Thursday, January 24, 2013

விஸ்வரூபம்- நடூல கொஞ்சம் கருத்துரிமையைக் காணோம்!


"I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it." -Voltaire"உங்கள் கருத்தை நான் ஏற்காவிட்டாலும், உங்கள் கருத்தை நீங்கள் சொல்வதற்கான உரிமைக்காக நான் மரணம் வரை போராடுவேன்" -வால்டேய்ர் மிகப்பிரபலமான இந்த வரியுடன் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன். 

2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு படம் வெளிவந்தது. படத்தின் பெயர் 'Death of a President'. 2006ல் வாழ்ந்து கொண்டிருக்கும், ஆட்சி புரிந்துகொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கொலை செய்யப்படுவதைப் போல அப்படம் சித்தரிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் எந்த எதிர்ப்பும் இன்றி வெளியாகி ஓடியது! இந்தியப் பிரதமரோ, எதேனும் மாநில முதல்வரோ இறப்பது போல் வேண்டாம், அடிபடுவது போலாவது இங்கே படம் எடுக்க முடியுமா? எவ்வளவு உயிர்கள் போயிருக்கும், எவ்வளவு பஸ்களை கொளுத்தியிருப்பார்கள்?
2006ல் டாவின்சி கோட் என்ற படம் வெளியானது. இயேசுவுக்கு திருமணம் ஆனதாகவும், வாரிசு இருப்பதாகவும் ஒரு conspiracy theoryயைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த படம், பெரும்பான்மை கத்தோலிக்கர்கள் வாழும் அமெரிக்காவில் தடை செய்யப்படவில்லை. இந்தியாவில் சில மாநிலங்களில் (குறிப்பாக தமிழ்நாட்டில்) தடை செய்யப்பட்டது. (தடை செய்யப்பட்டு தியேட்டர்கள் எல்லாம் அடுத்த படத்திற்கு தாவியபின் உச்சநீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது!)

டேம்999 திரைப்படம் தமிழர்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், முல்லைப் பெரியாறு பற்றி தவறான தகவல்களைச் சொல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து தமிழகத்தில் தடைச் செய்யப்பட்டது. எனக்கு தோன்றிய ஒரே ஒரு கேள்வி, "மலையாளி அவனை சப்போர்ட் பண்ண அவன் ஒரு படம் எடுக்குறான். இங்க இருக்குற கோடீஸ்வர தமிழ்ப்பற்றுள்ள இயக்குனன் எவனுக்கும், கட்சிக்காரன் எவனுக்கும் நம் நிலையை ஆதரிப்பதைப் போல படம் எடுத்து அதை பரப்பனும்னு உணர்வில்லை. ஆனா அவன் எடுக்ககூடாது, நானும் எடுக்க மாட்டேன்!! என்ன நியாயம் இது?" என்றுதான்.  
2011ல் மலையாளத்தில் வெளிவந்த, அரேபியாவில் கூலி வேலை செய்பவர்களின் சோகத்தைச் சொன்ன 'கடம்மா' என்ற படம் அரேபிய நாடுகளின் தடை செய்யப்பட்டது. கடாஃபியை கிண்டல் செய்து சித்தரிக்கப்பட்ட 'தி டிக்டேட்டர்' திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், இந்தி என பழமொழிகளின் வெளியாகி ஓடியது. யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை!  

ஒரு சிறு விசயத்தை நினைவுபடுத்திவிட்டு இக்கட்டுரையை தொடர்வது நல்லதென நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தனது 'ஹேராம்' திரைப்படத்தில் கமல் இந்து பயங்கரவாதத்தையும், அவர்களால் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதையும் காட்டி இருக்கிறார். நாஜிக்களுடன் ஒப்பிட்டிருப்பார். காந்தியார் கொல்லப்பட்டது இந்துத் தீவிரவாதிகளால் தான் என்பதை ஆணித்தரமாகச் சொல்லியது அந்தப் படம். ஆகையால் கமலை நம்மால் இந்துத்துவ ஆதரவு கலைஞராகவும் பார்க்க முடியவில்லை. 


