Wednesday, February 27, 2013

நாட்டு நாய்களும் நாமும். -டான் அசோக்சிறுவயதில் இருந்தே நாய்கள் என்றால் எனக்கு கொடூர பயம்! ஒரு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும் போது தாத்தா வீட்டருகே ஒரு குட்டி நாய் திரிந்தது. என் பயத்திற்கு குட்டி நாய்களும் விதிவிலக்குகள் அல்ல. ஒருநாள் அது என்னைப் பார்த்தவுடன் வேகமாக என்னைத் துரத்த, நானோ அலறியோட, அது இன்னும் வேகமாக குட்டி நாய்களுக்கே உரிய பின்தொடர்ந்து ஓடும் குணத்தோடு என்னை விரட்டியது. தாத்தா வீட்டெதிரே ஒரு பெரிய, கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கும் மைதானம் ஒன்று உண்டு. முதல் நான்கு சுற்றுகள் வீட்டைச் சுற்றி ஓடிய நான், நாயிடம் இருந்து எப்படியேனும் தப்பிக்க அந்த முள் மைதானத்திற்குள் புகுந்து ஓடினேன். ஓடினேன்... ஓடினேன்... ஓடினேன்! நான் ஓட ஓட நாய்குட்டிக்கு ஒரே குஷி! கட்டகடைசியாக என் உறவினர்கள் வெளியில் வந்து என்னைக் காப்பாற்றும் வரை ஓடிக்கொண்டேயிருந்தேன்.

ஒருவழியாய் கரை ஒதுங்கிய என்னைப் பார்த்து அம்மா அலறிய போதுதான் கவனித்தேன், காலில் செருப்பு அணியாததை! கால்களெங்கும் முட்கள் ஏறி ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது! நாய்குட்டி விளையாடத் துரத்தியதற்கே இப்படியென்றால் பின்னாட்களில் என்னை கடிக்க விரட்டிய நாய் கதைகள் இன்னும் ரத்தமயமானவை! குட்டி போட்டிருந்த தாய்-நாய் விரட்டி முள்வேலியில் ஏறி எகிறிக் குதித்தது, தெரு அருகே இருக்கும் ஒரு ஊனமுற்ற நாய் விரட்டி சைக்கிளில் இருந்து கீழே விழுந்தது என, எனக்கும் நாய்களுக்கும் இடையே இருந்த உறவு சரித்திரப் பிரசித்தி பெற்றது! பள்ளி முடிந்து உடன்படிக்கும் மாணவ-மாணவிகளோடு வீடு திரும்புகையில் எதிரே எதேனும் நாய் வந்துவிட்டால் எனக்கு இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்துவிடும். உடன் பெண்கள் வருவதால் ஓடினாலும் அசிங்கம், ஓடாமல் இருந்தால் நாயிடம் கடிபட வேண்டியதாய் ஆகும்! இந்த இரண்டு எண்ணங்களைத் தவிர, நாய் நம்மை கடிக்காமல் கடந்துவிடும் என்ற எண்ணமே எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை. (ஆனாலும் இன்றுவரை எந்த நாயும் என்னை கடித்ததில்லை என்பது ஆச்சரியம்) இப்படியாக எவ்வளவோ கொடுமைகளையெல்லாம் கடந்த பிறகு ஒருநாள் அந்த கொடுமையான சம்பவம் நடந்தது!

கல்லூரி காலத்தில் நானும் எனது காதலியும் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது எங்களை நோக்கி மூன்று தெருநாய்கள் முன்னேறிக் கொண்டிருந்தன. எனக்கு தூரத்தில் அவைகளைப் பார்த்தவுடனேயே பதற்றம் தொத்திக்கொண்டது. என் காதலியோ ஏதேதோ பேசியபடியே நடந்து கொண்டிருக்கிறாள். எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. நாய்களையே பார்த்த வண்ணம் நடக்கிறேன். அவைகள் அருகில் வந்தவுடன் நான் என்னையே அறியாமல் அவள் பின்னால் ஒளிவது போல நடக்க ஆரம்பித்தேன். அவளும் அதை கவனித்துவிட்டு நாய்களை விரட்டி விட்டாள்.  அந்த சம்பவத்தை நினைத்து இருவரும் சிரித்துக்கொண்டாலும் மனதிற்குள் கொஞ்சம் கேவலமாகத்தான் இருந்தது! வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் நாய்கள் மீதான பயத்தைக் களைவதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.

