Monday, October 1, 2012

மின்வெட்டு இனிமையாய் இருந்த காலம்!


மின்சார நிறுத்தம் என்பது காலம்காலமாக நம் 'கலாச்சாரத்திலேயே' ஊறிய ஒரு விஷயம். "அமெரிக்கால கரண்ட் கட்டே இருக்காதாம் மாப்ள" என எவனோ ஒரு நண்பன் ஒருமுறை என்னிடம் சொன்னபோது, "ஏன் நம்மூர்ல அப்படி இல்ல?" என யோசித்தபடியே முதல்முறையாக நிமிர்ந்து தெருவோரம் இருந்த மின்கம்பத்தைப் பார்த்தேன். பெண்கள் சீப்பில் சிக்கியிருக்கும் முடிக்கற்றைகள் போல வயர்கள் கம்பத்தைச் சுற்றி தொங்கிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து மின்கம்பங்களின் நிலையும் இதுதான். இப்படியாகப்பட்ட இந்தியாவில், கரண்ட் என்ற 'சமாச்சாரம்' இருப்பதே நாம் செய்த தவம்தானே என்று நினைத்துக்கொண்டேன்! (ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு மின்சாரம் எப்போதாவது தான் போகும். அதுக்கே என் நண்பன் அமெரிக்காவோடு ஒப்பீடு செய்து நொந்துகொண்டான். இப்போது அவன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பார்த்தால் இந்தக் காலத்திய கரண்ட் பற்றிய அவன் கருத்தை கண்டிப்பாக கேட்க வேண்டும்.) என் நண்பனுக்கு அவதியாக தெரிந்த மின்சார நிறுத்தத்தை நானும் என்னைப் போன்ற சிலரும் ரசித்த காலமும் உண்டு. அதைப்பற்றிதான் இது!

பள்ளி சமயங்களில், வாத்தியார் வெகு தீவிரமாக வகுப்பெடுக்கும் நேரம் திடீரென மின்வெட்டு ஏற்பட்டால் "ஓ"வென கத்துவோம்! பின் திருப்பி வரும்போதும் மீண்டும் ஒரு "ஓ" சத்தம் ஏகபோகமாக எழும். அநேகமாக எல்லோருமே இதை செய்திருப்போம்.  எங்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் மழலையர் பள்ளி மழலைகள், 'அ'னா, 'ஆ'வன்னாவை சரியாக உச்சரிக்கிறார்களோ இல்லையோ, மின்வெட்டின் போது 'ஓ'வை மிக ஆனந்தமாக, சரியாக உச்சரிப்பார்கள். ஆனால் மின்சாரம் போய்-வந்தால், எதனால் இந்த சத்தம் எழுப்புகிறோம் என்பது எங்களுக்கோ, வாத்தியாருக்கோ, யாருக்குமே தெரியாது. அதைப் பற்றி வாத்தியார்களும் கண்டுகொள்வதில்லை. பலநேரம் "எதுக்கு கத்துறோம்?" என யோசித்திருக்கிறேன். கத்துவதைப் பற்றிய சந்தேகங்கள் அவ்வப்போது எழுந்தாலும் கத்துவதை மட்டும் ஒருநாளும் நிறுத்தியதில்லை. 12ஆம் வகுப்பு வரையிலும் இது தொடர்ந்தது.

தேர்வுக்காலங்களில் மதியநேரம் வீட்டுக்கு கடும் பசியோடு வரும்போது, 'கோகிலா எங்கே போகிறாள்' தொடரின் தலைப்புப்பாடல் அனைத்து வீடுகளிலும் அலறிக்கொண்டிருக்கும். அம்மாக்கள் அதைப் பார்த்து முடிக்கும்வரை கொடூரப் பசியில் எங்களைக் காக்க வைத்து, அது முடிந்தபின்தான் உணவிடுவார்கள். இதிலிருந்து எப்போதாவது எங்களைக் காத்து, பசிக்கு உடனே உணவு கிடைக்க வைப்பது மின்வெட்டு தான்! அதுமட்டுமல்லாது குழந்தைகளும் மின்வெட்டு நேரத்தில்தான் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடுவார்கள்! இந்த வீட்டில் இந்தப்பெண் இருக்கிறாள் என்பதையும், இந்த வீட்டில் தான் இந்தப்பெண் இருக்கிறாள் என்பதையும் எங்களுக்கு மின்வெட்டுதான் காட்டிக்கொடுக்கும்.

