Tuesday, October 16, 2012

மாற்றான் - எ தாறுமாறு மூவி!

வெளிநாடு போய் சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நம் காசை செல்வழித்து வெளிநாடு போவது. திரும்பி வரும் போது பர்ஸ் காலியாகி, தாவு தீர்ந்து போக வைக்கும் கொடூரமான வழி இது. மற்றொன்று இயக்குனராகி தயாரிப்பாளர் காசிலேயே சுற்றிப் பார்த்துவிட்டு நோகாமல் நோம்பு கும்பிடுவது! இதில் இரண்டாம் வழியை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கே.வி.ஆனந்த். சமீபத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இங்கிலாந்து நாட்டை சுற்றிப்பார்த்துவிட்டு வந்ததையும் அவர் அங்கு ஊர் சுற்றிய போது எடுத்த காட்சிகளையும் 'தாண்டவம்' என்ற பெயரில் நாமெல்லாம் திரைப்படமாக பார்த்தோம். அந்த புதிய முயற்சியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு க்ரோஷியா, செர்பியா, ரஷ்யா, அல்பேனியா, மாசிடோனியா, அமெரிக்கா, மடகாஸ்கர் போன்ற நாடுகளை எல்லாம் ஒரு ரவுண்டு அடித்து மாற்றான் என்ற திரைப்படமாக நமக்கு வழங்கியிருக்கிறார். 

சூர்யாக்களின் அப்பா ஒரு ஜெனிடிக் இன்ஜினியர் மற்றும் எனர்ஜியான் என்ற மிகப்பெரிய பால் பவுடர் கம்பனியின் முதலாளி. அதில் நடக்கும் ஒரு கலப்படம் இந்தியாவின் அடுத்த தலைமுறையையே அழிக்க வல்லது. அதை கண்டுபிடிக்கும் விமலனை அப்பாவே போட்டுத்தள்ள, பின் விமலனின் பணியை முடித்து, ஏழாம் அறிவில் தைரியத்திற்காக பெற்ற அதே மெடலை பெறுகிறார் அகிலன் சூர்யா.

ஏழாம் அறிவு படத்தையும் அதற்கடுத்து ரஷ்யாவில் எடுக்கப்பட்ட எதாவதொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நல்ல மதியவேளையின் போதுதான் கே.வி.ஆனந்திற்கு இந்த படத்திற்கான ஒன்லைன் தோன்றியிருக்க வேண்டும். அந்த ஒன்லைனை நாற்பது வருடமாக முடியாமல் இருக்கும் தினத்தந்தி கன்னித்தீவு படக்கதையின் திரைக்கதையில் பொறுத்தி படமாக எடுத்திருக்கிறார்!

அகிலன் ஜாலியான சூர்யா, விமலன் வழக்கமான வளவள என பாடம் எடுக்கும் சூர்யா. ஜாலியான சூர்யா எல்லா காட்சிகளிலும் வாயை திறந்து வைத்துக்கொண்டு, விட்டத்தின் நான்கு மூலைகளையும் மாறி மாறி பார்த்து சிரித்தபடியே மொக்கை ஜோக் அடிக்கிறார். காஜல் அகர்வால் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்த ஜோக்குகளுக்கு, எனக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த ஆண்ட்டி கூட சிரிக்கவில்லை என்பதுதான் வருத்தமான உண்மை. பத்தாக்குறைக்கு அவ்வப்போது தன் நெஞ்சில் குத்திக்கொண்டோ, தடவிக்கொண்டோ தான் ஜாலியாக இருப்பதை நமக்கு தெரிவித்துக்கொண்டே இருக்கிறார். அதே நேரத்தில் அந்தப் பக்கத்தில் இருக்கும் விமலன் வழக்கமான 'பாடம் எடுக்கும்' சூர்யா. தன் வசனங்களை சாப்பாட்டு நேரத்துக்கு பின்பு பாடம் எடுக்கும் பேராசியரைப் போல 'அழகாக' பேசி, தான் ஒரு சீரியஸ் ஆசாமி என்பதை நிரூபிக்கிறார். க்ளப் பாடல்களுக்கு அடிமையான இயக்குனர் கே.வி.ஆனந்த் இதிலும் அதை விட்டுவைக்கவில்லை. வழக்கம்போல குச்சியை மேடையில் சொருகி, அதை சுற்றி சுற்றி ஆடும் கலர் கலர் விளக்கெரியும் க்ளப் பாடல் இதிலும் உண்டு! ஹாரீஸ் ஜெயராஜ், "நீ மட்டும் தான் வச்ச சீனையே வப்பியா, நானும் போட்ட பாட்டையே போடுறேன் பாரு" என்று இயக்குனருடன் போட்டி போட்டு தன் திறமையை காட்டியிருக்கிறார். நாலே நாலு ட்யூனை வைத்துக்கொண்டு இசையமைப்பாளராக வலம்வருவது ஒரு தனித் திறமைதான்!