இணையத்தில் தேடி தேடி ஆராய்ந்த பிறகு ஒருவழியாக 'ஒரு வழி' கிடைத்தது. எது நமக்கு பயத்தைத் தருகிறதோ அதை அருகில் வைத்துக்கொள்வதே அப்பயத்தைப் போக்க சிறந்தவழி என எதிலோ படித்து, அதன்படி உலகிலேயே கோபமான, முரட்டுத்தனமான குணம் கொண்ட ஒரு நாயை வளர்க்கவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்! அதன்படி அலைந்து நான் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்ததுதான் 'ஷேகி' (shaggy). ராட்வெய்லர் (Rotweiler) ரக நாயான அதை 19000ரூபாய் கொடுத்து வாங்கினேன்! ராட்வெய்லர் நாய்களின் குணத்தைப் பற்றி வருவோர் போவோர் எல்லாம் பயங்கரமாக பீதியைக் கிளப்ப, ஷேகியோ எங்கள் வீட்டில் ஒரு முயல்குட்டியைப் போல் வளர்ந்தது தனிக் கதை!

 "Dogs are children covered in fur" என்ற வாசகத்தை முழுதாக வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறது ஷேகி! இது ஒருபுறமிருக்க, தெருவில் திரிந்த வெள்ளை நிற நாயொன்றிற்கு என் அம்மா உணவளித்து வந்தார்கள். அதுவும் எங்களுக்கு செல்லமாகிவிட அதற்கு 'பப்பி' என பெயரிட்டோம். அம்மா எங்கு கடைக்கு சென்றாலும் அம்மாவுக்கு பாதுகாப்பாக கூடவே போய்வரும். அம்மாவைச் சுற்றி ஒரு கற்பனை வளையத்தை உருவாக்கிக்கொண்டு அதற்குள் எவன் வந்தாலும் அவனை விரட்டும். இயற்கையாகவே அதற்கு அந்த குணம் இருந்தது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதுவும் ஷேகியும் சேர்ந்தே எங்கள் தோட்டத்தில் வலம் வந்தன. ஷேகி அப்போது குட்டி என்பதால் அதற்கு காவல் ட்ரெயினிங்கை பப்பி தான் வழங்கியது. நிறைய பேர் professional training கொடுக்க சொல்லியும் நான் அதை செய்யவில்லை. பெரும்பாலும் நாய் பயிற்சியாளர்கள் காவல்துறையில் இருப்பவர்கள். எப்போது குச்சியுடனேயே காட்சி அளிப்பார்கள். ஷேகியை பயிற்றுவிக்கிறேன் என அடித்துத் தொலைத்துவிடுவார்களோ என பயந்தே நான் அதற்கு professional பயிற்சி எதுவும் கொடுக்கவில்லை.

ஷேகிக்கு இயல்பாகவே இந்திய வெயிலை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பப்பியோ சித்திரை வெயிலுலும் கூலாக வலம் வரும். பப்பிக்கு இருந்த ஸ்டாமினாவும் ஷேகிக்கு இல்லை. ஆனால் உடல்வலு போன்ற விசயங்கள் பப்பியை விட ஷேகிக்கு பலமடங்கு அதிகம். மொத்தத்தில் குளிர்பிரதேசத்தில் வாழ்வதற்கென்றே இயற்கை உருவாக்கி வைத்திருந்த ஒரு உயிரினத்தை வெயில்பிரதேசத்தில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது எனக்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது!  அதுமட்டுமல்லாது பப்பி போன்ற எத்தனையோ புத்திசாலியான நாய்கள் தெருவில் ஆதவற்று தெருநாய்களாக அலைவதும் உறுத்தியது!

