Thursday, February 28, 2013

கிபி2045 (குட்டிக்கதை)
கிபி 2045. ரத்தத்தை விடவும் எண்ணெய் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான திரவமாகிவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இரண்டு லிட்டர் ரத்தம் என்ற வீதத்தில் பாலைவனத்தில் ரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மதம், கடவுளை அடையும் வழி என்பது மாறி, ஆயுத போராட்ட வழிமுறை என்றாகிவிட்டது. இந்துக்கள் சூலாயிதத்தாலும், இஸ்லாமியர்கள் துப்பாக்கிகளாலும், கிறித்தவர்கள் கத்திகளாலும் மனிதனை கடவுளுக்குப் படைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானும் இந்தியாவும் பறிமாறிக்கொண்ட அணுகுண்டுகளின் புண்ணியத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் நடுவே ஆழமான அம்மைத்தழும்பு உருவாகியிருந்தது. இருநாடுகளும் வரைபடங்களில் மட்டுமே முழுமையாய் இருந்தன. இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் கட்டாய-சீனம் பயின்று கொண்டிருந்தார்கள். இந்தியாவில் 2030ன் பிற்பகுதியில் முதுமலை காட்டுக்குள் கடைசி தமிழன் தென்பட்டதாக விக்கிபீடியா சொன்னது. ஆப்ரிக்க காடு எதோ ஒன்றில், எஞ்சியிருந்த கடைசிக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் அழுது கொண்டிருந்தான். அவனுக்கு இன்று பிறந்தநாள்.  பிறந்தநாளின் போது நட்சத்திரங்களை பார்த்து வேண்டிக்கொள்வது அப்படியே நடக்கும் என அவன் அன்னை சொன்னதால் வானில் சிகப்பாய் தெரிந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்து தன்னை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டிருந்தான். சிகப்பு நட்சத்திரம் செவ்வாயில் இருந்து வந்து கொண்டிருந்தது. கையெறிகுண்டு அளவே இருக்கும் அணுகுண்டுகளோடு அதில் இருந்தவர்கள் பூமியைப் பார்த்து குரூரமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்! 

Wednesday, February 27, 2013

நாட்டு நாய்களும் நாமும். -டான் அசோக்சிறுவயதில் இருந்தே நாய்கள் என்றால் எனக்கு கொடூர பயம்! ஒரு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும் போது தாத்தா வீட்டருகே ஒரு குட்டி நாய் திரிந்தது. என் பயத்திற்கு குட்டி நாய்களும் விதிவிலக்குகள் அல்ல. ஒருநாள் அது என்னைப் பார்த்தவுடன் வேகமாக என்னைத் துரத்த, நானோ அலறியோட, அது இன்னும் வேகமாக குட்டி நாய்களுக்கே உரிய பின்தொடர்ந்து ஓடும் குணத்தோடு என்னை விரட்டியது. தாத்தா வீட்டெதிரே ஒரு பெரிய, கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கும் மைதானம் ஒன்று உண்டு. முதல் நான்கு சுற்றுகள் வீட்டைச் சுற்றி ஓடிய நான், நாயிடம் இருந்து எப்படியேனும் தப்பிக்க அந்த முள் மைதானத்திற்குள் புகுந்து ஓடினேன். ஓடினேன்... ஓடினேன்... ஓடினேன்! நான் ஓட ஓட நாய்குட்டிக்கு ஒரே குஷி! கட்டகடைசியாக என் உறவினர்கள் வெளியில் வந்து என்னைக் காப்பாற்றும் வரை ஓடிக்கொண்டேயிருந்தேன்.

ஒருவழியாய் கரை ஒதுங்கிய என்னைப் பார்த்து அம்மா அலறிய போதுதான் கவனித்தேன், காலில் செருப்பு அணியாததை! கால்களெங்கும் முட்கள் ஏறி ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது! நாய்குட்டி விளையாடத் துரத்தியதற்கே இப்படியென்றால் பின்னாட்களில் என்னை கடிக்க விரட்டிய நாய் கதைகள் இன்னும் ரத்தமயமானவை! குட்டி போட்டிருந்த தாய்-நாய் விரட்டி முள்வேலியில் ஏறி எகிறிக் குதித்தது, தெரு அருகே இருக்கும் ஒரு ஊனமுற்ற நாய் விரட்டி சைக்கிளில் இருந்து கீழே விழுந்தது என, எனக்கும் நாய்களுக்கும் இடையே இருந்த உறவு சரித்திரப் பிரசித்தி பெற்றது! பள்ளி முடிந்து உடன்படிக்கும் மாணவ-மாணவிகளோடு வீடு திரும்புகையில் எதிரே எதேனும் நாய் வந்துவிட்டால் எனக்கு இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்துவிடும். உடன் பெண்கள் வருவதால் ஓடினாலும் அசிங்கம், ஓடாமல் இருந்தால் நாயிடம் கடிபட வேண்டியதாய் ஆகும்! இந்த இரண்டு எண்ணங்களைத் தவிர, நாய் நம்மை கடிக்காமல் கடந்துவிடும் என்ற எண்ணமே எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை. (ஆனாலும் இன்றுவரை எந்த நாயும் என்னை கடித்ததில்லை என்பது ஆச்சரியம்) இப்படியாக எவ்வளவோ கொடுமைகளையெல்லாம் கடந்த பிறகு ஒருநாள் அந்த கொடுமையான சம்பவம் நடந்தது!