இதுபோன்ற பல சங்கடங்களுக்கும் சர்வரோக நிவாரணியாக வருகிறார் காஜல் அகர்வால்.
இரண்டு சூர்யாக்களில் யாரைக் காதலிப்பது என்பதில் அடிக்கடி குழம்பி, மாற்றி மாற்றி அவர்களின் கையைப் பிடிக்கும் காஜலைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இவரது பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே ஒரு சூர்யாவை இடைவேளையில் போட்டுத்தள்ள இயக்குனர் முடிவெடுத்திருக்க வேண்டும்!

ஏற்கனவே 'சாருலதா' பார்த்து ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் 'துள்ளியமாக' அறிந்து வைத்திருந்த எனக்கு மாற்றான் பார்க்கும் போது குழப்பவில்லை. ஆனால் அருகில் அமர்ந்திருந்த பெரியவர், "ஏம்பா ரெண்டு சூர்யாவும் ஒட்டினே நடக்குறானுக? இன்னாபா படம் எடுத்துகிறான்?!" என இடைவேளை வரை கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தார். இடைவேளைக்குப் பின் ஒரு சூர்யாவை காணவில்லை என்பதிலும் அவருக்கு ஏக வருத்தம்!

ஆரம்பத்தில் அயன், கோ, படங்களின் அதே தடத்தில் பயணித்துவிட்டு பின் இரண்டாம் பாதியில் தறிகெட்டு நிற்கிறது! இடைவேளைக்குப் பின்பான ஒவ்வொரு காட்சியும் ஒரே இடத்தில் பலமணி நேரம் நிற்கும் இந்தப் படத்தில், காட்சி ஓடுகிறது என சொல்வதே பெரிய பாவம்!  ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸில் இருந்து ஒரு காட்சியை உருவி ஒருவழியாக இரண்டாம் பாதியில் சொருகியிருக்கிறார்கள்.  அகிலன் சூர்யா, படத்தின் இரண்டாம் பாதியில் யார் செத்தாலும் பல்லைக் காட்டி சிரித்தபடியே இருப்பது அவருக்கும் எனர்ஜியான் கொடுத்து வளர்த்திருப்பார்களோ என்ற சந்தேகத்தையே வரவழைக்கிறது!! சூர்யா தேடிவரும் நாற்பது வயதுமிக்க ஒரு தடகள வீராங்கனைக்கும் ஒரு க்ளப் பாடல் இருக்கிறது. ஆகமொத்தம் படத்தில் மூன்று லட்சத்தி நாற்பதாயிரம் க்ளப் பாடல்கள் வருகின்றன.

தனது அனைத்து படங்களிலும் குறைந்தபட்சம் மூன்று பாடல்களிலாவது சட்டையைக் கழட்டிவிட்டு கடல் கண்ணி போல கடலில் ஆடும் 'கடல் கண்ணன்' சூர்யாவை, இந்த படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டும் அப்படி ஆட வைத்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. நீருக்குள் இருந்தபடியே சட்டையைக் கழட்டி, ஆக்ஸ் டியோஸ்பிரே விளம்பரத்தைப் போல் அக்குளை உயர்த்திக் காட்டி போஸ் கொடுப்பதில் டிஸ்கோ சாந்திக்குப் பிறகு சூர்யாதான் என்றாலும் அவரைப் போல இந்த ஃபீல்டில் சூர்யாவால் ஜொலிக்க முடியாது என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

இடைவேளையை ஒட்டி வரும் சண்டைக் காட்சியில் இயக்குனர் மற்றும் சூர்யாவின் உழைப்பு வியக்க வைக்கிறது! அதுவும் நீண்டுகொண்டே போவதால் சலித்துவிடுகிறது. மற்றபடி முதல்பாதியையாவது ஒரு அளவு கண்ணை மூடிக்கொண்டு கடந்துவிடலாம். ஆனால் உக்ரேனியாவில் நீண்டு கொண்டே இருக்கும் இரண்டாம் பாதியைப் பார்ப்பதற்கு சூர்யாக்களின் அப்பா தயாரிக்கும் எனர்ஜியானையே குடித்துவிடலாம்! 