கமலின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் காட்டியிருக்கிறார், இஸ்லாமியர்களை அவமானப்படுத்தியிருக்கிறார் என்றெல்லாம் எழும் குற்றச்சாட்டுகளால் படம் தடை பட்டிருக்கிறது. சரி! இஸ்லாம் என்ற மதத்தை exploit செய்வது யார்? இஸ்லாம் என்ற மதத்தில் இருக்கும் 'ஜிகாத்-புனிதப்போர்' போன்ற 'தத்துவங்களை' exploit செய்வது யார்? அல்லாவின் பேரால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என அப்பாவி மக்களை அல்லாவின் பேரால் கொல்வது யார்? கண்டிப்பாக இன்று கமலுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் யாவரும் இதில் ஈடுபடுவதில்லை, ஆனால் அதில் ஈடுபடுபவர்கள் இஸ்லாமியர்கள் தானே? அப்படித்தானே தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்?? அடுத்து! இப்படி உலகில் இருக்கும் ஒன்றான, நாம் கண்முன் பார்க்கும் ஒன்றான இஸ்லாமிய பயங்கரவாதத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தபின் அந்தப் படத்தை எப்படித்தான் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்? இஸ்லாமிய மதத்தின் பேரால் நடக்கும் பயங்கரவாதங்களைச் செய்பவர்களை கண்டிப்பாக சீக்கியர்களாக காட்டமுடியாது எனும்போது இஸ்லாமியர்களாகத் தானே காட்ட முடியும்??


கோவையில் உமர் என்ற பெரிய பயங்கரவாதி தங்கியிருந்ததாகக் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது! வரலாற்றுப் புனைவு (Historical Fiction) என்று ஒன்று உண்டு. இருப்பவர்களையும், இருந்தவர்களையும், நிகழ்ந்தவைகளையும் வைத்து கொஞ்சம் கற்பனையைக் கலந்து கதை புனைவதை அப்படிச் சொல்வார்கள். (ஹேராம் கூட வரலாற்றுப் புனைவுதான்.) இந்தக் கதை அப்படிப்பட்டதாய் இருக்கலாம். இதற்கு கூட 'இந்தக் கதை கற்பனையே' என டைட்டில் போடச் சொல்லி போராடவேண்டுமேயொழிய ஒரேடியாய் காட்சிகளை நீக்கு எனப் போராடுவது எவ்வகையில் நியாயம்? (அந்த சம்பவம் உண்மைதான் என்றும் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் கமல் கூறியிருக்கிறார். ஆதாரம் இல்லாத பட்சத்தில் 'புனைவு' எனக் குறிப்பிடவேண்டியது அவசியம்)


இன்று தடைகோரி போராடுகிறவர்கள் என்றாவது, இஸ்லாத்தின் highest authorityயின் மூலம் எந்த அப்பாவியின் உயிரைப் பறிப்பவனும் இஸ்லாமியன் கிடையாது என்று அறிவிக்கச் சொல்லி போராடியிருக்கிறார்களா? அல்லது சானியா மிர்சாவுக்கு 'ஃபத்வா' கொடுத்த அமைப்பு எதேனும் இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்காக எதேனும் இஸ்லாமிய பயங்கரவாதிக்கு 'ஃபத்வா' கொடுத்திருக்கிறதா? அல்லது இஸ்லாமிய பயங்கரவாதங்களை எதிர்த்து, "எங்கள் மதம் இப்படி சொல்லிக்கொடுக்கவில்லை. எங்கள் மதத்தின் பேரால் இப்படிச் செய்பவர்கள் எங்கள் சகோதரர்கள் இல்லை" என மக்களிடம் பரப்புரையேனும் செய்திருக்கிறார்களா? ஆக, நடப்பவை எல்லாம் இஸ்லாத்தின் பேரால் நடக்கும்போது, ஒரு சமகாலத் திரைப்படம் அதைச் சொல்லக்கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? கமலும், விஜய்யும் கிடைத்தால் அவர்களிடம் சென்று போராடுவதும், உண்மையாகவே மதத்தை இழிவு செய்யும் தீவிர-மதவாதிகளிடம் சென்று போராடாததும் என்ன முரண்???!!!! 


