Saturday, February 9, 2013

விஸ்வரூபம் -சினிமாவும் அரசியலும் ஒரு பார்வை!


இந்திய.. ஏன் உலக சினிமா வரலாற்றிலேயே வெளிவருவதற்கு முன்பே 'அவ்வளவு' பேசப்பட்ட திரைப்படம் ஒன்று உண்டென்றால் விஸ்வரூபம் தான்! சென்சாரில் கத்தரித்து பின் லோக்கல் 'உணர்வு சென்சாரி'லும் கத்தரித்து ஒருவழியாக வெளிவந்திருக்கிறது விஸ்வரூபம். பல கத்தரிப்புகள் என்றாலும் கூட படம் காயம்பட்டதாய்த் தெரியவில்லை. ஏனெனில் படத்தில் என்னென்ன இருந்தது, எதுஎது கத்தரிக்கப்பட்டது என இஸ்லாமிய அமைப்புகளும் சரி, ஊடகங்களும் சரி மாற்றி மாற்றி நம்மிடம் சொல்லிக்கொண்டே இருந்ததால் கத்தரிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் என்ன 'ஒலி' இருந்தது என்பது நமக்குத் தெளிவாகவேத் தெரிகிறது! சுருக்கமாகச் சொல்லப்போனால் லோக்கல் 'உணர்வு கத்தரிப்பு' ஒரு காமடியாகத் தான் முடிந்திருக்கிறது! சரி! சினிமாவுக்குள் போவோம்!

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய காலத்தில் ஹாலிவுட் திரைப்படங்களின் பிரதான வில்லன்கள் ரஷ்யர்களாக இருந்தார்கள். ரஷ்ய ராணுவ ஜெனரலில் இருந்து ரஷ்ய அதிபர் வரை எதோ கொடூரமான பேட்டை ரவுடிகள் போலத்தான் காண்பிப்பார்கள். ராம்போ, ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என அந்த வகையறாக்கள் ஏகப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். பின் அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் (இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு நீரும், பெட்ரோலும் மாற்றி மாற்றி ஊற்றி வளர்த்தது அமெரிக்காதான் என்பது தனி ஃப்ளாஷ்பேக்! அது இப்போது நமக்குத் தேவையில்லை) இப்போது நடந்துகொண்டிருக்கும் போரைப் பற்றி பேசும் பல படங்களை அமெரிக்கத் திரையுலகம் தொடர்ந்து துப்பிக் கொண்டேயிருக்கிறது. அந்த வரிசையில் தமிழ்த்திரையுலகில் இருந்து வந்திருப்பதுதான் கமலின் விஸ்வரூபம்.

முதலில் படத்தைப் பற்றி.பேசிவிட்டு பின் அது பேசும் அரசியலுக்குள் செல்லலாம். கமல் முதலில் ஆட்டோ டிரைவர் மாணிக்கமாக (கதக் நடன ஆசிரியர்) இருக்கிறார். பின் வரும் ஒரு அதிமுக்கிய காட்சியில்தான் நமக்கு அவர் மாணிக்கம் அல்ல பாட்ஷாபாய் (இந்திய உளவுத்துறை அதிகாரி) என்பது தெரிகிறது! முதல்பாதியின் முற்பாதியில் வரும் இவ்விசயம், ஒரு அட்டகாசமான சண்டைக் காட்சியில் நமக்கு வெளிப்படுகிறது. கமல் என்ற இயக்குனரும் சரி, கமல் என்ற நடிகரும் சரி, பட்டையைக் கிளப்புகிறார்கள்! பார்ப்பவர்களின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் இந்தக் காட்சி காலம்காலமாக எங்க வீட்டுப் பிள்ளையில் இருந்து பாட்ஷாவில் தொடர்ந்து இன்று விஷால், விஜய் என சகல ஹீரோக்களாலும் கையாளப்படும் முயல்-புலியாகும் காட்சிதான் என்றாலும் அதை கமல் கையாண்டிருக்கும் விதம் இதை தனித்துவப்படுத்துகிறது. படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்பதற்கு நான் கொடுக்கும் ஒரே காரணம் இந்தக் காட்சி மட்டும் தான்!

அடுத்து ஆப்கானுக்கு பயணிக்கிறது கதை. ஆப்கானில்  ஒமர் (ராஹூல் போஸ்)க்கும் விசாம் காஷ்மீரி (கமல்)க்கும் இடையே நடந்த பழைய சம்பவங்களும், நிகழ்கால அமெரிக்காவில் ஒமருக்கும் விசாமுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களும் parallel ஆக சொல்லப்படுகிறது. தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை இது புதிய யுக்தி. (2001ல் ஹேராம் படத்திலும் இதை கையாண்டிருந்தாலும் முழுநீளமாக இதில் தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது)
ஆப்கனிஸ்தான் காட்சிகளின் தத்ரூபம் அசத்தல். பல அமெரிக்கப்படங்களில் பார்த்துவிட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஆப்கான் நிலப்பரப்பை அறிமுகம் செய்திருக்கிறார் கமல்.