 

Saturday, October 13, 2012

போபால் -ஃபூகிஷிமா- கூடங்குளம்(ஈழமுரசு கட்டுரை)

எப்போதாவது ஒருநாளில் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்திருக்கிறீர்களா? தமிழகத்தில் இப்போது அதுதான் அன்றாட நிலை! எப்போது போகும் எப்போது வரும் என யாருக்குமே தெரியாது! சிறுவியாபாரிகளும், பெருவியாபாரிகளும், வீட்டில் தேங்காய் அரைக்க முடியாமல் அல்லாடும் அம்மணிகளும் மின்சாரம் இன்றி பெரிதும் தவிக்கும் இவ்வேளையில் அவர்கள் காதுகளில் வெகு சாமர்த்தியமாய், "கூடங்குளம் அணு உலை திறந்துட்டா மின்சார பிரச்சினையே இருக்காது! எல்லாம் சரி ஆயிரும்!" என கொளுத்திப்போட்டுக் கொண்டிருக்கிறது அரசு! இணையத்தில் அணு உலைக்கு எதிரான கருத்துடையவர்கள் அதிகமாக தென்பட்டாலும் தமிழக பெரும்பான்மை மக்களுக்கு இப்போது மிகப்பெரிய வில்லன், கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார்.

தமிழகத்தில் நிலவிவரும் மின்பற்றாக்குறை கிட்டத்தட்ட மூவாயிரம் மெகாவாட். கூடங்குளம் உலைகளின் உற்பத்தித்திறன் இரண்டாயிரம் மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணு உலைகள் அனைத்திலுமே கணக்கிடப்பட்டுள்ளதில் 40% மட்டுமே உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் நிலையில், கூடங்குளம் உலைகளின் மூலம் 50 சதவிகித மின்சாரம் தயாரிக்க முடியும் என கணக்கிட்டால் கூட 1000 மெகாவாட்தான் வரும். இதில் 13சதவிகிதம் கூடங்குளம் அணு உலையை நிர்வகிக்கவே செலவாகிவிடும். மிச்சமுள்ள எண்ணூத்தி சொச்சம் மெகாவாட்டில் கேரளாவுக்கும் மத்திய தொகுப்புக்கும் போக தமிழகத்தின் பங்கு ஐம்பது சதவிகிதம் தான். இதில் மின்கடத்துவதில் ஏற்படும் சேதாரம் போக கிட்டத்தட்ட 400 மெகாவாட் தமிழகத்துக்கு கிடைக்கும். ஆக கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி துவங்கிவிட்டால் தமிழக மின்பற்றாக்குறை பெருமளவில் சரியாகிவிடும் என்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

மாறாக தமிழக சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும்
இருக்கும் குண்டு பல்புகளை மாற்றி (CFL) குழல் பல்புகளாக்கினாலே ஏறத்தாழ 500
மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இந்தியாவின் மின்கடத்தி சேதம் (Transmission Loss) கிட்டத்தட்ட 40 சதவிகிதம். உலகின் சராசரியோ 7 சதவிகிதம் தான். இதை சரி செய்தாலே பல ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். ஆனால் இதுபோன்ற மாற்றுவழிகளைப் பற்றி சிந்திக்கவே விஞ்ஞானிகளோ, அரசோ தயாராக இல்லை. மாறாக பல ஆயிரம் கோடிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்காக கொட்டுவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதுமட்டுமல்லாது, தமிழகம் சூரிய ஒளி சக்தி மிதமிஞ்சி இருக்கும் மாநிலம். வெயிலுக்கு குறைவே இல்லாத தமிழகத்தில், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதைப் பற்றி அரசு அக்கறை காட்டவில்லை. சூரிய ஒளியை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே தமிழகம் உபரிமின்சக்தியுடைய மாநிலம் ஆகிவிடும்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு என்பது இன்று தொடங்கியதல்ல. நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே எதிர்ப்புகள் தொடங்கிவிட்டது. பிறகு ரஷ்யா உடைந்தபோது கிடப்பில் போடப்பட்டு, மீண்டும் 2002ல் வேலைகள் துவங்கி இப்போது செயல்படும் நிலைக்கு வந்திருக்கிறது. வழக்கம்போல் தமிழர்களின் எதிர்ப்பை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை, மத்திய அரசின் துணை அரசாங்கமான மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை!  கூடங்குள போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக தினமலர் போன்ற ஊடகங்கள் சித்தரிப்பதும், தமிழக அரசும் அம்மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கிய ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்தையும், ஜப்பானின் பூகோஷிமா அணு உலை விபத்தையும் உலகம் கண்டிருக்கிறது. கல்பாக்கம் அணு உலையிலும், கூடங்குளம் உலையிலும் விபத்துகள்
ஏற்பட்டால் .தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரமும்
கேரளமும் கூட பாதிப்புக்குள்ளாகும். இதுமட்டுமல்லாது கல்பாக்கத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலின் அடியில் எரிமலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அணு உலையை அமைத்த அணுசக்தி துறையினரிடம் இதுபற்றி எந்த குறிப்பும் இல்லை, அவர்கள் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவும் இல்லை. அந்த எரிமலை உயிரோடிருப்பதாகவும் 17ஆம் நூற்றாண்டில் பொங்கியதாகவும் ஆய்வாளர்களின் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் எல்லாம் கூடங்குளம் மக்களின் நியாயமான பயத்தின் காரணிகளாக உள்ளன. ஏனெனில் கதிர்வீச்சால் அவர்களின் மரபணுக்களே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாது புற்றுநோயை தொடர்ந்து உண்டாக்கவல்ல அணு உலை தங்கள் வீட்டருகே அமைவதற்காக அவர்கள் பயப்படுவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