கல்லூரி காலத்தில் நானும் எனது காதலியும் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது எங்களை நோக்கி மூன்று தெருநாய்கள் முன்னேறிக் கொண்டிருந்தன. எனக்கு தூரத்தில் அவைகளைப் பார்த்தவுடனேயே பதற்றம் தொத்திக்கொண்டது. என் காதலியோ ஏதேதோ பேசியபடியே நடந்து கொண்டிருக்கிறாள். எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. நாய்களையே பார்த்த வண்ணம் நடக்கிறேன். அவைகள் அருகில் வந்தவுடன் நான் என்னையே அறியாமல் அவள் பின்னால் ஒளிவது போல நடக்க ஆரம்பித்தேன். அவளும் அதை கவனித்துவிட்டு நாய்களை விரட்டி விட்டாள்.  அந்த சம்பவத்தை நினைத்து இருவரும் சிரித்துக்கொண்டாலும் மனதிற்குள் கொஞ்சம் கேவலமாகத்தான் இருந்தது! வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் நாய்கள் மீதான பயத்தைக் களைவதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.

இணையத்தில் தேடி தேடி ஆராய்ந்த பிறகு ஒருவழியாக 'ஒரு வழி' கிடைத்தது. எது நமக்கு பயத்தைத் தருகிறதோ அதை அருகில் வைத்துக்கொள்வதே அப்பயத்தைப் போக்க சிறந்தவழி என எதிலோ படித்து, அதன்படி உலகிலேயே கோபமான, முரட்டுத்தனமான குணம் கொண்ட ஒரு நாயை வளர்க்கவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்! அதன்படி அலைந்து நான் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்ததுதான் 'ஷேகி' (shaggy). ராட்வெய்லர் (Rotweiler) ரக நாயான அதை 19000ரூபாய் கொடுத்து வாங்கினேன்! ராட்வெய்லர் நாய்களின் குணத்தைப் பற்றி வருவோர் போவோர் எல்லாம் பயங்கரமாக பீதியைக் கிளப்ப, ஷேகியோ எங்கள் வீட்டில் ஒரு முயல்குட்டியைப் போல் வளர்ந்தது தனிக் கதை!

 "Dogs are children covered in fur" என்ற வாசகத்தை முழுதாக வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறது ஷேகி! இது ஒருபுறமிருக்க, தெருவில் திரிந்த வெள்ளை நிற நாயொன்றிற்கு என் அம்மா உணவளித்து வந்தார்கள். அதுவும் எங்களுக்கு செல்லமாகிவிட அதற்கு 'பப்பி' என பெயரிட்டோம். அம்மா எங்கு கடைக்கு சென்றாலும் அம்மாவுக்கு பாதுகாப்பாக கூடவே போய்வரும். அம்மாவைச் சுற்றி ஒரு கற்பனை வளையத்தை உருவாக்கிக்கொண்டு அதற்குள் எவன் வந்தாலும் அவனை விரட்டும். இயற்கையாகவே அதற்கு அந்த குணம் இருந்தது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதுவும் ஷேகியும் சேர்ந்தே எங்கள் தோட்டத்தில் வலம் வந்தன. ஷேகி அப்போது குட்டி என்பதால் அதற்கு காவல் ட்ரெயினிங்கை பப்பி தான் வழங்கியது. நிறைய பேர் professional training கொடுக்க சொல்லியும் நான் அதை செய்யவில்லை. பெரும்பாலும் நாய் பயிற்சியாளர்கள் காவல்துறையில் இருப்பவர்கள். எப்போது குச்சியுடனேயே காட்சி அளிப்பார்கள். ஷேகியை பயிற்றுவிக்கிறேன் என அடித்துத் தொலைத்துவிடுவார்களோ என பயந்தே நான் அதற்கு professional பயிற்சி எதுவும் கொடுக்கவில்லை.

ஷேகிக்கு இயல்பாகவே இந்திய வெயிலை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பப்பியோ சித்திரை வெயிலுலும் கூலாக வலம் வரும். பப்பிக்கு இருந்த ஸ்டாமினாவும் ஷேகிக்கு இல்லை. ஆனால் உடல்வலு போன்ற விசயங்கள் பப்பியை விட ஷேகிக்கு பலமடங்கு அதிகம். மொத்தத்தில் குளிர்பிரதேசத்தில் வாழ்வதற்கென்றே இயற்கை உருவாக்கி வைத்திருந்த ஒரு உயிரினத்தை வெயில்பிரதேசத்தில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது எனக்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது!  அதுமட்டுமல்லாது பப்பி போன்ற எத்தனையோ புத்திசாலியான நாய்கள் தெருவில் ஆதவற்று தெருநாய்களாக அலைவதும் உறுத்தியது!

பொதுவாகவே நாய்கள் மிகவும் நல்ல குணம் படைத்தவவை. அறிவை வைத்துப் அளக்காமல் அன்பை வைத்து கணக்கிட்டால், நாய்கள் 'ஆறன்பும்', மனிதன் 'அஞ்சன்பும்' கொண்டவனாகவே மதிப்பிடப்படுவார்கள். தன்னை வளர்ப்பவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் தன்மை கொண்டவை நாய்கள். ஷேகியுடனும், பப்பியுடனும் பழகும் ஒவ்வொரு நிமிடமும் அவைகள் தங்கள் அன்பால் என்னை வெட்கவும், புல்லரிக்கவுமே வைத்திருக்கின்றன. அவைகளுக்குத் தேவையெல்லாம் உயிர்வாழ உணவும், கொஞ்சம் அன்பும் தான். உணவிடவில்லையென்றாலும் நாய்கள் தங்கள் அன்பை ஒரு மடங்கு கூட குறைத்துக் கொள்வதில்லை! இதையெல்லாவற்றையும் விட நாய்களுக்கு இருக்கும் உள்ளுணர்வு மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. நான் எங்கள் வீடிருக்கும் ஏரியாவிற்குள் நுழைந்தவுடனேயே வீட்டுக்குள் இருக்கும் ஷேகி வாசலில் வந்து என்னை எதிர்பார்த்து நிற்கும். அது வெளியில் எழுந்து ஓடினாலே நான் வந்துவிட்டேன் என வீட்டில் புரிந்துகொள்வார்கள். இதுபோல் நாய்கள் என்பதற்கு நாம் என்ன அர்த்தத்தை புரிந்துவைத்திருக்கிறோமோ அதைவிட ஆயிரம் மடங்கு அர்த்தமும், ஆச்சரியமும் நிறைந்தவை நாய்கள்.