பொதுவாகவே நாய்கள் மிகவும் நல்ல குணம் படைத்தவவை. அறிவை வைத்துப் அளக்காமல் அன்பை வைத்து கணக்கிட்டால், நாய்கள் 'ஆறன்பும்', மனிதன் 'அஞ்சன்பும்' கொண்டவனாகவே மதிப்பிடப்படுவார்கள். தன்னை வளர்ப்பவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் தன்மை கொண்டவை நாய்கள். ஷேகியுடனும், பப்பியுடனும் பழகும் ஒவ்வொரு நிமிடமும் அவைகள் தங்கள் அன்பால் என்னை வெட்கவும், புல்லரிக்கவுமே வைத்திருக்கின்றன. அவைகளுக்குத் தேவையெல்லாம் உயிர்வாழ உணவும், கொஞ்சம் அன்பும் தான். உணவிடவில்லையென்றாலும் நாய்கள் தங்கள் அன்பை ஒரு மடங்கு கூட குறைத்துக் கொள்வதில்லை! இதையெல்லாவற்றையும் விட நாய்களுக்கு இருக்கும் உள்ளுணர்வு மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. நான் எங்கள் வீடிருக்கும் ஏரியாவிற்குள் நுழைந்தவுடனேயே வீட்டுக்குள் இருக்கும் ஷேகி வாசலில் வந்து என்னை எதிர்பார்த்து நிற்கும். அது வெளியில் எழுந்து ஓடினாலே நான் வந்துவிட்டேன் என வீட்டில் புரிந்துகொள்வார்கள். இதுபோல் நாய்கள் என்பதற்கு நாம் என்ன அர்த்தத்தை புரிந்துவைத்திருக்கிறோமோ அதைவிட ஆயிரம் மடங்கு அர்த்தமும், ஆச்சரியமும் நிறைந்தவை நாய்கள்.

இப்போது விசயத்திற்கு வருகிறேன் (ஆம் இப்பதான் விசயத்துக்கே வர்றேன்). கீழுள்ளவாறு கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு 'நல்ல' நாளில் வேற்றுகிரகவாசிகள் இந்தியாவுக்கு படையெடுத்து நம் நாட்டை பிடித்துக்கொண்டு, வீட்டிலிருக்கும் இந்தியர்களையெல்லாம் தெருவில் விரட்டி விட்டார்கள். மேலும் வெளிநாட்டு வெள்ளைக்காரர்களை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள். வெளிநாட்டு மனிதர்களை ஆசையாக வளர்க்கும் அவர்கள் நம்மை 'நாட்டு மனிதர்கள்' எனப் பெயரிட்டு தெருவில் அலைய விடுகிறார்கள். இப்படியான ஒரு சூழ்நிலைதான் நம் ஊர் நாய்களுக்கு நம்மால் நிகழ்ந்திருக்கிறது, நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நாய் வளர்க்க வேண்டும் என முடிவு செய்த உடனேயே நம் இந்திய மூளைகள் 'உயர்ரகம்' என சொல்லப்படும் வெளிநாட்டு நாய் வகைகளை தான் தேர்ந்தெடுக்கப் பறக்கிறது! (எனக்குப் பறந்ததைப் போல) ஆனால் நம் ஊருக்கெனவே, நம் ஊரின் தட்பவெட்ப நிலைகளுக்காகவே பிரத்யேகமாக இயற்கையால் வடிவமைக்கட்ட நாய்களை, நம் தாத்தன் பூட்டன் எல்லாம் வேட்டைக்கு அழைத்துச் சென்ற நம் ஊர் புத்திசாலி நாய்களை 'நாட்டு நாய்கள்' என எதோ தாழ்ந்த ரக நாய்களாக நாமே வகைப்படுத்தி ஒதுக்கிவிடுகிறோம். அதுகளும் அத்தனை அறிவையும் வைத்துக்கொண்டு தெருவில் திரிந்து கொண்டிருக்கின்றன, பிறந்தவுடனேயே காட்டில் விடப்பட்ட மனிதக் குழந்தையைப் போல!

வெளிநாட்டு நாய் ரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு. லேபரடார் வகைகள் அதீத மோப்ப சக்திக்கும், செல்லம் கொஞ்சுவதற்கும் புகழ் பெற்றவை. ராட்வெய்லர் காவலுக்கும், தாக்குதல் தொடுப்பதற்கும், கால்நடைகளை மேய்ப்பதற்கும் ஏற்றவை. (ஷேகி சாதுவான நாயாக செல்லமாக வளர்ந்தாலும் என்னிடம் யாரேனும் குரலை உயர்த்தி பேசினால் 'டென்சன்' ஆகி பாய்ந்து விடும். ஆடு மாடுகளை தெருவில் பார்த்தால் விரட்டிச் சென்று ஒழுங்கான வரிசையில் சேர்த்துவிட்டு வரும்.) இப்படி ஒவ்வொரு வகைக்கும் ஒரு குணம் உண்டு. ஆனால் இந்திய நாய்கள் மசாலாப் பட ஹீரோக்களைப் போல அனைத்து குணங்களையும் கொண்டவை என்பதுதான் விசேசம்! வெளிநாட்டு நாய்களை அந்தந்த ஊர்களில் நன்றாக வளர்க்கிறார்கள், பாதுகாக்கிறார்கள், ஆனால் இவைகளோ பாவமாக தெருவில் அலைந்தும், அடிபட்டும் கொண்டிருக்கின்றன.