அணுஉலை குறித்த தொழில்நுட்ப பிரச்சினைகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு இந்தியாவிலும், ஜப்பானிலும் வெவ்வேறு நேரங்களில் நடந்த இரண்டு பெரிய விபத்து சம்பவங்களையும் அதற்கு அந்நாடுகளின் எதிர்வினையையும் பார்ப்போம்.

சம்பவம் ஒன்று: 1984ல் இந்தியாவின் மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து மிதைல் ஐசோ சயனைட் எனும் விஷவாயு கசிந்தது. குளிர்கால இரவான அந்நேரத்தில், காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையோடு தூங்கிக்கொண்டிருந்த சுமார் 15 ஆயிரத்து 274 பேர் இந்த விபத்தினால் தூக்கத்திலேயே மாண்டார்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களோ ஏறத்தாழ 5 லட்சத்து 74 ஆயிரம் பேர். இவர்களின் வம்சாவளியின் குழந்தைகள் இன்றளவும் சிதைந்த முகம், கை, கால்களுடனும், ஊனமுற்றும் பிறக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் 25000ரூபாய் கூட அரசால் நிவாரணம் வழங்கப்படவில்லை. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி, வழக்கில் இழுத்தடிப்பு, விபத்தின் காரணகர்த்தாக்களை தப்பவிடுதல் என வழக்கமான 'இந்தியத்தனங்களால்' பாதிக்கப்பட்ட அம்மக்கள், கால் நூற்றாண்டு காலமாக, தங்கள் மரபணுக்களை ஊனப்படுத்திய விபத்துக்கு எதிராக போராடித் துடித்து, மடிந்து கொண்டிருக்கிறார்கள். 

சம்பவம் இரண்டு: 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வால் பாதிக்கப்பட்டு, இரும்புக்கோட்டையென விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்பட்ட ஃபூகுஷிமா அணு உலை ஆட்டம் கண்டது. டோக்கியோவில் இருந்து 140கிமீ தொலைவில் இருந்தாலும், விபத்துக்குப் பிறகு டோக்கியோவில் நிலவி வந்த கதிரியக்கம் 20% அதிகரித்திருக்கிறது. எங்கோ மூலையில் இருக்கும் விவசாயிகளின் மூத்திரத்தில் கூட கதிரியக்கம் கலந்திருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. புற்றுநோய் அபாயத்தில் நாடே அதிர, உடனே அணு உலைகள் அத்துணையையும் மூட துரிதமாக முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் கொண்டிருக்கிறது ஜப்பான்!

 இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இரு நாடுகளிலும் ஏற்பட்ட பெருவிபத்தின்பால், இரண்டு நாடுகளும் கொண்ட அணுகுமுறைகளைத்தான். இந்தியாவில் நிகழ்ந்த விபத்துக்கு மனிதர்களின் அலட்சியமே முழு காரணம் என்றாலும் இந்திய அரசு மனிதர்களையும் தண்டிக்காமல், மக்களுக்கு நிவாரணமும் வழங்காமல் முழு அலட்சியமாக இருந்தது, இன்னமும் இருக்கிறது! ஜப்பான் விபத்து இயற்கை அழிவால் ஏற்பட்டது எனினும், அவ்வரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு துரிதமாக செயல்படுகிறது. இந்தியாவில் நிகழ்ந்தது விஷவாயு விபத்து, ஜப்பானிலோ அணு உலை விபத்து. ஆனால் இரண்டுமே பெரும் விபத்துக்களாததால் இந்த ஒப்பீடு அவசியம். ஆக இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அணு உலையை எதிர்ப்பதற்கு பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அரசு தன் மக்களின் உயிருக்கு எந்த அளவிற்கு மதிப்பளிக்கும், எந்த அளவிற்கு நிவாரணம் வழங்கும், எவ்வளவு அக்கறை காட்டும் என்பதும் அன்றாடம் இந்திய ஊழல்கள், இந்திய லஞ்ச-லாவண்யம், இந்திய அலட்சியம், என அனைத்து வகையான இந்தியத்தனங்களுடன் உழலும் ஆறறிவுள்ள ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கும் தெரியும். உலக அளவில், "என்னிடமும் அணு உலை உள்ளது! நானும் ரவுடிதான்!!" என பீற்றிக்கொள்வதற்காக மட்டுமே இந்திய அரசு அணு உலை அமைக்குமானால், அது இந்திய மக்களின் எதிர்கால வாழ்க்கையை பெரும் ஆபத்துக்குள்ளாக்குகிறது என்பதை தேசிய உணர்வுக்காக, தேசிய பெருமிதத்துக்காக அணு உலையை ஆதரிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அணு உலையை மூடுவதால் பல அயிரம் கோடி நட்டமாகும், மேலும் மூடுவதற்கு இன்னும் பல ஆயிரம் கோடி செலவாகும் என்ற கூக்குரல்கள் எழாமல் இல்லை. அவர்களிடம் ஒரு சாதாரண குடிமகனாக நான் கேட்பதெல்லாம் இதுதான், "இந்திய அரசு இதுவரை இந்திய மக்களின் பணத்தை வீணடித்ததே இல்லையா? மக்களின் பணம் மக்களைப் பாதுகாப்பதற்காக வீணாய்ப்போனால் அது மக்களுக்கு பயன்பட்டதாகத்தானே அர்த்தம்!!!!???" 

கர்நாடகாவும் தமிழ்ச்சங்கமும்! இந்தியாவும் தமிழகக் கட்சிகளும்!

மிகவும் முக்கியமான செய்தி அது! வருத்தம் தந்தது! அதிர்ச்சி அளித்தது! ஆனாலும் படித்தவுடன் கொஞ்சமாய் எட்டிப் பார்த்த சிரிப்பையும் அடக்கமுடியவில்லை! "தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது", என்ற கர்நாடக அமைப்புகளின் நிலைப்பாட்டுக்கு, அங்கிருக்கும் தமிழ்ச் சங்கங்கள் ஆதரவு அளித்திருக்கும் செய்திதான் அது! ஆதரவு மட்டுமல்லாது கூட்டமும் நடத்தி கோசமும் போட்டிருக்கிறார்கள் என்ற செய்தியே அது!

நிற்க! மேலோட்டமாக பார்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கர்நாடக வாழ் தமிழர்களின் அச்சம் மட்டுமே தெரியும். ஆனால் கர்நாடகாவுடன், தமிழக விவசாயிகளுக்காக 'திராவிட'க்கட்சி ஒன்று மல்லுக்கு நிற்கும்போது, கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது 'தமிழ்'ச் சங்கங்கள்!!! ஆக தமிழ் என்ற வார்த்தையால் உணர்வு வந்துவிடும், மொழிகளுக்கெல்லாம் மூத்தமொழியாம் தமிழின் பெருமையை உணர்த்தும் 'திராவிடம்' என்ற வார்த்தையை உபயோகித்தால் உணர்வு மங்கிவிடும் என 'புருடா' விடும் புது உணர்வு 'புரட்டு'க் கூட்டத்தின் தலையில் தட்டவே இந்த செய்தி வந்திருக்கிறது!

இதை எதற்கு சொல்கிறேனென்றால், நாம் இந்தியா என்ற அரசியல் கட்டமைப்புக்குள் இருக்கிறோம். இங்கு வாக்குகள் தேவைப்படாத 'இயக்கமாய்' இருந்தால் தான் வெளிப்படையாக கொள்கைகளுக்காக போராட முடியும், கோஷமிட முடியும்! ஆனால் வாக்குகள் சார்ந்த ஆட்சி அதிகாரத்தை நோக்கமாய் கொண்டுவிட்டால் இந்தியா என்ற அரசியல் அமைப்புக்குள் மட்டுமல்லாது, இந்திய ஒருமைப்பாடு என்ற மற்றொரு கட்டமைப்புக்குள்ளும் எந்த கட்சியுமே சிக்கிக்கொள்ளும்! இந்திய தேசியத்துக்கு கொள்கையளவில் எதிரான திராவிடக் கட்சிகள் கூட இந்த கட்டமைப்புக்குள் சிக்கித்தான் அவ்வப்போது தடுமாறுகிறார்கள்.

