Saturday, October 13, 2012

போபால் -ஃபூகிஷிமா- கூடங்குளம்(ஈழமுரசு கட்டுரை)

எப்போதாவது ஒருநாளில் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்திருக்கிறீர்களா? தமிழகத்தில் இப்போது அதுதான் அன்றாட நிலை! எப்போது போகும் எப்போது வரும் என யாருக்குமே தெரியாது! சிறுவியாபாரிகளும், பெருவியாபாரிகளும், வீட்டில் தேங்காய் அரைக்க முடியாமல் அல்லாடும் அம்மணிகளும் மின்சாரம் இன்றி பெரிதும் தவிக்கும் இவ்வேளையில் அவர்கள் காதுகளில் வெகு சாமர்த்தியமாய், "கூடங்குளம் அணு உலை திறந்துட்டா மின்சார பிரச்சினையே இருக்காது! எல்லாம் சரி ஆயிரும்!" என கொளுத்திப்போட்டுக் கொண்டிருக்கிறது அரசு! இணையத்தில் அணு உலைக்கு எதிரான கருத்துடையவர்கள் அதிகமாக தென்பட்டாலும் தமிழக பெரும்பான்மை மக்களுக்கு இப்போது மிகப்பெரிய வில்லன், கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார்.

தமிழகத்தில் நிலவிவரும் மின்பற்றாக்குறை கிட்டத்தட்ட மூவாயிரம் மெகாவாட். கூடங்குளம் உலைகளின் உற்பத்தித்திறன் இரண்டாயிரம் மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணு உலைகள் அனைத்திலுமே கணக்கிடப்பட்டுள்ளதில் 40% மட்டுமே உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் நிலையில், கூடங்குளம் உலைகளின் மூலம் 50 சதவிகித மின்சாரம் தயாரிக்க முடியும் என கணக்கிட்டால் கூட 1000 மெகாவாட்தான் வரும். இதில் 13சதவிகிதம் கூடங்குளம் அணு உலையை நிர்வகிக்கவே செலவாகிவிடும். மிச்சமுள்ள எண்ணூத்தி சொச்சம் மெகாவாட்டில் கேரளாவுக்கும் மத்திய தொகுப்புக்கும் போக தமிழகத்தின் பங்கு ஐம்பது சதவிகிதம் தான். இதில் மின்கடத்துவதில் ஏற்படும் சேதாரம் போக கிட்டத்தட்ட 400 மெகாவாட் தமிழகத்துக்கு கிடைக்கும். ஆக கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி துவங்கிவிட்டால் தமிழக மின்பற்றாக்குறை பெருமளவில் சரியாகிவிடும் என்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

மாறாக தமிழக சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும்
இருக்கும் குண்டு பல்புகளை மாற்றி (CFL) குழல் பல்புகளாக்கினாலே ஏறத்தாழ 500
மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இந்தியாவின் மின்கடத்தி சேதம் (Transmission Loss) கிட்டத்தட்ட 40 சதவிகிதம். உலகின் சராசரியோ 7 சதவிகிதம் தான். இதை சரி செய்தாலே பல ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். ஆனால் இதுபோன்ற மாற்றுவழிகளைப் பற்றி சிந்திக்கவே விஞ்ஞானிகளோ, அரசோ தயாராக இல்லை. மாறாக பல ஆயிரம் கோடிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்காக கொட்டுவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதுமட்டுமல்லாது, தமிழகம் சூரிய ஒளி சக்தி மிதமிஞ்சி இருக்கும் மாநிலம். வெயிலுக்கு குறைவே இல்லாத தமிழகத்தில், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதைப் பற்றி அரசு அக்கறை காட்டவில்லை. சூரிய ஒளியை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே தமிழகம் உபரிமின்சக்தியுடைய மாநிலம் ஆகிவிடும்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு என்பது இன்று தொடங்கியதல்ல. நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே எதிர்ப்புகள் தொடங்கிவிட்டது. பிறகு ரஷ்யா உடைந்தபோது கிடப்பில் போடப்பட்டு, மீண்டும் 2002ல் வேலைகள் துவங்கி இப்போது செயல்படும் நிலைக்கு வந்திருக்கிறது. வழக்கம்போல் தமிழர்களின் எதிர்ப்பை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை, மத்திய அரசின் துணை அரசாங்கமான மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை!  கூடங்குள போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக தினமலர் போன்ற ஊடகங்கள் சித்தரிப்பதும், தமிழக அரசும் அம்மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கிய ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்தையும், ஜப்பானின் பூகோஷிமா அணு உலை விபத்தையும் உலகம் கண்டிருக்கிறது. கல்பாக்கம் அணு உலையிலும், கூடங்குளம் உலையிலும் விபத்துகள்
ஏற்பட்டால் .தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரமும்
கேரளமும் கூட பாதிப்புக்குள்ளாகும். இதுமட்டுமல்லாது கல்பாக்கத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலின் அடியில் எரிமலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அணு உலையை அமைத்த அணுசக்தி துறையினரிடம் இதுபற்றி எந்த குறிப்பும் இல்லை, அவர்கள் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவும் இல்லை. அந்த எரிமலை உயிரோடிருப்பதாகவும் 17ஆம் நூற்றாண்டில் பொங்கியதாகவும் ஆய்வாளர்களின் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் எல்லாம் கூடங்குளம் மக்களின் நியாயமான பயத்தின் காரணிகளாக உள்ளன. ஏனெனில் கதிர்வீச்சால் அவர்களின் மரபணுக்களே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாது புற்றுநோயை தொடர்ந்து உண்டாக்கவல்ல அணு உலை தங்கள் வீட்டருகே அமைவதற்காக அவர்கள் பயப்படுவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

அணுஉலை குறித்த தொழில்நுட்ப பிரச்சினைகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு இந்தியாவிலும், ஜப்பானிலும் வெவ்வேறு நேரங்களில் நடந்த இரண்டு பெரிய விபத்து சம்பவங்களையும் அதற்கு அந்நாடுகளின் எதிர்வினையையும் பார்ப்போம்.