முல்லா மொஹம்மட் ஒமர் யார்? தாலிபான் தலைவர்! அல் கொய்தாவுடன் மிக நெருக்கத்தில் இருந்தவர். 2000களில் ஆப்கானை ஆட்டிப்படைத்தவர்! நிஜமான ஒமரைப் போலவே ராகுல் போசுக்கு ஒரு கண் இல்லாதது போல் மேக்கப் போடப்பட்டிருப்பதால் நாம் இந்த முல்லா மொஹமட் ஒமரைத் தான் கமல் குறிப்பிடுகிறார் என்றே கருதவேண்டியிருக்கிறது. அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த அசகாய சூரனான ஒமர், ஒரு 'wanted poster'ஐ மட்டுமே நம்பி கமலை இயக்கத்திற்குள் அனுமதிக்கிறார், அதுவும் தனக்கு நெருங்கிய சகாவாக!! அதுமட்டுமல்லாமல் இயக்க ரகசியங்களை வரிசையாக கமலுக்கு சொல்கிறார். நமக்கோ ஒமர் மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார்! பின்னர்
தாலிபான்களின் மதம் சார்ந்த பெண்ணடிமை ஃபார்முலா, குழந்தைகளை ஜிஹாதிகளாக ஆக்குவது என சகலமும் ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்துக் காட்டப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு ஆக்சன் த்ரில்லராக வேகமெடுத்த திரைக்கதை ஆப்கானில் டாகுமென்டரி போல மெதுவாக நகர்கிறது. ஒரு காட்சியில் ஒசாமா பின்லாடன் வருகிறார். இப்படியே மெதுவாக, ஆனால் 'என்ன நடக்கப் போகிறதோ' என்ற சஸ்பென்ஸுடன் நகரும் படத்தில் ஒரு 'ஆப்கானிய' ஆக்சன் sequenceக்குப் பின் இடைவேளை வருகிறது! பிறகுதான் சறுக்கல் தொடங்குகிறது!

இடைவேளை வரை கமல் படமாக இருக்கும் விஸ்வரூபம், இடைவேளைக்குப் பின் ஒரு மெகாசீரியலாக மாறுகிறது. ஆக்சன் த்ரில்லருக்கான எந்த அறிகுறியும் இல்லை. தசாவதாரத்தில் பார்ப்பன பாஷை பேசும் அசினுடன் 'வயல்'லைத் தேடி அலைந்த கமல், இதில் பார்ப்பன பாஷை பேசும் பூஜா குமாருடன் 'டர்ட்டி பாம்'ஐத் தேடி அலைகிறார். அந்தப் படத்தைப் போலவே இதிலும் இருவருக்குமிடையே வரும் கடவுள் பற்றிய வசனங்கள் நமக்கு சலிப்பையே தருகிறது. பூஜா குமார் கமலைப் பிடிக்காத கமலின் மனைவி! கமலின் வயதும், அவர் கதக் டான்சராக இருக்கும்போது கடைபிடிக்கும் பெண்தன்மையும் அவரை வெறுக்க வைக்கிறது. அதனால் தன் அலுவலகத்திலேயே இன்னொருவருடன் affair வைத்திருக்கிறார் பூஜா குமார்! இப்படியாகப்பட்ட பூஜா, தன் கணவர் raw agent எனத் தெரிந்தவுடன் கண்களின் காதல் ரசம் சொட்ட கணவரைப் பார்க்கிறார்! நமக்கு எரிச்சல் தான் வருகிறது! சிறுவர்கள் விளையாடும் போது ஒப்புக்குச் சப்பாணி என யாரையாவது சேர்த்துக்கொள்வார்கள். அதுபோல் ஆண்ட்ரியாவை கமல் சேர்த்திருக்கிறார். கமலின் மேலதிகாரியாக வரும் ஷேகர் கபூர், ஆண்ட்ரியா, கமல், பூஜா குமார் மற்றும் சில FBI அதிகாரிகள் சேர்ந்து டர்ட்டி பாம் ஐத் தேடுகிறார்கள். அதாவது நடக்கிறார்கள், பேசுகிறார்கள், நடக்கிறார்கள் பேசுகிறார்கள், பின் கண்டுபிடிக்கிறார்கள். இடையே கமலுக்கு பில்டப் கொடுக்கும் காட்சிகளும் உண்டு. மன்மோகன் சிங் தொலைபேசியில் "உன் உயர் அதிகாரிகளிடம் கேட்டு அவர்கள் சொல்வது போல் செயல்படு" என்கிறார். அந்த உயரதிகாரிகளும் அருகிலேயே தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு FBI அதிகாரி "who are you man?" என கமலைக் கேட்டு வியக்கிறார்! இந்தக் காட்சியிலும் பூஜாகுமார் கமலை காதலுடன், பெருமையாகப் பார்க்கிறார். இதுபோல் இரண்டாம் பாதியில் பல காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது படத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் காமடியாகவும் ஆக்குகிறது!  நியூயார்க்கையே அழிக்க வல்ல ஒரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய மொக்கையாக ஒரு bomb diffuserஐ அனுப்புகிறது அமெரிக்க அரசு! ஆனால் அமெரிக்க bomb squadஐயே பின்னுக்குத் தள்ளிவிட்டு வெடிகுண்டை செயலிழக்கச் செய்கிறார் 'அறிவாளி' பூஜா குமார்! மொத்தத்தில் கமல் படமாக அட்டகாசமாக ஆரம்பிக்கும் கதை, பின் ஒரு சராசரி படத்தைவிட மிக மோசமாக முடிவதுதான் சோகம்!!!