ஏனெனில் ஆட்சிக்கு வந்துவிட்டால் எந்த கட்சி ஆனாலும் அது இந்திய அரசுக்கு உட்பட்ட 'தமிழக அரசு' என்ற நிலைப்பாட்டில் தான் செயல்பட முடியுமேயொழிய தனியொரு அதிகாரம் படைத்த அரசாக அல்ல (அதாவது கர்நாடக அமைப்புகளுக்கு கட்டுப்பட்ட தமிழ்ச்சங்கங்களைப் போல)! என்ன ஒரு சின்ன வித்தியாசமென்றால் இந்திய அரசுக்கு பங்கம் வராத வகையில் ஆட்சியில் உள்ள கட்சி தன் கொள்கைகளை சட்டமாக்க அனுமதிக்கப்படும்! திமுக சுயமரியாதை திருமணம், பெண் சொத்துரிமை சட்டம் போன்ற திராவிட கொள்கைகளை சட்டமாக்கியதைப் போல! அதேவேளையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற, இந்திய அளவில் எதிர்ப்பை சம்பாதித்த, திமுக அரசு இயற்றிய சட்டம் என்ன ஆனது, எங்கு போனது என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

தமிழ்தேசியம், தனித்தமிழ்நாடு என நீட்டி முழக்கும் தமிழ்தேசியக் கட்சிகள் நாளை ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான்! ஏனெனில் இன்று திராவிடக் கட்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் இதே கட்டமைப்புதான், இதே சட்டதிட்டங்களோடு தமிழ்தேசிய கட்சிகளையும் வைத்திருக்கப் போகிறது!

ஆக தமிழ்தேசியம் பேசித்திரியும் எந்த தமிழ்தேசியக் கட்சியுமே முழுமையானதொரு ஏமாற்றுவேலையே அன்றி மாற்றுப்புரட்சியோ, மண்ணாங்கட்டியோ அல்ல! அதிகாரம் கைக்கு வந்தால் கர்நாடகாவில் இருக்கும் தமிழ்சங்கங்கள் போல இந்திய அரசிடம் 'பம்மு'வார்களேயொழிய புரட்சி எல்லாம் பரணில் ஏறிவிடும்! புரட்சியோ, மாற்றமோ பேசும் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதிலேனும் குறைந்தபட்ச அர்த்தமிருக்கிறது, ஆனால் ஓட்டு கட்சிகளுக்கும், புரட்சிக்கும் தூரம் அதிகம்!! அது எந்தக் கட்சியாயென்றாலும் சரி!

Monday, October 1, 2012

மின்வெட்டு இனிமையாய் இருந்த காலம்!


மின்சார நிறுத்தம் என்பது காலம்காலமாக நம் 'கலாச்சாரத்திலேயே' ஊறிய ஒரு விஷயம். "அமெரிக்கால கரண்ட் கட்டே இருக்காதாம் மாப்ள" என எவனோ ஒரு நண்பன் ஒருமுறை என்னிடம் சொன்னபோது, "ஏன் நம்மூர்ல அப்படி இல்ல?" என யோசித்தபடியே முதல்முறையாக நிமிர்ந்து தெருவோரம் இருந்த மின்கம்பத்தைப் பார்த்தேன். பெண்கள் சீப்பில் சிக்கியிருக்கும் முடிக்கற்றைகள் போல வயர்கள் கம்பத்தைச் சுற்றி தொங்கிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து மின்கம்பங்களின் நிலையும் இதுதான். இப்படியாகப்பட்ட இந்தியாவில், கரண்ட் என்ற 'சமாச்சாரம்' இருப்பதே நாம் செய்த தவம்தானே என்று நினைத்துக்கொண்டேன்! (ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு மின்சாரம் எப்போதாவது தான் போகும். அதுக்கே என் நண்பன் அமெரிக்காவோடு ஒப்பீடு செய்து நொந்துகொண்டான். இப்போது அவன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பார்த்தால் இந்தக் காலத்திய கரண்ட் பற்றிய அவன் கருத்தை கண்டிப்பாக கேட்க வேண்டும்.) என் நண்பனுக்கு அவதியாக தெரிந்த மின்சார நிறுத்தத்தை நானும் என்னைப் போன்ற சிலரும் ரசித்த காலமும் உண்டு. அதைப்பற்றிதான் இது!

