி வரை திறக்கவில்லை என்றாலும் வைகோவுக்கு தெரியாத ஒரு தந்திரம் தா.பாவுக்கு தெரிந்திருந்தது! கூட்டணி பேச்சுவார்த்தை என்றால் ஜெவுடன் தான் பேசவேண்டுமா? நாமே நாலு பேரை கூட்டிக்கொண்டு போய் போயஸ் தோட்ட வாசலில் அமர்ந்து நமக்குள்ளேயே பேசிவிடலாமே என திட்டம் தீட்டியது தா.பா என்ற குள்ளநரி மூளை கொண்ட பொதுஉடைமைச் சிங்கம். இறுதியில் அதேபோல் இரண்டு பேரை தினமும் போயஸுக்கு கூட்டிச் சென்று தங்களுக்குள்ளேயே கூட்டணி பற்றி பேசி இறுதிவரை ஜெவை சந்திக்காமலேயே ஒருவழியாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து வெற்றிவாகை சூடினார். மறுபுறம் வைகோவோ மன உளைச்சலில் உழன்றுகொண்டிருந்தார். 40சீட்டில் ஆரம்பித்து 35 ஆகி, 20ஆச்சும் கொடுங்க அன்பு சகோதரி என கெஞ்சிக் கதறிக்கொண்டிருந்த அந்த தன்மானத் தமிழனுக்கு பேரிடியாய் இறங்கியது அதிமுக தேர்தல் குழு கொண்டுவந்த செய்து! "இரண்டேமுக்கால் சீட்டு கொடுக்க பெருந்தன்மையோடு அம்மா ஒப்புக்கொண்டிருக்காங்க. உடனே ஒப்புக்கொள்ளுங்கள். போனா வராது பொழுதுபோனா கிடைக்காது" எனக் கூறிவிட்டு பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்றும் விட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியாது தவித்த வைகோவை கடைசியாக தேர்தல் புறக்கணித்தது! மன்னிக்கவும். வைகோ தேர்தலை புறக்கணித்தார்!

இதெல்லாம் ஃப்ளாஷ்பேக்! நாஞ்சில் சம்பத் நாஞ்சில் சம்பத் என்று ஒரு மானஸ்தன் மதிமுகவில் இருந்தார். கண்களை சுருக்கி, ஏற்றி-சுருக்கி ஏற்றி பழைய நடிகர் அசோகன் போலவே 'ஆலம்ம்ம்ம்பனா' என பேசும் திறமை வாய்ந்தவர் அவர். நம் அண்ணனுக்குத் துரோகம் இழைத்த அவர், அதிமுகவில் தஞ்சம் புகுந்தார். நம் அண்ணனின் அன்புச் சகோதரியோ அவருக்கு இன்னோவா கார் வாங்கி கொடுத்து ஊர் ஊராக சென்று வைகோவைத் திட்டு என உசுப்பியும் விட்டார்! இப்போது அந்த துரோகி அந்த பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கும் போதுதான் அந்த திடிக்கிடும் சம்பவம் நடந்தது!

வெகு நாட்களாகவே நடைபயணம் செல்லாமல் இருந்த நம் அண்ணனுக்கு திடீரென நடைபயணம் போக ஆசை ஏற்பட, அதற்கு 'மது விலக்கு கோரி நடைபயணம்' என்று பெயரிட்டார்! அதாவது தமிழக நிறுவனமான டாஸ்மாக்கை மூடச் சொல்லி மூட்டுவலிக்க ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடக்கிறார். இந்த சூழ்நிலையில் தமிழக டாஸ்மாக் நிறுவனத்தை திறந்த, அதை செவ்வனே நடத்திவரும் நம் அன்புசகோதரி நடுரோட்டில் 'எதேச்சையாக' சந்தித்து "ஆமா எதுக்கு நடக்குறீங்க?" என கேட்டாராம்!! ஒருமாத காலமாக யாரை எதிர்த்து நடக்கிறாரோ அவருக்கே எதேச்சையாகதான் இவர் நடப்பதே தெரிந்திருக்கிறது! வேறு யாராகவேணும் இருந்திருந்தால் அவமானத்தில் மூர்ச்சையாகியிருப்பார்கள்! அசிங்கத்தில் துடித்திருப்பார்கள்! ஆனால் நம் அண்ணன் தலையில் முண்டாசைக் கட்டிக்கொண்டு சிரித்தபடியே தன் அன்புச்சகோதரியிடம் "டாஸ்மாக்கை மூடச் சொல்லி நடக்குறேன். நீங்களும் வேணா அதே கொள்கைக்காக எங்கூட வாங்களேன். நான் கார் பின்னாடியே ஓடி வர்றேன்" என பேசிவிட்டு வந்தார்! எந்த வேதனையையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை! அதுதான் நம் அண்ணன்!