இப்போது விசயத்திற்கு வருகிறேன் (ஆம் இப்பதான் விசயத்துக்கே வர்றேன்). கீழுள்ளவாறு கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு 'நல்ல' நாளில் வேற்றுகிரகவாசிகள் இந்தியாவுக்கு படையெடுத்து நம் நாட்டை பிடித்துக்கொண்டு, வீட்டிலிருக்கும் இந்தியர்களையெல்லாம் தெருவில் விரட்டி விட்டார்கள். மேலும் வெளிநாட்டு வெள்ளைக்காரர்களை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள். வெளிநாட்டு மனிதர்களை ஆசையாக வளர்க்கும் அவர்கள் நம்மை 'நாட்டு மனிதர்கள்' எனப் பெயரிட்டு தெருவில் அலைய விடுகிறார்கள். இப்படியான ஒரு சூழ்நிலைதான் நம் ஊர் நாய்களுக்கு நம்மால் நிகழ்ந்திருக்கிறது, நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நாய் வளர்க்க வேண்டும் என முடிவு செய்த உடனேயே நம் இந்திய மூளைகள் 'உயர்ரகம்' என சொல்லப்படும் வெளிநாட்டு நாய் வகைகளை தான் தேர்ந்தெடுக்கப் பறக்கிறது! (எனக்குப் பறந்ததைப் போல) ஆனால் நம் ஊருக்கெனவே, நம் ஊரின் தட்பவெட்ப நிலைகளுக்காகவே பிரத்யேகமாக இயற்கையால் வடிவமைக்கட்ட நாய்களை, நம் தாத்தன் பூட்டன் எல்லாம் வேட்டைக்கு அழைத்துச் சென்ற நம் ஊர் புத்திசாலி நாய்களை 'நாட்டு நாய்கள்' என எதோ தாழ்ந்த ரக நாய்களாக நாமே வகைப்படுத்தி ஒதுக்கிவிடுகிறோம். அதுகளும் அத்தனை அறிவையும் வைத்துக்கொண்டு தெருவில் திரிந்து கொண்டிருக்கின்றன, பிறந்தவுடனேயே காட்டில் விடப்பட்ட மனிதக் குழந்தையைப் போல!

வெளிநாட்டு நாய் ரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு. லேபரடார் வகைகள் அதீத மோப்ப சக்திக்கும், செல்லம் கொஞ்சுவதற்கும் புகழ் பெற்றவை. ராட்வெய்லர் காவலுக்கும், தாக்குதல் தொடுப்பதற்கும், கால்நடைகளை மேய்ப்பதற்கும் ஏற்றவை. (ஷேகி சாதுவான நாயாக செல்லமாக வளர்ந்தாலும் என்னிடம் யாரேனும் குரலை உயர்த்தி பேசினால் 'டென்சன்' ஆகி பாய்ந்து விடும். ஆடு மாடுகளை தெருவில் பார்த்தால் விரட்டிச் சென்று ஒழுங்கான வரிசையில் சேர்த்துவிட்டு வரும்.) இப்படி ஒவ்வொரு வகைக்கும் ஒரு குணம் உண்டு. ஆனால் இந்திய நாய்கள் மசாலாப் பட ஹீரோக்களைப் போல அனைத்து குணங்களையும் கொண்டவை என்பதுதான் விசேசம்! வெளிநாட்டு நாய்களை அந்தந்த ஊர்களில் நன்றாக வளர்க்கிறார்கள், பாதுகாக்கிறார்கள், ஆனால் இவைகளோ பாவமாக தெருவில் அலைந்தும், அடிபட்டும் கொண்டிருக்கின்றன.

நாய்களுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தபின் இலவசமாக கிடைக்கும் நம் ஊர் நாய்களை இப்படி தெருவில் அலைய விட்டிருப்பதும், வெளிநாட்டு நாய்களை 'விலைக்கு' வாங்கி வளர்ப்பதும் மிகப்பெரிய குற்றமாகத் தெரிகிறது எனக்கு. அதுமட்டுமல்லாமல் குளிர்பிரதேசத்தில் வளரவேண்டிய நாய்களை, குளிரைத் தாங்குவதற்காக உடல் முழுவதும் முடியால் மூடப்பட்டிருக்கும் நாய்களை வெயில் அதிகமான இந்தியாவில் வளர்ப்பது அவைகளுக்கு செய்யும் கொடுமைதான். குளிர்பிரதேசங்களில் அவ்வகை நாய்களின் ஆயுட்காலம் இன்னும் அதிகமாக இருக்கும்.

நம் ஊர் நாய்கள் அவைகளுக்கு ஏற்ற தட்பவெட்ப நிலையில் வாழ்வதால் வெளிநாட்டுநாய்களைப் போல அதிகமான மருத்துவசெலவு அவைகளுக்கு தேவைப்படாது. இப்படி ஏராளமான அட்வான்டேஜ்களும் உண்டு. இதையெல்லாம் மீறி ஸ்பெஷலாக எதேனும் காரணத்திற்காக (உதாரணத்திற்கு மோப்ப சக்திக்காக) நாய் வேண்டுமென்றால் வெளிநாட்டு நாய்களை வாங்கலாம். மற்றபடி நமக்கு, நம்மூர் தட்பவெட்பத்திற்கு, நம்மூர் உணவிற்கு உகந்தவை நம்மூர் நாய்கள் தான்!