பள்ளி சமயங்களில், வாத்தியார் வெகு தீவிரமாக வகுப்பெடுக்கும் நேரம் திடீரென மின்வெட்டு ஏற்பட்டால் "ஓ"வென கத்துவோம்! பின் திருப்பி வரும்போதும் மீண்டும் ஒரு "ஓ" சத்தம் ஏகபோகமாக எழும். அநேகமாக எல்லோருமே இதை செய்திருப்போம்.  எங்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் மழலையர் பள்ளி மழலைகள், 'அ'னா, 'ஆ'வன்னாவை சரியாக உச்சரிக்கிறார்களோ இல்லையோ, மின்வெட்டின் போது 'ஓ'வை மிக ஆனந்தமாக, சரியாக உச்சரிப்பார்கள். ஆனால் மின்சாரம் போய்-வந்தால், எதனால் இந்த சத்தம் எழுப்புகிறோம் என்பது எங்களுக்கோ, வாத்தியாருக்கோ, யாருக்குமே தெரியாது. அதைப் பற்றி வாத்தியார்களும் கண்டுகொள்வதில்லை. பலநேரம் "எதுக்கு கத்துறோம்?" என யோசித்திருக்கிறேன். கத்துவதைப் பற்றிய சந்தேகங்கள் அவ்வப்போது எழுந்தாலும் கத்துவதை மட்டும் ஒருநாளும் நிறுத்தியதில்லை. 12ஆம் வகுப்பு வரையிலும் இது தொடர்ந்தது.

தேர்வுக்காலங்களில் மதியநேரம் வீட்டுக்கு கடும் பசியோடு வரும்போது, 'கோகிலா எங்கே போகிறாள்' தொடரின் தலைப்புப்பாடல் அனைத்து வீடுகளிலும் அலறிக்கொண்டிருக்கும். அம்மாக்கள் அதைப் பார்த்து முடிக்கும்வரை கொடூரப் பசியில் எங்களைக் காக்க வைத்து, அது முடிந்தபின்தான் உணவிடுவார்கள். இதிலிருந்து எப்போதாவது எங்களைக் காத்து, பசிக்கு உடனே உணவு கிடைக்க வைப்பது மின்வெட்டு தான்! அதுமட்டுமல்லாது குழந்தைகளும் மின்வெட்டு நேரத்தில்தான் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடுவார்கள்! இந்த வீட்டில் இந்தப்பெண் இருக்கிறாள் என்பதையும், இந்த வீட்டில் தான் இந்தப்பெண் இருக்கிறாள் என்பதையும் எங்களுக்கு மின்வெட்டுதான் காட்டிக்கொடுக்கும்.

மழை பெய்யும் நேரத்தில், மேகத்தில் இருக்கும் மழை மண்ணில் முட்டும் முன்பே, அதற்காகவே காத்திருந்ததைப் போல மழையை மோப்பம் பிடித்து மின்சாரத்தை நிறுத்திவிடும் மின்வாரியம். மீறி என்றாவது ஒரு நாள் மழையடிக்கும் போது மின்சாரம் இருந்தால் ட்ரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம் கேட்கும், அல்லது குறைந்தபட்சம் எங்காவது ஒரு வயராவது அந்து விழுந்து எவனாவது 'ஷாக்' வாங்கியிருப்பான்! மழையைப் பார்த்தவுடனேயே வீட்டில் "அய்யயோ கரண்ட் ஆஃப் பண்ணிருவானே!" என சலித்துக்கொள்வார்கள். எனக்கோ அதுதான் மகிழ்ச்சியே! அப்போதும் இப்போதும், எப்போதுமே எல்லா வீட்டிலும் முன்னிரவு நேரம் என்பது தொலைக்காட்சிக்காக நேந்துவிடப்பட்ட நேரம். வெளியில் மழை பெய்யும் போது திரைப்படமோ, தொடரோ ஓடிக்கொண்டிருந்தால், மழை அதுபாட்டுக்கு கவனிக்க யாருமே இல்லாத ஆதவற்றக் குழந்தையைப் போல வெளியே அழுதுகொண்டிருக்கும். எனக்கு மழையை அப்படி புறக்கணிப்பதென்பது மிகப்பெரிய பாவச்செயலாகவே படும்(இப்போதும் அப்படித்தான்). ஆக தொலைக்காட்சிக்கு நேந்துவிடப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும், மழையை தத்தெடுக்கச் செய்வது மின்வெட்டுதான். மின்சாரம் இல்லாத நிசப்தமான அந்த சூழ்நிலையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மண்வாசனையை உள்வாங்கியபடி, மழையின் சத்தத்தைக் கேட்பதென்பது வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் குழந்தையின் குரலை கேட்பதைப் போன்ற ஆனந்தத்தைத் தரும்.