சம்பவம் ஒன்று: 1984ல் இந்தியாவின் மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து மிதைல் ஐசோ சயனைட் எனும் விஷவாயு கசிந்தது. குளிர்கால இரவான அந்நேரத்தில், காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையோடு தூங்கிக்கொண்டிருந்த சுமார் 15 ஆயிரத்து 274 பேர் இந்த விபத்தினால் தூக்கத்திலேயே மாண்டார்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களோ ஏறத்தாழ 5 லட்சத்து 74 ஆயிரம் பேர். இவர்களின் வம்சாவளியின் குழந்தைகள் இன்றளவும் சிதைந்த முகம், கை, கால்களுடனும், ஊனமுற்றும் பிறக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் 25000ரூபாய் கூட அரசால் நிவாரணம் வழங்கப்படவில்லை. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி, வழக்கில் இழுத்தடிப்பு, விபத்தின் காரணகர்த்தாக்களை தப்பவிடுதல் என வழக்கமான 'இந்தியத்தனங்களால்' பாதிக்கப்பட்ட அம்மக்கள், கால் நூற்றாண்டு காலமாக, தங்கள் மரபணுக்களை ஊனப்படுத்திய விபத்துக்கு எதிராக போராடித் துடித்து, மடிந்து கொண்டிருக்கிறார்கள். 

சம்பவம் இரண்டு: 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வால் பாதிக்கப்பட்டு, இரும்புக்கோட்டையென விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்பட்ட ஃபூகுஷிமா அணு உலை ஆட்டம் கண்டது. டோக்கியோவில் இருந்து 140கிமீ தொலைவில் இருந்தாலும், விபத்துக்குப் பிறகு டோக்கியோவில் நிலவி வந்த கதிரியக்கம் 20% அதிகரித்திருக்கிறது. எங்கோ மூலையில் இருக்கும் விவசாயிகளின் மூத்திரத்தில் கூட கதிரியக்கம் கலந்திருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. புற்றுநோய் அபாயத்தில் நாடே அதிர, உடனே அணு உலைகள் அத்துணையையும் மூட துரிதமாக முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் கொண்டிருக்கிறது ஜப்பான்!

 இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இரு நாடுகளிலும் ஏற்பட்ட பெருவிபத்தின்பால், இரண்டு நாடுகளும் கொண்ட அணுகுமுறைகளைத்தான். இந்தியாவில் நிகழ்ந்த விபத்துக்கு மனிதர்களின் அலட்சியமே முழு காரணம் என்றாலும் இந்திய அரசு மனிதர்களையும் தண்டிக்காமல், மக்களுக்கு நிவாரணமும் வழங்காமல் முழு அலட்சியமாக இருந்தது, இன்னமும் இருக்கிறது! ஜப்பான் விபத்து இயற்கை அழிவால் ஏற்பட்டது எனினும், அவ்வரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு துரிதமாக செயல்படுகிறது. இந்தியாவில் நிகழ்ந்தது விஷவாயு விபத்து, ஜப்பானிலோ அணு உலை விபத்து. ஆனால் இரண்டுமே பெரும் விபத்துக்களாததால் இந்த ஒப்பீடு அவசியம். ஆக இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அணு உலையை எதிர்ப்பதற்கு பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அரசு தன் மக்களின் உயிருக்கு எந்த அளவிற்கு மதிப்பளிக்கும், எந்த அளவிற்கு நிவாரணம் வழங்கும், எவ்வளவு அக்கறை காட்டும் என்பதும் அன்றாடம் இந்திய ஊழல்கள், இந்திய லஞ்ச-லாவண்யம், இந்திய அலட்சியம், என அனைத்து வகையான இந்தியத்தனங்களுடன் உழலும் ஆறறிவுள்ள ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கும் தெரியும். உலக அளவில், "என்னிடமும் அணு உலை உள்ளது! நானும் ரவுடிதான்!!" என பீற்றிக்கொள்வதற்காக மட்டுமே இந்திய அரசு அணு உலை அமைக்குமானால், அது இந்திய மக்களின் எதிர்கால வாழ்க்கையை பெரும் ஆபத்துக்குள்ளாக்குகிறது என்பதை தேசிய உணர்வுக்காக, தேசிய பெருமிதத்துக்காக அணு உலையை ஆதரிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அணு உலையை மூடுவதால் பல அயிரம் கோடி நட்டமாகும், மேலும் மூடுவதற்கு இன்னும் பல ஆயிரம் கோடி செலவாகும் என்ற கூக்குரல்கள் எழாமல் இல்லை. அவர்களிடம் ஒரு சாதாரண குடிமகனாக நான் கேட்பதெல்லாம் இதுதான், "இந்திய அரசு இதுவரை இந்திய மக்களின் பணத்தை வீணடித்ததே இல்லையா? மக்களின் பணம் மக்களைப் பாதுகாப்பதற்காக வீணாய்ப்போனால் அது மக்களுக்கு பயன்பட்டதாகத்தானே அர்த்தம்!!!!???" 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...