நம் நாட்டு நாய்களில் வெகு முக்கியமானவை ராஜபாளையம், கோம்பை, மற்றும் நம் தெருக்களில் காணும் 'நாட்டு நாய்கள்' எனப்படும் நாய்கள். இதில் ராஜபாளையமும், கோம்பையும் வேட்டைக்கும், காவலுக்கு உகந்த முரட்டுத்தனமான நாய்கள். சிறுத்தை போன்ற கம்பீரமான உடல்வாகைக் கொண்டவை, கொஞ்சம் டேஞ்சர் பாய்ஸ்! மற்றவைகளை யார் வேண்டுமனாலும் வளர்க்கலாம், குழந்தைகள் கூட!

இப்போது நம் வீட்டில் வெளிநாட்டு வகை நாய்கள் இருந்தால் பரவாயில்லை. இன்னொரு நாய் வேண்டுமென்றால் இனி விலைக்கு வாங்காதீர்கள், தெருவோரங்களில் தத்தெடுத்துக்கொள்ளுங்கள். தெருநாய்களையும், வெறி நாய்க்கடிகளையும் இப்படியும் ஒழிக்கலாம்!

அப்புறம் இரண்டு முக்கியமான விசயங்கள். இப்போதெல்லாம் தெருவில் என்னை நோக்கி வரும் நாய்களை அன்புடன் பார்க்கிறேன், முடிந்தபோதெல்லாம் உணவிடுகிறேன். இவைகளைக் கண்டா பயந்தோம் என நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. அடுத்து, எங்கள் நாய் பப்பி ஐந்து குட்டிகளை ஈன்றிருக்கிறது. வளர்க்க விரும்புவோர்கள் எனக்கு writerdonashok@yahoo.com யிற்கு அஞ்சல் செய்யுங்கள்.  மிகவும் அறிவாளிகளாக, அன்புகொண்டவர்களாக வளரப்போகும் அந்நாய்க்குட்டிகளை இலவசமாகப் பெற நீங்கள் கண்டிப்பாக ஆண்குட்டி, பெண்குட்டி பேதம் பார்க்கக் கூடாது மற்றும் மதுரையில் வசிப்பவராக இருக்க வேண்டும்! மற்றபடி நாய்வளர்ப்பில் லைஃப்லாங் இலவச ஆலோசனையு வழங்கப்படும்!! :-)  

Sunday, February 24, 2013

ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள். -நூல் மதிப்புரை


உலகத்தில் கயிறுகளுக்கு அடுத்து அதிகமாக திரிக்கப்படுவது வரலாறுகள் தான். பொதுவாக ஒவ்வொரு தலைமுறைக்கும் அதன் முந்தைய தலைமுறையின் வரலாறு 'புனைவு' கலந்தே புகட்டப்படுகிறது. காலம் காலமாக இது நடப்பதினாலேயே உலகெங்கும் வலம்வரும் பெரும்பாலான எல்லா முக்கியமான விசயங்களை, செய்திகளை, வரலாறுகளைச் சுற்றியும் மாற்றுக் கோட்பாடுகளும் (alternate theory) வலம் வருகின்றன.  உண்மைகளை மறைக்க, பொய்களை உண்மையாக்க நூற்றாண்டுகள் எல்லாம் தேவையில்லை, இருபது முப்பது ஆண்டுகள் கிடைத்தாலே போதும். எந்த தகவலையும் சரி பார்ப்பது சுலபமாக இருக்கும் நம் சமகாலத்தில் கூட நம்மிடையே வரலாற்றை மாற்றியமைக்கும் 'திறமை' வாய்ந்த கோயபல்ஸ்கள் வாழத்தான் செய்கிறார்கள். சும்மாவே பொய்களை அள்ளித் தெளிக்கும் இக்-கோயபல்ஸ்கள் சிறுகூட்டங்களுக்கு தலைவர்களாகவும் ஆகிவிட்டால் கேட்கவும் வேண்டுமா?  இப்படியான சூழ்நிலையில், முக்கியமான கடந்த கால வரலாறுகளை வெறும் வாய்வழியாகச் சொல்லாமல் ஆதாரங்களுடன் ஆவணமாகப் பதிய வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அப்படியொரு பெரும்பணியைச் செய்திருக்கிறது அய்யா சு.ப.வீயின் 'ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்' நூல்.

2009ல் ஈழப்போர் உக்கிரமடைந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் துவண்டு கிடந்த ஈழ உணர்வு மீண்டும் நிமிரத் துவங்கியது. அதற்கடுத்து நடந்த சமகால நிகழ்வுகளை நாம் அறிவோம். ஆனால் அந்த காலத்தில் நம் தமிழக 'ஈழ' அரசியல்வாதிகளால் நமக்குப் புகட்டப்பட்ட வரலாற்றுச் செய்திகள் சரியானவைதானா? எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை எனவும் இந்நூல் அலசுகிறது.

உலகெங்கும் திமுகவின் ஆதரவாளராக, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக அறியப்பட்டிருக்கும் சுபவீ அய்யாவின் இந்நூல் குறித்து சிலருக்கு ஒருபக்கச் சார்பு இருக்குமோ என்ற ஐயம் இருக்கலாம். அதற்கு அவரே முன்னுரையில் பதில் அளித்திருக்கிறார். "நான் ஒரு வழக்கறிஞன். என் பக்கத்தில் இருக்கும் நியாயங்களை நான் ஆதாரத்துடன் எடுத்து வைத்திருக்கிறேன். படித்து ஆராய்ந்து தீர்ப்பை நீங்கள் எழுதுங்கள்" என்று!!