இந்து மதத்தை விமர்சித்து எழும்போதும் எனக்கு இதுபோன்ற கேள்வி ஒன்று எழுவதுண்டு. "அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லையே, உங்கள் இந்துமதம் அதற்கு தடையாக இருக்கிறதே. இதற்கு என்ன சொல்கிறீர்கள் இந்துக்களே??" என எழுதினால் இந்துக்கள் எல்லாம் என்னிடம் சண்டைக்கு வருவான். நான் அவர்களிடம் கேட்பதெல்லாம், "எல்லோரும் அர்ச்சகர் ஆகமுடியாது. அதை இந்துமதம் அனுமதிக்கவில்லை" என கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியிருக்கும் இந்துத் தீவிரவாதிகள் மீதல்லவா ஒரு உண்மையான இந்துவின் கோபம் திரும்ப வேண்டும்? உனது தவறுகளால் தானே என் மதம் கேவலப்படுகிறது, நாங்கள் கேவலப்படுகிறோம் என அவனிடமல்லவா அவர்கள் கொதிக்கவேண்டும். அதைவிடுத்து இருப்பதை எழுதும் என்மீது ஏன் கோபப்படுகிறார்கள் என்றுதான். அதேநிலையில் தான் இருக்கிறது, இன்று கமலின் மீதான இஸ்லாமியர்களின் கோபமும்.  

ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். விஸ்வரூபம் படத்தில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஆனால் இங்கு சிதைக்கப்பட்டிருப்பது கமலின் பொருளாதாரமோ, இஸ்லாமிய மக்களின் உணர்வோ அல்ல, ஜனநாயக உரிமை! கருத்துரிமை! கமல் அந்தப் படத்தில் எத்தகைய கருத்துக்களை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அதை வெளியிட அவருக்கு முழு உரிமையுண்டு. வெளியிட்டபின் அதற்கான எதிர்ப்பை, மாற்றுக்கருத்தை நாம் மற்ற ஊடகங்கள் மூலமோ, வேறு சினிமாவின் மூலமோ வைக்கவேண்டுமேயொழிய, கமலுக்கு தன் கருத்தை முன்வைக்கும் உரிமையை மறுக்க நமக்கு எக்காலத்திலும் உரிமை கிடையாது!! அதை எக்காலமும் ஆதரிக்கமுடியாது! ஆனால் அவர் கருத்தை எதிர்க்க நமக்கு முழு உரிமையும் இருக்கிறது.  

கமலின் கழுத்தை இறுக்கியிருக்கும் தமிழக அரசின் இந்த உடனடித் தடை நாளை யார் கழுத்து நோக்கியும் வரலாம்.  நாளை நியாயமான காரணங்களுக்காகக் கூட இஸ்லாமியர்களோ, இந்துக்களோ, தலித்துகளோ போராட முடியாத, கருத்து சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம்!  சின்னமீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் திட்டமாகவும் இருக்கலாம். ஏற்கனவே கருத்துரிமைகளைக் கொன்றுபோட்டுக்கொண்டிருக்கும் அரசுக்கும் நாமே கத்தி எடுத்துக்கொடுத்ததைப் போல் தான் இந்த போராட்டம் அமைந்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையைப் பொருத்தவரை என் நிலைப்பாடு என்பது இதுதான், 

'என்னக் கருத்து என்றாலும், அதை எதிரியின் கருத்தே என்றாலும் அதை மக்களிடம் விடுங்கள். மக்கள் முடிவு செய்துகொள்வார்கள். எல்லாவற்றையும் கண்ணைமூடிக்கொண்டு நம்புவதற்கோ, பின்பற்றுமளவுக்கோ உங்கள் மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள் என நினைத்தீர்களேயானால் நீங்கள் பயிற்றுவித்து மாற்றவேண்டியது உங்களை மக்களை!! அது உங்கள் உரிமை. அதை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது!'


'Whatever the content may be, leave it to the people. Let them decide. If you think your people are fools and if you doubt that they would believe everything and everyone blindfolded, then educate and change them!! That is your right and nobody can snatch it from you!' -டான் அசோக் 

16 comments:

ராஜ் said...

ரொம்ப ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க அசோக் . தமிழக அரசு படத்தை தடை செய்து மிக பெரிய தவறான முன்உதாரணத்தை ஏற்படுத்தி விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. கோர்ட் மனது வைத்தல் படம் வெளி வரும் என்று எனக்கு படுது.

Anonymous said...

Absolute correct Nanba..!

Prabhu Shankar said...

Well said Mr.Ashok, Government made wrong opening by made ban this movie. I posted this article in my facebook.

Ethicalist E said...

உண்மையின் ஆணித்தரமாக சிறந்த சரியான கருத்துகளை முன் வைத்திருக்கின்றீர்கள்.
வாழ்த்துகள்

mohamedali jinnah said...