நாய்களுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தபின் இலவசமாக கிடைக்கும் நம் ஊர் நாய்களை இப்படி தெருவில் அலைய விட்டிருப்பதும், வெளிநாட்டு நாய்களை 'விலைக்கு' வாங்கி வளர்ப்பதும் மிகப்பெரிய குற்றமாகத் தெரிகிறது எனக்கு. அதுமட்டுமல்லாமல் குளிர்பிரதேசத்தில் வளரவேண்டிய நாய்களை, குளிரைத் தாங்குவதற்காக உடல் முழுவதும் முடியால் மூடப்பட்டிருக்கும் நாய்களை வெயில் அதிகமான இந்தியாவில் வளர்ப்பது அவைகளுக்கு செய்யும் கொடுமைதான். குளிர்பிரதேசங்களில் அவ்வகை நாய்களின் ஆயுட்காலம் இன்னும் அதிகமாக இருக்கும்.

நம் ஊர் நாய்கள் அவைகளுக்கு ஏற்ற தட்பவெட்ப நிலையில் வாழ்வதால் வெளிநாட்டுநாய்களைப் போல அதிகமான மருத்துவசெலவு அவைகளுக்கு தேவைப்படாது. இப்படி ஏராளமான அட்வான்டேஜ்களும் உண்டு. இதையெல்லாம் மீறி ஸ்பெஷலாக எதேனும் காரணத்திற்காக (உதாரணத்திற்கு மோப்ப சக்திக்காக) நாய் வேண்டுமென்றால் வெளிநாட்டு நாய்களை வாங்கலாம். மற்றபடி நமக்கு, நம்மூர் தட்பவெட்பத்திற்கு, நம்மூர் உணவிற்கு உகந்தவை நம்மூர் நாய்கள் தான்!

நம் நாட்டு நாய்களில் வெகு முக்கியமானவை ராஜபாளையம், கோம்பை, மற்றும் நம் தெருக்களில் காணும் 'நாட்டு நாய்கள்' எனப்படும் நாய்கள். இதில் ராஜபாளையமும், கோம்பையும் வேட்டைக்கும், காவலுக்கு உகந்த முரட்டுத்தனமான நாய்கள். சிறுத்தை போன்ற கம்பீரமான உடல்வாகைக் கொண்டவை, கொஞ்சம் டேஞ்சர் பாய்ஸ்! மற்றவைகளை யார் வேண்டுமனாலும் வளர்க்கலாம், குழந்தைகள் கூட!

இப்போது நம் வீட்டில் வெளிநாட்டு வகை நாய்கள் இருந்தால் பரவாயில்லை. இன்னொரு நாய் வேண்டுமென்றால் இனி விலைக்கு வாங்காதீர்கள், தெருவோரங்களில் தத்தெடுத்துக்கொள்ளுங்கள். தெருநாய்களையும், வெறி நாய்க்கடிகளையும் இப்படியும் ஒழிக்கலாம்!

அப்புறம் இரண்டு முக்கியமான விசயங்கள். இப்போதெல்லாம் தெருவில் என்னை நோக்கி வரும் நாய்களை அன்புடன் பார்க்கிறேன், முடிந்தபோதெல்லாம் உணவிடுகிறேன். இவைகளைக் கண்டா பயந்தோம் என நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. அடுத்து, எங்கள் நாய் பப்பி ஐந்து குட்டிகளை ஈன்றிருக்கிறது. வளர்க்க விரும்புவோர்கள் எனக்கு writerdonashok@yahoo.com யிற்கு அஞ்சல் செய்யுங்கள்.  மிகவும் அறிவாளிகளாக, அன்புகொண்டவர்களாக வளரப்போகும் அந்நாய்க்குட்டிகளை இலவசமாகப் பெற நீங்கள் கண்டிப்பாக ஆண்குட்டி, பெண்குட்டி பேதம் பார்க்கக் கூடாது மற்றும் மதுரையில் வசிப்பவராக இருக்க வேண்டும்! மற்றபடி நாய்வளர்ப்பில் லைஃப்லாங் இலவச ஆலோசனையு வழங்கப்படும்!! :-)  

1 comment:

பெரியார்தளம் said...

ஹைய்யா நம்மாளு நானும் உங்கள மாதிரியேதான்...

Related Posts Plugin for WordPress, Blogger...