முதல் பாதியில் வெகு சாமர்த்தியமாய் வேலை பார்த்திருக்கும் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் ஆகிய மூன்று கமல்களும் இடைவேளைக்குப் பின் மொத்தமாக நித்திரைக்குப் போய்விட்டார்கள். இரண்டாம் பாதியில் திரைக்கதை என்பதே முற்றிலும் இல்லை. படத்தின் முடிவில் ஒமர் இந்தியாவுக்கு தப்பித்துப் போகிறார். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலரோடு முடிகிறது முதல் பாகம். ஆனால் முதல் பாகத்தின் மொத்த ஆக்சன் காட்சிகளைவிட இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலரிலேயே அதிக ஆக்சன் காட்சிகள் இருப்பதால், முதல் பாகத்தின் இரண்டாம் பாதி தந்த சோர்வையும் மீறி, "இரண்டாம் பாகம் நல்லாருக்குமோ?" என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது!

கமலின் தரத்திற்கு இந்தப் படம் வெகுசுமார் தான்! விருமாண்டி, ஹேராமில் இதைவிட ஆயிரம் மடங்கு சாதித்துவிட்டார். விஸ்வரூபம் திரைக்கதையில் கவனம் செலுத்தாததுதான் அட்டகாசமான ஆக்சன்-த்ரில்லருக்கான வாய்ப்பிருந்தும் அது நிறைவேறாமல் போயிருக்கிறது! ஆனால் இரண்டாம் பாகம் எடுக்கமுடிவுசெய்தே முதல் பாகத்தை எடுத்திருப்பதால் விஸ்வரூபம் முதல்பாகத்தில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை தெரியும் என நம்புவோம்!

இப்போது அரசியல்! அமெரிக்க திரையுலகம் 1970களில் இருந்ததைப் போல் இப்போது இல்லை. அரசியல் லாபிக்கு அப்பாற்ப்பட்ட அமெரிக்க இயக்குனர்கள் அமெரிக்க ராணுவம் ஈராக், ஆப்கானிஸ்தானில் கொன்றுகுவித்த பொதுமக்களின் சோகத்தையும் சேர்த்தே படம் எடுக்கிறார்கள். வியட்நாமில் அமெரிக்காவின் அட்டகாசங்களை தோலுரிக்கும் வண்ணம் வெளிவந்த நிர்வாணமாக ஓடும் சிறுமியின் புகைப்படத்தயும், உட்கார்ந்தபடியே எரிந்த புத்தபிட்சுக்களையும் நாம் பார்த்தோம்! ஈராக்கில் அமெரிக்க ராணுவ அத்துமீறலை பல ஊடகங்கள், பல மனித உரிமை ஆர்வலர்கள் கவலையோடு உலகத்தில் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்க, கொஞ்சம் கூட தயங்காமல் ஒமர் வாயாலேயே "அமெரிக்கர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்" எனச் சொல்லவைத்திருக்கிறார் கமல். ஆனால் அவர் சொல்லி வாயை மூடும் முன் அவர் வீட்டில் அமெரிக்க ஹெலிகாப்டர் குண்டு வீசி உள்ளிருந்த அவர் மனைவியையும், குழந்தையையும் கொல்கிறது. ஆம்! அமெரிக்க ராணுவம், இந்திய-இலங்கை ராணுவங்களைப் போல தனித்தனியாக குழந்தைகளையும், பெண்களையும் கொல்லாது, வன்புணர்வு போன்ற காமக்களியாட்டங்களில் ஈடுபடாது, ஆனால் ஒட்டுமொத்தமாக வீடுகளின் மேல் குண்டுபோட்டு பெண்கள் குழந்தைகளை கொல்லும் என்றுதான் நாம் கமலின் 'அந்த' வசனத்தை அர்த்தப்படுத்திக்கொண்டு சமாதானமடைய வேண்டியிருக்கிறது!  