இப்பதிவுகள் சுபவீ அய்யாவின் வலைதளத்தில் தொடராக வந்தபோது பலர் நம்பகத்தன்மை இன்றியே படிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அக்கட்டுரைகள் வெறும் சொற்ச்சுவையும், பொருட்சுவையும், உணர்வுச் சுவையும் மட்டுமே தாங்கிய வெறும் உரைகளாக இருக்கவில்லை. மாறாக முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த செய்தித்தாள் கத்தரிப்புகள், அறிக்கை கத்தரிப்புகள், ஆவணங்களின் நகல்கள் என ஒரு நீதிமன்ற விசாரணையில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களைப் போல மிகக்கூர்மையான ஆதாரங்களோடு தெளிவாக இருந்ததால் மாற்றுக் கருத்து கொண்டோர் மத்தியிலும் மிகுந்த நம்பகத்தன்மையையும், ஆதரவையும் பெற்றது. நம்மிடையே இப்போது ஈழ அரசியல் பேசும், நாம் பெரிதும் மதிக்கும் அரசியல்வாதிகள் சிலரின் தற்போதையே பேச்சுக்களை, வரலாற்றுத் திரிபுகளை அவர்களின் முந்தைய அறிக்கைகளாலேயே முறியடிக்கிறார் சுபவீ! படிக்கப் படிக்க, "அரசியலுக்காக இப்படியுமா பொய் பேசுவார்கள்? வரலாற்றை மாற்றுவார்கள்?" என நமக்கு ஆச்சரியமே மேலோங்குகிறது!

சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, எம்.ஜி.ஆர் முதல்வர் பதவியேற்பில் பெரியார் பங்கேற்றதாகவும் அவ்விழாவில் பெரியாரை எம்.ஜி.ஆர் புகழ்ந்து பேசியதாகவும் கூறினார். ஆனால் எம்.ஜி.ஆர் பதவியேற்க ஏழு வருடங்களுக்கு முன்பே பெரியார் இறந்துவிட்டார்!! உண்மை இப்படியிருக்க வெறும் கைதட்டலுக்காக மேடையிலேயே ஒரு வரலாற்றுப்புனைவை உருவாக்குவதென்பது எவ்வளவு பெரிய பிழை? அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான இளைஞர்கள் அதை உண்மை என்றல்லவா நம்பியிருப்பார்கள்? இப்படி நம்மிடையே எத்துணை ஆயிரம் வரலாறுகள் திரிக்கப்படுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன என்பதை எண்ணினால் வியப்பும், பயமுமே ஏற்படுகிறது!

இதுபோல தொடர்ந்து கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட சில வரலாற்றுப் பொய்களுக்கான பதில் தான் 'ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்' என்னும் இந்நூல். இதன் சிறப்பம்சமே இது தாங்கி நிற்கும் ஆவணங்கள் தான். நூல் என வழங்குவதைவிடவும் ஆவணம் என வழங்குவதே சரியானதாக இருக்கும். எந்த இடத்திலுமே சுபவீ தன் 'கருத்தை' பதியவில்லை. மாறாக 'ஆதாரங்களைப்' பதிகிறார். கிடைப்பதற்கரிய இத்தனை ஆதாரங்களையும், செய்திகளையும் எப்படி திரட்டினார் என நினைத்தால் மனம் மலைக்கிறது.

ஈழம் குறித்த முக்கியமான நிகழ்வுகள், அதற்கு தமிழக அரசியல்வாதிகள் ஆற்றிய கடந்தகால-நிகழ்கால எதிர்வினைகள் என எல்லாவற்றையும் ஆதாரங்களோடு இந்நூல் எடுத்துரைக்கிறது. ஈழம் குறித்தும், ஈழம் சார்ந்த தமிழக அரசியல் குறித்தும் 'ஆதாரங்களோடு' அறிய விரும்பும் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஆவணக் களஞ்சியம் இந்நூல். பொது விவாதங்களிலும், தனிநபர் விவாதங்களிலும் நாம் பங்கேற்கும் போது இந்நூலில் இருக்கும் செய்திகள் நமக்கு பெரிதும் கைகொடுக்கும். ஈழம் குறித்த அக்கரை இருப்போரின் ஒவ்வொரு கைகளிலும் அவசியம் இருக்க வேண்டியது நூல், அய்யா சுபவீயின் 'ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்'!

கிடைக்குமிடம்:
வானவில் புத்தகாலயம்
10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை
(தி.நகர் பேருந்து நிலையத்திற்கும் 
காவல் நிலையத்திற்கும் இடைப்பட்ட சாலை)
தி.நகர்,
சென்னை.600017
தொலைபேசி : 044-24342771, 044-65279654
கைபேசி : 7200050082

விலை- 90ரூபாய்

Saturday, February 9, 2013

விஸ்வரூபம் -சினிமாவும் அரசியலும் ஒரு பார்வை!


இந்திய.. ஏன் உலக சினிமா வரலாற்றிலேயே வெளிவருவதற்கு முன்பே 'அவ்வளவு' பேசப்பட்ட திரைப்படம் ஒன்று உண்டென்றால் விஸ்வரூபம் தான்! சென்சாரில் கத்தரித்து பின் லோக்கல் 'உணர்வு சென்சாரி'லும் கத்தரித்து ஒருவழியாக வெளிவந்திருக்கிறது விஸ்வரூபம். பல கத்தரிப்புகள் என்றாலும் கூட படம் காயம்பட்டதாய்த் தெரியவில்லை. ஏனெனில் படத்தில் என்னென்ன இருந்தது, எதுஎது கத்தரிக்கப்பட்டது என இஸ்லாமிய அமைப்புகளும் சரி, ஊடகங்களும் சரி மாற்றி மாற்றி நம்மிடம் சொல்லிக்கொண்டே இருந்ததால் கத்தரிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் என்ன 'ஒலி' இருந்தது என்பது நமக்குத் தெளிவாகவேத் தெரிகிறது! சுருக்கமாகச் சொல்லப்போனால் லோக்கல் 'உணர்வு கத்தரிப்பு' ஒரு காமடியாகத் தான் முடிந்திருக்கிறது! சரி! சினிமாவுக்குள் போவோம்!