மழை பெய்யும் நேரத்தில், மேகத்தில் இருக்கும் மழை மண்ணில் முட்டும் முன்பே, அதற்காகவே காத்திருந்ததைப் போல மழையை மோப்பம் பிடித்து மின்சாரத்தை நிறுத்திவிடும் மின்வாரியம். மீறி என்றாவது ஒரு நாள் மழையடிக்கும் போது மின்சாரம் இருந்தால் ட்ரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம் கேட்கும், அல்லது குறைந்தபட்சம் எங்காவது ஒரு வயராவது அந்து விழுந்து எவனாவது 'ஷாக்' வாங்கியிருப்பான்! மழையைப் பார்த்தவுடனேயே வீட்டில் "அய்யயோ கரண்ட் ஆஃப் பண்ணிருவானே!" என சலித்துக்கொள்வார்கள். எனக்கோ அதுதான் மகிழ்ச்சியே! அப்போதும் இப்போதும், எப்போதுமே எல்லா வீட்டிலும் முன்னிரவு நேரம் என்பது தொலைக்காட்சிக்காக நேந்துவிடப்பட்ட நேரம். வெளியில் மழை பெய்யும் போது திரைப்படமோ, தொடரோ ஓடிக்கொண்டிருந்தால், மழை அதுபாட்டுக்கு கவனிக்க யாருமே இல்லாத ஆதவற்றக் குழந்தையைப் போல வெளியே அழுதுகொண்டிருக்கும். எனக்கு மழையை அப்படி புறக்கணிப்பதென்பது மிகப்பெரிய பாவச்செயலாகவே படும்(இப்போதும் அப்படித்தான்). ஆக தொலைக்காட்சிக்கு நேந்துவிடப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும், மழையை தத்தெடுக்கச் செய்வது மின்வெட்டுதான். மின்சாரம் இல்லாத நிசப்தமான அந்த சூழ்நிலையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மண்வாசனையை உள்வாங்கியபடி, மழையின் சத்தத்தைக் கேட்பதென்பது வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் குழந்தையின் குரலை கேட்பதைப் போன்ற ஆனந்தத்தைத் தரும்.

அதுமட்டுமல்லாது குடும்பத்தில் எல்லோரது முகமும் சூரியனை நோக்கும் சூரியகாந்திகளைப் போல டிவி திரையை நோக்கியே இருப்பதை மாற்றி, ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கச் செய்வதும் மின்வெட்டுதான்! பாட்டுக்கு பாட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிசினஸ், செஸ் போன்ற போர்ட் விளையாட்டுக்கள், கடந்தகால மகிழ்ச்சியான சம்பவம் எதாவதொன்றை மீள்பகிர்வு செய்வது என மின்சார நிறுத்தத்தால் வரும் இருட்டு, சகல வெளிச்சத்தையும்  வீட்டிற்குள் கொண்டு வரும்.  போதாக்குறைக்கு மழையும், தவளைச்சத்தமும் கூடுதல் ஆனந்தம்!  கடும்மழை பெய்துவிட்டால் இரவு முழுதும் கூட சிலநேரம் மின்சாரம் இருக்காது. வீட்டில் உள்ளவர்கள், "எப்படா கரண்ட் வரும்" என கடுப்புடன் காத்துக்கொண்டிருக்கும் போது, நானோ, "அய்யயோ கரண்ட் வந்துரக்கூடாதே" என மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.

மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து, எப்போதோ ஒருமுறை 'வெட்டுப்பட்டுக்' கொண்டிருந்த மின்சாரம், அன்றாடம் 'வெட்டுப்பட' ஆரம்பித்தபின் தான் மின்வெட்டு என்பது எனக்கு எதிர்மறை நிகழ்ச்சியாகத் தெரியத் துவங்கியது! பின் சிலகாலம் கழித்து அன்றாட இரண்டு அல்லது மூன்று மணி நேர மின்வெட்டு நிகழ்வை பழகிக்கொண்டபின் அவ்வளவாக அது பாதிக்கவில்லை. மின்சாரம் தேவைப்படாத செயல்களை அந்த நேரத்தில் ஒதுக்கிக்கொண்டு செயல்பட்டதாலும், குடும்பத்துடன் ஒன்றவும், விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அந்நேரம் பயன்பட்டதாலும் மின்வெட்டு என்பது முற்றிலும் எதிரியாய் மாறாமலே இருந்தது.