இதில் நகைமுரண் என்னவென்றால், அமெரிக்கர்கள் அவ்வளவு 'நல்லவர்கள்' என தெரிந்து வைத்திருக்கும் ஒமர் பின் எதற்கு அமெரிக்க எதிர்ப்பு வெறியோடு ஜிகாதியாக அலைகிறார்? என்ன லாஜிக் இது? வெளிப்படையாக அமெரிக்கர்களை 'please' செய்வதற்கு முயன்றிருக்கார் கமல்! படம் முழுக்கவே இந்த 'அமெரிக்க pleasing'தனம் விரவிக்கிடக்கிறது! பகுத்தறிவாளராய், மனிதாபிமானமிக்கவராய் தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும் கமல் வெறும் வியாபாரியாக மட்டுமே நமக்குத் தெரிகிறார்!!

ஆனால் படம் முழுக்க தான் காண்பிக்கப்போகும் அமெரிக்க சார்புநிலை சரியானதல்ல என்ற மனசாட்சி உறுத்தலுடனேயே செயல்பட்டிருக்கிறார் கமல். நியூயார்க்கில் பொதுஜன இஸ்லாமியர்கள் தொலுகை நடத்தும் இடத்தில் கூட அமெரிக்க அரசு security camera பொறுத்தி இருப்பதையும் காட்டுகிறார். மேலும் அமெரிக்க சார்பு நிலையை ஓரளவேணும் சமன் படுத்த கதாநாயகனை இஸ்லாமியனாகவும், கெட்ட இஸ்லாமியர்களைக் கொல்லப்போகும் முன் தொழுவது போலவும் காட்சியமைப்புகளை செய்திருக்கிறார். என்னதான் மெனக்கெட்டாலும் படத்தில் 'balance' இல்லை! அமெரிக்க வல்லாதிக்க வழிபாடே நிறைந்து தெரிகிறது!

இதைப் பேசும்போது நாம் இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் பற்றி பேசத்தான் வேண்டும்! தாலிபான்களின் குணமும், மதவெறியும் நாமெல்லாம் அறிந்ததுதான். நாம் பார்க்கும் பல தாலிபான் கொலைகள் 'அல்லாஹூ அக்பர்' என்ற கோஷத்துடன், குரானை ஓதிய பின்பே நிகழ்த்தப்படுகின்றன! ஆனால் அதை படத்தில் காட்டினால் உணர்வு புண்படும் என நம்மூர் இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது! அமெரிக்கா 'செய்த' எதையும் கமல் காட்டவில்லை என்பது தான் நமக்கு உறுத்துகிறதேயொழிய, தாலிபான்கள் செய்ததை தான் கமல் விஸ்வரூபத்தில் காட்டியிருக்கிறார் என்பதால் நமக்கு அது உறுத்தவில்லை!! அமெரிக்க சார்புநிலையில் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதால் அரசியல் ரீதியாக இது உலக இஸ்லாமியர்களுக்கு எதிரான படமாகக் பார்க்கப்படுகிறது. 'ஹாசன்' என்ற இஸ்லாமியப் பெயர் இருப்பதால் அமெரிக்க விமானநிலையத்தில் பல கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்ட கமலிடம் இருந்து வந்திருக்கும் இந்தப் பதிவில் நியாயம் இல்லை, மனசாட்சியும் இல்லை! அந்த நியாயத்தை அவர் கரன் ஜோகரின் (ஷாரூக்கான் நடித்த) 'மை நேம் இஸ் கான்' படத்தில் தேடவேண்டும்!  தேடி எடுத்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திலாவது நியாயமாக அரசியல் பேசுவார் என எதிர்பார்ப்போம்!

மொத்தத்தில் சினிமாரீதியிலும் சரி (makingஐத் தவிர) அரசியல் ரீதியிலும் சரி, விஸ்வரூபம் சரியான பாதையில் பயணிக்கவில்லை!1 comment:

கும்மாச்சி said...

இது வரை படித்த விமரசனங்களிலே இது தான் நடுநிலையாக எழுதப்பட்ட விமர்சனமோ என்று தோன்றுகிறது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை, பார்த்தவர்கள் சொன்னதை வைத்து சொல்லுகிறேன்.

பகிர்விற்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...