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய காலத்தில் ஹாலிவுட் திரைப்படங்களின் பிரதான வில்லன்கள் ரஷ்யர்களாக இருந்தார்கள். ரஷ்ய ராணுவ ஜெனரலில் இருந்து ரஷ்ய அதிபர் வரை எதோ கொடூரமான பேட்டை ரவுடிகள் போலத்தான் காண்பிப்பார்கள். ராம்போ, ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என அந்த வகையறாக்கள் ஏகப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். பின் அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் (இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு நீரும், பெட்ரோலும் மாற்றி மாற்றி ஊற்றி வளர்த்தது அமெரிக்காதான் என்பது தனி ஃப்ளாஷ்பேக்! அது இப்போது நமக்குத் தேவையில்லை) இப்போது நடந்துகொண்டிருக்கும் போரைப் பற்றி பேசும் பல படங்களை அமெரிக்கத் திரையுலகம் தொடர்ந்து துப்பிக் கொண்டேயிருக்கிறது. அந்த வரிசையில் தமிழ்த்திரையுலகில் இருந்து வந்திருப்பதுதான் கமலின் விஸ்வரூபம்.

முதலில் படத்தைப் பற்றி.பேசிவிட்டு பின் அது பேசும் அரசியலுக்குள் செல்லலாம். கமல் முதலில் ஆட்டோ டிரைவர் மாணிக்கமாக (கதக் நடன ஆசிரியர்) இருக்கிறார். பின் வரும் ஒரு அதிமுக்கிய காட்சியில்தான் நமக்கு அவர் மாணிக்கம் அல்ல பாட்ஷாபாய் (இந்திய உளவுத்துறை அதிகாரி) என்பது தெரிகிறது! முதல்பாதியின் முற்பாதியில் வரும் இவ்விசயம், ஒரு அட்டகாசமான சண்டைக் காட்சியில் நமக்கு வெளிப்படுகிறது. கமல் என்ற இயக்குனரும் சரி, கமல் என்ற நடிகரும் சரி, பட்டையைக் கிளப்புகிறார்கள்! பார்ப்பவர்களின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் இந்தக் காட்சி காலம்காலமாக எங்க வீட்டுப் பிள்ளையில் இருந்து பாட்ஷாவில் தொடர்ந்து இன்று விஷால், விஜய் என சகல ஹீரோக்களாலும் கையாளப்படும் முயல்-புலியாகும் காட்சிதான் என்றாலும் அதை கமல் கையாண்டிருக்கும் விதம் இதை தனித்துவப்படுத்துகிறது. படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்பதற்கு நான் கொடுக்கும் ஒரே காரணம் இந்தக் காட்சி மட்டும் தான்!

அடுத்து ஆப்கானுக்கு பயணிக்கிறது கதை. ஆப்கானில்  ஒமர் (ராஹூல் போஸ்)க்கும் விசாம் காஷ்மீரி (கமல்)க்கும் இடையே நடந்த பழைய சம்பவங்களும், நிகழ்கால அமெரிக்காவில் ஒமருக்கும் விசாமுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களும் parallel ஆக சொல்லப்படுகிறது. தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை இது புதிய யுக்தி. (2001ல் ஹேராம் படத்திலும் இதை கையாண்டிருந்தாலும் முழுநீளமாக இதில் தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது)
ஆப்கனிஸ்தான் காட்சிகளின் தத்ரூபம் அசத்தல். பல அமெரிக்கப்படங்களில் பார்த்துவிட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஆப்கான் நிலப்பரப்பை அறிமுகம் செய்திருக்கிறார் கமல்.

முல்லா மொஹம்மட் ஒமர் யார்? தாலிபான் தலைவர்! அல் கொய்தாவுடன் மிக நெருக்கத்தில் இருந்தவர். 2000களில் ஆப்கானை ஆட்டிப்படைத்தவர்! நிஜமான ஒமரைப் போலவே ராகுல் போசுக்கு ஒரு கண் இல்லாதது போல் மேக்கப் போடப்பட்டிருப்பதால் நாம் இந்த முல்லா மொஹமட் ஒமரைத் தான் கமல் குறிப்பிடுகிறார் என்றே கருதவேண்டியிருக்கிறது. அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த அசகாய சூரனான ஒமர், ஒரு 'wanted poster'ஐ மட்டுமே நம்பி கமலை இயக்கத்திற்குள் அனுமதிக்கிறார், அதுவும் தனக்கு நெருங்கிய சகாவாக!! அதுமட்டுமல்லாமல் இயக்க ரகசியங்களை வரிசையாக கமலுக்கு சொல்கிறார். நமக்கோ ஒமர் மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார்! பின்னர்
தாலிபான்களின் மதம் சார்ந்த பெண்ணடிமை ஃபார்முலா, குழந்தைகளை ஜிஹாதிகளாக ஆக்குவது என சகலமும் ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்துக் காட்டப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு ஆக்சன் த்ரில்லராக வேகமெடுத்த திரைக்கதை ஆப்கானில் டாகுமென்டரி போல மெதுவாக நகர்கிறது. ஒரு காட்சியில் ஒசாமா பின்லாடன் வருகிறார். இப்படியே மெதுவாக, ஆனால் 'என்ன நடக்கப் போகிறதோ' என்ற சஸ்பென்ஸுடன் நகரும் படத்தில் ஒரு 'ஆப்கானிய' ஆக்சன் sequenceக்குப் பின் இடைவேளை வருகிறது! பிறகுதான் சறுக்கல் தொடங்குகிறது!