ஆனால் அறிவிக்கப்பட்ட மூன்று என்பது அறிவிக்கப்படாத நான்கு, ஆறு, எட்டு, பண்ணிரண்டு என்று வளர்ந்து இன்று பதினான்கில் நிற்கிறது! ஒருகாலத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனாக எப்போதாவது வந்துபோன மின்வெட்டு, இன்று இன்று கூடவே இருந்துகொண்டு எதிரியாக மாறி நிற்கிறது!

மனது, மின்வெட்டே இல்லாத அமெரிக்கா போல நம் நாடும் ஆகாதா என என் நண்பனைப் போலவே அவ்வப்போது புலம்பினாலும், என் பள்ளிக்காலத்தில் மின்வெட்டே இல்லாதிருந்தால் குடும்பத்துடன் கொஞ்சம் அந்நியப்பட்டிருப்பேனோ, இவ்வளவு புரிந்துணர்வு இருந்திருக்காதோ என்ற பயமும் சேர்ந்தே வருகிறது! ஒருவேளை அமெரிக்காபோல எப்போதுமே மின்சாரம் இருந்திருந்தால், எத்தனை அருமையான தருணங்களை தவறவிட்டிருப்பேன்! இன்வர்ட்டர் புண்ணியத்தால், இந்த தலைமுறை குழந்தைகளுக்கு மெழுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பத்துடன் கதைக்கும் மகிழ்ச்சி வாய்க்கவில்லையென்றாலும், டிவியிடம் இருந்து அந்த நேரத்தில் மட்டும்தான் பிரிந்து குடும்பத்துடன் ஒட்டுகிறார்கள். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் என நாம் பலமணி நேரம் செலவிடும் 'நேரந்திண்ணி'களிடம் இருந்து நம்மைப் பிடிங்கி, நாம் வாழும் வீட்டிற்கும், வீட்டில் வசிப்பவர்களுக்கும் வெகு அருகில் கொண்டு நிறுத்துவது மின்வெட்டு சமயங்கள் தான். ஆனால் 12மணி நேரன், 14மணி நேரம் என ஓரேடியாக மின்சாரத்தை நிறுத்தி மின்சாரவெட்டின் மேல் வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தியிருக்கும் இந்தக் காலம் போய், சீக்கிரமே நம்மை குடும்பத்துடனும், இயற்கையுடன் சிறிது நேரமாவது உறவாட வைக்கும் நட்பான மின்சாரவெட்டின் வருகைக்காக காத்திருப்போம்! அமெரிக்கா போல எப்போதுமே மின்வெட்டு ஏற்படாத நாடாக மாறவேண்டாம், எப்போதாவது மின்வெட்டு ஏற்படும் நாடாக முன்புபோல மாறினாலே போதும்! :-)

2 comments:

Ayesha Farook said...

மின்சாரம் என்பது என்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று, வளரும் நாடான இந்தியா எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்கைகள், திட்டங்கள் வகுக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததே இந்த மின்வெட்டுக்கு முக்கிய காரணம், தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகள் சரியான தொலைநோக்கு பார்வையின்றி மின்னுற்பத்தி திட்டமிடாமல் இருந்ததே இதற்க்கு முக்கிய காரணம். அயல்நாடு போன்று நம் இந்தியாவும் என்றும் ஒளிர ஆசை தான்...

Rathnavel Natarajan said...

மின்வெட்டு பற்றிய அற்புதமான பதிவு. நிஜம் தான்; மின்சாரம் இல்லையென்றால் தான் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் தெருவுக்கு விளையாட வருகிறார்கள். அதற்காக வெளியில் ஒரு விளக்கு (inverter connection)போட்டு வைத்திருக்கிறேன். இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். சிரமங்களையும் மிகுந்த ரசனையுடன், வர்ணிப்புடன் எழுதியிருக்கிறீர்கள். ஆஹா. அருமை. நன்றி. வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...