'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று போடுவது ஏன்? தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. தனி மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு மார்க்கத்தை சார்ந்த மக்களை குறிப்பிட்டு பேசுவது அல்லது படம் எடுப்பது முறையா!
அடுத்து வாழும் மக்கள் உணர்வை அறிந்துக் கொள்ளாமல் பிரிவு உண்டாக்கும் முயற்சி ஏன்! சினிமா பொழுது போக்கும் இடமாகவோ அறிவைத் தருமிடமாக இருக்க முயலுங்கள் .சாராயம் விற்று பொருள் ஈட்டுவதுபோல் தீங்கான கருத்துகளை புகுத்தி படமெடுத்து மனிதர்களை கெடுக்க முயலாதீர்கள். புதிதாக படம் எடுப்பவர்கள் அருமையாக படமமெடுக்க கோடிக் கணக்கில் பணம் போட்டு படமெடுத்து மக்களுக்குள் பிரிவுஉண்டாக்காதீர்கள் . விஸ்வரூபம் தமிழ் பெயரே அல்ல . ஒரு நலம் விரும்பும் தமிழன் குழப்பதை உருவாக்க முயல்வது முறையா? கமல் நல்ல மனிதனாக இருக்கலாம். அவர் சரித்திர படம் எடுப்பதுபோல் இத்தனை கோடி பணம் போட்டு ஒரு சமூகததையே வருந்த வைப்பது நன்மையாக இருக்க முடியாது.அவர் அடுத்தவருக்கு தவறான பாதையை காட்டிவிடக் கூடாது.

Deepan.p said...

The Article is very nice and it has been said that "let public decide on their own..don't think public's are fool"...Well pointed article..Please keep the same memento for other Public issues..

Deepan.p said...

The Article is very nice and it has been said that "let public decide on their own..don't think public's are fool"...Well pointed article..Please keep the same memento for other Public issues..

indhu said...

super

Linganesan Mani said...

அருமை!

Mohamed Khalith said...

உங்களின்
அடிப்படை வாதம் தவறு..இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை போதிப்பதும் இல்லை,ஆதரிப்பதும் இல்லை..இந்த படத்தை பார்த்தவர்கள் இதில் புனித குரானை தீவிரவாதத்தின் அடையாளமாக காட்டபடுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.அதுமட்டும் இல்லாது படத்தில் இஸ்லாத்தை ,முஸ்லிம்களையும் கேவலபடுத்தி படம் எடுக்க பட்டுள்ளது..இப்படி படம் எடுத்து விட்டு டைட்டில் கார்ட்டில் கற்பனை என்று போட்டு விட்டால் போதுமா??

Shahul Hameed Razik said...

A very well written article. 100% agreeing with you.

Shahul Hameed Razik said...

A very well written article. 100% agreeing with you. This controversy have only fueled more hatred towards muslim community now..

sharfu said...

boss,

decently written, but all u guys r not seeing the other side of the coin,

i am ready 2 discuss this issue in a different view,
pls call @09956281482.

சேக்காளி said...

விஸ்வரூபம் விமர்சனம் (சுட்டது)
http://sekkaali.blogspot.com/2013/01/blog-post_24.html

Ashok kumar said...

என்னக் கருத்து என்றாலும், அதை எதிரியின் கருத்தே என்றாலும் அதை மக்களிடம் விடுங்கள். மக்கள் முடிவு செய்துகொள்வார்கள். எல்லாவற்றையும் கண்ணைமூடிக்கொண்டு நம்புவதற்கோ, பின்பற்றுமளவுக்கோ உங்கள் மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள் என நினைத்தீர்களேயானால் நீங்கள் பயிற்றுவித்து மாற்றவேண்டியது உங்களை மக்களை!! அது உங்கள் உரிமை. அதை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது

Ashok kumar said...

"என்னக் கருத்து என்றாலும், அதை எதிரியின் கருத்தே என்றாலும் அதை மக்களிடம் விடுங்கள். மக்கள் முடிவு செய்துகொள்வார்கள். எல்லாவற்றையும் கண்ணைமூடிக்கொண்டு நம்புவதற்கோ, பின்பற்றுமளவுக்கோ உங்கள் மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள் என நினைத்தீர்களேயானால் நீங்கள் பயிற்றுவித்து மாற்றவேண்டியது உங்களை மக்களை!! அது உங்கள் உரிமை. அதை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது"

பட்டாசு!!

Related Posts Plugin for WordPress, Blogger...