பல்லக்குத் தூக்குபவனுக்கு மகாராணியின் கால் தரையில் பட்டால் ஆச்சரியமாக இருக்குமாம்! ஆகா! மகாராணிக்கு கூட கால் இருக்கிறதே என்று! அதுபோல இப்போது ஆனந்தவிகடன் பேட்டியில் "ஜெயலலிதா குடை கூட பிடிக்காமல் என்னிடம் தெருவில் நின்று பேசினார்" என புலங்காகிதம் அடைந்திருக்கிறார் நம் அண்ணன்! அந்த தன்மானச் சிங்கம், ''ஜெயலலிதா தமிழர்களுக்காக போராடுகிறார்.' என்றும் உருமியிருக்கிறது!

ஜெ சரத்குமாருக்கு இரண்டு சீட் கொடுத்தார்! எங்கள் அண்ணனுக்கு அல்வா கொடுத்தார்! நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா கார் கொடுத்தார். எங்கள் அண்ணனுக்கோ ட்ரைசைக்கிள் கூட கொடுக்கவில்லை. ஆனால் பார்த்தீர்களா? ஜெ ஒருநிமிடம் நின்று பேசியதற்கே எங்கள் அண்ணன் எப்படி வூடு கட்டி அடிக்கிறார் என்று!! மெயின்டனன்ஸ் செலவே இல்லாத இந்த 'கொ.ப.செ'வைதான் ஜெ இத்தனை நாள் கேவலப்படுத்தியிருக்கிறார்! ஜெ தெருவில் சும்மா நின்றால் போராடுவதாகச் சொல்வார். குடை பிடிக்காமல் நின்றால் உயிரைக் கொடுத்துப் போராடுவதாகச் சொல்வார்! அதுதான் எங்கள் அண்ணன்!   இனியாவது அவரை ஜெ புரிந்துகொண்டு மூன்று சீட்டுகளாவது கொடுப்பார் என நம்புவோம்.

இப்படிப்பட்ட வரலாற்று பெருமையும், தன்மானச் சரித்திரமும் வாய்ந்த நம் அண்ணன் அடுத்த பாராளுமன்றத்தில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய நாற்பது தொகுதிகளிலும் சுழலப் போகிறார்! சானல் 4இன் ஆவணப்படத்தை வைத்து திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அதிமுக தீட்டியிருக்கும் ஐடியாவைச் செயல்படுத்ததான் அந்த திட்டமிட்ட திடீர் சந்திப்பு! ஜெ வருகிறார் என்றால் தெருவில் காக்கை குருவி கூட நிற்க முடியாது எனும்போது இவர் வந்தாராம், அவரும் வந்தாராம் திடீரென சந்தித்தார்களாம்! ஆனால் அண்ணனின் தொண்டனாக இருந்துகொண்டு இப்படியெல்லாம் சிந்திக்கக்கூடாது! அன்புச்சகோதரி நம் அண்ணனை சந்தித்தது நாம் செய்த பாக்கியம். அதிலும் குடை இன்றி அவர் பேசியது நம்மை சகல பாவங்களில் இருந்து விடுவிக்கும் பாவ விமோசனம்!
அதனால் அண்ணனின் வழிப்படி என்ன நடந்தாலும், என்ன ஆனாலும் அன்புச்சகோதரிக்கு சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்வோம்! பீடுநடை போடுவோம்! அதேநேரம் அங்கே ஏழாவது தெரு முனையில் நின்றுகொண்டு "வைகோ முதல்வர் ஆக வேண்டும்" எனக் கத்திக்கொண்டிருக்கும் தமிழருவிமணியனை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் நம் பாதையில் பயணிப்போம்! குடையைப் பிடிப்போம்!

Related Posts Plugin for WordPress, Blogger...