இடைவேளை வரை கமல் படமாக இருக்கும் விஸ்வரூபம், இடைவேளைக்குப் பின் ஒரு மெகாசீரியலாக மாறுகிறது. ஆக்சன் த்ரில்லருக்கான எந்த அறிகுறியும் இல்லை. தசாவதாரத்தில் பார்ப்பன பாஷை பேசும் அசினுடன் 'வயல்'லைத் தேடி அலைந்த கமல், இதில் பார்ப்பன பாஷை பேசும் பூஜா குமாருடன் 'டர்ட்டி பாம்'ஐத் தேடி அலைகிறார். அந்தப் படத்தைப் போலவே இதிலும் இருவருக்குமிடையே வரும் கடவுள் பற்றிய வசனங்கள் நமக்கு சலிப்பையே தருகிறது. பூஜா குமார் கமலைப் பிடிக்காத கமலின் மனைவி! கமலின் வயதும், அவர் கதக் டான்சராக இருக்கும்போது கடைபிடிக்கும் பெண்தன்மையும் அவரை வெறுக்க வைக்கிறது. அதனால் தன் அலுவலகத்திலேயே இன்னொருவருடன் affair வைத்திருக்கிறார் பூஜா குமார்! இப்படியாகப்பட்ட பூஜா, தன் கணவர் raw agent எனத் தெரிந்தவுடன் கண்களின் காதல் ரசம் சொட்ட கணவரைப் பார்க்கிறார்! நமக்கு எரிச்சல் தான் வருகிறது! சிறுவர்கள் விளையாடும் போது ஒப்புக்குச் சப்பாணி என யாரையாவது சேர்த்துக்கொள்வார்கள். அதுபோல் ஆண்ட்ரியாவை கமல் சேர்த்திருக்கிறார். கமலின் மேலதிகாரியாக வரும் ஷேகர் கபூர், ஆண்ட்ரியா, கமல், பூஜா குமார் மற்றும் சில FBI அதிகாரிகள் சேர்ந்து டர்ட்டி பாம் ஐத் தேடுகிறார்கள். அதாவது நடக்கிறார்கள், பேசுகிறார்கள், நடக்கிறார்கள் பேசுகிறார்கள், பின் கண்டுபிடிக்கிறார்கள். இடையே கமலுக்கு பில்டப் கொடுக்கும் காட்சிகளும் உண்டு. மன்மோகன் சிங் தொலைபேசியில் "உன் உயர் அதிகாரிகளிடம் கேட்டு அவர்கள் சொல்வது போல் செயல்படு" என்கிறார். அந்த உயரதிகாரிகளும் அருகிலேயே தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு FBI அதிகாரி "who are you man?" என கமலைக் கேட்டு வியக்கிறார்! இந்தக் காட்சியிலும் பூஜாகுமார் கமலை காதலுடன், பெருமையாகப் பார்க்கிறார். இதுபோல் இரண்டாம் பாதியில் பல காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது படத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் காமடியாகவும் ஆக்குகிறது!  நியூயார்க்கையே அழிக்க வல்ல ஒரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய மொக்கையாக ஒரு bomb diffuserஐ அனுப்புகிறது அமெரிக்க அரசு! ஆனால் அமெரிக்க bomb squadஐயே பின்னுக்குத் தள்ளிவிட்டு வெடிகுண்டை செயலிழக்கச் செய்கிறார் 'அறிவாளி' பூஜா குமார்! மொத்தத்தில் கமல் படமாக அட்டகாசமாக ஆரம்பிக்கும் கதை, பின் ஒரு சராசரி படத்தைவிட மிக மோசமாக முடிவதுதான் சோகம்!!!

முதல் பாதியில் வெகு சாமர்த்தியமாய் வேலை பார்த்திருக்கும் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் ஆகிய மூன்று கமல்களும் இடைவேளைக்குப் பின் மொத்தமாக நித்திரைக்குப் போய்விட்டார்கள். இரண்டாம் பாதியில் திரைக்கதை என்பதே முற்றிலும் இல்லை. படத்தின் முடிவில் ஒமர் இந்தியாவுக்கு தப்பித்துப் போகிறார். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலரோடு முடிகிறது முதல் பாகம். ஆனால் முதல் பாகத்தின் மொத்த ஆக்சன் காட்சிகளைவிட இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலரிலேயே அதிக ஆக்சன் காட்சிகள் இருப்பதால், முதல் பாகத்தின் இரண்டாம் பாதி தந்த சோர்வையும் மீறி, "இரண்டாம் பாகம் நல்லாருக்குமோ?" என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது!

கமலின் தரத்திற்கு இந்தப் படம் வெகுசுமார் தான்! விருமாண்டி, ஹேராமில் இதைவிட ஆயிரம் மடங்கு சாதித்துவிட்டார். விஸ்வரூபம் திரைக்கதையில் கவனம் செலுத்தாததுதான் அட்டகாசமான ஆக்சன்-த்ரில்லருக்கான வாய்ப்பிருந்தும் அது நிறைவேறாமல் போயிருக்கிறது! ஆனால் இரண்டாம் பாகம் எடுக்கமுடிவுசெய்தே முதல் பாகத்தை எடுத்திருப்பதால் விஸ்வரூபம் முதல்பாகத்தில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை தெரியும் என நம்புவோம்!