அதுமட்டுமல்லாது குடும்பத்தில் எல்லோரது முகமும் சூரியனை நோக்கும் சூரியகாந்திகளைப் போல டிவி திரையை நோக்கியே இருப்பதை மாற்றி, ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கச் செய்வதும் மின்வெட்டுதான்! பாட்டுக்கு பாட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிசினஸ், செஸ் போன்ற போர்ட் விளையாட்டுக்கள், கடந்தகால மகிழ்ச்சியான சம்பவம் எதாவதொன்றை மீள்பகிர்வு செய்வது என மின்சார நிறுத்தத்தால் வரும் இருட்டு, சகல வெளிச்சத்தையும்  வீட்டிற்குள் கொண்டு வரும்.  போதாக்குறைக்கு மழையும், தவளைச்சத்தமும் கூடுதல் ஆனந்தம்!  கடும்மழை பெய்துவிட்டால் இரவு முழுதும் கூட சிலநேரம் மின்சாரம் இருக்காது. வீட்டில் உள்ளவர்கள், "எப்படா கரண்ட் வரும்" என கடுப்புடன் காத்துக்கொண்டிருக்கும் போது, நானோ, "அய்யயோ கரண்ட் வந்துரக்கூடாதே" என மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.

மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து, எப்போதோ ஒருமுறை 'வெட்டுப்பட்டுக்' கொண்டிருந்த மின்சாரம், அன்றாடம் 'வெட்டுப்பட' ஆரம்பித்தபின் தான் மின்வெட்டு என்பது எனக்கு எதிர்மறை நிகழ்ச்சியாகத் தெரியத் துவங்கியது! பின் சிலகாலம் கழித்து அன்றாட இரண்டு அல்லது மூன்று மணி நேர மின்வெட்டு நிகழ்வை பழகிக்கொண்டபின் அவ்வளவாக அது பாதிக்கவில்லை. மின்சாரம் தேவைப்படாத செயல்களை அந்த நேரத்தில் ஒதுக்கிக்கொண்டு செயல்பட்டதாலும், குடும்பத்துடன் ஒன்றவும், விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அந்நேரம் பயன்பட்டதாலும் மின்வெட்டு என்பது முற்றிலும் எதிரியாய் மாறாமலே இருந்தது.

ஆனால் அறிவிக்கப்பட்ட மூன்று என்பது அறிவிக்கப்படாத நான்கு, ஆறு, எட்டு, பண்ணிரண்டு என்று வளர்ந்து இன்று பதினான்கில் நிற்கிறது! ஒருகாலத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனாக எப்போதாவது வந்துபோன மின்வெட்டு, இன்று இன்று கூடவே இருந்துகொண்டு எதிரியாக மாறி நிற்கிறது!

மனது, மின்வெட்டே இல்லாத அமெரிக்கா போல நம் நாடும் ஆகாதா என என் நண்பனைப் போலவே அவ்வப்போது புலம்பினாலும், என் பள்ளிக்காலத்தில் மின்வெட்டே இல்லாதிருந்தால் குடும்பத்துடன் கொஞ்சம் அந்நியப்பட்டிருப்பேனோ, இவ்வளவு புரிந்துணர்வு இருந்திருக்காதோ என்ற பயமும் சேர்ந்தே வருகிறது! ஒருவேளை அமெரிக்காபோல எப்போதுமே மின்சாரம் இருந்திருந்தால், எத்தனை அருமையான தருணங்களை தவறவிட்டிருப்பேன்! இன்வர்ட்டர் புண்ணியத்தால், இந்த தலைமுறை குழந்தைகளுக்கு மெழுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பத்துடன் கதைக்கும் மகிழ்ச்சி வாய்க்கவில்லையென்றாலும், டிவியிடம் இருந்து அந்த நேரத்தில் மட்டும்தான் பிரிந்து குடும்பத்துடன் ஒட்டுகிறார்கள். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் என நாம் பலமணி நேரம் செலவிடும் 'நேரந்திண்ணி'களிடம் இருந்து நம்மைப் பிடிங்கி, நாம் வாழும் வீட்டிற்கும், வீட்டில் வசிப்பவர்களுக்கும் வெகு அருகில் கொண்டு நிறுத்துவது மின்வெட்டு சமயங்கள் தான். ஆனால் 12மணி நேரன், 14மணி நேரம் என ஓரேடியாக மின்சாரத்தை நிறுத்தி மின்சாரவெட்டின் மேல் வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தியிருக்கும் இந்தக் காலம் போய், சீக்கிரமே நம்மை குடும்பத்துடனும், இயற்கையுடன் சிறிது நேரமாவது உறவாட வைக்கும் நட்பான மின்சாரவெட்டின் வருகைக்காக காத்திருப்போம்! அமெரிக்கா போல எப்போதுமே மின்வெட்டு ஏற்படாத நாடாக மாறவேண்டாம், எப்போதாவது மின்வெட்டு ஏற்படும் நாடாக முன்புபோல மாறினாலே போதும்! :-)
Related Posts Plugin for WordPress, Blogger...