இப்போது அரசியல்! அமெரிக்க திரையுலகம் 1970களில் இருந்ததைப் போல் இப்போது இல்லை. அரசியல் லாபிக்கு அப்பாற்ப்பட்ட அமெரிக்க இயக்குனர்கள் அமெரிக்க ராணுவம் ஈராக், ஆப்கானிஸ்தானில் கொன்றுகுவித்த பொதுமக்களின் சோகத்தையும் சேர்த்தே படம் எடுக்கிறார்கள். வியட்நாமில் அமெரிக்காவின் அட்டகாசங்களை தோலுரிக்கும் வண்ணம் வெளிவந்த நிர்வாணமாக ஓடும் சிறுமியின் புகைப்படத்தயும், உட்கார்ந்தபடியே எரிந்த புத்தபிட்சுக்களையும் நாம் பார்த்தோம்! ஈராக்கில் அமெரிக்க ராணுவ அத்துமீறலை பல ஊடகங்கள், பல மனித உரிமை ஆர்வலர்கள் கவலையோடு உலகத்தில் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்க, கொஞ்சம் கூட தயங்காமல் ஒமர் வாயாலேயே "அமெரிக்கர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்" எனச் சொல்லவைத்திருக்கிறார் கமல். ஆனால் அவர் சொல்லி வாயை மூடும் முன் அவர் வீட்டில் அமெரிக்க ஹெலிகாப்டர் குண்டு வீசி உள்ளிருந்த அவர் மனைவியையும், குழந்தையையும் கொல்கிறது. ஆம்! அமெரிக்க ராணுவம், இந்திய-இலங்கை ராணுவங்களைப் போல தனித்தனியாக குழந்தைகளையும், பெண்களையும் கொல்லாது, வன்புணர்வு போன்ற காமக்களியாட்டங்களில் ஈடுபடாது, ஆனால் ஒட்டுமொத்தமாக வீடுகளின் மேல் குண்டுபோட்டு பெண்கள் குழந்தைகளை கொல்லும் என்றுதான் நாம் கமலின் 'அந்த' வசனத்தை அர்த்தப்படுத்திக்கொண்டு சமாதானமடைய வேண்டியிருக்கிறது!  

இதில் நகைமுரண் என்னவென்றால், அமெரிக்கர்கள் அவ்வளவு 'நல்லவர்கள்' என தெரிந்து வைத்திருக்கும் ஒமர் பின் எதற்கு அமெரிக்க எதிர்ப்பு வெறியோடு ஜிகாதியாக அலைகிறார்? என்ன லாஜிக் இது? வெளிப்படையாக அமெரிக்கர்களை 'please' செய்வதற்கு முயன்றிருக்கார் கமல்! படம் முழுக்கவே இந்த 'அமெரிக்க pleasing'தனம் விரவிக்கிடக்கிறது! பகுத்தறிவாளராய், மனிதாபிமானமிக்கவராய் தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும் கமல் வெறும் வியாபாரியாக மட்டுமே நமக்குத் தெரிகிறார்!!

ஆனால் படம் முழுக்க தான் காண்பிக்கப்போகும் அமெரிக்க சார்புநிலை சரியானதல்ல என்ற மனசாட்சி உறுத்தலுடனேயே செயல்பட்டிருக்கிறார் கமல். நியூயார்க்கில் பொதுஜன இஸ்லாமியர்கள் தொலுகை நடத்தும் இடத்தில் கூட அமெரிக்க அரசு security camera பொறுத்தி இருப்பதையும் காட்டுகிறார். மேலும் அமெரிக்க சார்பு நிலையை ஓரளவேணும் சமன் படுத்த கதாநாயகனை இஸ்லாமியனாகவும், கெட்ட இஸ்லாமியர்களைக் கொல்லப்போகும் முன் தொழுவது போலவும் காட்சியமைப்புகளை செய்திருக்கிறார். என்னதான் மெனக்கெட்டாலும் படத்தில் 'balance' இல்லை! அமெரிக்க வல்லாதிக்க வழிபாடே நிறைந்து தெரிகிறது!

இதைப் பேசும்போது நாம் இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் பற்றி பேசத்தான் வேண்டும்! தாலிபான்களின் குணமும், மதவெறியும் நாமெல்லாம் அறிந்ததுதான். நாம் பார்க்கும் பல தாலிபான் கொலைகள் 'அல்லாஹூ அக்பர்' என்ற கோஷத்துடன், குரானை ஓதிய பின்பே நிகழ்த்தப்படுகின்றன! ஆனால் அதை படத்தில் காட்டினால் உணர்வு புண்படும் என நம்மூர் இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது! அமெரிக்கா 'செய்த' எதையும் கமல் காட்டவில்லை என்பது தான் நமக்கு உறுத்துகிறதேயொழிய, தாலிபான்கள் செய்ததை தான் கமல் விஸ்வரூபத்தில் காட்டியிருக்கிறார் என்பதால் நமக்கு அது உறுத்தவில்லை!! அமெரிக்க சார்புநிலையில் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதால் அரசியல் ரீதியாக இது உலக இஸ்லாமியர்களுக்கு எதிரான படமாகக் பார்க்கப்படுகிறது. 'ஹாசன்' என்ற இஸ்லாமியப் பெயர் இருப்பதால் அமெரிக்க விமானநிலையத்தில் பல கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்ட கமலிடம் இருந்து வந்திருக்கும் இந்தப் பதிவில் நியாயம் இல்லை, மனசாட்சியும் இல்லை! அந்த நியாயத்தை அவர் கரன் ஜோகரின் (ஷாரூக்கான் நடித்த) 'மை நேம் இஸ் கான்' படத்தில் தேடவேண்டும்!  தேடி எடுத்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திலாவது நியாயமாக அரசியல் பேசுவார் என எதிர்பார்ப்போம்!

மொத்தத்தில் சினிமாரீதியிலும் சரி (makingஐத் தவிர) அரசியல் ரீதியிலும் சரி, விஸ்வரூபம் சரியான பாதையில் பயணிக்கவில்லை!Related Posts Plugin for WordPress, Blogger...